வரதட்சணை மீது வழக்குப்போர் தொடுத்த புரட்சிப் பெண் நிஷா ஷர்மா!

This entry is part [part not set] of 57 in the series 20030717_Issue

சி. ஜெயபாரதன், கனடா


நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,

நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்

திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்,

செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்!

மகாகவி பாரதியார் (புதுமைப் பெண்)

[முன்னுரை: பாரத நாட்டில் வரதட்சணைப் புலியின் கோரப் பற்கடிக்குப் பலியாகாத வாலிபப் பெண்கள் மிகக் குறைவு என்று உறுதியாகச் சொல்லலாம்! வரதட்சணைப் பிரச்சனையால் நின்று போன விவாகங்கள் எத்தனை ? வரதட்சணைக்கு வருவாய் போதாது மணமாகாமல் கன்னியாகக் காலம் தள்ளும் பெண்டிர் எத்தனை ? வரதட்சணையால் கூந்தலில் மண்ணெண்ணை ஊற்றப்பட்டுத் தீயில் வெந்த மணப் பெண்கள் எத்தனை ? வரதட்சணை வாக்குத் தவறி வீட்டில் வாளா வெட்டியாக வாழும் வயசுப் பெண்கள் எத்தனை ? வரதட்சணையால் தகப்பன் வீட்டுக்கும் போக முடியாமல் தனியே தவிக்கும் பெண்கள் எத்தனை ? வரதட்சணையால் தினமும் கணவனிடம் அடி வாங்கி, மிதி வாங்கி அழாமல் அடிமையாய் வாழும் பெண்டிர் எத்தனை ? உடன்கட்டை ஏறுதல், பால்ய விவாகம் போன்றவை, நாட்டில் பெரும்பான்மையாகக் குறைந்தது போல், பெருகும் வரதட்சணைப் பேயின் கொடுங்கோல் ஆட்சியை ஒழிக்க இதுவரை யாரும் பிறக்க வில்லை!

மக்களில் பாதிப்பேர் வேண்டியும், மீதிப்பேர் வெறுத்திடும் இந்த வரதட்சணையின் கோரப் பற்களைப் பிடுங்கி, அதன் விஷத்தை வடித்தெடுக்க எந்த அரசியல் சட்டத்தாலும் முடிய வில்லை! ஆனால் இங்கு கூறப் போகும் நிகழ்ச்சி அதுவல்ல! 2003 மே மாதம் வரதட்சணைப் புலி வாயிலிருந்து தப்பி அப்புலியைப் பிடித்துக் குற்றக் கூண்டில் ஏற்றி இருக்கும், பாரத வீராங்கனை நிஷா ஷர்மாவின் நிஜமான கதை இது!]

அன்றுதான் 21 வயது நிஷா ஷர்மாவின் ஆனந்த மயமான திருமண நாள்! நிஷா பெற்றோருக்கு ஒரே பெண்! கல்லூரியில் மூன்றாம் ஆண்டு முடிவுத் தேர்வு எழுதி வருபவர். அநேக பரிசுப் பதக்கங்களையும், வெற்றிச் சான்றிதழ்களையும் வாங்கிய திறமைசாளி. ஆடம்பரப் பந்தலில், மங்கல கரமான கிளாரினெட் வாத்திய இசை பொழிந்து தள்ளுகிறது! தடபுடல்லாக விருந்துக்குத் தயாரிக்கப் படும் பல விதமான உணவுப் பண்டங்கள் கமகம வென்று மணக்கின்றன! சின்னஞ் சிறு பிள்ளைகள் ஆனந்தமாய் நடனமாடிக் கொண்டுள்ளன! கல்யாணப் புரோகிதர் மண மேடை முன்பாகத் தயாராக இருக்கிறார்!

ஆனால் அன்றைக்கு நிஷாவின் கண்முன் பல நிகழ்ச்சிகள் ஏனோ தாறு மாறாக நடந்தன! திருமணம் நடக்காமல் போவதற்குரிய பலவித அறிகுறிகள் முன்பாகவே அவள் மனதில் தெளிவாகத் தென்பட்டன! நிஷாவின் சிவப்புக் கல்யாணப் புடவை, அலங்காரத் தலை முடிப்பு, திருமண இசை, பரிமாறப் போகும் பந்திப் பண்டங்கள் எதுவும் அன்று முறையாக அமைய வில்லை!

அப்போது ஒரு மூலையில் எழுந்த அசிங்கமான சண்டைச் சத்தம் நிஷாவின் காதில் விழுந்தது!

‘அதிகமாக வரதட்சணைப் பணம் தர வேண்டுமென வாதாடி, மாப்பிள்ளையின் தாயார் பளார் என்று என் தந்தையின் முகத்தில் அறைந்தாள்! அத்துடன் அருகில் நின்ற அவனுடைய அத்தையும் என் தந்தையின் முகத்தில் காரித் துப்பினாள்! ‘ என்று நிஷா மன வேதனையுடன் கூறுகிறார்.

‘இந்த ஆண்பிள்ளை என்னை அல்ல, என் பணத்தைக் கல்யாணம் செய்ய வந்திருக்கிறான்! பின்னால் அதிகப் பணத்தை வேண்டி, ஒரு சமயம் என்னைக் கொல்லக் கூடத் தயாராக இருப்பான் ‘ என்று மனம் வெகுண்டார் நிஷா!

கல்யாண நிகழ்ச்சிகள் நடந்து கொண்டுள்ள போதே, நிஷா மிகத் தைரியமாக செல்லுளர் போனில் 100 எண்ணைத் தட்டி அபாயப் போலீஸ் அலுவலுகத்துக்குத் தந்தை தாக்கப் பட்டதை அறிவித்தார். சில நிமிடங்களில் வந்த காவல் துறையாளிகள் கல்யாண வீட்டில் முதலில் மாப்பிள்ளையைக் கைது செய்தனர்! விபரம் தெரிந்து ஓடிப் போய் விட்ட அவனது மூர்க்கத் தாயார் பின்னால் தானாக வந்து போலீஸ் நிலையத்தில் சரணடைந்தாள்!

உடனே இந்தியச் செய்தித்தாள்கள், வார வெளியீடுகள், வானொலி, தொலைக்காட்சி நிலையங்கள் அனைத்தும் நிஷாவின் தீரச் செயலைத் துணிச்சலைப் பாராட்டி ஓரிரவுக்குள், நிஷாவைப் பாரத வீராங்கணையாக உயர்த்தியது!

நிஷாவின் பெற்றோர் நியமித்துள்ள எட்டு வழக்கறிஞர்கள் இப்போது அலஹாபாத் உயர்நீதி மன்றத்தில் வாதாடப் போகிறார்கள்! மாப்பிள்ளையின் தாய் அன்றைய தினம் அதிகமாகப் பன்னிரண்டு லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டு வற்புறுத்தியாக அறியப்படுகிறது! ‘பணம் மிகவும் செலவாகும் ஒரு போராட்டம் இது! ஆனால் கடேசி வரை வழக்காடாமல் அவர்களை நாங்கள் விடப் போவதில்லை! அடாத செயலுக்கு அவர்கள் யாவரும் தண்டனை அடைய வேண்டும்! ‘ என்று நிஷா ஆணித்தரமாகப் பேசுகிறார்!

‘நமது தேசத்தில் ஆண்களின் தீராத பேராசைக்கும், ஆறாத கொடுமைக்கும் பலியாகும் கோடிக்கணக்கான பல மணப் பெண்களுக்கு என்னுடைய வரதட்சணைப் போர் ஓர் உதாரண ஆயுதமாகப் பயன்படட்டும்! ‘ என்கிறார் நிஷா.

‘இந்த வழக்குப் போரைத் தொடங்கியதுக்கு நான் பெருமைப் படுகிறேன். பெண்ணைப் பெற்றவர்களுக்கு நானொரு புதிய பாதையைக் காட்டி யிருக்கிறேன்! நான் காலெடுத்து வைத்த தடத்தில் அவர்கள் விரும்பிச் செல்ல இப்போது ஒரு மார்க்கம் உள்ளது ‘.

நிஷாவின் போக்கிரி மாப்பிள்ளையின் பெயர் முனிஷ் தலாள்! அவன் ஒரு பள்ளி ஆசிரியன்! அவனுடைய ராட்சத அன்னையின் பெயர் வித்யா! தந்தை உயிரோடில்லை! இப்போது முனிஷ் தலாளும், அவனது மூர்க்கத் தாய் வித்யாவும் வரதட்சணைத் தவிர்ப்புச் சட்டத்தின் கீழ் கைதி செய்யப் பட்டுச் சிறைக் கோட்டையில் அடைக்கப் பட்டுள்ளார்கள். அவர்கள் வெளியில் வருவதற்குப் போட்ட மனுத் தாக்கலை நகர நீதி மன்றம் நிராகரிக்க, இப்போது அவர்கள் அலஹாபாத் உயர்நீதி மன்றத்தை அணுகி யுள்ளார்கள்!

டெல்லி, உத்தரப் பிரதேச எல்லையில் உள்ள நொய்டா என்னும் நகரில், நிஷா பெற்றோருடன் வசித்து வருகிறார். ஒரே புதல்வியான நிஷா தினமும் தன் வீடு நோக்கி வரும் செய்தி நிருபர்களின் நேருரையில் வினாக்களுக்குப் பதில் அளித்து வருகிறார். பொதுக்கூட்டங்களில் வரதட்சணை விலக்கைப் பற்றி பேசி வருகிறார்! நடந்து கொண்டிருக்கும் கல்லூரி மூன்றாம் வகுப்புத் தேர்வுக்குப் படிக்காத நேரங்களில் தொலைக்காட்சி உரையாடல் அரங்கில் பங்கு கொள்கிறார்.

நிஷாவின் வரதட்சணைத் தவிர்ப்புப் போராட்டத்தைப் பின்பற்றித் தற்போது டெல்லியில் ஃபர்ஸானா, மீரட்டில் ராஜேஸ்வரி, சென்னையில் அனுபமா ஆகிய மூன்று பெண்டிரும் நீதி மனறத்தில் தங்கள் வழக்குகளைப் பதிவு செய்துள்ளார்கள்!

‘எனக்கு மாதிரி வழிகாட்டி என் பெற்றோர்கள்! 1980 இல் என் தாயின் திருமணம் நடந்த போது, என் தந்தை வரதட்சணை வாங்காத காரணத்தால், தன் வீட்டிலிருந்தே வெளியேற்றப் பட்டார்! அந்தப் பண்பு என் உதிரத்திலும் இருக்கிறது ‘ என்று பெருமைப் படுகிறார் நிஷா ஷர்மா.

அமெரிக்காவின் CBS [Columbia Broadcasting Station] தொலைக்காட்சி ஒளிப்பட நிலையம் நிஷா ஷர்மாவை நேர்முக உரையாடலில் பேட்டி கண்டு வரதட்சணையை எதிர்த்துப் போராடுவதைப் படக்காட்சி மூலம் எடுத்துக் காட்ட முயன்று வருகிறது! நீதி மன்றத்தில் நிஷாவின் வழக்கு வாதிக்கப் படப் போவதால், இப்போது அவர் CBS ஒளிப்பட நிலையத்துக்கு எந்த விளக்கமும் தரப் போவதில்லை!

வரதட்சணை அண்டாப் பணத்தை வற்புறுத்தி மடியில் வாங்கிக் கொள்வது யார் ? மாப்பிள்ளை, மாப்பிள்ளையைப் பெற்ற அன்னை, தந்தை, சகோதரி! ஆண்களைப் பெற்றவர் வரதட்சணைப் பணத்தை வற்புறுத்திப் பிடுங்குவதை ஓர் உரிமையாகக் கருதுவதும், பெண்ணைப் பெற்றவர் வரதட்சணையைக் கொடுக்கக் கடமைப் பட்டவர் என்று அவர் கழுத்தை நெரிப்பதும் மனிதரின் கற்கால விலங்கினத்தின் குணத்தைக் காட்டுபவை! நாகரீகமான 21 ஆவது நூற்றாண்டில் வரதட்சணைப் பணத்துக்காக நிஷாவின் தந்தையை ஓர் பெண்ணரக்கி முகத்தில் அறைந்தது, அவளது காட்டுமிராண்டித்தன வளர்ப்பைக் காட்டுகிறது!

வரதட்சணையை வெறுப்பது யார் ? மணப்பெண், மணப்பெண்ணைப் பெற்ற தாய், தந்தையர், சகோதரன், சகோதரி! திருமணச் சந்தையில் மாப்பிள்ளை வீட்டார் அந்தரங்கமாய் நடத்தி வரும் வரதட்சணைக் கள்ள வாணிபம், பாரதத்தில் ஒழியவே ஒழியாது! என்ன சட்டம் போட்டாலும் கேட்போரும், கொடுப்போரும் இருக்கும் வரை நிழலாக நம்மைத் தொடரும் வரதட்சணை அழியவே அழியாது! அரசியல் சட்டங்கள் பெண்ணுக்கு உதவியாக நின்றாலும், ஒவ்வொரு தரமும் நீதி மன்றத்தில் போய் வழக்காடப் போதிய பணம் பெண்ணைப் பெற்றவர் கையில் எங்கே இருக்கிறது ?

இரண்டே இரண்டு நபர்தான் இந்த வரதட்சணைப் பிசாசின் கொடுமையை நிறுத்த முடியும்! வரதட்சணை வேண்டாம் என்று திருமணம் செய்ய முன்னிற்கும் அறிவுள்ள ஆண்மகன்! அடுத்து வரதட்சணை விழையாத ஆடவனைத்தான் மணப்பேன் என்னும் நிஷாவைப் போன்று உறுதி படைத்த மணப்பெண்! அந்த அறநெறியைக் கற்றுப் பின்பற்றும் மனிதப் பிறவிகள் வீட்டுக்கு வீடு தோன்றாத வரை, திருமணச் சந்தையில் அந்தரங்கமாய் ஊர்ந்து வரும் வரதட்சணைப் பேயைப் பாரதத்தில் ஒழிக்கவே முடியாது!

*******************

தாலிகட்ட நூறுபவுன்! தாயாக்க வேறுபவுன்!

கூலிமுதல் தந்தால் முகூர்த்தமெனும் – வாலிப

ஆண்மகனும் வேசியைப்போல் ஆசையுடை வேசனே! சீ

வேண்டாம் வரதட் சணை!

ஈழத்தில் இட்டதீ சீதைக்கு! எழில்மதுரை

சூழத்தீ இட்டது, கண்ணகிக்கு! – வாழாது

மீண்டும் நகைச்சண்டை! மேனியில்தீ தங்கைக்கு!

வேண்டாம் வரதட் சணை!

[தகவல்: India Abroad (June 27, 2003), வெண்பாக்கள் என்னுடையவை]

*****************

jayabar@bmts.com

Series Navigation