வடகிழக்கில் ஒரு புதிய குரங்கினம் -100 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிப்பு-

This entry is part [part not set] of 41 in the series 20050415_Issue

ஆதி


இயற்கை ஒரு முடிவற்ற புத்தகம். அதன் பக்கங்களைப் புரட்டப்புரட்ட வியப்பூட்டும் புதிய புதிய தகவல்கள் நம்மைத் திக்குமுக்காட வைக்கின்றன. இயற்கையின் இரகசியங்கள் புதையல் போல தோண்டத்தோண்ட வந்து கொண்டே இருக்கின்றன. கல்லாதது உலகளவு என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்படுகிறது. எதற்கு இத்தனை பீடிகை என்கிறீர்களா ?.

அருணாச்சல பிரதேசத்தில் ஒரு புதிய குரங்கினம் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு மகாகா முன்சாலா (Macaca Munzala) என்று பெயரிடப்பட்டுள்ளது. அங்குள்ள மேற்கு கமேங் பகுதியில் இந்த அடர் காட்டுக் குரங்கினம் வாழ்கிறது.

இந்திய துணைக் கண்டத்தில் உள்ள பெரிய பாலூட்டிகள் அனைத்தும் கண்டறியப்பட்டுவிட்டன என்று நிலவிய நம்பிக்கையை இது தகர்த்துள்ளது. இதற்கு முன்னர் இயற்கையியலாளர் இ.பி. ஜீ 50 ஆண்டுகளுக்கு முன் தங்க நிற மந்தியை (Golden Langur) கண்டறிந்திருந்ிதார் என்பது குறிப்பிடத்தக்கது. வடகிழக்குக் காடுகளிலும், அந்தமான்-நிகோபார் தீவுகளிலும் கணக்கிலடங்காத புதிய காட்டுயிர்கள் இருக்க வாய்ப்புள்ளதாக உயிரியலாளர்கள் கணித்துள்ளனர்.

அருணாசல பிரதேசத்திலுள்ள மலை மாவட்டங்களான டவாங், மேற்கு கமேங்கில் இந்தப் புதிய குரங்கினம் வாழ்கிறது. ஆராய்ச்சியாளர்களுக்கு இப்போது இது ஒரு புதிய வகை என்றாலும், அங்குள்ள மக்கள் இந்தக் குரங்கை நீண்டகாலமாகவே அறிந்துள்ளனர்.

எப்பொழுதாவது பயிர்களை உண்ணும் இந்தக் குரங்கினம், பொதுவாக அடர் காட்டுப் பகுதிகளிலேயே வாழ்கிறது. அம்மக்கள் இக்குரங்கை முன்சாலா என்றழைக்கின்றனர். இதை அங்கீகரிக்கும்விதமாக இதே பெயரையே அறிவியல் பெயரிலும் ஆராய்ச்சியாளர்கள் இணைத்துவிட்டனர்.

இந்தியத் துணைக்கண்டத்திலும் ஆப்பிரிக்காவிலும் உள்ள, பரிணாம வளர்ச்சியில் முன் தோன்றிய குரங்குகள் பண்டைக்காலக் குரங்குகள் என்றும் பிற புதியகால குரங்குகள் என்றும் குறிப்பிடப்படுகின்றன. இந்த மக்காக் குரங்குகள் பண்டைகால குரங்குகள் பிரிவைச் சேர்ந்தவை. பண்டைகால குரங்கினத்தில் 19 வகைகள் ஆசியாவிலும், ஒன்று ஆப்பிரிக்காவிலும் வாழ்கின்றன. மனிதர்களுக்கு அடுத்ததாக இவைதான் உலகில் அதிகளவில் உள்ளன. மேலும், இவை பல்வேறு வகையான வாழிடங்களில் வாழும் திறன்பெற்றவை.

மக்காக் வகையில் 101 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் புதிய வகை கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது கண்டறியப்பட்டுள்ள புதிய வகைக் குரங்கு அஸ்ஸாமிய மக்காக், திபெத்திய மக்காக் குரங்கு வகைகளுக்கு நெருங்கியது என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

அதேநேரம் இந்தக் குரங்கு பல தனித்தன்மைகளைக் கொண்டுள்ளது. முகம் அடர் பழுப்பு நிறமாகவும், மாறுபட்ட முக அமைப்பையும் பெற்றுள்ளது. உலகிலேயே உயரமான பகுதிகளில் வாழும் குரங்கினத்தில் ஒன்று என்ற பெருமையும் புதிய குரங்குக்குக் கிடைத்துள்ளது. கடல்மட்டத்திலிருந்து 1,600 முதல் 3,500 மீட்டர் உயரம் வரையிலான மலைப்பகுதியில் இக்குரங்கு வசிக்கிறது.

“நாங்கள் இப்பொழுது இந்த குரங்கு வகையைக் கண்டறிந்ததாகச் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் அங்குள்ள மக்கள் இக்குரங்கு பற்றி நன்கு அறிந்துள்ளனர்” என்கிறார் அனிந்த்ய சின்கா.

டவாங், உயர்ந்த மலைப் பகுதிகளைக் கொண்ட மேற்கு கமேங் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் புத்த மதத்தில் மோன்பா பிரிவை பின்பற்றுகிறவர்கள். பொதுவாக அவர்கள் குரங்குகளை உண்பதில்லை. அதேநேரம், சமவெளியை ஒட்டிய பகுதிகளில் வாழும் சிலர் குரங்குகளை வேட்டையாடி உண்ணும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர்.

இந்தியாவிலேயே முதன்முறையாக இப்பகுதியில் சமூக பங்கேற்புடன் கூடிய காப்பகத்தை உருவாக்க சூழியலாளர்கள் முயற்சித்து வருகின்றனர். இக்குரங்கினத்தைக் காப்பதுடன் அப்பகுதி மக்களுக்கு இது ஒரு வேலையாகவும் இருக்கும்.

மக்களுடன் இணைந்து செயல்பட்டால்தானே கானுயிர் பாதுகாப்பு என்பது மக்கள்மயப்பட்டதாக, சனநாயகபூர்வமானதாக, பொருத்தமானதாக இருக்கமுடியும்.

நன்றி: பசுமைத் தாயகம்

ஏப்ரல் 2005

Series Navigation