வஞ்சியென்றால் என்னை…
சக்தி சக்திதாசன்

மேகக்கூட்டமாய் வந்து போகிறேன்
ஏனோ சுட்டெரிக்கும் சூரியனாய்
எனை எரித்தாய்
காதலெனும் தாகத்தினால் தவித்தேன்
கண்களிலே நீராக உனை நீயே
காட்டிக் காட்டி வதைத்தாய்
பருவமெனும் பசியெடுத்து நானும்
இளமையெனும் வறுமையினுள் வாடுகிறேன்
பழுத்திருக்கும் கனியாக பாவை நீயும் ஏன் தான்
கண்முன்னே வந்து வந்து போகின்றாய்
மையலென்னும் சிலந்தி வலையை
மைவிழியினால் பின்னி வைத்து நீயோ
சிக்கி நானும் தவிக்கும் அழகை
சிறிது சிறிதாய் ரசிக்கிறாய்
வஞ்சி என்னும் பெயர் உனக்கு
வைத்தவர்கள் நம்ப்பிக்கை பொய்க்கவில்லை
வாலிபத்தின் வாசலிலே நானும் படுகின்ற
வதைகளுக்கும் முடிவில்லை
sathnel.sakthithasan@bt.com