வசியப்படுத்தப்பட்ட பொம்மை (The Enchanted Doll by Paul Gallico)

This entry is part [part not set] of 40 in the series 20031204_Issue

பால் காலிகோ (தமிழில் : நாகூர் ரூமி)


———————————————-

வெண் பலகையில் கறுப்பு எழுத்தில் சாமுவேல் எம்.டி. என்று வாசலில் எழுதியிருக்கும் என் அலுவலகத்திற்கு அருகில், பதினைந்தாவது தெரு மூன்றாம் அவென்யூவில் உள்ள ஸ்டேஷனரி, சுருட்டு, விளையாட்டு சாமான் முதலியன விற்கின்ற அபி ஷெஃப்டனின் கடை ஜன்னலில்தான் முதல் முறையாக அந்த வினோதமான வசீகரிக்கும் பொம்மையைப் பார்த்தேன். அந்த ஏப்ரல் பிற்பகல் போய் இன்று ஒரு வருஷமாகிறது.

நான் சொல்லப்போவது சரியாக சமைக்கப்படாத உணவைப் போன்ற கதையாகவே அமையும் என்று பயப்படுகிறேன். ஏனென்றால் நான் ஒரு மருத்துவன்தான். எழுத்தாளனல்ல. இருந்தாலும் அந்த சந்திப்பின் விளைவுகளைக் காகிதத்தில் பதிவு செய்ய முயற்சிப்பதற்கு நான் உந்தப்படுகிறேன்.

அந்த நாள் எப்படி இருந்தது என்று இப்போது நினைவு வருகிறது. ஏழ்மையான சுற்றுப்புறத் தெரு வாசனையோடும் தொழிற்சாலைகளின் மிருதுக் கரித்துகள் புகையோடும் கலந்து வசந்தத்தின் முதல் குறிப்பு கிழக்கு நதியின் குறுக்கே காற்றில் மிதந்து சென்றது. சாலையோர நடைபாதையில் பூ விற்பவனின் தள்ளுவண்டி ட்யூலிப் பூக்களாய், ஹயாஸிந்துகளாய், பல வண்ணப் பூக்கள் அடங்கிய சிறு பெட்டிகளாய் மலர்ந்திருந்தது. அருகில் தெருப்பியானோ ‘ஒரு வசீகர மாலை ‘யை வாசித்துக் கொண்டிருந்தது.

முனை திரும்பி ஷெஃப்டனின் கடை எதிரில் வந்தபோது தூசு படிந்த ஜன்னலில் வைக்கப்பட்டிருந்த கவர்ச்சியற்ற விளையாட்டு சாமான்கள் பற்றிய உணர்வு மறுபடியும் வந்தது. க்ளீவ்லாண்டில் உள்ள என் மருமகளின் பிறந்த நாள் வர இருப்பது ஞாபகம் வந்தது. மிதமான விலையுள்ள பரிசுகளை அவளுக்கு அனுப்புகின்ற பழக்கத்தினை நான் கொண்டிருந்தேன்.

சிவப்பு தீயணைக்கும் விளையாட்டு யந்திரம், மெருகூட்டப் படாத ஈய ராணுவ வீரர்கள், மலிவான தளக்கட்டாட்ட பந்துகள், கையுறைகள், மட்டைகள், கார்ட்டன் கார்ட்டனாக சிகரெட்டுகள், மைக்கூடுகள், பேனாக்கள், பென்சில்கள், தூசு படர்ந்த காகிதம் முதலியனவும் அட்டையிலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட மென் பானங்களுக்கான கண்ணைப் பறிக்கும் பளபளப்பான விளம்பரப் படங்கள் என குழப்புகின்ற வகையில் வைக்கப்பட்டிருந்த மனதைத் தொடாத பொருட்களின் வரிசையில் வாங்கும்படி ஏதேனும் உள்ளதா என்று ஜன்னல் வழி நோட்டம் விட்டேன்.

இப்படியாகத்தான் என் கண்கள் மூலையில் வைக்கப் பட்டிருந்த பொம்மையின் மீது வந்து நின்றன. சுற்றியிருந்த பொருள்களினால் அவள் இருட்டடிக்கப் பட்டிருந்தாள். அதோடு மாதக்கணக்கில் அபியின் ஜன்னலில் சேகரிக்கப்பட்ட தூசியினூடே சரியாகவும் தெரியவில்லை. ஆனால் அவள் முழுவதும் கந்தல் துணியால் செய்யப் பட்டிருந்தாள் என்று தெரிந்தது. முகம் எழுதப்பட்டிருந்தது. அதி வினோதமான, அதி மென்மையான, வசீகரமான, வெற்றி கொள்கின்ற முக பாவத்தைக் கொண்ட ஒரு சிறுமியை அவள் பிரதிநிதித்துவப் படுத்தினாள்.

நிழல்களினாலும் தூசுப் படலத்தினாலும் நான் அவளை முழுமையாகப் பார்க்க முடியவில்லை. ஆனால் முத்திரை குத்தியது போல என் மீது ஒரு பயங்கரமான பாதிப்பை ஏற்படுத்திவிட்டதை உணர முடிந்தது. எப்படியோ எனக்கும் அவளுக்கும் இடையில் ஒரு தொடர்பு நிர்மாணிக்கப்பட்டு விட்டது. ஏதோ என்னை அவள் அழைத்துவிட்டது மாதிரி. சரியாகச் சொல்லப் போனால், கூட்டமான ஒரு அறையில் நீக்க முடியாதவாறு மனதில் த(ய)ங்கி நிற்கின்ற பாதிப்பு ஏற்படுத்துகின்ற ஆளுமையைக் கொண்ட யாரோ ஒரு அந்நியரின் மீது சமயங்களில் நாம் மோதிவிடுவோமே அதைப்போன்ற உணர்வு.

உள்ளே சென்றேன். ‘ஹலோ டாக்டர், என்ன வேண்டும் ? புகையிலை தீர்ந்துவிட்டதா ? ‘ என்ற அபியின் வரவேற்பிற்கு ‘அந்த கந்தல் பொம்மையைப் பார்க்கலாமா, அந்த மூலையில் சுழல் ஸ்கேட்சுக்குப் பக்கத்தில் உள்ளதே அது என் மருமகள் ஒரு சின்னப்பெண் இருக்கிறாள்.. அவளுக்கு ஏதாவது அனுப்பனும் ‘ என்று சொன்னேன்.

அபியின் உயர்த்திய புருவங்கள் அவன் வழுக்கைத் தலைக்குள் சென்றன. திறந்த உள் சட்டையின் விளிம்புகள் படபடக்க கவுண்டரைச் சுற்றி வந்தான். ‘அந்த பொம்மையா ? அது இப்போது கொஞ்சம் விலை அதிகமாக இருக்குமே.. ? நீங்கள் வாங்க நினைப்பதைவிட ஒருகால் அதிகமாக இருக்கலாம். ஸ்பெஷலாகச் செய்தது ‘ என்றான்.

எனினும் அவளை ஜன்னலில் இருந்து எடுத்து என் கைகளில் வைத்தான். இங்கேதான் நான் இரண்டாம் தடவையாக அதிர்ச்சி அடைந்தேன். ஏனெனில் அதிசயிக்கத்தக்க, அற்புதமான தரத்தைக் கொண்டிருந்தாள் அவள். ஓரடி உயரமே இருந்த அவள், கந்தலைத் திணித்து செய்யப்பட்டவள் போல் இல்லாமல் கந்தலுக்குக் கீழே சதையும் எலும்பும் கொண்ட இளக்கமான வளாகவும் தொடுவதற்கு ஜீவன் உள்ளவள் போலவும் இருந்தாள்.

அபி சொன்னதைப் போல உண்மையில் அது கையால் செய்யப்பட்டதுதான். ஆனால் ஜீவன் உள்ள முகத்தோற்றத்தையும் வனப்பையும் அதன் படைப்பாளி அதற்குக் கொடுத்திருந்தார். அதன் முன் நிற்பதே ஏதோ என்னுடைய சாரத்தின் முன் நானே நிற்பது போன்ற உணர்வைக் கொடுத்தது. ஆனால் இதைவிட அவளிடம் நிறைய இருந்தது.

இந்த நீளத்தில், இந்த அளவு கால்களுடன், இந்த வடிவ தலையுடன், அந்த இடுப்பைச் சுற்றிய பாவடையின் சுழற்சியில் — ஒரு பொம்மைக்கு பால் உணர்வை ஏற்படுத்துகின்ற சக்தி உண்டா ? இந்த சின்ன உருவத்தைக் குறிக்கும் தையல் விளிம்புகளில் உணர்ச்சிகள் சேர்த்துத் தைக்கப்பட்டிருக்க முடியுமா ? நான் இளமையானவன்தான் என்றாலும் மருட்சி அடையவோ உணர்ச்சி வசப்படவோ மாட்டேன். அமைதிக்காலத்திலும் போர்க்காலத்திலும் நான் பார்க்காததா ? என்றாலும் இந்த பொம்மையைக் கையில் பிடிப்பதென்பது இதமான, புரியாத, பெண்மை கூடிய, அற்புதமான ஏதோவொன்றோடு தொடர்பு கொள்வது என்று உணர்ந்தேன். அவளைக் கீழே வைக்கவில்லை. தாங்கமுடியாத வகையில் அவள் என்னை ஆட்கொண்டுவிட்டாள்.

அவளை கவுண்டரில் வைத்தேன். ‘என்ன விலை அபி ? ‘

‘பதினைந்து டாலர் ‘ ஆச்சர்யமாயிருந்தது.

‘நான் சொன்னேனல்லவா ? எனக்கிதில் ஒரு டாலர்தான் கிடைக்கும். உங்களிடம் நான் லாபம் பெற விரும்பவில்லை. நீங்கள் பதினான்கு டாலருக்கே எடுத்துக்கொள்ளலாம். மேலே போனீர்கள் என்றால் பெரிய பெரிய கடைகளில் எல்லாம் அவள் இருபதிலிருந்து இருபத்தைந்து டாலர்வரை பெறுகிறாள் ‘.

‘யார் அவள் ? ‘

‘யாரோ பதிமூன்றாம் தெருவில் இருக்கிறாள். அவள்தான் இதையெல்லாம் செய்கிறாள். இரண்டு வருடமாக அங்கு இருக்கிறாள். சிகரெட்டும் பேப்பரும் இங்கு வாங்குவாள். அப்படித்தான் எனக்கு எப்போதாவது ஒன்றிரண்டு கிடைக்கும். ஆனால் இந்த பொம்மைகள் சீக்கிரம் விற்றுவிடுகின்றன ‘.

‘அவள் எப்படி இருப்பாள் ? பெயரென்ன ? ‘

‘சரியாகத் தெரியாது. ஏதோ கலாமிட்டி என்று. தடியாக, பகட்டாக இருப்பாள். சிவப்பு முடி. ஆனால் அழுத்தமானவள். அதிகம் ஃபர் கோட்டுதான் போட்டிருப்பாள். உங்க டைப் அல்ல டாக்டர் ‘.

அபி விவரித்த பெண்ணுக்கும் கவுண்டரில் இருந்த அருமையான சின்ன படைப்பிற்கும் இடையேயான தொடர்பை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நான் அவளை வாங்கிக் கொள்கிறேன் என்றேன். என் தகுதிக்கு மீறிய விலைதான். ஏழைகளிடம் ஒரு டாக்டர் உண்மையில் கற்றதைப் பரிசோதனை செய்யத்தானே முடியும் ? என்றாலும் சூயிங்கம், தீக்குச்சிகள், துளை போடும் கருவிகள், பத்திரிக்கைகள் இவைகளுக்கு மத்தியில் அவளை அந்த கவுன்டரில் விட்டுவர என்னால் முடியவில்லை.

ஏனென்றால் அவள் ஒரு படைப்பு. ஏதோ ஒன்று, மனித ஆத்மாவின் ஏதோ ஒரு பகுதி, அவளின் படைப்பினுள் சென்றுள்ளது. பதினான்கு டாலர் எண்ணிக்கொடுத்துவிட்டு ஒரு முட்டாளைப் போல உணர்ந்தேன்.

வீட்டுக்கு வந்து க்ளீவ்லாண்டில் உள்ள என் மருமகளுக்கு பார்சல் கட்டும்போதும் முட்டாளைப் போலவே முன்னைவிட அதிகமாக உணர்ந்தேன். அந்த சின்ன சக்தி மிகுந்த பாதிப்பை மறுபடியும் உணர்ந்தேன். அவளை விட்டும் பிரிய நான் மிகமிகத் தயங்கினேன். கன்சல்டிங் ரூமுக்குப் பின்புறம் இருந்த எனது சிறிய படுக்கை அறையை அவள் தனது இருப்பைக்கொண்டு நிறைத்தாள். விவரிக்க முடியாத ஏக்கத்தை என் தொண்டைக்கும் சோகத்தை என் நெஞ்சுக்கும் கொண்டு வந்தாள்.

ஆர்மியிலிருந்து வெளிவந்து பயிற்சி எடுத்துக் கொண்டு இருக்கும் இவ்வளவு காலத்தில் முதல் முறையாக நான் தனியாக இருந்தேன் என்பதையும் நோயாளிகளுக்கு உதவுவதில் கிடைக்கும் திருப்தி சமயங்களில் போதாமல் போய்விடுகிறது என்பதையும் உணர்ந்தேன்.

என் மருமகளுக்கு அனுப்பிவிட்டு வந்த பிறகு அதுவே அதன் முடிவாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அப்படி இல்லை. என் சிந்தனையை விட்டு அவளை அகற்றவே முடியவில்லை. அடிக்கடி அவளைப் பற்றி நினைத்தேன். அவள் என்னுள் ஏற்படுத்திய உணர்வுகளையும் அவளைச் செய்த அந்த அபி சொன்ன பகட்டான சிவப்புத் தலைகொண்ட பெண்ணையும் இணைத்துப் பார்க்க முயன்றேன். ஆனால் முடியவில்லை. ஒரு முறை இவ்விஷயத்தை தொடர்வோமா, யார் அவள் என்று நேரில் பார்க்கலாமா என்று கூட உந்தப்பட்டேன். இந்த சமயத்தில்தான் சுற்றுப் புறத்தில் பத்தாவது வகை வைரஸ் தாக்கி எல்லா விஷயங்களையும் என் மண்டைக்குள் இருந்து ஓட்டியது.

ஒரு மூன்று மாதம் சென்றிருக்கும். எனது தொலைபேசி ஒலித்தது.

‘டாக்டர் அமனியா ? ‘

‘யெஸ் ‘

‘உங்கள் இடத்துக்குப் பக்கமாக நான் ஒரு நாள் போனேன். பெயர்ப்பலகையைப் பார்த்தேன். நீங்கள் ரொம்ப செலவு வைப்பீர்களோ ? ஒரு தரம் வந்து பார்க்க ரொம்ப கேட்பீர்களோ ? ‘

குரலின் தன்மையும் அதிலிருந்த கணித மனப்பான்மையும் என்னை வெறுக்க வைத்தது என்றாலும் நான் பதில் சொன்னேன்.

‘நான் ஒரு டாலர் வாங்குவேன். உங்களுக்கு உண்மையிலே நோயாக இருந்து பணம் தர முடியாமல் இருந்தால் நான் காசு வாங்காமலே பார்க்கிறேன். ‘

‘ஓகே. ஒரு டாலர் என்னால் தர முடியும். ஆனால் அதற்கு மேல் அல்ல. நீங்கள் வரலாம். கலாமிட். 937 கிழக்குப் பகுதி மூன்றாவது தெரு. இரண்டாவது மாடி. ‘

அப்போது அந்த தொடர்பு என் மனதில் உதிக்கவில்லை. அந்த முகவரியில் பெயர்ப்பலகையின் கீழிருந்த பித்தானை அமுக்கினேன். பஸ்ஸர் சப்தித்தது. தாழ் வழிவிட்டது. குறுகலான, நாட்பட்ட, மந்தமான வெளிச்சம் கொண்ட, கிரீச்சிடுகின்ற இரண்டு படிக்கட்டு வரிசைகளில் ஏறிச்சென்றேன். கிட்டத்தட்ட ஒரு இன்ச் அளவுக்கு கதவொன்று திறக்கப்பட்டது. நான் துளைக்கப்படுவது போல் உணர்ந்தேன். பின்பு வெறுப்பூட்டும் அந்தக்குரல் சொன்னது,

‘டாக்டர் அமனியா ? நான்தான் ரோஸ் கலாமிட். உள்ளே வாருங்கள் ‘.

அவளைக் கண்டு அதிர்ச்சியுற்றேன். கிட்டத்தட்ட ஆறடி உயரம் இருந்தாள். சிவப்பு மருதானியில் ‘டை ‘ அடித்த முடி. மலிவான செண்ட் ஏதோ ஒன்று அபரி மிதமாக அடித்திருந்த வாசனை. வாதுமை வடிவக் கரிய விழிகள். கிழக்கத்திய பாணியில் சற்றுச் சாய்வாக பலமாக சாயமடிக்கப்பட்ட தடித்த உதடுகள் கொண்ட பெரிய வாய். அவளிடம் ஏதோ ஒரு பயங்கரமான பலமும் மின்னுகின்ற அழகும் இருந்தது. நாற்பத்தைந்திலிருந்து ஐம்பதுக்குள் அவளை வைத்தேன்.

வரவேற்பறையும் படுக்கையறையும் இணைந்த, பழுப்புக் கற்களினால் அந்தக்காலத்து பாணியில் கட்டப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்த போதுதான் அதி ஆழமான அதிர்ச்சிக்குள்ளானேன். அறையில் பொம்பளைத் தனமாக சாமான்கள் போடப்பட்டிருந்தாலும், மலிவான ப்ரிண்டுகள், மலிவான குஷன்கள், மலிவான வாசனைப் பொருட்கள் அவற்றிற்கான மலிவான பாட்டில்கள் இவைகளினால் பயங்கரமாக அசிங்கமாக இருந்தது.

ஆனால் அவற்றிலிருந்து தொங்கிக்கொண்டும் படுக்கையின் மீது அங்கொன்றும் இங்கொன்றுமாகவும் பழைய ட்ரங்குப் பெட்டியின் மீதுமாகவும் ஒரு டஜன் துணி பொம்மைகள். எல்லாமே வித்தியாசமாக அக்கறையின்றி போடப்பட்டிருந்தன என்றாலும் எல்லாமே என்னுள் முதல் நோட்டத்திலேயே ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது. அந்த சிறிய பொம்மையின் கவர்ச்சியையும் வசீகரத்தையும் கொண்டிருந்தன. ஆச்சரியப் படுத்துகின்ற பொம்மைகளை உருவாக்குகின்ற படைப்பாளியின் முன் நிற்பதை உணர்ந்தேன்.

ரோஸ் கலாமிட் சொன்னாள் : ‘உயரமாக, கறுப்பாக அழகாக இருக்கிறீர்கள். உங்களைப் போன்ற இளமையானவர் டாக்டராக இருப்பதற்கு மிகவும் தகுதியானவர் இல்லையா ? ‘

நான் அவளுக்குக் கூர்மையாக பதில் சொன்னேன். ஏனெனில் நான் கோபப்பட்டேன். சங்கடப்பட்டேன். எரிச்சல் பட்டேன். மலிவான இந்த மனமுடைக்கும் சூழ்நிலையில் அந்த அழகான மனம் தொடும் பொம்மைகளின் மறு கண்டுபிடிப்பு. அவற்றிற்கும் இந்த பயங்கரமான பொம்பளைக்கும் உள்ள தொடர்பு, இவை என் மனநிலையை பாதித்திருந்தன.

‘நீங்கள் நினைப்பதைவிட நான் வயதானவன். நான் எப்படி இருக்கிறேன் என்பது உங்களுக்குத் தேவை இல்லாதது. நான் பரிசோதிக்க வேண்டாமென்று நீங்கள் கருதினால் நான் உடனே போய்விடுகிறேன். ‘

‘ என்ன டாக்டர், ஒரு உபசார வார்த்தைகூட சொல்லக் கூடாதா ? ‘

‘உபசார வார்த்தைகள் எனக்குப் பிடிக்காது. நோயாளி நீங்கள்தானா ? ‘

‘இல்லை நோயாளி என் கஸின். பின் அறையில் இருக்கிறாள். உங்களை அவளிடம் அழைத்துப் போகிறேன். ‘

உள்ளே போகுமுன் நான் தெரிந்துகொள்ள வேண்டி யிருந்தது. ‘இந்த பொம்மைகளை நீங்களா செய்கிறீர்கள் ? ‘

‘ஆமா, ஏன் ? ‘

ஏதோ ஒரு தனிமை என்னை ஆட்கொண்டது. ‘ஒரு தரம் நான் என் மருமகளுக்காக ஒன்று வாங்கினேன். ‘ என்று ஏதோ உளறினேன்.

‘நிச்சயம் அதிகம் காசு கொடுத்திருப்பீர்கள். இந்த பொம்மைகள்தான் இன்றைய வெறியாக உள்ளது ‘ என்று சொல்லிச் சிரித்தாள்.

ஒரு இணைப்பு பாத்ரூம் வழியாக பின்பக்கம் இருந்த இன்னொரு சிறிய அறைக்குள் என்னைக் கூட்டிச் சென்றாள். ‘எஸ்ஸி, டாக்டர் வந்திருக்கிறார் ‘ என்று உரக்கச் சொல்லிக் கொண்டே கதவை லேசாகத் திறந்தாள். விரியத் திறந்து என்னை அனுமதிக்குமுன் மிருகத்தனமாக சொன்னாள் : ‘டாக்டர் ஆச்சர்யப்படாதீர்கள், அவள் ஒரு ஊனமுற்றவள் ‘.

இளக்கமான ‘உல்லன் ‘ துணியில் பாவாடையை அணிந்து ஜன்னலுக்குப் பக்கத்திலிருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்திருந்த வெளுப்பான பெண்ணின் முகம் நிராசை தவிர வேறு எதையும் வெளிப்படுத்தவில்லை. நான் மறுபடியும் வெறுப்பும் எரிச்சலும் அடைந்தேன்.

அந்த பொம்பளை சொன்ன விதமே அந்த பெண்ணை ஊனப் படுத்துவதாக இருந்தது. எஸ்ஸி ஒரு ஊனமுற்றவள் என்பதை என்னிடம் அவள் சொல்லிமட்டும் காட்டவில்லை. எஸ்ஸிக்கு மறுபடியும் அதை நினைவூட்டுகின்ற காரியத்தை செய்தாள் அவள்.

எவ்வளவு சீக்கிரமாக முடியுமோ அவ்வளவு கிரகித்தேன். ஏனெனில் நோயாளி அறைக்குள் வரும் மருத்துவன் தனது தோலைக் கொண்டும் கண்களைக் கொண்டும் செவிகளைக் கொண்டும் உணர வேண்டும், பார்க்க வேண்டும், கேட்க வேண்டும்.

அப்பெண்ணுக்கு இருபத்தி நான்கு அல்லது ஐந்துக்கு மேல் இருக்க முடியாது. துன்பம் பாதித்த இரு பெரிய விழிகளாக மட்டுமே அவள் தோன்றினாள். அவ்விழிகளில் உயிர் விளக்கு மிகவும் மந்தமாக எரிந்து கொண்டிருந்தது என்பதுதான் ரொம்ப அதிர்ச்சி தருவதாக இருந்தது.

அவள் மிகவும் நோயுற்றிருந்தாள். வீணடிக்கப்பட்டுவிட்ட அவளின் அமைப்பு நீல நாளங்கள் கொண்ட தெளிவான கைகள். லேசான பழுப்பு மஞ்சள் முடி. இவை கொண்ட ஊனமுற்ற, ஒளியிழந்த அவளின் அடி நாதமாக இருந்த இனிமையை நான் முதல் ‘விசிட் ‘டிலிருந்தே நினைவு கொண்டேன். நம்ப முடியாத இரக்க உணர்வுகளை ஏற்படுத்துவதற்கென்றே அவளுடைய வாய் வடிவெடுத்திருந்தது. மிருதுவாக, வெளுத்துப்போய், பவழம்போல, நடுங்குவதற்குத் தயாராக. எங்கோ உயரத்துக்குக் கொண்டு செல்லும் ஏதோ வேறொன்று அவளிடம் இருந்தது.

சிறிய மேசைகளால் அவள் சூழப்பட்டிருந்தாள். ஒரு மேசையின் மீது வர்ணங்கள், தூரிகைகள், கந்தல் துணி, ஊசி, நூல் முதலிய பொம்மைகள் செய்வதற்குத் தேவையான யாவும் இருந்தன.

அவளுடைய அப்போதைய இயலாமையும் அவளுடைய ஊனமும் இரண்டு வெவ்வேறு விஷயங்களாக இருந்தன. ஆனாலும் என்னுடைய கவனத்தை உடனடியாக ஈர்த்தது அவளுடைய ஊனம்தான். அவள் உட்கார்ந்திருந்த விதம் இவையெல்லாம் கதவைத் திறந்ததில் இருந்தே என்னை சிந்தனை செய்யத் தூண்டியது. இந்நிலைக்கான தொழில் ரீதியான பெயர் உங்களுக்குப் புரியாது.

ஆனால் நான் முதன் முதலில் பார்த்தபோது எனக்கு என்ன தோன்றியதோ அதுதான் அவள் நோயென்றால் அது நிச்சயமாக குணப்படுத்தக் கூடியதே.

‘நடக்க முடியுமா எஸ்ஸி ? ‘ ஆர்வம் காட்ட முடியாத அளவுக்கு களைத்திருந்த போதும் அவள் தலையசைத்தாள்.

‘ப்ளீஸ், என்னை நோக்கி நடந்து வா ‘

‘வேண்டாம். தயவு செய்து என்னை நடக்கச் சொல்லாதீர்கள் ‘ அவள் கெஞ்சினாள்.

அவள் குரலில் இருந்த கெஞ்சல் என்னைத் தொட்டது என்றாலும் நான் ஒரு விஷயத்தை நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும். ‘ஸாரி, எஸ்ஸி, ப்ளீஸ், நான் சொன்னபடி செய் ‘ என்றேன்.

லேசாகத் தடுமாறியவளாய் நாற்காலியில் இருந்து எழுந்தாள். என்னை நோக்கி நொண்டினாள். இடக்காலை இழுத்தவாறு. எனக்கு நிச்சயமாகத் தெரிந்து விட்டது. நான் நினைத்தது சரிதான். ‘ஆங்..அப்படி ‘ என்று அவளை ஊக்கமூட்டும் விதமாக புன்னகையோடு சொன்னேன். அவளை நோக்கி என் இரு கைகளையும் விரித்தேன்.

ஒரு கண நேரம் நாங்கள் ஒருவர் கண்ணுக்குள் ஒருவர் பட்டுவிட்டதாகத் தோன்றியது. துயரம், நிராசை என்ற ஆழமான நீர் நிலையில் அடித்துச் செல்லப்பட்டு அவள் மூழ்கிக் கொண்டிருப்பது போல எனக்குத் தோன்றியது. உதவிக்காக எனை நோக்கிய அவளின் நிசப்தமான அலறலின் சக்தியைக் கொண்டு என்னைச் சுற்றியிருந்த காற்று கலக்கப் பட்டதைப் போன்று உணர்ந்தேன்.

நான் செய்தது போலவே அவள் கைகளும் எனை நோக்கி உயர்ந்தன. பின் தானாகவே பக்க வாட்டில் சென்று விழுந்தன. நிசப்தம் உடைக்கப்பட்டது.

‘எவ்வளவு நாட்களாக இப்படி உள்ளது எஸ்ஸி ? ‘

ரோஸ் கலாமிட் சொன்னாள் : ‘அதுவா, எஸ்ஸி பல வருஷங்களாக ஊனமாக இருக்கிறாள். உங்களை நான் அதற்காகக் கூப்பிடவில்லை. அவளுக்கு இப்போது உடம்பு சரியில்லை. அது என்னவென்று நான் தெரிந்து கொள்ள வேண்டும். ‘

ஆமாம். அவளுக்கு உடம்பு சரியில்லாமல்தான் இருந்தது. ஒரு வேளை சாகும்வரைகூட அப்படி இருக்கலாம். அறைக்குள் நுழைந்த உடனேயே நான் அதனை உணர்ந்தேன். அசிங்கமான அந்த பெரிய பொம்பளையை அகலுமாறு கண்களாலேயே கூறினேன்.

ஆனால் அவள் சிரித்துவிட்டு, ‘நிச்சயமாக போக மாட்டேன் டாக்டர். நான் இங்கேயேதான் இருக்கப் போகிறேன். எஸ்ஸிக்கு என்னவென்று என் முன்னாடியே நீங்கள் பரிசோதித்து சொல்ல வேண்டும் ‘ என்றாள்.

பரிசோதனையை முடித்தவுடன் ரோஸுடன் முன் அறைக்குச் சென்றேன். ‘எப்படி இருக்கிறாள் ? ‘ என்றாள்.

‘அவளுடைய ஊனத்தை குணப்படுத்த முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா ? சரியான ட்ரீட்மெண்ட் கொடுத்தால் சாதாரணமாக அவளால் நடக்க முடியும். இன்னும் ஒரு.. ‘ என்று நான் சொல்லிக்கொண்டிருக்கும் போதே –

‘வாயை மூடுங்கள் ‘ கோபமான அவளுடைய கத்தல் என்னுடைய செவிகளில் அறையைப் போல விழுந்தது.

‘எந்த நேரத்திலும் அவளிடம் இப்படிச் சொல்வதற்குத் துணிய வேண்டாம். நன்றாகத் தெரிந்தவர்களை வைத்து நான் அவளை ஏற்கனவே பார்த்துவிட்டேன். இளம் முட்டாள்கள் தவறான நம்பிக்கைகளை ஏற்படுத்துவதை நான் விரும்பவில்லை. அப்படி ஏற்படுத்துவதானால் நீங்கள் போகலாம். அவளுக்கு இப்போது என்ன செய்கிறது என்றுதான் நான் அறிய விரும்புகிறேன். அவள் சாப்பிட வில்லை. தூங்கவில்லை. வேலையும் செய்யவில்லை. நீங்கள் என்ன கண்டுபிடித்தீர்கள் ? ‘ என்றாள்.

‘ஒன்றுமில்லை. உடம்பு ரீதியாக ஏதும் தவறாக இருப்பதாக எனக்குப் படவில்லை. ஆனால் எங்கோ எதுவோ பயங்கரமாக சரியில்லாமல் உள்ளது. நான் அவளை மறுபடியும் பார்க்க வேண்டும். அதுவரை ஒரு டானிக்கும் புத்துணர்ச்சிக்கு மருந்தும் எழுதித் தருகிறேன். சில நாட்களுக்குப் பிறகு வந்து பார்க்கிறேன். ‘

‘அவள் ஊனத்தைச் சரிப்படுத்துவேன் என்றெல்லாம் நீங்கள் பேசாமல் உங்கள் பெரிய வாயை மூடிக்கொள்ள வேண்டும். புரிகிறதா ? இல்லையென்றால், நான் வேறு டாக்டரைப் பார்த்துக் கொள்கிறேன். ‘

‘சரி, சந்திப்போம் ‘ என்றேன். மறுபடியும் எஸ்ஸியை நான் பார்க்க வேண்டியிருந்தது.

‘இந்த பொம்மைகளை எல்லாம் நீங்கள் செய்வதாகச் சொன்னீர்கள் அல்லவா ? ‘ தொப்பியையும் பையையும் எடுத்துக் கொண்டு கிளம்பும்போது கேட்டேன்.

அந்த விஷயத்தைப் பற்றி மறுபடியும் பேச மாட்டேன் என்று நினைத்தவளைப் போல சற்று திகைத்துப் போனாள்.

‘ஆமாம். நான் தான் வடிவமைக்கிறேன். சமயங்களில் தன் ஊனத்தையும், எந்த ஆண் மகனும் தன்னைத் திருமணம் செய்து கொள்ள மாட்டான் என்ற உணர்வையும் மறப்பதற்காக அந்தக் குழந்தையையும் எனக்கு உதவி செய்யச் சொல்வேன் ‘ என்றாள்.

தெளிவான சூடான ஜுலை மாதப்பகலில் நான் வெளியில் நடந்து கொண்டிருந்தேன். குழந்தைகள் சாலையின் பக்க வாட்டு நடை பாதையில் சில்லு விளையாடிக்கொண்டு இருந்தார்கள். மதுக்கிடங்கின் சுவற்றில் எறிந்து கைப்பந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். ‘ட்ராஃபிக் ‘ சப்தித்துக் கொண்டிருந்தது. ரோஸ் கலாமிட் பொய் சொல்லியிருக்கிறாள் என்று அப்போது என் இதயம் சொல்லியது. வசியப்படுத்தப்பட்டிருந்த அந்த பொம்மையின் பின்னிருந்த இனிமையான ஆன்மாவை நான் கண்டு கொண்டேன்.

ஆனால் அவள் நோயின் காரணத்தை நான் நிச்சயப் படுத்தாத வரையில் அந்த ஆன்மா இந்த உலகில் வெகு நாட்கள் இருக்காது என்று எனக்குள் இருந்த உணர்ச்சியற்ற, ஈரமான மருத்துவ உள்ளுணர்வின் தூதுவன் எச்சரித்தான்.

அவள் பெயர் எஸ்ஸி நோலன் என்று பின்னால் தெரிந்து கொண்டேன். நிச்சயப்படுத்த முடியாத ஒரு காரணத்தில் இருந்து அவள் மெல்ல மெல்ல இறந்து கொண்டிருந்தாள். அதில் ரோஸ் கலாமிட்டுக்கும் சம்பந்தம் இருக்க வேண்டும் என்று நான் நிச்சயமாக நம்பினேன்.

தெரிந்தே ரோஸ் அவளைக் கொன்று கொண்டிருந்தாள் என்பதாக அல்ல. ஆனால் எஸ்ஸியை அந்த சிவப்பு முடிக்காரி உண்மையில் கலவரப்படுத்தி இருந்தாள். எஸ்ஸி உயிரோடு இருக்க வேண்டும் என்றுதான் அவளும் விரும்பினாள். ஏனென்றால் எஸ்ஸிதான் அவளுடைய வருமானத்தின் தாரம். அவளுடைய சாப்பாட்டுச் சீட்டு.

நான் பல முறை போய் வந்தேன். பொம்மைகளைத் தான் செய்வதாகச் சொன்ன பொய்யைக் காப்பாற்ற வேண்டுமே என்று கூட ரோஸ் கவலைப்பட வில்லை. ஓரளவுக்கு உண்மையை என்னால் தெரிந்துகொள்ள முடிந்தது.

எஸ்ஸிக்குப் பதினைந்து வயதிருக்கும்போது அவள் பெற்றோர் ஒரு விபத்தில் கொல்லப்பட்டனர். அதுவே அவள் ஊனத்திற்குக் காரணம். அவளுக்கிருந்த ஒரே சொந்தக்காரியான ரோஸ் கலாமிட்டை காப்பாளராக கோர்ட் நியமித்தது. எஸ்ஸியின் சொத்து சொற்பமானது என்று தெரிய வந்ததும் அவளுடைய ஊனத்தைப் பற்றியே பேசிப்பேசி ரோஸ் தனது வெறுப்பை வெளிப்படுத்தினாள்.

அவர்களுடைய வருடக்கணக்கான உறவில் தன்னுடைய ஊனத்தைப் பற்றி மிகவும் அவமானப் படும்படியான உணர்வு உள்ளவளாக அவளை அந்தக் கிழப்பொம்பளை மாற்றி இருந்தாள். ‘நீ ஒரு பிரயோஜனமில்லாத ஊனமுற்றவள். எந்த ஆண் மகனும் உன்னை திரும்பிப் பார்க்க மாட்டான். உனக்குத் திருமணம் என்பதோ குழந்தைகள் என்பதோ கிடையாது ‘ என்றே அவள் எப்போதும் சொல்லி வந்தாள்.

எஸ்ஸி பருவமடைந்த போது அவள் உணர்வுகள் உடைக்கப் பட்டிருந்தன. அவள் ரோஸின் எண்ணத்திற்கு முழுமையாக அடிமைப் பட்டிருந்தாள். அவளுடைய ஆதிக்கத்தின் கீழ் நம்பிக்கையற்ற இருப்பையும் தனியான வாழ்வையும் தொடர வேண்டியிருந்தது. இந்த சமயத்தில்தான் எஸ்ஸி முதன்முதலாக துணிப்பொம்மைகள் செய்ய ஆரம்பித்திருந்தாள்.

தனது அசிங்கம், பேராசை, சோம்பேறித்தனம் இவைகளை மீறி அந்த பொம்மைகளில் இருந்த சிறப்புத் தன்மையையும் தவிர்க்கமுடியாத கவர்ச்சியையும் புரிந்து கொள்ளும் அளவுக்கு ரோஸுக்கு அறிவிருந்தது.

முதலில் செய்தவைகளை விற்றதிலிருந்து, காலையில் இருந்து இரவு வரை எஸ்ஸியை பொம்மைகள் செய்யச் சொல்லிவைத்திருந்தாள். சில வாரங்களில் முன்னூறில் இருந்து நானூறு டாலர் வரை அவளுக்குக் கிடைத்தன. இதில் எதுவும் எனக்குத் தெரிந்து எஸ்ஸிக்குப் போகவில்லை.

எஸ்ஸி முழுமையாக ரோஸின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தாள். அவளைக் கண்டு பயப்பட்டாள். ஆனால் அவளைக் கொன்று கொண்டிருந்தது அதுவல்ல. அது வேறு. என்னவென்று என்னால் தெரிந்து கொள்ள முடியவில்லை. அவளைத் தனியாகப் பார்க்கவும் நான் அனுமதிக்கப் படவில்லை. ரோஸ் எப்போதும் பக்கத்திலேயே இருந்தாள்.

வீணாக்கப்பட்டிருந்த அவளுடைய உடம்புக்குள் பலவீனமாக படபடத்துக் கொண்டிருந்த அமுக்கப்பட்ட உணர்வு களைக் கொண்ட அந்த இரக்கப்படக் கூடிய பெண்ணும் வெறுக்கத்தக்க தடித்த உதடுகளும் பேராசை பிடித்த கண்களும் பச்சிலை நாற்றமும் கொண்ட, தீமையின் மணத்தை மூச்சாக வெளியிடும் அந்தப் பொம்பளையும் உள்ள அறையில் இருக்கும் போதுதான் நல்லது கெட்டதற்கு மத்தியில் உள்ள வித்தியாசத்தை நான் உணர்ந்தேன்.

எஸ்ஸியின் ஊனத்தை குணப்படுத்துவதற்கான சாத்தியப் பாட்டைப் பற்றிய என் நம்பிக்கையை நான் சொல்லவில்லை. அவளைச் சாகடித்துக் கொண்டிருந்தது என்ன என்பதை உடனடியாகக் கண்டு பிடிக்க வேண்டியது அதைவிட முக்கியமானதாகிவிட்டது. அவளை மருத்துவ மனையில் சேர்க்க ரோஸ் அனுமதிக்க வில்லை. அந்த செலவை அவள் ஏற்றுக்கொள்ள மாட்டாள்.

என் கண்ணெதிரிலேயே எஸ்ஸியைக் கொன்று கொண்டிருந்த இயக்கத்தை, முறையை பத்து நாட்களுக்கு நிறுத்திவிட்டதாக நான் நினைத்தேன். பொம்மைகளின் மீதான அவள் வேலையை நான் நிறுத்தினேன். படிப்பதற்கு சில புத்தகங்கள், சில இனிப்புகள், ஒரு பாட்டில் ஷெர்ரி இவைகளை நான் கொண்டுவந்து அவளுக்கு கொடுத்தேன்.

நான் மறுமுறை சென்றபோது என்னைப் பார்த்து எஸ்ஸி முதல் முறையாகப் புன்னைகைத்தாள். அந்த நடுக்கம், இயக்கம், பசி, பெண்மை, புன்னகை, நிராசை இவை எந்த கல் இதயத்தையும் உடைத்துவிடும்.

‘இப்போது பரவாயில்லை. இன்னும் பத்து நாட்களுக்கு ஒன்றும் செய்ய வேண்டாம். ஓய்வு, தூக்கம், படிப்பு பின்பு பார்ப்போம். ‘ என்றேன்.

ஆனால் ரோஸ் கலாமிட் சினத்தினால் புருவங்களை நெரித்தாள். மனதுக்குப் பிடிக்காத ஏதோ ஒன்றின் வெளிப்பாடு அவள் வாயில் தெரிந்தது. அவளின் ஆதிக்கம் செலுத்தும் பெரிய உருவம் அந்த அறை முழுவதும் வெறுப்பால் நிறைப்பது போல் தோன்றியது.

அடுத்த முறை நான் போனபோது அவள் எனக்காக அவளுடைய அறையில் காத்திருந்தாள். கையில் ஏழு ஒரு டாலர் நோட்டுக்கள். ‘ஓகே டாக்டர். போதும். இனிமேல் நீங்கள் வரவேண்டியதில்லை ‘ என்றாள்.

‘ஆனால் எஸ்ஸி.. ‘

‘எஸ்ஸி அருமையாக இருக்கிறாள் ‘

மூலையில் இருந்த பழைய ட்ரங்க் பெட்டியின் மீது என் கண்கள் அலைந்தன. அதன் மீது மூன்று புதிய பொம்மைகள் இருந்தன. அவைகளில் நான் கண்டது வெறும் கற்பனைதானா அல்லது உண்மையிலேயே அந்த மந்திரிக்கப்பட்ட நிசப்த உருவங்களில் ஒரு புதிய தன்மை தென்பட்டதா ? ஒவ்வொன்றும் ஒரு வகையில் ஒரு பிறப்பாகவும் ஒரு இறப்பாகவும், வாழ்க்கையின் அழகிற்கும் ஆசைக்கும் ஒரு வாழ்த்தாகவும் அதே சமயம் ஒரு விடை பெறலாகவும் இருந்ததா ?

மிருகத்தனமான அந்தப் பொம்பளையை ஒதுக்கித் தள்ளிவிட்டு கதவுகளைக் கடந்து சென்று என் நோயாளியைப் பார்க்க வேண்டும் என்று ஒரு அதிபலமான உணர்வு எழுந்தது. ஆனால் மருத்துவத் துறையின் ஒழுக்கங்கள் உடைக்க முடியாதவை. ஒரு மருத்துவனை வேண்டாம் என்று சொல்லும் போது செல்ல வேண்டியது அவன் கடமை. தனது நோயாளியோடு யாரோ தப்பாட்டம் ஆடிக்கொண்டு இருக்கிறார்கள் என்று சந்தேகப் படுவதற்கு காரணம் இருந்தால் தவிர.

எஸ்ஸியின் இயலாமையின் காரணத்தை நிர்ணயிப்பதில் நான் தோற்றுவிட்டேன். ரோஸ் நிச்சயமாக இன்னொரு மருத்துவனை அழைப்பாள். ஏனென்றால் வாழ்க்கை சுலபமானதாக இருக்க எஸ்ஸியின் பணிகள் அவளுக்குத் தேவை. தனது சாப்பாட்டுச் சீட்டைக் காப்பாற்ற அவள் சந்தேகமின்றி முயற்சி செய்வாள்.

மனது கனக்க நான் புறப்பட்டேன். ஆனால் இரவும் பகலும் எஸ்ஸியைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன். அதற்குப் பிறகு கொஞ்ச நாள் கழித்து எனக்கு உடம்பு முடியாமல் போனது. முதலில் புலப்படாத வகையில். முடிவில் நன்றாகத் தெரியும் படியே.

பசியின்மை, எடை இழப்பு, சோம்பல், எரிச்சல் படும் தன்மை, இரவில் உஷ்ணம் குறைதல், திடாரென்று உடம்பு பலவீனமாதல் இப்படி. என்னுடைய வேலைகளைத் தொடர முடியாது என்று உணர்ந்தேன். டாக்டர் சால் அவர்களை மருத்துவ மனையில் என்னைக் கவனிக்கும்படி செய்தேன். அவர் வழக்கப்படி பரிசோதித்துவிட்டு, ‘ஒன்றுமில்லை சாம், கொஞ்சம் ஓய்வெடுங்கள். அதிகமாக வேலை செய்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இயற்கையின் எதிர்ப்பு அவ்வளவுதான் ‘ என்றார்.

ஆனால் அவர் சொன்னது காரணமல்ல என்று எனக்குத் தெரியும்.

அதிர்ச்சி தரும்படியாகத் தோன்ற ஆரம்பித்தேன். என்னுடைய தோல் தன்னுடைய நிறத்தின் சாயலை இழக்க ரம்பித்தது. கன்ன எலும்புகள் தெரிய ஆரம்பித்தன. தூக்க மின்மையால் கண்கள் குழிவிழுந்தன. எனது கண்கள் தந்த தோற்றமோ எனது வாய் இருந்த விதமோ எனக்குப் பிடிக்க வில்லை. எனது இரவுகளிலும் கனவுகளிலும் எனக்குக் காய்ச்சலடித்தது.

அக்கனவுகளில் ரோஸ் கலாமிட்டின் அசிங்கமான, வடிவற்ற கைகளில் எஸ்ஸி சிறைப்பட்டிருந்தாள். அதிலிருந்து விடுபட்டு எஸ்ஸி என்னை அடைய கஷ்டப்பட்டு முயன்று கொண்டிருந்தாள். எஸ்ஸியின் நோய்க்கான காரணத்தை கண்டறிவதில் தோல்வியுற்றதனால் ஏற்பட்ட கவலையில் இருந்து என்னால் மீள முடியவில்லை.

நான் மருத்துவன் என்பதில் எனக்கிருந்த முழு நம்பிக்கையுமே பயங்கரமாக உலுக்கப்பட்டது. ஒரு நிராதரவான மனுஷி என்னை உதவிக்காக அழைத்திருக்கிறாள். நான் தோற்றிருக்கிறேன். நான் எனக்கே உதவி செய்ய முடியவில்லை. என்னை மருத்துவன் என்று அழைத்துக் கொள்ள என்ன உரிமை இருக்கிறது ? ‘மருத்துவனே, உன்னை நீ முதலில் குணப்படுத்திக்கொள் ‘ . என்னை நானே திட்டிக்கொண்டு எனக்கு நானே வருந்திக்கொண்டும் கழித்த ஒரு பயங்கரமான இரவு முழுவதும் ஏதோ நெருப்பால் எழுதப்பட்டது போல என் மூளைக்குள் இந்த வாக்கியம் எரிந்தது.

அடுத்தவரை குணப்படுத்துமுன் என்னை நானே குணப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் எதிலிருந்து ? எதிலிருந்தாவது என்று வைத்துக்கொண்டால் என்னுடைய நோயின் அடையாளங்கள் எஸ்ஸி ரோலனுடையதைப் போல இருந்தன. எஸ்ஸி ! எஸ்ஸி ! எஸ்ஸி ! எப்போதும் எஸ்ஸி !

எஸ்ஸிதான் எனது நோயா ? அபி ஷெஃப்டனின் கடைக்குள் அந்த துணிப்பொம்மைக்குள் வடிவெடுத்திருந்த அவளின் வசியப் படுத்தப்பட்ட உணர்வின் நீட்சியை நான் சந்தித்த அந்த முதல் முறையில் இருந்தே அவள் எனது நோயாக இருக்கிறாளா ?

பொழுது விடிந்து பின் பக்கத்து ஜன்னலில் பழுப்பேற்றியபோது அதிகரிக்கும் சப்தமுடன் மேலே ரயில் சென்றபோது நான் எனது நோயை அறிந்தேன் : நான் எஸ்ஸி ரோலனைக் காதலித்தேன். ‘எஸ்ஸி ‘ என்ற வார்த்தையையும் ‘காதல் ‘ என்ற வார்த்தையையும் ஒன்றாக நினைக்கும் போதும் நான் அவளைக் காதலிக்கிறேன், எனக்கு அவள் தேவை. அவள் உடம்பும் ஆத்மாவும் என்றென்றும் என் பக்கம் இருக்க வேண்டும் என்று நான் தலை தூக்கி உரக்கச் சொல்லும் போதும் என்னுடைய நாளங்கள் வழியாக மூலிகையின் நெருப்பு மின்னுவதை உணர முடிந்தது.

கதகதப்பு. ஏக்கத்தோடு கூடிய தேவை. தனது இருப்பின் மூலம் வெளிப்படுத்தியது மென்மை. எல்லா வழிகளிலும் குணப்படுத்தி பழைய நிலைக்குக் கொண்டு வந்த பிறகு முழுமையாக மலர இருக்கின்ற அவளுடைய வினோதமான, அசாதாரண அழகு — இவை கூடிய எஸ்ஸிதான் எனது நோயாக எப்போதுமே இருந்திருக்கிறாள்.

இப்போது என் கண்களை மறைத்துக் கொண்டிருந்த திரை அகன்று விட்டது. எனது சக்திகள் மறுபடியும் வெளிப் படுத்தப்பட்டன. எஸ்ஸிமீது நான் கொண்டிருந்த பசி, காதல், இரக்கம் இவற்றை ஏற்றுக் கொண்டு, என்னிலிருந்து விடுபடவைப்பதன் மூலமாக, எஸ்ஸி நோலனுடைய நோய் என்னவென்று நான் முழுமையாகத் தெரிந்து கொண்டேன். அதன் துன்பகரமான கடைசி விபரம் வரை. இந்த உலகத்தில் அவள் இழக்கப்படாமல் இருக்க வேண்டுமென்றால் நான் என்ன செய்ய வேண்டும் என்றும் சில நிமிடங்களுக்கேனும் அவளை நான் ஏன் தனியாகப் பார்க்க வேண்டும் என்றும் தெரிந்து கொண்டேன்.

அந்தக் காலையில் நான் அபி ஷெஃப்டனுக்குப் ஃபோன் செய்தேன்.

‘ நான் டாக்டர் அமனி பேசுகிறேன். எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா ? ‘

‘ என்ன விளையாடுகிறீர்களா ? நீங்கள் என் மகனுக்குச் செய்த உதவிக்கு … என்ன செய்ய வேண்டும் என்று மட்டும் சொல்லுங்கள். ‘

‘ இதோ பார் அபி, ரோஸ் கலாமிட்டை ஞாபகமிருக்கிறதா ? பொம்மைகள் தருவாளே ? ‘

‘ ஆமாம் ‘

‘ மறுபடியும் அவள் கடைக்கு வரும்போது எப்படியாவது எனக்கு ஃபோன் பண்ணிச் சொல்ல வேண்டும். என்ன செய்வாயோ, அவளை அங்கேயே பிடித்து வைத்திரு, பேசிக்கொண்டிரு அல்லது ஏதாவது செய்து அவளை அங்கேயே தக்க வைத்திரு. எனக்குத் தேவை இருபது நிமிடங்கள். ஓகே. புரிந்ததா ? என் வாழ்நாள் பூராவும் உன்னை நான் வாழ்த்துவேன். ‘

ஒவ்வொரு தரமும் நான் வெளியில் சென்றபோது அழைப்பு வந்திருக்குமோ என்ற பயத்திலேயே எனக்கு வியர்த்துக் கொட்டும். ஒவ்வொரு தரமும் நான் திரும்பும்போது கடைப்பக்கம் வந்து விசாரிப்பேன். ஆனால் அபி தலையை இடம் வலமாக ஆட்ட மட்டும் செய்வான்.

பிறகு ஒரு நாள் பிற்பகல் ஐந்து மணிக்கு தொலைபேசி ஒலித்தது. அபிதான். ‘இப்போது முடியும் ‘ என்று மட்டும் சொல்லி தொலைபேசியை வைத்துவிட்டான்.

சில ப்ளாக்குகளைத் தாண்டி ஓடி எஸ்ஸி இருந்த பழுப்பு நிறக் கல்வீட்டை அடைந்து பெயர்ப்பலகையின் கீழிருந்த பஸ்ஸரை அழுத்த ஓரிரண்டு நிமிடங்களுக்கு மேல் எனக்கு பிடிக்கவில்லை. கதவு க்ளிக் என்ற ஓசையுடன் திறந்து கொண்டது. இரண்டிரண்டு படியாக மாடியேறினேன். கதவு பூட்டப்பட்டிருந்தால் வீட்டுக்கார அம்மாவை அழைத்துக் கொண்டு வரவேண்டும். ஆனால் நான் அதிர்ஷ்டசாலி. ரோஸ் சில கணங்களுக்கே வெளியே செல்ல நினைத்திருந்தாள் கையால் கதவு திறந்தே இருந்தது. இணைப்பு பாத்ரூம் வழியாக விரைந்து பின்னறைக்குச் சென்று எஸ்ஸியைப் பார்த்தேன்.

அவள் கொஞ்சம்தான் மீதி இருந்தாள்.

படுக்கையில் உட்கார்ந்திருந்தாள். பூரணமாக வெளுத்திருந்த அவள் தேகத்தில் கன்னங்களின் மத்தியில் இரண்டு சிவப்பு காய்ச்சல் புள்ளிகள் நெருப்பு போல் மின்னின. அவள் கைகள், உடம்பு இவற்றின் சேதாரத்தை விட இந்தப் புள்ளிகள் மிகவும் அபாயகரமான அடையாளங்கள்.

அவளைச் சுற்றி சாயங்களும், வண்ணத் துணித்துண்டுகளும் நூலும் இருந்தன. இன்னும் ஒரே ஒரு பொம்மை, இன்னும் ஒரே ஒரு கனவு, வாழ்க்கை பயங்கரமான முறையில் உதிர்வதற்கு விதித்திருந்த அந்த இனிமையான சுயத்தின் கடைசி பிரதிபலிப்பு — இதை செய்து முடிக்காமல் இறக்க விரும்பாததைப் போல.

நான் உள்ளே வந்தபோது நிமிர்ந்து பார்த்தாள். அசந்து போயிருந்ததை மீறி ஆச்சரியத்திற்குள்ளானாள். ரோஸ்தான் வந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தாள். அவள் கைகள் அவள் நெஞ்சுக்குச் சென்றன. என் பெயரைச் சொன்னாள். டாக்டர் அமனி என்றல்ல. நான் சொல்லி வைத்திருந்த ‘சாமுவேல் ‘ என்ற பெயரை.

‘எஸ்ஸி ! நல்ல வேளை, ஆண்டவனே, நான் நேரத்தில் வந்திருக்கிறேன். நான் உனக்கு உதவி செய்ய வந்திருக்கிறேன். உன்னை இதுவரை நோயாளியாக்கி வைத்திருந்தது எது என்று எனக்குத் தெரியும். .. ‘

அவளிடமிருந்து எதுவுமே வெளியேற முடியாத நிலையில் அவள் இருந்தாள். எனது தயக்கத்தை அவள் உணர்ந்து கொண்டாள். ‘உன்னை சாகடித்துக் கொண்டிருந்தது எது என்று எனக்குத் தெரியும் ‘ என்ற வாக்கியத்தை நான் சொல்லாமல் தவிர்த்ததையும் அவள் புரிந்து கொண்டாள். ‘அதற்கென்ன இப்போது ? ‘ என்று ரகசியம் போலச் சொன்னாள்.

‘இன்னும் நேரம் உள்ளது எஸ்ஸி. உன் ரகசியம் எனக்குத் தெரியும். உன்னை சுகப்படுத்துவது எப்படி என்று எனக்குத் தெரியும். ஆனால் நான் சொல்வதை நீ கேட்க வேண்டும். உனது வாழ்வே அதைச் சார்ந்துதான் உள்ளது. ‘

நான் சொல்ல வந்ததைக் கேட்க விரும்பாமலோ அல்லது எதிர்கொள்ள முடியாமலோ இருப்பாள் என்று நான் நினைக்க வில்லை. இருந்தாலும் நான் மேற்கொண்டு சொல்லித்தான் ஆகவேண்டும். நான் உட்கார்ந்து அவள் கையை எடுத்து என் கை மீது வைத்துக்கொண்டேன்.

‘எஸ்ஸி, நான் சொல்வதை தயவு செய்து மனது கொடுத்துக் கேள். ஒரு உடம்புக்குத் தேவையான உணவு கிடைக்காத போது, நாம் உணவு கொடுக்கிறோம். ரத்தமில்லாமல் போகும்போது ரத்தம் தருகிறோம். இரும்புச் சத்தோ ஹார்மோனோ குறையும்போது டானிக் தருகிறோம். உன்னிடத்திலோ இவையல்லாத வேறொரு குறைபாடு — ஒழுகல் இருந்திருக்கிறது. எது இல்லாமல் ஆத்மாவையும் உடம்பையும் ஒன்றாக வைத்திருக்க முடியாதோ அதை உன்னிடமிருந்து வடித்து எடுத்திருக்கிறார்கள். ‘

அவள் கண்கள் திறந்தன. பயத்தால் ஒளிர்ந்தன. ‘வேண்டாம் தயவு செய்து சொல்லாதீர்கள் ‘ என்று அவள் கெஞ்சியபோது கிட்டத்தட்ட பிரக்ஞையை இழந்துவிடுவாள் போலத் தோன்றியது.

அங்கேயே அப்போதே ஒரு வேளை அவள் இறக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் அவளுக்கும் எனக்கும் இருந்த ஒரே நம்பிக்கை மேற்கொண்டு பேசுவதுதான்.

‘எஸ்ஸி, என் அன்பான, துணிச்சலான பெண்ணே ! பயப்படும்படி ஒன்றுமில்லை. அன்பு தராமல் உன்னைக் காய வைத்திருக்கிறார்கள். என்னைப்பார் எஸ்ஸி ! ‘

எனது கண்கள் அவளைப் பார்த்தன. அவள் உயிரோடு என்னோடு இருக்க வேண்டும். நான் சொல்வதை முழுவதுமாகக் கேட்க வேண்டும் என்று விரும்பினேன்.

‘பார் எஸ்ஸி, மனிதன் செலவழிப்பதற்கு அன்பைத் தேக்கி வைத்திருக்கிறான். வாழ்க்கையில் இருந்தே அதை அவன் பெற்றான். பாசம், மென்மை, இதம், நம்பிக்கை இவற்றைக் கொண்டு அவன் அதை மறுபடியும் திரும்ப நிரப்ப வேண்டும். ஆனால் உன்னிடம் இருந்ததை எல்லாம் கடைசிவரை காலி பண்ணிவிட்டார்கள் ‘

அவள் இன்னும் என்னைக் கேட்டுக் கொண்டிருந்தாள் என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது. நான் தொடர்ந்தேன்.

‘எல்லாவற்றுக்கும் காரணம் ரோஸ் கலாமிட்தான். உன் வாழ்க்கையின் எல்லா ஆசையையும் நம்பிக்கையையும் அவள் எடுத்துவிட்டாள். அதுமட்டுமல்ல. அதற்குப்பின் அவள் செய்ததுதான் இன்னும் பயங்கர குற்றமாகும். ஏனென்றால் உன்னிடமிருந்து அவள் உனது குழந்தைகளையும் பிரித்துவிட்டாள் ‘

அவ்வளவுதான். சொல்லிவிட்டேன். அவளை நானே கொன்றுவிட்டேனா ? வார்த்தைகளைக் கடந்து அவளை நேசித்த நானா அவளுக்கு மரண அடியைக் கொடுத்துவிட்டேன் ? என்றாலும் அந்த பாவமான கண்களில் உயிர் இன்னும் ஊசலாடுவதைப் பார்த்தேன். ஏதோ ஒன்றிலிருந்து விடுபட்ட உணர்வைக்கூட அந்தக் கண்கள் லேசாகப் பிரதிபலித்தன என்றுகூட நினைத்தேன்.

‘ஆமாம் எஸ்ஸி. நீ செய்த அந்த வசீகர பொம்மைகள்.. அவைகள்தான் அந்த குழந்தைகள். ஒரு பெண்ணாக இருப்பதற்குரிய வாய்ப்பை நீ இழந்துவிட்டதாக நீ முடிவு செய்தபோது எந்த படைப்பாளியையும் போல — தாயும் சரி கலைஞனும் சரி — உனது ஒவ்வொரு நம்பிக்கையையும், கனவையும் உன் எண்ணத்தையும் கொடுத்து நீ செய்த ஒவ்வொரு பொம்மையையும் வடிவமைத்தாய். ஆசையோடு அவைகளை உருவாக்கினாய். உன் குழந்தைகளைப் போலவே அவைகளை நேசித்தாய்.

‘பணப்பசி பிடித்த அந்த ராட்சச மிருகத்தால் உன் ஒவ்வொரு குழந்தையும் பிறந்த உடனேயே உன்னிடமிருந்து பிடுங்கப்பட்டன. பதிலுக்கு உனக்கு ஒன்றுமே தரப்படவில்லை. எனவே உன் இதயத்தில் இருந்தும் திசுக்களில் இருந்தும் இரத்தத்தில் இருந்தும் அவைகளை நீ உருவாக்கத் தொடங்கினாய். இவற்றின் விளைவாக உன் உயிர் உன்னிடமிருந்து காலியாகிக் கொண்டிருந்ததை அறியாமல். மனிதர்கள் அன்பு கிடைக்காமல் இறந்து போக நேரிடலாம். ‘

எஸ்ஸி அசைந்தாள். வெளுத்த மஞ்சள் பழுப்பு கேசத்தின் கீழ் அவள் தலை லேசாக அசைந்தது. விழித்திரை அகன்றது. என் கையிலிருந்த ஜில்லிட்ட அவள் கையின் லேசான அழுத்தம் ஒரு பதில் செயல்பாடாக இருந்ததை நான் உணர்ந்தேன்.

‘ஆனால் நான் உன்னைச் சாக விட மாட்டேன் எஸ்ஸி. உன்னை நேசிப்பதற்கு நானிருக்கிறேன். உன்னிடமிருந்து எடுக்கப்பட்டதை எல்லாம் வழிய வழிய நிரப்ப நானிருக்கிறேன். காதில் விழுகிறதா எஸ்ஸி ? நான் உனது டாக்டர் அல்ல. நான் உன்னைக் காதலிக்கிறேன். நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது என்று உன்னிடம் சொல்லிக் கொண்டிருக்கும் மனிதன் நான் ‘

சந்தேகத்துடன் அவள் ரகசியம் போலக் கேட்டாள் : ‘காதலிக்கிறீர்களா ? என்னையா ? நான் ஒரு ஊனமுற்றவள் ‘

‘நீ ஆயிரம் மடங்கு ஊனமுற்றவளாக இருந்தால் அதற்காக நான் உன்னை இன்னும் ஆயிரம் மடங்கு காதலிப்பேன். ஆனால் அது உண்மையல்ல. ரோஸ் கலாமிட் உன்னிடம் பொய் சொல்லியிருக்கிறாள். உன்னை குணப்படுத்த முடியும். இன்னும் ஒரே வருடத்தில் எல்லாப் பெண்களையும் போல உன்னை நான் நடக்க வைப்பேன் ‘

அவளை நான் அறிந்ததில் இருந்து இப்போதுதான் முதல் முறையாக அவள் விழிகளில் கண்ணீரையும் அவள் அழகான புருவங்களில் லேசாக நிறம் ஏறுவதையும் பார்த்தேன். பின்பு அவள் முழுமையான நேசம் மிக்க எளிமையில் என்னை நோக்கித் தன் கைகளை உயர்த்தினாள்.

போர்வை அவளைச் சுற்றிஇருக்க படுக்கையிலிருந்து நான் அவளைத் தூக்கினேன். அவளுடம்பில் கனமே இல்லை. ஒரு பறவையைப் போல. இந்த கதியற்ற நிலைமையிலும் ஏதோ ஒருவகையான இனிமை இருந்ததைப் போல அவள் என்னிடம் ஒட்டிக்கொண்டாள். அவள் கைகளுக்கு இவ்வளவு பலம் எங்கிருந்து வந்தது ? என் கன்னத்தோடு உராய்கின்ற அவள் கன்னம் எப்படி மின்னுகிறது ? சற்று முன் மரணத்திற்கு மிகவும் நெருங்கியவளாகத் தோன்றியவளா இவள் !

ஒரு கதவு மூடியது. இன்னொன்று வேகமாக அடித்துத் திறக்கப்பட்டது. ரோஸ் கலாமிட் அறைக்குள் புயல்போல நுழைந்தாள். பழைய பயத்தில் எஸ்ஸி நடுங்கியதை உணர்ந்தேன். என் தோளில் தன் முகத்தைப் புதைத்துக்கொண்டாள்.

ஆனால் ரோஸ் மிகவும் தாமதமாக வந்திருக்கிறாள். எல்லாம் முடிந்து விட்டது. அவள் செய்ய முடிந்தது இனி அங்கு ஒன்றுமில்லை. அவளுக்கே அது தெரியும். அவளைக் கடந்து கதவுக்கு வெளியே சென்று இறுக்கமாக என்னைக் கட்டியிருந்த என் சுமையைச் சுமந்து கொண்டு தெருவில் இறங்கி நடக்கும்வரை ஒரு வார்த்தைகூடப் பேசப்படவில்லை.

நியூயார்க்கிற்கு ஆகஸ்ட் வந்துவிட்டது. உருகி ஓடிய உஷ்ணம் தாழ்வாரங்களில் மின்னிக் கொண்டிருந்தது. காற்று அசையவில்லை. நீர்க்குழாய்களில் இருந்து தண்ணீர் தெருக்களில் பீறிட்டுக் கொண்டிருந்தது. குழந்தைகள் கூச்சலிட்டுக் கொண்டு அதில் குளித்துக் கொண்டிருந்தார்கள். நான் எஸ்ஸியை வீட்டுக்குத் தூக்கிச் சென்றபோது.

மூன்று வருடங்களுக்குப் பிறகு ஒரு ஆண்டு விழாவின் போது இதையெல்லாம் நான் எழுதிக் கொண்டிருக்கிறேன். எஸ்ஸி எங்களுடைய மகனை கவனித்துக் கொண்டிருக்கிறாள். பிறக்கப் போகும் இரண்டாவதை வரவேற்கத் தயார் செய்து கொண்டி ருக்கிறாள். இப்பொழுதெல்லாம் அவள் பொம்மைகள் செய்வதில்லை. அதற்கான அவசியம் இல்லை.

நமக்கு பல மாதிரியான ஆண்டு விழாக்கள் வரும். ஆனால் இந்த விழா நான் தனிப்பட்ட முறையில் கொண்டாடுவதாகும். மூன்றாவது அவென்யூவில் அபிஷெஃப்டனின் கடை தூசு படிந்த ஜன்னல் வழியாக என்னை அழைத்த வசீகர பொம்மையில் சிறைப்படுத்தப்பட்ட எஸ்ஸியின் ஆன்மாவில் இருந்து வந்த செய்தியை நான் முதன் முதலாக பார்த்து அதன் மீது காதல் கொண்ட நாளாகும். இந்த நாளுக்கு எனக்கு பணிவான நன்றிகள்.

=====================================================================================

அரும்பு, ஜனவரி-பிப்ரவரி, 1987

திண்ணையில் நாகூர் ரூமி மொழிபெயர்ப்பில்

  • ஜார்ஜ் சம்னர் ஆல்பீ

  • ஜோசே மரியா ஜிரோனெல்லா

    Series Navigation