வகாபிசமும் நவீன முதலாளியமும்

This entry is part [part not set] of 34 in the series 20060113_Issue

ஹெச்.ஜி.ரசூல்


1. நவீன முதலாளித்துவத்தின் பண்பாட்டுக் குரலாக இஸ்லாத்தினுள் வகாபிசக்கோட்பாடு உருவாகி உள்ளதெனக் கூறலாம்.

நவீனத்துவம் உருவாகும்போது அது முன்வைக்கும் அறிவுவாதம், தனிநபர் மையவாதம், லாபக்கோட்பாட்டினை மையப்படுத்திய பொருளியல் சார்புநிலை என்பதான முக்கிய கருத்தாக்கங்கள் கவனத்திற்குாியன. இவை சற்று திாிபடைந்த நிலையில் இஸ்லாமிய தளத்திற்குள் செயல்வினை புாிகிறது. இஸ்லாத்தின் பிரதேச அடையாளங்களை குறிப்பாக மார்க்கச் சட்டப்பள்ளிகள் என்னும் மத்ஹபுகள், குரு-சீடர் மரபின் வழி இஸ்லாத்தை மறுநிர்மாணம் செய்ய முயன்ற தாீகாக்கள், சூபிகள், சமயஞானிகளின் உறைவிடங்களான தர்காக்கள் சார்ந்த மரபுவழிபண்பாட்டியல் நடவடிக்கைகள் அனைத்தையும் முற்றிலுமாக அழித்தொழிப்பது வகாபிசத்தின் அடிப்படை நோக்கமாகும். இதனை அரபு வகைப்பட்ட இஸ்லாமிய பேரடையாளமாகவும், சகலவித அதிகாரத்தையும் மையத்தில் குவிக்கும் ஒற்றை நிறுவனச் சமயமாதிாியாகவும் சொல்லலாம். இதற்கான தத்துவ அடிப்படையையும் தனக்குத்தானே வகாபிசம் வடிவமைத்துக் கொண்டு பன்மிய அடையாளங்களை மறுக்கும் அழிப்பின் தத்துவமாகவும் வெளிப்படுகிறது.

2. இஸ்லாமிய அடித்தள மக்கள் முன்வைக்கும் பாரம்பாிய மரபுகள், நம்பிக்கைகள், சம்பிரதாயங்கள் மீதான தீவிரமான அறிவுவாத விமர்சனங்களை வகாபிசம் முன்வைக்கிறது. பகுத்தறிவின் விசுவாசத்தை ஒரு குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட எல்லை வரை சென்று தர்க்காீதியாக நிலைநிறுத்த முயல்கிறது. நவீனத்துவத்தின் முக்கிய கூறான அறிவுவாதம் மேற்குலகில் மதவிலக்கக் கூறுகளை கொண்டதாக இயங்கியது. அரபு மற்றும் ஆசிய சூழலில் இது அடித்தள மக்கள் சார்ந்த இஸ்லாத்தின் விளிம்பு நிலை மரபுகளை விலக்க முனைந்தது. மைய நீரோட்ட ஏகத்துவத்தின் மீது மட்டும் தனது பகுத்தறிவு பார்வையை பயன்படுத்த தடைவிதித்தது. எனவேதான் அடித்தள மக்களின் சிறுமரபுகளின் மீது எதிர்ப்பும், பெருமரபு மீது பாிபூரண நம்பிக்கையும் திரும்பத்திரும்ப வலியுறுத்தப்பட்டது. விஞ்ஞானங்களின் தாயாக திருக்குர்ஆன் வாழ்கிறது. இஸ்லாத்தைவிட அ றிவு சார்ந்த மாாக்கம் வேறில்லை ‘ என்பதான பிரச்சாரங்களினூடே ஒரு இஸ்லாமியனின் அடிப்படை என்பதே ‘ அல்லாஹ்வின் மீதும் அவனது தூதர்களின் மீதும், மறைபொருளாக இருக்கின்ற மலக்குமார்களின் மீதும், மறுமை வாழ்வு, சொாக்கம், நரகம் மீதும் ஈமான் கொள்ளுதலே ஆகும் ‘ என்பதாகச் சொல்லி அறிவின் இடத்தை நம்பிக்கையால் நிரப்பியது.

3. தமிழ் சூழல் சார்ந்த பண்பாட்டு இஸ்லாத்தின் உயிர்ப்புக் கூறுகளை விமர்சிக்கும் அளவில் மைய இஸ்லாத்தில் நிகழ்த்தப்படும் சடங்கியல்கள் அணுகப்படுவதில்லை. உலகெங்கிலுமிருந்து வருடந்தோறும் நாற்பது லட்சம் முஸ்லிம்கள் சவுதிஅரேபிய மக்கமாநாகாின் கஃபத்துல்லாவில் ஒன்றுகூடி புனிதக் கடமையை நிறைவேற்றுகின்றனர். அப்போது செய்யும் ஸபாமர்வாகுன்றுகளைச் சுற்றி வலம் வருதல், மினாவில் பெரிய ஷைத்தான், சின்ன ஷைத்தான் மீது கல்லடித்தல், ஆடு ஒட்டகம் பலியிடுதல், தலையை மொட்டையடித்தல் என்பதான நிகழ்வுகளின் மீதோ, இறைவாக்கின் உருவாக்கம், குறித்தோ, விவாதங்கள் இடம் பெறுவதில்லை. இறைவாக்கில் தென்படும் விசித்திரங்கள் சார்ந்த நிகழ்வுகளான மூசாவின் அசா பாம்பாக மாறுதல், பிர்அவுன் கூட்டம் துரத்துகையில் செங்கடலை பிளந்து நடந்து செல்லுதல், இபுராகிம் நபி தூக்கி வீசப்பட்ட நெருப்புக் குண்டம் குளிர் பொய்கையாக மாறுதல், அப்ரஹாவின் யானைப்படைகளை அபாபீல் பறவைகள் சிறுகளிமண் உருண்டைகளை வீசி எறிந்து பின்வாங்கச் செய்தல் உள்ளிட்ட பல நூறு விஷயங்களில் இத்தகையதான அறிவுநிலைப்பட்ட விவாதங்கள் பெரும்பாலும் விலக்கப்பட்டே வந்துள்ளன. பழங்குடி அரபு சமயங்களின் தோற்றம், செமிட்டிக் மதங்களான யூத, கிறிஸ்தவ மதத் தோற்றங்கள், திரு குர்-ஆனின் தோற்றுவாய் உள்ளிட்ட அனைத்து சம்பவங்களிலும் வரலாறு சார்ந்த சமூகவியல் பார்வையையோ, மானுடவியல் அணுகுமுறைகளையோ கவனத்தில் கொள்ளாமல் வெறும் ஆன்மீகத்தளத்தில் வைத்து மட்டும் அணுகுவதன் காரணமாக இஸ்லாத்தை பின்பற்றுவதில் மஸாயீல் சண்டைகளை முன்வைப்பதாகவும் வகாபிசம் உருவெடுத்தது.

சமகால சிக்கலான பிரச்சினைகளுக்கு திருக்குர்ஆன் ஹதீஸ்களில் முடிவு கிடைக்காதபோது, அனுபவம் சார்ந்து அறிவின் அடிப்படையில் முடிவுக்கு வரும் இஜ்திகாத் என்னும் பகுத்தறிவு சார் இஸ்லாமிய மரபையும் இஜ்மா என்னும் இஸ்லாமிய அறிஞர்களின் கூட்டுமுடிவையும் மறுத்தது. இந்நிலையில் வகாபிசம் முன்வைக்கும் பகுத்தறிவு வாத அணுகுமுறை முனை ஒடிந்த அளவுகோலாகவும், இரட்டை நாக்கு தன்மை கொண்டதாகவும் செயல்படுவதை புாிந்து கொள்ள முடிகிறது.

4. இஸ்லாத்திற்குள் அந்நியசமயகலாச்சார ஊடுருவல்கள் நிகழ்ந்து மார்க்கம் சீரழிந்து சின்னாபின்னமாகிவிட்டது. எனவே இஸ்லாத்தை அதன் தோற்றக்கால வடிவத்தில் தூய்மைப்படுத்த வேண்டுமென்ற இலக்கோடு ஒரு பின்னோக்கிய பயணத்தை வகாபிசம் செய்ய முயன்றது. யூத, கிறிஸ்தவ சமய பின்புலக்கூறுகளையும், அம்மரபுகளில் பெரும்பாலானவற்றையும் எப்படி இஸ்லாம் சுவீகாித்துக் கொண்டது என்பதைப் பற்றி அடிப்படை அறிதல்களோ, அவதானிப்புகளோ எதுவுமின்றி புதியதொரு சமய அடிப்படைவாதத்தை நோக்கி இது நகர்ந்தது. இதுவே பிற சமய மக்கள் பெண்கள் உட்பட அனைவர்களும் பங்கேற்கும் தாராளவாத இஸ்லாம் (Liberal Islam) முன்வைக்கும் பண்பாட்டு நடவடிக்கைகளை சீர்திருத்தவாத முகமூடி அணிந்து எதிர்த்தது. ஓரளவு கல்வியறிவு பெற்ற நடுத்தர, உயர்மட்ட முஸ்லிம்களை மேல்நிலையாக்கம் செய்தது. பொருளாதாரத்தில் நலிந்த அடித்தட்டு உழைக்கும் மக்களின் தர்கா பண்பாட்டு நடவடிக்கைகளோடு இணக்கம் காண மறுப்பது என்பது புதிய முதலாளிய வர்க்க நலன்களை கொண்டதொரு குழுவின் மேல்நிலையாக்க அரசியலாக வெளிப்பட்டது. இது இறுக்கம் சார்ந்த பழமைவாத அடிப்படைவாத மனோநிலைகளை கட்டமைத்தது. இந்த அடிப்படைவாதம் என்ற சொல்லுக்கு விளக்கம் தர முனைகிற வகாபிச சிந்தனையாளர்களில் சிலர் மேலோட்டமாக சில சொல்ஜாலங்களை உற்பத்தி செய்வதைப் பார்ாக்கலாம். ‘இஸ்லாமிய கொள்கை அடிப்படைகளில் உறுதியாக நிற்பதால் நாங்களும் அடிப்படைவாதிகள்தான் ‘ என்பதாக இது சொல்லப்படுகிறது. ஆனால் உண்மை என்னவெனில் அடிப்படைவாதம் என்பது ‘தனது அடிப்படைகளை நிர்மாணிக்க பிறவற்றை அழிப்பது ‘ என்ற அர்த்தமே கொண்டுள்ளது. மேலும் இஸ்லாத்தை வகாபிகளின் வழியில் பின்பற்றாத முஸ்லிம்கள், மாற்று சமய மக்கள் உட்பட அனைவருக்கும் மறுமையில் கிடைப்பது சொர்க்கமல்ல, பாழ்நரகம் தான் என தொடாந்து பிரச்சாரம் செய்கிறது. இவ்வாறாக பிறரை அவமதிப்பது ஒன்றையே பிரச்சாரமாக்கியிருக்கிற வகாபிச அடிப்படைவாதம். பலநேரங்களில் தீவிரவாதநிலையில் சலபிசம் தலிபானியம் குதுபிசம் உள்ளிட்ட வெவ்வேறு உருத்தோற்றமாகவும் கூட வடிவெடுக்கிறது.

5. புறத்தோற்றத்தில் வகாபிசம் பெண்ணுாிமை சார்ந்த விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என்பது போன்றதொரு பாவனை காட்டப்படுகிறது. இது உண்மையற்ற தோற்றமாகும். தர்கா கலாச்சாரம் சார்ந்த பெண்கள் திரளின் ஜாயாரத் வழிபாடுகளை கடுமையாக கண்டனம் செய்யும் வகாபிசம் இது தொடர்பான வரலாற்று ஆதாரங்களை தூசி தட்டி எழுப்பி விவாதிக்க முன்வருகிறது. சூழல்சார்ந்த அர்த்தத்தை முற்றிலுமாக தவிர்த்து விட்டு இஸ்லாமிய பெண்களின் சுதந்திரவெளியை திரும்பவும் தடை செய்கிறது.

திருமணத்தின் போது தந்தை வழி குடும்பத்தின் எந்தவித சொத்துக்கு உாிமையற்றவளாக, ஒன்றுமற்ற ஒரு வெற்று நுகர்வு பண்டம்போல் பெண் மாற்றப்படுகிறாள். பெண் பெறவேண்டிய சொத்துாிமையின் மீது இது மறைமுகத்தாக்குதலைத் தொடுக்கிறது. குடும்ப அமைப்பில் மகன், மணமகன், தந்தை என அடிமைச் சமுதாய திருமண முறைகளில் ஒன்றாக பணம் கொடுத்து பெண்ணை விலைக்கு வாங்குவது போன்றதொரு (marriage by purchase) நிலை உருவாக்கப்பட்டு உறுதிசெய்யப்படுகிறது. திருமணத்தின்போது காிசமணிமாலை அணிவித்தல், பூமாலை மாற்றுதல் உள்ளிட்ட மணமக்களின் திருமண நிகழ்வு சடங்குகளில் பெண்களின் அதிகாரப்பூர்வமான பங்கேற்பு முற்றிலுமாக இல்லாமல் ஆக்கப்படுகிறது.

6. அரேபியச் சூழலில் இஸ்லாத்தின் தோற்றக்காலம் மேய்ச்சல், விவசாயம் மற்றும் வர்த்தக பின்னணியைச் சார்ந்தது என்பதால் தொழில்துறை முதலாளித்துவம் குறித்த புதுச்சூழலை இஸ்லாம் அப்போது சந்திக்கவில்லை. வணிக முதலாளித்துவ பண்ட விற்பனை நிலையைத் தாண்டி தொழில் முதலாளித்துவம் மிகக் குறைந்த விலையில் உழைப்பு சக்தியை விலைக்கு வாங்கி அதிகலாபம் பெறுகிற வகையில் மூலதன திரட்சியை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. ஒரு தொழிற்சாலை உற்பத்தி பிாிவில் ஈடுபட்டிருக்கும் இஸ்லாமிய தொழிலாளி பள்ளிவாசலை தேடிச் சென்று ஐந்து வேளைத் தொழுகையையும் குறிப்பிட்ட நேரத்தில் ஈடுபட முனைந்தால் அது உற்பத்திக்கு இழப்பை ஏற்படுத்துகிறது. வணிகச் செயல்பாட்டில்கூட பாதகத்தை தருகிறது. எனவே இத்தொழுகையை ஒன்றோடு ஒன்று இணைத்து களாஅத் தொழுகையாக்கலாம். இன்னும் ஒருபடி மேலே சென்று, விட்டு விட்ட தொழுகைகளை களாச் செய்ய தேவையில்லை, ஒரே நேர கூட்டுத் தொழுகை வடிவத்தை மாற்றி தனித்தனி நபர்களாகவோ அல்லது சிறுசிறு ஜமாஅத்துகளாகவோ தேவைப்பட்ட நேரத்தில் தொழுது கொள்ளலாம். தொழுகையின் பின் இணைப்பான கூட்டு துஆ உள்ளிட்ட பிரார்த்தனைகளை நீக்கி தொழுகை நேரத்தை குறைத்துக் கொள்ளலாம். ரமலான் மாத நோன்பின்போது இரவில் தராவீஹ் தொழுகையை மரபு ாீதியாக 22 ரக்அத்துகளாக தொழுவதை விட்டுவிட்டு எட்டு ரக் அத்துகளாக சுருக்கிக் கொள்ளலாம் என்பதான தனிநபர் நலன் சார்ந்து வணக்க வழிபாடுகள் நெகிழ்த்தப்படுகின்றன. நேரடி உற்பத்தி சாராத சமயவழிபாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதை குறைத்தும் நவீன முதலாளிய நலன்களை பாதுகாக்கும் விதத் திலான ஒரு அணுகுமுறையாகவும் வைக்கப்படுகிறது.

7. இஸ்லாத்தின் புராதன பொருளியல் கோட்பாட்டின் நோக்கம் என்பதே நாடோடி மேய்ச்சல் சமூக வாழ்வியல் முறை சார்ந்த மக்காநகர் குறைஷாகளுக்கும், வணிக வாழ்வியலில் மேம்படுத்தப்பட்டிருந்த மதினாவாசிகளுக்கும் இடையேயான பொருளியல் ஏற்றத்தாழ்வையும் முரண்பாட்டையும், பகைமையும் சாிப்படுத்தும் விதத்தில் செல்வத்தை சமபங்கீடு செய்தலை நோக்கிய பயணமே ஆகும்.

ஜகாத் என்பது ஏழ்மையின் பிடியில் சிக்கி பலவீனப்பட்டு கிடக்கும் ஏழை எளிய மக்களுக்கு வசதிபடைத்தோரை தாராள உள்ளத்துடன் உதவி செய்யத் தூண்டும் நடவடிக்கையாகும். மக்காவின் திருக்குர்ஆன் வசனங்கள் ஜகாத்தை ஒரு தர்மச் செயலாக அணுகுகிறது. மதினாவில் நபிகள் நாயகம் ஆட்சியமைப்பை ஏற்படுத்தியபின் அது கட்டாய கடமையாகிறது. அரசு நிர்வாக பிரதிநிதிகள் ஜகாத்தை வசூலிக்க நாடெங்கும் அனுப்பப்பட்டும் உள்ளனர். மதினாவில் இறங்கப்பெற்ற திருமறை வசனம் ‘ஜகாத் கொடுக்காதவர்களின் நம்பிக்கையையோ, தொழுகையையோ அல்லாஹ் ஏற்றுக் கொள்வதில்லையென திட்டவட்டமாக அறிவித்தது.

நலிந்தவர்களையும், வறுமைப்பட்டவர்களையும் பாதுகாக்கும் நோக்கமே ஜகாதின் பிரதான அம்சமாகும். இதற்கென வகுக்கப்பட்ட பொருளியல் திட்டமே வசதியுடையோர் தமது சொந்த நுகர்வின் அடிப்படைத் தேவைபோக தங்களது அசையும் சொத்து அசையா சொத்து அனைத்திற்கும் ஜகாத் வழங்கவேண்டும் என்பதாகும். விவசாய நிலங்களுக்கு ஜகாத் இரு வேறுவிதமான அளவீட்டில் கடமையாக்கப்பட்டுள்ளது. விவசாய உற்பத்தி நிகழ்ந்து அறுவடையானவுடன் கிடைக்கும் விவசாயப் பொருள்களுக்கு விவசாயியின் சொந்த உழைப்பை அடிப்படை அலகாக வைத்து இரண்டு வழிகளில் இந்த அளவீடு சொல்லப்படுகிறது. உழைப்பு சக்தியை செலவழித்து, அந்த விவசாயி நீர் இறைத்து அப்பயிரை விளைவித்திருந்தால் நூற்றுக்கு ஐந்து சதவிகிதமும் நீர் இறைக்காமல் சுயமாக விளைவித்திருந்தால் நூற்றுக்கு பத்து சதவிகிதமும் ஜகாத் வழங்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ஒருவருடத்தில் அந்த விளைநிலத்தில் மூன்று போகம் விளைந்தால் மூன்று தடவையும் ஜகாத் கொடுக்கப்படவேண்டும். தற்போதைய சூழலில் இது நெல், வாழை, தென்னை, ரப்பர், கிராம்பு, தேயிலை, காப்பி உட்பட்ட அனைத்து வகை உணவுப் பயிர், பணப்பயிர், தோட்டப் பயிர்களுக்கான வேளாண்மை வருமானத்திற்கும் வழங்கப்படவேண்டும் என்பதே இதன் நீட்சியாகும்.

மேலும் வருமானத்தையும், முதலீட்டையும் அளவீடாகக் கொண்டு தொழில் உற்பத்தி நிறுவனங்கள், வணிகவியல் வளாகங்கள், நிலம், வாகனங்கள் மற்றும் நிதி முதலீடுகள் சார்ந்த அனைத்து சொத்துக்களுக்கும் ஆண்டுதோறும் நுறெ¢றுக்கு இரண்டரை சதவிகிதம் ஏழை வாியாக பகிர்ந்தளிக்கவேண்டும்.

இந்நிலையில் ஜகாத் குறித்த வகாபிசத்தின் தற்போதைய பார்வை என்பதே நவீன முதலாளிய நலன்கள் சார்ந்து மாறுபாடடைந்துள்ளது. ஒரு நபர் தனது செல்வங்களுக்கு வாழ்நாளில் ஒருமுறை ஜகாத் கொடுத்தால் போதுமானது. ஆண்டுதோறும் ஜகாத் கொடுக்கத் தேவையில்லை. ஏனெனில் ஜகாத் என்பதற்கான பொருள் காித்தல் / சுத்தப்படுத்துதல் என்பதாகும். செல்வத்தை ஒருமுறை சுத்தப்படுத்தினால் சுத்தமாகிவிடும். திரும்ப திரும்ப சுத்தப்படுத்த வேண்டிய தேவையில்லை என்பதான விளக்கமாக இது மாற்றப்பட்டுள்ளது.

இன்றைய வகாபிசத்தின் இக்குரல் மிகத்தெளிவாக கோடி கோடியாக உற்பத்தியிலும், வணிகத்திலும் முதலீடு செய்திருக்கும் பெருமுதலாளிகளின் நலன்களையும், லாபத்தையும், மூலதனப்பெருக்கத்தையும், பாதுகாப்பதற்கான குரலாகவே இஸ்லாமிய தளத்தில் ஒலிக்கிறது. இஸ்லாம் முன்வைத்த ஏழை எளிய நலிந்த மக்கள் பிாிவினாின் நலன்களை பாதுகாத்தல் என்கிற அறவியல் சமத்துவகோட்பாட்டிற்கு வகாபிசம் துரோகம் செய்து கொண்டிருக்கிறது.

—-

mylanchirazool@yahoo.co.in

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்