லா.ச.ரா. நினைவாக : எழுத்தாளருக்கு எழுத்தாளர்கள் எடுத்த விழா

This entry is part [part not set] of 45 in the series 20071227_Issue

எஸ். ஷங்கரநாராயணன்



டிசம்பர் 23 ஞாயிறன்று சென்னை மயிலாப்பூர் ஆர்.கே.சுவாமி அரங்கில் லா.ச.ரா. நினைவாக எஸ். ஷங்கரநாராயணன் தொகுத்த விமரிசனக் கட்டுரைத்தொகுதி ‘சந்நிதிகள் பிராகாரங்கள் வீதிகள்’ வெளியிடப் பட்டது. (அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், bookudaya@rediffmail.com) 248 பக்கங்கள், விலை ரூ 100/-

உடல்நலக் குறைவு காரணமாக ஜெயகாந்தன் கலந்துகொள்ள இயலவில்லை. நூலை அசோகமித்திரன் வெளியிட்டு தனக்கேயுரிய தரமான கறாரான கருத்துகளை நகைச்சுவைபடப் பேசினார். முதல்பிரதி பெற்றுக்கொண்டவர் எழுத்தாளர் திலகவதி. லா.ச.ரா. வாழ்ந்த காலகட்டத்தினை வைத்து அவரது சாதனைகளை மதிப்பிடாமல், குழு மனப்பான்மையுடன் அவரை விமரிசிக்கும் அரைவேக்காட்டு விமரிசகர்களைச் சாடித் தாம் எழுதியுள்ள ஒரு முன்னுரைக் கட்டுரையை வாசிக்கச் செய்தார்.

டாக்டர் கே.எஸ். சுப்ரமண்யன் தான் ரசித்த லா.ச.ரா. வரிகளை மேற்கோள்களுடன் அடையாளங் காட்டினார். டாக்டர் ருத்ரன் பேசுகையில் லா.ச.ரா. சிதையில் எரிந்து கொண்டிருக்கும் போதும் மனப்பூர்வமாக அவருடன் தாம் உரையாடிக் கொண்டிருந்ததாகப் பேசினார். லா.ச.ரா குடும்பத்துடன் நிமிடங்களைக் கழிக்கவே விரும்புவதாகவும், லா.ச.ரா. சொல்கிறபடி மெளனமே பல விஷயங்களை உணர்த்திவிடும், என்றும் கூறி அமர்ந்தார்.

திருப்பூர் கிருஷ்ணன் துவக்க உரையாகப் பேசியபோது நன்கு பழுத்து உதிர்ந்த பழம் போல அவரது மரணம் அழகானது என்று பேசியமர்ந்தார். அடுத்து வந்தவர் லா.ச.ரா.வின் மகன் சப்தரிஷி – அப்பா சார்ந்த நினைவில் அவர் நெகிழ்ந்ததில் கூட்டத்தில் நிறையப் பேர் கண்களைத் துடைத்துக் கொண்டார்கள். தொகுப்புரையாளராக இயங்கிய ஷங்கரநாராயணன், எல்லாருக்குமே அவரவர் அப்பாவை நினைவு படுத்தி விட்டீர்கள், என்று குறிப்பிட்டார்.

மலர்மன்னன் பேசியபோது, ”தமிழ் மரபில் உக்கிர சொருபம் உண்டு, அதில் அழகு குறைவுபடாமல் பார்த்துக் கொண்டார்கள். நரசிம்ம மூர்த்தியைப் பார்த்தாலே உக்கிரம் இருக்கும், இரத்தச் சுவடு தெரியாது. மகிஷாசுரமர்த்தினி பார்த்தால், முகத்தில் அப்படியொரு அருள் இருக்கும். இந்த மரபை லா.ச.ரா தம் எழுத்துக்களில் கடைப்பிடிக்கவில்லை. மரபை மீறி மேற்கத்திய, உக்கிரத்தை உக்கிரமாக வெளிப்படுத்தும் மோஸ்தரைப் பின்பற்றினார். அதில் எந்தத் தாத்பர்யமோ தர்க்கமோ தமக்குக் கிடைக்கவில்லை,” என்று குறிப்பிட்டார். ஒரு பெண்ணின் மார்பில் கத்தி பாய்கிறது, என்பதை லா.ச.ரா. ”அந்தக் கத்தி அழகான இடத்தில் பாய்ந்தது’ என்று எழுதுகிறார், என்ற வாதத்தை முன்வைத்தார்.

நிகழ்ச்சியின் ஏற்புரை போல, முழுமை பெறாத, இயக்குநர் அருண்மொழியின் ‘Creative writer La Sa Ra’ ஆவணப்படத்தில் லா.ச.ரா. பேசும் காட்சிகள் திரையிடப் பட்டன.

சற்று சோம்பி ஆனால் பாதிக் கூட்டத்தில் அரங்கு நிறைந்தது. முடிவு வரை அனைவரும் இருந்தனர். ஆவணப் படத்தை நேரம் போதாமை காரணமாக முழுதும் திரையிட முடியவில்லை.

விரைவில் படப் பிடிப்பு முடிந்ததும் இன்னொரு சந்தர்ப்பத்தில் திரையிட்டுக் காட்ட விரும்புவதாக ஷங்கரநாராயணன் சொன்னபோது, அவசியம் தகவல் தாருங்கள், என்று அனைவரும் கூறியது கூட்டத்தின் வெற்றி எனக் கொள்ளலாம் போலிருந்தது.

தினமணி நாளிதழில் புகைப்படத்துடன் 24.12.2007-ல் செய்தி வெளியானது. (குறிப்பின் படம் நன்றி தினமணி நாளிதழ்)


நிழற்படத்தில், இடமிருந்து வலமாக, மலர்மன்னன், (அவர் பின்னே) டாக்டர் கே.எஸ். சுப்ரமணியன், அசோகமித்திரன், திலகவதி, திருமதி ஹைமவதி லா.ச.ரா., திருப்பூர் கிருஷ்ணன் ஆகியோருடன் நிகழ்ச்சி அமைப்பாளர் எஸ். ஷங்கரநாராயணன்.


storysankar@gmail.com

Series Navigation