ராலு புடிக்கப்போன டோனட் ஆன்ட்டி

This entry is part [part not set] of 45 in the series 20071227_Issue

அப்துல் கையூம்


1

பஹ்ரைனிலிருந்து புறப்பட்டு வந்த விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது. பிறந்த மண்ணில் காலடி எடுத்து வைக்கும் அந்த இனிமையான தருணத்தில் மனதுக்குள் யாரோ உட்கார்ந்து ‘கிணிங் கிணிங்’கென்று கிலுகிலுப்பையை ஆட்டுவது போலிருக்கும். டிராலியை தள்ளிக்கொண்டு என் இளைய மகனும், கடைக்குட்டி மோனாவும் விறுவிறுவென்று நடந்தார்கள். நானும் என் மனைவியும் பிரயாணக் களைப்பில் மெதுவாக அன்ன நடை போட்டோம். (அன்னம் எப்படி நடக்குமென்று இதுவரை நான் கண்டதேயில்லை)

“பாதாம் இருக்குதா? பாரின் சிகரெட்? பாட்டில் கொண்டு வந்திருக்கீங்களா? டாலர் எவ்ளோ வச்சிருக்கீங்க? அதோ அங்கே நிக்கிற போலீஸ்காரர் கிட்ட 100 டாலர் கொடுத்துட்டு போங்க”

முன்பு, கஸ்டம்ஸ் ஆபிஸர்கள் வழக்கமாக பேசும் டயலாக்குகளை இப்பொழுதெல்லாம் கேட்க முடிவதில்லை. பயணிகள் எந்தவொரு அனாவசியமான கெடுபிடிகள் இல்லாமல் ‘மளமள’வென்று வெளியேறிக் கொண்டிருந்தார்கள். (இந்தியன் படம் வெளிவந்ததினாலோ?)

“பாரத் மாதா கி ஜே!” உள்மனது மகிழ்ச்சி வெள்ளத்தில் கரகோஷம் போட்டது.

டிக்காவையும், ஷவர்மாவையும் சாப்பிட்டு மறத்துப்போன நாக்கு ஊரில் விற்பனையாகும் தின்பண்டங்களை சுவைத்துப் பார்க்க மனம் நாடுவது இயற்கைதானே? ஊர் போனால் தெருவில் கூவிவிற்கும் பனங்கிழங்கு, நாவல்பழம், சுண்டல், கோதுமைக் கஞ்சி, உப்புரொட்டி, எலந்தைவடை – இவைகளை ஒரு கை பார்க்காமல் விடுவதில்லை.

“ஹாஜா கே….க்கு” என்று கீச்சுக் குரலில் கூவி வலம் வரும் அந்த ஒடிசலான மனிதரை இன்னும் மறக்க இயலவில்லை. “கொதிக்குதே” என்று கூவி விற்கும் சேமெய்தீன் நானாவுடைய கீரைவடை, மசால்வடையின் ருசியே தனி. ராவுத்தர் வீட்டு வாசலில் சுல்தான் சுடும் ‘வாடா’வை வாங்குவதற்கு கூட்டம் அலை மோதும். உ….ம். அது ஒரு நிலாக்காலம்!.

மீனம்பாக்கத்திலிருந்து புறப்பட்டு வாடகைக்கார் என் குடும்பத்தை சுமந்துக் கொண்டு நாகூரை நோக்கி பயணித்தது. மோனாவுக்கு நாலு வயது நிரம்பியிருந்தது. கருத்தறிந்து இப்பொழுதுதான் தாய்நாட்டுக்கு வருகிறாள்.

“நாகூர்லே மேக்டோனால்ட்ஸ் இருக்குதா டாடி? கென்டகி சிக்கன் கிடைக்குமா? பாஸ்தா கிடைக்குமா?” என்று சரமாரியான கேள்விகள்.

“சும்மா போட்டு நச்சரிக்கக் கூடாது. புரிஞ்சுதா?”. சற்று கடுப்படித்தேன்.

யார் கண்டது? இந்தியாவின் அபரீத வளர்ச்சியை பார்க்கும்போது அனைத்துலக விரைவுணவு உணவகங்கள் வெகு சீக்கிரம் இங்கு வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

“டாடி.. நாகூர்லே டோனட் கிடைக்குமா?” மறுபடியும் நச்சரிப்பு.

“டோனட் தானே? டோன்ட் வொர்ரி. நாகூர் டோனட் ரொம்ப ரொம்ப பேமஸ். ஊருக்குப் போயி கண்டிப்பா வாங்கித் தாரேன். சரியா..?

ஓரக் கண்ணால் நோட்டம் விட்டேன். மோனாவின் முகத்தில் சந்தோஷ ரேகை கன்னாபின்னாவென்று படர்ந்திருந்தது. அப்பாடா.. எனக்கு தற்காலிக விமோசனம்.

நாகூரில் ‘வாடா’ என்ற பெயரில் ஒரு தின்பண்டம் கிடைக்கும். திண்டுக்கல்லுக்கு முறுக்கு, திருப்பதிக்கு லட்டு, திட்டச்சேரிக்கு குவளை கேக்கு என்பது போல நாகூருக்கு இந்த ‘வாடா’.

“என்ன பேருடா இது, வாடா போடான்னு? ஏண்டா! உங்க ஊருகாரனுக்கு விவஸ்தையே கிடையாதா? தின்பண்டத்துக்கு வக்கிற பெயராடா இது? மருவாதி கெட்டத்தனமால்லே இருக்கு”

காலேஜ் ஹாஸ்டலுக்கு நைஸாக என் பாட்டி கேரியரில் ஒளித்து வாடாவை கொண்டு வந்து எனக்கு இன்ப அதிர்ச்சி ஊட்டுகையில் என் ‘ரூம்மேட்’ அடிக்கிற டயலாக் இது.

வாடா செய்வதற்கு கலக்கின்ற முக்கியமான பொருள் எதுவெனில் – நன்றாக புளித்துப் போன மாவு. வாடிப் போன பொருளைச் சேர்த்து வாடா(த) பண்டமாய் உருவாக்குவதால் அதற்கு “வாடா” என்ற தூய தமிழ் அடைமொழி என்பது அந்த ஞான சூன்யத்திற்கு தெரிய வாய்ப்பில்லை.

வேர்க்கடலையை ஏன் மல்லாக் கொட்டை என்றழைக்கிறார்கள் என்று எண்ணிப் பார்த்ததுண்டு. மண்ணில்-ஆம்-கொட்டை (‘ஆம்’ – என்றால் விளைகின்ற என்று பொருள்) நாளடைவில் மருவி மல்லாக் கொட்டையாகி விட்டதை ஆராய்ந்ததில் ஒரு தமிழ்ப் பெருமிதம். வட்டில் ஆப்பம் முதல் போனவம் (போனகம்) வரை ஏராளமான தூய தமிழ்ப் பெயர்களை உதாரணம் காட்ட முடியும்.

“ஏங்கனி இந்த வழியா போறியும்?” டிரைவரிடம் வினவினேன்.

“இந்த வண்டிக்கு பாண்டிச்சேரி பர்மிட் இல்ல நானா. அதனாலே திட்டச்சேரி வழியா போயிடுவோம். கிலோமீட்டரும் கம்மி”

“நீம்பரு எப்படி வேணும்னாலும் போய் சேரும். சீக்கிரம் வூட்டுக்கு போனா போதும். உம்பரோட டப்பாக் காரு குலுங்குற குலுங்கல்லே முதுவு வலியே வந்திடுச்சு.”

“இது டப்பாக்காரா? இப்பத்தான் ஊரு பட்ட செவு செஞ்சு பேரிங்கு, ஷாக் அப்சார்பரு, டயரு எல்லாம் மாத்தியிருக்கிரேன் நானா. ரோடு எப்படி இருக்குன்னு பாத்தீங்கல்லே?”

விட்டா பேசிக்கிட்டே போவான். நாகூருகாரனுக்கு பேசுவதற்கு சொல்லியா கொடுக்கணும்? இந்த குலுங்கல் என் மனைவியை தூளியிலிட்டு தாலாட்டுவது போலிருக்கிறது போலும். நன்றாக தூங்கிக் கொண்டு வந்தாள். கொந்தகை தாண்டியதும் அந்த வளைவு பாதையில் தூரத்தே நாகூர் பெரிய மினாரா தென்பட்டது.

“ஊரு வந்துடுச்சு. எந்திரி எந்திரி”. எழுப்பி விட்டேன்.

“ஹைய்யா.. லைட் ஹவுஸ்”. மோனா துள்ளிக் குதித்தாள்.

“அது லைட் ஹவுஸ் இல்லே. மனாரா” என் இளைய மகன் விளக்கம் கொடுத்தான்.

“மனாரான்னா என்னா?”

“மனாரான்னா டவர்”

“டாடி.. டோனட் எப்போ வாங்கி கொடுப்பீங்க?” கீறல் விழுந்த ரெகார்ட் போல பழைய பல்லவியை மோனா ஆரம்பித்தாள்.

“இப்பத்தானே வந்திருக்கோம். எல்லாம் வாங்கி கொடுப்பேன். பேசாம இருக்கணும். புரிஞ்சுதா?” பொய்க்கோபம்தான். என்ன செய்வது?

2

அன்று மாலை மோனாவை கையில் பிடித்துக் கொண்டு கடற்கரைக்கு வாக்கிங் கிளம்பினேன்.

“கால் ஆட்டோவுல போறதுதானே?” என் தம்பியின் ஆலோசனை. ஆட்டோவிலே வாக்கிங் போவதாவது?

“வேணாம் நான் என் காலாலேயே போயிக்கிறேன்”

“இது கடற்கரைக்கு போகும் வழி” – அம்புக்குறியோடு ஏதோ ஒரு நற்பணி மன்றம் இந்த வழிகாட்டி பலகையை வைத்திருந்தது. என்னை நக்கல் செய்வது போலிருந்தது. என்னதான் வெளிநாட்டில் வாசம் செய்தாலும் பிறந்த மண்ணும், வழியும் மறந்து போயிடுமா என்ன?
“சேச்சே.. இது நம்மளுக்காக இல்லை. வெளியூரு ஜனங்களுக்காக வச்சிருப்பாங்க”. என்னை நானே சமாதானம் படுத்திக்கொண்டேன்.

“ஓய்! சிங்கம் போவுது பாத்தியுமாங்கனி..?” வழியில் டீக்கடை பெஞ்சிலிருந்து ஒரு இளைஞனின் குசும்பு.

முகம் சிவந்து திரும்பிப் பார்த்தேன். நல்லவேளை நமக்கு விழுந்த ‘கமெண்ட்’ இல்லை. எனக்கு முன்னே ஒரு பெரியவர் போய்க் கொண்டிருந்தார். அவனுக்கு வேண்டாதவனாக இருக்க வேண்டும்.

‘சிங்கம் என்று சொன்னால் பிடறி மயிரை நீக்கி விட்டு, காலரை தூக்கி விட்டுக் கொள்வதுதானே? கோபம் எதற்கு?’ நியாயமான கேள்விதான். அது கிண்டலுக்கான சங்கேத மொழியென்பது உள்ளூர்க்காரர்களுக்கு மட்டுமே தெரிந்த பரம ரகசியம்.

கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஆர்ப்பரிக்கும் கடல் வழியே வந்த ‘ஜில்’லென்ற காற்று, மேனியை ‘மஸாஜ்’ செய்தது. மணற்பரப்பில் காற்று சில கவிதைகளை எழுதிவிட்டு போயிருந்தது. அடுக்குத் தொடரில் நெளிவு சுளிவோடு புனையப்பட்ட கவிதை வரிகளை திருத்தி ‘ரைட் மார்க்’ போட்டதுபோல் இடையிடையே யாரோ விட்டுப் போயிருந்த கால்தடங்கள்.

அந்த ருசியான வாசனை மூக்கைத் துளைக்க, பாதையோரமிருந்த ஓலைக்குடிசையின் பக்கம் என் பார்வை திரும்பியது. ஒரு பெண்மணி வாடா சுட்டுக் கொண்டிருந்தாள்.

“ஏய் மோனா! நீ கேட்டியே டோனட் ! இப்ப வாங்கித்தாரேன்”

ஆயிரம் விண்மீன்களை கை நிறைய அள்ளிவிட்ட சந்தோஷம் மோனாவுக்கு. வாடா விற்றுக் கொண்டிருந்தது வேறு யாருமில்லை. ஆமினாதான்.

“வாடா ரூவாக்கி எவ்ளோ?”

“தம்பி! நீங்க ஜொலஹாபீயோட பேரன் தானே..?”

“பரவாயில்லையே! நல்லா ஞாபகம் வச்சிருக்கீங்களே..?”

நாமும் ஊரை மறக்கவில்லை; ஊரும் நம்மை மறக்கவில்லை. இந்த நினைப்பு மனதுக்கு இதமான ஒத்தடம் கொடுத்தது.

கவிழ்ந்திருந்த தகர டப்பாவில் ஒரு வெள்ளை துண்டை பரத்தி. மாவை ஊற்றி, உள்ளங்கையால் வட்டமாய் தட்டி, ஆட்காட்டி விரலால் ஒரு ஓட்டை போட்டு, அலக்காக துண்டை கவிழ்த்த, எண்ணெய்ச் சட்டியில் வாடா “சொய்ங்”கென்று பொரிந்தது.

கடற் காற்றின் கோபத்தை தணிக்க, 25 கிலோ டால்டா டின்னை கிழித்து இற்றுப்போன தடுப்பொன்று, ஸ்டவ் அடுப்பின் விலாப் பக்கத்தை ஒட்டியாணமாய் அலங்கரித்தது.

“டாடி! இத பாக்குறதுக்கு சிட்டிங் ரூம்லே வைப்பாங்களே ரூம் டிவைடர். அது மாதிரியே இல்லே?”

குழந்தைகளின் கற்பனைத் திறனும், எதார்த்த ஒப்பீடும் சில சமயம் கவிஞனையும் மிஞ்சி விடுகிறதே?

“அலி ஜர ஆ, அலி ஜர இ, அலி பேஷ ஊ,
பே ஜர பா, பே ஜர பீ, பே பேஷ பூ.
தே ஜர தா, தே ஜர தீ, தே பேஷ தூ”

அரபு மொழியின் அட்சரங்களை மூச்சு விடாமல் மனனம் செய்யும் சிறுமியின் குரல் குடிசையிலிருந்து கேட்டது. காலங்காலமாக கேட்டுக் கொண்டிருக்கும் அதே ராகம். “ஆ.. பா.. தா..” என்ற அரபு மொழியின் உயிர் எழுத்தை இப்படித்தான் இங்குள்ள உஸ்தாதுமார்கள் கற்றுக் கொடுக்கிறார்கள்.

“தவ்லத்து சித்த இங்கே வாடி”

கிழிந்துப் போன பாவாடையும் ஒட்டுப் போட்ட சட்டையுமாய் சிறுமியொருத்தி ஆஜரானாள். தவ்லத் என்றால் அரபு மொழியில் செல்வம் என்று பொருள். செல்வம் வறுமைக் கோலத்தில் வந்து நின்றது.

“இது யாரு லாத்தா? உங்க மவளா?”

“ஆமாந்தம்பி. மாப்புளே மவுத்தானதுக்கு பொறவு, வாடா சுட்டுதான் காலத்தெ தள்ளுறேன். இவள ஆளாக்கி கட்டிக் கொடுத்துட்டா என் கடமை முடிஞ்சிடும்.”

“மொதல்லெ இவளை நல்லா படிக்க வைங்க.”

“செட்டியாரு ஸ்கூல்லே அஞ்சாவது படிச்சிக்கிட்டு இருக்கிறா தம்பி. அவட ஹக்குலே துஆ செய்யுங்க. அது போதும்”.

“ஏன் டாடி இந்த டோனட் ப்ரவுன் கலருலே இருக்கு?” – இது மோனா.

“ஏண்டி! மசமசன்னு நின்னுக்கிட்டு இருக்கிரே? சீக்கிரம் போயி கத்திரிக்கோலு எடுத்துட்டு வா. இந்த பேப்பரை வெட்டிக் குடு”

தவ்லத் கத்திரிக்கோலால் தினசரி ஒன்றை சதுர வடிவில் கத்தரித்துக் கொடுக்க எங்களுக்கான பேப்பர் பிளேட் ரெடி.

“மோனா! இதுதான் இந்த ஊரு டோனட். நல்லா இருக்கா?”

“வாவ்! டோனட் சூப்பர்!” மோனா புகழ்ந்தாள்.

“இன்னும் கொஞ்சம் உள்ளடம் வைங்க லாத்தா”

வெங்காயத்தை மஞ்சளிட்டு லேசாக வறுத்து தேங்காய்ப்பூவை கலந்தால் அதற்குப் பெயர் “உள்ளடம்”. அழகான தமிழ்ப்பெயர். இடியாப்பத்திற்கு பாயா, இட்லிக்கு சட்னி, புட்டுக்கு வாழைப்பழம் என்று பொருத்தமான கூட்டை ஏற்படுத்தியதைப்போல வாடாவுக்கு உள்ளடம் என்ற ‘காம்பினேஷனை’ கண்டுபிடித்த மகராசனை உளமார பாராட்டினேன்.

“என்ன லாத்தா ராலு வைக்கவே இல்லியே?”

எறா, ராட்டு, செம்மீன் என்று பல்வேறு பெயரில் அழைக்கப்படும் இறால் மீனுக்கு இந்த ஊர் பெயர் ‘ராலு’. வாடாவுக்கு மேலே ஸ்டிக்கர் பொட்டு வைத்ததைப்போல இறால் காட்சிதரும். ‘கடக் மொடக்’ என்று சாப்பிடுகையில் சுவை மேலும் மெருகேறும்.

“இந்த சீஸனுலெ செனக்குனி ராலே கெடக்க மாட்டேங்குது வாப்பா. நா என்னாத்தெ செய்றது சொல்லுங்க?”

“லாத்தா…. இந்த வாடாவுக்கு டேஸ்டே ராலுதான். அது இல்லேன்னா ஒரு மஜாவே இல்லே போங்க”

“அப்டீன்னா நாந்தான் இனிமே கடல்லே இறங்கி போயி ராலு புடிச்சிட்டு வரணும்”

“டோனட் ஆன்ட்டி என்ன டாடி சொல்றாங்க?” மோனா காதில் வந்து கிசுகிசுத்தாள்.

“ஆன்ட்டியே இறங்கிப்போயி கடல்லே ராலு புடிக்க போறாங்களாம்”

“ஹாய்.. நெசமாவா? கடல் உள்ளார போயா? மெர்மெய்ட் மாதிரியா?”

மோனா முகத்தில் ஆச்சரியம் கலந்த ஒரு பதட்டம். ஆமினா “டைவிங் சூட்” அணிந்துக் கொண்டு அந்த தவளைக்கால் சப்பாத்துடன் கடலுக்குள் ஆழமாக நீந்திச் சென்று இறால் பிடிப்பதுபோல் கற்பனை செய்துக் கொண்டாள் என்று நினைக்கிறேன். முகபாவம் காட்டிக் கொடுத்தது.

* * *

3

சுனாமி வந்து உலகத்தையே உலுக்கிய நேரம். வெளிநாட்டில் இருந்தாலும் விஞ்ஞான வளர்ச்சியில் உடனுக்குடன் நாட்டு நடப்பை அறிந்திட முடிந்தது. நாகூர், நாகை செய்தியை நேர்முக வருணனையில் குருதியை உறைய வைத்துக் கொண்டிருந்தது NDTV.

மாதங்கள் சில ஓடி விட்டன. மறுபடியும் விடுமுறையில் குடும்பத்துடன் ஊர்செல்லும் தருணம் வந்தது. இப்பொழுது மோனாவுக்கு ஆறு வயது நிரம்பியிருந்தது. முன்னமிருந்த நச்சரிப்பு அவ்வளவாக இல்லை. சற்று குறைந்திருந்தது.

ஊர் சென்றதும் முதல் வேலையாக கடற்கரை பகுதிக்குச் சென்று சேதப் பகுதிகளைக் காண்பதற்கு புறப்பட ஆயத்தமானேன். மோனாவும் கூட வருவேன் என்று அடம் பிடித்தாள்.

பீரோட்டத்தெருவை கடந்ததுமே மனது ‘பக்’கென்று பதைத்தது. சுனாமி அரக்கன் சூறையாடிச் சென்ற பச்சைத் தழும்புகள் இன்னும் ஆறாமலிருந்தது. இரயில் தண்டவாளத்தைக் கடந்ததுமே எரிமலைக் குழம்புகளின் தடயம்போல பூமியின் மேனி கருத்துப்போய் குதறியவண்ணம் குரூரமாக காட்சி தந்தது.

மோனாவுக்கு பழைய ஞாபகம் வந்து விட்டது போலும்.

“டாடி.. டோனட் வாங்கித் தாங்க”. அப்பொழுதுதான் எனக்கு அது உறைத்தது.

ஆமினாவுடைய குடிசை இருந்த இடத்தை உற்று நோக்கினேன். காலி மைதானமாக வெறிச்சோடிக் கிடந்தது. ஆமினா நிலைமை என்ன ஆனதோ தெரியவில்லை.
காலை வியாபாரத்திற்கு கடை விரித்திருக்கையில் ‘தளதள’க்கும் அந்த பொறிக்கன் சட்டி, அடுப்போடு அவளையும் சேர்த்து அந்த ராட்சஸ அலை அள்ளிக் கொண்டு போனதோ?

அப்படி என்றால் தவ்லத்தின் நிலைமை? மற்ற செல்வத்தோடு ஆமினாவின் இந்த வாரிசுச் செல்வமும் கடலோடு கடலாக போய்விட்டதோ? அவள் கட்டி வைத்த குடிசையோடு அவள் மனக்கோட்டையும் நீரில் கரைந்துப் போனதோ?

இந்த பாழாய்ப்போன சுனாமி ஞாயிற்றுக்கிழமை வராமல் திங்கட் கிழமை வந்திருக்கக் கூடாதா? அந்நேரம் தவ்லத் பள்ளிக்கூடம் போயிருப்பாளே? பிழைத்திருப்பாள் அல்லவா?

இந்த கூறுகெட்ட ஆமினாவுக்கு வேறு இடமே கிடைக்கவில்லையா? கடலுக்கு இவ்வளவு அருகிலா குடிசை போட்டுக் கொள்வது?

“தவ்லத்து ! என்னை உட்டுட்டு போவாதே தவ்லத்து ! என் செல்லமே என்னை உட்டுட்டு போவாதேடா” இப்படித்தான் அந்த கடைசி வினாடியில் ஆமினா கதறியிருப்பாளோ..?

என் கண்கள் குளமாகி கண்ணீர் பெருக்கெடுத்து வழிந்தோடியது. அதற்கு மேல் அங்கு நிற்க என்னால் முடியவில்லை. தரதரவென்று மோனாவை இழுத்துக் கொண்டு வந்த வழியே திரும்பினேன்.

“டோனட் ஆன்ட்டி எங்கே போயிட்டாங்க டாடி?”

“அதுவாடா செல்லம். டோனட் ஆன்ட்டி அன்னிக்கி சொன்னாங்கல்லே..? கடல்லே போயி ராலு புடிக்கணும்னு. அதுக்குத்தான் போயிருக்காங்க”. என் குரல் கம்மியது.

* * *

பி.கு. :
டிசம்பர் 26 அன்று சுனாமி அழைத்துச் சென்ற எத்தனையோ ஆமினாக்களுக்கு இந்தச் சிறுகதை சமர்ப்பணம்.


vapuchi@hotmail.com

Series Navigation

அப்துல் கையூம்

அப்துல் கையூம்