ராகு கேது ரங்கசாமி – 5 ( முடிவுப் பகுதி )

This entry is part [part not set] of 48 in the series 20060414_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


/5/

பாட்டி தேறிவர ஒருவாரம் ஆகிவிட்டது. பெரிய ஆஸ்பத்திரி. நோயாளிக்கு மருந்துமுதல் உணவுவரை தாதிகளே கவனித்துக் கொண்டார்கள். நமக்கு அங்கே வேலையே இல்லை. இருக்கிறது, துட்டு மாத்திரம் கேட்கக் கேட்க எடுத்து நீட்ட வேண்டும். அதையும் அவங்களே பாத்துக்கப்டாதா!… திடாரென்று கூப்பிடுவார்கள். எழுந்து ஓட வேண்டும் – இந்த மருந்து வாங்கிண்டு வா, ஜல்தி. இந்தப் பணத்தைக் கட்டு, ஜல்தி!

புதுசு புதுசாய் டாக்டர்கள் வந்து பார்த்துப் போனார்கள். தங்களுக்குள் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டார்கள். இவர் சந்தேகத்தை அவரிடம் கேட்க, அவர் சந்தேகத்தை இவரிடம் கேட்க, ரெண்டு பேருமாய் மூணாமத்த ஆளுக்கு ஃபோன் போட, இவனைப் பார்த்து – துட்டெடு – ஜல்தி! இவன் கண்ணீர் ததும்ப அவர்களைப் பார்த்தான் கேள்வியாய். தலையை மாத்திரம் ஆட்டினார்கள், ஸ்டெத் ஆட யானைக் கூட்டமாய் அவர்கள் அவனைத் தாண்டிப் போனார்கள்.

மருந்துகள். காகிதத்தை எடுத்தால் மருத்துவர் அந்தப் பக்கம் பூராவும் விறுவிறுவென்று எழுதித் தள்ளினார். திருப்பி பின்பக்கமும் எழுதினார். ஊசிகள், நரம்பூசிகள், சோதனைகள். அவன் மனதில் சிவாஜி பாடல் – சோதனை மேல் சோதனை போதுமடா சாமி!

ஆனால் முதலை வாயில் இருந்து மீண்டாப் போல, பாட்டி மரணத்தில் இருந்து மீண்டு விட்டாள்! மூச்சு நாசியின் உட்சுவர்களுக்குள் நடுங்கித் தவித்துக் கொண்டிருந்தது, இப்போது சீர்ப்பட ஆரம்பித்தது. குழாயின் கீழ்ப் பக்கமிருந்து சுவர்களை மோதி மெதுவாக மேலேறி வந்தது. எத்தனை நாள்ப் படுத்திருந்தாள் அவள் – ஐயய்ய, என்று பாட்டி எழுந்து உட்கார்ந்தாள். மாப்பிள்ளை முன்னால் அவள் இப்படிப் படுத்துக் கிடந்ததே யில்லை. வெட்கமாய்ப் போயிற்று.

பாட்டிக்குப் பழைய தெம்பு மீள ஆரம்பித்ததும்தான், சபேசனுக்கு ஆசுவாசம் வந்தது. ஐயோ அவள் இல்லாமல் எது முடியும் என்னால் ? அந்த வீட்டின் அரசி அவள். உத்திரத்துத் துாண் அவள். இனி எந்தப் பிரச்னையும் எனக்குத் துாசி. சமாளிப்பேன்… என்று தெம்பு வந்தது.

வெளியே வந்து பக்கத்துக் கடையில் வெற்றிலை பன்னீர்ப்புகையிலை என்று அதக்கிக் கொண்டபோதுதான் அந்த ரங்கசாமி வந்து சேர்ந்தான். ‘ ‘சாமி நான் இப்பத்தான் விஷயம் கேள்விப் பட்டேன்… ‘ ‘

அவனை அவ்வப்போது நினைத்துக் கொள்ள வேண்டியிருந்ததே தவிர, அவன் பணத்தைத் திருப்பித் தர முடியும் என்று தோணவில்லை. எச்சரித்து விட்டான் அவன். பணம் திருப்பித் தர தாமதிக்கிற ஒவ்வொரு நாளும் வட்டி என ரெண்டாயிரம் அதிகப்படி ஆகிறது. பயமாய் இருந்தது அவனுக்கு.

இதுபற்றி மேலே யோசிக்க முடியவில்லை. பாட்டியிடம் கேட்க வகையில்லை. அவளிடம் அதிர்ச்சியூட்டும் வகையில் இப்போது எந்த யோசனையும் பேசத் தரமில்லை. சரி, பிறகு பார்க்கலாம் என்று தள்ளிப்போட முடியாதபடி கிடுக்கிப் பிடி போடுகிறானே ரங்கசாமி!… போதுமடா சாமி!

திரும்ப பாட்டி வீடு வர இன்னும் நாலைந்து நாளாவது ஆகும் போலிருந்தது. அவள் திரும்பி வருவதற்குள் என்று கணக்கு போட்டு காய் நகர்த்துகிறானா புரியவில்லை. அவன் நெருக்கடி தாளாமல் சபேசன் வீட்டைக் காலி செய்ய வேண்டியிருந்தது. (இல்லையா, பணத்தை வட்டிகுறையாம எண்ணி வை… /உன்னைத்தாண்டா வையணும்.) சாமி சும்மா பார்க்கலாம் வாங்க, என்று வற்புறுத்தி அழைத்துப் போய் ரங்கசாமி எண்ணெய்க்காரன் தெரு வீட்டைக் காட்டினான். புது ஃபிளாட். பளபளவென்று கிடந்தது. ஈரம் பாரித்த தன் வீட்டுக்கு இது எவ்வளவோ மேல் என்று ஏனோ தோன்றியது சபேசனுக்கு. ரங்கசாமியின் பைக்கை எடுத்துப் போய் ரமணி கீதாவை அழைத்து வந்து வீட்டைக் காட்டினான். குழந்தைகளுக்கு வீடு ரொம்பப் பிடித்துப் போயிற்று. பழைய வீடு – வீடா அது ? சாணாச்சுருணித் துணியே தேவலை. இங்கே ஆளாளுக்குத் தனி அறைகள். ‘ ‘அப்பா சரின்னு சொல்லீர்ங்கப்பா ‘ ‘ என்று கீதா அப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டாள். அவள் சிநேகிதிகளை இனி தைரியமாக வீட்டுக்கு அழைக்கலாம்!

ஒரு பெருமூச்சுடன் அம்மாவும் தலையாட்டினாள்.

வீடு மாற்றிய விஷயம் பாட்டிக்குத் தெரியாது. எப்படிச் சொல்ல தெரியவில்லை. இப்போதுதான் பெரும் அதிர்ச்சியில் நிலம் சரிந்தாற் போலச் சரிந்து சீர்ப்பட்டிருக்கிறாள். சரி, தெரியும்போது தெரியட்டும். பாட்டியிடம் சொல்ல வேண்டாம் இப்போது, என்று குழந்தைகளிடமும் எச்சரித்திருந்தான்.

ரங்கசாமி குழையக் குழையப் பேசினான். அவனிடம் அக்ரிமென்ட் போடவும், அட்வான்ஸ் பத்தாது என்றும் சபேசன் பேச ஆரம்பித்திருந்தான். ‘ ‘நீங்க ஃப்ளாட்டாக் கட்டுங்க, எதுனா கட்டுங்க, எனக்கு அதைப் பத்தி இல்ல. ஒரே பேமென்ட்ல எனக்கு செட்டில் பண்ணிறணும். எழுபது! இந்தக் கைல பணம், அத்தோட பத்திரம் பதிஞ்சுறணும், தெரியுதா ? ‘ ‘ என்றான் அழுத்தமாய்.

‘ ‘அப்ப அக்ரிமென்ட் அதும்படி போட்டுக்குவம். ஒரு ஆறு மாசம் டயம் குடுங்க சாமி! ‘ ‘

‘ ‘எதுக்கு ? ஒரு மாசந்தான். அதுக்குள்ள செட்டில் பண்ணிருங்க. உங்க பிரச்னை எதையும் நான் காதுல வாங்கிக்க மாட்டேன். எனக்குத் தேவை இல்லாத விஷயம் அது. ‘ ‘

‘ ‘அது சரி சாமி. நியாயம். நாளைக்கே ஒருமாசம்னு அக்ரிமென்ட் போட்டுட்டாப் போச்சு ‘ ‘ என்று போனவன் வரவில்லை. ரமணியிடம் இருக்கட்டும் என்று பைக்கை நாலு நாள், பெட்ரோல் போட்டுக் கொடுத்திருந்தான் ரங்கசாமி. அதுபோதும் ரமணிக்கு. அவன் நண்பர்கள் முன்னால் பேச தனி உற்சாகம் வந்திருந்தது ரமணிக்கு.

ரங்கசாமியின் சாயம் ரெண்டுநாளில் வெளுத்தது. வீட்டுக்காரர் வந்து ஐம்பதாயிரம் அட்வான்ஸ் கேட்டார். ‘ ‘அட்வான்ஸ், வாடகை எல்லாம் ரங்கசாமி தருவார்… ‘ ‘ என்று புன்னகைத்தான் சபேசன். ‘ ‘என்னய்யா இது, அவரைக் கேட்டா உங்ககிட்ட வாங்கிக்கச் சொல்றாரு. உங்களைக் கேட்டா அவரைக் கைகாட்டறீங்க. விளையாடறீங்களா ? நாளை காலைல வருவேன். அட்வான்ஸ் யாரோ ஒருத்தர் தந்தாகணும். இல்லாட்டி சாமானையெல்லாம் துாக்கி வெளிய கடாசிருவேன்… ‘ ‘ என்று கத்தி விட்டுப் போனார். திகைப்பாய் இருந்தது.

சொந்த வீட்டில் நிம்மதியாய் இருந்தவனை – எவனோ முகந் தெரியாதவன் எல்லாம் காறித் துப்புகிறாப் போல ஆகிவிட்டது.

அன்று சாயந்தரம் ரங்கசாமி வந்ததும் அவனிடம் இதைப் பற்றிக் கேட்டான். ‘ ‘நல்ல கதையா இருக்கே. சாமி வீடுதான் பார்த்துக் குடுக்க முடியும். அதுக்கு வாடகையும், அட்வான்ஸும் நானே தரணும்னா எப்பிடி ? விட்டா நம்மள மொட்டையடிச்சிருவீங்க போலுக்கே ‘ ‘ என்று கோபமாய்ப் பேசினான்.

‘ ‘என்ன ரங்கசாமி இப்பிடிச் சொல்றே ? ‘ ‘

‘ ‘நான் இல்லாட்டி இந்த எரியாவுல இப்பிடியொரு வீடு வாடகைக்குக் கிடைக்குமா சாமி உங்களுக்கு ? ‘ ‘

‘ ‘இல்ல ‘ ‘

‘ ‘அவ்ளதான். நான் வீடு பாத்துத் தரேன்னு சொன்னேன். தந்திட்டேன். ‘ ‘

‘ ‘ம் ‘ ‘ என முனகினான் சபேசன். அவனுக்கு இப்போது தெளிவாக எல்லாம் புரிந்தது. இப்போது ரங்கசாமிக்கு வேண்டியது ஒரே விஷயந்தான் – என் கையில் இருக்கிற சொச்சப் பணத்தை, ‘ ‘என் ‘ ‘ செலவுகள் என நான் கரைப்பதை இவன் விரும்புகிறான். பிறகு நான் அவன் கையை எதிர்பார்த்து தேவுடு காத்துக் கிடக்க வேண்டும்!

இப்படி அணுஅணுவாய்ச் சித்திரவதை செய்வதைக் காட்டிலும், ஒரேடியாய்க் கொன்று விடுவது மேல். இன்னும் அக்ரிமென்ட்டே போடவில்லை – அதற்குள் வீட்டைவிட்டு வெளியேறியாகி விட்டது. ஐயோ எத்தனை பெரிய தப்பு அது. நொந்த மனசைப் புண்ணாக்கிப் பார்க்கிறான் ரங்கசாமி. எரிகிற வீட்டில் கொள்ளையடிச்சாப் போல… இதோ ஆஸ்பத்திரி செலவுகள்.

அட்வான்ஸ் அம்பதாயிரம். பாட்டிக்கு இதுவரை ஏழெட்டாயிரம் ஆகிப் போயிற்று. மீதிப் பணத்தைச் செலவு செய்ய ஆயிரம் வேலைகள் காத்திருக்கின்றன. மாதாமாதம் வாடகை ஐயாயிரம் இனி தந்தாக வேண்டும். சாப்பாட்டுச் செலவுகள்… பாட்டியும் இவளுமாய் வெளியே போய் வந்தால், கையில் காசு புரளும். பாட்டி ஆஸ்பத்திரியில். உதவியாக இவளும், ஆஸ்பத்திரியில்!

நான் என்ன செய்திருக்க வேண்டும் ? இவனைக் கையில் வைத்துக் கொண்டு, வேறு ரெடி கேஷ் பார்ட்டியைப் பேசி முடித்திருக்க வேண்டும்!… என ஆவேசமாய் நினைத்துக் கொண்டான் சபேசன். வட்டிதானே கேட்டான், சனியன் தொலைகிறது, என அப்போது எறிந்திருக்கலாம்.

ஆ, இடத்தில் பாதியை விற்றிருக்கலாம் அல்லவா ?…

எத்தனை வழிகள்! அப்போ பேந்தப் பேந்த முழிச்சேன். ஒண்ணுந் தோணவில்லை. அந்த ரங்கசாமி நாயும், என் பிடி இறுகுகிறாப் போல இருந்தால், ரொம்ப பவ்யமாய் சரி எனத் தலையாட்டி விட்டுப் போவான், எதுவும் செய்ய மாட்டான். அக்ரிமெண்ட் போட்டுக்குவம்னா, நாளைக் கடத்தி மறக்கடித்து விடுகிறான். அது சரி, முழு ரொக்கமும் கையில் தந்தால் பின் என்னாத்துக்குதான் அக்ரிமெண்ட், நானும் எதற்குத்தான் அப்படி அலட்டினேன், ஒரே குழப்பம்.

நம்ம கை ஒருவேளை, ரெலடி கேஷ் பார்ட்டியுடன் டாலிங் என ஓங்கி விட்டால், அப்போது இவன் எப்படி நம்மை நெருக்குவானோ, தனிக்கதை அது.

அத்தோடு, அட கிரகச்சாரமே, எப்படியும் இந்த வீட்டைக் கையை உதறினாப் போல விட்டொழித்தால்தான் விமோசனம்னு ஆயிட்டதே! பேசாமல் வெந்ததைத் தின்றோம், விதி வந்தது செத்தோம்னு இருந்தான் அவன் – படுத்தால் துாக்கமே இல்லை இப்போது. எப்படா தலைமேல் பாறாங்கல் விழும்னு ஒரு திகில் வாழ்க்கை. சனியன் பிடிச்சதுன்னா விடுமா ? ஏழரை நாட்டுச் சனி!

அந்தப் பர்ஸை வேணுன்னுதான் நழுவ விட்டிருக்கிறான் ராஸ்கல். ஓசி காபி! அதில் குப்புற விழுந்தவன்தான் நான். எழுந்து கொள்ளவே இல்லை!

இன்னும் அக்ரிமெண்டே போடலை. நீ பாட்டுக்கு ரெடி கேஷ், ரெடி கேஷ்னு கத்துறா. நான் பாட்டுக்குத் தலையாட்டிக்கினே இழுத்தடிச்சு உன் கைப் பணத்தைக் கரைக்கிறேன்… அப்றமா நீ கெஞ்சு என்னை. நான் எகிர்றேன்… ஆகா விரல் வெச்சாக் கூட கடிக்கத் தெரியாத குழந்தையாய் ஏமாந்திருக்கிறேன்!

இப்போது என்ன செய்ய ? இதில் இருந்து மீள்கிறது எப்படி ?

<*>

இன்னும் கிழவிக்கு நடந்ததெல்லாம் தெரியாது. கீதாவோ விவகாரத்தில் தீவிரம் தெரியாமல் சந்தோஷமாக உலா வருகிறாள். ‘ ‘இடம் வித்தது சரிதான். ஆனால் அதில் நீங்க ஏமாந்தது உங்க பிரச்னை! ‘ ‘ என்பான் ரமணி. ‘ ‘சரியான பார்ட்டியாப் பாத்து நீங்க விக்கல. அதுக்கு யார் பொறுப்பு ? ‘ ‘ என்பான்.

இன்னொரு கண்ணி வேறு ரங்கசாமி வைத்திருந்தான். ஆ, கண்ணி அல்ல. கண்ணிவெடி. நிலத்தைப் பேசி மொத்த விலை என்றால் ஒரே பேமெண்ட்டில் தீர்க்கச் சொல்வதால், தனி ஃபிளாட் எனக்குத் தரும் ஐடியா அடிபட்டுப் போகிறது… என்பான் சுலபமாய். பட்டறையைத் துாக்கிட்டு மயிலாப்பூரில் இருந்து கிளம்ப வேண்டியிருக்கும்!

ஒரு ஃபிளாட் வாங்கிக் கொண்டால் இன்னும் சிக்கல், அதில் பன்னிரெண்டோ, பதினாறோ, இருபத்திநாலோ ஃபிளாட் கட்ட டிசைன் வரைந்து அப்ரூவல் வாங்கி, எல்லாம் சபேசன் பெயரிலேயே செய்து, ஃபிளாட் புக் செய்ய புது ஆட்கள் வர வர, அவர்கள் தரும் அட்வான்ஸில் கொஞ்ச சொஞ்சமாய் நமக்கு செட்டில் பண்ணுவான். அதாவது அப்படிச் சொல்வான். பணம் வர வர கட்ட ஆரம்பித்தாலும் நாம கேட்க முடியுமா ?… அதுவரை ஒவ்வொரு பார்ட்டியிடம் வீடு கட்ட என அகரிணெ¢ட் அவன் போட, உடன்படிக்கைப் பத்திரத்தில் நான் வீட்டுமனை உரிமை என்று கையெழுத்துப் போட வேண்டும்! – பணம் என் கைக்கு வராது, ரங்கசாமிக்கு! எவனோ முகம் தெரியாதவனோடு எந்த பிடிமானமும் இல்லாமல் நான் பத்திரம் பதிய வேண்டும்! ஏன்னா நிலம் என் பெயரில் இருக்கிறது.

அதாவது எனக்கும் ஃபிளாட் வாங்குகிறவனுக்கும் இடையே உடன்படிக்கை. இடையே எந்த ஆபத்தும் இல்லாமல் லாபம் மாத்திரம் ரங்கசாமி படவாவுக்கு! அதாவது இதில் குளறுபடி வந்தால், முட்டிக் கொள்ளப் போவது நானும் பணங் கொடுத்த அந்த மகானுபாவனும். ரங்கசாமி ? ஜுட்! நான் மாத்திரம் அல்ல, ஃபிளாட் வாங்க வந்தவனும் நானும், ரெண்டு பேருமே அவனைக் கெஞ்சி அவனை அண்டி வாழ நிர்ப்பந்திக்கப் படுகிறோம்.

<*>

ஒரு மாலையில் சபேசன் தான் குடியிருந்த வீட்டைப் பார்க்கப் போனவன் அயர்ந்து போனான்! வீடு பாதி இடிக்கப் பட்டிருந்தது! பதட்டமாய் இருந்தது அவனுக்கு. நெஞ்சு வலித்தது. இன்னும் அக்ரிமெண்டே போடவில்லை. நிலைமையை சர்வ வல்லமையுடன் தன் கைக்குள் கொணர்கிறான் ரங்கசாமி. தான் சற்றி வளைக்கப் படுகிறது தெளிவாகத் தெரிந்தது. இதை எப்படிச் சமாளிப்பது தெரியவில்லை.

மயக்கம் வரும் போலிருந்தது.

பிறந்ததிலிருந்து அவன் வாழ்ந்த வீடு. இடிப்பதைப் பற்றி ரங்கசாமி ஒரு வார்த்தைகூடச் சொல்லவில்லை. பார்க்கப் பார்க்க அடிவயிற்றில் குபீரென்றது. தீயின் நாக்குகள் ஈரமில்லாமல் வயிற்றின் மேற்சுவர்களை நக்கின.

ஆ, என கண்ணில் ஈட்டி சுமந்து காயம் பட்ட போர்வீரன் போலத் தள்ளாடினான். நடக்க முடியவில்லை. நடுத்தெருவில் வேட்டியிழந்து அம்மணமாய் நிற்க வைத்தாப் போலிருந்தது. நெஞ்சைப் பிடித்துக் கொண்டான்.

ஒரு விஷயம் அப்போது புரிந்தது. வீட்டு வாடகையோ அட்வான்ஸோ தராத ரங்கசாமி, ஃபிளாட் என்று எதுவும் தரப் போவதில்லை! கேட்டால், ‘ ‘தர்ரேன்னுதான் சொன்னேன். இல்லங்கலியே… எது வேணா எடுத்துக்கங்க. அதுக்குத் தக்ன ரேட்டை உங்க பணத்துல கழிச்சிக்கிட்டாப் போச்சு ‘ ‘ என்பான். ‘ ‘என்னா ஐயிரே ஓசில தருவான்னு பாத்தீங்களாக்கும் ? ‘ ‘ என்பான்.

பாட்டிக்கு இன்னும் விஷயம் தெரியாது. அவளுக்கு மேலும் எந்த அதிர்ச்சியும் தந்து விடக் கூடாது, என்று டாக்டர்கள் சொல்லியிருந்தார்கள். சொல்லாமல் எப்படி மறைப்பது ? என்னால் முடியுமா ?

ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வரும்வரை அவளிடம் சொல்ல வாய் வரவில்லை. எண்ணெய்க்காரன் தெருவுக்குக் குடி போனதே அவளுக்குத் தெரியாது. கைத்தாங்கலாய் அவளை அழைத்து வந்து ஆட்டோவில் ஏற்றி ‘ ‘எண்ணெய்க்காரன் தெரு ‘ ‘ என்று மெல்லச் சொன்னான் சபேசன்.

பாட்டி திரும்பி அவனைப் பார்த்தாள். ‘ ‘என்ன சபேசா ? ‘ ‘ என்று மாத்திரம் கேட்டாள். அவளைத் திரும்பி அவனால் பார்க்க முடியவில்லை. கண்ணீர் பார்வையை மறைத்தது. ‘ ‘வீடு மாத்தியாச்சி ‘ ‘ என முனகினான். அதையே அவளால் தாள முடியவில்லை. உடம்பு லேசாய் நடுங்கி மூச்சு உதறியது அவளுக்கு. முகம் ஜில்லோவென்றிருந்தது. ‘ ‘போப்பா ‘ ‘ என்றான் ஆட்டோக்காரனிடம்.

‘ ‘என்னடா சபேசா ? ‘ ‘

‘ ‘வேற வழியில்லை. நீங்க புரிஞ்சுக்கணும் ‘ ‘ என்றான் அவசரமாய்.

என்ன பேச இவனிடம், என அவளுக்குத் திகைப்பாயிற்று. கொஞ்சநேரம் ரெண்டு பேருமே பேசாமல் வந்தார்கள். பாட்டி ஆட்டோக்காரனிடம் ‘ ‘மகாதேவ சாஸ்திரிகள் தெரு வழியாப் போப்பா ‘ ‘ என்றபோது, வேண்டாம் என்று சொல்ல நினைத்தான். வாயில் வார்த்தை புரள மறுத்தது.

கடவுளே கடவுளே, என மனம் பதறியது. தலையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான்.

ஆட்டோ மகாதேவ சாஸ்திரி தெருவில் திரும்பியது.

….

storysankar@gmail.com

‘ க ல் கி ‘ வார இதழில் தொடராக முன்பு வெளியானது

/மு டி கி ற து/

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்