ராகிங் எனும் பகிடிவதை – மாணவர்களிடையே பரவும் காட்டுமிராண்டிக் கலாச்சாரம்

This entry is part [part not set] of 29 in the series 20091225_Issue

மன்னார் அமுதன்இவ்வாண்டின் மார்ச் மாதத்திலும், நவம்பர் மாதத்தின் கடைசி வாரத்திலும் நான் பகுதி நேரமாகக் கல்வி கற்ற ஒரு கல்வி நிறுவனத்தில்( 2008-2009)ஏற்பட்ட மாணவர்களுக்கிடையிலான பகிடிவதைப் பிரச்சினையை காவல்துறை வந்து அடக்குமளவிற்கு விபரீதமானதை பல ஊடகங்களிலும் வெளிச்சமிட்டிருந்தார்கள்.

ஆண்டுதோறும் கல்வி நிறுவனங்களில் வளர்ந்து வரும் அல்லது கல்வி நிறுவனங்களை களமாகப் பயன்படுத்தி சில அரசியல் கட்சிகளால் வளர்க்கப்படும், பகிடிவதை எனும் வன்முறையை தீர்ப்பதற்கான முன்மொழிவுகள் பகிடிவதையை எதிர்க்கும் (anti ragging) மாணவர்களிடையே விரிவுரையாளர்கள் கோரினர். நான் சமர்ப்பித்த கட்டுரையை இங்கு தருகிறேன். வரும் புதிய கல்வியாண்டிற்கு (2010) இக்கட்டுரை தேவையென நினைப்பவர்களுக்குப் பயனுள்ளதாக அமையலாம்.

—————————–
—————————–

“ஆர்வத்தோடும், கண்களில் தெறிக்கும் மகிழ்ச்சியோடும், எதிர்பார்ப்போடும், எதிர்காலம் பற்றிய பல வண்ணக் கனவுகளோடும் ஒரு மாணவன் பல்கலைக்கழகத்திற்குள் (ஏதோ ஒரு கல்வி நிலையத்துள் மேற்படிப்பிற்காக) காலெடுத்து வைக்கிறான். போட்டி நிறைந்த இவ்வுலகத்தை கல்வியால் வெல்ல வேண்டும் என்ற ஒரு வெறி தெறிக்க, அவனுள் ஒரு பெருமித உணர்வு. ஆசையோடு பலமுறை கடந்து சென்ற பல்கலைக்கழகத்திற்குள் இன்று தானும் ஒரு மாணவனாக நிற்கிறோம் எனும் பெருமிதம் அவன் முகமெங்கும் பிரகாசிக்கிறது.

தன் தாய் மஞ்சல் கயிற்றில் கட்டியிருந்த ஒரு துண்டு தங்கத்தையும் அடைமானம் வைத்து இங்கனுப்பியதற்கு, நல்ல முறையில் கல்வி கற்று ஒரு தங்கப் பதக்கத்தைப் பெற்று அவள் கழுத்தில் போட்டு விட வேண்டுமென்ற வைராக்கியம். இத்தனையும் தாண்டி எதிர்காலம், வேலை, தங்கச்சி கல்யாணம், புது வீடு என கற்பனைக் குதிரையோடு சேர்ந்து காலும் ஓட, தன் வகுப்பிற்குள்ளே வந்து சேர்கிறான்.

முதல் நாள், முதல் வகுப்பு. அவன் வகுப்பறை முழுவதும் மேலாண்டு மாணவர்கள் (seniors) சூழ்ந்திருந்து பெருங்குரலெடுத்து அவனை வரவேற்கிறார்கள். புது அனுபவம் அவனுக்கு. எங்கோ பறப்பது போல் மகிழ்ச்சியாய் இருந்தது.

ஆனால் இவையெல்லாம் ஒரு சில நிமிடங்களே நிலைத்தன. திடீரென ஒருதொகை மாணவர்கள் இழிவான வார்த்தைகளைக் கூறிக் கொண்டு புயலென அவ்வகுப்பறையினுள் வந்தார்கள். அவர்கள் புது மாணவனை உடைகளைக் கழட்டுமாறு ஓங்காரமிடுகிறார்கள். அனைவரும் ஒன்று கூடி ஒருவனை அதைச் செய், இப்படிச் செய்யென கட்டளையிட, அவனும் பயத்தால் நடுங்கிக் கொண்டே அனைத்தையும் செய்கிறான். அவன் மறுக்கும் போது உடல் ரீதியாக அவனைத் துன்புறுத்துகிறாகள்.

“நீ ஆம்பளையாடா, என்னையெல்லாம் கழட்டச் சொன்னதும் கழட்டிக் காட்டினன்; இங்க ஆம்பளைகள்(?) தானே நிற்கிறோம். டக்கெண்டு கழட்டுடா நாயே” என உளவியல் ரீதியாகவும் தாக்குகிறார்கள். இவ்வாறு புதுமுக மாணவர்கள் எதிர்நோக்கும், உளவியல் மற்றும் உடலியல் தாக்குதல்கள் எண்ணிலடங்கா. மேலும் புதுமாணவர்கள் தங்களைத் தாங்களே கீழ்த்தரமாக (Self Torture) உடலியல் தொல்லை செய்து கொள்ள வற்புறுத்தப்படுகிறார்கள்.

அவ்வாறு செய்ய மறுக்கையில் மேலாண்டு மாணவர்கள், புதுமுக மாணவர்களின் உடலுறுப்புகளைத் தொட்டு உடலியல் துஸ்பிரயோகம் செய்கிறார்கள். இத்தகைய அதிர்ச்சிகளைத் தாங்கிக் கொள்ள முடியாத மாணவன் அவன் வண்ணக் கனவுகள் நொருங்க, வெட்கத்தாலும் அழுகையாலும் முகம் வீங்கி, துக்கம் இதையத்தை அடைக்க அப்படியே மயங்கி விழுகிறான். அவன் கனவு வீட்டின் கதவுகளோடு சேர்ந்து சாளரங்களும் மூடிக்கொள்ள இன்று வரை துக்கத்திலும் எதையோ பிதற்றிக் கொண்டு இருண்ட அறைகளில் வாழ்கிறான்”

மேற்கூறிய எதுவும் கற்பனையல்ல. யாவும் உண்மை. உலகளாவிய அளவில் இன்று பெருகிவரும் பகிடிவதையை ஒவ்வொரு நாட்டிற்கும் தகுந்தாற் போல ஆங்கிலத்தில் hazing, fagging, bulling, pledging, hourse-playing… என வெவ்வேறு பெயர் கொண்டு அழைத்தாலும் இதன் நோக்கமென்னவோ எல்லா இடங்களிலும் காட்டுமிராண்டித் தனமான வரவேற்புக் கலாச்சாரமாகவே உள்ளது.

இந்தப் பகிடிவதை எனும் விசமரத்தின் விதையானது கிபி 7ஆம் அல்லது 8ஆம் நூற்றாண்டில் விதைக்கப் படப்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. அக்காலத்தில் கிரேக்கக் கலாச்சாரத்தில், நடாத்தப்படும் குழு விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பற்றுபவர்களிடம் ஒற்றுமையுணர்வை, குழு உணர்வை (game spirit) ஏற்படுத்துவற்காக வீரர்களைத் தாழ்வுபடுத்தி, அவமத்தித்து, ஒறுத்தடக்கி, கடுமையான தொந்தரவிற்கும், பிரச்சினைக்கும் உள்ளாக்கினார்கள்.

கால ஓட்டத்தில் இக்காட்டுமிராண்டிக் கலாச்சாரம் படிப்படியாக வளர்ச்சியடைந்து இராணுவத் துறையிலும் பின் கல்வித்துறையிலுமாக தன் வேர்களைப் பரப்பி விழுது விட்டு வளர்ந்துள்ளது.

பகிடி வதையின் விளைவாக நடைபெற்ற முதல் குற்றச்செயல் 1873ல் கொர்னெல் (Cornell) பல்கலைக்கழகத்தில் ஒரு புதுமுக மாணவனின் இறப்பாகப் பதிவாகியது. அன்று முதல் இன்று வரை ஆண்டு தோறும் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் உள்ள மூத்த மாணவர்களின் பகிடி வதையால் சில மாணவ, மாணவிகளாவது இறப்பது, உடல் ஊனம் அடைவது, மனம் பேதலித்துப் போதல், பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாதல் என பல எண்ணிலடங்கா வன்முறைகளுக்கு புதுமுக மாணவர்கள் இலக்காவது யாவரும் அறிந்த பகிரங்க ரகசியமாகும்.

ஒரு நாட்டின் எதிகாலத் தூண்கள் மாணவர்கள் தான் என ஒவ்வொரு அரசாங்கமும் மார்தட்டிச் சொல்வதோடு நின்று விடாமல், மாணவர்களுக்கெனப் பல வசதிகளையும் செய்து கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

ஏன் இந்த மேலாண்டு மாணவர்கள், புதுமுக மாணவர்களைப் பகிடி வதைக்கு உட்படுத்துகிறார்கள்? மேலும் வைரக்கல்லிற்கு ஒப்பிடப்படும் தமது மதிப்புற்குரிய நேரத்தை, படிப்பதில் செலவிடாமல் பகிடிவதையில் வீணாக்குகிறார்கள் என்ற கேள்வியை சில மேலாண்டு மற்றும் புதுமுக மாணவர்களிடம் கேட்ட போது அவர்கள் கூறிய காரணங்கள் கீழ்வருமாறு:

1. பகிடி வதை மேலாண்டு மாணவர்களுக்கும், புதுமுக மாணவர்களுக்கும் இடையே ஒரு பிரிக்க முடியா பிணைப்பையும், ஒரு உறவுப் பாலத்தையும் ஏற்படுத்துகிறது

2. புதுமுக மாணவர்களின் ஆளுமையை விருத்தி செய்யவும் (personality Development), அவர்களை திறந்த மனதுடையவர்களாகவும், (வகுப்புப் புறக்கணிப்பு… etc போன்ற) பொது விடயங்களில் ஈடுபாடுடையவர்களாக மாற்றுவதற்கும் பகிடி வதை பயன்படுகிறது.

3. புதுமுக மாணவர்கள், மேலாண்டு மாணவர்களையும், தமது துறை உறுப்பினர்களையும் எவ்வாறு மதிக்க வேண்டும் என்பதை பகிடி வதையின் மூலம் கற்றுக் கொடுக்கிறோம்.

4. ஒழுங்குமுறையோடும், கடுமையான சட்ட திட்டங்களுக்கும் உட்பட்டு ஒழுக்கமாகக் கல்வி கற்று பள்ளியிலிருந்து, பல்கலைக்கழகத்திற்கும் பிரவேசிக்கும் மாணவர்களுக்கு திடீரென ஒரு சுதந்திரம் கிடைக்கிறது. அச்சுதந்திரத்தை புதுமுக மாணவர்கள் தவறான முறையில் பயன்படுத்தி ஒழுக்கம் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக சில பயிற்சிகளை பகிடி வதையின் மூலம் பயிற்றுவிக்கிறோம்.

5. மேலாண்டு மாணவர்களின் துணையின்றி, புதுமுக மாணவர்கள் கல்வி கற்று வெளியேறுவது கடினம்.

6. சில மேலாண்டு மாணவர்கள் மனநோய்க்கு உட்பட்டவர்களாகவும், உள்ளத்தில் ஏற்றத்தாழ்வு உள்ளவர்களாகவும், இருக்கிறார்கள். மேலும் இவர்கள் தமது பெற்றோரால் சரிவரக் கவனிக்கப் படுவது இல்லை. அவர்கள் தான் இவ்வாறான கீழான செயல்களில் ஈடுபடுவது.

7. மேலாண்டு மாணவர்கள் பகிடிவதையை வலிந்து செய்வதில்லை. ஆனால் மாணவர்கள் மத்தியில் மாணவர் போல் நடமாடும் சில அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் தான் இவ்வாறு செய்கிறார்கள். அவர்கள் புதுமுக மாணவர்களை மிகவும் கொடுமைப் படுத்துவதுடன் தமது கட்சிகளில் வலிக்கட்டாயமாக உறுப்பினர்களாக இணைத்துக் கொள்கிறார்கள்.

8. பேராசிரியர்களும், விரிவுரையாளர்களும் பகிடிவதை விடயத்தில் தலையிட விரும்புவதில்லை. ஒரு விரிவுரையாளரின் முன் ஒரு மாணவன் பாதிக்கப் பட்டால் கூட அவர்கள் ஏன் என்று கேட்பதில்லை. மேலும் இவர்கள் புதுமுக மாணவர்களின் துன்பியல் கதைகளைக் கேட்டு தமக்குள் பொழுது போக்காக கதைத்து மகிழ்பவர்களாகவே இருக்கிறார்கள்.

9. முதுகெலும்பில்லாத முகாமைத்துவம் மற்றும் முகாமைத்துவ தலைமைகளிடம் சிறந்த தலைமைத்துவப் பண்புகளோ அல்லது பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டு வரும் ஆளுமையோ இல்லாமல் இருப்பது.

மேற்கூறப்படும் பல காரணங்களும் ஒன்றாகி இன்று மாணவ, மாணவிகளின் எதிர்காலத்தைக் கேள்விக் குறியாக்கியுள்ளது.

ஜனநாயக(!) நாடான இலங்கையில் அண்மையில் எடுக்கப்பட்ட ஓர் ஆய்வுக்கு அமைவாக, ஒரு வருட தேசிய வருமானத்தில் ஐந்தில் ஒரு பங்கு, இலவசக் கல்விக்காக அரசாங்கத்தால் ஒதுக்கப் படுகிறது.

அதிஸ்டம் தானாகக் கதவைத் தட்டுவது போல் சில நேரங்களில் “சிறப்பான விடயங்கள் அல்லது பொருட்கள் எமக்குக் இலவசமாகக் கிடைக்கிறது”, எனினும் “இலவசமாகக் கிடைக்கும் பொருட்களின் பெறுமதி எவ்வளவு உயர்வாக இருந்தாலும் (குருடன் கையில் கிடைத்த வைரம் போல்) மக்கள் அதன் பெறுமதியைக் குறைத்தே எடை போடுகிறார்கள்”.

மூத்தோர் கூறிய இவ்விரண்டு மேற்கோள்களையும் ஒப்புநோக்கினால், இலங்கையில், இன்று, நம் மனக்கண்களில் உடனே பளிச்சிடுவது, நம் மாணவர்களுக்குக் கிடைத்துள்ள “இலவசக் கல்வி”.

இன்றைய மாணவர்கள் மறியல் செய்வதிலும், வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபடுவதிலும், ஒருவரை ஒருவர் தாக்கி உடல் பலத்தைக் காட்டுவதிலும், பகிடிவதையில் ஈடுபடுவதிலும், தமக்குத் தேவையானவற்றையும், அனாவசியமானவற்றையும் கூட பெற்றோருடமிருந்து மிரட்டிப் பறிப்பதிலும் மிகவும் ஆற்றல் மிக்கவராயிருக்கிறார்கள். அத்தோடு வலிந்து சென்று நலிந்த மாணவர்களை அடிமைப்படுத்துவதில் காட்டும் ஆர்வத்தைக் கல்வியிலும், அவர்களுக்கென ஒதுக்கப் பட்டுள்ள கடமைகளிலும் காட்டத் தவறுகின்றனர்.

கல்வி கற்பதை விடவும் விரிவுரையாளர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் எதிராகச் சுவரொட்டிகளை வெகு முனைப்போடு தயாரிப்பதிலும், தமக்கு ஒதுக்கப்படாத வகுப்பறைகளை அடாவடித் தனமாக ஆக்கிரமிப்பதிலும், இரவினில் வகுப்பறைகளிலேயே தங்குவதிலும் வெகு முனைப்போடு செயலாற்றுகிறார்கள்.

“அடிச்சு வளர்க்காத பிள்ளையும், ஒடிச்சு வளர்க்காத முருங்கையும் உருப்படாது” எனும் பழமொழிக்கேற்ப பெற்றோர்கள் செயல் பட வேண்டும். விரிவுரையாளர்களையும் ஒழுங்கீனமான மாணவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அனுமதிக்க வேண்டும். ஒரு புதுமுக மாணவனுக்குக் கொடுக்கப்படும் அழுத்தங்கள் மென்மையானதாகவோ (mild torture), வேதனையளிக்கத் தக்க வகையிலோ (harsh), உளவியல் (psychologically) அல்லது உடலியல் (physically) என எவ்வடிவத்தில் இருந்தாலும், அவை அனைத்துமே பகிடி வதையென்றே கருத்தில் கொள்ள வேண்டும்.

மேலும் பகிடிவதை எந்த ஒரு பயன்பாடான விடயத்திற்கும், வளர்ச்சிக்கும் (ஆளுமை விருத்திக்கோ, இன்ன பிறவுக்கோ ) ஒருபோதும் மாணவர்களுக்கு உதவாது. ஒரு புதுமுக மாணவனை துன்புறுத்துவதன் மூலமும், துஸ்பிரயோகம் செய்வதன் மூலமும் எந்த ஒரு மேலாண்டு மாணவனும் தனக்குரிய மரியாதையைப் பெற்றுக் கொள்ள முடியாது. மரியாதை என்பது கொடுத்துப் பெற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று என்பதை பேராசிரியர்கள் கூறித் தான் மேலாண்டு மாணவர்கள் அறிந்து கொள்வார்களா?

புதுமுக மாணவர்களிடம் மரியாதையைப் பெற்றுக் கொள்ள மேலாண்டு மாணவர்கள் உதவி மனப்பாண்மை கொண்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் ஒரு குழந்தை எவ்வாறு எல்லாவற்றையும் பெரியோர்களைப் பார்த்துக் கற்றுக் கொள்கிறதோ அதே போல் தான் புது முக மாணவனும் கற்றுக் கொள்கிறான். ஏனெனில் பல்கலைக்கழகம் எனும் குடும்பத்திற்குள் புதிதாய் இணைந்துகொள்ளும் குழந்தைகளே “புதுமுக மாணவர்கள்”. அவனிடம் மேலாண்டு மாணவர்கள் பணிவுடன் நடப்பதன் மூலம் தமது பெருந்தன்மையை வெளிப்படுத்த வேண்டும்.

“பகிடிவதை” சட்டத்தால் தடை செய்யப் பட்ட அனுகுமுறை என மாணவர்கள் அறிந்திருந்தும், அதை மீண்டும் மீண்டும் செய்யத் துணிவதற்குக் காரணம் கடுமையான சட்டதிட்டங்கள் நடைமுறைப் படுத்தப் படாமையே ஆகும். மேலும் இவர்கள் தமது துறை சார்ந்த பேராசிரியர்களாலும், உறுப்பினர்களாலும் பல முறை எச்சரிக்கப் பட்ட பின்னரும், மாணவர்களை பகிடிவதைக்கு உட்படுத்துவது, அவர்கள் தமது துறை சார்ந்தவர்களையே மதிக்கவில்லையென்பதையே காட்டுகிறது. தமது மூத்தோர்களின் வாய்மொழியை மதிக்காத இவர்கள், புதுமுக மாணவர்களுக்கு எப்படி மரியாதையைக் கற்றுத் தர முனையலாம். மேலாண்டு மாணவர்கள், கல்வியிலும், தொழில்முயற்சிகளிலும், நல்ல குணங்களாலும் சக மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.

எமது கல்வி நிறுவனத்தின் நிர்வாகியும், முகாமைத்துவ அலுவலர்களும், எமக்குக் கற்றுத் தரும் மதிப்பிற்குரிய ஆசிரியர்களும் கூட ஏதோ ஒரு பல்கலைக்கழகத்தில் தமது பட்டங்களைப் பெற்றுக்கொண்டே இன்று இந்நிறுவனத்தை வழிநடத்துகிறார்கள். மாணவர்களாக இருந்த போது அவர்களும் நிச்சயமாக பகிடிவதைக்கு ஆளாகியிருப்பார்கள். மேலும் அவர்கள் மேலாண்டு மாணவர்களாகிய போது சில புதுமுக மாணவர்களை மென் பகிடிவதைக்கு உட்படுத்தியதாகவும் சிரித்துக்கொண்டே பழைய நினைவுகளை இரைமீட்டினார் ஒரு விரிவுரையாளர்.

போதிய பகிடிவதைக்கு உட்படுத்தப் பட்டிருப்பினும் இவ்விரிவுரையாளர்கள் தலைமைத்துவப் பண்புகளையோ, ஆளுமையையோ, ஆக்கபூர்வமான ஏதோ ஒன்றையோ பகிடிவதையின் மூலம் பெற்றுக் கொள்ளவில்லையென்பதை, இக்கல்வி நிறுவனத்தில் நடைபெறும் பகிடிவதைப் பிரச்சினைகளை அவர்களால் தீர்க்கமுடியவில்லை எனும் காரணத்தைக் கொண்டு நாம் அறிந்து கொள்ள முடியும்.

எனவே இக்காரணங்களிலிருந்து, பகிடிவதை மாணவர்களின் ஆளௌமையையோ, தலைமைத்துவப் பண்பையோ ஒருபோதும் விருத்தி செய்யாது என்பது தெளிவாகிறது. மேலும் மாணவர்களிடையே ஓர் அன்புப் பாலத்தை, பிணைப்பையும் பகிடிவதையால் ஏற்படுத்த முடியாது.

பகிடிவதையால் தனிமனித ஆளுமை கெடுகிறது:

மேலாண்டு மாணவர்கள் புதுமுக மாணவர்களை பகிடி வதைக்கு உட்படுத்தும் போது

1. மேலாண்டு மாணவர்கள் ஒரு குழுவாக செயல்படுகிறார்கள்

2. புதுமுக மாணவர்களும் அவ்வாறே ஒரு குழுவாக வாழ வேண்டுமெனவும், தம்மைப் பின்பற்ற வேண்டுமெனவும் நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

3. மேலும் தனி மாணவனாக எதையும் சாதிக்க முடியாது எனும் தவறான கருத்தை விதைக்கிறார்கள்.

மேற்கூறிய மூன்று விடயங்களையும் புதுமுக மாணவர்களின் மனதில் பதிப்பதன் மூலம் பகிடிவதை எனும் கோடூரத்தை எளிதில் ண்டத்தி முடிக்கிறார்கள். இவ்வாறு செய்கையில் தனிமனிதச் செயல் திறன் மாணவர்களிடம் மழுங்கடிக்கப்படுகிறது.

மேலும் மேலாண்டு மாணவர்கள் “அட்டைப் பெயர்”களைப் (card names) பாவிக்கிறார்கள். இந்த அட்டைப்பெயர்கள் அவர்களின் தனிமனித (மாணவ) அடையாளத்தை மறைத்துக்கொண்டு (ஒரு முகமூடியுடன்) இக்கொடூரங்களைச் செய்யத் துணைபுரிகிறது. எவ்வளவு கோழைகள் இவர்கள்?

முன்னெழுத்துடன் தமது சொந்தப் பெயர் கூற முடியாத இவர்கள், கோழைகள் தானே. இந்தக் கோழைகள், புதுமுக மானவர்களை School yawanna, bucket, ..etc என பல பெயர் தெரியா கொடுமைகளுக்கு ஆளாக்குகிறார்கள்.

மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விடயம் ஒன்று உள்ளது. அது என்னவென்றால், கல்வி நிலையத்தைத் தாண்டிய பின்பு தான் வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டமே ஆரம்பிக்கிறது. பெற்றோரின் பணத்தில் சுகமாக வாழும்போது வாழ்க்கையின் பல்வேறு பரிமானங்கள் புலப்படுவதில்லை. கல்விநிலையத்துள் மாணவர்களாக நுழையும் நமக்குக் கற்க மட்டுமே உரிமையுள்ளது. அது நமது பெற்றோருக்கு நாம் செய்ய வேண்டிய கடமையும் ஆகும். அதை விடுத்து மற்றொரு மாணவன் மீது அன்பு செலுத்த முடியாத ஒருவனுக்கு ஆதிக்கம் செலுத்தவும் தகுதி இல்லை.

என்னுடைய முன்மொழிவின் படி, இக்கல்வி நிறுவனத்தைச் சார்ந்து நடைபெறும் அனைத்துச் சீரழிவுகளுக்கும், நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும். பகிடிவதை எனும் நொடிப்பொழுது சந்தோசம் எத்தனையோ மாணவர்களின் கல்விநிலையை மட்டும் பாதிப்பதோடு நின்று விடாமல், எதிர்கால சமுதாயத்தின் கல்வி வளர்ச்சியையே கேள்விக் குறியாக்கி விடும்.

ஒவ்வொரு கல்வி நிலையத்திலும் பகிடிவதை எதிர்ப்பு அமைப்புகள் மாணவர்கள் மத்தியில் உருவாக்கப்பட வேண்டும். புதுமுக மாணவர்கள் தம்மை தொல்லைக்குட்படுத்தும் மாணவர்களின் பெயர்களையும், முகங்களையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். எவருக்கும் பயப்படாமல் நிர்வாகத்திடமோ, பேராசிரியர்களிடமே தங்கள் பிரச்சினைகளைக் கூறி, தீர்வுகாண முன் வரவேண்டும். அவர்கள் அதைக் கருத்தில் கொள்ளாமல் இருந்தால், மனித உரிமை அமைப்புகளிடம் அவர்களையும் இணைத்துப் புகார் கொடுக்க வேண்டும்.

நேரடியாகப் புகார் கொடுக்க விருப்பமில்லாத மாணவ, மாணவிகள் தமது பெற்றோர்களிடமாவது பிரச்சினைகளைக் கூற வேண்டும். பெற்றோர் மூலமாக மாணவ விடுதி பாதுகாவலரிடமோ, அல்லது பேராசிரியரிடமோ முறையிட வேண்டும்.

இக்கருத்துக்கள் ஏன் இங்கு வலியுறுத்தப் படுகின்றனவென்றால், இன்றைய புதுமுக மாணவர்களால் மட்டும் தான் பகிடிவதை எனும் கொடூர காட்டுமிராண்டிக் கலாச்சாரத்தை தடுத்து நிறுத்த முடியும். முதுகெலும்பில்லாத கல்வி நிலைய நிர்வாகங்கள் ஒருபோதும் இதனைத் தடுத்து நிறுத்த முன்வரப் போவதில்லை. உங்களின் கீழ் பயில வரும் மாணவர்களுக்கும் இக்கலாச்சாரத்தை எடுத்துச் செல்லாதீர்கள். நீங்கள் புதிய மாணவர்களை பகிடிவதைக்கு உட்படுத்தாதீர்கள். ஏனெனில் அவர்கள் உங்களை எந்த விதத்திலும் தொல்லை செய்யப் போவதில்லை. நாம் பட்ட துன்பம் போதும். இனிவருவோருக்கு வேண்டாம் எனும் மேன்மையான எண்ணத்தை எம் மனங்களில் விதைத்துக் கொள்வோம். இதை ஒவ்வொரு மாணவனும் உணரும் போதே, பகிடி வதை எனும் மனநோய் நீங்கும்.

“வருமுன் காப்பதே சிற்ந்தது” என்பது மூத்தோர் வாக்கு. தாம் பெறாக் கல்வியை தம் பிள்ளைகளாவது பெற்று விட வேண்டும் எனும் ஒரே நோக்கத்தில் தான் ஒவ்வொரு பெற்றோரும் தம் பிள்ளைகளை கல்வி நிலையத்திற்கு அனுப்புகிறார்கள். கல்வி நிலையத்தை ஒரு பாதுகாப்பான இடமாகவே பெற்றோர்கள் உணர்கிறார்கள். பேராசிரியர்கள் மேலுள்ள நல்லெண்ணமே மாணவனையும் வழிநடத்துகிறது. எனவே கல்வி நிலைய நிர்வாகமே, பகிடிவதைக்கு எதிரான அனைத்துச் சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். பிரச்சினைகள் நடந்த பின் காவல் துறையை நாடுவதை விட, மாணவர்களின் தேவையறிந்து சட்டத்தைப் பாரபட்சமில்லாமல் நடைமுறைப்படுத்துவதே நல்ல முகாமைத்துவமாகும்

Series Navigation

மன்னார் அமுதன்

மன்னார் அமுதன்