யோகம்

This entry is part [part not set] of 25 in the series 20061130_Issue

எஸ்ஸார்சி.


அப்போதே மனைவி சொன்னாள். அவன்தான் எப்போதும்போல் அதைக் காதில் போட்டுக்கொள்ளவில்லை. சென்னை அசோக்பில்லர் நிறுத்தம் சென்று கடலூர் வண்டி பிடிப்பது சாத்தியமாகும். யாரும் இல்லை என்று கட்சி கட்டிக்கொண்டு வந்துவிடமாட்டார்கள். ஆனால் வண்டியில் ஏறினால் உட்காரஇடம் கிடைக்குமா. பயணிகள் எப்போதும் பேருந்துக்கு நிற்கும் இடத்தருகே வந்து அவன் சுற்றும் முற்றும் நோட்டம் விட்டான். தெற்கே செல்லும் கடலூர் சாலையில் மழை நீர் வழிந்தோடிக்கொண்டிருந்தது. சோ என்று பெய்த மழை வளைத்து வளைத்து ஆரோகண அவரோகணமாய்க் கொட்டிக்கொண்டே இருந்தது. வான்மழை பொழிவதில் அவன் உடல் நனையும்போது எப்போதும் ஒரு மகிழ்ச்சியை சம்பாதித்து விட முடிகிறது அவனால். எங்கிருந்தோ ஏதோ ஒன்று ‘சீ போடா சின்னப்பயலே எனக் கொஞ்சுவதாகவே’ உணர்வான் அவன்.

நனைந்தும் நனையாமலும் இருவரும் வண்டியில் உள்ளாகச்சென்று இருக்கை தேடினார்கள். பேருந்துக்குள்ளே அமர்ந்து சாய்ந்து. அரை குறை உறக்கத்தில் பயணிகள் தென்பட்டார்கள். அவர்கள் மட்டுமே சகல செளபாக்கியத்தோடு அமர்ந்து இருப்பதாயும் வண்டியில் ஏறி நிற்கின்றவர்கள் எல்லோரும் சீனாக்காரர்கள் என்கிறவிதமாய் அவர்களின் கண்கள் செய்தி அனுப்பிக்கொண்டிருந்தது.

பேருந்தில் மூலைக்கு மூலை மழை நீர் ஒழுகிவிட்டிருந்தது. லொட புட என்றபடிக்கு நாராசமாய் சப்தம் வந்துகொண்டிருந்தது. நிற்கின்ற தூண்கள் அசிங்கமாய் நர்த்தனம் புரிந்துகாட்டின. இருக்கை ஏதும் காலி இல்லை. கடைசி சீட் என்கிற பாவிகள் அமருமிடத்தில் இரண்டு பேர் அமரலாம். மழை நீர் சொட்டி சொட்டி சீட்டின் மேல்தோல் ஈரமாகி இருந்தது. இந்த பக்கத்திலும் அந்த பக்கத்திலும் அமர்ந்து இருந்தவர்கள் திருகிக்கொள்ள அவன் ஒரு இருக்கையில் மெதுவாகப் பொருத்திக்கொண்டான்.
அவள் இன்னும் நின்று கொண்டே இருந்தாள். கண்டக்டர் துழாவிக்கொண்டே வந்து டிக்கட் வாங்காது ஆனால் ஒரு சீட்டு நிறைத்து அமர்ந்துகொண்டிருக்கும் சின்னக் குழந்தையை எழுப்பி விட்டு அவளுக்கு இருக்கை தந்து ரட்சித்தார்.

தான் மட்டுமே இந்தக்கண்த்தில் சாதித்துவிட்டதாயும் அடுத்தவர்களுக்கு அவ்வளவு தூரம் போதாது என்பதாயும் கண்களால் சாடை பேசி அவள் அமர்ந்து கொன்டாள். அவன் கடைசீ சீட்டில் அமர்ந்து வதைப்பட்டுக்கொண்டிருந்தான். விதித்தது இவ்வளவுதான் மனம் சொல்ல முன் சீட்டின் கம்பியைக்கைப்பிடித்து சமாதானம் செய்து கொண்டான்.
பேருந்து கிழக்கு கடற்கரைச்சாலையில் திருவான்மியூர் அருகே நின்று இருவரை ஏற்றிக்கொண்டது. தாயும் மகளுமாக இருக்கலாம். கடைசீ சீட்டிற்கு அருகே வந்த அந்த இருவரும் திரி திரி என விழித்துக்கொண்டிருந்தனர். அவன் பக்கத்தில் இருந்த காலி இடம் ஒன்றை நோட்டம் விட்ட அந்தத் தாய் ‘பெரியவரு உக்காரு ஒண்ணும் தப்பில்ல’
சொல்லி தன் பெண்ணை அமரச்சொன்னாள். அவனுக்கு ஜில்லென்று இருந்தது. அழகு என்றால் அழகு அத்தனை அழகு அந்தப் பேருந்து பயணிகளுக்கும் அந்த பெண்னுக்கும் தொடர்பே இல்லாமல் இருந்தது. அந்தப்பெண் கச்சிதமாய் அமர்ந்து கொண்டாள். அவன் இனம் புரியாத ஏதோ ஒரு மகிழ்ச்சியில் திளைத்திருந்தான் அவன் மீதில் தவறு இல்லை. படைப்பின் சூது அல்லவா அது. உலகம் உயிர்களின் தம்மின இருப்பை இழந்து விடாமல் இருக்க ஏற்படுத்திக்கொண்ட வசதியை காதல் அது இது என்று சொல்லி தங்க முலாம் பூசிக்கொள்கிறொம் அவ்வளவே.

‘பெரியவரு’ என்று சொல்லி இருக்க வேண்டாம். அவன் மனதிற்குள் லேசாய்க்குடைந்தது.. பரவாயில்லை இதில் என்ன குறைந்து விடப்போகிறோம். சமாதானம் சொல்லிக்கொன்டான். பார்க்க பார்க்க கூடுதல் பரவசமாய் இருந்தது. தலை முடியிலிருந்து ஒரு ரம்மிய மணம் வந்துகொண்டிருந்தது. அது வருகிறதா இல்லை மனப்பிராந்தியாய்க்கூட இருக்குமா என்றும் யோசித்தான். காலம் முழுவதும் ஆணுக்கு ஒரு பெண் என்றால் இப்படித்தான் இருக்குமோ. இதில் கோணிக்கொண்டும் நாணிக்கொண்டும் ஜோடிப்பு தேவையே இல்லை. இயற்கையின் விதி. தெரிந்தவரை மனதிற்குள் சொல்லிப்பார்த்தான்.

பேருந்து உர்ரு புர்ரு என்று சென்று கொன்டிருந்தது. அவள் மனைவி அப்போதைக்கப்போது திரும்பி திரும்பி அவன் எப்படி எங்கே என்பதைப்பார்த்துக்கொன்டிருந்தாள். அப்படிப்பார்க்க வேண்டிய அபாய வயதெல்லாம் அவள் தாண்டியிருப்பாள் என்று நினத்து எத்தனை தடவையோ ஏமாற்றம் தான். வயது கூடும் மனித சுபாவம் மாறாதது. கொஞ்சம் அப்படி இப்படி நெளித்துக்கொண்டு ஏதோசரியாகிவிட்டதாய் தோன்றும், மாய பிம்பம் அது.

அந்தப்பெண்ணின் தாய் இன்னும் பேருந்தின் தூணைப்பிடித்து நின்று கொன்டிருந்தாள். அவன் மனைவிக்கு பக்கத்து இருக்கை ஒன்று காலி ஆவதாய்த்தெரிந்தது. அவனை அழைத்துஅவள் அமரச்சொல்லலாம். யாரும் செய்வதுதான்.நின்றுகொண்டிருந்த தாயார் பட்டென்று உள்லாக நுழைந்து காலி இடத்தை ஆக்கிரமித்தாள். ‘உங்க பாப்பாவ உக்கார சொல்லுலாம்’

‘அவ உக்காந்துதான வர்ரா’

‘இல்ல ஆம்புளைங்க பக்கத்துல உட்காந்து செரமப்படுது’

‘பெரியவங்க ஒண்ணும் தப்பு இல்ல பேத்தி மாதிரி’’

‘ கட்டுன ஆம்புள தெரவுசு இல்லை. யார சொல்லி என்னா சரி வுடுங்க.’ முணுமுணுத்துக்கொண்டே தன் கணவனை பின்னால் திரும்பிப்பார்த்தாள்.

அந்தத்தாய் இருக்கையில் உட்கார்ந்து சாய்ந்து கொன்டாள். தன் பெண்ணை சட்டை செய்யாமலேயே அவள் கண்களை மூடிமூடித்திறந்தாள்.

‘காலு ரெண்டும் குடயுது’

‘உக்காந்து வந்தாமட்டும் என்னவாம்’

வேறு எதுவுமே பேசாமல் இருவரும் அமர்ந்திருந்தனர். .

அவன் ஒரு முறை புதிய வரவான அவளை ப்பார்த்துக்கொண்டான் .தன் வயசுக்கு இப்படிப்பார்ப்பது அழகு இல்லை இவ்விடத்தில் அழகு என்பது யோக்கியதை. கொஞ்சம் அதிகம்தான். மனம் ஒரு குரங்கல்லவா. ஆமாம் அதில் ஐயமே இல்லை.
மேலிருந்து ஒழுகிக்கொண்டே இருந்தது. மழை அனேகமாய் நின்று விட்டது. ஒரு வார்த்தை பேசிப்பார்த்தால் அவள் என்ன பதில் சொல்லாமலா போய்விடுவாள். அப்படியே பதில் சொல்லாவிட்டால்தான் என்ன ஒன்றும் நஷ்டம் இல்லை. இன்னும் ஒரு முறை இப்படி வாய்ப்பது என்பது கடினமே. மானிட ஜன்மம் எடுத்து இப்படிக்கு ஒருதேவதையோடு உட்காருவது பேசுவது சாத்தியமாகுமா யோசித்துப்பார்த்தான் அச்சமாக இருந்தது. அவள் என்ன தன் மூக்கையா கடித்துவிடுவாள்.

‘மழைதான் வுட்டுபோச்சி. இன்னும் கூரையிலேந்து தண்ணி சொட்டுது’ பேச்சைத்தொடங்கிப்பார்த்தான்.

அந்தப்பெண் அவன் சொல்லியதைக்காதில் வாங்கிக்கொண்டாதாகவே தெரியவில்லை. ஆனால் தூரத்தில் அமர்ந்திருந்த அவன் மனைவி மட்டும் ஏதோ செய்தி சொல்லிக்கொண்டே இருந்தாள்.
என்னதான் அது என்று உற்றுக்கேட்டான்.
‘ மேலேந்து மழைத்தண்ணி சொட்டுதுன்னா எழுந்சி நிக்குலாமில்ல’
‘இங்க பாரு ஏன் தலயில ஒண்ணும் இல்ல’
‘அது என்னா புது சேதி’
வண்டி சென்று கொண்டே இருந்தது. பேருந்தின் கண்டக்டர் மெதுவாக ஊர்ந்து வந்து கடைசி சீட்டருகே நின்றுகொண்டார். சன்னல்கள் சில சரியாய் சாத்த வராததால்பாதி மட்டுமே அடைத்து அசுர வேகத்தில் காற்றை ஊதி பேருந்தின் உள்ளே விசிறிக்கொண்டிருந்தது. பயணிகள் நெளிந்து நெளிந்து அமர்ந்து காதுகளை கண்களை மூடி மூடி அவதிப்பட்டுக்கொண்டிருந்தனர். இந்தப்பயணிகள் படும் இம்சைக்கும் தன் உத்தியோகத்துக்கும் சம்பந்தம் கிடையாது என்கிறபடி கண்டக்டர் நின்றுகொண்டிருந்தார்.
‘முன்னால ஒரு சீட்டு காலி ஆவுது. நீங்க வருலாம்’
‘பொம்பள சீட்டா இல்ல’ அவன்.
‘மேடம் நீங்க வரலாம்’ அவனை ப்பார்த்து நீ எல்லாம் ஒரு மனுஷன் என்கிற தோரணையில் ஒரு முறை முறைத்தார், மேலிருந்து சொட்டும் நீர் கண்டக்டரையும் விட்டுவைக்கவில்லை. அவளவுதான் யோகம் போல. அவன் மனதிற்குள் சின்னக்கணக்குப்போட்டான். அவள் விருட்டென்று எழுந்து நின்றாள்.
‘அம்மா’ என்று ஔங்கி கத்தினாள்.
‘என்னம்மா ஏன்’
‘மின்னாடி உட்கார சீட்டு இருக்காம். நீங்க. எழுஞ்சிப் போவுலாம்.’
‘ நீ’
‘இல்லம்மா. பெரியவரு. அவரு வீட்டுல ரெண்டுபேருமா அங்க வந்து ஒண்ணா ஒக்காரட்டும். நான் இங்கயே இருக்கேன். எனக்கு ஒண்ணும் இடஞ்சல் இல்ல’
‘ஏதோ செய்யுங்க. மேடம் நீங்க சிரமப்படுறீங்களேன்னுதான் பார்த்தேன்.’ அந்த ப்பெண்ணைப்பார்த்தபடி சொல்லிய கண்டக்டர் தன் இருப்பிடம் நோக்கி நடந்தார்
‘அதுவும் சரிதான் இது பின் டயரு மேலுக்கு இருக்கிற சீட்டு. நான் முன்னாலேயே போயி குந்திக்கிறேன். ஆனா நீ எழுந்திரு இங்க உட்காரு வாம்மா’
அந்தத்தாய் முன் பகுதிக்கு விரைந்து கொண்டிருந்தாள். வண்டியில் அனைவரும் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தனர்.
அவன் எதுவும் அறியாதவன் போல் இறுக்கிக் கண்களை மூடிக்கொண்டான். அந்தப்பெண் ஏதும் வாய் திறக்கவில்லை. அதுதான் தாயுக்கு சொல்வதுபோல் செய்தி சொல்லிவிட்டாளே. அதுவே போதும். நல்லபடியாக அவனே இடத்தைக்காலிசெய்து தன் மனைவி அருகே காலியான இருக்கைக்குப்போய் அமரலாம்.
இருந்தாலும் நாமே ஏன் போக வேண்டும். இந்தப்பெண்ணோ பக்கத்தில். அவளும் வாய் திறந்து ஒரு வார்த்தை கூடபேசாமல். நாம் அத்தனைக்கேவலமோ. எது ஆனால்தான்
நமக்கென்ன என அவன் மூடிய கண்களைத்திறக்கவே இல்லை.
அவன் மனைவி கொஞசம் பின் பக்கமாய்த்திரும்பி க்கொண்டு நோட்டம் விட்டாள்.
‘ இங்க யாரும் வரவேணாம் துணி வுள நனைச்சிகிணு பக்கத்துல சாஞ்சிகினு இடுச்சிகிணு ராத்திரி நேரம் இமுசை. அங்கேயே குந்திகலாம் தெரிதாஇன்னும் செத்த நேரம்தான்’
கட்டளை தந்தாள். அவள் ஏன் அப்படிப் பேசுகிறாள். அவனுக்கு குழப்பமாய் இருந்தது.
‘அவ அவ ஆத்தாளை காபந்து பண்னிகினு இருப்பா. ஆரு நாம இளிச்சவாய் ஆவுணும்.’ கொசுறாக ப்பேசி முடித்தாள்.
அவன் இன்னும் இருக்கி க்கண்களை மூடி வாயே திறக்காமல் சமர்த்தாய் அமர்ந்திருந்தான். அவளும் கூட அப்படித்தான். இதற்குத்தான் நீசபங்க ராஜயோகம்
என்று ஜோசியத்தில் சொல்வார்களோ ஒரு மனக்கணக்குப் போட்டுக்கொண்டே பயணிக்கிறான்.


essarci@yahoo.com

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி