யுத்தத்தில் வெளிவராதவை இன்னும் அதிக காலத்திற்கு இருக்கும்

This entry is part [part not set] of 42 in the series 20110508_Issue

K.W. ஜனரஞ்சன தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்,



சோபாக்க எனும் பிக்குவிடம் ஒருமுறை ‘முதன்மையானது என்றால் என்ன?’ என புத்தர் கேட்டாராம். அதற்கு அவர் ‘எல்லா உயிரினங்களுக்கும் உணவே பிரதானமானதாகும்’ என்றாராம். இந்தக் கதையையே இலங்கையோடு ஒப்பிட்டு நோக்கினால், கடந்த அரை நூற்றாண்டுகளாக எங்களுக்கு முதன்மையானதாக இருந்தது இனப்பிரச்சினைக்குத் தீர்வொன்றைத் தேடுவதுதான். விடுதலைப் புலிகளின் ஆயுதம் தாங்கிய செயற்பாடுகளானது அந்த இனப்பிரச்சினையின் நோய் அறிகுறியொன்றென்பதைப் புரிந்துகொள்ளாதோர் இருந்தனரெனின், அவர்கள் தீவிர இனவாதிகளும் தற்சார்புவாதிகளும் மட்டும்தான். பண்டாரநாயக்க, கூட்டமைப்பு முறையில் அதிகாரத்தைப் பிரித்துக் கொள்வது பற்றிப் பிரேரித்ததிலிருந்து, மஹிந்த ராஜபக்ஷ நவீன யுத்தத்தின் மூலம் கலகக்காரர்களைக் கூட்டாகப் படுகொலை செய்தது வரையில் நோயையும், நோய்க் காரணியையும் இல்லாதொழிப்பதற்காக, பலவிதமான பரிசோதனை முயற்சிகளில் ஈடுபட்டோம்.

பிரிவினைவாதிகளான LTTE யினர் இருக்கும்போது, ஆட்சியதிகாரங்களைப் பங்கிட்டுக் கொடுப்பதனூடாக வடக்கு ,கிழக்கின் இனப்பிரச்சினைக்குத் தீர்வினை பெற்றுக் கொடுத்தால் நாடு பிளவுபடுவதைத் தவிர்க்க முடியாமல் போய்விடும் என்பதுதான் விடுதலைப்புலிகள் இருந்த காலத்தின் பிரபல்யமான கோட்பாடாகக் காணப்பட்டது. அதனால், அரசியல் தீர்வொன்றை அளிப்பதற்காக விடுதலைப் புலிகளை அழிப்பது பிரதான நிபந்தனையாக அடையாளம் காணப்பட்டது. மிக மோசமான அழிவுகளுடன் கூடிய நான்காம் ஈழ யுத்தமானது, அந்தச் சிந்தனையின் பெறுபேறாகத்தான் உண்டானது. இப்பொழுது விடுதலைப் புலிகள் இல்லை. அதாவது நோய் அறிகுறியானது இல்லாதொழிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிந்து இப்பொழுது ஒன்றரை வருட காலமாகிறது. யுத்தத்தை வென்றெடுப்பதற்காக அனைத்து ஊடகங்களையும் உபயோகித்து நாடு முழுவதும் கட்டியெழுப்பிய சிங்கள பௌத்த வகுப்புவாத மக்களின் கருத்துக்களையும் ஆவேசத்தையும் பயன்படுத்தியது, விடுதலைப்புலிகளைத் தோற்கடிப்பதற்கு மட்டுமல்ல. அந்த வகுப்புவாத கிளர்ச்சிகளையே பயன்படுத்தி ‘தேசத்தின் மீட்பர்’ என்ற விம்பமொன்றை கட்டியெழுப்பியதனூடாக, 2010 ஜனாதிபதித் தேர்தலில் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றுக் கொள்ள மஹிந்த ராஜபக்ஷவினால் முடிந்தது. அதற்கு அடுத்தபடியாக, அவரது அரசியல் கூட்டணிக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பலத்தை ஏற்படுத்திக் கொண்டதுவும் அந்த மக்கள் ஆணையின் தயவினால்தான். அதற்குப் பிறகு 18 ஆவது அரசியல் திருத்தச் சட்டமூலத்தைக் கொண்டு வந்து கால வரையரையற்ற, முழுமையான ஏகாதிபத்திய ஜனாதிபதிப் பதவியை கட்டியெழுப்பிக் கொள்வது வரைக்கும் பயன்படு்த்திக் கொண்டது இந்த ‘தேசத்தின் மீட்பர்’ என்ற விம்பத்தைத்தான். இறுதியில் என்ன நடந்திருக்கிறது? வகுப்புவாத திசைப்படுத்தலின் வழியே நாட்டில் பெரும்பான்மையான சிங்கள மக்கள் கொடுத்த ஆணையானது, மஹிந்த ராஜபக்ஷவின் பதவியை முடிவற்றதும் காலவரையற்றதுமாக ஆக்கிக் கொள்வதற்காக மட்டும் பாவித்துக் கொள்வதுதான். நோய் அப்படியே இருக்கிறது.

விடுதலைப் புலிகளைத் தோற்கடித்ததன் பிற்பாடு ஒன்றரை வருடங்கள் கடந்தும், இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக நாங்கள் முன்வைத்திருக்கக் கூடிய ஒரு அடிச்சுவடாவது உள்ளதா?

இடம்பெயர்ந்திருக்கும் மக்களுக்காக, வெளிநாட்டு அரசுகளிடமிருந்தும் அரச சார்பற்ற நிறுவனங்களிடமிருந்தும் கிடைக்கும் உணவு மற்றும் கூரைத் தகடுகளைப் பங்கிட்டுக் கொடுத்தவாறு, அகதி முகாம்களிலிருந்து அவர்களை வெளியேற்றி மந்த கதியோடும், நிறைய குறைகளோடும் நடைபெறும் மீள்குடியமர்த்தல் மாத்திரம் நடைபெறுகிறது. அந்த நிகழ்வுகள் நடைபெறுவது கூட முற்றுமுழுதாக சிங்கள பெளத்த ஆதிபத்தியமானது தமிழ்மக்களின் பூர்விக நிலங்களின் மீது பலவந்தமாக திணிக்கப்பட்ட நிலையில்தான்.

யுத்தம் நடந்த பிரதேசங்களின் முழுமையாக கட்டுப்பாடு இன்னும் இராணுவத்தின் கைகளில்தான் தங்கியிருக்கிறது. பொது ஆட்சியமைப்பு நிகழ்வதாகத் தென்பட்ட போதும், அது இராணுவ அதிகாரிகளின் தீர்ப்புகளுக்கும் திட்டங்களுக்கும் கீழேதான். தமிழ் மக்கள் நிலையான இராணுவ முகாம்களிருக்கும் எல்லைக்குள்தான் மீண்டும் குடியமர்த்தப்படுகிறார்கள். மாற்றமாக இருப்பது என்னவெனில், முன்பு சில மீற்றர்கள் இடைவெளியில் பாதை நெடுக தரித்து நின்று, தமிழர் வீடுகளைக் கண்காணித்துக் கொண்டிருந்த இராணுவ அதிகாரிகளுக்கு இடையிலான இடைவெளி அதிகரித்திருப்பது மட்டுமே.

இதற்கு முன்பும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதைப் போல தமிழ்ப் பெயர்களைக் கொண்ட வீதிகள், கிராமங்களுக்கு சிங்களப் பெயர்கள் சூட்டப்படுகின்றன. வீதிகள் தோறும் பரந்திருக்கும் இராணுவத்தினரால் நடாத்தப்படும் மக்களுக்கான விடுதிகள் முன்னேற்றமடைந்து, இராணுவ முகாமைத்துவத்துடன் கூடிய நட்சத்திர ஹோட்டல்களாக மாறியிருக்கின்றன. வடக்கு, கிழக்கு பிரதேங்களில் அதிகளவு இடங்கள் குடியிருப்பதற்காகவும், முதலீடுசெய்வதற்காகவும் கொள்வனவாளர்களிடம் திறந்துவிடப்பட்டிருக்கிறது. அருகம்பை, பாசிக்குடா போன்ற கடற்கரையோரப் பிரதேசங்கள் மிகப் பெரிய ஹோட்டல்களுக்காக இப்பொழுதே ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பார்த்தவுடனேயே இவை வலுவானதும் அத்தியாவசியமானதுமான பொருளாதார முன்னேற்றமொன்றின் காட்சியென தர்க்கிக்க முடியுமெனினும், அம் முன்னேற்றத்தின் பலனை அனுபவிப்பது பொதுமக்களைக் கொன்று குவித்த யுத்தமொன்றில் தமது வாழ்க்கையையும் சொத்துக்களையும் இழந்து இடம்பெயர்ந்திருக்கும் அப் பிரதேசத்து தமிழ் மக்களல்ல என்பது வெளிப்படையானது. குறைந்த பட்சம் யாழ்ப்பாண நகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் வியாபாரங்களில் ஈடுபட்டிருக்கும், கட்டுப்பாடுகளற்று தெற்கிலிருந்து வருகை தரும் சுற்றுலா வியாபாரிகள் கூட அம் மக்களது பார்வைக்குத் தென்படுவது தங்களது பூர்விக நிலத்தை அரசின் உதவியோடு வந்து கைப்பற்றிக் கொண்டிருக்கும் வெளியூர் வாசிகள் எனத்தானே?

இவை எவை குறித்தும் இப்பொழுது வெளிப்படையான விமர்சனமோ எதிர்ப்போ தமிழ் மக்களிடமிருந்து எழாது என்பது உண்மை. எனினும், இச் செயலானது விடுதலைப் புலிகளின் அழிவுமிக்க ஆக்கிரமிப்பிலிருந்து காப்பாற்றியமைக்காக அரசுக்கு காட்டும் எல்லையற்ற நன்றிக் கடனெனத் தவறாகப் புரிந்து கொள்ளாமல் இருப்பது சிறந்ததாகும். தமிழ் மக்களை விடுதலைப் புலிகளிடமிருந்து விடுவித்திருப்பது அவர்களுக்குச் செய்த பெரும் உபகாரமென்று அர்த்தம் கற்பித்தபடி நிம்மதியடையும் ஆளுங்கட்சி அமைச்சர்களுக்கு, அது அவ்வாறில்லையெனச் சிந்திப்பதற்குத் தூண்டக் கூடிய எண்ணத் திரட்டுக்களை ‘கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு’ வின் முன்பாக அளித்த சாட்சியங்களினூடாக மக்கள் தெரிவித்தனர் .

அன்றாடம் வெளியே தென்படாதபோதும் அவர்கள் தங்கள் உரிமை குறித்து எந்தளவு விழிப்போடு இருக்கிறார்கள் என்பதை சிங்கள ஊடகங்களில் திட்டமிடப்பட்டே பிரசுரிக்காமல் தவிர்க்கும் அவர்களது சாட்சிகளிலிருந்து புலனாகிறது. தங்களது குடும்பத்து உறுப்பினர்களை பலவந்தமாக விடுதலைப்புலிப் படைக்குச் சேர்த்துக் கொண்டது, மனித கேடயமாகத் தங்களைப் பாவித்துக் கொண்டது போன்றவை குறித்து விடுதலைப் புலிகளுக்கெதிராக முறைப்பாடு செய்வதோடு, இந்த ஆட்சியில் இராணுவத்தின் நடவடிக்கைகள் சம்பந்தமாகவும் அவர்கள் வெளிப்படுத்தும் குற்றச்சாட்டுகளும் எதிர்ப்பும் பலம் மிக்கவை. அவை இதுவரை வெளிவராத யுத்தத்தின் இன்னொரு முகத்தைக் காட்டிக் கொடுக்கின்றன.

தங்களது பிள்ளைகளை, கணவர்களை மற்றும் உறவினர்களை இராணுவத்திடம் ஒப்படைத்தும் , அவர்களுக்கு என்ன நடந்ததென இன்னும் தெரியவில்லை என்பது அவர்களது பாரதூரமானதொரு குற்றச்சாட்டு. இடைக்கிடையே கடத்தப்பட்டு, பிறகு காணாமல் போனவர்கள் குறித்த குற்றச்சாட்டினை விடவும் இராணுவத்திடம் ஒப்படைத்த பிறகு காணாமல் போவது குறித்த குற்றச்சாட்டு பாரதூரமானது. அவர்களது இன்னுமொரு குற்றச்சாட்டு என்னவெனில் தடைசெய்யப்பட்டிருக்கும் திரள்குண்டுகள் மற்றும் பொஸ்பரஸ் குண்டுகள் இராணுவத்தால் தமக்கு எதிராக பாவிக்கப்பட்டது குறித்ததாகும். அவ்வாறே, தங்களை இலக்கு வைத்து ஷெல் வீச்சுக்களை நடத்தியதாகவும் அதனால் தினமொன்றுக்கு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டுகிறார்கள். தாங்கள் மீள் குடியேற்றத்துக்காகச் சென்றபோது, தங்கள் வீடுகளிலிருந்த கூரை ஓடுகள் இராணுவக் காவல்நிலையங்களின் கூரைகளிலிருந்ததாக அவர்கள் சொல்கின்றனர்.

யுத்தம் குறித்து அரசு சொல்லும் புள்ளிவிபரங்களையும் வரைபடங்களையும் மட்டும் ஒப்பிக்கும் அநேக ஊடகங்களுக்கு, உண்மையிலேயே யுத்தம் எவ்வளவு பயங்கரமானதென மீண்டும் சிந்தித்துப் பார்க்க அச் சாட்சிகளினால் வாய்ப்பொன்று பெற்றுத் தரப்படுகிறது. அதுவும் அவர்கள் எந்தவிதப் பாதுகாப்புமற்ற முழுமையாக இராணுவக் கட்டுப்பாட்டின் கீழிருக்கும் பிரதேசமொன்றில் சாதாரண மக்களாக வசித்துக் கொண்டுதான் இவற்றைச் சொல்கிறார்கள். சாட்சி கூறியதன் பிற்பாடு அரசின் இராணுவம் அல்லது வேறு அதிகாரங்களிடமிருந்து வரக் கூடிய இன்னல்களுக்கு எதிராக எந்தப் பாதுகாப்பும் அவர்களுக்கு இல்லை. அமைச்சர் சுரேஷ் பிரேமச்சந்திரன், இச் சாட்சிகளுக்கு தக்க பாதுகாப்பைப் பெற்றுத் தரும்படி பாராளுமன்றத்தில் கேட்டு நின்றது இதனால்தான். உரிய பாதுகாப்பை வழங்கினால், இதை விடவும் பல விடயங்கள் அவர்களிடமிருந்து வெளிப்படக் கூடும்.

பாதைகள் சீரமைப்பதாலோ, பேருந்து நிலையங்களைக் கட்டுவதாலோ, வடக்கிலிருந்து தெற்குக்கு நூற்றுக்கணக்கான பேரூந்துகளை ஓடவிடுவதாலோ, மிக விசாலமான ஹோட்டல்களையும் வங்கிகளையும் கட்டியெழுப்புவதாலோ தங்களது உரிமை குறித்த விழிப்புணர்வுகளை மழுங்கடிப்பதற்கு அவர்கள் இடங்கொடுக்கமாட்டார்கள் என்பது இந்த வரையறுக்கப்பட்ட வாக்குமூலங்கள் மூலமாகத் தெரிகிறது. தங்களுக்கு வரலாற்று ரீதியாக நடந்த அசாதாரணங்கள் பற்றிய விழிப்பு நிலை இன்னும் அவர்களிடம் இருக்கின்றது. யுத்தத்தை வென்றெடுத்த பிறகு தற்பொழுது அபிவிருத்தியெனச் சொல்லிக் கொள்வதால் மாத்திரம் இலங்கையில் பெரியதொரு ஆச்சரியம் நிகழ்ந்துவிடப்போவதில்லை. யுத்தத்தில் வெளிவராதவை இன்னும் அதிக காலத்திற்கு இருக்கும் என்பதைப் போல, இவ் விசாலமான அபிவிருத்தித் திட்டங்களின் கமிஷன் பணம் எவ்வளவு, தனி மனித ஆதாயம் எவ்வளவு ஆகியன வெளிவரவும் இன்னும் காலம் எடுக்கக் கூடும்.

எனினும் உலகில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறை என்னவெனில் பௌதிக அபிவிருத்திக்குச் சமமாக மனித உரிமைகளிலும் முன்னேற்றம் இருக்கவேண்டும் என்பதுதான். அந் நிலைமைக்கு முதலாவது நிபந்தனையானது, நாம் மறந்துபோயும், கைவிட்டுமிருக்கும் வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்காக அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பதாகும். அதனை வேண்டுமென்றே புறக்கணிப்பதானது, அபிவிருத்தியினூடாகக் கைப்பற்றிக் கொள்வதற்கு எதிர்பார்த்திருப்பவற்றை இன்னுமொரு மோதலொன்றின் இரையாக்கி, அழிந்து செல்வதற்கு இடமளிப்பதே.

K.W. ஜனரஞ்சன தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

Series Navigation