மெல்லத் தமிழ் இனிச் சாகும்

This entry is part [part not set] of 8 in the series 20001217_Issue

சின்னக்கருப்பன்


தமிழ் சாகுமா ? சாகும். தமிழ் சாகா வரம் பெற்றுக் கொண்டு பிறப்பெடுக்கவில்லை. தமிழ் ஒரு மொழி. எத்தனையோ மொழிகள் வழக்கொழிந்து போயிருக்கின்றன. இன்றும் மொழிகள் வழக்கொழிந்து போய்க் கொண்டிருக்கின்றன. தமிழ் ஒரு மொழி. தமிழ் பேச ஆட்கள் இல்லை எனில் தமிழும் சாகும்.

இந்தியாவிலேயே எத்தனை மொழிகள் வழக்கொழிந்து போய்க்கொண்டிருக்கின்றன என்று இந்திய அரசாங்கமே கணக்கெடுத்துக் கொண்டிருக்கிறது. தமிழும் அதில் சேரும் காலத்தை தமிழர்களே ஆர்வமுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறது. தமிழ் பேச ஆளில்லையென்றால், படிக்க ஆளில்லையென்றால் நிச்சயம் தமிழும் சாகும். படகர் மொழி இப்போது உயிருடன் இருக்கிறதா ? வெறும் பேச்சு மொழியாய் இருந்தவை பல, அச்சு இயந்திரம் வந்தவுடன் அழிந்து தான் போயின.

இந்தியாவிலேயே இருக்கும் மாநிலங்களிலேயே அவர்தம் மொழிகள் எத்தனை விதங்களில் அழிக்கப்படுகின்றன என்பது தமிழ்ப் பத்திரிகைகளிலும், தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் ஆங்கிலப் பத்திரிகைகளிலும் பேசப்படுவதில்லை.

நாகாலாந்து மாநிலத்தின் மாநில மொழி நாகாமொழி அல்ல. ஆங்கிலம். மிஜோரம் மாநிலத்தின் மாநில மொழி மிஜோ அல்ல. ஆங்கிலம். காஷ்மீர் மாநிலத்தின் மாநில மொழி காஷ்மீரி அல்ல. உருது.

வடகிழக்கு மாநிலத்தின் பெரும்பாலான மாநிலங்களின் முதன்மை மொழி ஆங்கிலம். அது மட்டுமல்ல ஆங்கிலக்கல்வி மட்டுமே அங்கிருப்பவர்களுக்கு. சில வருடங்களுக்கு முன்பு பாப்டிஸ்டுகளின் நூறாண்டு கொண்டாட்டத்தில் பங்கு பெற நாகாலாந்து பிரதிநிதிகள் அமெரிக்கா வந்தார்கள். அங்கு கலாச்சார நிகழ்ச்சிகளின் போது அவர்கள் ஆங்கில பாப் பாடல்களைப்பாடினார்கள். அமெரிக்கர்கள் அவர்களை நாகா மொழிப்பாடல்களை பாடும் படி கேட்ட போது திரு திருவென விழித்தார்கள். நாகா மக்கள் தங்கள் மொழி நாடோடிப்பாடல்களை மட்டுமல்ல, தங்கள் மொழியில் பாடுவதையே மறந்து விட்டார்கள். அந்த அளவுக்கு அவர்களிடம் ஆங்கிலம் ஊறிப்போய் இருக்கிறது. அங்கிருக்கும் மக்களுக்கு 90% மக்களுக்கு படிப்பறிவும் இருக்கிறது. இருந்தும், ஏன் கம்ப்யூட்டர் வேலைகளில் அவர்களைப் பார்க்க முடியவில்லை ? ஏன் ஆங்கிலம் பேசும் நாடுகளில் அவர்கள் இரு கரம் நீட்டி வரவேற்கப் படவில்லை ? ஏன் ? ஆங்கிலம் அவர்களுக்கு வேலை வாய்ப்பைப் பெருக்கவில்லை. இத்தனைக்கும் அங்கிருக்கும் அனைவருமே மலைஜாதி மக்கள் இனத்தில் சேர்க்கப்பட்டு கல்லூரிகளிலும், வேலைகளிலும் முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

இப்போது தமிழ்நாட்டில் இருக்கும் முறை ஓரளவுக்கு வெற்றிகரமான முறை. குழந்தைகள் குறைந்தது பள்ளி இறுதி வரை தமிழில் அறிவியலையும், கணிதத்தையும் கற்றுக் கொள்கிறார்கள். தெருவிலும் வீட்டிலும் பேசப்படும் மொழியில் இவைகளை கற்பதன் மூலம் அடிப்படை அறிவு இவர்களுக்குத் தெளிவாக இருக்கிறது. இதனால் தமிழ்நாட்டிலிருந்து தமிழில் படித்து இன்று உலகெங்கும் பல உயர்ந்த பதவிகளில் இருப்பவர்களே இந்த முறையின் வெற்றிக்கு சாட்சி கூறுகிறார்கள். ஆங்கில வழிக் கல்வியில் ஆரம்பப் பள்ளி முதல் படித்தவர்களும் பலர் இன்று வெற்றிகரமாக இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் பெரும்பாலோர் வீட்டில், அவர்களின் பெற்றோரும் ஆங்கிலம் பேசினார்கள் என்பதை -முக்கியமாக அங்கிலோ இந்தியர்கள் – மறந்து விடுகிறோம். இதனால் இவர்கள் அறிவியலையும் கணிதத்தையும் புரிந்து கொள்ளக் கஷ்டப்படவில்லை.

இதே நேரம் இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். என்னுடைய பள்ளித்தோழர்களில் பெரும்பாலோர் அறிவியலிலும் கணிதத்திலும் புலிகளாக இருந்தாலும் ஆங்கிலத்தில் பள்ளி இறுதித் தேர்வில் தோற்று முன்னேற முடியாமல் போனவர்கள். இதற்குக் காரணம் சரியான ஆங்கில ஆசிரியர்கள் இல்லாததே தவிர அவர்களது அறிவின்மை காரணமல்ல. இப்போது இதே அரைகுறை ஆங்கில ஆசிரியர்கள் அறிவியலையும் கணிதத்தையும் சொல்லித்தரப் போகிறார்கள் என்று நினைத்தால் எதிர்காலத் தமிழர்கள் எந்த அளவுக்கு அறிஞர்களாக இருப்பார்கள் என்று இன்றே பயமாக இருக்கிறது.

கணித ஆசிரியரும் அறிவியல் ஆசிரியரும் சரியில்லை என்றால் குறைந்தது அந்தப் பாடப் புத்தகங்களைப் படித்தாலாவது நாங்கள் புரிந்து கொண்டோம். ஏனெனில் அந்தப் பாடப் புத்தகங்கள் தமிழில், எந்த மொழியில் நாங்கள் தெருக்களில் விளையாடினோமோ, எந்த மொழியில் எங்கள் பெற்றோர்களிடம் சண்டை போட்டோமோ அந்த மொழியில், எந்த மொழியில் காதலித்தோமோ அந்த மொழியில், எந்த மொழியில் பாடல்களைக் கேட்டோமோ அந்த மொழியில் இருந்தது. ஐந்தாம் வகுப்பு படிக்கும் தமிழ்ப்பையன், ஆசிரியர் சரியில்லை என்றால், ஆங்கில அறிவியல் புத்தகத்தை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும் ?

இதே காரணம் புரிந்து வைத்திருப்பதாலேயே பெரும்பாலான கான்வெண்ட் பள்ளிகளிலும் இத்தகைய ஆங்கில வழி ஆரம்பப் பள்ளிகளிலும் விளையாட்டு மைதானம் முதல் சிறுநீர் கழிப்பிடம் வரை எல்லோரும் ஆங்கிலத்திலேயே பேசவேண்டும் என்று கட்டளை போட்டிருக்கிறார்கள். தன் பிள்ளை படிக்கும் பள்ளியில் தமிழில் பேசினால் அபராதம் போடுவார்கள் என்பதைப் பெற்றோர்கள் மிகவும் பெருமையாக பேசிக்கொண்டிருக்கிறார்கள்.!

‘தமிழ் பாரம்பரியம் மிக்கது. தமிழ் சிறந்த வரலாற்றை கொண்டது. இப்போது தமிழர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஆங்கிலம் மட்டுமே சொல்லிக்கொடுத்தால், தமிழ் செத்துப்போய்விடாது ‘ என்று சொல்பவர்கள் நம்மிடையே இருக்கிறார்கள்.

சாதனைகள் புரிந்த பாரம்பரியம் கொண்ட, விண்ணளாவிய பிரமிடுகளையும் கட்டிய எகிப்தியர்கள் இன்று என்ன மொழி பேசுகிறார்கள் தெரியுமா ? பிரமிடுகளை அவர்கள் கட்டிய போது பேசிய மொழி இப்போது அழிந்து விட்டது. 1400 வருடங்களுக்கு முன் பிறந்த இஸ்லாமிய மதம் அங்கு பரவிய போது அராபிய மொழியும் ‘தேவ பாஷையாக ‘ப் பரப்பப் பட்டது. அவர்கள் பாரம்பரியம், பிரமிடுகள் கட்டிய பொறியியல் அறிவின் உன்னதத்தைக் கொண்டிருந்த மொழி, நுபியன் பண்பாட்டில் உச்சத்தைத் தொட உதவின மொழி இப்போது அழிந்து விட்டது. அதன் பெயர் என்ன வென்று கூடத் தெரியாமல், வெள்ளைக் கார அகழ்வாராய்ச்சியாளர்கள் இட்ட பெயரான ‘ஹீரோக்லிபிக்ஸ் ‘ என்பதே அதன் பெயராயிற்று. பிரமிடுகளில் எழுதப்பட்டிருக்கும் அவர்களது மொழியான ஹீரோகிலிபிக்ஸைப் படித்து பொருள் சொல்ல வெள்ளைக்காரர்கள் வந்து கஷ்டப்பட்டார்கள். அப்போதும் இப்போதும் அவர்களது அழிந்த மொழியான ஹீரோகிலிபிக்ஸை அறியவோ, அதை தக்கவைத்துக் கொள்ளவோ எகிப்தியர்கள் கஷ்டப்படவேயில்லை. இன்று அவர்களது பாரம்பரியமாக அராபிய பாரம்பரியத்தைப் பார்க்கிறார்கள். அவர்களது பாரம்பரியமாக அராபிய மொழியைப் பார்க்கிறார்கள். அவர்களது வரலாறாகக் கூட அராபிய வரலாற்றையே பார்க்கிறார்கள். மதம் ஒரு மொழியை அழிக்கக் கூடும் என்பது நாம் எகிப்து வரலாற்றிலிருந்து கண்கூடாகப் பார்க்கும் உண்மை. காஷ்மீரில் உருது முன்னுக்கு வந்து டோக்ரி, காஷ்மீரி மொழிகளை அழித்ததும் மதத்தை வளர்க்கும் மொழியாக உருது மொழியைப் பார்த்ததனால் தான்.

காலனியாதிக்கம் எப்படி ஒரு மொழியை அளிக்கக் கூடும் என்பதை ஃபிலிப்பைன்ஸ் நாட்டில் நடந்ததைக் கொண்டு பார்க்கலாம். ஃப்லிப்பைன்ஸ் மக்களின் பாரம்பரிய மொழிகள் அனைத்தும் இன்று கிட்டத் தட்ட அழிந்தே போயின.

ஒரு காலத்தில் வெள்ளைக்காரர்கள் தமிழ்நாட்டை ஆண்டபோது, வரலாற்றுப் பாடநூல்களில் ஆங்கிலநாட்டின் வரலாறே கற்றுத்தரப்பட்டது. இன்று தமிழ் மக்கள் தங்களை தாங்களே ஆண்டு கொள்ளும் காலத்திலும் அவர்களது அடிமைஉணர்வு போகவில்லை என்றே தோன்றுகிறது. இன்னும் ஒரு தமிழ்நாட்டுக் கிராமத்தில் இருக்கும் வங்கியில் தமிழில் விண்ணப்பப் படிவம் பெற இயலவில்லை. தமிழ்நாட்டு வங்கிகளில் ஆங்கிலேயர்களும் வட இந்தியர்களும்தான் பணம் வைத்திருக்கிறார்கள் போலிருக்கிறது. பொறியியல் கல்லூரிகளிலும், மருத்துவக் கல்லூரிகளிலும் ஆங்கிலம் கற்றுத்தரப்படுவது ஏனென்றால் அறிவியல் புத்தகங்கள் ஆங்கிலத்தில் தான் இருக்கின்றன என்ற வாதத்தை இன்னும், சுதந்திரம் பெற்று 50 ஆண்டுகள் கழித்தும், சொல்லிக்கொண்டிருக்கிறோம். ஹிந்தியில் கற்பிக்கிற மருத்துவக் கல்லூரிகளும் பொறியியல் கல்லூரிகளும் வட இந்தியாவில் இருக்கின்றன என்பதை ஆனந்தவிகடனும் ஹிண்டுவும் பேசுவதே இல்லை என்பதை நாம் இங்கே குறிப்பிட வேண்டும்.

தமிழ் நாட்டில் ஆறு கோடி மக்கள் இருக்கிறார்கள். பிரான்ஸின் மக்கள் தொகைக்கு சமம் இது. உலகத்தின் 18 ஆவது பெரிய மொழி தமிழ். உலகத்தில் அதிகம் பேசப்படும் மொழி ஆங்கிலம் அல்ல. சீன மொழி. அதிக நாடுகளில் பேசப்படும் மொழியும் ஆங்கிலம் அல்ல. ஸ்பானிய மொழி.

இன்று ஆங்கிலமொழி கற்கும் தமிழ்க் குழந்தை சேக்ஸ்பியர் படிக்குமா சிலப்பதிகாரம் படிக்குமா ? வரலாறு உணர்வற்ற ‘போலி ஆங்கிலேயர்களாக ‘ தமிழர்கள் எதிர்காலத்தில் உலவப்போவது என் கண்ணில் இன்றே தெரிகிறது.

தமிழையும் – மற்ற மொழிகளையும்- அழிக்க வேறு வேறு விதங்களில் முயற்சிகள் நடைபெற்ற வாறு தான் வந்துள்ளன. தமிழை ‘தேவ நாகரி ‘ எழுத்தைக் கொண்டு (இந்தி சமஸ்கிருதம் போன்ற மொழிகளின் எழுத்து இது) எழுதுவதனால் இந்திய ஒற்றுமைக்கு வழிகோலலாம் என்று இந்த நூற்றாண்டில் தான் பிரசாரம் செய்யப் பட்டது. மகாத்மா காந்தியும் கூட இதனை ஆதரித்தார். மகாகவி பாரதி கூட இதனை ஆதரித்தார். காங்கிரஸ் முன்னணியில் நின்று இந்தக் கோரிக்கையை ஆதரிக்கவும் செய்தது என்கிற வரலாறு கூட எல்லாருக்கும் மறந்து போய் விட்டது.

இருபது வருடம் முன்பு கூட தமிழில் இல்லாத எழுத்துக்களை ஆங்கிலத்திலிருந்து எடுத்து தமிழை நவீனப் படுத்தப் போகிறேனாக்கும் என்று ‘சோ ‘ போன்ற சில கோமாளிகள் ஆங்கில எழுத்தைக் கலந்து தமிழை எழுதினார்கள்.

தன் குழந்தைக்கு ஆங்கிலம் மட்டுமே சொல்லிக்கொடுக்க வேண்டும் தமிழ் சொல்லிக் கொடுக்கவே கூடாது என்று மெட்ரிக் பள்ளிகளிலும், CBSE என்ற மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளிலும் தமிழர்கள் அங்கு தங்கள் குழந்தைகளைச் சேர்க்க ஓடுகிறார்கள்.

காரணம் கேட்டால், தமிழ்ப் பள்ளிகளில் தரம் குறைவு என்று சொல்கிறார்கள். பத்துப் பேர் சேர்ந்து தரமான தமிழ்ப் பள்ளியை நடத்தக்கூடாது என்று யார் சொன்னது ? இன்று உயர் பதவியில் இருக்கிற எல்லோரும் ஆங்கிலப் பள்ளிகளில் படித்தவர்களா ?

இரண்டாவது காரணம் தமிழ்ப் பெற்றோர்களுக்குத் தங்கள் பிள்ளைகளை ஆங்கிலப்பள்ளிக்கு அனுப்ப அவர்களுக்கு உரிமை இருக்கிறது என்பது. உண்மைதான். சென்னையிலும் மற்ற இந்தியப் பெருநகரங்களிலும் பல தொழிற்சாலைகளில் சிறுவர்கள் வேலை செய்கிறார்கள். அந்த சிறுவர்களின் பெற்றோர்கள்தான் அந்த சிறுவர்களை தீப்பெட்டி தொழிற்சாலைக்கும், தோல் பதனிடும் தொழிலுக்கும், உணவு விடுதிகளிலும் வேலை செய்ய வைக்கிறார்கள். அவர்களுக்கு அதற்கான சுதந்திரம் இருக்கிறதா ? அப்படி சுதந்திரம் தருவது விரும்பத் தக்கதா ? தொழிற்கொள்கையில் ஓரம்சமாக சிறுவர்களை வேலைக்கு அனுப்புகிற சுதந்திரத்தை நாம் மறுக்கவே செய்கிறோம். குறைந்த பட்சம் தற்காலிகமாகவாவது அந்த சிறுவர்கள் தங்கள் குடும்பங்களின் வறுமையை ஓட்ட துணை செய்கிறார்கள். அந்த பெற்றோரும் அதை ஒரு குற்ற உணர்வோடே செய்கிறார்கள். இந்த ஆங்கில கல்வி மோகத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்கள், அறியாமல் புரியாமல் தவறு செய்கிறார்கள். இதற்கு காரணம் ஆங்கில கலாச்சார தாக்குதல் என்றால் மிகையல்ல.

வெள்ளைத் தோலுக்கு மயங்குகிற போக்கினை தமிழ் ஏடுகளிலும் , சினிமாவிலும் ஊட்டி ஊட்டி வளர்க்கிறார்கள். அதே போல்தான் ஆங்கில மோகமும். இந்த மாயைக்கு பலியாகிற பெற்றோர்கள் தான் மிக மிகப் பரிதாபமானவர்கள். தம் பிள்ளைகளுக்குத் தகுதியான கல்வியை அளிக்க வேண்டும் என்கிற அவர்களின் நியாயமான வேட்கையை வியாபாரிகள் தம் சொந்த லாபத்துக்காகப் பெரிதும் பெற்றோர்களின் பணத்தைக் கொள்ளயடிக்கிறார்கள். இந்த லாப வேட்டைக்கு நமது கல்விக் கொள்கை காரணமாகி விடக்கூடாது.

தமிழ் திரைப்படங்களில் படித்தவர்கள் ( முக்கியமாக மேஜர் சுந்தரராஜன்- கே பாலசந்தர் – கிரேஸி மோகன் வகையறாக்கள்) ஆங்கிலத்தில் பேசி தமிழில் மொழிபெயர்க்கிறார்கள். இது இப்போதும் நடக்கிறது. தமிழ்ப் பத்திரிக்கைகளில் வரும் சிறுகதைகளிலும் தொடர்கதைகளிலும், படித்தவர்கள் பட்லர் ஆங்கிலம் பேசுகிறார்கள். ஆனந்த விகடன் மற்றும் பல பத்திரிகைகளில் திரைப்பட விமர்சனம் கூட ஆங்கில வார்த்தைகள் போட்டுக் கலப்படத் தமிழாக எழுதப்படுகிறது. துக்ளக் போன்ற ‘அறிவுஜீவி ‘ பத்திரிக்கைகளில் ரிக்ஷாக்காரன் தமிழில் மருத்துவம் படித்த டாக்டரிடம் ஆங்கில மருத்துவ வார்த்தைகளைச் சொல்லிக் கேலி செய்கிறான். ஆங்கிலம் தெரியாமல் இருப்பது ஏதோ பெரும் குறைபாடு என்பதாக ஒரு நச்சுப் பிரமையை இந்தப் போக்குகள் மக்களிடம் தொடர்ந்து பரப்பிக் கொண்டேயிருக்கின்றன.

சில பல ஆங்கில வார்த்தைகளை தமிழில் ஏற்றுக் கொள்வது தவறில்லை. அதற்கு தமிழில் ‘திசைச்சொற்கள் ‘ என்ற இலக்கணம் கூட இருக்கிறது. நல்ல ஆங்கிலம் கற்பிக்கப் பட வேண்டும். ஆங்கிலம் உலகுக்கு ஒரு சாளரம். ஆனால் தமிழில் எதையும் கற்கக் கூடாது என்னும் போதுதான் தமிழர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது.

மேலும் தமிழக அரசின் அரசாணை தவறானது. ஏன் மெட்ரிக் பள்ளிகளுக்கும் CBSE பள்ளிகளுக்கும் விதி விலக்கு அளிக்கப்படவேண்டும் ? அப்படி அளிக்கப்பட்டால், அத்தகைய பள்ளிகள் எதற்காக உருவாக்கப்பட்டனவோ அதற்காகவே அவை பயன் படுத்தப்படவேண்டும். அதாவது மத்திய அரசு ஊழியத்தில் இருப்பவர்கள் பிள்ளைகள் மட்டுமே அந்தப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட வேண்டும்.

மொழிச் சிறுபான்மையினர் தங்கள் மொழியில் பாடம் சொல்லித்தர உரிமை உண்டு. (ஆங்கிலத்தில் அல்ல – தெலுங்கு கன்னடம் போன்ற மொழிகளில். ) ஆனால் ஏன் மதச் சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளுக்கு இந்த அரசாணையில் விலக்கு அளிக்கப்பட வேண்டும் ? தமிழகக் கிறிஸ்தவர்களின் மொழி ஆங்கிலமா என்ன ? தமிழக முஸ்லீம்களும், தமிழக கிறிஸ்தவர்களும் தமிழர்கள்தானே ? இவ்வாறு விதி விலக்குகளை அளிப்பது இன்னும் பாரபட்சத்துக்கும், தகுதி வேறுபாடுகளுக்கும் வழி வகுக்கும்.

அதற்காக ஆங்கிலம் சொல்லித்தருவதை நிறுத்தச் சொல்லவில்லை நான். ஆங்கில பாடபுத்தகங்கள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே இருக்கின்றன. ஒரு சரியான ஆசிரியர் இல்லை எனில் தானாக ஆங்கிலம் கற்றுக் கொள்வது கடினமாக இன்று இருக்கின்றது. முதல் வகுப்பு முதல் பள்ளி இறுதி வரை ஆங்கில பாட புத்தகங்கள், ‘தமிழ் மூலம் ஆங்கிலம் கற்றுக் கொள்ளுங்கள் ‘ புத்தகங்கள் போல மாறவேண்டும். இன்னும், சரியான ஆங்கில உச்சரிப்பு கற்றுக் கொள்ள ஒலி நாடாக்கள் வழங்கப்படவேண்டும். இதன் மூலம் சுயமாக கற்றுக் கொள்ளும் மாணாக்கர்களுக்கு ஆங்கிலம் கற்றுக் கொள்வது எளிதாகும்.

சமீபத்தில் ஹிண்டு இதழில் வெளிவந்த பெரும்பாலான வாசகர் கடிதங்கள் திமுக அமைச்சர்களின் பிள்ளைகளைப் பற்றியது. நல்ல கேள்விதான். இது திமுக அமைச்சர்களை எந்த விதமான அறிவிப்புக்கும் தூண்டவில்லை என்பது கேவலமானது. அவர்கள் தங்கள் பிள்ளைகள் தமிழ் சொல்லிக்கொடுக்கும் பள்ளிகளில்தான் படிக்கிறார்கள் என்று அறிவிப்பு செய்திருக்கவேண்டும். அப்படிச் செய்யாதது அவர்கள் தங்கள் பிள்ளைகளை ஆங்கிலக் கல்வி பெற அனுப்புகிறார்கள் என்ற குற்றச்சாட்டில் பொருள் இருப்பதாக ஆக்குகிறது. அமைச்சர்கள் சொத்துக் கணக்குக் கொடுப்பது போலவே (கொடுக்கிறார்களா ?) பிள்ளைகள் எந்தப் பள்ளியில் படிக்கிறார்கள் என்பதையும் அறிவிக்க வேண்டும்.

ஆனால் இந்த திமுக பாமக மதிமுக போன்ற திராவிட வியாபாரிகளும் அதிமுக காங்கிரஸ் போன்ற பிணத்தைக் காட்டி ஓட்டு கேட்கும் அரசியல் வியாபாரிகளும் பி ஜே பி போன்ற மதத்தேசீயவாதிகளும் அவர்களது பிள்ளைகளை ஆங்கிலக்கல்வி படிக்கவைக்கிறார்கள் என்பது உண்மையாகவே இருக்கலாம். இந்த பெரும் தலைவர்களின் பிள்ளைகள் ஆங்கிலக்கல்வி மட்டுமல்ல, படிக்காத படு முட்டாளாக இருந்தால்கூட அரசியல் தொடர்புகள் மூலம் பெரிய கம்பெனிகளின் சேர்மன்கள் என்று ஆகமுடியும். அடிப்படைத் தகுதி கூட இல்லாமல் இந்தியன் ஏர்லைன்ஸ் பைலட்டாக ஆகமுடியும். புலியைப் பார்த்து பூனைகள் சூடு போட்டுக் கொள்வது போல, நாம் நம் குழந்தைகளை அரைகுறை ஆங்கிலம் பேசும், அடிப்படை அறிவியலறிவு, கணித அறிவு அற்றவர்களாக வளர்த்து, நமது குழந்தைகள் எதிர்காலத்தையும் நமது கலாச்சாரத்தையும், மொழியின் வளமையையும் காவு கொடுக்கப் போகின்றோமா என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.

Thinnai 1999 December 17

திண்ணை

Series Navigation

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்