மெய்மையின் மயக்கம்-24

This entry is part [part not set] of 55 in the series 20041104_Issue

சோதிப் பிரகாசம்


(சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் (26-02-2004) குறித்து…)

விஷ்ணு புரம்

விண்ணவக் கடவுளை மையமாகக் கொண்டு ஜெய மோகன் எழுதி இருக்கின்ற ஒரு கதைதான் விஷ்ணு புரம்!

மதத்தை மையமாகக் கொண்ட ஒரு வணிக நகரமாக இது வளர்ச்சி அடைந்து கொண்டு வருகிறது.

எல்லா மதங்களின் வழி பாட்டுத் தலங்களுக்கும் உரிய நல்லது-கெட்டதுகள் எல்லாம் இதற்கும் உண்டு. எப் பொழுதும் பர பரப்பாக இயங்குகின்ற ஒரு நகரம் இது!

இந்த நகரத்துக்கு ஏற்ற மொழிபில் இந்தக் கதையினை ஜெய மோகன் எழுதி இருக்கிறார். ஆனால், அவ் வப்போது வருகின்ற ஒரு சில சித்தரிப்புகள்தாம் கொஞ்சம் சலிப்பு ஊட்டத் தொடங்கி விடுகின்றன—-எடுத்துக் காட்டாக, விளக்குச் சுடரின் அசைவுகளை அவர் சித்தரித்து இருக்கின்ற காட்சிகளின் நீட்சி!

யானைகள், குதிரைகள், ஆடை-அணிகலன்கள், ஆகியவை பற்றிய இவரது சித்தரிப்புகள் நமக்கு வியப்பை அளிக்கின்றன. நன்றாக உழைத்துதான் இந்தக் கதையை அவர் எழுதி இருக்கிறார் என்பதற்கு இவை எல்லாம் எடுத்துக் காட்டுகள் எனலாம்.

மன்னர்கள், மன்னர்களுக்கு வருகின்ற நோய்கள், அவர்களைச் சுற்றி நிற்கின்ற கூத்திகள், அதாவது, நடனக் காரிகள், என மன்னர் ஆட்சிக் காலத்தினை மிகவும் நன்றாகக் கிண்டல் அடித்து இருக்கிறார் ஜெய மோகன்! மன்னர் தருகின்ற மானியத்தில்தான் கோயில் அதிகாரிகள், ஊழியர்கள், முதலியோரின் வாழ்வும் வளமும் அடங்கிக் கிடக்கின்றன. இந்தக் கோயிலைக் கைப் பற்றுவதற்குப் புத்த மதக் காரர்கள் முயன்று கொண்டு வந்ததில் வியப்பு எதுவும் இல்லை.

முத்தியைத் தேடி அலைந்து கொண்டு இருக்கின்ற புத்தத் துறவிகள் தங்கள் முத்தியை மறந்து விட்டுப் பணக் கணக்குகளில் ஈடு படுகின்ற மெய்மையினை நன்றாகச் சுட்டிக் காட்டி இருக்கிறார் ஜெய மோகன்! இது மட்டுமா, இறைவனுடன் ஒன்றி விடுவதற்குப் பத்தர்களுக்கு வழி காட்டுகின்ற பரமணர்கள், தங்கள் உணவு வகைகளுடன் ஒன்றி விடுவதை இவர் சித்தரித்து இருக்கின்ற மொழிபு நம்மைச் சிரிக்க வைக்கிறது.

கவிஞர்கள், மெய்ப் பொருண்மை யாளர்கள், பாடகர்கள், நடனக் காரர்கள், சித்தர்கள், குழுவர்கள், மாணவர்கள், துறவிகள், சிற்பிகள், கட்டடக் கலைஞர்கள், தச்சர்கள், மருத்துவர்கள், யானை-குதிரை வல்லுனர்கள், போர் வீரர்கள், மலை வாழ் மக்கள், என எல்லோரையும் விஷ்ணு புரம் வரவேற்கிறது. மதத்தில் உயிர்த்து மதத்தில் வாழ்கின்ற ஒரு நகரம் இது! ஏனென்றால், மதம்தான் அதன் தொழில்!

விஷ்ணு புரத்தின் கதை இதில் பல முறை சொல்லப் படுகிறது; ஒவ்வொரு முறை சொல்லப் படும் பொழுதும் நறுமையான உயிர்ப்புடன் புதிய வடிவங்களையும் அது பெறுகிறது.

விஷ்ணு புரத்திற்குள் நாம் நுழைந்து விட்டால் போதும், நமது வாழ்க்கையை அங்கே நாம் வாழ்ந்து விட முடியாது; விஷ்ணு புரத்தின் வாழ்க்கையைத்தான் நாம் வாழ்ந்து கொண்டு ஆக வேண்டும்.

அழிக்கப் படுவதற்காகவே கட்டப் பட்ட ஒரு நகரம்தான் விஷ்ணு புரம்! ஏனென்றால், தமது படுக்கையில் விண்ணவர் புரண்டு படுகின்ற பொழுது விஷ்ணு புரம் அழிந்து விடும் என்னும் நம்பிக்கையுடன் அது கட்டப் படுகிறது. இதனால்தான், மீண்டும் மீண்டும் சொல்லத் தகுந்த ஒரு நுதல் பொருளாகவும் அது மாறி விடுகிறது.

விஷ்ணு புரத்தில்—-கவிஞர்கள் தோன்றுகிறார்கள்; எழுகிறார்கள்; வீழ்ந்தும் விடுகிறார்கள்! கோயில் மண்டபத்தில் தத்துவங்கள் விவாதிக்கப் படுகின்றன; வெறும் தந்திரங்களினால் மட்டும் அவற்றின் எழுச்சியும் வீழ்ச்சியும் தீர்மானிக்கப் பட்டும் விடுகின்றன!

தமிழ் நாட்டிற்குள் முகலாயர்கள் நுழைகின்ற சமயம் பார்த்து, விண்ணவர் புரண்டு படுக்கிறார்; அடை மழை பொழியத் தொடங்குகிறது. அம்மணத் தெய்வமான நீலி வெறி கொண்டு எழுகிறாள்; பெரு வெள்ளத்துடன் இயற்கை சீறுகிறது; சூறா வளி வீசிச் சுழல்கிறது!

இப்படி, நீலியின் ஆதரவாளர்களான தீவிர வாதிகளின் நடவடிக்கைகளுக்கு வாய்ப்பு எதுவும் இல்லாமலேயே விஷ்ணு புரம் அழிந்து விடுகிறது.

நிழலின் குரல்

வரலாற்றின் முரண் இயக்கம்: பாகம் ஒன்றில் ஏற்கனவே ‘பின் தொடரும் நிழலின் குரல் ‘ அலசப் பட்டு இருக்கிறது. எனவே, அதிகமாக இது பற்றி ஈண்டு நாம் விவாதித்திடத் தேவை இல்லை.

மார்க்சியத்தைச் சாடுவதாகக் கற்பனை செய்து கொண்டு ஸ்தாலினிசத்தை இதில் ஜெய மோகன் சாடி இருக்கிறார். எனினும், ஸ்தாலினிசத்திற்கு எதிரான ஒரு கதை என்று இதனை நாம் எடுத்துக் கொண்டால், சிறந்தது ஒரு கதை என்றுதான் இதனை நாம் குறிப்பிட வேண்டும்.

விஷ்ணு புரத்தைப் போலவே இந்தக் கதையிலும் விவாதங்கள் பல உண்டு. ஆனால், இந்த விவாதங்கள் இல்லாமல் ஸ்தாலினிசத்தைப் புரிந்து கொள்வது முடியாதது என்பதால், இந்தக் கதைக்குத் தேவையான விவாதங்கள்தாம் என்று அவற்றை நாம் எடுத்துக் கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை.

விஷ்ணு புரத்தின் கதையை விட இந்தக் கதையில் போதை அதிகம்! இப்படி, உச்சமான ஒரு போதையினைத் தருகின்ற காரணத்தினால்தான் உச்சமான ஒரு கதையாகவும் நமக்கு இது தெரிகிறது. இதன் மொழிபின் சிறப்பினை யாரும் மறுத்து விட முடியாது—-ஜெய மோகனின் எதிரிகள் உட்பட!

ஸ்தாலினிசத்தை மார்க்சியமாகக் கருதிக் கொண்டு, மார்க்சியத்தை வசை பாடிக் கொண்டு வந்து இருப்பவர்களுக்கு உலகு எங்கும் எந்தப் பஞ்சமும் இல்லை. ஆனால், மார்க்சியத்தைப் புரிந்து கொள்வதற்கு முயன்றிடாமல், அதன் மீது வசைகளை இவர்கள் பொழிந்து கொண்டு வந்து இருக்கிறார்கள் என்கின்ற வகையில், இவர்களது அறிவாண்மை நாணயம் ஒரு கேள்விக் குறி ஆகி விடுகிறது என்பதுதான் இங்கே முக்கியம். மற்ற படி, ஸ்தாலினிசத்திற்கு எதிரான—-அரசு-முதலாண்மையின் அடக்கு முறைகளுக்கு எதிரான —-ஒரு கொந்தளிப்புதான் அதருக்கம் முதலான சிற்றுடைமைச் சிந்தனைகள் ஆகும்.

மேம்போக்கான இந்த அதருக்கச் சிந்தனைகளைக் கையாண்டுதான் இந்தக் கதையினை ஜெய மோகன் புனைந்து இருக்கிறார் என்பதில் ஐயம் இல்லை. அதே நேரத்தில், மேம்போக்கான ஒரு ‘சிந்திப்பு ‘ என்பதுதான் நமக்குக் கதைகளும் கவிதைகளும் தந்திடக் கூடிய ஒரு பயன் என்பதால், கதை-கவிஞர்களின் மேம்போக்குப் பற்றி ஈண்டு நாம் பேசுவதில் எந்தப் பயனும் இல்லை. எனினும், கதை-கவிதைகளின் அறிவுப் பயன் பற்றி ஜெய மோகன் போன்றவர்கள் பேசுகின்ற பொழுதுதான் சிக்கல் ஏற்பட்டு விடுகிறது.

சிவகாமியும் ஜெய மோகனும்

ஜெய மோகனது மொழிபின் சிறப்பிற்கு அவர் எடுத்துக் கொண்டு இருக்கின்ற நுதல் பொருள்தான் அடிப்படையான காரணம் என்பது உண்மைதான். ஆனால், இப்படி ஒரு நுதல் பொருளினை அவர் தேர்வு செய்து கொண்டு இருக்கிறார் என்கின்ற வகையில், சிறப்பான கவனத்துக்கு உரியவராக அவர் தெரிகிறார்.

தாமாக எதையும் தேர்ந்து எடுத்துக் கொள்வது என்பது வேறு; வாய்ப்பாக வந்து அது வாய்த்து விடுவது என்பது வேறுதான் என்ற போதிலும், ‘பழையன கழிதலும் ‘ கதையிலும் இப்படி ஒரு வாய்ப்பு சிவகாமிக்குக் கிடைத்துதான் இருந்தது. எனினும், திறமையாக இந்த வாய்ப்பினை சிவகாமி பயன் படுத்திக் கொள்ளாததற்கு, தமது மொழிபில் அவர் காட்டி இருக்கின்ற அவசரம்தான் காரணம் எனல் வேண்டும்.

காத்த முத்துவைச் சித்தரித்து இருக்கின்ற அளவுக்குக் கவுரியின் உணர்ச்சிகளையும் கொந்தளிப்புகளையும் சிவகாமி சித்தரித்திட வில்லை என்பது ‘பழையன கழிதலும் ‘ கதையின் ஒரு குறைபாடுதான் என்பதில் ஐயம் இல்லை.

ஏனென்றால், சாதி இழிவுகள் கொடுமை ஆனவை என்பதைக் கவுரி உணர்கிறாள். சாதிப் பெருமை என்பது போலிப் பெருமை என்பதும் அவளுக்குத் தெரிகிறது. தலித் தலைவர்களின் அடாவடித் தனம் மட்டும் இன்றி, சூத்திரத் தலைவர்களின் வன்முறை வெறியும் அவளுக்குத் தெரிந்து இருக்கின்றன.

இப்படி, போலித் தனமான சாதிப் பெருமைகள் ஒரு புறம்; மனித நேயமான மாண்பின் எழுச்சி மறு புறம்; என்கின்ற இந்தச் சூழ் நிலையின் மிருகத் தனத்தை—-காட்டு மிராண்டித் தனமான பான்மையை—-இவற்றினால் பாதிக்கப் படுகின்ற உழைப்பாளி மக்களின் கொந்தளிப்புகளை—-அவர்கள் சந்தித்துக் கொண்டு வந்து இருக்கின்ற அவமானங்களை—-உணர்ச்சிப் பிழம்புகளாகச் சிவகாமி சித்தரித்து இருந்து இருந்தால், புனைவின் உச்சத்தினைப் ‘பழையன கழிதலும் ‘ கதையும் எட்டிப் பிடித்து விட்டு இருந்து இருக்கும்.

ஆனால் சிவகாமியோ, தமக்குக் கிடைத்து இருந்த வாய்ப்பினையும் நழுவ விட்டு விட்டார் என்றால் அது பிழை ஆகாது. அதே நேரத்தில், அவர் பயன் படுத்திடாத வாய்ப்புகளைப் பற்றி நாம் குறிப்பிடுவது விள்ளனமும் ஆகாது; விளக்கமும் ஆகாது!

எனினும், விழி பா. இதய வேந்தன், அழகிய பெரியவன், போன்றவர்களின் எழுத்துகளில் இந்தக் கொந்தளிப்புத் தென் படுகிறது. வரலாற்று வளர்ச்சியின் ஒரு முன்னேற்றம் இது எனலாம்.

இனி, காடு கதைக்கு நாம் வருவோம்.

காடு

விஷ்ணு புரம் மற்றும் நிழலின் குரல் கதைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்திடக் கூடிய ஒரு கதையாகக் காடு கதை இல்லை. இதன் போதைப் பயனின் குறைவுதான் இதற்குக் காரணமும் ஆகும்.

சங்கப் பாடல்களைக் காடு கதையில் ஜெய மோகன் மேற்கோள் காட்டி இருப்பது, அந்தக் கதையின் ஓட்டத்திற்கு ஓர் இடையூறாக அமைந்து விடுகிறது என்று ‘காலச் சுவடு ‘ இதழில் அரவிந்தன் எழுதி இருப்பதற்கும் இதுதான் காரணம் எனல் வேண்டும்.

அதே நேரத்தில், சங்கப் பாடல்களையும் கபிலரின் பெயரையும் இதில் குறிப்பிட்டு இருக்கின்ற ஜெய மோகன், கார்ல் மார்க்சின் பெயரை மட்டும் இதில் குறிப்பிடாதது ஏன் ? என்பதுதான் நமக்குப் புரிய வில்லை. ஏனென்றால், ‘மெய்மையின் ஆய்வு என்பது இரு-தலைக் காமத்தைத் துய்ப்பதைப் போன்றது; தத்துவம் என்பதோ ஒரு-தலைக் காமத்தைத் துய்ப்பது போன்றது ‘ என்று ‘ஜெர்மன் கோட்பாட்டில் ‘ கார்ல் மார்க்ஸ் கூறுகின்ற அதே கருத்தினைத்தான் வனத் துறை அதிகாரியாக வருகின்ற அய்யரும் கூறுகிறார்; ஜெய மோகனுக்கும் இது தெரியும்!

எப்படியும், சில செய்திகளைச் சொல்லாமல் இருப்பதுதான் நல்லது என்று ஜெய மோகன் கருதியதால்தானோ என்னவோ, முன்னுரை என்று எதுவும் இல்லாமல் இந்தக் கதை வெளியிடப் பட்டு இருக்கிறது.

சாதி அடையாளங்களின் கபடங்களும் இழிவுகளும் மிகவும் கடுமையாக இதில் சாடப் பட்டு இருக்கின்றன என்பதுதான் இந்தக் கதையின் சிறப்பு எனல் வேண்டும். இதன் தமிழ் மொழிபும் சிறப்பானதுதான்!

இந்த மூன்று கதைகளிலும் செயல் பட்டு இருக்கின்ற சிற்றுடைமைச் சிந்தனைகளை இனி நாம் பார்ப்போம்.

அதருக்கமும் தருக்கமும்

திறமையான ஒரு சிற்பியின் எந்திரத் தொழில் நுட்பங்களுடன் கட்டப் பட்டு இருக்கின்ற ஒரு கோயில்தான் விஷ்ணு புரத்தின் கோயில். எனவே, தருக்கத்தால் கட்டப் பட்டு இருக்கின்ற ஒரு கோயில் இது! ஜெய மோகனின் கணினி கூட தருக்கத்தால் ஆனதுதான் என்பது வேறு விசயம்!

விவாத மண்டபத்தின் சுவரில் ஒரு சிலையாக அமர்ந்து இருக்கின்ற ஒரு பறவை, திறமையான வாதங்களை அது தீர்மானித்தவுடன், திடும் எனப் பறந்து வந்து வெற்றிப் பலகையில் அமர்ந்து விடுகிறது. விளைவாக, அவ் வாதங்களை நிகழ்த்திக் கொண்டு இருந்த தத்துவக் காரர், எதிர் வாதங்களைத் தோற்கடித்து விட்டதாகச் சிந்தனையாளர்களின் அவையும் முடிவு செய்து விடுகிறது.

இது தந்திரம் இல்லையா ? எனினும், தருக்கத்தின் தந்திரம் இது, அதாவது, சிற்பத் தொழில் நுட்பத்தின் தந்திரம்!

ஏனென்றால், ஒரு விசையினை அவைத் தலைவர் அழுத்தியவுடன், சிறகு விரித்துக் கீழ் இறங்கி வந்து வெற்றிப் பலகையில் பறவைச் சிலை அமர்ந்து விடுவது மாதிரி அந்த மண்டபம் வடிவமைக்கப் பட்டு இருக்கிறது. ஆக, விவாதங்களின் வெற்றியினைத் தீர்மானிப்பது பறவையின் சிலை அல்ல, மாறாக, அவைத் தலைவர்!

ஆனால், அவரோ ஒரு வேதாந்தி! எனவே, வேதாந்தத் தருக்கத்தின் தந்திரம் இது எனலாம்.

எங்கோ ஒரு மண்டபத்தின் கதவை ஒருவர் திறக்க, அதன் வழியாக வீசி அடிக்கின்ற காற்று இன்னொரு மண்டபத்தைத் தாக்க, இப்படிப் பல சுவர்களில் இருந்து எதிர் விசையுடன் புறப் படுகின்ற காற்று, இசை மண்டபத்தின் தூண்களையும் சிலைகளையும் தாக்க, இனிமையான ஓர் இசைக் கோலத்தில் இசை மண்டபம் மூழ்கி விடுகிறது; வானத்தில் இருந்து இறங்கி வந்து கின்னரர்கள்தாம் இசை எழுப்புகிறார்கள் என்று பத்தர்கள் உறைந்து போயும் விடுகிறார்கள். தருக்கத்தின் மற்றும் ஒரு தந்திரம் இது!

ஆனால், இன்னமும் மனிதன் புரிந்து கொண்டு இராத இயற்கையின் சில புதிர்களோ அதருக்கம் ஆனவை. நமது அறியாமையின் இந்த அதருக்கத்தை இயற்கையின் அதருக்கமாக ஜெய மோகன் மாற்றி விடுகிறார்; புயலையும் மழையையும் கதையில் கிளப்பி விட்டு விடுகிறார்.

இறுதியில், விஷ்ணு புரம் அழிந்து படுகிறது; தருக்கத்தின் மீதான அதருக்கத்தின் வெற்றியும் நிலை நாட்டப் பட்டு விடுகிறது.

நிழலின் குரலினைப் பொறுத்த வரை, ஸ்தாலினிசம்தான் தருக்கம்; மா மன்னன் பீட்டரின் காலத்தில் இருந்து ருஷ்யாவில் நீடித்துக் கொண்டு வந்து இருந்த ஒரு தருக்கம்! இந்தத் தருக்கத்தின் வெளிப்பாடுகள்தாம் அரசின் அடக்கு முறைகள்!

தருக்கத்தின் இந்த வன்முறையினை ஏசுவின் அன்பினால் ஜெய மோகன் வெற்றி கொள்கிறார். ஏனென்றால், அவரைப் பொறுத்த வரை, அன்பு என்பது அதருக்கமானது!

‘பாவங்களுக்குத் தண்டனைகள்தாம் தீர்வு என்றால், இந்த உலகத்தையே நான் அழித்து விட வேண்டியது வரும்; உங்கள் பாவங்களைக் கழுவி இதயங்களை இலகுவாக்கிக் கொள்ளுங்கள்! ‘ என்று ஏசு கூறுகின்ற ஓர் அன்பு இது!

ஆம், அன்பு! எவ் வளவு இனிமையான ஓர் அனுபவம்! ஆனால், நேரடியான உறவுகளுக்கு அப்பால் இந்த அன்பு விரிவது இல்லையே ஏன் ?

பெற்றால்தான் பிள்ளையா ? என்று கேட்கின்ற இந்த அன்பு வெள்ளம், சொந்தப் பிள்ளைகளைத் தவிர மற்ற பிள்ளைகளை நோக்கிப் பாய்வதற்கு மறுத்து விடுகிறதே, எப்படி ?

மூளை நோகாத ஞானத்தைத் தேடி திரிபவர்களுக்கு—-அவர்களது தேடல்களுக்குள்—-இந்த உண்மைகள் தட்டுப் படாமல் போய் விடுவதில் வியப்பு எதுவும் இல்லை. மன்னர் காலத்துப் பண்ணையச் சமுதாயத்தின்—-ஆண்டான்-அடிமைச் சமுதாயத்தின்—-வன்முறைக்கும் ஸ்தாலினிசத்து அரசு-முதலாண்மையின் வன்முறைக்கும் இடையே உள்ள வேறுபாடுகளைப் புரிந்து கொள்வதற்கு முயன்றிடாத ஒரு மூளைச் சோம்பலின் விளைவு என்று இல்லாமல் வேறு எப்படி இதனை நாம் எடுத்துக் கொள்வது ?

எப்படியும், கதைகளிலாவது தருக்கம் வீழ்த்தப் பட்டு விடுகிறது—-மனிதர்களுக்கு மீட்பினை நல்குவதற்கு என்று புறப் பட்டு வந்து இருக்கின்ற ஓர் ஏசுவாகத் தம்மைக் கோவை ஞானி கருதிக் கொண்டு இருப்பதைப் போல!

புரட்சி-போராட்டம் போன்ற நேரடியான நடவடிக்கைகள் ஏதும் இன்றி, தலித் பாமரர்களுக்கு மீட்பினை நல்குவதற்கு முனைந்து கொண்டு வந்து இருக்கின்ற தலித் மீட்பர்களும்தாம் நாட்டில் இல்லையா, என்ன!

ஆனால், மீட்பினை வழங்குபவர்கள் சும்மாய் அதனை வழங்கி விடுவது இல்லை. ஏனென்றால், தங்களால் மீட்கப் படுகின்ற பாவப் பட்ட பிறவிகள், தங்களை வணங்கி வழி பட்டுக் கொண்டு வந்திட வேண்டும் என்னும் நிவந்தனை அதனுள் ஒளிந்து கிடக்கிறது!

பொதுவும் தனியும்

கட்டிலில் விஷ்ணு படுத்து இருப்பது போன்ற ஒரு சிற்பம் விஷ்ணு புரத்தில் செதுக்கப் பட்டு இருக்கிறது. கோயிலுக்குள் இந்தச் சிற்பம் செதுக்கப் பட்டு இருக்கிறதா ? அல்லது, இந்தச் சிற்பத்தைச் சுற்றி கோயில் கட்டப் பட்டு இருக்கிறதா ? என்று தீர்மானித்திட முடியாத அளவுக்குப் பல அறைகளை நிரப்பிக் கொண்டு விஷ்ணு படுத்து இருக்கின்ற ஒரு சிற்பம் இது!

இந்த விண்ணவரோ முழு முதலான ஒரு கடவுள்! எனினும், நீலி அம்மனின் குல மக்கள் இந்தச் சிலையின் கல்லுக்கு உரிமை கொண்டாடுகிறார்கள். தங்கள் அம்மனைச் சிறுமைப் படுத்தி விண்ணவன் பெருமைப் படுத்தப் பட்டு இருப்பதாகவும் அவர்கள் கருதுகிறார்கள்.

இங்கே, விண்ணவர்தாம் பொதுத் தெய்வம்—-ஒருமையான ஒரே தெய்வம்! நீலி அம்மனோ சிறு தெய்வம்—-பன்மையான பல தெய்வங்களுள் ஒன்று!

இந்தச் சித்தரிப்பில், பெருந் தெய்வமான விண்ணவனை அழித்துச் சிறு தெய்வமான நீலியை வெற்றி பெறச் செய்து விடுகிறார் ஜெய மோகன்!

ஆடு-மாடுகளைப் பலி கொடுத்து வணங்கப் படுகின்ற குலச் சமுதாயத்துச் சிறு தெய்வங்களின் ஆதரவாளரான ஜெய மோகனுக்கும் பழம் தெய்வங்களான—-என்றும் மாறாத—-சிறு தெய்வங்களின் ஆதரவாளரான சிவகாமிக்கும் இடையேதான் எவ் வளவு ஒற்றுமை! என்பது ஒரு புறம் இருக்க, சிறு தெய்வம் என்பது எப்படி ஒரு தனித் தெய்வம் ஆகிட முடியும் ? என்னும் கேள்வியும் இங்கே எழுகிறது.

அம்மன் என்னும் சொல்லில் வருகின்ற ‘அன் ‘ என்னும் விகுதியோ ஆண் பால் விகுதி! இந்த வகையில் பார்த்தால், ஆண் தன்மையும் பெண் தன்மையும் ஒரு-சேர அமைந்து விளங்குகின்ற சிவ பெருமானைப் போல, ஆண் தன்மையினையும் உள்ளடக்கி இருக்கின்ற ஒரு பெண் தெய்வம்தான் அம்மன் தெய்வம் ஆகும்.

அதே நேரத்தில், மனிதர்களைக் கெடுப்பதற்கு என்று சாத்தான்களும் அவர்களை நல் வழிப் படுத்துவதற்கு என்று தேவ தூதர்களும்—-ஒவ்வொரு பேயும் ஒவ்வொரு தேவ தூதருமாக—-ஒவ்வொரு மனிதனின் பக்கத்திலும் எப் பொழுதும் நின்று கொண்டு இருக்கிறார்கள் என்று ஜ்ஸாரதூஸ்த்ர மற்றும் கிறிஸ்தவ மதத்தினர் நம்பிக் கொண்டு வந்து இருப்பதைப் போல, ஆளுக்கு ஒரு தெய்வமாக அமைந்து இருக்கின்ற பல தெய்வங்கள் அல்ல அம்மன் தெய்வங்கள்!

ஏனென்றால், அம்மனும் ஒரு பொதுத் தெய்வம்தான்—-முழு முதல் தெய்வம்தான்—- ஆகும். ஏனென்றால், குலத்திற்கு என்று ஒரு தெய்வம் என்றோ அல்லது ஊருக்கு என்று ஒரு தெய்வம் என்றோதான் சிறு தெய்வங்கள் அமைந்து இருக்கின்றன.

முத்து மாரி அம்மன், முண்டகக் கண்ணி அம்மன், வேளாங் கண்ணி அம்மன், கோல விழி அம்மன், கரு மாரி அம்மன், என்று பல் வேறு பெயர்கள் அம்மனுக்கு இருப்பதால், அவர் ஒன்றும் சிறு தெய்வம் ஆகி விட மாட்டார்; ஏனென்றால், முழு முதல் ஆன ஒரு தாய்த் தெய்வம் அவர்!

ஓர் அம்மனைப் போலத்தான் சிலப்பதிகாரத்தில் கண்ணகி சித்தரிக்கப் பட்டு இருக்கிறாளாம்; கண்ணகியைக் குறிப்பிடுகின்ற கோவலனின் விளிகள் எல்லாம் அம்மனுக்கு உரிய விளிகளாகத்தாம் வடிக்கப் பட்டும் இருக்கின்றனவாம்; இதனால்தான், மாதவியை நோக்கிக் கோவலனின் பார்வை திரும்பி விடவும் செய்ததாம்! தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் கூறுகிறார்.

எப்படியும், கண்ணகியும் இங்கு ஓர் அம்மன்தானே!

கடவுளின் ஆயுதங்கள்

ஆயுதம் எதுவும் இல்லாத ஒரு கடவுள் ஏசு! தாக்குபவரைத் திருப்பித் தாக்கிட விரும்பாதவரும் கூட! எனவேதான், அன்பிற்கு எடுத்துக் காட்டாகக் கதைகளில் ஏசு சித்தரிக்கப் பட்டு வந்து இருக்கிறார்.

ஈரோப்பில் ஏராளமாக இம் மாதிரியான கதைகள் எழுதப் பட்டு வந்து இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஏசுவின் மாய்மையான அன்பினைச் சித்தரித்து இருக்கின்ற ஒரு கதையினை நானும் படித்து இருக்கிறேன். ஏன், :பென்ஹர் என்னும் ஆங்கிலத் திரைப் படத்தின் கதை கூட இந்த வகையைச் சேர்ந்ததுதான் ஆகும். எனினும், நிக்கோஸ் கஜ்ஸன்சாக்கிஸின் கதைகள் ஈண்டு குறிப்பிடத் தக்கவை!

இவரது கதைகளை ஜெய மோகன் படித்து இருக்கிறாரோ இல்லையோ, நிச்சயமாக அவற்றைப் பற்றி இவர் கேள்விப் பட்டு இருக்கிறார் என்பதில் ஐயம் இல்லை. ‘த நியு இந்தியன் எக்ஸ்பிரஸில் ‘ இவர் எழுதி இருந்த ஒரு கட்டுரையில் மட்டும் அல்ல, காடு கதையிலும் இதன் தாக்கம் நமக்குத் தெரிகிறது.

யாரிடம் இருந்தும் எதையும் கற்றுக் கொள்ளாமல் எல்லா வற்றையும் தாமாகத் தமக்குள் இருந்தே தாம் தெரிந்து வைத்துக் கொண்டு இருப்பதாக ஜெய மோகன் கருதுவார் என்றால், அதற்கு எதிரீடு எதுவும் நமக்கு இல்லை; நமக்குத் தேவையான விசயமும் அது இல்லை!

ஆனால், வேறு மாதிரியான ஏசுவை நிக்கோஸ் கஜ்ஸன்சாக்கிஸ் தேடிக் கொண்டு இருந்தது, ஜெய மோகன் குறிப்பிட்டு இருப்பது போல, ‘ஏசுவின் இறுதி நாட்டம் ‘ கதையில் அல்ல; மாறாக, ‘கிளைஞர் கொலை ‘ கதையில்!

மக்களின் அவலங்களையும் துன்பங்களையும் காணப் பொறுத்திடாத ஒரு குருவானவர், ஏசுவை நோக்கி மன்றாடுகிறார்—- ‘ஏசுவே, மீண்டும் நீர் வர வேண்டும்; ஆனால், ஒரு துப்பாக்கியுடன் வர வேண்டும் என்று! ‘

இப்படித்தான், காடு கதையில் குட்டப்பன் வாதிடுகிறான்—-தெய்வம் என்றால் ஒரு வீரம் வேண்டும்; கையில் ஓர் ஆயுதம் வேண்டும்; என்று! ஏசுவை இதனால் அவனுக்குப் பிடிக்காமலும் போய் விடுகிறது.

கையில் வேல் ஏந்திய முருகனும் சூலம் தாங்கிய சிவ பெருமானும் வீரர்களாகத் திகழ்வதற்கு அவர்களின் ஆயுதம்தான் காரணம் என்று ஜெய மோகனின் குட்டப்பன் கருதிக் கொண்டு இருக்கலாம்.

ஆனால், திரு வள்ளுவரைக் கேட்டால் அவர் கூறுவார்—- ‘அறத்திற்கே அன்பு சார்பு என்பர் அறியார்; மறத்திற்கும் அஃதே துணை ‘ என்று!

அறிவுப் பயன்

முன்னர் அறிந்திடாத எதையும் புனைவு இலக்கியங்களின் வழியாக நாம் அறிந்து கொள்வது இல்லையா ? என்னும் கேள்வி பொருத்தமான ஒரு கேள்விதான் என்பதில் ஐயம் இல்லை.

ஆனால், கதை-கவிதைகளின் வழியாக நாம் தெரிந்து கொள்ளுகின்ற செய்திகளோ அரை-குறை ஆனவை; தவறான புரிவுகளுக்கும் வழி வகுப்பவை! எடுத்துக் காட்டாக, மார்க்சியம் பற்றிய தவறான கருத்துகளைக் கிளப்பி விட்டு இருப்பவர்கள், ஸ்தாலினிஸ்ட்டுகள் மட்டும் அல்லர்; கதைஞர்களும் கதை விள்ளனர்களும் கூடத்தான்!

ஒன்றைப் பற்றித் தெரிந்து கொள்வது என்று முடிவு செய்து விட்டதன் பின்னர், கதைகளுக்குள் அதனைத் தேடிக் கொண்டு இருப்பதில் எந்தப் பொருளும் இல்லை—-மூளைச் சோம்பல் என்பதைத் தவிர! எடுத்துக் காட்டாக, மார்க்சைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், மார்க்சின் நூல்களைத்தாம் நாம் படித்திட வேண்டுமே ஒழியக் :கார்க்கியின் கதைகளை அல்ல!

ஆக, கதை-கவிதைகளினால் நமக்குக் கிடைத்திடக் கூடிய அறிவுப் பயன் ஏதும் இல்லை என்பதையும் கதை-கவிதைகளின் அழகியல் பற்றிப் பேசுவது அறியாமையின் அவலம் என்பதையும் கதை-கவிதைகளைப் பொறுத்த வரை, அவற்றின் சுவனம் பற்றிதான் நாம் பேசிட முடியும் என்பதையும், இது வரை நாம் விவாதித்து இருக்கிறோம்.

இனி, கதை-கவிதைகளின் சுவனம் பற்றி—- ‘புனைவுச் சுவனம் ‘ என்பதைப் பற்றி—-சற்று நாம் விவாதிப்போம்; கூடவே, கதை-கவிதைகள் பற்றிய எனது எண்ணங்களின் தோற்றம் பற்றியும் சற்றுப் பார்ப்போம்!

16-09-2004

(தொடரும்)

Series Navigation

சோதிப் பிரகாசம்

சோதிப் பிரகாசம்