மெய்மையின் மயக்கம்-13 (சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் [26-02-2004] குறித்து…)

This entry is part [part not set] of 42 in the series 20040819_Issue

சோதிப் பிரகாசம்


அரிஸ்ட்டாட்டில்

அழகு என்றால் என்ன ? என்பதைப் புரிந்து கொள்வதற்குக் கொஞ்சம் நாம் முயன்று பார்த்தோம்; ஓர் அளவுக்கேனும் அதன் அடிப்படைகளை நாம் புரிந்து கொண்டும் இருக்கிறோம். எனினும், அழகின் கருத்தமைவிற்குத் தேவையான அடிப்படைகளை இரண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வகுத்துக் கொண்டு இருந்தவர் அரிஸ்ட்டாட்டில் என்பதுதான் இங்கே முக்கியம்!

24 ஆண்டுகளுக்கு முன்னர் நான் படித்த அரிஸ்ட்டாட்டிலின் நூல்களுள் ஒன்று:

‘வாதுரைகள் ‘! ‘ரீட்டாறிக் ‘ என்று ஆங்கிலத்தில் இது குறிப்பிடப் பட்டு வருகிறது. இன்னும் ஒன்று: ‘பொயட்டிக்ஸ் ‘! கவிதை யாக்கம் என்றோ அல்லது காவியக் கலை என்றோ இதனைக் குறிப்பிடுவதை விட, நாடகக் கலை என்று இதனை நாம் குறிப்பிடுவதுதான் பொருத்தம்; இதனையும் விட, தொல் காப்பியர்தம் வகைப் பாட்டின் படி, ‘மெய்ப்பாட்டியல் ‘ என்று இதனை நாம் குறிப்பிடுவதோ மிகவும் பொருத்தம்.

இன்றைய கதை-கவிஞர்களையோ அவற்றின் திறனாய்வாளர்களையோ தொல் காப்பியரின் மெய்ப்பாட்டியல் கவர்ந்திடாமல் இருப்பதற்கு, இன்று வரை அதற்கு உரை எழுதிக் கொண்டு வந்து இருக்கின்ற உரையாசிரியர்கள்தாம் காரணமே ஒழிய, தொல் காப்பியர் அல்லர்! ஏனென்றால், தொல்காப்பியத்தை இவர்கள் புரிந்து கொள்ள வில்லை என்பதை நாம் புரிந்து கொண்டு விடக் கூடாது என்னும் எச்சரிக்கையுடன் அதற்கு விளக்கம் அளித்துக் கொண்டு வந்து இருப்பவர்கள் இவர்கள்!

தொல் காப்பியரின் மெய்ப்பாட்டியலில் நண்பர் ஜெய மோகன் போன்றவர்கள் கொஞ்சம் கருத்துச் செலுத்திப் பார்க்கலாம்; தமது காலத்து வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தொல் காப்பியர் காலத்து வாழ்க்கைக்கு விளக்கம் அளித்துக் கொண்டு வந்து இருக்கின்ற உரையாசிரியர்களின் பிடியில் இருந்து நாம் மீள்வதற்கு உதவியாகவும் அது இருக்கலாம். அரிஸ்ட்டாட்டிலுக்கு நாம் வருவோம்.

அழகு என்பதைப் பற்றிப் பின் வருமாறு அரிஸ்ட்டாட்டில் கூறுகிறார்:

‘அழகு என்பது பருமனையும் (சைஸ்) ஒழுங்கினையும் (ஆ[ர்]டர்) பொறுத்தது. எனவே, (1) மிகவும் சிறிய பொருள்களில் அதனை நாம் காண்பது முடியாது; ஏனென்றால், அதன் தனித் தன்மைகளை இமைப்பில் நாம் கண்டு விட முடியாது!

(2) மிகவும் பெரிய . . . பொருள்களிலும் அழகினை நாம் காண்பது முடியாது; ஏனென்றால், அதன் முழுமையையும் நாம் கண்டு விட முடியாது! நமது கண்களால் முழுமையாக நாம் காண முடிகின்ற பொருள்களில் மட்டும்தான் அழகினை நாம் காண முடியும். ‘

ஆக, அழகியல் என்பது காட்சியைப் பொறுத்தது என்பது தெளிவு. ஆனால், கதை-கவிதைகளின் சுவனிப்பு என்பதோ உணர்ச்சிகளையும் உணர்மங்களையும் (சென்றிமென்ட்) பொறுத்தது. எனவே, அழகியலுக்கும் கதை-கவிதைகளுக்கும் இடையே எந்த ஒரு தொடர்பும் இருந்திடவே முடியாது என்பது உறுதி.

அப்படி என்றால், கோவை ஞானி கூறுகின்ற ‘அழகியல் ‘ என்பது என்ன ?

கோவை ஞானி

அழகியலைப் பற்றி ஒரு நூலை எழுதி வெளியிட்டு இருக்கின்ற முதல் தமிழ் எழுத்தாளர் கோவை ஞானியாகத்தான் இருந்திட வேண்டும்! நூலின் பெயர்: ‘மார்க்சிய அழகியல் ‘!

இந்த நூலுக்கு என்று தனிச் சிறப்பு ஒன்று உண்டு: வரி-வரியாக இதனை நாம் வாசித்திட வேண்டிய அவசியம் இல்லை; பக்கம்-பக்கமாகப் புரட்டிப் பார்த்தாலே போதும், அரை மணி நேரத்திற்குள் இதன் 168 பக்கங்களையும் நாம் முடித்து விடலாம்.

இந்த நூலுக்கு மற்றும் ஒரு சிறப்பும் உண்டு: ‘மார்க்சிய அழகியல் ‘ என்பதுதான் இதன் பெயர் என்ற போதிலும், மார்க்சியத்திற்கும் இதற்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை; அழகியலுக்கும் இதற்கும் இடையே கூட எந்த ஒரு தொடர்பும் இல்லை!

மார்க்சியம் மட்டும்தான் அழகு என்கின்ற ‘நல்-எண்ணங்கள் ‘ இதில் நிரம்பிக் கிடக்கின்றன. தங்கள் மடமைகளை மற்றவர்களின் மண்டைகளில் திணித்திட முயல்பவர்களைப் பற்றிப் பேசுகின்ற லெனின், நல்-எண்ணக் காரர்களைக் கடுமையாகக் கிண்டல் அடிப்பார். ஆனால், அப்படி எல்லாம் இவரை நாம் கிண்டல் அடித்து விட முடியாது. ஏனென்றால், நாகரெத்தினம் கிருஷ்ணா குறிப்பிடுவது மாதிரியான ஒரு ‘மூலவர் ‘ இவர்!

வரலாற்றின் ‘குற்றவாளிக் கூண்டில் ‘ நிறுத்தி வைக்கப் பட்டு இருக்கின்ற அரசியல் காரர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் ஒரு கணக்கு இல்லை! இப்படி, எழுத்தாளர்களுக்கும் ஒரு குற்றவாளிக் கூண்டு உண்டு என்றால், கோவை ஞானிக்கும் அதில் ஓர் இடம் கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

பிறவிப் பெரியவர்களுக்கு மட்டுமா, பிறவி ஞானிகளுக்கும் நாட்டில் பஞ்சம் இல்லை போலும்! மண்டையில் அல்லாமல், மனத்தின் ஆற்றல்களைக் குண்டியில் தேடிக் கொண்டு இருப்பவர்களுக்கு, ‘குண்டலினி ‘ பற்றிய இவரது நூல் பயன் படலாம்! அவ் வப்போது மருத்துவர்களையும் அவர்கள் கலந்து ஆலோசித்துக் கொண்டு வந்து விடுவது நல்லது!

இனி, கோவை ஞானியின் நூலுக்குள் நாம் நுழைவோம்.

மார்க்சிய அழகியல்

‘அழகியல் என்பது வடிவ நேர்த்தி, வண்ணங்கள் மற்றும் தர்க்க நெறி முதலியவை சார்ந்ததாக மட்டும் இருக்க முடியாது. வாழ்வுக்கு அழகு வேண்டும், அர்த்தம் வேண்டும், ஆற்றல் வேண்டும். வரலாற்றுக்குள் வந்து விட்ட தனி உடமை, அரசதிகாரம் முதலியவை மக்கள் மீது சுரண்டலையும் ஒடுக்குமுறையையும் திணிக்கின்றன. வாழ்வுக்கான அர்த்தங்களையும் அழகுகளையும் இவை சிதைக்கின்றன, அழிக்கவும் செய்கின்றன. பொருளியல் முதலிய ஆதிக்க சக்திகளின் கைகளில் மக்கள் கருவிகளாகின்றனர். தமக்கான வாழ்வை மக்கள் இழக்கின்றனர். வறுமை, நோய் நொடிகள் முதலிய நாசங்களுக்கு உள்ளாகின்றனர். திரும்பவும் இவர்களுக்கு அர்த்தம் உள்ள வாழ்வை மீட்டுத் தர வேண்டும். இதுவும் அழகியலின் / கலை இயலின் உருவம் மட்டும் அல்ல உள்ளடக்கமாகவும் கொள்ளத் தகுந்தது. இதுவே மார்க்சிய அழகியலின் தனித் தன்மை என்று கூற முடியும். ‘ (மார்க்சிய அழகியல், பக்.XVI.)

‘வாழ்வின் அர்த்தங்கள் முதலியவற்றை மனிதன் எத்தகைய வரலாறு மற்றும் பொருளியல் சூழலில் இழக்கிறான் என்பது பற்றி மார்க்சியத்தைப் போல இன்னொரு தத்துவம் விளக்க வில்லை. இயற்கையோடும், சமூகத்தோடும், தன்னோடும் வரலாற்று காலத்தில் ஏற்பட்ட அந்நியமாதலைக் கடந்து மீண்டும் இயற்கையோடும் சமூகத்தோடும், தன்னோடும் பிரிவும் பிளவும் அற்ற மனித வாழ்க்கையைத்தான் மார்க்சியம் தனக்கான கருப் பொருளாகக் கொண்டிருக்கிறது. ஆதிக்கங்கள் ஒழிந்தால் ஒழிய மனிதர்களுக்கான அழகிய மற்றும் அர்த்தமுள்ள வாழ்க்கை வாய்க்காது. இதற்காகத்தான் போராட்டங்கள் தேவைப் படுகின்றன. ஏற்ற தாழ்வுகளை முற்றிலும் ஒழிப்பதற்கான வர்க்கப் போராட்டத்தில் மனிதர்கள் காலந்தோறும் ஈடுபடுகிறார்கள். ‘ (அதே நூல், பக்.XVI-VII.)

‘போராட்டத்தின் போது மனிதர் தம்மை திரட்டிக் கொள்கிறார்கள். இணைந்து இயக்கமாகிச் செயல் படுகிறார்கள். வெற்றிகளைப் போலவே தோல்விகளும் வாழ்வுக்கான அர்த்தம் ஆகிறது. சமத்துவம் மற்றும் சமதர்மத்தைக் காட்டிலும் வாழ்வுக்கு உயர்ந்த பேறு இல்லை. சமதர்மமே வாழ்வின் பேரழகு. மார்க்சிய அழகியலின் மையம் என்று இதைத்தான் கூற முடியும். ‘ (அதே நூல், பக்.XVII.)

‘மார்க்சியத்தின் அழகியல் எனத் தனிப் பட்ட முறையில் நான் எழுத வில்லை என்ற போதிலும், என் கட்டுரைகள் அனைத்திலும் மார்க்சிய அழகியலின் இழைகளை நண்பர்கள் காண முடியும். ‘ (அதே நூல், பக்.XVIII.)

‘மார்க்சியத்தின் அழகியல் என்று பேசும் பொழுது, மார்க்சியத்தின் வர்க்கக் கோட்பாடு முதலியவற்றிலிருந்து அழகியலைப் பிரித்துப் பேசவும் முடியாது. சரியாகச் சொல்வது என்றால் மார்க்சியத்தின் வர்க்கக் கோட்பாடு என்ற தளத்தில் இருந்துதான் இலக்கிய அழகியல் குறித்தும் பேச முடியும். ‘ (அதே நூல், பக்.11.)

‘சமூக மாற்றம் முதலியவை வெறும் அரசியல் போராட்டங்களின் மூலம் வந்து விடுவதில்லை. சமூகத்தில் நிலவும் ஆதிக்கங்களுக்கும் நமக்கும் இடையில் எத்தனையோ இணைப்புச் சங்கிலிகள் உள்ளன. குடியிருக்க ஒரு கான்கிரீட் வீடு வேண்டும், பயணம் செய்ய ஒரு இரண்டு சக்கர வாகனம் வேண்டும். நாம் பயணம் செய்யும் பேருந்து 80 கி.மீ. வேகத்தில் ஓட வேண்டும். டெரிகாட்டன் சட்டை வேண்டும். மகன் மருத்துவன் ஆக வேண்டும். பெண்ணுக்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்க வேண்டும். குடும்பத்தின் பொறுப்புகளை மனைவி சரிவர நிர்வகிக்க வேண்டும். ஊதியம், போனஸ் என்றெல்லாம் நிறையக் கிடைக்க வேண்டும். ‘ (அதே நூல், பக்.18-19.)

‘இப்படி ஒரு மார்க்சியன் கருதுவான் என்றால் சீர்கெட்ட முதலாளியத்தோடு மட்டுமல்லாமல், ஏகாதிபத்தியத்தோடும் ஒத்துழைக்கிறான் என்று பொருள். நுகர்வு வெறிக்கு இவனும் ஆளாகி உள்ளான் என்பது பொருள். இவனும் பணம் மற்றும் அரசு அதிகாரங்களை உள்வாங்கி, தன் குழந்தை, மனைவி மீது மட்டுமல்லாமல் எத்தனையோ மக்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிறான் என்று பொருள். ‘ (அதே நூல், பக்.19.)

இத்தகைய வாழ்க்கை வாழ்பவன் சமூக விடுதலைக்கு எதிரானவன் மட்டுமல்ல, மார்க்சியம் பேசி மற்றவரையும் அப்புறம் தன்னையும் ஏமாற்றிக் கொள்கிறான். இவனும் தனக்குள் அந்நியமானவன். இவனது வாழ்க்கை பொய்யான, போலித்தனமான வாழ்க்கை. ‘ (அதே நூல், பக்.19.)

‘நம்மவர் என்பதனால் பாராட்டுவதும், பிறர் என்பதனால் இகழ்வதும் திறனாய்வும் ஆகாது. ‘ (அதே நூல், பக்.24.)

‘நக்ஸல்பாரியில் தொடங்கிய போராட்டத்தை உடனடியாக இனம் கண்டு எங்களுக்குச் சொன்னவர் தோழர் எஸ்.என்.நாகராசன். 1954-ல் கட்சிக்குள் தேசிய இனச் சிக்கலை இவர் எழுப்பினார். கட்சி இந்தச் சிக்கலைப் புறக்கணித்தது. டாங்கே-வை திரிபுவாதி என்று தொடக்கத்திலேயே கண்டு எடுத்துரைத்தார். கோஸாம்பி முதலியவர்களை ஆழ்ந்து கற்றவர் நாகராசன். ‘ (அதே நூல், பக்.27.)

‘மாவோவின் மார்க்சியத்திற்கு ‘கீழை மார்க்சியம் ‘ என்று பெயரிடுகிறார். மேற்கத்திய மார்க்சியம் ‘ஆணியம் ‘ என்றும் கீழை மார்க்சியம் பெண்ணியம் என்றும் பேசுகிறார். ‘ (அதே நூல், பக்.27.)

‘எஸ்.வி.ஆர். குறித்து இங்கு சுருக்கமாகச் சொல்லாம். அவரது விரிவான படிப்பு நமக்குப் பெரும் வியப்பைத் தரக் கூடியது. ‘ (அதே நூல், பக்.29.)

‘நிறப்பிரிகை நடத்திய கூட்டு விவாதங்களில் நாங்களும் பங்கு பெற்றோம். நாகராசனை ஒதுக்கி விட்டு என்னை வசப்படுத்திக் கொள்ள நிறப்பிரிகை நண்பர்கள் முயற்சி செய்தனர். மார்க்சியத்தை விட்டு என்னால் விலக முடியாது. மார்க்சியத்தின் உள்ளிருந்தே நான் பலவற்றையும் கற்றுக் கொண்டிருந்தேன். ‘ (அதே நூல், பக்.35.)

‘வள்ளுவரின் ஒப்புரவும், இளங்கோவின் நீதி உணர்வும் மக்கள் மத்தியில் சமத்துவ உணர்வை வேண்டியவை. சாத்தனாரின் அமுதசுரபி ஒரு வகையில் சமதர்மத்தின் குறியீடு. ‘ (அதே நூல், பக்.39.)

‘மார்க்சிய நோக்கிலான எனது இலக்கியப் பார்வையின் மையம் எது என்பது குறித்து இங்கு சிலவற்றைச் சொல்ல வேண்டும். படைப்பியக்கம் என்பதுதான் எப் பொழுதும் என்னைக் கவர்ந்த மையம் என்று சொல்லுவேன். புறநிலைகளுக்கு அகம் தரும் எதிர் வினைதான் இந்தப் படைப்பியக்கம். ‘ (அதே நூல், பக்.54.)

‘படைப்பென்பது இல்லாமல் மனிதன் இல்லை. கருவிகளை மட்டுமல்லாமல் கருத்துகளையும் படைப்பதன் மூலம்தான் புறச்சூழலை மனிதன் மாற்றுகிறான். புறத்தை மாற்றும் பொழுது இவனது அகமும் மாற்றத்திற்குள்ளாகிறது. இப்படித்தான் மனிதன் தன்னையும் படைத்துக் கொள்கிறான். ‘ (அதே நூல், பக்.54.)

‘மனிதன் இயற்கையோடும் ஒன்றி வாழ்கிறான். . . . தானும் இயற்கையும், உயிர்களும் இவனுக்குள் ஒன்றியவை. இயற்கை முதலியவற்றுக்குள் இவன் தன்னையும் காண்கிறான். தனக்குள் இயற்கை முதலியவற்றையும் காண்கிறான். இவன்தான் மார்க்ஸ் கண்ட மனிதன். ‘ (அதே நூல், பக்.56.)

‘இலக்கியம் பற்றிய புரிதலில் இந்த மனிதனைத்தான் நான் தேடுகிறேன். திறனாய்வு என்ற முறையில் பெரும்பாலும் எந்த ஒரு படைப்பினுள்ளும் இவனை இனம் காணத்தான் நான் முயற்சி செய்கிறேன். வள்ளுவருக்குள்ளும், இளங்கோவுக்குள்ளும், சாத்தனாருக்குள்ளும் இவனது பரிமாணங்களைத் தேடுகிறேன். இவனுக்கு இன்னொரு பெயர் சித்தன். சமய இலக்கியங்களில் இவன் வெளிப்பட்டோ, மறைந்தோ வாழ்கிறான். காவியங்களில் இவன் நாயகன். ஆதிப் பொதுமைச் சமூகத்தின் இறுதியில் காணாமல் போன இவன் அப்புறம் எங்கெங்கோ தலை காட்டுகிறான். முரண்பாடுகளுக்கு மத்தியில் இவனைத் தேடுவது திறனாய்வின் பணி என்பதுதான் என் கருத்து. ‘ (அதே நூல், பக்.56.)

‘அறிவாளிகள் என்ற முறையில் இவர்கள் கடுமையாக விவாதிக்கிறார்கள். ஒருவரை மற்றவர் காய்கிறார்கள். தாக்கிக் கொள்கிறார்கள். தேவையான பொழுது கூடிக் குலவுகிறார்கள். வணிக பத்திரிகைகளில் எழுத வாய்ப்புக் கிடைக்கும் பொழுது மார்க்சியர்களும் மறுப்பதில்லை. தலித் இலக்கியவாதிகளும் எழுதுகிறார்கள். தங்கள் அறிவின் மீது இவர்களுக்குப் பெருத்த மரியாதை உண்டு. பிறரைச் சாடுவதன் மூலம் தங்களை இவர்கள் உயர்த்திக் கொள்கிறார்கள். இவர்களுடைய மன ஆரோக்கியம் கேள்விக்குரியது. இவர்களது சமூக அக்கறை கேள்விக்குரியது. ‘புதிய கலாச்சாரம் ‘ இவர்களைத் தாக்குவதில் உள்ள நியாயங்களை நாம் புரிந்து கொள்ள முடியும். இவர்களைத் தாக்கத்தான் வேண்டும். ‘ (அதே நூல், பக்.65.)

‘ ‘எனக்கு என் கலை போதும், நான் எதற்கு அரசியலுக்குள்ளும், தத்துவத்துக்குள்ளும் ஏன் போக வேண்டும் ‘ என்று இவர்கள் இருந்து விடுகிறார்கள். இங்கு மார்க்சியரும்தான் விமர்சனங்களுக்கு உள்ளாக வேண்டியவர்கள். ‘ (அதே நூல், பக்.71.)

‘இப்பொழுது கட்டுரையின் மையப் பொருளாகிய கலைக்கும் சித்தாந்தத்திற்கும் இடையிலுள்ள உறவாகிய மையத்திற்கு வருகிறேன். ‘ (அதே நூல், பக்.85.)

‘மார்க்சியத்திற்கு நான் தரும் முதல் மரியாதையை மார்க்சின் பெயரை மட்டுமே உச்சரிக்கும் கட்சிக்கோ மனிதருக்கோ நான் தர முடியாது. ‘ (அதே நூல், பக்.86.)

‘பாட்டாளி வர்க்கம்தான் முதன்மைச் சக்தி. உழவர்கள் முதலியவர்கள் துணை சக்திகள். இலக்கியத்தின் நோக்கம் சமூகமாற்றம். யதார்த்தம் என்பது இனி சோசலிசம் என்பதைத்தான் மையப் படுத்த வேண்டும். இவ்வகை கருத்தோட்டம் மார்க்சியரின் யதார்த்த வாதம். ‘ (அதே நூல், பக்.92.)

‘மொழிக்குள் நாம் இருக்கிறோம். மொழி நம்மை கட்டமைக்கிறது. வரலாறு நம்மை கட்டமைக்கிறது. வரலாற்றுக்குள், கலாச்சாரத்துக்குள் நாம் இருக்கிறோம் என்று நாம் சொல்லுகிறோம். எல்லாமே குறிகள். குறிகள் என்ற முறையில் இவை அருவங்கள். உருவங்களிலிருந்து இவை பிரிந்து விட்டன. மொழி குறித்து ஆழ்ந்த உண்மை ஒன்றை இதன் மூலம் வெளிப் படுத்துகிறார்கள் என்ற உண்மையை நாம் மறுக்க வில்லை. எல்லாமே குறிகள் / அருவங்கள் என்று சொல்லும் பொழுது புற உலகிலிருந்து, நம் உடம்பிலிருந்தும் கூட நாம் விடுபடுகிறோம். இருப்பது வெட்டவெளி, திசைகள் கூட நமக்கு இல்லை. நாம் எங்கும் பறந்து செல்லலாம். இப்படிச் சொல்வது எந்தளவுக்கு உண்மை ? விருந்து உணவு நமக்கு வேண்டாம். குறைந்த அளவுக்கு உணவு தேவை. மிக, மிக எளிய உணவு. இயற்கை உணவு. தரையில் இருக்க முடியும். குடியிருக்க ஒரு குடிசை வீடு. பொருளோடு / உலகத்தோடு நம் உறவை வெட்டிக் கொள்ள இயல வில்லை. ‘ (அதே நூல், பக்.104.)

‘ஒரு சமுதாயத்தில் கலை அடைந்திருக்கிற உச்சத்தை, அந்த சமூகத்தின் பொருளியல் காரணிகளிலிருந்து விளக்க முடியாது என்றெழுதினார் மார்க்ஸ். மரபு மார்க்ஸியருக்கு அதிர்ச்சி தரக் கூடியது இந்தக் கூற்று. 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கிரேக்கர்களின் கலைச் செல்வங்கள் இன்றும் நம்மை பாதிப்பதற்கான காரணங்கள் நமக்கு இன்றும் விளங்க வில்லை என்று மார்க்ஸ் எழுதினார். பிறகு (இது குறித்து மார்க்ஸே ஒரு விளக்கம் தந்தார்) மில்ட்டன் ஸ்வர்க்க நீக்கம் என்ற காவியத்தை ஏன் படைத்தார் என்ற கேள்விக்கு மார்க்ஸ் தந்த விடை: பட்டுப்புழு பட்டு உற்பத்தி செய்கிறது. இதன் காரணமாகத் தான் இறப்பது உறுதி என்று அதற்குத் தெரிந்தாலும் பட்டு உற்பத்தியைத்தான் செய்து கொண்டிருக்கும். பட்டு உற்பத்தி என்பது அதன் வாழ்வுச் செயல்பாடு. இத்தகைய செயல்பாடு மூலமாகத்தான் தன் வாழ்வை நிறைவு செய்து கொள்கிறது. மில்ட்டனும் தன் காவியத்தை இப்படிப் படைத்தார். இப்படி மார்க்ஸ் சொன்னதன் சூழல் அற்புதமானது. உபரி மதிப்பு என்ற முறையில் எல்லா வகை பண்டத்துக்கும் மதிப்பைத் தீர்மானிக்க முடியும். ஆனால், கலைப் படைப்பிற்கான மதிப்பு அல்லது விலையைத் தீர்மானிக்க முடியாது என்கிறார் மார்க்ஸ். பண்டத்தை உற்பத்தி செய்யும் போது அதற்குள் உழைப்பாளியின் திறன் செல்கிறது. இழந்த திறனை உழைப்பாளி மீட்டுக் கொள்ள முடியும். இதற்கான தொகை ஊதியம். ஆனால், படைப்பினுள் ஈடுபடும் பொழுது ஒரு கலைஞன் தன்னையே அதனுள் இழக்கிறான். இப்படித் தன்னை இழந்தாலொழிய ஒரு உயர்வான படைப்பு உற்பத்தியாகாது. இத்தகைய படைப்புக்கு விலை மதிப்பிட முடியாது என்பது மார்க்ஸின் கருத்து. ‘ (அதே நூல், 109.)

‘வரலாற்றுச் சூழலில் மனிதன் தன்னை இழப்பதும் மீண்டும் தன்னைப் பெறுவதும் என்ற மாபெரும் நாடகமாக வரலாற்றை மார்க்ஸ் பார்க்கிறார். ஆதி பொதுமைச் சமுகத்தில் ஏற்றத்தாழ்வு இல்லாத சூழலில் இவன் வாழ்ந்தான். மனிதர் எல்லோரும் சேர்ந்து உழைத்தனர். பகிர்ந்து கொண்டனர். மாறிய சூழலிலும் மனிதன் இந்த ஆதிப் பொதுமையை மறக்க வில்லை. பொதுமை என்பது இவனது கனவாக, என்றும் இருக்கிறது. ‘ (அதே நூல், பக்.110.)

‘. . .தான் அந்நியப் பட்டிருப்பதையும் இவன் உணர்வதில்லை. தனக்குள் இயற்கையின் குரலைச் சமூகம் என்ற பேருணர்வை இவன் கொள்வதில்லை. குறுகிய சூழல் இவனுக்குப் போதும். சில தேவைகளில் இவன் தன் வாழ்வை நிறைவு செய்து கொள்ள முடியும் என நம்புகிறான். இவன் தன் ஆன்மாவின் குரலைக் கூட கேட்பதில்லை. மதம் இவனை வழிமறித்து வேறு திசைகளில் அழைத்துச் சென்று இவனை ஏமாற்றுகிறது. இயற்கையோடும், சமூகத்தோடும் தன்னோடும் இணைகிற சூழலில்தான் இவனுக்குள் பேருணர்வுகள் எழும். இவன் தனக்குள் வரலாற்றைக் காண்பான். ‘ (அதே நூல், பக்.111.)

‘இலக்கியம் குறித்த ஆய்வில் படைப்பியக்கத்திற்கு முக்கியத்துவம் தருவதன் தேவையை இங்கு மீண்டும் வற்புறுத்திக் கூற விரும்புகிறேன். இலக்கியம் படைத்தவரின் வாழ்நிலை மற்றும் கொள்கைகள் குறித்துப் படைப்பின் வழியே ஓரளவிற்கேனும் காணமுடியுமென்பது உண்மைதான். . . . படைப்பாளிக்குள் புகுந்து அவருக்குள் செயல்படும் படைப்பியக்கம் பற்றிய ஆய்வு என்று சொல்லும் பொழுது படைப்பாளியின் தனிவாழ்வு, படைப்பு நோக்கம், வர்க்கச் சார்பு ஆகிய பலவற்றையும் கடந்து வரலாற்றின் முரண் இயக்கத்திற்குள் நாம் நுழைகிறோம். . . . சமகாலச் சமுதாயத்தின் அடிப்படையான முரண்கள் அவனுக்குள் வெடித்து மேல்வருவதைக் காண்கிறோம். படைப்பியக்கத்தில் வசப் படும் பொழுது அவன் தன்னிலையைக் கடந்து செல்கிறான். சமுதாயத்தின் கூட்டு மனநிலையின் வசப்பட்டு, அதன் இயக்கத்தோடு ஒன்றி இருந்து எழுதுகிறான் / படைக்கிறான். இந்த அடி ஆழத்திற்குள் செல்லும் பொழுது அவன் தன் வாசகர்களையும் உள்ளிழுத்துக் கொள்கிறான். வாசகனுக்குள்ளும் படைப்பியக்கம் கிளர்ச்சி கொள்கிறது. வாசகன் இப்பொழுது வாசிப்பவனாக மட்டும் இல்லை. தனக்குள் உள்ள படைப்பாளியைக் கண்டடைகிறான். இனி அவன் செயலற்றவனாக, இலக்கியத்தை நுகர்பவனாக மட்டும் இருந்து விட முடியாது. தம் சமகாலத்திற்குத் தேவைப்படும் அறம் எதுவோ அந்த அறத்தின் சார்பில் நின்று பேசுபவனாக, செயல்படுபவனாக மாறுகிறான். ‘ (அதே நூல், பக்.129.)

‘சங்ககால வாழ்க்கை குறித்து ஒரு திறனாய்வையும் இங்கு வழங்கி இருக்கிறார் சாத்தனார். ஆட்சியமைப்பைக் குறித்தும் சாத்தனார் திறனாய்வு செய்கிறார். வறுமை என்ற கொடிய சிக்கல் சங்ககாலத்தை அடுத்த சமுதாயத்தில் நிலவியது என்பதையும் அதற்கு என்னதான் தீர்வு என்ற முறையிலும் சாத்தனார் சிந்தித்து இருக்கிறார். ‘ (அதே நூல், பக்.131.)

மணிமேகலை சிறைக் கோட்டத்தை அறக்கோட்டமாக மாற்றுகிறாள். பசிக் கொடுமை காரணமாக கொலை, களவு முதலிய குற்றங்களைச் செய்து சிறைக்குள் அகப் பட்டவர்களின் மனக் கோட்டம் தீர்க்கிறாள் மணிமேகலை. ‘ (அதே நூல், பக்.131-32.)

‘முதலாளியத்தை உள்வாங்கிக் கொண்ட மார்க்சியம்தான், யதார்த்தவாதம் என்று இறுகிப் போன படைப்பு முறையை ஒப்புக் கொள்ளும். குடும்பம், தனி உடைமை, அரசு, அதிகாரம் ஆகியவற்றை முற்றாகத் தகர்க்க இயலாத சூழல்தான் இன்று வலுப்பெற்று வருகிறது. நவகாலனியம் என்ற புதியபோக்கு தன் போக்கில் இவர்களை சீர்குலைத்துக் கொண்டிருக்கிறது. முதலாளியத்திற்குள்ளேயே செயல்படுகிற அராஜகம் என்ற போக்கு நவகாலனிய சூழலில் உச்ச நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. பின்-நவீனத்துவம் இந்த சூழலைத்தான் தனக்குள் உள்வாங்கிக் கொண்டிருக்கிறதா என்ற ஐயம் எழுகிறது. மனிதன் இன்று தனக்குள் பல துண்டுகளாகச் சிதைந்து விட்டான். தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்கான ஒரு ‘நான் ‘ என்ற ஆதாரத்துண்டு இன்று இல்லை. இப்படி விவாதிப்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். வரலாற்றில் எத்தனையோ வகைப் படைப்பு முறைகள் செயல் பட்டன. யதார்த்த வாதத்தோடு மார்க்சியம் தன்னை இறுக்கிக் கொள்ள வேண்டியதில்லை. ‘ (அதே நூல், பக்.151.)

‘எந்த ஒரு இலக்கியமும் அது வாழும் சமூகத்தோடும், வரலாற்றோடும் நெடுங்கால உறவுடையது. ‘ (அதே நூல், பக்.158.)

‘மனிதர்களை உற்பத்தி செய்யும் இன்றியமையாத செயல்பாட்டில் கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். பழைய வரலாற்றை, பழைய கலாச்சாரத்தை, வளமான மனித உறவுகளின் தேவையைச் சமகாலத்தவர்களுக்குக் கொண்டு வந்து சேர்க்கும் ஆற்றல் மிக்க தொடர் வரிசையில் கலைஞர்கள் முக்கியமாக உள்ளனர். ‘ (அதே நூல், பக்.161.)

கோவை ஞானியின் கருத்துகள் இவை.

மார்க்சியம் என்னும் பெயரில் கோவை ஞானி இங்கே அவிழ்த்து விட்டு இருப்பது அவரது சொந்த ஞானம்தானே ஒழிய மார்க்சிய ஞானம் அல்ல. இவர் கூறுவதுதான் மார்க்சியம் என்றால் யாருக்கும் அது தேவையும் அல்ல. மற்றபடி, ‘ஞானியிசம் ‘ என்று இதனை நாம் அழைப்பதுதான் பொருத்தம்!

எனவே, ஞானியிசத்திற்குள் இனி நாம் நுழைவோம்.

24-07-2004

(தொடரும்)

Series Navigation

சோதிப் பிரகாசம்

சோதிப் பிரகாசம்