முள்பாதை 5

This entry is part [part not set] of 27 in the series 20091113_Issue

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்


email id tkgowri@gmail.com

இரவு அப்பா சொன்னதிலிருந்து எனக்கு கமலா அத்தையை, அவளுடைய குடும்பத்தை நேரில் போய் பார்க்கணும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. எந்த வசதிகளும் இல்லாத கிராமம். பாலும், தயிரும் தாராளமாகப் புழங்கும் குடித்தனம். மண்தரையில் ஹரிகேன் விளக்கைச் சுற்றிலும் அமர்ந்து பாடம் படிக்கும் குழந்தைகள். கூரையில்லாத குளியல் அறை. கல்கண்டாக இனிக்கும் கிணற்றுத் தண்ணீர்.
அப்பா அந்த விட்டைப் பற்றிய ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் விவரமாக சொல்லச் சொல்ல, என் கண் முன்னே காட்சிகளாக விரியத் தொடங்கியது. உடனே அந்த இடத்திற்குப் போய்ப் பார்க்க மாட்டோமா என்ற ஆதங்கம் ஏற்பட்டது.
மறுநாள் அப்பா எழுந்ததும் போய் தந்தி கொடுத்துவிட்டு வந்தார். முன்கூட்டி கடிதம் எழுதத் தேவையில்லை என்றும், நான் எப்பொழுது போனாலும் சந்தோஷமாக வரவேற்பார்கள் என்றும் சொன்னார். சாரதி வரும்போது தானும் இங்கே இல்லாமல் போனால் இருவரும் சேர்ந்து செய்த சதித் திட்டம் என்று அவன் நினைக்கக் கூடுமென்று தயங்கினார். இல்லை என்றால் அப்பாவும் என்கூட வந்திருப்பாராக இருக்கும்.
வங்கிக் கணக்கில் என் பெயரில் இருந்த பணத்தில் பத்தாயிரம் கடனாக தரச் சொன்னார். பணம் தேவைப்படும்போது என்னிடம் கடன் வாங்கிக் கொண்டு வட்டியுடன் திருப்பிக் கொடுப்பது அப்பா அம்மாவுக்குப் பழக்கம்தான். வங்கியிலிருந்து பணத்தை எடுத்துக்கொண்டு நேராக கடைத்தெருவுக்குப் போனோம். அப்பா ராஜேஸ்வரிக்காக முத்து மாலையும், மற்ற குழந்தைகளுக்கு ரெடிமேட் ஆடைகளும் வாங்கினார்.
வீட்டுக்குத் திரும்பி வரும்போது மதியம் ஆகிவிட்டது. நான் சூட்கேஸில் துணிமணி எடுத்து வைத்துக் கொண்டிருந்த போது அப்பா அருகில் வந்து நின்றுகொண்டார். எம்பிராய்டரி செய்த ஷிபான், ஜார்ஜெட் புடவைகளை வைத்துவிட்டு மற்ற மெல்லிய புடவைகளை நீக்கிவிட்டார். ஜரிகையிட்ட வெங்கடகிரி, காட்டன் புடவைகளை எடுத்துக் கொள்ளச் சொன்னார். கையில்லாத ரவிக்கைகளை அணிய வேண்டாம் என்றும், கூடுமான வரையிலும் அவர்களுடன் ஒருத்தியாக கலந்து பழகச் சொல்லியும் அறிவுரை வழங்கினார். எனக்கு இதெல்லாம் ரொம்ப வித்தியாசமாக, வேடிக்கையாக இருந்தது. அம்மாவோ, அப்பாவோ துணைக்கு இல்லாமல் நான் எங்கேயும் போனதில்லை. இதுவரையில் நான் ஒரு நாளும் சந்திக்காதவர்களிடம், அதிலும் அம்மாவுக்குக் கொஞ்சம்கூட பிடிக்காதவர்களிடம், சரியாக சாரதி இங்கே வரும் நேரத்தில் இங்கே இருக்காமல் போய்க் கொண்டிருக்கிறேன். இதெல்லாம் அம்மாவுக்குத் தெரிந்தால் என்ன நடக்குமோ என்ற கற்பனை எனக்கு உற்சாகமாக, விநோதமாக இருந்தது. அன்று இரவு பயணம். அந்த ஊருக்கு எப்படிப்போக வேண்டுமோ அப்பா ஒரு பேப்பரில் விவரமாக எழுதிக் கொடுத்தார். எவ்வளவு தெளிவாக எழுதியிருந்தார் என்றால் எப்படிப் பட்டவர்களும் கண்களை மூடிக்கொண்டு நேராக மெலட்டூரில் அத்தையின் வீட்டு வாசலில் போய் நிற்க முடியும்.
கிளம்பும் நேரம் நெருங்க நெருங்க என் மனதில் லேசாக பயமும், கவலையும் ஏற்பட்டன. அதையும் மீறி உற்சாகமும், ஆர்வமும் தலைதூக்கின.
“மீனா! பயமாக இல்லையே?” அப்பா திடீரென்று கேட்டார்.
“ஊஹ¤ம்.” குறுக்காக தலையை அசைத்தேன்.
“உனக்கு ஏதாவது சங்கடமாக இருந்தால்…”
“இல்லை டாடீ. அப்படி எதுவும் இல்லை.” இல்லாத தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சொன்னேன்.
ஸ்டேஷனுக்குப் போய் சேரும்போது ஏற்கனவே ரயில் பிளாட்பாரத்தில் வந்திருந்தது. உள்ளே ஏறி உட்கார்ந்து கொண்டேன். இன்னும் ஐந்து நிமிடங்களில் ரயில் புறப்படப் போகிறது.
அப்பா என் கையைப் பற்றிக்கொண்டு “மீனா! நீ எதற்கும் பயப்படத் தேவையில்லை. உனக்கு எப்போ திரும்பி வரணும் என்று தோன்றினாலும் உடனே கிளம்பி வந்துவிடு” என்றார்.
சரி என்பதுபோல் தலையை அசைத்தேன்.
“அத்தையிடம் கேட்டேன் என்று சொல்லு. போய்ச் சேர்ந்ததும் தந்தியைக் கொடுக்கச் சொல்லு.”
ரயில் புறப்படத் தொடங்கியது. அப்பா கீழே இறங்கினார். “ஜாக்கிரதையாக போய் வா மீனா. மறுபடியும் உன்னைப் பார்க்கும் வரையில் என் மனம் சமாதானமாக இருக்காது” என்று சொல்லிக் கொண்டே கையை அசைத்தார்.
நானும் கையை அசைத்தேன். தனியாக ஊருக்குப் போகிறேன் என்ற நினைப்பே பயமாக மாறி என் முதுகுத் தண்டில் நடுக்கத்தை ஏற்படுத்தியது. உடல் முழுவதும் அந்த நடுக்கம் பரவியதுபோல் கண்களைச் சுழற்றிக் கொண்டு வந்தது. நினைவு தப்பிக் கீழே விழுந்து விடுவேனோ என்று பயந்தேன்.

Series Navigation