முள்பாதை 47

This entry is part [part not set] of 33 in the series 20100919_Issue

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்


email id tkgowri@gmail.com

எக்மோரில் இறங்கிக் கொண்டு டாக்ஸியில் வீட்டுக்கு போய்க் கொண்டிந்தோம். வீடு நெருங்க நெருங்க என் இதயம் வேகமாக துடிக்கத் தொடங்கியது. கிருஷ்ணனின் விருப்பதிற்கு எதிராக, அப்பாவிடம் சொல்லாமல், அம்மாவுக்குத் தெரியாமல் ராஜேஸ்வரியை உடன் அழைத்துக் கொண்டு எங்கள் வீட்டுக்கு போய்க் கொண்டிருந்தேன்.
கிருஷ்ணன் தஞ்சாவூருக்கு வந்து எங்களை ரயிலில் ஏற்றிவிட்டான். ரயில் கிளம்பும் முன் ராஜியை சென்னையில் தன்னுடைய நண்பன் மதுசூதன் வீட்டில் இறக்கிவிடச் சொன்னான். நண்பனுக்கு தந்தியும் கொடுத்திருப்பதாகத் தெரிவித்தான்.
நான் வியப்புடன் பார்த்தேன். “மறுபடியும் என்ன வந்தது? என்றேன்.
“மறுபடியும் என்ன இருக்கு இதில்?”
“ராஜியை என்னுடன் அனுப்புவதாக சொன்னாயே?”
“இப்போ உன்னுடன்தானே அனுப்பி வைக்கிறேன்?”
அவனுடைய வெகண்டை பேச்சுக்கு வேறு சமயமாக இருந்தால் பதிலடி கொடுத்திருப்பேனோ என்னவோ. ஆனால் இப்போ எனக்கு ஆத்திரத்தில் உடல் பற்றி எரிவது போல் இருந்தது.
“என்னுடன் அனுப்புவது என்றால் உன் நண்பன் வீட்டில் இறக்கிவிடச் சொல்லியா?”
“உன்னுடன் அனுப்பி வைக்கச் சொன்னாய். அனுப்புகிறேன். உங்கள் வீட்டுக்கு அனுப்பி வைப்பதாக நான் சொல்லவில்லையே?”
நான் வாயைத் திறந்து ஏதோ சொல்லப்போனேன்.
கிருஷ்ணன் என்னை சொல்ல விடாமல் முந்திகொண்டான். “இந்த சூழ்நிலையில் ராஜி பத்து பதினைந்து நாட்களுக்கு எங்கேயாவது போய் இருப்பது நல்லது என்று நீ கொடுத்த ஐடியா எனக்குப் பிடித்திருந்தது. அதான் என் நண்பன் வீட்டுக்குக் கொண்டு விடச் சொல்லி உன்னுடன் அனுப்பி வைக்கிறேன். கூடிய சீக்கிரம் நல்ல வரனாக பார்த்து இதைவிட சிறப்பாக அவளுடைய திருமணத்தை முடித்து விடுகிறேன். அதுவரை என் மனதிற்கு நிம்மதி இருக்காது.”
தங்கையின் பக்கம் திரும்பினான். “ராஜி! மதுவுக்குத் தந்தி கொடுத்திருக்கிறேன். அவன் ஊரில் இருந்தால் சுயமாக ஸ்டேஷனுக்கு வந்து விடுவான். ஒருக்கால் வரவில்லை என்றாலும் நீ நேராக அவன் வீட்டிற்குப் போய்விடு. அவனுடைய அம்மாவை எனக்கு நன்றாகத் தெரியும். நீ இன்னார் என்று சொன்னால் போதும். அங்கே உனக்குப் புதிய இடம் என்ற சங்கடம் எதுவும் இருக்காது. இங்கே வேலைகளை முடித்துக் கொண்டு அடுத்த வாரம் வருகிறேன்” என்றான்.
ராஜி சரி என்பது போல் தலையை அசைத்தாள்.
“இது ரொம்ப அநியாயம்.” நான் குரலை உயர்த்தி ஏதோ சொல்லப் போனேன். கிருஷ்ணன் மேற்கொண்டு பேச்சை வளர்க்க விரும்பாதவன் போல் முகத்தைத் திருப்பிக் கொண்டான். அவன் முகத்தில் தென்பட்ட எரிச்சலை பார்த்ததும் நான் சொல்ல நினைத்தது குரல் வளையத்திலேயே நின்று விட்டது. போன தடவை என்னை ரயிலில் ஏற்றிவிட வந்தபோது அவன் ஜாலியாக, நெருக்கமானவன்போல் பேசியது நினைவுக்கு வந்தது.
ரயில் நகர்ந்தது. கிருஷ்ணன் ராஜியைக் கடிதம் எழுதச் சொல்லி சொன்னான். ராஜியை நேராக மதுசூதன் வீட்டில் கொண்டு விடச் சொல்லி எனக்கு நினைவுப் படுத்தினான். ரயில் வேகத்தை எட்டியது. கிருஷ்ணன் மக்கள் கூட்டத்தில் கலந்து விட்டான்.
ரயிலில் வரும்போது ராஜியிடம் கேட்டேன். “ராஜி!உன் அண்ணாவுக்கு இவ்வளவு பிடிவாதம் ஏன்? எங்கள் வீட்டு வாசற்படி மிதிக்கக் கூடாது என்பதுபோல் பேசுகிறானே?”
“எனக்குத் தெரியாது அண்ணீ!” என்றாள் ராஜி. அந்த பிரஸ்தாபனை வந்ததும் அவள் முகம் சுருங்கிவிட்டது போல் மாறியதை கவனித்தேன். மேற்கொண்டு அதைப்பற்றி பேசாமல் விட்டுவிட்டேன்.
ஸ்டேஷனில் இறங்கியதும் ராஜேஸ்வரி மதுசூதன் வீட்டுக்கு போக வேண்டும் என்று நினைவுப் படுத்தினான். நான் ராஜியின் கையை அழுத்தமாக பிடித்துக்கொண்டேன்.
“ராஜி! இந்த விஷயத்தில் நான் உங்க அண்ணாவின் பேச்சை கேட்பதாக இல்லை. எந்த உரிமையில் நீங்க அழைக்காவிட்டாலும் நான் உங்கள் வீட்டுக்கு வந்தேனோ, அதே உரிமையுடன் நீ எங்கள் வீட்டுக்கு நாங்க அழைக்காவிட்டாலும் வரணும்.”
“ஆனால்…” ராஜி பயந்துகொண்டே பார்த்தாள்.
“எங்கள் வீட்டில் உனக்கு எந்தக் குறையும் வராது. யாரும் உன்னை எதுவும் சொல்ல மாட்டார்கள். போதுமா?”
“நான் சொல்ல வந்தது அது இல்லை. அண்ணன்…”
“இந்தக் கோழைத்தனத்தை விட்டு நீ வெளியே வரணும் ராஜி.” கம்பீரமாக மொழிந்தேன்.
“அண்ணனுக்குப் பிடிக்காத எந்தக் காரியத்தையும் என்னால் செய்ய முடியாது.” ராஜி முணுமுணுத்தாள்.
“இதில் பிடிக்காமல் இருப்பதற்கு எதுவும் இல்லை. போகப் போக உனக்கே புரியும்.”
தயக்கத்தின் காரணமாக ராஜி என்னை எதிர்த்துப் பேசவில்லை என்பதை அவளுடைய பார்வையிலிருந்தே புரிந்துகொண்டேன்.
டாக்ஸிக்கு பணம் கொடுத்துவிடு வீட்டில் அடியெடுத்து வைக்கும்போது என் இதயத்தில் தடக் தட்க் என்று ரயில் ஓடத் தொடங்கியது. பற்றுகோலுக்காக ராஜியின் கையை பலமாக பிடித்துக் கொண்டேன். பாவம் ராஜி! நான் அவளுக்குத் தைரியம் கொடுப்பதற்காக கையைப் பிடித்தேன் என்று நினைத்து நன்றி கலந்த பார்வையுடன் என் பக்கம் பார்த்தாள்.
ஹால் நடுவில் நின்றுகொண்டு “மாமி!” என்று குரல் கொடுத்தேன். வீடு முழுவதும் நிசப்தமாக இருந்தது. அம்மா இருக்கும் சந்தடியே தெரியவில்லை. சில சமயம் அம்மா இருந்தாலும் வீடு இதுபோல் நிசப்தமாக இருக்கும். அதனால் மேலும் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக குரலை உயர்த்தி மறுபடியும் அழைத்தேன். “மாமீ!!”
என் கண்கள் அம்மா எந்த அறையிலிருந்து, எந்த மூலையிலிருந்து வருவாளோ என்று பரபரப்புடன் தேடிக் கொண்டிருந்தன. ஆனால் அம்மா வரவில்லை. திருநாகம் மாமிதான் வந்தாள். கைவேலையை விட்டுவிட்டு வருவது போல் புடவைத் தலைப்பில் கையைத் துடைத்துக் கொண்டே வேகமாக வந்தாள்.
“அம்மா எங்கே?” என்றேன்.
“அம்மா வீட்டில் இல்லை. கிளப்பில் எல்லோரும் சேர்ந்து மகாபலிபுரம் போயிருக்காங்க. நீங்க வரப் போவதாக எங்களுக்குத் தெரியாதே?” திருநாகம் மாமி சொல்லிக் கொண்டே ராஜேஸ்வரியின் பக்கம் கேள்விக்குறியுடன் பார்த்தாள்.
தற்சமயம் அம்மா வீட்டில் இல்லை என்றதும் எனக்கு தைரியம் வந்துவிட்டது. பழைய மீனாவாக மாறிவிட்டேன்.
“வாசலில் லக்கேஜ் இருக்கு. எடுத்துக்கொண்டு வாங்க.” மிடுக்காக சொன்னேன். மாமி வெளியே போனாள்.
“எங்கள் வீட்டு சமையல்காரமாமி.” ராஜேஸ்வரியிடம் சொன்னேன்.
ராஜேஸ்வரி நவீனமாக இருந்த எங்கள் வீட்டை, அதில் இருந்த விலை உயர்ந்த பர்னிச்சரை வியப்புடன் பிரமித்துப் போனவளாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
மாலையில் அம்மா வந்தாள். சாரதியும் கூட இருந்தான்.
அம்மா என்னைப் பார்த்ததும் ஆச்சரியப்பட்டாள். “இதென்ன? அப்பா எங்கே? நீ மட்டும் தனியாக எப்படி வந்தாய்?” அடுத்தடுத்து கேள்விகளை கேட்டாள்.
ஏற்கனவே அம்மாவிடம் என்ன பேசுவது? எப்படிப் பேசுவது என்று மனப்படாம் செய்து, கண்ணாடியின் முன்னால் ஓரிரு முறை ஒத்திகையும் பார்த்துவிட்டேன். அதை அப்படியே ஒப்புவித்தேன்.
“அப்பாவிடம் சொல்லிக் கொள்ளாமல் வந்துவிட்டேன் மம்மீ.”
“சொல்லிக் கொள்ளாமல் வந்தாயா?”
“ஆமாம். சும்மா இல்லை. சண்டை போட்டு விட்டு சொல்லாமல் வந்து விட்டேன்.”
அம்மா வியப்புடன் என் பக்கம் பார்த்துக் கொண்டிருந்தாள். அம்மாவின் குரலைக் கேட்டதும் அறையிலிருந்து ராஜேஸ்வரி வெளியே வந்தாள். எனக்கு பின்னால் வந்து நின்ற ராஜியை சாரதியும், அம்மாவும் யார் இந்த புது நபர் என்பது போல் பார்த்தார்கள்.
நான் அவர்கள் பேசுவதற்கு வாய்ப்பு தராமல் அவசர அவசரமாக சொன்னேன். “மம்மீ! இந்தப் பெண் என்னுடைய பழைய பிரண்ட். பெயர் ராஜேஸ்வரி. கான்வெண்டில் படிக்கும் போது நாங்க இருவரும் கிளாஸ்மேட்ஸ். இந்தப் பெண்ணுக்குத் தந்தை இல்லை. மாற்றான் தாயும், அண்ணனும் இருக்கிறார்கள். அவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? இவளுடைய படிப்பை நிறுத்தியதோடு அல்லாமல் இரண்டாவது தாரமாக கொடுக்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்தப் பைத்தியம் எதிர்ப்பு தெரிவித்திருக்கலாம் இல்லையா? போகட்டும். வீட்டை விட்டு வெளியேறி இருக்கலாம். இரண்டும் செய்யாமல் விஷத்தை குடிக்க தயாராகிவிட்டாள். ச்சி… ச்சி… என்ன பெண் ஜென்மமோ? இதுபோன்ற கோழைகளை பார்த்தால் உங்களுக்கு ஏன் இவ்வளவு எரிச்சல் வருமோ இப்போ புரிகிறது. நான் சரியாக அந்த ஊருக்குப் போனதும், அங்கே பிரண்ட் இருப்பது நினைவுக்கு வந்து வீட்டை தேடிக் கொண்டு போனதும் அவளுடைய அதிர்ஷ்டம்தான். என்னைப் பார்த்ததும் ஹோவென்று அழுதுவிட்டாள். விஷயம் என்னவென்று கேட்ட பிறகு தன் கதையைச் சொன்னாள். கூடவே அழைத்துக் கொண்டு ஹோட்டலுக்கு வந்துவிட்டேன். அப்பாவிடம் எல்லா விவரமும் சொல்லிவிட்டு ‘இந்தப் பெண்ணை நாம்தான் காப்பாற்றணும் டாடீ’ என்றேன்.”
மூச்சு எடுத்துக் கொள்வதற்காக ஒரு நிமிடம் நிறுத்தினேன். முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு “டாடீ என்ன சொன்னார் தெரியுமா? நிச்சயம் ஆன திருமணத்தை நிறுத்துவது தவறாம். ஒருத்தருடைய வாழ்க்கையை நம்மால் சீர்திருத்த முடியாதாம். அடுத்தவர்களின் குடும்ப விவகாரங்களில் தலையிடக் கூடாதாம். என் சிநேகிதியை உடனே வீட்டுக்கு அனுப்பிவிடச் சொன்னார். நான் சம்மதிக்கவில்லை. இருவரும் சண்டை போட்டுக் கொண்டோம். என்னை ஊட்டிக்கு அழைத்து வந்ததே மிகப் பெரிய தவறு என்று அப்பா சொல்லிவிட்டார். எனக்குக் கோபம் வந்து விட்டது. அப்பா வேலை விஷயமாக வெளியே போயிருந்தார். ‘அம்மாவிடம் போகிறேன்’ என்று துண்டுச் சீட்டில் எழுதி வைத்துவிட்டு வந்து விட்டேன். நீயே சொல்லு மம்மீ! ஆபத்தில் இருக்கும் ஒரு சிநேகிதிக்கு ஆதரவு தருவது தவறான காரியமா?” மம்மியை நெருங்கி முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டு கேட்டேன்.
அம்மாவின் கண்கள் பெருமையுடன் மின்னின. நான் அப்பாவிடம் சண்டை போட்டேன் என்ற விஷயம் அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷத்தை அளித்தது,
சாரதி நிலைப்படியில் நின்றிருந்த ராஜேஸ்வரியின் பக்கம் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருப்பதை ஓரக்கண்ணால் கவனித்து விட்டேன்.
“சொல்லுங்கள் மம்மீ! ராஜேஸ்வரியை இப்படி அழைத்து வருவது தவறு என்று நீங்களும் நினைக்கிறீங்களா? அப்படி நினைத்தால் இப்பொழுதே அவளைத் திருப்பி அனுப்பி விடுகிறேன். ஏற்கனவே அவள் மிரண்டு போயிருக்கிறாள். அப்பா அப்படி சொன்ன பிறகு நம் வீட்டிற்கு வரமாட்டேன் என்றுதான் சொன்னாள். எங்க அம்மாவைப் பார்த்த பிறகு மற்றதை பேசு என்று கட்டாயப்படுத்தி அவளை அழைத்து வந்தேன்” என்றேன்.
அம்மா ராஜேஸ்வரியின் பக்கம் பார்த்தாள்.
ராஜி நான் ஜோடித்து சொன்ன கதையைக் கேட்டுவிட்டு திகைத்து போனவள் போல் குழப்பத்துடன் பார்த்தபடி நின்றிருந்தாள்.
அம்மா ராஜேஸ்வரியை அருகில் வரச்சொல்லி அழைத்தாள். “உன் பெயர் என்ன?” அன்பு ததும்பும் குரலில் கேட்டாள்.
“ரா… ராஜேஸ்வரி.” நாக்கு வரண்டு விட்டது போல் தடுமாறிக் கொண்டே சொன்னாள்.
நான் பின்னாலிருந்து அம்மாவின் கழுத்தைச் சுற்றிலும் கைகளை போட்டு பிணைத்துவிட்டு செல்லம் கொஞ்சுவது போல் சொன்னேன். “உலகத்தில் பெண்களுக்கு இவ்வளவு கஷ்டங்கள் இருக்கும் என்று எனக்குத் தெரியாது மம்மி! ராஜேஸ்வரியைப் பார்த்த பிறகுதான் உலகத்தை ஓரளவுக்குப் புரிந்து கொண்டேன். உங்களைப் போன்ற மம்மி இருப்பது என்னுடை அதிர்ஷ்டம்தான்.”
அம்மா தன் சந்தோஷத்தை வெளிப்படுத்துவது போல் என் தலையை அழுத்தினாள். ராஜேஸ்வரியிடம் வாக்குக் கொடுப்பது போல் சொன்னாள். “உனக்கு எந்த பயமும் வேண்டாம். உன் வாழ்க்கைக்கு நல்ல வழியைக் காட்டும் பொறுப்பு இனி என்னுடையது. மீனாவுடன் நீ இந்த வீட்டில் நிம்மதியாக இருந்துகொள். மீனாவைப் போன்ற சிநேகிதி இருப்பது எவ்வளவு பெரிய அதிர்ஷ்டமோ போகப் போக உனக்கே புரியும்.”
ராஜேஸ்வரி குனிந்ததலை நிமிரவில்லை. பார்வை தரையோடு தரையாகப் பதிந்து போய் விட்டது போல் நின்றிருமந்தாள்.
“உனக்கு ஏதாவது வேலைகள் தெரியுமா?” அம்மா கேட்டாள்.
“ஓ… ரொம்ப நன்றாக சமைப்பாள் மம்மி! தையல், பின்னல் எல்லா வேலையும் தெரியும். ரொம்ப நன்றாகப் பாடுவாள்” என்றேன்.
அம்மா எங்களை உள்ளே போகச் சொன்னாள்.
“மம்மீ! அப்பாவுக்கு போன் செய்து நான் வந்து சேர்ந்து விட்டதாகச் சொல்லி விடுங்கள்” என்றேன்.
“சரி. அப்படியே செய்கிறேன்.”
சாரதி எழுந்து போன் அருகில் சென்றான். அம்மா அப்பாவிடம் “மீனா வீட்டுக்கு வந்துவிட்டாள். நீங்க கவலைப் படாதீங்க” என்று சொல்லும் போது பக்கத்திலேயே இருந்தேன்.
மீனா வந்துவிட்டாள் என்று அம்மா சொன்னதைக் கேட்டு மறுமுனையில் அப்பா எப்படி பதற்றமடைந்திருப்பாரோ என்னால் ஊகிக்க முடியும்.
சற்று நேரம் கழித்து அம்மா குளிப்பதற்காக பாத்ரூமுக்குள் சென்றாள். சாரதி விடைபெற்றுக் கொண்டு சென்றுவிட்டான்.
நானும் ராஜேஸ்வரியும் தனிமையில் இருந்தோம். ராஜேஸ்வரி வெளிறிப் போன முகத்துடன் என் அருகில் வந்து “அண்ணி!” என்றாள்.
அவளுடைய பயத்தைப் புரிந்துகொண்டவள் போல் நயமான குரலில் சொன்னேன். “ராஜி! அப்பா வந்ததும் நடந்ததை எல்லாம் சொல்லி விடுகிறேன். பிறகு நாம் பயப்பட வேண்டியதே இல்லை. அம்மாவிடம் உண்மையைச் சொல்லியிருப்பேன். ஆனால் சாரதியும் கூட வந்து விட்டதால் நிலைமையை சமாளிக்க அப்படிச் சொல்லும்படியாக ஆகிவிட்டது” என்றேன்.
“அண்ணாவுக்குக் கடிதம்…”
“நான் எழுதுகிறேன். நீ எதற்கும் பயப்பட வேண்டியதில்லை. நிம்மதியாக இரு.”
“அண்ணன் சொன்னதற்கு மாறாக இதுவரையில் நான் நடந்துகொண்டதே இல்லை.”
“இப்போ கூட நீயாக எதுவும் செய்யவில்லையே? நான்தானே உன்னை அழைத்து வந்தேன்” என்றேன் தைரியம் சொல்லுவது போல்.
இரண்டு நாட்களில் சமூகத் தலைவி யாரோ கிளப்புக்கு வரப் போகிறாளாம். அம்மா அந்த ஏற்பாடுகளில் மும்முரமாக இருந்தாள்.
மறுநாள் மாலையில் அப்பா ஊட்டியிலிருந்து திரும்பி வந்தார். ராஜேஸ்வரியைப் பார்த்து, அம்மா சொன்ன கதையைக் கேட்டு அவர் அடைந்த ஆச்சரியம் கொஞ்ச நஞ்சமில்லை. நடுநடுவில் அவருடைய கண்கள் என்னை தீட்சண்யமாக பார்த்துக் கொண்டிருந்தன.
அன்று இரவு அப்பா என்னை தன்னுடைய அறைக்கு வரச்சொல்லி அழைத்தார். நான் சுருக்கமாக நடந்ததைத் தெரிவித்துன். ராஜியின் திருமணம் என் காரணமாக நின்று விட்டது என்று தெரிந்ததும் அவருடைய முகம் கறுத்துவிட்டது. கொஞ்ச நேரம் மௌனமாக இருந்துவிட்டார்.
“சரி. நடந்தது நடந்துவிட்டது. ராஜியை இங்கே எதற்காக அழைத்து வந்தாய்? இந்தக் கதை எல்லாம் என்ன?” என்றார் கோபமாக.
என்னால் உடனே பதில் சொல்ல முடியவில்லை. நான் நினைத்தது உண்மையாகிவிட்டது. ராஜியை அழைத்துக் கொண்டு நான் நேராக ஊட்டிக்குச் சென்றிருந்தால் அவளை சென்னைக்கு அழைத்து வருவதற்கு அப்பா சம்மதித்து இருக்கமாட்டார். அந்த பயம் இருந்ததால்தான் நேராக விட்டுக்கு அழைத்து வந்து விட்டேன்.
அப்பா மேலும் சொன்னார். “சரி. அழைத்து வந்ததுதான் வந்துவிட்டாய். இப்பொழுதும் ஒன்றும் மிஞ்சிப் போய் விடவில்லை. நாளைக்கே அவளை அழைத்துப் போய் மதுசூதன் வீட்டில் விட்டுவிடு” என்றார்.
ஏமாற்றமாக இருந்தது எனக்கு. ரோஷம் தலை தூக்கியது. “ராஜியை இங்கிருந்து அனுப்புவதா வேண்டாமா என்பது முழுக்க முழுக்க என் விருப்பத்தைப் பொறுத்தது. அவளை உங்களுடைய தங்கையின் மகளாக இந்த வீட்டுக்கு அழைத்து வரவில்லை. என்னுடைய சிநேகிதியாக நினைத்து அழைத்து வந்தேன். இந்த விஷயத்தில் தயவு செய்து நீங்க தலையிடாதீங்க. என் காரணமாக அவள் திருமணம் தடைபட்டு அவர்களுடைய குடும்ப அமைதி குலைந்து விட்டது. மறுபடியும் அவள் கல்யாணம் என் மூலமாக செட்டில் ஆகவேண்டும் என்று தீவிரமாக இருக்கிறேன். இது என்னுடைய சொந்த விஷயம்.”
தீர்மானமாக சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியேறப் போனவள் பின்னால் திரும்பி மேலும் சொன்னேன். “இந்த வீட்டில் நான் சொன்னதுதான் நடக்கும் என்று வெளிஉலகத்தாருக்கு ஒரு பிரமையை ஏற்படுத்திருக்கீங்களே. அது என்னவென்று இப்போ பரீட்சை செய்து பார்க்கப் போகிறேன். உண்மையிலேயே என் வார்த்தைக்கு அம்மாவும் நீங்களும் என்ன மதிப்பு கொடுப்பீங்களோ இப்போ தெரிந்துவிடும். ராஜி விஷயத்தில் நீங்க எதுவும் பேச வேண்டாம். உங்களால் எதுவும் செய்ய முடியாத போது பார்த்துக் கொண்டு மௌனமாக இருங்கள். இது என்னுடைய வேண்டுகோள்.” சொல்லிவிட்டு விருட்டென்று திரும்பிவிட்டேன்.
என் அறைக்கு வந்தபோது ராஜி விழித்துக் கொண்டு இருந்தாள். கட்டில் மீது அமர்ந்து கொண்டு “கொஞ்சம் நகர்ந்து கொள்” என்றேன். நகர்ந்தாள். அவள் பக்கத்தில் படுத்துக் கொண்டே “தூக்கம் வரவில்லையா?” என்றேன்.
“ஊஹ¤ம்.”
“அண்ணனை பற்றி ஏக்கமா?” முறுவலுடன் கேட்டேன். ராஜி பதில் சொல்லவில்லை.
நான் செய்த காரியம் இந்த பக்கம் அப்பாவுக்கும், அந்த பக்கம் கிருஷ்ணனுக்கும் கொஞ்சம் கூட பிடிக்காது என்று எனக்குத் தெரியும். ராஜி விஷயம் வேறு. தன் காரணமாக நான் எங்கே சங்கடத்தில் மாட்டிக் கொள்வேனோ என்று பயப்படுகிறாள்.
அம்மா மனம் வைத்தால் ராஜிக்கு நல்ல இடத்தில் வரன் பார்க்க முடியும். நல்ல பையன் கிடைத்து, திருமணமும் முடிந்துவிட்டால், பிறகு ராஜி யார் என்று தெரிந்தாலும் பிரச்னை இல்லை. ராஜியை என்னிடமே வைத்துக் கொண்டு அவளுக்கு நல்ல பையனாகப் பார்த்து மணம் முடிக்க வேண்டும் என்று ஏனோ என் மனம் பிடிவாதமாக இருந்தது. இதற்கு முன் எந்த விஷயத்திலேயும் நான் இவ்வளவு தீவிரமாக ஈடுபட்டதில்லை. இதில் நான் எதிர்கொள்ளக் கூடிய சாதகபாதங்களை தேவைப்பட்டால் ஒண்டியாகவே சமாளிக்க முடிவு செய்தேன்.

Series Navigation

கௌரிகிருபானந்தன்

கௌரிகிருபானந்தன்