முள்பாதை 32

This entry is part [part not set] of 23 in the series 20100606_Issue

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்


email id tkgowri@gmail.com

நாங்கள் வீட்டுக்கு வரும்போது அம்மா, அப்பா, மிஸெஸ் ராமன் மற்றும் அவளுடைய கணவரும் எங்களுக்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்பா வாசலிலேயே எதிர்கொண்டு சாரதியை அன்புடன் உள்ளே அழைத்துச் சென்றார். அன்று மிஸெஸ் ராமன் தம்பதியரும் எங்களுடன் சேர்ந்து சாப்பிட்டார்கள். மூச்சு கூட விட முடியாத அளவுக்கு பிசியாக இருந்தும் அம்மா சாரதிக்குப் பிடித்தமான உணவு வகைகளை தயாரிக்கச் செய்திருந்தாள். சாப்பிடும்போது அவனுக்குப் பக்கத்திலேயே அமர்ந்துகொண்டு பார்த்துப் பார்த்து பரிமாறச் செய்தாள்.
அம்மாவின் மனதில் ஸ்திரமாக இடம் பிடித்துவிட்ட சாரதியைக் கண்டால் என் மனதில் பொறாமை மீண்டும் தலைதூக்கியது. சாப்பிட்டு முடித்த பிறகு அம்மாவும், ராமன் தம்பதியரும் கிளம்பி விட்டார்கள். சாரதி ரெஸ்ட் எடுத்துக் கொள்வதற்காக ரூமுக்குப் போய்விட்டான். அவனுக்காக எங்கள் வீட்டிலும், மிஸெஸ் ராமன் வீட்டிலும் தனியாக அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அவன் எங்கே வேண்டுமானாலும் தங்கிக் கொணள்வதற்கு வசதியாக இருக்கணும் என்று அம்மா இந்த ஏற்பாடு செய்தாள்.
அம்மாவையும், ராமன் தம்பதியரையும் கிளப்பில் இறக்கிவிட்டு தன்னுடைய வேலையும் முடித்துக்கொண்டு மாலை ஐந்துமணி ஆகும்போது அப்பா திரும்பி வந்தார். மாலையானதும் அம்மாவின் ஆணையின்படி சாரதி அனுப்பிய சிவப்பு நிற ஜரிகை எம்பிராய்டரி புடவை¨யும், அதற்கு மெட்ச் ஆக பிளவுசும் அணிந்து கொண்டேன். டார்க் கலர் உடைகள் எனக்குக் கொஞ்சம் கூட பிடிக்காது. எப்பொழுதாவது அணிந்த கொண்டாலும் ஏதோ உறுத்துவதுபோல் இடைஞ்லாக இருக்கும். எப்போ லைட் கலர் புடவைக்கு மாறுவோம் என்று தவிப்பேன்.
ஆனால் என் கருத்தை அம்மா ஒருநாளும் ஏற்றுக் கொண்டதில்லை. “மஞசள் கலந்த வெண்மை நிறம் உன்னுடையது. பளிச்சென்று தெரியணும் என்றால் டார்க் கலர்தான் உடுத்தணும்” என்று அடித்துப் பேசுவாள்.
அன்று மதியம் கிளப்புக்குப் போகும் முன் என் அருகில் வந்து “மாலையில் இந்தப் புடவையை கட்டிக்கொள்” என்று சாரதி அனுப்பியிருந்த புடவையைக் கட்டில்மீது வைத்தாள்.
“மம்மீ! டார்க் ரெட்! கட்டிக் கொண்டால் அடிக்க வருவதுபோல் இருக்கும்” என்று முணுமுணுத்தேன்.
அம்மா என்னை சுட்டெரிப்பதுபோல் பார்த்தாள். குரலை தாழ்த்திக்கொண்டு “பைத்தியம்போல் பேசாதே. சொன்னதை செய். சும்மா சொன்னதையே சொல்லிக் கொண்டு என் கோபத்தைக் கிளறாதே” என்று சொல்லிவிட்டு போய்விட்டாள்.
அம்மா போன திசையையே பார்த்துக் கொண்டிருந்தேன். எந்த விஷயமாக இருந்தாலும் என்னுடைய அபிப்பிராயத்தை வெளியில் சொன்னால் அம்மாவுக்கு அது பைத்தியக்காரத்தனமாகத் தோன்றும். அந்த நிமிடம் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டாலும் மாலை ஆனதும் அம்மா சொன்னது போலவே தயாரானேன். ஆறுமணி அடிக்க ஐந்து நிமிடங்கள் இருக்கும்போது அம்மாவிடமிருந்து போன் வந்தது. “சாரதி எழுந்து விட்டானா? காபி சாப்பிட்டானா?” என்று விசாரித்தாள்.
அப்பொழுதுதான் எழுந்து கொண்டான் என்றும், முகம் அலம்பப் போயிருப்பதாகவும் சொன்னேன்.
“அவசரம் ஒன்றும் இல்லை. ஆறரை மணிக்கு வந்தால் போதும்” என்றாள்.
“சரி மம்மி.”
“நீ ரெடியாகிவிட்டாய் இல்லையா. நான் சொன்ன புடவையைத்தானே உடுத்திக் கொண்டு இருக்கிறாய்?”
“ஊம்.”
“நல்ல காரியம் செய்தாய்.” போனை வைத்து விட்டாள்.
நிலைக்கண்ணாடியின் முன் நின்றபடி கூந்தலில் பூச்சரத்தை வைத்துக் கொண்டிருந்த போது திருநாகம் மாமி உள்ளே எட்டிப் பார்த்துக் கொண்டே “உங்களுக்குப் போன் வந்திருக்கு” என்றாள்.
“மறுபடியும் யாரு?” எரிச்சலுடன் §க்டேன்.
“எனக்குத் தெரியாது. ஆனால் போன் செய்தது உங்க அம்மா இல்லை.”
“அம்மா இல்லையா? பின்னே யாரு?” விருட்டென்று திரும்பினேன்.
“எனக்கு என்ன தெரியும்? யாரோ ஆணுடைய குரல்.” மாமியின் குரலில் சந்தேகம் எட்டிப் பார்த்தது.
“ஆணின் குரலா?” அப்பாவும் சாரதியும் விட்டிலேயே இருக்கிறார்கள். வேறு யார் எனக்குப் போன் செய்யக் கூடும்? வேகமாகப் படியிறங்கி கீழே வந்தேன். ரிசீவரை எடுத்து “ஹலோ” என்றேன்.
“மீனா!” நயமான குரலில் யாரோ அழைத்தார்கள்.
“யாரு?”
“நான்தான்.”
“கிருஷ்ணா!”
“ஆமாம்.”
பதற்றத்துடன் சுற்றிலும் பார்வையிட்டேன். நல்ல வேளையாக அருகில் யாரும் இல்லை.
“என்ன விஷயம்?” தைரியமாக கேட்டேன்.
“மீனா! ரயிலுக்கு இன்னும் நேரம் இருக்கிறது. நான்…”
“வேண்டாம் வேண்டாம். போகாதே. முக்கியமான விஷயம் பேசணும்.”
“அதை இப்போ போனில் சொல்லக்கூடாதா?”
“இப்பொழுதா? முடியாது.”
“ஏன் பிசியாக இருக்கிறாயா?”
“ஆமாம்.”
ஒரு நிமிடம் இருவருக்குமிடையே மௌனம் நிலவியது.
“சாரி மீனா! உன்னை டிஸ்டர்ப் செய்து விட்டேனா?” மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்பதுபோல் இருந்தது அவன் குரல்.
“பரவாயில்லை.”
“எனக்கு தஞ்சாவூரில் கொஞ்சம் வேலை இருக்கிறது. நாளைக்கு ஒருத்தரை சந்திக்கணும். வேண்டுமென்றால் அடுத்த வாரம் மறுபடியும் வருகிறேன்.”
“ஊஹ¤ம். நீ போகக்கூடாது. நாளைக்கு நான் சொன்ன நேரத்தை மறந்து விடாதே. அப்பா வீட்டில் இருக்கிறார். அழைக்கட்டுமா… பேசுகிறாயா?”
“ஊஹ¤ம். வேண்டாம்.” போனை வைத்துவிட்டான். நான் கொஞ்ச நேரம் அப்படியே நின்று விட்டேன். எனக்கு ஏனோ ரொம்ப அவமானமாக, திருட்டுத்தனம் செய்து விட்டதுபோல் தலைகுனிவாக இருந்தது. பத்து நாட்கள் மெலட்டூரில் அவர்கள் வீட்டில் தங்கிவிட்டு வந்திருக்கிறேன். அவர்களுடைய விருந்தோம்பலை அனுபவித்துவிட்டு வந்திருக்கிறேன். கிருஷ்ணன் இந்த ஊருக்கு வந்தால் மரியாதைக்காகக்கூட எங்கள் வீட்டுக்கு வா என்று அழைக்க முடியாத நிலையில் இருக்கிறேன்.
என்னுள் ரோஷம் தலைதூக்கியது. என்ன நடந்தாலும் சரி, கிருஷ்ணனை வீட்டுக்கு அழைத்தாக வேண்டும். முதலில் அப்பாவின் சம்மதம் பெற்றுவிட்டால் பிறகு அம்மாவை சமாளித்து விடலாம். இந்த வீட்டுக்கு எத்தனை பேர் வந்து போய்க் கொண்டு இருக்கிறார்கள்? அப்படி வருகிறவர்கள் எல்லோரும் எங்களுக்கு நெருக்கமானவார்களா என்ன?
பண்பு என்ற பெயரில் பரம விரோதியிடம் கூட சிரித்துப் பேசக்கூடிய அம்மா இவர்களிடம் இவ்வளவு கடினமாக ஏன் இருக்க வேண்டும்? எந்தக் காலத்திலேயோ கருத்து வேற்றுமை ஏற்பட்டால் அதை மனதில் வைத்துக் கொண்டு பகையைக் கொண்டாடத்தான் வேண்டுமா? காலத்துடன் சில வேண்டாத நினைவுகளை மறந்து விடுவதுதானே மனுஷத்தன்மைக்கு அடையாளம்!
வேகமாக அப்பாவின் அறைக்குள் நுழைந்தேன். அப்பா ஏற்கனவே ரெடியாகி எங்களுக்காக காத்திருப்பதுபோல் பேப்பரை புரட்டிக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும் பேப்பரை பக்கத்தில் வைத்துவிட்டு “சாரதி ரெடியாகிவிட்டானா? கிளம்பலாமா?” என்றார்.
“சாரதி குளித்துக் கொண்டிருக்கிறான்” என்றேன்.
அபாபா வாட்சைப் பார்த்துக் கொண்டார். “இன்னும் நேரம்தான் இருக்கிறதே. ஆறரைமணிக்குத் தொடங்கும் என்று சொல்லியிருக்கிறார்களே ஒழிய நேரத்தோடு ஆரம்பித்து விடுவார்களா என்ன? அதிலும் பெண்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி இல்லையா?” அப்பா சிரித்துக் கொண்டே சொன்னார்.
அவ்வளவு சாதாரணமாக பேசுகிறவரிடம் திடீரென்று கிருஷ்ணனைப் பற்றி எப்படி பேசுவது என்று புரியவில்லை.
அப்பா மறுபடியும் பேப்பரில் மூழ்கிவிட்டார்.
“டாடீ!”
“என்ன மீனா?”
“கிருஷ்ணன் இந்த ஊருக்கு வந்திருக்கிறான். உங்களுக்குத் தெரியுமா?”
அப்பா சரேலென்று நிமிர்ந்து பார்த்தார். “ஆமாம். உனக்கு எப்படி தெரியும்?”
வாயடைத்துப் போனவள் போல் பார்த்தேன். “உங்களுக்குத் தெரியுமா?” எத்தனையோ முயற்சி செய்த பிறகு கேட்க முடிந்தது என்னால்.
“தெரியும். நேற்று வந்தான். இன்று மாலை ஊருக்குப் போய் விடுவதாக சொன்னான். ஆனால் மதியம் சந்தித்தபோது ஏதோ முக்கியமான வேலை வந்து விட்டதாகவும், இன்று போக முடியாது போலிருக்கு என்றும் சொன்னான்.”
“இன்று மதியம் நீங்க அவனை சந்தித்தீர்களா?”
அப்பா தலையை அசைத்தார். “ஆமாம். உங்க அம்மாவை கிளப்பில் இறங்க்கிவிட்ட பிறகு அத்தனை நேரம் எங்கே போனேன் என்று நினைத்தாய்? கிருஷ்ணனைப் பார்க்கத்தான். அதுசரி, நீ அவனை எங்கே பார்த்தாய்? சொல்லவே இல்லையே?”
“ஏர்போர்ட்டில்.”
“மதுசூதன் இன்று பெங்களூருக்கு போயிருப்பதாக சொன்னான். வழியனுப்ப போயிருந்தான் போலும்.”
“மதுசூதன் யாரு டாடீ?”
“கிருஷ்ணனின் நண்பன். அவனுடைய சித்தப்பாவின் நிலத்தைத்தான் கிருஷ்ணன் குத்தகைக்கு எடுத்துக் கொண்டிருக்கிறான்.”
எனக்கு திடீரென்று நினைவுக்கு வந்தது. “கிருஷ்ணன் எதற்காக இந்த ஊருக்கு வந்தானாம்? அதைப்பற்றி உங்களிடம் ஏதாவது சொன்னானா?” என்று கேட்டேன்.
“புதிதாக ஒன்றுமில்லை. பழைய பல்லவிதான். அந்த நிலத்தின் யஜமானி, அதாவது மதுசூதனின் சித்தப்பா, நிலத்தை வாங்க புது பார்ட்டீ வந்திருப்பதாகவும், விற்கப் போவதாகவும் தந்தி கொடுத்தாராம். அதே விலைக்குத் தானே வாங்கிக் கொள்வதாகவும், கொஞ்சம் அவகாசம் கொடுக்கச் சொல்லியும் கேட்பதற்காக வந்தானாம்.”
“அவகாசம் கொடுப்பதற்கு ஒப்புக் கொண்டாரா?”
“பதினைந்து நாட்கள் கொடுத்திருக்கிறார். அதுவும் மது ரொம்ப வற்புறுத்தி கேட்டுக் கொண்ட பிறகு.”
“என்ன விலையாம்?”
“ஒன்றரை லட்சம்.”
“ஒன்றரை லட்சமா!” கண்களை அகல விரித்துப் பார்த்தேன்.
“ஆமாம் அந்த நிலம் அவ்வளவு பெறும்.” அப்பா பேப்பரால முகத்தை மறைத்துக்கொண்டே சொன்னார். அவருடைய போக்கைப் பார்த்தால் உரையாடலை நீடிக்க விரும்பாததுபோல் தொன்றியது. அம்மாவிடம் எனக்கு பயம் அதிகம். அம்மா லேசாக முகத்தை சுளித்தால் போதும். அந்த சுற்றுவட்டாரத்தில் கூட இருக்க மாட்டேன். ஆனால் அப்பாவிடம் எனக்கு உரிமை இருக்கு. எப்போ, எது வேண்டுமானாலும் அவரிடம் கேட்கக் கூடிய சுதந்திரம் இருக்கு. அதனால் தைரியமாக உரையாடலை மேலும் நீத்தேன்.
ஒன்றரை லடசம்! கிருஷணன் எங்கிருந்து கொண்டு வருவான்? அப்பாவிடம் கேட்டிருப்பானா? கிருஷ்ணன் என்னைப் பார்த்த போது அப்பாவை சந்தித்ததாக பேச்சுவாக்கில் கூட சொல்லவில்லை. அந்த விஷயத்தை ரகசியமாக வைக்க வேண்டிய அவசியம் என்ன? திடீரென்று எனக்கு ஒரு சந்தேகம் வந்தது.
“டாடீ! கிருஷ்ணன் உங்களிடம் பண உதவி ஏதாவது கேட்டானா?”
அப்பா நிமிர்ந்து பார்த்தார். “அவனா? என்னையா? ஊஹ¤ம். இல்லை. நானாகக் கடன் தருவதாக சொன்ன போதும் சம்மதிக்கவில்லை. அவனைப் போன்ற பிடிவாதமான ஆசாமியை எங்கேயும் பார்த்ததில்லை.” கோபமாக சொன்னார்.
“பின்னே எங்கிருந்து பணம் புரட்டப் போகிறான்?”
“அதுதான் எனக்கும் தெரியவில்லை. அவ்வளவு பெரிய ரொக்கத்தை அவனுக்குக் கடனாக யார் தருவார்கள்? அப்படியே தந்தாலும் அங்கேயும் இதே பிரச்னையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வருங்கால மாமனாரிடம் கேட்பானோ என்னவோ?”
“சுந்தரியின் தந்தையிடமா?”
“ஆமாம். ஆனால் அவர் கடனாக தருவதற்கு சம்மதிக்கவில்லையாம். நிலத்தை வாங்கி மகள் பெயரில் ரிஜிஸ்டர் செய்து தருவாராம். அப்படிச் செய்வதில் கிருஷ்ணனுக்கு உடன்பாடு இல்லை. அந்த நிலம் என்றால் அவனுக்கு உயிர். அதை வாங்கினால் தானே வாங்க வேண்டுமென்ற பிடிவாதம். கையில் காலணா இல்லை. என்ன செய்யப் போகிறானோ தெரியவில்லை.” நாற்காலியின் பின்னால் சாய்ந்துகொண்டே அப்பா சொன்னார். மேஜைமீது ஒரே இடத்தில் நிலைத்துவிட்ட அவருடைய பார்வையிலிருந்து அவருடைய மனம் இங்கே இல்லை என்று புரிந்தது.
“நிலத்தைத் தவிர கிருஷ்ணன் வேற விஷயம் ஏதாவது சொன்னானா?”
“சொன்னான். ராஜியின் திருமணம் அடுத்த மாதம் நடக்கப் போகிறதாம்.”
“டாடீ!” செல்லமாக சிணுங்கினேன்.
என்ன என்பதுபோல் பார்த்தார்.
“ராஜிக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளையை நானும் பார்த்தேன். பார்க்க குரங்கு போல் இருப்பான்.”
“வாழ்க்கையில் தோற்றத்தைவிட குணம் முக்கியம் மீனா.”
“தோற்றம் சுமார் என்றாலும் பரவாயில்லை. ஆனால் சுபாவத்திலேயும் குரங்கு சேட்டைகளைப் பின்பற்றுபவனுடன் வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்வது கஷ்டம் இல்லையா?”
“என்ன சொல்ல வருகிறாய்?”
“ஆமாம் டாடீ! எனக்கு ஏனோ அந்த மாப்பிள்ளையைக் கொஞ்சம்கூட பிடிக்கவில்லை. ராஜியும் நான் சொன்னதை ஏற்றுக்கொண்டு கிருஷ்ணனிடம் தன்னுடைய மறுப்பை தெரிவிக்கப் போவதாக கடிதம் எழுதியிருக்கிறாள். அதனால் இந்தத் திருமணம் நடக்காது.”
“என்னது? அப்பா விருட்டென்று எழுந்துகொண்டார். அவர் முகம் சிவந்துவிட்டது. கண்கள் அக்னிப் பிழம்புகளாக ஜொலித்தன. உக்கிரமூர்த்தியாக இருந்த அவருடைய தோற்றத்தைப் பார்த்து மிரண்டு போனவளாக ஓரடி பின்னால் வைத்தேன்.
ஏனோ தெரியவில்லை. என்றுமே வராத அளவுக்கு அப்பாவுக்குக் கோபம் வந்து விட்டது. இதில் அப்பா இவ்வளவு கோபம் கொள்ள வேண்டிய அவசியம் என்னவென்று எனக்குப் புரியவில்லை. ராஜியை அந்தத் திருமணத்திலிருந்து தப்பிக்க வைத்தது நல்ல காரியம் இல்லையா? அவளுக்கு நான் செய்த நன்மை இல்லையா?
அப்பாவின் குரல் கடினமாக ஒலித்தது. “எதற்காக இப்படிச் செய்தாய்? இது மட்டும் பலித்துவிட்டால் கிருஷ்ணன் மறுபடியும் நம் முகத்தைப் பார்ப்பானா? உங்க அம்மா அவர்களுடைய உறவையே துண்டித்து விட்டாள். நீயானால் முகாலோபனை கூட இல்லாமல் செய்யப் போகிறாய். ராஜி அந்தத் திருமணத்தை மறுத்துவிட்டு என்ன செய்யப் போகிறாளாம்? இங்கே வந்து இருப்பாளாமா? உன்னால் அவளுக்கு எந்த உதவி செய்ய முடியும்? முகூர்த்த தேதி முடிவு செய்த பிறகு கல்யாணம் நின்றுவிட்டால் அந்தப் பட்டிக்காட்டில் அந்தக் குடும்பத்திற்கு எவ்வளவு தலைகுனிவாக இருக்குமோ உனக்குத் தெரியுமா?”
“டாடீ!”
“கடிதம் எழுதுவதற்கு முன்னால் என்னிடம் ஒரு வார்த்தையாவது கேட்டாயா? உன்னை மெலட்டூருக்கு அனுப்பி வைத்தது என்னுடைய முட்டாள்தனம். இத்தனை ஏற்பாடுகளை கஷ்டப்பட்டு செய்த பிறகு அந்தத் திருமணம் உன் காரணமாக நின்றுவிட்டது என்று தெரிந்தால் கிருஷ்ணன் என்ன செய்வான் தெரியுமா? உன்னை ஒன்றும் சொல்ல மாட்டான். நம்மிடமிருந்து ஆயிரம் மைல் தொலைவு தள்ளியிருப்பான். நான் அவர்களுக்கு எந்த உதவியும் செய்ய முடியாமல் போனாலும் ஏதோ கண்ணால் பார்த்து திருப்தி பட்டுக் கொள்கிறேன். கடைசியில் அந்த கொடுப்பினை கூட இல்லாதபடிக்கு செய்து புண்ணியம் கட்டிக் கொண்டு விட்டயா?”
“ஆனால் டாடீ…” விழிகளில் சுழன்ற கண்ணீரை கட்டுப்படுத்த முயற்சி செய்து கொண்டே சொன்னேன்.
“முதலில் இங்கிருந்து போய்விடு. ராஜியின் திருமணம் நடக்காதா? எப்படி நடக்காதோ நானும் பார்த்துவிடுகிறேன். இன்றே ராஜிக்குக் கடிதம் எழுதுகிறேன். பைத்தியக்காரத்தனமாக நடந்து கொள்ளாதே என்றும், கிருஷ்ணன் சொன்னபடி கேட்டு வீட்டின் கௌரவத்தை நிலைநாட்டு என்று எழுதப் போகிறேன். அது மட்டுமே இல்லை. ராஜிக்கு விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் குறித்த முகூரத்தத்தில் அவள் கழுத்தில் மூன்று முடிச்சு விழும்படி பார்த்துக் கொள்ளச் சொல்லி கிருஷ்ணனுக்கும் கடிதம் எழுதுகிறேன்.”
“இதில் நான் செய்த தவறு என்ன டாடீ?” அழுகை அடக்கிய குரலில் கேட்டேன்.
“தவறு என்னவென்று கேட்கிறாயா? உலகம் தெரியாத அப்பாவிப் பெண்ணின் மனதில் வேண்டாத ஆசைகளை விதைப்பது மன்னிக்க முடியாத குற்றம் இல்லையா? திருமணத்தை மறுத்துவிடு என்று நீ அவளைத் தூண்டிவிட்டாய். அவளும் மறுத்துவிடுவதாக ஒப்புக்கொண்டாள். அதற்குப் பிறகு? அதற்குப் பிறகு அவள் என்ன செய்யப் போகிறாள்? அவளுக்கு என்ன உதவி செய்ய முடியும் உன்னால்? அவளை அழைத்து வந்து இந்த வீட்டில் அடைக்கலம் தரப் போகிறாயா? இல்லை வேறு இடம் பார்த்து திருமணம் செய்து வைக்கப் போகிறாயா? உன்னால் என்ன செய்து விட முடியும் என்று அவளை கிருஷ்ணனுக்கு எதிராக திருப்பிவிட்டாய்? அதற்குப் பிறகு அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய பிரச்னைகளைப் பற்றி கொஞ்சமாவது யோசித்துப் பார்த்தாயா?”
வாயடைத்துப் போனவளாக கண்களை விரித்து அப்படியே பார்த்துக் கொண்டிருந்தேன். இவ்வளவு இயலாமையான நிலையில் நான் என்றுமே இருந்ததில்லை. அப்பாவும் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள முயற்சி செய்வதுபோல் அப்படியே நின்று விட்டார்.
“சாரி… என்னால் தாமதமாகிவிட்டதா?” என்று கேட்டுக் கொண்டே சாரதி உள்ளே வந்தான்.
தூக்கிவாரிப் போட்டதுபோல் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தேன். முறுவலுடன் என்னிடம் ஏதோ சொல்ல வந்த சாரதி என் முகத்தைப் பார்த்ததும் அப்படியே நின்று விட்டான். புரியாதவன் போல் அப்பாவையும், என்னையும் மாறி மாறி பார்த்தான். அப்பாவும் சரி, நானும்சரி எதுவும் பேச முடியாமல் மௌனமாக இருந்து விட்டோம்.
“மன்னிக்கணும். நான் உங்களை டிஸ்டர்ப் செய்து விட்டேன் போலிருக்கு” என்று சொல்லிக் கொண்டே திரும்பப் போனான்.
அதற்குள் அப்பா சமாளித்துக் கொண்டு விட்டார். “இல்லை … இல்லை. நீ உள்ளே வரலாம். வரவர மீனா சின்னக் குழந்தையைப் போல் சண்டித்தனம் செய்கிறாள். இப்படி எல்லாம் நடந்து கொள்ளக் கூடாதுன்னு எச்சரித்துக் கொண்டிருந்தேன். அவ்வளவுதான், கிளம்புவோமா?” அப்பா வாட்சைப் பார்த்துக் கொண்டே சொன்னார்.
“நானும் ரெடி.” சாரதியும் வாட்சைப் பார்த்தான்.
“இதோ வந்து விடுகிறேன்.” பொதுவாக சொல்லிவிட்டு விருட்டென்று அறையை விட்டு வெளியேறினேன்.
பத்து நிமிடங்கள் கழித்து என்னையை அறையில் மறுபடியும் முகம் அலம்பி லேசாக பவுடர் போட்டுக் கொண்டிருந்த போது திருநாகம் மாமி உள்ளே எட்டிப் பார்த்தாள்.
“அப்பாவும், மாப்பிள்ளை சாரும் காரில் உட்கார்ந்து கொண்டு உங்களுக்காக காத்திருக்கிறார்கள். நேரமாகி விட்டதாம்” என்று எச்சரித்துவிட்டு போய்விட்டாள்.
பேக்கை எடுத்துக் கொண்டு ஹைஹீல் செருப்பை மாட்டிக் கொண்டு ஓட்டமும் நடையுமாக கீழே வந்தேன். அப்பா ஏற்கனவே டிரைவிங் சீட்டில் அமர்ந்திருந்தார். சாரதி எனக்காக காத்திருப்பது போல் காரின் பின் கதவு அருகில் நின்றிருந்தான். என்னைப் பார்த்ததும் கதவைத் திறந்து பிடித்துக் கொண்டான். நான் காரில் ஏறும்போது அவன் ஓரக்கண்ணால் என்னை பரிசீலிப்பது என் கவனத்திலிருந்து தப்பவில்லை. காருக்குள் உட்கார்ந்தேன். சாரதி என்மேல் படுவதுபோல் அருகில் அமர்ந்து கொண்டான். நகர்ந்து உட்கார வேண்டும் என்று தோன்றினாலும் பண்பைக் கருதி சும்மாயிருந்தேன்.
நாங்கள் போய்ச் சேர்ந்த போது அம்மா வெளியிலேயே நின்று கொண்டிருந்தாள். அந்த நேரத்தில் அம்மாவைப் பார்க்கும்போது இவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்த மனுஷி இவள்தானா என்ற சந்தேகம் யாருக்குமே வரும். அவ்வளவு உற்சாகமாக, சுறுசுறுப்பாக இருந்தாள். ஏற்கனவே சில பிரமுகர்கள் வந்திருந்தார்கள். அம்மா அப்பா இருவரும் சேர்ந்து சாரதியை தங்களுடைய வருங்கால மாப்பிள்ளையாக அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்கள். அவர்களில் ஓரிரு பெண்மணிகள் என் அருகில் வந்து “யு ஆர் லக்கி” என்றும், “கங்கிராட்சுலேஷன்ஸ்” என்றும், இன்னும் ஏதேதோ சொன்னார்கள். சாதாரணமாக இருந்தால் வெட்கப்பட்டுக் கொண்டோ அல்லது முறுவலுடனோ “தாங்க்ஸ்” என்று சொல்லணும். ஆனால் நான் அப்படி எதுவும் செய்யவில்லை. எனக்கு முற்றிலும் சம்பந்தம் இல்லாத விஷயம் என்பதுபோல் முகத்தை வைத்துக் கொண்டேன்.
நிகழ்ச்சி தொடங்கிவிட்டது. அம்மா வரவேற்புரையை வழங்கிவிட்டு பெண்களின் உரிமைகளைப் பற்றியும், சுதந்திரத்தைப் பற்றியும் அரைமணி நேரம் தங்குதடையில்லாமல் சொற்பொழிவு ஆற்றினாள்.
ஸ்டேஜிற்கு அருகில் முதல் வரிசையில் அப்பாவுக்கும் சாரதிக்கும் நடுவில் அமர்ந்து கொண்டிருந்த நான் அம்மாவின் சொற்பொழிவை கவனமாக கேட்கவில்லை. திடீரென்று சபையில் எழும்பிய கைத்தட்டல்களின் ஒலியைக் கேட்டு அம்மாவின் பேச்சு முடிந்துவிட்டது என்று புரிந்து கொண்டேன்.
பிறகு யார் யாரோ பேசினார்கள். எனக்கு இருப்புக் கொள்ளவில்லை. எப்போடாப்பா இங்கிருநற்து வெளியேறுவோம் என்று தவித்துக் கொண்டிருந்தேன். வாலண்டியர்களாக அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டிருந்த இளம் பெண்களில் ஓரிருவர் என்னை பொறாமையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கென்ன தெரியும்? நான் தனிமைக்காக தவித்துக் கொண்டு முள் மீது அமர்ந்திருப்பது போல் உட்கார்ந்திருக்கிறேன் என்று.
அன்று இரவு நாங்கள் வீட்டுக்கு வரும்போது ரொம்ப நேரமாகவிட்டது. வீட்டுக்கு வந்து சேர்ந்ததுமே எல்லோருக்கும் குட் நைட் சொல்லிவிட்டு என் அறைக்கு வந்துவிட்டேன். நாளைக்கு கிருஷ்ணனை சந்திக்க வேண்டும். கூடவே சாரதி இருக்கும்போது எப்படி சாத்தியப்படும்? இந்த விஷயத்தில் அப்பா எனக்கு கொஞ்சம் கூட உதவி செய்ய மாட்டார் என்று இப்போ புரிந்து விட்டது.
உடைகளை மாற்றிக் கொண்டு கட்டில்மீது படுத்த எனக்கு ரொம்ப நேரம் தூக்கம் வரவில்லை. அப்பா சொன்னது திரும்பத் திரும்ப என் காதுகளில் எதிரொலித்துக் கொண்ருந்தது. ‘திருமணத்தை மறுத்துவிட்டு என்ன செய்யப் போகிறாளாம்? நீ இங்கே அழைத்து வந்து அவளைக் காப்பாற்றப் போகிறாயா? உன்னால் என்ன உதவி செய்ய முடியும் என்று அப்படி எழுதினாய்?’
அப்பாவின் குரல் என்னை கூண்டுக்குள் நிற்க வைத்து கேள்வி கேட்பதுபோல் இருந்தது. அப்பா சொன்னது உண்மைதான் என்று ஒரு நிமிடம் தோன்றினாலும் அடுத்த நிமிஷம் ரோஷம் தலை தூக்கியது. நல்ல எண்ணத்துடன், ராஜியின் நண்மையைக் கருதி நான் செய்த காரியம் எனக்கே சவாலாக மாறிவிட்டது.
என்னால் எதுவும் செய்ய முடியாதா? ஏன் முடியாது? அப்பா நினைப்பதுபோல் நான் ஒன்றும் வாய்ச் சொல் வீராங்கனை இல்லை என்று நிரூபிக்கப் போகிறேன். என்னாலேயும் சாதிக்க முடியும். இவர்களிடம் எதுவும் பேசத் தேவையில்லை. முதலில் கிருஷ்ணனைச் சந்திக்க வேண்டும். அது ரொம்ப முக்கியம்.

Series Navigation

கௌரிகிருபானந்தன்

கௌரிகிருபானந்தன்