முள்பாதை 16

This entry is part [part not set] of 26 in the series 20100212_Issue

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி மிழாக்கம் கௌரி கிருபாநந்தன்


 

email id tkgowri@gmail.com

மாலை நேரம் நெருங்கும்போது மங்கம்மா வந்தாள். வந்தது முதல் என் அருகில் உட்கார்ந்து கொண்டு பேசிக் கொண்டிருந்தாள். ராஜேஸ்வரியும் நானும் பாய்மீது அமர்ந்துகொண்டு மல்லி, கனகாம்பரம், மரிக்கொழுந்து எல்லாம் சேர்ந்து மாலையாக தொடுத்துக் கொண்டிருந்தோம். அன்று வெள்ளிக்கிழமை. தோட்டத்திலிருந்து பூக்களைக் கொண்டு வந்து பெரிய மாலையாகத் தொடுத்து பெருமாள் கோவிலுக்கு அனுப்புவது வழக்கமாம். மங்கம்மா நான் உடுத்திக் கொண்டிருந்த புடவை மற்றும் நகைகளை பரிசீலித்துக் கொண்டே எங்கள் விட்டு விவகாரங்களைக் கேட்க ஆரம்பித்தாள்.
"உங்க அப்பா பெரிய வீடு கட்டியிருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். எவ்வளவு ஆச்சு?"
"அப்பா வீடு கட்டவில்லை. எங்க தாத்தா அம்மாவுக்காகக் கட்டிக் கொடுத்தார்" என்றேன்.
"தாத்தாவை உனக்கு நினைவு இருக்கிறதா?"
இல்லை என்பதுபோல் தலையை அசைத்தேன்.
மங்கம்மா என் பக்கம் ஆர்வத்துடன் குனிந்து "பட்டணத்தில் பணக்காரர்களின் வீடுகளில் குளியலுக்கு ஏதோ பெரிய தொட்டிகள் இருக்குமாமே? உங்கள் வீட்டிலும் இருக்கா?" என்று கேட்டாள்.
இருக்கு என்பது போல் தலையை ஆட்டினேன். நானும் ராஜேஸ்வரியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டோம். எங்கள் இருவருக்கும் நான் இங்கே வந்த முதல் நாளன்று நடந்த சம்பவம் நினைவுக்கு வந்தது.
"பட்டணத்தில் எங்க நாத்தனாரின் சின்ன மாமியாரின் மாப்பிள்ளை இருக்கிறான். எங்களுக்கு நன்றாகத் தெரிந்தவர்கள்தான். தாம்பரம் தாண்டி எங்கேயோ இருக்கிறான். அங்கே வீட்டு வாடகை ஜாஸ்தியாம். வரச்சொல்லி கூப்பிட்டுக் கொண்டே இருக்கிறான். போகணும் ஒரு தடவை. அப்போ உங்கள் வீட்டுக்கும் கட்டாயம் வருகிறேன். உன் அப்பாவிடம் சொல்லிவை" என்றாள்.
சரி என்பதுபோல் பார்த்தேன். ஆனால் என் இதயம் பயத்தால் நடுங்கியது. சொன்னது போலவே இந்த அம்மாள் எங்கள் வீட்டுக்கு வந்து விட்டால்?
"உனக்கு சமைக்கத் தெரியுமா?" மறுபடியும் கேட்டாள்.
தெரியாது என்பதுபோல் உதட்டைப் பிதுக்கினேன்.
என்னுடைய பதிலை கேட்டு அந்த அம்மாள் கன்னத்தில் கையை வைத்துக்கொண்டாள். "என்னது? சமைக்கத் தெரியாதா? இத்தனை வயது ஆகியும் சமைக்கத் தெரியாது என்றால் இனி எப்போ கற்றுக்கொள்ளப் போகிறாய்? நாளைக்குக் கல்யாணம் ஆனால் புருஷனுக்கு என்ன சமைத்துப் போடுவாய்? சமைக்கத் தெரியவில்லை என்று உன் புருஷன் உன்னைத் தள்ளி வைத்துவிட்டால் என்ன செய்வது?"
அத்தை நடுவில் புகுந்தாள். "போதுமே… நீங்களும் உங்க பழங்காலத்துப் பேச்சும். சமையல் செய்துதான் ஆகணும்னு அந்தப் பெண்ணுக்குத் தலையெழுத்தா என்ன?"
மங்கம்மாவுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. "தலையெழுத்தா? சமையல் செய்வது பெண்களின் தலையெழுத்து என்றால் நாமெல்லாம் பாவப்பட்ட ஜென்மங்களா என்ன? ஏண்டி கமலா! ரொம்பத்தான் அதிசயமாகப் பேசுகிறாய். நம்ப ராஜிக்கு சமைக்கத் தெரியாதா என்ன? பட்டணத்தில் வளர்ந்த பெண் இல்லையா. இன்னும் புதுப் புது தினுசாக சமைப்பாளோ என்று நினைத்துக் கேட்டேன்" என்றாள்.
"வீட்டில் சமையல்காரி இருக்கிறாள். அவளுடைய அம்மா இருக்கிறாள். இனி அந்தப் பெண்ணுக்கு சமையலறைக்குள் நுழைய வேண்டிய அவசியம் என்ன இருக்கு? நீங்களே சொல்லுங்கள்." அத்தை என்னை சப்போர்ட் செய்வது போல் பேசினாள்.
"போகட்டும். இவளுடைய அம்மாவுக்காவது சமைக்கத் தெரியுமோ?" மங்கம்மா என்னை சந்தேகத்துடன் பார்த்துக்கொண்டே கேட்டாள்.
"சித்தீ! கொஞ்சம் மெதுவாகப் பேசுங்கள். அண்ணன் உள்ளே படுத்துக் கொண்டிருக்கிறான்." ராஜேஸ்வரி எச்சரித்தாள்.
கிருஷ்ணன் சற்று முன்தான் தாமதமாக வந்து சாப்பிட்டுவிட்டுப் படுத்தான். சாப்பிட்டதும் பத்து நிமிடங்கள் கட்டில்மீது படுத்தபடி பேப்பரையோ புத்தகத்தையோ புரட்டிக் கொண்டே ஓய்வு எடுத்துக் கொள்வது அவன் வழக்கம். அவன் வீட்டில் இல்லாதபோது சுதந்திரமாக அந்த அறைக்குள் நுழையும் நான் அவன் அங்கே இருந்தால் அந்த் பக்கமே போகமாட்டேன். அவனும் அப்படித்தான். நான் அந்த அறையில் இருப்பது தெரிந்தால் அந்த திசைக்கே வரமாட்டான்.
"கிருஷ்ணன் வீட்டில்தான் இருக்கிறானா?" என்றாள் மங்கம்மா, குரலை கொஞ்சம்கூட குறைக்காமலேயே. மறுபடியும் என் பக்கம் திரும்பி "சரிதான், உனக்கு வீட்டு வேலைகள் வந்தால் என்ன? வராவிட்டால் எனக்கென்ன? அது போகட்டும். எங்களுக்கு சாப்பாடு எப்போ போடப் போகிறாய்? அதைச் சொல்லு முதலில்" என்றாள்.
எனக்குப் புரியவில்லை. சாப்பாடு போடுவது என்றால்? விளக்கம் கேட்பதுபோல் ராஜேஸ்வரியின் பக்கம் பார்த்தேன். ராஜேஸ்வரி பூக்களை தொடுத்துக் கொண்டே சிரிப்பை அடக்கியபடி "நீயே அந்தம்மாளிடம் கேள்" என்றாள்.
இந்த முறை மங்கம்மா தாங்கொண்ணாத வியப்புடன் கன்னத்தில் கையைப் பதித்தாள். "அட ராமா! நான் என்ன கேட்டேன் என்று உனக்குப் புரியவே இல்லையா? உங்கள் வீட்டில் தமிழில்தானே பேசிக்கொள்வார்கள்?" என்றாள்.
"ஆமாம். தமிழ்தான்" என்றேன். அந்த நிமிடம் எனக்கு ராஜேஸ்வரியின் மீது கொஞ்சம் கோபம்கூட வந்தது. யாரும் பார்த்துவிடாமல் கையை நீட்டி ராஜேஸ்வரியின் தொடையைக் கிள்ளினேன். பிறகு மங்கம்மாவின் பக்கம் திரும்பி மரியாதை கலந்த குரலில் "என்ன பிரமாதம்? சாப்பாடுதானே! நீங்க எப்போ எங்கள் வீட்டுக்கு வர்றீங்களோ வடை பாயசத்துடன் சாப்பாடு போடுகிறேன். நீங்க வரணுமே தவிர ஒரு தடவை என்ன ஆயிரம் தடவை, போதும் போதும் என்று நீங்கள் சொல்லும் வரையில் போடுகிறேன்" என்றேன், சாப்பாடு என்றால் விருந்துச் சாப்பாடாக இருக்கும் என்று ஊகித்தபடி.
ராஜேஸ்வரி பக்கென்று சிரித்துவிட்டாள். அத்தையின் இதழ்களில் முறுவல் தவழ்ந்தது. வியப்புடன் பார்த்த மங்கம்மாவும் மேற்கூரை தகர்ந்து போகும் அளவுக்கு கொல்லென்று சிரித்தாள். அவர்கள் மூவரும் அப்படி ஒரே சமயத்தில் ஏன் சிரித்தார்களோ எனக்குப் புரியவில்லை. இருந்தாலும் நானும் அவர்களுடன் சேர்ந்து சிரித்தேன்.
"ஏண்டி கமலா! உங்கள அண்ணாவுக்குக் கடிதம் எழுதிப் போட வேண்டியதுதானே?" சிரிப்பு சத்தம் அடங்கிய பிறகு மங்கம்மா சொன்னாள்.
"என்னவென்று?"
"கிருஷ்ணனுக்கு இந்தப் பெண்ணைக் கட்டி வைத்தால் என்ன? ஜோடிப் பொருத்தமும் நன்றாக இருக்கும். மாமன் மகள்தானே?"
நான் திகைத்துப் போனவளாகப் பார்த்தேன். ராஜேஸ்வரி கோபத்துடன் நிமிர்ந்தாள்.
அத்தையின் முகம் வெளிறிப் போய்விட்டது. சற்று கோபம் கலந்த குரலில் "போதும் நிறுத்துங்க. உங்களுக்கு எதைப் பேசுவது, எதைப் பேசக் கூடாதுன்னு கொஞ்சம்கூடத் தெரியவில்லை" அதட்டுவதுபோல் சொல்லிவிட்டு சமையல் அறைக்குள் போய்விட்டாள்.
"கமலா! இப்போ நான் சொல்லக் கூடாததை என்ன சொல்லிவிட்டேன்? உங்கள் அண்ணன் தன் மகளுக்கு இதைவிட நல்ல வரனைக் கொண்டு வரப்போகிறானா? நம்ப கிருஷ்ணனுக்கு மட்டும் என்ன குறைச்சல்?"
"சித்தீ!" பின்னாலிருந்து திடீரென்று கடினமான குரல் கேட்டது.
திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தேன்.
அறையின் வாசலை அடைத்துக்கொண்டு கிருஷ்ணன் நின்று கொண்டிருந்தான்.
படுத்துக் கொண்டே பேப்பரை படித்துக் கொண்டிருந்தான் போலும். அப்படியே பேப்பரும் கையுமாக எழுந்து வந்து விட்டான். ஏனோ அவன் முகம் சிவப்பாகக் கன்றியிருந்தது. கண்களில் கோபம் வெளிப்படையாகத் தென்பட்டது.
"சித்தீ! உனக்கு வேண்டியது காபிதான் என்றால் அம்மா கலந்து கொடுக்கும் வரையில் பொறுமையாக இருந்து குடித்துவிட்டுப் போ. பொழுது போகவில்லை என்றால் யாருடைய வீட்டுக்காவது போய் உன் புராணத்தை அவிழ்த்துவிடு. அவ்வளவுதானே தவிர இந்த வீட்டில் உட்கார்ந்து கொண்டு அதிகப் பிரசங்கம் செய்தால் மட்டும் நான் சும்மா இருக்க மாட்டேன். எனக்குப் பிடிக்காது."
கொஞ்சம்கூடத் தயங்காமல் கச்சிதமாக தெரிவித்த அந்த மறுப்புக்கு திகைத்துப் போனவளாக நான் மங்கம்மாவின் பக்கம் பார்த்தேன்.
மங்கம்மா முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டாள். பாயின் மீது இருந்த பூக்களையும் நூலையும் எடுத்துக் கொண்டு தொடுப்பதுபோல் பாவனை செய்து கொண்டே "நான் இப்போ அவ்வளவு வேண்டாத பேச்சு என்ன பேசி விட்டேன்? ஏதோ நீங்களும் அவங்களும் ஒன்றுக்குள் ஒன்று. உறவு முறை இருப்பதால் சொன்னேன். அவ்வளவுதான்" என்று முணுமுணுத்தாள்.
கிருஷ்ணன் விருட்டென்று திரும்பிப்போய்விட்டான். மங்கம்மாவுக்குக் கோபம் வந்து விட்டிருக்கும் என்றுதான் நினைத்தேன். வேறு யாராவதாக இருந்தால் அந்த நிமிடமே கோபித்துக்கொண்டு உடனே எழுந்து போயிருப்பார்களோ என்னவோ. ஆனால் மங்கம்மா இடத்தை விட்டு நகரவில்லை. அத்தை காபி கலந்து கொண்டு வரும் வரையில் எங்களுடன் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தாள். காபியைக் கொடுத்ததும் அவசர அவசரமாக மடக் மடக்கென்று குடித்துவிட்டு எழுந்து கொண்டாள். வந்த காரியம் முடிந்து விட்டதுபோல் கிளம்ப முற்பட்டாள். போகும்முன் "என் பேச்சு கிருஷ்ணனுக்குக் கோபத்தை வரவழைத்ததோ என்னவோ. பழங்காலத்து மனுஷி என்பதால் மனதில் பட்டதை அப்படியே சொல்லிவிட்டேன். ஒன்றும் நினைத்துக் கொள்ள வேண்டாம் என்று சொல்லு அவனிடம். நாளை காலையில் சமையலுக்குக் காய்கறி இல்லை. முடிந்தால் கத்திரிக்காய் அனுப்பி வை" என்று சொல்லிவிட்டு போய்விட்டாள்.
மங்கம்மா போன பிறகு ராஜேஸ்வரி சொன்னாள். அந்தம்மாள் அந்த ஊரில்போகாத வீடு இல்லையாம். வேலை வெட்டி இல்லாதவள் என்பதால் எல்லோருடைய வீட்டுக்கும் போய் நெருங்கியவள்போல் நைச்சியமாக பேசி அந்த விட்டு விஷயங்களைத் தெரிந்துகொண்டு ஒன்றுக்கு நான்காக மற்றவர்களிடம் சொல்லுவாளாம். அந்த விஷயம் தெரிந்தாலும் யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை. வீட்டுக்கு வரவிடாமல் தடுக்க முடியவில்லை. காரணம் மங்கம்மாவின் வாய் ரொம்பப் பொல்லாதது. அதனால் முடிந்த வரையில் அந்தமம்மாளுடன் சௌஜன்யமாக இருப்பதற்கு முயற்சி செய்வார்கள். தினமும் மதியம் ஆகிவிட்டால் அத்தையின் வீட்டுக்கு வருவாள். ஒரு வாய் காபி கிடைக்கும் வரையில் அக்கம் பக்கத்து வீட்டு செய்திகளை வலுக்கட்டாயமாக தெரிவிப்பாள். ஒருமுறை யாரைப் பற்றியோ மங்கம்மா தரக்குறைவாக பேசியது கிருஷணன் காதில் விழுந்துவிட்டது.
கிருஷ்ணன் அந்த அம்மாளை நன்றாகக் கடிந்து கொண்டு இனி இது போன்ற செய்திகளைச் சொல்லுவதாக இருந்தால் விட்டு வாசற்படி ஏற வேண்டாம் என்று சொல்லிவிட்டானாம். அதற்காக கோபம் கொண்டு சில நாட்கள் வராமல் இருந்தாள். வராமல் இருந்ததில் நஷ்டம் அவளுக்குத்தான். ‘போகட்டும் பாவம். வயதில் பெரியவள்’ என்று இரக்கப்பட்டு தினமும் காபி கொடுக்கும் இல்லத்தரசி யாருமே இருக்கவில்லை. சமீபத்தில் மறுபடியும் வரத் தொடங்கியிருக்கிறாள்.
"இன்னிக்கு இப்படி நடந்து விட்டது இல்லையா. மறுபடியும் ஒரு வாரமாவது இந்த வீட்டுப் பக்கம் வர மாட்டாள் என்று நினைக்கிறேன்." ராஜேஸ்வரி சொன்னாள்.
மங்கம்மாவைப் பற்றி எல்லா விஷயங்களையும் ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டேன். ஊர் முழுவதும் பயப்படும் அந்த உருவத்திற்கு கிருஷ்ணன் கொஞ்சம்கூட பயப்பட மாட்டான் என்று தெரிந்தபோது எனக்கு அவன் மீது மதிப்பு ஏற்பட்டது.
மாலையைத் தொடுத்து முடித்தாகிவிட்டது. ராஜி காபி டம்ளர்களை எடுத்துக்கொண்டு சமையலறைக்குள் சென்றாள். நான் மாலையை இரண்டு கைகளாலும் பிடித்துக் கொண்டு கோவிலில் வரதராஜ பெருவாளுக்கு அந்த மாலையைச் சாற்றினால் எப்படி இருக்குமோ கற்பனை செய்து பார்த்துக் கொண்டிருந்தேன்.
திடீரென்று கொல்லைப் புறத்திலிருந்து சாமிக்ண்ணு உரத்தக் குரலில் கத்துவது கேட்டது. "ராஜீம்மா! அண்ணாவை சட்டுன்னு கூப்பிடுங்க. நம்ப புது மாடு கயிற்றை அறுத்துக் கொண்டு விட்டது. என்னால் அதை அடக்க முடியவில்லை. கொல்லையில் கத்திரிச் செடியெல்லாம் மிதித்து பாழாக்கிக்கிட்டிருக்கு."
"அண்ணா… அண்ணா!" ராஜேஸ்வரி பதற்றத்துடன் கொல்லைப்புறம் ஓடினாள். பூமாலையை கையில் பிடித்துக்கொண்டே நானும் கொல்லைப்புற வாசலில் வந்து நின்றேன்.
உயரமாக, பலமாக, அடங்காப் பிடாரியாக இருந்த காளை மாடு சாமிகண்ணுவின் கையில் சிக்காமல் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தது. அதன் கழுத்தில் கட்டப் பட்டிருந்த கயிறு பாதில் அறுந்து தொங்கிக் கொண்டிருந்தது. சாமிகண்ணு அந்த கயிற்றைப் பிடிக்க முயன்று கொண்டிருந்தான். ஆனால் சாத்தியப்படவில்லை. காளை அவனைப் பார்த்ததும் பெரிதாக சீறிக் கொண்டு அவன் மீது பாய வந்தது. சாமிகண்ணு பயந்து பின் பக்கமாக ஓடப் போனவன் அம்மாடியே மல்லாக்க தரையில் விழுந்தான். அதிர்ஷ்டவசமாக காளை அவன் பக்கம் வராமல் வேறு திசையில் திரும்பிவிட்டது.
பின்னாலிருந்து கிருஷ்ணன் எப்பொழுது வந்தானோ தெரியவில்லை. வழியை அடைத்துக் கொண்டு நின்றிருந்த என் தோளைப் பற்றி நகர்த்தி "வழியை விடு" என்று சொல்லிக் கொண்டே மாடு இருந்த பக்கம் விரைந்தான்.
"இன்னிக்கு மறுபடியும் இதுக்கு திமிர் பிடித்துடுத்து சாமீ! கயிற்றை அறுத்துக் கொண்டு அடங்க மாட்டேங்கிறது" என்றான் சாமிகண்ணு, உடலில் படிந்த மண்ணைத் தட்டிக் கொண்டே.
கிருஷ்ணன் காளையின் எதிரே சென்று "ஹ¤ம்… ஹ¤ம்.." என்று அதட்டினான். "வா இங்கே வா " என்று ஆணையிடுவதுபோல் சொல்லிக்கொண்டே காளையை நெருங்கிக் கொண்டிருந்த கிருஷ்ணனைப் பார்த்து நான் ராஜேஸ்வரியின் கையைப் பலமாக பிடித்துக்கொண்டேன்.
தன்னை நெருங்கிக்கொண்டிருந்த யஜமானியைப் பார்த்ததும் காளை கோபமாக முட்ட வந்தது. கிருஷ்ணன் சட்டென்று நகர்ந்து லாவகமாக அதன் கொம்பை ஒரு கையால் பிடித்துக் கொண்டு இடது கையால் அதன் முதுகில் ஓங்கி இரண்டு மூன்று முறை அடித்தான்.
அது வரையிலும் சீறிக் கொண்டு அங்கும் இங்குமாக ஓடிக்கொண்டிருந்த மாடு கோபம் கொண்ட தாயைப் பார்த்து பயந்து போய் அழுகையை நிறுத்திய குழந்தையைப் போல் அடங்கிவிட்டது. கிருஷ்ணன் கயிற்றைப் பிடித்துக் கொண்டு கொட்டகையின் பக்கம் இழுத்தான். இரண்டு மூன்று அடிகள் சாதாரணமாக நடந்த காளை சட்டென்று தலையை முன்னால் நீட்டி கிருஷ்ணனை முட்ட வந்தது. ஆனால் கிருஷ்ணன் மின்லைவிட வேகமாக தொலைவிற்கு நகர்ந்து கொண்டான். அவன் முகம் கோபமாகவும், பொறுமை நசிந்து விட்டது போலவும் மாறியது. பற்களை இறுக்கி கோபத்தை அடக்கினான். மாட்டுக் கொட்டைகைகுள் சென்று உயரே சொருகியிருந்த சாட்டையை எடுத்து வந்து மாட்டை இரண்டு மூன்று முறை வேகமாக அடித்தான்.
அந்த அடிகள் என் மீதே பட்டு விட்டது போல் பயந்து போய் கண்களை மூடிக் கொண்டேன். வாயில்லாத ஜீவனை இப்படி நிர்தாட்சிண்யமாக அடிப்பதா?
"காளை கயிற்றை அறுத்துக் கொண்டு போவது இது இரண்டாவது தடவை." என் பின்னால் நின்று கொண்டிருந்த அத்தை சொன்னாள்.
நான் மெதுவாக கண்களைத் திறந்துப் பார்தேன். கிருஷ்ணன் சாட்டையை ஒரு கையில் பிடித்துக் கொண்டே காளையை இழுத்துக் கொண்டு போய் கொட்டகையில் கட்டிப் போட்டான். அதுவரையில் சீறிக் கொண்டும், பாய்ச்சல் காட்டிக் கொண்டும் ஓய காளை கிருஷ்ணனைப் பார்த்ததும் பயந்து போய் கட்டிய பசுவைப் போல் அடங்கிவிட்டது.
"சாமிகண்ணு! வெறும் தாம்பு கயிறு இதுக்குப் போறாது. இரும்புச் சங்கிலி வாங்கணும்" என்று சொல்லிக் கொண்டே கிருஷ்ணன் வெளியே வந்தான். அவன் நெற்றியில் வியர்வை படிந்திருந்தது.
பிரமிப்புடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். மேலுக்கு சாதாரணமாகத் தென்படும் இந்த ஆசாமியிடம் இவ்வளவு திறமையும் சக்தியும் மறைந்திருப்பதை கண்கூடாகப் பார்த்தபின் உண்மையிலேயே வியந்து போனேன். தான் உண்டு தன் வேலை உண்டு என்பதுபோல் இருக்கும் அவனுடைய மறுபக்கத்தைப் பார்க்கும் போது ஏதோ அதிசயத்தைப் பார்ப்பது போல் இருந்தது. எதிலேயும் பட்டுக்கொள்ளாமல் இருக்கும் அவன் போக்கைப் பார்த்து அவனை ஒரு சராசரி மனிதனாக, இன்னும் சொல்லப் போனால் பட்டிக்காட்டு அபிஷ்டுவாக நினைத்திருந்தேன்.
ஊரெல்லாம் பயப்படும் மங்கம்மாவைக் கண்டால் அவனுக்குக் கொஞ்சம்கூட லட்சியமில்லை. திமிர் பிடித்த காளையைக் கண்டு மிரண்டு போகாததோடு லாவகமாக அதை வசப்படுத்திக் கொள்ளும் சாமர்த்தியமும், தைரியமும் இருக்கிறது.
மிருது கம்பீரமாக இருக்கும் அவன் குரல் தேவைப்பட்டால் எதிராளி வாயடைத்துப் போகும்படியாக பயங்கரமாக சிம்மகர்ஜனை செய்யும். தம்பி, தங்கைகளைப் பார்க்கும் போது அன்பையும், பாசத்தையும் பொழியும் அந்தக் கண்கள் கோபம் ஏற்பட்டால் நெருப்பைக் கக்கவும் செய்யும். தனக்கு விருப்பமில்லாதவற்றை தயக்கமில்லாமல், ஸ்பஷ்டமாக மறுக்கக் கூடிய பிடிவாத குணமும் இருந்தது அவனிடம். சற்றுமுன் மங்கம்மாவை அதட்டியபோது அவனிடம் எனக்கு ஏற்பட்ட கௌரவம் இந்த நிமிடம் இரு மடங்காகி விட்டதுபோல் இருந்தது.
ஒரு மணி நேரம் கழித்து எந்த மாட்டை தயவு தாட்சிண்யம் இல்லாமல் அடித்தானோ, அதற்குத் தன் கையால் எள்ளுபுண்ணாக்கையும், தவிட்டையும் அன்பாக ஊட்டிக் கொண்டிருந்த கிருஷ்ணனைப் பார்த்து மேலும் வியப்படைந்தேன். அவன் சுபாவம் ரொம்ப வித்தியாசமாக இருந்தது. காலையில் கன்றுக்குட்டியை கையில் எடுத்துக் கொண்டபோது காட்டிய அன்பு, சற்று முன் கயிற்றை அறுத்துக் கொண்டு அட்டூழியம் செய்து கொண்டிருந்த காளையை அடக்கும்போது தண்டித்த விதம், மறுபடியும் இப்போ காளைக்குத் தீனியை வைக்கும் போது காட்டும் பரிவு … எல்லாம் சேர்ந்து என்னை வியப்பில் ஆழ்த்திவிட்டன.
இந்த வீட்டில் குழந்தைகள் எல்லோரும் இவ்வளவு ஒழுங்கு முறையுடன் நடந்து கொள்வதற்கு பின்னாலிருந்த காரணம் என்னவென்று எனக்குப் புரிந்து விட்டது. அண்ணனுக்குள் மறைந்திருக்கும் உக்கிர நரசிம்ம மூர்த்தியைக் காண்பதற்கு யாருமே விருப்பப்பட மாட்டார்களாய் இருக்கும்.
குழந்தைகள் மட்டுமே இல்லை. ஊரில் எல்லோரையும் பயமுறுத்தி ஆட்டி வைக்கும் மங்கம்மா கூட கிருஷ்ணனின் மனதை நோகடித்து விட்டேனோ என்று அச்சத்துடன் கிளம்பும் முன் மன்னிப்பு கேட்டுக் கொள்வதுபோல் பேசியிருக்கிறாள்.
எவ்வளவு சாதாரணமாகத் தென்படும் அசாதாரண மனிதன் இவன்! மண்ணில் புதைந்த வைரம் என்றால் என்னவென்று இப்போ எனக்குப் புரிந்துவிட்டது.

Series Navigation