முற்றத்தில் முதல் சுவடு

This entry is part [part not set] of 23 in the series 20020505_Issue

சேவியர்.


மீன் பிடிக்க
குளத்தைக் கலக்குவது
தவறில்லைதான்,
ஆனால் நீ
கடலைக் கலக்குவேனென்று
பிடிவாதம் பிடிக்கிறாயே !

இலட்சியங்கள்
பயிரில் களை பிடுங்கும் பயிற்சி,
ஆனால்
நீயோ,
அலட்சியம் செய்வதையே
இலட்சியமாகக் கொள்கிறாயே.

தேவதைத் தேடல்களை
கொள்ளிவாய் பிசாசுகளின்
கோட்டையில்
நடத்துகிறாய்,

கங்கையைக் காணவில்லை என்று
பாலையில் படுத்துப்
புகார் கொடுக்கிறாய்,
கடலுக்குள் இறங்கி
கானகம் தேடுகிறாய்,
முத்துக்களை உடைத்து
சிப்பிகளைத் தேடுகிறாய்…
புரியவில்லை எனக்கு.

ஆகாயத்தில் ஆசனம்
அமைத்தல் கடினமில்லை,
ஆனால்
பூமியில் தான்
அதன் படிகள் துவங்கவேண்டும்.

வானத்துக்கு மேகம்
விருந்தாளிதான்,
கடலில் துவங்கி
பூமியில் புதையும்
வட்டப் பாதையில் தான்
அதன் வாழ்வு.

நிழலைத் துரத்துதல்,
நாய்
தன் வால் கடிக்கும் முயற்சி.

நீ,
துளியில் முளைத்து
தூளியில் வளர்ந்தவன்.

உன் செயல்களையும்
துளியில் துவங்கி,
நதியாய் நடக்கவிடு.

கடல் பயணக் கனவைத்
தட்டி எழுப்ப
வயலுக்கான வாய்க்கால் வந்தால்
வருத்தப்படாதே,
கடலில் கலப்பதை விடவும்
உடலில் கலப்பது உன்னதமானதே.

Series Navigation

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்