முந்திரி @ கொல்லாமரம்

This entry is part [part not set] of 34 in the series 20070816_Issue

அசுரன்


“எப்போ … அந்த அண்ணனுக்க வீடு எங்க இருக்குவு? தெரியுமா?” – வீட்டிற்கு வெளியே நான் நின்றுகொண்டிருந்தபோது ஒரு வெளியூர்காரர் ஒரு பெயரைச் சொல்லி என்னிடம் விசாரித்தார்.
சுமார் 300 வீடுகளை மட்டுமே கொண்ட சிறிய கிராமம் என்ற போதிலும் அவர் சொன்ன பெயர் என் நினைவில் எட்டவில்லை. நான் பலமாக சிந்திப்பதைப் பார்த்த அவர் கேட்டார்.
“அதாம்ப்போ… இந்த கொல்லாம்பழம்னு சொல்லுவாவுளே அவுருப்போ..” என்றார் அவர்.
“ஓ.. அவியளா… இந்தா இப்பிடியே போய் எடப்பக்கம் திரும்பி அந்த தெருவிலியே போனா கடைசி வீட்டுக்கு முந்தின வீடுதான்” என்றேன்.
கிராமங்களில் சொந்தப்பெயரை விட பட்டப்பெயரே அறிமுகம் (நகரங்களில் வீட்டு எண் தான் எல்லாமே. அது தெரியாவிட்டால் ஆளை பிடிப்பது மிகவும் கடினம்)
ஆமா.. அவுருக்கு கொல்லாம் பழம்னு ஏன் பேரு வச்சாங்க என்று பலநாள் சிந்தித்து பார்த்தேன். எனக்கு பிடிகிடைக்கவில்லை. வயத்துப்பாட்டுக்கு ஒண்ணும் இல்லாத நேரத்துல கொல்லாம் பழமா பறிச்சி தின்னுருப்பாரா இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன.
’80 களின் இறுதியில் நான் கல்லூரிக்குப் போகும்போதும் அதுதான் நடந்தது. கல்லூரி வளாகத்திற்குள் நுழையும்போதே கொல்லா மர,பழ வாசம் மூக்கைத் துளைக்கும். சில வேளைகளில் இரண்டு அல்லது மூன்று பழங்களைத் தின்றாலே அதுவே வயிற்றை நிரப்பிவிடும்.
குமரி மாவட்ட வழக்கில் கொல்லாமரம், கொல்லாவு, கொல்ல மாவு என்றெல்லாம் அழைக்கப்படும் இம்மரத்தின் பெயர் முந்திரிமரம். (என்ன… அடையாளம் தெரியுதா,,,?) கொல்லம் வழியாக கப்பலில் வந்ததால் இதன் விதையானது கொல்லாங்கொட்டையாகவும், பழம் கொல்லாம் பழமாகவும் . மரம் கொல்லாமரமாகவும் ஆகிவிட்டதாக ஒருபேச்சு ஊருக்குள் இருக்கிறது. அது மாமரம் போல எங்கும் செழித்து வளர்வதால் கொல்ல மாவு என்ற திருநாமமும் பெற்றது.
ஆங்கிலத்தில் Cashew என்று அழைக்கப்படும் இம்மரமானது 15மீட்டர் உயரம்வரை வளரக்கூடியது. நேராக மேல்நோக்கி வளர்வதை விட, அடர்த்தியாக, பரவி, கிளைகள் பின்னிப்பிணைந்து, தரையை நோக்கி படர்ந்து, குடைபோல, வளர்வது. எனவே, இம்மர உச்சியிலிருந்து விழுந்தாலும் அத்தனை சுலபத்தில் யாருக்கும் உயிராபத்து இல்லை என்று தைரியமாக சான்றளிக்கலாம்.
அறிவியல் ரீதியாக அனகார்டியம் ஆசிடென்டலே (Anacardium Occidentale) என்று அழைக்கப்படும். இந்த மரமானது அனகார்டியேசியே (Anacardiaceae) குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.
பிரேசில் நாட்டின் வட கிழக்குப் பகுதியை தயாகமாகக் கொண்ட இம்மரமானது போர்ச்சுகீசியர்களால் பரப்பப்பட்டு, இப்போது, பெரும்பாலும் நிலநடுக்கோட்டு வெப்பமண்டலப் பகுதிகளில் பரவலாக வளர்க்கப்பட்டு வருகிறது.
அதிக கவனிப்பு தேவை யில்லை, எளிதில் வளரும், அதன் பருப்பானது சர்வதேச அளவில் விலை மதிப்பு மிக்க உணவாகவும் இருக்கிறது. அதோடு வறட்சியையும் தாங்கக்கூடியது. இப்போதைய நிலவரப்படி உலகளவில் உற்பத்தியாகும். முந்திரிக் கொட்டைகளில் மூன்றிலொரு பங்கை உற்பத்தி செய்து வியட்நாம் முதலிடத்தில் உள்ளது.
இம்மரம் மிக வித்தியாசமான கனிகளை தருவதாகும். உண்மையில் நாம் முந்திரிக்கொட்டை என்று அழைப்பதுதான் அதன் பழமே அதுதான். பூவிலிருந்து முதலில் உருவாகும். (அதுனாலதான் முந்திரிக்கொட்ட மாதிரி முந்தாதேன்னு சொல்லுயது!). அதன் பின்னே பார்க்க அழகாகத் திரண்டு நமக்குக் கிடைக்கும் கனியானது பொய்க்கனி என்று அழைக்கப்படுகிறது. மஞ்சள் , ஆரஞ்சு மற்றும் சிவப்பு வண்ணங்களில் காணப்படும் இந்த பொய்க்கனியின் சுவை, கொட்டையின் அளவுக்கேற்ப அதற்கு மக்களிடம் ‘மவுசு’ அதிகம்.
இந்த கொட்டையிலுள்ள பருப்பின் சுவையால் கவரப்பட்ட கப்பல்காரர்கள், தாங்கள் வந்த கப்பலையே விற்று இதை வாங்கித் தின்றதாக ஒரு புகழ்பெற்ற கதை இங்கே உண்டு.
நன்கு விளையாத (முற்றாத) கொட்டை பச்சை வண்ணத்தில் காணப்படும். அதை வெட்டி னால் பால் வெளியாகும். உருசியோல் (Urushiol) என்று அழைக்கப்படும் இப்பாலானது கையில்பட்டால் தோலில் ஒவ்வாமையை ஏற்படுத்தும். (இந்தியாவில் இப்பாலானது மதம் பிடித்த யானையை அடக்க பாரம்பரியமாக பயன்படுத்தப்படுகிறது).
இதன் பருப்பானது சர்வதேச அளவில் விலை மதிப்புமிக்கது. பருப்பின் தோட்டில் காணப்படும் எண்ணெயானது (ஃபீனால்) மருத்துவரீதியாகவும், பிளாஸ்டிக் மற்றும் செயற்கை பிசின் (ரெசின்) தயாரிப்பு தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்த எண்ணெய் கையில்பட்டால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படலாம்.
இவையெல்லாம் பரவலாக நமக்குத் தெரிந்த சேதிகள் தான். அமிலத்தன்மை வாய்ந்த இப்பழக்கூழானது, ‘ஜாம்’ தயாரிக்கவும், காரத்துவையல் செய்யவும் (சட்னி) என பல்வேறு விதங்களில் பயன்படுத்தப்படுகிறது. இப்பழச்சாறு காய்ச்சி, வடிக்கப்பட்டு அதிலிருந்து மது தயாரிக்கப்படுகிறது அல்லது அத்துடன் நீரும், சீனியும் சேர்க்கப்பட்டு சுவை பானமாக அருந்தப்படுகிறது.
குறிப்பாக, கோவாவில் இவ்வாறு தயாரிக்கப்படும். கேசிவ் ஃபென்னி (Cashew Fenny) எனப்படும் நாட்டுச் சாராயம் புகழ்பெற்றது. இவ்வாறு தயாரிக்கப்படும் மது (ஒயின்) மன அழுத்தத்தை தடுக்கக்கூடியதாம். இப்பழத்தில் டானின் அதிகமாக இருப்பதாலும், இது எளிதில் அழுகிவிடுவதாலும் பெரும்பாலும் கொட்டையை மட்டும் எடுத்துவிட்டு கனியை வீணாக வீசி எறிந்து விடுகின் றனர் அல்லது பொதுவாக ஆடு, மாடுகளுக்கு உணவாகவும், உரமாகவும் ஆக்கப்படுகிறது.
கோவாவில் இப்பழத்தி லிருந்து ஃபென்னி என்ற நாட்டு மதுவகை தயாரிக்கப்படுகிறது. ஓராண்டில் இந்தியாவில் வீணாகும் சுமார் 40 லட்சம் டன் முந்திரி பழங்களை இவ்வகையில் பயன்படுத் தினால், நம் விவசாயிகளுக்கு 400 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது உலக சந்தையில், முந்திரி விநியோகத்தில் 30 சதவீதத்தை இந்தியா எட்டியுள்ளது.
முந்திரி பழத்தில் ஏராளமான விட்டமின்கள், தாதுக்கள், பிற முக்கிய சத்துக்கள் உள்ளன. இதில் ஆரஞ்சுப்பழத்தில் இருப்பதைப் போல 5 மடங்கு அதிக வைட்டமின் சி உள்ளது. அதோடு, அதிக தாது உப்புகளும், பல வாசனை எண்ணெய்களும் உள்ளன.
இக்கொட்டையிலிருந்து முந்திரி பருப்பை வறுத்து, உடைத்து பிரித்தெடுப்பது சற்று கடினமான பணியாகும். என்றாலும், முந்திரிக்கொட்டை விளையும் பகுதிகளில், விருந்தினர்களை வரவேற்க அல்லது மாலை நேர தேநீருக்கு துணைபொருளாக முந்திரிபருப்பு வறுத்து வைக்கப்படுவது பழக்கம். 100கிராம் முந்திரி பருப்பில் 70% கொழுப்புச்சத்தே உள்ளது.
முந்திரி பருப்பைப் பயன்படுத்தி தூத்துக்குடியில் தயாராகும் மக்ரூன் எனப்படும் உணவுப் பண்டம் உலகப் புகழ்பெற்றதாகும். சின்ன வயதில் பாயாசத்தில் முந்திரிப் பருப்புகளை தேடிப்பிடித்து தின்றதும், பல ஆண்டுகளுக்கு முன்பு அரைவிளைச்சலான பச்சைநிற கொட்டையை வெட்டி, பருப்பை எடுத்து, அதனை சிப்பி மீன் சேர்த்து சமைத்து உண்ட சுவையும் பலருக்கும் இன்னமும் மறக்க முடியாத சுவையல்லவா!
இவ்வாறாக, முழுமையாக நமக்குப் பயன்படும் முந்திரி… “என்னங்க.. வெறும் பழம், (கொட்டை) பருப்பு, பற்றி சொல்லிவிட்டு முழுமையா பயன்படும்ணு சொல்றீங்க..?”
சொல்ல மறந்த கதை இங்கே,
அதாவது, முந்திரி இலையும் கிளைகளும் கூட நமக்கு சிறப்பாக பயன்படுகின்றன. “என்ன எரிக்கவா?” என்று கேட்டுவிடாதீர்கள் – மருந்தாகத்தான்.
‘கொல்லா மர இல மருந்தாட்டா?’ என்று கேலி சிரிப்பு சிரிக்காதீர்கள். அது உலகம் முழுக்க எப்படியெல் லாம் மருந்தாகப் பயன்படுகிறது என்று தெரிந்தால் வியப்படைவீர்கள். முக்கியமாக எதற்காக பயன்படுத்தப்படுகிறது தெரியுமா?
– வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, வயிற்றுக்கடுப்பு தீர்க்க
– பாக்டீரியாவால் புண் புரையோடாமலிருக்க அக, புற மருந்தாக
– அனைத்து வகையான வயிற்றுப் புண்களுக்கும்
– கண் மற்றும் காதுநோய் தொற்று தீர்க்க
– இரத்தம் வடிதலை நிறுத்தவும், புண்ணை குணமாக்கவும்.
ஆமா, எப்பிடி பயன்படுத்தறது?
வேறெப்படி, இலையும் சின்ன கிளையும் போட்டு கசாயம் காய்ச்சி குடிக்க வேண்டியதுதான்.
ஏதாவது ஆராய்ச்சி செஞ்சி கண்டுபிடிச்சிருக்காவுளா?
ஆமா, நீரிழிவு, பாக்டீரியா எதிர்ப்பு, வீக்கம் நீக்க, புண்ணா காமல் தடுக்க, சவ்வுகளை சுருங்கவைக்க எல்லாம் பயன் படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கி ன்றன. ஆய்வுகள் ஒருபுறம் இருக்க, பாரம்பரியமாக எதற்காக பயன்படுத்துகிறார்கள் தெரியுமா?
நீரிழிவு, வயிற்றுகடுப்பு, இருமல்நீக்கி, இரத்தக்கட்டு போக்க, உணவு செரிமானத்தை தூண்ட, நீரை பிரிக்க, காய்ச்சலை குறைக்க, இரத்த அழுத்தத்தை சரிசெய்ய, பேதி மருந்தாக, உடல் சூட்டை குறைப்பதற்காக, உடலை நிலைப்படுத்த, வலுவேற்ற, உறுதியளிக்க, புண்களை குணப்படுத்த.
பாரம்பரியமாக பயன்படுத்துவது எப்படி?
வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்றுக்கடுப்பு போன்ற வற்றுக்கு இலைகளையும், இளந்தண்டுகளையும் கசாயமாக்கி 100 மி.லி வீதம் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை அருந்த வேண்டும்.
உலகளவில் எந்தெந்த வகையில் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது தெரியுமா?
மலேரியா, ஆஸ்துமா, மார்புச்சளி, தோல், தடிப்பு, இருமல், நீரிழிவு, செரியாமை, தோல்படை, காய்ச்சல், பிறப்புறுப்பு நோய்கள், ஆண்மைக்குறைவு, குடல் அழற்சி, பாலுணர்வைத் தூண்ட, நரம்பு தளர்ச்சி, வலி, சோரியாசிஸ், கண்டமாலை (Scrofula) , கிரந்தி, உள்நாக்கு அழற்சி, வாய்ப்புண், சிறுநீர்ப் பாதை கோளாறுகள், பால்வினை நோய்கள், புண்கள் என ஆப்பிரிக்கா, பிரேசில், ஹெய்த்தி, மலேசியா, மெக்சிகோ, பனாமா, பெரு, டிரினிடாட், துருக்கி, வெனிசுலா உட்பட பல்வேறு நாடுகளில் பல்வேறு நோய்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.
கொல்லா மரத்தோட பயன பாத்தீங்களா?

இக்கட்டுரை புதிய தென்றல் இதழில் வெளியானது
மின்னஞ்சல்: asuran98@gmail.com

Series Navigation

அசுரன்

அசுரன்