மீண்டும் காண்பேனா?

This entry is part [part not set] of 32 in the series 20070531_Issue

ஆதிராஜ்


பிள்¨ளைப் பிராயத்திலே – ஒரு
பெண்ணிடம் பாசம் வைத்தேன் – அவள்
கிள்ளை மொழியினிலே – செய்த
கேலி மறக்கவில்லை!

துள்ளும் இளமையிலே – எனைத்
தொட்டுவிட்டாள் எனிலோ – போதைக்
கள்ளின் மயக்கத்திலே – கனாக்
கண்டு கிடந்தவன் நான்!

கால விரைவினிலே – பல
காதத் தொலைவினிலே – என்
ஞாலச்சுமை வளர்ந்தும் – அந்த
ஞாபகம் போகவில்லை!

எண்ணிக் கிடப்பதுண்டு! – நான்
ஏங்கித் தவிப்பதுண்டு! – என்
கண்கள் நனைவதுவாய் – பல
காலம் கழிந்ததுண்டு!

சென்ற திசை எதுவோ? – அவள்
சேர்ந்த இடம் சுகமோ? – கொஞ்சும்
என்றன் நினைவுகளும் – நெஞ்சில்
இன்னும் இருந்திடுமோ?

சொல்லக் கறை படுமோ? – இது
சொன்னால் புரிந்திடுமோ? – அந்த
நல்ல மனங்களிலே – ‘ஐய’
நாசம் விளைந்திடுமோ?

ஞால நியதிகளில் – வந்த
நியாயம் குறைபடுமோ? – என்
காலம் முடிவதற்குள் – நான்
காண முடிந்திடுமோ?

– ஆதிராஜ்.

Series Navigation