மிர்சா காலிப்பின் கவிதை உலகம்

This entry is part [part not set] of 30 in the series 20030125_Issue

எச். பீர்முகஹம்மது


அதிகாரத்தின் வெறி உச்சத்தில் இருக்கும் பகுதியில் ஒரு படைப்பாளியின் இயக்கம் என்பது நெருடலான விஷயம். எல்லாமே வெறியர்களின் கையில் இருந்த மாதிாியான வன்முறையும், கொடூரமும், குழப்பமான நிலைமைகளும் உருவாகி இருக்கும் சமூகத்தில் எப்போதும் உணர்ச்சி வசப்படும் மனங்கள் குதூகலத்தை காட்டிலும் சோகத்திற்கே பொிதும் உட்படுகின்றன. இம்மாதிாியான சூழ்நிலை கட்டமைப்பில் மிர்சா காலிப் என்ற மிர்சா அஸதுல்லா கான் காலிப் 1797 டிசம்பர் இறுதியில் ஆக்ராவில் பிறந்தார்.

1796 செப்டம்பாில் பெரோன் என்கிற ஒரு பிரெஞ்ச் வீரர் தெளலத் ராவ் ஸிந்தியா என்பவாின் சாம்ராஜ்ய சேனைக்குத் தலைமைத் தளபதி ஆனார். தலைமை தளபதி என்ற முறையில் அவர் ஹிந்துஸ்தானத்தின் கவர்னராயுமிருந்தார். அவர் டெல்லியை முற்றுகையிட்டுக் கைப்பற்றி தம் அதிகாாிகளில் ஒருவரான லே மர்ச்சன்ட் என்பவரை நகாின் கவர்னராகவும் மாமன்னர் ஷா ஆலம் என்பவாின் பாதுகாவலராகவும் நியமித்தார். பிறகு அவர் ஆக்ராவை கைப்பற்றினார். அதனால் அவர் பத்து லட்சம் ஆண்டுகளுக்கு மேல் வருவாய் வரக்கூடிய பெரும் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டு மேற்கு இந்தியாவின் தலைவரானார். அவர்கள் நகருக்கு வெளியே ஓர் அரண்மனையில் மேலாண்மை நிலையில் அவர் வசித்தார். அங்கிருந்தவாறே சமஸ்தான மன்னர்களுக்கு உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டு எவ்வித குறுக்கீடும் இல்லாமல் சம்பல் பகுதியிலிருந்து சட்லெஜ் பகுதி வரையான பிரதேசத்தின் பொதுமக்கள் மற்றும் இராணுவ நிர்வாகத்தை அவர் இயக்கி வைத்தார்.

குறிப்பாக முகலாய பேரரசு முறிந்து போனதோ, கிராம நாட்டாண்மை காரர்கள் தலையெழுத்தோ, அதிகாரத்தை பிடிப்பதற்கென முடிவில்லாமல் நடந்த போட்டிகளோ, எதுவும் காலிப் ஒரு கவிஞராக உருவாவதற்குாிய அம்சங்களாக அமையவில்லை. பிாிட்டிஷ் ஆதிக்கம் திணிக்கப்படுவதற்கு முன் நிலவிய குழப்பமான நிலைமைகளோ, பிாிட்டிஷ் ஆட்சி குறித்த எதிர் விளைவுகளோ, பல நூற்றாண்டுகளாக நிலைத்து விட்ட வாழ்க்கை அம்சங்களை போல, வட இந்தியாவின் பொதுவான நகர்புற கலாச்சார மனிதர்களின் மனங்களை குறிப்பிட்ட இலக்கிய ாீதியான சுய-வெளிப்பாட்டுக்கு வழிவகுத்ததாக சொல்ல முடியாது.

அந்த நகர்புற கலாசாரம் குறுகிய மனமுடையதாக திமிர்பிடித்த நகரவாசித்தனமானதாகவே இருந்தது. நகரத்தை பாலைவனத்திடையே ஒரு பசுஞ்சோலையாகவும், நகரத்து மதிற்சுவரைச் சுற்றுச்சூழ உள்ளதொரு காட்டுமிராண்டி தனத்துக்கு எதிராக கலாசாரத்தை காப்பாற்றும் கொத்தளமாகவும் அது கருதியது. நகரத்தில் தான் வாழக்கையை நடத்த முடியுமென்றும், நகரம் பொிதாக இருக்க வாழ்வும் விருத்தியடையும் என்று அது நம்பியது. பாசமும் பைத்தியமும் நகருக்கு அப்பாற்பட்ட உணர்வுடையவனாக ஒரு மனிதனைக் கொண்டு செல்லுமேயன்றி, இயற்கைக்கு மிக நெருக்கமாக இருக்க வேண்டும் என்ற நிலைபாடு அவனை நகருக்கு வெளியே அனுப்பாது. இயற்கையே நகரத்தில் தான் முழுவதும் நிரம்பியிருக்கிறது. நாட்டுப்புற வடிவத்தில் புாியக்கூடிய வடிவத்தில் அது காணப்படாது என்று அக்கலாச்சாரம் தன்னைத்தானே ஏற்றுக் கொண்டு விட்டது.

நகரத்தில் தான் ஏராளமான பூக்கள் கொண்ட மலர்த்தோட்டங்கள் இருக்க முடியும். காதலி தன் அங்க அசைவின் அழகை வெளிப்படுத்தி நடைபோட ஊசியிலை மரங்களின் வாிசையைக் கொண்ட பாதைகள் அவற்றில் இருக்கும். மிர்சா காலிபின் கவிதைகள் நகரத்து வாழ்க்கையின் வெதுமைகளை நோக்கியவை. அதோடு மட்டுமல்லாமல் கிராமத்து வாழ்வின் நெடியும் உண்டு. மேலும் காலிப் தன்னுடைய கவிதைகளில் பாலியல் தொழிலாளர்களை பற்றி குறிப்பிடுகிறார். 1739-ல் எழுதப்பட்ட முரக்கா-இ-தில்லி என்கிற நூலின் வாயிலாக பாலியல் தொழிலாளர்கள் நகாின் சமூக மற்றும் கலாசார வாழ்வில் எத்தகைய ஆதிக்கம் செலுத்தினார்கள் என்பதை அறிகிறோம். லக்னோவிலும் மற்ற பொிய நகரங்களிலும் ஏறக்குறைய அதே நிலைமை தான் இருந்திருக்க கூடும்.

உருதுக் கவிதையில் வெகுவாக குறிப்பிடப்படும் பஸ்ம் அதாவது கூட்டம் என்பது நண்பர்கள் கூடுவதாகவோ அழைக்கப்பட்டவர்களை அழைத்தவர் உபசாிக்கும் விருந்தாகவோ, கலாச்சார சொற்பொழிவுக்காக கூடிய ஒரு பொதுக்கூட்டமாகவோ இருந்திருக்க முடியாது. அத்தகைய பஸ்ம் கூட்டங்களில் ஒரு காதலியோ, எதிாிகளோ, வெறுப்புக்குாிய வேற்று மனிதர்களோ இருக்க முடியாது. ஆனால் பரத்தையின் களியாட்டத்தில் இவையெல்லாம் உண்டு. காலிப் பின்வருமாறு பாடும் போது அதுமாதிாி ஒரு பரத்தையின் களிக்கூடத்தை தான் மனதில் கொண்டிருக்க வேண்டும்.

அழகின் ஆட்ட பாட்ட

அவையில் அன்னியர்

கூடாது என்றேன் நான்

எழப்பா நட வெளியே

விரட்டினாள் அவள்

அது அப்படி தான் என்று எனக்கு காட்ட

மேலும்

அட சாி தான், அவள் ஆண்டவனை

தொழவில்லை – அவருக்கு நம்பிக்கையே

இல்லையென்றாலும் என்ன

அவளை பிடிக்கவில்லை எனில் அவளிடம்

போய் என் ஆன்மாவை

ஏன் பலி கொடுக்க வேண்டும்.

காதலிக்கும் பெண்ணைப் பற்றி குறிப்பிடப்படும் சந்தர்ப்பங்களை நாம் பாிசீலித்து அவள் எப்படி தன் காதலனை நடத்துகிறாள் என்பதை கூர்ந்து பார்ப்போமானால், கவித்துவ பிம்பமும், களிக்கூடத்தின் தோற்றமும் நமக்கு தெளிவாகின்றன.

19-ம் ந}ற்றாண்டின் பிலிஸ்தினிஸம் எனப்படும் கலாசார பொறுப்பும் போலித்தனமும் அத்துடன் சமூக சீர்திருத்தம் பற்றிய ஆவலும் அந்த உண்மையை திரை போட்டு மறைக்க முயன்றிருக்கின்றன. இன்னொருபுறம் கெளரவமானவர்களாலும் விவேகிகளாலும் ஆதாிக்கப்பட்ட தூய்மையான மதுச்சாலையும் மதுவும் போலவே காதலியும் ஒரு குறியீடாக கருதப்பட வேண்டுமேயன்றி மனசுக்குப் பிடிக்காத யதார்த்தங்களின் குறிப்புகளாகக் கருதப்பட்டு விடக்கூடாது என்பதை நிரூபிக்க பொிதும் முயன்றிருக்கின்றனர். அப்படி தங்கள் கூற்றை நிரூபிக்க அவர்களுக்கு நிதிநெறி விளக்கங்கள் அதிகம் தேவைப்படவில்லை. காரணம், சூபி என்ற கவிமரபு எல்லா யதார்த்த நிலைகளையும் குறிப்பாக காதலனுக்கும் காதலிக்கும் இடையேயான உறவையும் தெய்வீகக் குறிக்கோளாக மாற்றித் தந்து விட்டது. காலிப் தன்னுடைய கவிதைகளில் இரு உலகங்களைப் பற்றி கூறுகிறார். கேள்* இரண்டு உலகங்கள் உள்ளன. கடைசி காலத்தில் தாம் எழுதிய கடிதங்கள் ஒன்றில் ஒன்று ஆவிகளின் உலகம் மற்றது நிலமும் நீரும் உள்ள உலகம். நிலமும் நீருமான இந்த உலகின் குற்றவாளிகள் தங்களுக்குாிய தண்டனையை ஆவிகளின் உலகில் அடைகிறார்கள். ஆனால் ஆவிகள் உலகத்துக் குற்றவாளிகள் தண்டனை பெறுவதற்காக பூமிக்கு, அனுப்பப்படுவதும், நடந்திருக்கிறது. எனவே நான் 1212 ரஜப் மாதம் எட்டாந்தேதி இங்கே நீதிமன்றத்துக்கு அழைக்கப்பட்டேன். பதிமூன்று ஆண்டுகள் நான் நியாயஸ்தலத்துக் காவலில் இருந்தேன். பிறகு 1225 ரஜப் ஏழாம் நாள் எனக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. என் கால்களில் சங்கிலிகள் பிணைக்கப்பட்டன. எனக்கென சிறை டெல்லி என தீர்மானிக்கப்பட்டு அதனால் நான் இங்கே கொண்டு வரப்பட்டு சிறையிடப்பட்டேன். கவிதையாகவும், கட்டுரையாகவும் படைப்பிலக்கியம் ஆக்குவதென்பது எனக்குத் தரப்பட்ட கடுமையான பணி. பல ஆண்டுகளுக்கு பின்னர் நான் சிறையிலிருந்து தப்பி கிழக்கு நகரங்களில் சுமார் மூன்றாண்டுகள் சுற்றித் திாிந்தேன். இறுதியில் நான் கல்கத்தாவில் பிடிக்கப்பட்டு மறுபடியும் ஜெயிலில் போட்டுப் பூட்டப்பட்டு விட்டேன். தன் கால்களால் இழுத்துச் செல்லப்பட்டு விடக்கூடிய கைதி இவன் என்று என்னைப் பற்றி தொிந்தும் எனக்கு கைவிலங்குகள் போட்டு சங்கிலிகளால் கீறப்பட்ட கால்களோடும், விலங்குகளில் சீராய்க்கப்பட்ட கைகளோடும் விதிக்கப்பட்ட கடும் பணியைச் செய்வது மேலுங் கடினமாயிற்று. என் சக்தியெல்லாம் வறண்டு விட்டது. ஆனால் நான் வெட்கங்கெட்டவன் சென்ற ஆண்டு, சங்கிலிகளைச் சிறையின் ஒரு மூலையில் வைத்து விட்டு நான் ஓடி விட்டேன். மீரட், மோரதாபாத் இவைகளின் வழியாக ராம்பூர் போய் சேர்ந்தேன். சில நாட்கள் இரண்டு மாசத்திற்கும் குறைவாக நான் அங்கே இருந்தேன். அப்புறம் நான் பிடிபட்டு திரும்ப கொண்டு வரப்பட்டேன். இனிமேல் நான் ஓடப்போவதில்லை என்று இப்போது சபதம் எடுத்திருந்தேன். நான் விரும்பினாலும் கூட என்னால் எப்படி அதை செய்ய முடியும். ஓடுவதற்கு கூட எனக்கு தெம்பில்லை.

என் விடுதலைக்கான உத்தரவு எப்போது வருமென்று தொியவில்லை. இந்த ஆண்டு இறுதியில் வருமென்று எனக்கு லேசாக ஒரு நம்பிக்கை எப்படியானாலும் எனக்கு விடுதலை கிடைத்தால் நான் நேராக ஆவிகளின் உலகத்துக்கே போய் விடுவேன். பின்னால் என்ன ? விடுதலை அடைந்த பின் ஒரு கைதி தன் வீட்டைத் தவிர வேறு எங்கே போவான் ?

காலிப் கடிதங்களுக்கே உாிய தனித்தன்மைகளில் இதுவும் ஒரு வேடிக்கைத்தனமாகும். தன் பரம்பரைப் பற்றி காலிபுக்கு மிகுந்த பெருமை உண்டு. மிகப் பழைய காலத்து பாரசீக மன்னரான அகேமெனஸ் அரச வம்சத்தை சார்ந்தவர் என்று தமது பூர்வத்ரத்தைச் சொல்வார். ஒரு சமயம் கவிஞூர் பொக் என்ற அரச குருவைப் பற்றி அவதூறாக காலிப் ஏதோ சொல்லி விட்டார் என்பதற்காக பேரரசர் பஹதுர்ஷா கோபமடைந்ததாய்ச் சொல்லப்பட்ட போது காலிப் ஒரு கஜல் எழுதினார்.

ஒரு நூறு பரம்பரைகளாக என்

முன்னோர்கள் போர் வீரர்களாய்

இருந்திருக்கிறார்கள்

பெருங் கெளரவ அந்தஸ்தை

பெறுவதற்கு பொருட் பாடல்

நானெழுதத் தேவையில்லை.

காலிப் கஜல் என்ற உருது கவிதையின் வகைப்பாட்டு சொந்தக்காரர். வாழ்க்கை முறையின் இயல்பு, காதலின் இனிமை, உறவு நிலை, பாலியில் தொழிலாளர்கள் இயங்கு முறை, தாபம், சுகதுக்கங்கள், சுய-வருத்தல், தன் ஏற்பு போன்றவைகள் அவருக்கான கவிதையின் அம்சங்கள் உருது கவிதை உலகம் காலிப்பை இன்னும் நினைவு கூர்ந்து கொண்டிருக்கிறது.

peer13@asean-mail.com

Series Navigation