மாலதி மாற மாட்டாள்!

This entry is part [part not set] of 40 in the series 20080124_Issue

ஜோதிர்லதா கிரிஜாதாமோதானால் நம்பவே முடியவில்லை. தான் அதுகாறும் அறிந்து வந்துள்ள மாலதியிடம் தான் அறியத் தவறிய சில பண்புக்கூறுகள் உள்ளன என்பதை அவன் முதன் முதலாக அறிந்து அதிர்ச்சியுற்றது அவன் அமெரிக்கவுக்குத்தான் போய் டாக்டராகப் பணி புரியவேண்டும் என்று அவள் பிடிவாதம் பிடித்தபோதுதான். அவனும் எவ்வளவோ சொல்லிப் பார்த்துவிட்டான். உதவிப் பணத்தில் படித்து டாக்டர் பட்டம் பெற்றிருந்த கிராமத்தானாகிய அவன் இந்தியாவின் ஏதேனுமொரு கிராமத்தில்தான் டாக்டராகப் பணி புரிந்து கிராமத்து மக்களுக்குச் சேவை செய்யவேண்டுமென்பதை இலட்சியமாய்க் கொண்டிருந்தான். இந்த இலட்சியம் அவன் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த போதே அவன் தன்னுள் செய்திருந்த முடிவாகும். இந்த முடிவைப் பற்றி அவளைத் தான் காதலித்தபோதே அவளிடம் தான் தெரிவிக்காதது தவறோ என்று அவன் அவளது எதிர்ப்பை முதன் முதலாக அறிய நேர்ந்த கணத்தில் நினைத்துக் கழிவிரக்கமுற்றான்.

இரத்த தானத்துக்காக அவன் மாலதியின் அலுவலகத்துக்குப் போனபோதுதான் அவர்களது முதல் சந்திப்பு நிகழ்ந்தது. அந்த முதல் சந்திப்பிலேயே அவனுக்கு அவள் மேல் காதல் வந்துவிடவில்லைதான். ஆனால் அவளுக்கு அப்படி இல்லை என்பதை அவன் பிற்பாடு தெரிந்துகொண்டது வேறு விஷயம். டாக்டர் பட்டம் பெற்று அவன் முதன் முதலாக ஓர் அரசு மருத்துவ மனையில் பயிற்சியில் இருந்த காலகட்டத்தில்தான் அவர்களது அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது.

அவர்களது இரண்டாம் சந்திப்பு அவன் பணிபுரிந்துகொண்டிருந்த அரசு மருத்துவமனையிலேயே நிகழ்ந்தது. மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவந்த யாரையோ அவள் பார்க்க வந்தபோது அது நிகழ்ந்தது. அவள்தான் அவனை அடையாளம் தெரிந்துகொன்டு அவனை நோக்கிப் புன்னகை செய்தாள். ஒருகணம் திகைத்தாலும், மறு கணமே அவனுக்கும் ஞாபகம் வந்துவிட்டது. அவனும் பதிலுக்குப் புன்னகை புரிந்தபின், ‘நல்லாருக்கீங்களா? ரத்தம் கொடுத்ததால கஷ்டம் ஒண்ணும் ஏற்படல்லையே?’ என்று கேட்டுச் சிரித்தான். எத்தனையோ பேரிடம் இரத்தம் எடுத்த அவனுக்கு அவளை நினைவுக்குக் கொண்டுவர முடிந்தது அவன் அவளிடம் அதை எடுப்பதற்கு முன்னால் இல்லாத பொல்லாத கேள்விகளைக் கேட்டாள் என்கிற காரணத்தால்தான். ‘தலை சுத்துமா, மயக்கம் வருமா, காய்ச்சல் வருமா, உடம்பு பலவீனமாகுமா, எடுத்த இரத்தம் மறுபடியும் உடலில் ஊற எத்தனை நாளாகும், அய்யோ எனக்கு பயம்மாருக்கே’ என்றெல்லாம் அவள் அலட்டியதுதான். அப்படியெல்லாம் எதுவும் ஆகாது என்று அவன் அவளுக்கு ஒரு குட்டிச் சொற்பொழிவின் வாயிலாக எடுத்துச் சொல்லவேண்டிய தாயிற்று. அவள் அவனைப் பார்த்துப் புன்னகை செய்த மறு கணமே அவளை அவன் அடையாளம் கண்டுகொண்டது இதனால்தான்.

அவர்களது மூன்றாம் சந்திப்பு ஓர் ஓட்டலில் நிகழ்ந்தது. எதிர்பாராத சந்திப்பு என்றுதான் அவன் எண்ணியிருந்தான் – அப்படி யில்லை என்பதை மாலதி பின்னொரு நாளில் அவனுக்குத் தெரிவிக்கும் வரையில்! அன்று மாலையில் அவள் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தபோது அவன் தனது பைக்கை அவள் நின்றிருந்த நடைபாதையிலேயே இருந்த ஓட்டலின் வாசலில் நிறுத்திவிட்டு அதனுள் நுழைந்ததைப் பார்த்த பின் அவளும் அவனுக்குப் பின்னாலேயே அதே ஒட்டலுள் நுழைந்தாளாம். ஓட்டலில் அவன் சென்றடைந்த மேசைக்கு அருகில் அவளும் தலையைக் குனிந்துகொண்டு – அவன் இருந்ததைக் கவனிக்காதவள் போல் – வந்து உட்கார்ந்தது அவனைச் சந்திக்கும் ஆவலால்தானாம். இதையெல்லாம் அவள் பிற்பாடு ஒரு நாள் அவனுக்குச் சொன்னபோது அவன் வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தான். அவனும், அவர்கள் காதலர்களான பிறகு, விளையாட்டாக, ‘பொண்ணுங்க கெட்டிக்காரிங்கதான்! அவங்க தாங்களாகவே ‘ஐ லவ் யூ’ ன்னு சொல்ல முந்திக்காட்டியும், அப்படி ஒரு ஆம்பளையைச் சொல்ல வைக்கிறதுலே கெட்டிக்காரிங்கன்னு தோணுது!’ என்றான்.

அவள் தன்னை விரும்புகிறாளோ என்று அவனை நினைக்கவைத்தது அவளிடமிருந்து அவனுக்குப் புத்தாண்டு வாழ்த்து வந்த நாளில்தான். ஓட்டலில் அவர்களது சந்திப்பு நிகழ்ந்த நாளில் அவன் அவள் பணிபுரிந்துகொண்டிருந்த அலுவலகம் இன்னதென்பதைக் கேட்டுத் தெரிந்துகொண்டிருந்தான். இதனால், அவளது வாழ்த்து மடல் வந்த அன்றே அவன் அவளுடன் தொலைபேசினான். அவளுக்கும் அவன் புத்தாண்டு வாழ்த்துச் சொல்லிவிட்டு, மிகுந்த தயக்கத்துடன், ‘உங்களை நான் சந்திக்கணுமே?’ என்றான். அவள் பிகு ஏதும் பண்ணாமல்,’ஓ! சந்திக்கலாமே!’ என்றாள். அவளுக்குத் தன் மேல் ஓர் ‘இது’ இருந்ததைத் தெளிவாய்த் தெரிந்துகொண்டுவிட்ட காரணத்தால் அவளிடம் – தான் அவளைக் காதலிப்பதாய் அவன் சொல்லாவிட்டாலும் – ‘ஆர் யூ இண்டெரெஸ்டெட் இன் மீ?’ என்று சிரித்துக்கொண்டே கேட்டான்.

அவள் தமிழ் எழுத்தாளர்களின் எழுத்துப் பாணியில் கால் கட்டை விரலால் நிச்சயம் தரையில் கோலம் போட்டிருக்க மாட்டாள் என்றே அவனுக்குத் தோன்றியது. ஒருகால் முகம் சிவந்திருக்கக்கூடும் என்று அவன் எண்ணினான.

அவள் எந்தத் தயக்கமும் காட்டாமல், “இல்லேன்னா உங்களுக்குப் புத்தாண்டு வாழ்த்து அனுப்பி யிருப்பேனா? நீங்க சொன்னதும்,, ‘ஓ!சந்திக்கலாமே!’ அப்ப்டின்னிருப்பேனா?’ என்றாள். போலியான கூச்சங்களை ஒரு சம்பிரதாயத்துக்காகக் கூட வெளிப் படுத்தாத அவளது எதிரொலி அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதன் பிறகு பல காதலர்களையும் போல் அவரகள் முதன் முதலில் கடற்கரையில்தான் சந்தித்துப் பேசினார்கள்.

தான் எம்.எஸ். தேர்வுக்குப் படித்து வருவதை அவன் அவளுக்குத் தெரிவித்தான். ஆனால் ஒரு கிராமத்தில்தான் தான் பணிபுரிய இருப்பதாய் அவன் அவளுக்குச் சொல்லவில்லை. சொல்யிருந்திருக்க வேண்டும் என்று இப்போது தோன்றியது. முதலிலேயே அதை அவளுக்குத் தான் தெரிவித்திருந்தால், ஒருவேளை அவள் தன் காதலை வளர்த்துக்கொண்டிருந்திருக்க மாட்டாள் என்று இப்போது அவனுக்குப் பட்டது. பட்டணத்துப் பெண்ணான அவள் ஒரு கிராமத்துக்கு வந்து தன்னோடு குடித்தனம் நடத்த முன்வருவாளா என்பது பற்றித் தான் யோசித்திருந்திருக்க வேண்டும் என்றும் இப்போது தன்னைத் தானே நொந்துகொண்டான்.

அவளுடன் பழகத் தொடங்கி ஓராண்டுக்குப் பிறகு அவனது எம்.எஸ். தேர்வு முடிவு வந்தது. மிகச் சிறப்பாய்த் தேறியிருந்தான். அதை அவன் அவளுக்குச் சொன்னபோது அவள்தான் எப்படி ஒரு சின்ன குழந்தை போல் ஆர்ப்பரித்தாள்! தன்னைக் காட்டிலும் அவளே அதிக மகிழ்ச்சியுற்றதாக அவனுக்குத் தோன்றியது. அந்த ஓராண்டுக் காலத்தில் அவர்கள் சந்திக்காத நாளே இல்லை எனலாம். தேர்வு முடிவைக் கேட்டதும் மட்டற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மறு கணமே, ‘அப்ப? அமெரிக்கா, லண்டன்னு போவீங்களா?’ என்று எடுத்த எடுப்பில் அவள் கேட்டாள்.

அந்தக் கேள்விக்குப் பின்னால் இருந்த அவளது ஆசையைப் புரிந்துகொள்ளாதவனாய், ‘சேச்சே! அமெரிக்காவாவது, ஆ·ப்ரிக்காவாவது! நான் நம்ம இந்தியாவிலேயேதான் வேலை செய்யறதாயிருக்கேன். அதிலேயும், ஒரு கிராமத்திலேதான். நான் உபகாரச் சம்பளத்திலேயே முழுப் படிப்பையும் படிச்சுப் பட்டம் வாங்கினவன். என்னோட திறமை என்னை முன்னுக்குக் கொண்டுவந்த இந்த நாட்டுக்குத்தான் பயன் படணும்கிறது என்னோட ஆசை. ஏன்? லட்சியம்னே சொல்லுவேன். . .’ என்று உற்சாகமாய்ச் சொல்லிக்கொண்டு போனவன் அவள் முகத்துப் புன்னகை மறைந்து அதில் ஓர் ஏமாற்றம் உடனேயே குடிகொண்டுவிட்டதைக்கணப் பொழுதில் கண்டுகொண்டுவிட்டான்.

இந்தக் காலத்துப் படித்த பெண்களுக்கு இருக்கும் ‘அமெரிக்காவுக்குப் போய்க் குடியேறி வாழும்’ ஆசை அவளுக்கும் இருந்ததில் அவன் பெரிதாய் வியப்படையாவிட்டலும், தனது லட்சியமும் விருப்பமும் தெரிந்த பிறகு அதை அவள் அவ்வளவாகப் பெரிது படுத்தமாட்டாள் என்றுதான் அவன் எண்ணினான். பெண்களின் காதல் வலியது என்று அவனுக்கு எண்ணம். அது அவளைத் தனக்காக விட்டுக்கொடுக்க வைத்துவிடும் என்றும் அவன் நம்பினான்.

அவன் தனது எண்ணத்தைச் சொல்லி முடித்துவிட்டுப் புன்னகையோடு அவளை ஏறிட்டபோது அவள் ஆர்வம் காட்டாமல், கடலை வெறித்துக்கொண்டிருந்தாள். ‘என்ன மாலதி, ஒண்ணுமே சொல்லாம இருக்கே? கிராமத்துக்குப் போகணும்னதும் ஒரு மாதிரி ஆயிட்டியே! கிராமத்து மக்களைச் சந்திச்சுக் கொஞ்ச நாள் பழகினேன்னு வெய்யி, அப்படியே அவங்களோட ஒட்டிக்கிடுவே! ஏன்னா, கள்ளம் கவடு இல்லாத மனுஷங்க கிராமத்து ஆளுங்க! அதுலேயும் கிராமத்துக்குக் சேவை செய்யவந்திருக்கிற டாக்டரோட மனைவிங்கிறதால உம்மேல உசிரையே வைப்பாங்க!’

என்று அவன் சொன்னதற்கும் அவள் அவனது கூற்றை ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ முதலில் எதுவுமே சொல்லவில்லை.

அப்போதும் ஒன்றுமே பேசாமல் உட்கார்ந்துகொண்டிருந்த அவள் தனது மவுனத்தின் வாயிலாக அவ்வளவு எளிதில் அவள் அவனது வழிக்கு வரமாட்டாள் என்பதை அவனுக்கு மறைமுகமாக உணர்த்திவிட்டாள்.

‘என்ன மாலதி இது? ஒண்ணுமே பேசாம உக்காந்துக்கிட்டு இருக்கே? ஏதாவது பேசு. ‘

அதற்குப் பிறகுதான் அவள் வாயைத் திறந்தாள். ஓர் ஆற்றாமையுடன் அவனைப் பார்த்தவள், ‘என் சிநேகிதிங்க எல்லாருமே அமெரக்காவிலதான் இப்ப இருக்காங்க. நானும் கம்ப்யூட்டர் எஞ்சினீரிங் படிச்சிருக்கிறதால நம்ம ரெண்டு பேருக்குமே அமெரிக்காவிலே சுலபமா வேலை கிடைக்கும். என்னோட கனவு அமெரிக்காதான்!’ என்றாள். அந்தக் கடைசி வாக்கியம் ஒரு திட்டவட்டமான அறிவிப்பாகத்தான் ஒலித்ததே தவிர, அவனுடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொண்ட எந்த அடையாளமும் அதில் இல்லை! ‘கிராமத்துக்கெல்லாம் நான் வர மாட்டேன்’ என்கிற தொனியும் அதில் ததும்பிற்று. ‘அமெரிக்கா இல்லையென்றால் நானும் உனக்கு இல்லை!’ என்று வெளிப்படையாக அவள் கூறாவிட்டாலும், அந்தத் திட்டவட்டமான அறிவிப்பு அவள் பேச்சில் அடங்கியிருந்ததாய்த்தான் அவனுக்குத் தோன்றியது. (அப்படித் தோன்றியது சரிதான் என்பதையும் மறுநளே அவள் அவனுக்கு உணர்த்திவிட்டாள்.)

‘என்ன மாலதி இப்படிச் சொல்றே? கனவுகள் இருக்க வேண்டியதுதான். ஒத்துக்குறேன். ஆனா அது நிறைவேற முடியாதுன்ற போது அதை ஏத்துக்குற மனப் பக்குவமும் வேணும்!’

‘ஏன்? அந்தப் பக்குவம் உங்களுக்கும் இருக்கலாமே? உங்க கிராமத்துக் கனவை ஒதுக்கிவெச்சுட்டு, நீங்க அமெரக்காவுக்குப் போகலாமே?’

‘மாலதி! புரிஞ்சுக்காம பேசறே. உன்னோட கனவு நியாயமானதா, இல்லாட்டி என்னோட கனவான்னு கொஞ்சம் நிதானமா யோசிச்சுப் பாத்தியானா, என்னோட முடிவை நீ ஆதரிப்பே!’

‘ஒரு நாளும் இல்லே!. . . சரி. விடுங்க. நமக்குள்ளே எதுக்கு வீண் வாக்குவாதம்?’ என்று சொல்லிவிட்டு அவள் எழுந்துகொண்ட போது அவள் தன் கன்னத்தில் அடித்துவிட்டாற்போல் அவன் உணர்ந்தான். ‘அவள் மேற்கொண்டு என்னதான் செய்கிறாள், பார்க்கலாம்’ என்கிற எண்ணத்துடன் அவன் எழாமல் உட்கார்ந்தபடியே இருந்தான். அவன் எழுந்து தனக்குப் பின்னால் வருகிறானா என்று கூடப் பார்க்காமல் அவள் விடுவிடுவென்று நடந்தாள். ‘சரி, விடுங்க’ என்று அவள் சொன்னது, ’அப்படியானால் என்னையும் விட்டுவிடுங்கள்’ என்கிற பொருளில்தான் என்று அவன் புரிந்துகொண்டுவிட்டான். ‘காதல் என்பது அவ்வளவு மலினமானதா’ என்று அவனுள் வேதனை பெருகியது.

அன்று இரவு அவனுக்குத் தூக்கம் போயிற்று. காதலுக்கும் லட்சியத்துக்குமிடையே நடந்த போராட்டத்தில் அவனது லட்சியமே வென்றது. இனி அவளாகத் தன்னோடு பேசமுற்பட்டால் அல்லாது, தான் ஓர் அடியும் எடுத்து வைக்கக்கூடாது என்கிற முடிவில் திடமாக இருக்க அவன் தீர்மானித்தான்.

ஆனால் அவளே இரண்டு நாள்கள் கழித்துத் தொலை பேசினாள்:

‘நான்தாங்க பேசறேன். கோவிச்சுக்கிட்டீங்களா?’

‘நீதான் கோவிச்சுக்கிட்டு எந்திரிச்சுப் போனே! இப்ப எனக்குக் கோவமான்னு கேக்குறியே! குதிரை தூக்கிப் போட்டது மில்லாம ஏறி மிதிச்ச கதையாவில்ல இருக்கு!’

‘சாரிங்க!. . . நான் இன்னும் கொஞ்ச நேரம் உங்களோட உக்காந்து பேசி யிருக்கணும். அதை விட்டுட்டு எந்திரிச்சுப் போனது தப்புத்தான்!’

‘சரி. ஆனா, இன்னும் கொஞ்ச நேரம் உக்காந்து என்ன பேசியிருக்கப் போறே? என்னோட மனசை மாத்த நீ முயற்சி பண்ணியிருப்பே; உன்னோட மனசை மாத்த நான் முயற்சி பண்ணியிருப்பேன்! மறுபடியும் வாக்குவாதம் தான் நடந்திருக்கும். இல்லையா? இழுபறியிலே முடிஞ்சிருக்கும்’

‘ . . . . . .’

‘என்ன, பதிலைக் காணோம்?’

‘அதான் சரியாச் சொல்லிட்டீங்களே! ‘

‘அப்ப?’

‘நீங்கதான் சொல்லணும்.’

‘அதான் சொல்லிட்டேனே! என்னோட லட்சியத்தை நான் கைவிட முடியாது, மாலதி.’

‘அப்ப? என்னைவிட உங்களுக்கு ஒரு பட்டிக்காட்டிலே போய் வேலை செய்யிறது பெரிசாப் போச்சா?”

‘ . . . . . . .’

‘என்ன. பேசாம இருக்கீங்க?’

‘புரிஞ்சுக்க முடியதவங்களோட வாக்குவாதம் பண்ணிப் புரிய வைக்கலாம். ஆனா, புரிஞ்சுக்கக்கூடிய ஒரு படிச்ச பொண்ணோட – ஆனா புரிஞ்சுக்க மாட்டேன்னு பிடிவாதம் பிடிக்கிற வங்களோட – நான் என்னத்தப் பேசறது, மாலதி?’

‘சரி. அப்ப குட் பை! இந்த ஒரு வருஷ நட்புக்கு நன்றி.’ – இதைச் சொன்னபோது அவளது குரல் கம்மியது. அநதச் சொற்களைக் கேட்டபோது அவனுக்கோ நெஞ்சை யடைத்தது. இருந்தும், மனத்தைக் கல்லாக்கிக்கொண்டு பேசாதிருந்தான். சில நொடிகள் போல் காத்திருந்த பின் அவள் தொடர்பைத் துண்டித்தாள். அதன் பிறகே அவன் ஒலிவாங்கியைக் கிடத்தினான்.

மறு மாதமே திருச்சி மாவட்டத்தில் ஒரு சிற்றூருக்கு அவன் மருத்துவராகப் பதவி யேற்றான். புறப்படுவதற்கு முன்னால் மாலதியிடம் தொலைபேசியில் விடை பெற்றான். அதற்கு முன்னர் வரையில் இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை. அவளும் உடைந்து போயிருந்தாலும் – அது அவளையும் மீறிக் குரலின் நடுக்கத்தில் வெளிப்பட்டாலும் – ஒரு சமாளிக்கும் தொனியும் அதில் செயற்கையாக ஊடாடி நின்றதை அவன் புரிந்துகொண்டான். ‘ நான் இங்கேயே சென்னையிலே டாக்டரா இருந்துட்றேன்’ என்று சொல்லிவிட வேண்டும் போன்ற பலவீனம் கணம் போல் அவனை ஆட்கொண்டாலும், அவன் தன் மனத்தைக் கல்லாக்கிக்கொண்டு, ‘அப்ப நான் வர்றேன், மாலதி. உனக்குப் பிடிச்ச மாதிரியான கணவனும் அமெரிக்க வாழ்க்கையும் அமைய என்னோட வாழ்த்துகள்!’ என்றான். குரலில் அதிர்வு இல்லாதபடி பார்த்துக்கொண்டான். அவளது பதிலைச் செவிமடுப்பதற்காகக் காத்திருந்தான். ஆனால் அவள் எதுவும் சொல்லாமல் ஒலிவாங்கியை வைத்தவிட்டாள். ‘இவளுக்கு என் மேல் அன்பில்லை. இருந்தால் விட்டுக் கொடுக்கத் தோன்றியுருக்கும்’ என்று நினைத்த மறு விநாடியே, ‘அவளுக்கும் இப்படி நினைக்க உரிமை உண்டு. கட்டாயம் நினைக்கவும் செய்வாள்’ என்றும் அவனுக்குத் தோன்றியது. ஆனால், ஒரு நல்ல் லட்சியவாதியான காதலனுக்காக அவள் தான் இறங்கிவரவேண்டும் என்பதில் மட்டும் அவன் தெளிவாக இருந்தான். ஒரு பெருமூச்சுடன் அவன் ஒலிவாங்கியைக் கிடத்திவிட்டுப் புறப்பட்டான்.

ஆறே மாதங்களிlல் அவன் அந்தச் சிற்றூரில் மிகவும் புகழ்பெற்றுவிட்டான். ‘டாக்டரய்யா, டாக்டரய்யா’ என்று ஊர் மக்கள் அனைவரும் அவனைக் கொண்டாடினார்கள். அந்த ஊரில் அவன் மருத்துவராக மட்டும் இல்லாமல் ஒரு சமுதாயச் சேவகனைப் போலப் பணி புரிந்தான். அவனுடைய பெயர் பத்திரிகைகளில் இடம் பெறத் தொடங்கியது. ‘ஒரு மருத்துவர் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு இவர் ஓர் எடுத்துக்காட்டு’ என்றே அனைத்து இதழ்களும் அவனைப் பற்றிய கட்டுரைகளில் குறிப்பிட்டன. தாய், தகப்பன் யாருமே இல்லாமல் ஓர் அநாதை இல்லத்தில் வளர்ந்து படித்து ஆளான அவன் தன் வருவாயின் பெரும்பகுதியை ஏழை மக்களுக்காகச் செலவிட்ட செய்தியும் அந்தக் கட்டுரைகளில் இடம் பெற்றது.

இரண்டு ஆண்டுகள் ஓடிப்போயின. மாலதிக்குத் திருமணம் ஆகியிருக்குமா என்னும் கேள்வி அடிக்கடி தாமோதரனைக் குடைந்தது. அவன் தனது காதலைப் பற்றி எந்த நண்பனுக்கும் அதுகாறும் தெரிவித்திருக்கவில்லை. தெரிவித்திருந்தால், அது பற்றி அவன் வாயிலாய்க் கண்டு பிடித்திருக்க முடியும். எனவே, மாலதி பற்றிய செய்தி எதுவும் தெரியாமலேயே அவன் காலத்தைக் கழித்துக் கொண்டிருந்தான்.

சரியாக இரண்டு ஆண்டுகள் முடிந்து மூன்றாம் ஆண்டு

தொடங்கிய போது அமெரிக்காவில் இருந்த ஒரு மருத்துவக் கழகத்திலிருந்து அந்தத் தகவல் அவனுக்கு வந்தது. உலகளாவிய அளவில், மிகச் சிறந்த மருத்துவச் சேவைக்கான விருதுக்கும் பரிசுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பல்வேறு நாட்டு மருத்துவர்களில் அவனும் ஒருவன் என்னும் தகவல்! அது மட்டுமின்றி, அமெரிக்காவுக்கு வந்து நிரந்தரக் குமகனாய் அங்கேயே தங்கி மருத்துவராய்ப் பணி புரிய அவன் அழைக்கவும் பட்டான்!

இந்தச் செய்தி நாளேடுகள் எல்லாவற்றிலும் வெளிவந்தது. அன்றே மாலதியிடமிருந்து அவனுக்கு வாழ்த்துத் தந்தி வந்தது.. தந்தியின் இறுதியில் அனுப்புநரின் பெயர் ‘செல்வி’ (மிஸ்) மாலதி என்று இருந்ததை அவன் மனத்தில் வாங்கிக்கொண்டான். அவன் முகத்தில் புன்னகை அரும்பிற்று. அவனும் நன்றி சொல்லி அவளுக்குப் பதில் தந்தி யனுப்பினான். ‘செல்வி’ எனும் தமிழ்ச் சொல்லுக்கு இருப்பது போல் ‘திருமணம் செய்துகொள்ளாதவன்’ என்பதாய் ஓர் ஆணைக் குறிப்பிட ஆங்கிலத்தில் உரிய சொல் இல்லை என்னும் காரணத்தால் அவன் ‘செல்வன் தாமோதரன்’ என்று ஆங்கில எழுத்துகளில் அனுப்புநரின் பெயரைக் குறிப்பிட்டான்!

அதுவரையில், ‘மாலதி இனித் தனக்கு இல்லை’ என்னும் எண்ணத்தால் நெஞ்சில் வலி இருந்தாலும், அவளைப் பற்றிய நினைவுகளை முடிந்த அளவுக்கு ஒதுக்கியிருந்த அவன் உள்ளத்தில் மறுபடியும் புகுந்துகொண்டு அவள் அவனை அலைக்கழிக்கலானாள். ‘ உன்னைப் போல், நானும்தான் இன்னும் திருமனம் செய்துகொள்ளவில்லை’ என்னும் தனது தகவல் அவளை எப்படிப்பட்ட பாதிப்பில் ஆழ்த்தியிருக்கும் என்பது பற்றி அவனால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. ஒருகால் அவள் தன்னோடு பேசக்கூடும், அல்லது தனக்குக் கடிதம் எழுதக் கூடும் என்று அவன் நினைத்தான். ஆனால் தான் முந்திக்கொண்டு அவள் மனத்தைக் குழப்பக்கூடாது என்பதில் மட்டும் அவன் உறுதியாக இருந்தான்.

இரண்டாம் நாள் அவள் அவனை அவனது மருத்துவ விடுதித் தொலைபேசியில் அழைத்துப் பேசினாள்.

“மாலாதி! எப்படி இருக்கே. . . . இருக்கீங்க?”

“என்னை நீங்க் நீன்னே சொல்லலாம். புது மரியாதை யெல்லாம் எதுக்கு?”

“எப்படி இருக்கேன்னு கேட்டேனே?”

“நல்லாத்தான் இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?”

“நானும் நல்லாத்தான் இருக்கேன்.”

“என்ன முடிவு பண்ணினீங்க?”

“எதைப் பத்தி?”

“அமெரிக்காவுக்குப் போய் அங்கே டாக்டரா வேலை பண்றதைப் பத்தித்தான். வேற எதைப் பத்தி?”

“அவங்க குடுக்கப் போற ஒரு லட்சம் டாலர்லே இந்தக் கிராமத்திலேயே ஒரு இலவச மருத்துவ மனை கட்டப் போறேன். நான் இந்தியாவிலேயேதான் இருந்து டாக்டராப் பணி புரியப் பேறேன்றதை ஒரு அரை மணிக்கு முன்னாலதான் அவங்களுக்குத் தெரிவிச்சேன். அந்தச் செய்தி நாளைக்கு நாளிதழ்கள்லே வரும்.”

“ . . . . . . . . . “

அவளது பதிலுக்கு அவன் காத்திருந்தான். ஆனால் அது கிடைக்கவில்லை. ஒரு பெருமூச்சுத்தான் சீறிப்பாய்ந்து அவனது செவியில் விழுந்தது. பின்னர் மறு முனை ‘டொக்’ என்னும் ஒசையுடன் மவுனமாயிற்று.

அவனும் ஒரு பெருமூச்சுக்குப் பின் தன் பணிகளைக் கவனிக்கப் போனான்.


jothigirija@hotmail.com

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா