மார்க்க மயக்கத்தில் மார்க்ஸ்களும் மார்க்ஸியர்களும்- 2 (contd)

This entry is part [part not set] of 29 in the series 20070201_Issue

அருணகிரி


இவ்வாறு ஆனதற்கு சில சமூகவியல் காரணங்களும் உள்ளன. முன்பே சொன்னபடி 17-ஆம் நூற்றாண்டுக்குப்பின் ஐரோப்பிய கிறித்துவ சமுதாயம் சமூக, அரசியல் துறைகளில் மதத்தின் பிடியிலிருந்து விடுபடத்தொடங்கியது என்றால், அரேபிய முஸ்லீம் சமூகமோ இதற்கு நேர்மாறாக மாற்றங்களுக்கு இடம் தராமல் பிற்போக்கான மதச்சட்டங்களின் பின்னால் ஒளிந்துகொள்ளத் தொடங்கியது. வளர்ந்து வரும் ஐரோப்பியக் காலனிய ஆதிக்கம், வலுவிழந்து போன ஆட்டோமான் பேரரசு, இந்தியா முதலான நாடுகளில் ஆட்சியாளர் என்ற பீடத்திலிருந்து இறக்கப்பட்ட நிலை, இரண்டாம் உலகப்போரின் முடிவில் மத்திய கிழக்கில் ஆங்காங்கே எழுந்த ஜனநாயக எழுச்சி ஆகியவை கண்டு பயந்த முஸ்லீம் சமுதாயம், பாதுகாப்பு உணர்வு அருகிப்போன நிலையில் மதவாத முல்லாக்கள் கையில் அரசியல் அதிகாரத்தைப் படிப்படியாகத் தாரை வார்த்து, இன்று தம்முள் இறுகிய ஒரு பிற்போக்கு சமூகமாகக் குறுகிப் போய்க் கிடக்கிறது.

பெரும்பாலான கிறித்துவப் பெரும்பான்மை நாடுகளில் இன்று பைபிள் சட்டங்களின் அடிப்படையில் ஆட்சி நடத்தப்படுவதில்லை. ஆனால் பெரும்பான்மையான இஸ்லாமிய நாடுகளில் ஷரியா மதச்சட்டங்களை வைத்துக்கொண்டு மதவாத அரசாங்கம் நடத்தப்படுகிறது. இந்த மதவாத அரசுகள் மாற்று மத நம்பிக்கையாளரை இரண்டாம் குடிகளாக நடத்துகின்றன. இருணட கால கிறித்துவ ஐரோப்பிய சமுதாயம் போல இக்கால இஸ்லாமிய சமுதாயம் இருக்கிறது. எந்தத் தேசிய இயக்கங்களுடனும், இனங்களுடனும், மொழிக்குழுவுடனும் முழுதும் அடையாளப்படுத்திக்கொள்ளாமல், முஸ்லீம் என்பதை மட்டுமே தங்களது முதன்மை அடையாளமாக்கும் இந்த உம்மா மனப்பான்மையானது, இஸ்லாமிய சமூகத்தை பயங்கரவாதம் உற்பத்தியாவதற்கேற்ற தேங்கிய குட்டையாகத்தான் ஆக்கி விட்டிருக்கின்றது. இந்தத் தேங்கிய குட்டையை உலகளாவிய உம்மா என்ற அளவில் பெருங்குளமாக ஆக்கி மதவாத மீன் பிடிக்க முனைகிறார்கள் அ.மார்க்ஸ் போன்ற மார்க்கவாதிகள்.

முல்லாக்களின் பிடியில் உள்ள இந்நாடுகளில், உள்ளிருந்து வரும் சீர்திருத்த முயற்சிகள் வெறித்தனமாக எதிர்க்கப்படுகின்றன. ஜனநாயக இயக்கங்கள் கடுமையாக ஒடுக்கப்படுகின்றன. இடதுசாரி இயக்கங்கள் நசுக்கப்படுகின்றன. எதிர்த்துப்பேச முனையும் ஒரு சிலரும் அரசாலேயே கொல்லப்படுகிறார்கள். முஸ்லீம் நாடுகளில் பலியிடப்படும் இடதுசாரிகளுக்கும் ஜனநாயக சக்திகளுக்கும் ஆதரவாக நம்மூர் கம்யூனிஸ்டுகள் வாயைக்கூடத் திறப்பதில்லை. பொருள்முதல்வாத மார்க்ஸீயம் பேசும் அ. மார்க்ஸ் போன்றவர்கள் மதவாத முல்லாக்களுக்கு எதிராக முணுமுணுப்பதுகூட இல்லை; மாறாக தேசியம் தாண்டிய உம்மாவிற்கு அறைகூவல் விடுக்கும் மதவாதக் கயமையை மார்க்ஸீயப்போர்வையில் வெளிப்படையாகவே செய்கிறார். ஈராக் கம்யூனிஸ்டு கட்சியும், ஷியாக்களும் சதாமின் சாவை வரவேற்று மகிழ்ச்சி தெரிவிக்க நம்மூர் கம்யூனிஸ்டுகளோ சதாமின் மரணத்தை எதிர்த்துக் கூட்டம் போடுகிறார்கள்.

மட்டுமல்ல, இன்றும் கூட மதத்தால் அனுமதிக்கப்பட்ட போர்முறை என்ற அளவில் அப்பாவி மக்களைக் குண்டு வைத்துக் கொல்வதும், குழந்தைகளையும், பெண்களையும், முதியோரையும்கூடக் கொலை செய்வதும் உலகத்திலேயே முஸ்லீம்களால்தான் மதப்போர் என்ற பெயரால் தொடர்ந்து கையாளப்படுகிறது. எங்கோ உள்ள சதாம் செத்தால் அதற்கு இந்தியாவில் இந்துக்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் உலைவைக்கிறார்கள். இதனை எதிர்த்து இந்திய மார்க்ஸ்களும் மார்க்ஸிஸ்டுகளும் தும்மல் கூடப்போடுவதில்லையே, ஏன்?

இனமேலாண்மையை முன்னிறுத்தி மாற்றுக்கருத்தாளர்களையெல்லாம் இனத்தூய்மையற்ற இரண்டாம் குடிகளாக நடத்தி அப்பாவி மக்களைக்கொன்று குவித்தது அன்றைய ஹிட்லரின் பாசிசம் என்றால், பன்முகத்தன்மையை மறுத்து இஸ்லாமிய அரசுகள் பிற நம்பிக்கையாளரை எல்லாம் மார்க்கத்தூய்மையற்ற இரண்டாம் குடிகளாக சட்ட பூர்வமாகவே நடத்துவதும், மதப்போர் என்ற பெயரில் அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கும் ஜிஹாதிகளுக்கு வக்காலத்து வாங்குவதும் இன்று காணும் இஸ்லாமிய பாசிசம்.

முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் இல்லாத கருத்து சுதந்திரமும் மத சுதந்திரமும் பிற ஜனநாயக நாடுகளில் இருக்கிறது. ஜனநாயக விரும்பிகளும், அ.மார்க்ஸ் போன்ற எல்லை தாண்டிய மார்க்ஸீயவாதிகளும் நியாயமாக என்ன செய்ய வேண்டும்- மதவாத முஸ்லீம் நாடுகளில் மதவாதம் ஒழிந்து ஜனநாயகம் மலர வேண்டுமென்று, அங்கே பேச முடியாத மக்களுக்காக இங்கிருந்து இவர்கள் குரல் கொடுக்க வேண்டுமல்லவா? ஆனால், இவர்கள் செய்வது என்ன? முஸ்லீம் நாடுகளில் மதவாதத்தை உயிரைப்பணயமாக்கி எதிர்க்கும் இடதுசாரி ஜனநாயக இயக்கங்களை ஏளனம் செய்யும் வகையில் மதவாத முல்லாக்களுக்கு உதவும் வகையில் முஸ்லீம் உம்மாவுக்காக அல்லவா குரல் கொடுக்கிறார்கள்? இந்த அப்பட்டமான மதவாதத்திற்கு எதற்கு இடதுசாரிப்போர்வை வேண்டிக்கிடக்கிறது? கம்யூனிஸ்டு பார்ட்டி ஆஃப் முல்லாஸ் மற்றும் கம்யூனிஸ்டு பார்ட்டி ஆஃப் இஸ்லாமிஸ்ட்ஸ் என்ற பெயர் வைத்துக்கொண்டு இந்த வேலையைச் செய்யலாம், ஒரு மார்க்க நேர்மையாவது இருக்கும்.

உலக நாடுகளில் இந்துக்களோ சீக்கியர்களோ பார்ஸிக்களோ சிறுபான்மையினராக வாழவில்லையா? அவர்கள் என்ன போகும் இடத்தில் எல்லாம் மத அடிப்படையில் தங்களுக்கு சிறப்புச் சலுகை தரப்பட வேண்டும் என்றா எதிர்பார்க்கிறார்கள்? முஸ்லீம் சமுதாயம்தான் எந்த நாட்டிற்கு சென்றாலும், உடை மாற்றும் அறையில் திடீரென்று மண்டிபோட்டு தொழுவதில் இருந்து, கண்காணிப்பில் இருக்கும் பொது இடங்களில் புர்கா அணிவது வரை மத அடிப்படையில் சிறப்புச் சலுகை கேட்கிறது. தனது மத நாடுகளில் இல்லாத கருத்து சுதந்திரத்தைப் பிற நாடுகளின் ஜனநாயக அரசியலில் அனுபவித்துக்கொண்டே தீட்டிய மரங்களில் கூர் பார்க்கிறது.

50-க்கும் மேற்பட்ட முஸ்லீம் நாடுகள் உலகில் உள்ளன. உண்மையிலேயே தங்கள் சமுதாயத்திற்கு உதவ வேண்டுமென்று முஸ்லீம் மக்கள் எண்ணினால், தத்தம் நாடுகளில் ஜனநாயகம் மலர தேசியம் வலுப்பட நவீன கல்வி பரவ முயற்சிகள் எடுக்க வேண்டும். பயங்கரவாத உற்பத்திக்கூடமான பாகிஸ்தான், பங்களாதேஷ், சவுதி அரேபியா போன்ற நாடுகள் மதப்பிடியில் இருந்து விடுபட உந்துதல் தர வேண்டும். ஒவ்வொரு முறையும் முஸ்லீம் வெறியர்கள் பயங்கரவாதம் நிகழ்த்துகையிலும், அதனை எதிர்த்து முஸ்லீம்கள் தெருவில் வந்தும் ஊடகங்களின் மூலமும் உரத்த குரல் எழுப்ப வேண்டும். மாற்று மதக்காரர் மீது நிகழ்த்தப்படும் ஜிஹாத் வெறியாட்டங்களை மதத்தலைவர்கள் நியாயப்படுத்தாமல், அதற்கு மாறாக இஸ்லாம் என்ற “அமைதி மார்க்கத்தின்” பேரைக் கெடுப்பதற்காக வன்முறை நடத்தும் ஜிஹாதிகள்மீதே பாத்வா கொடுக்க வேண்டும் .

இவற்றையெல்லாம் செய்யாமல், கம்யூனிசம் என்றும் மார்க்ஸீயம் என்றும் பேசிக்கொண்டு ஓட்டுப்பொறுக்குவதற்காகவும், முற்போக்கு வேஷத்தில் உள்ளூரில் அரசியல் செய்வதற்காகவும் இணையத்தின் மூலம் உம்மா வளர்க்க வேண்டும் என்றெல்லாம் பேசுவது விபத்தை நோக்கி நாட்டைச் செலுத்தும் விபரீதப் போக்குதானே தவிர வேறில்லை.

தேசீயம் என்பது உலக அளவில் இன்றைய ஜனநாயக அரசியல் அவசியம். ஜனநாயக முறைகளை எதிர்த்துக்கொண்டு, பலசமய நம்பிக்கைக்கு இடம்தராமல், தேசீயத்தில் கலக்காமல், பெரும்பான்மையுடன் சேர்ந்து இயங்காமல், உள்ளிருந்து மாற்றங்களைப் பெறாமல் , வெளியிலிருந்து விமர்சனங்களை அனுமதியாமல் தேங்கிப்போய்விட்ட ஒரு சமுதாயம் உலகளாவிய உம்மா என்றெல்லாம் சொல்லிக்கொண்டு ஒரு நாட்டில் இருக்குமானால் அந்த சமூகம் மற்றவர்களின் அவநம்பிக்கைக்கு உள்ளாவதென்பதும் அதனால் மென்மேலும் தனிமைப்பட்டுப் போவதென்பதும் தவிர்க்க முடியாததாகிப்போய் விடும். இது இந்தியாவின் மத நல்லிணக்கத்திற்குச் சிறிதும் நல்லதல்ல.
———————————————————————————————————-
*அ. மார்க்ஸின் கட்டுரைக்கு: http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=376&Itemid=119

** இந்த மேற்கோளுக்கு நன்றி: அரவிந்தன் நீலகண்டனது வலைப்பதிவு- http://arvindneela.blogspot.com/2007/01/1.html

Series Navigation

அருணகிரி

அருணகிரி

மார்க்க மயக்கத்தில் மார்க்ஸ்களும் மார்க்ஸியர்களும் –1

This entry is part [part not set] of 43 in the series 20070125_Issue

அருணகிரி


“இஸ்லாத்தை எழுதுதலும் கருத்துச் சுதந்திரமும்”* என்ற கட்டுரையில் அ.மார்க்ஸ் ஓரியண்டலிஸம் என்ற காலனீயக் கண்ணோட்டத்தை முன்வைத்த எட்வர்ட் சைத் குறித்தும் மேற்கின் இன்றைய இஸ்லாமிய வெறுப்புக்கு இந்த காலனீயப் மேலாண்மைப்பார்வையே முதன்மைக் காரணம் என்று சைத் சொல்வதை மேற்கோளாக்கியும் சில கருத்துகளை வெளியிட்டுள்ளார். அது குறித்த ஒரு விமர்சனப்பார்வை இது.

எட்வர்ட் சைத் என்ற பாலஸ்தீனிய-அமெரிக்கர் ஓரியன்டலிஸம் என்ற வாதத்தை 1978-இல் முன்வைத்து பிரபலம் அடைந்த ஒரு தீவிர பாலஸ்தீனிய அனுதாபி மற்றும் அமெரிக்கப் பல்கலைக்கழகப் பேராசிரியர். பாலஸ்தீனியர்களுக்காகக் களப்பணி செய்து அண்மையில் மறைந்த இவர் பிறந்தது இஸ்ரேலுக்கு முந்தைய ஜெருசலேத்தில். வாழ்ந்து மறைந்தது அமெரிக்காவில்.

இவர் சொல்லும் முக்கிய விஷயம், மேற்கின் பார்வை- வரலாற்றிலும், கல்வித்துறைகளிலும், அரசியல் அறிவியலிலும்- இஸ்லாமை ஐரோப்பியப்பார்வையில் வெறுப்புடன் பார்த்து வந்துள்ளது என்பது. பின்காலனித்துவத்தின் (post-colonialism) பார்வை என்பதாய் சொல்லப்படும் இந்தப்போக்கை சைத் ஒன்றும் புதிதாகக் கண்டுபிடித்துச் சொல்லவில்லை. அதற்கு முன்னரே பல கல்வியாளர்களும், வரலாற்று அறிஞர்களும் கூறியிருக்கிறார்கள். இந்திய அளவில் சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்ட தேசியத்தலைவர்கள் முதல் ஆன்மீக சிந்தனையாளர் வரை பலரும் இந்த ஐரோப்பிய சார்புப் பார்வை குறித்து எழுதியிருக்கிறார்கள். அம்பேத்கார், சாவர்க்கர், காந்தி என்ற பலரும் விவேகானந்தரும், அரவிந்தரும் இதில் அடக்கம்.

இந்த ஐரோப்பியச்சாயம் தோய்ந்த பார்வை மூலமாகத்தான் தாங்கள் கால் வைத்த அத்தனை நாடுகளிலும் உள்ள பிற சமுதாயங்களையும் மேற்குலகம் எடை போட்டது. அமெரிக்கப்பூர்வ குடிகளைக் காட்டுமிராண்டிகள் என்று சொன்னது போலத்தான் பாரத மக்களையும் அவர்களது தொன்மைக் கலாசாரத்தையும் ஏளனமாய்ப் பார்த்தனர். கோவாவில் புனித விசாரணையை நிறுவ அனுமதி கோரி சவேரியார் என்கிற பிரான்ஸிஸ் சேவியர் போர்த்துகீசிய அரசுக்கு இவ்வாறு எழுதுகிறார்**: “முதல் விஷயம், இந்திய இனமே, நான் பார்த்த வரைக்கும், காட்டுமிராண்டித்தனமானது. அவர்கள் தங்கள் நடவடிக்கைகள், தங்கள் பாரம்பரியம் ஆகியவற்றிற்கு புறம்பான விஷயங்களுடன் ஒத்துப்போவதில்லை. அவர்களுடைய நடவடிக்கைகளும், பாரம்பரியமுமோ நான் கூறியது போல காட்டுமிராண்டித்தனமானது. இந்த பாரம்பரியமானது, தேவ விசயங்களைக் குறித்தோ மீட்பு குறித்தோ அறிந்து கொள்ள எவ்வித ஆர்வமும் காட்டாதது. …அவர்களிடம் நிரம்பிக்கிடக்கும் குணம் பாவ காரியங்களும் ஏமாற்றுத்தனமும்தான்….இந்த தேசவாசிகள் கயமைத்தன்மை வாய்ந்தவர்கள் என்பதால் கிறிஸ்தவ மதத்தினை ஏற்றுக்கொள்கிற மனப்பாங்கு அவர்களுக்கு இல்லை”.
பிற்காலத்தில் வில்லியம் ஜோன்ஸ் பழங்கால இந்தியாவின் அறிவு வளத்தையும், இலக்கியச் செறிவையும், சமஸ்கிருதத்தின் உயர்வையும், தொன்மைச் சிறப்பையும் கண்டறிந்து சொன்னபோது மேற்கினை விட உயரிய நாகரிகம் கொண்ட சமுதாயம் அடிமை நாட்டில் உருவாயிற்று என்பதை நம்ப முடியாமல் தனது காலனீய ஏவலாளர்களை விட்டு பைபிளின் அடிப்படையில் மேற்கிலிருந்து உள் நுழைந்த இனம் ஆரியம் என்றொரு பொய்யினைக் கற்பிதம் செய்து அதன் மூலம் ஆரிய திராவிட இனவாதத்தைக் கட்டமைத்து காத்து வளர்த்தது ஆங்கில அரசு.

தொல்காப்பியரையும், வள்ளுவரையும், வால்மீகியையும், ஆயுர்வேதத்தையும், உபநிடதங்களையும், வானவியல் மற்றும் கணித அறிவுச்செறிவும் கொண்ட ஒரு நாகரீகத்தை, சமுதாயத்திற்கும், கவிதைக்கும், இசைக்கும், சிற்பக்கலைக்கும் இலக்கணம் சொன்ன பழங்கால பாரதத்தின் அறிவுச்செறிவை இப்படிச்சொல்லி புறந்தள்ளுகிறார் ஆங்கிலேய மெக்காலே: “இந்தியா மற்றும் அரேபியாவிலுள்ள அனைத்து இலக்கியங்களும் ஒரு நல்ல ஐரோப்பிய நூலகத்தின் ஒரு வரிசைப்பலகையளவு நூல்களின் மதிப்பு கூடப்பெறாது என்பதை மறுக்கும் ஒருவரையும் நான் கண்டதில்லை… எந்தத்துறையிலும் நம் நூல்களோடு ஒப்பிடும் அளவுக்கு அவற்றில் ஒரு நூலும் இல்லை என்பது அனைவரும் ஒப்புக்கொள்வதே””

காலனியாளர்கள் இப்படி என்றால் முஸ்லீம் மன்னர்களோ நாலந்தாவை தீக்கிரையாக்கியும், பல அறிவு நூல்களை கொளுத்தியும், பழம்பெரும் கோவில்களையும் அரிய சிற்பங்களையும் அடித்து நொறுக்கியும், இந்துக்களுக்கெதிரான பயங்கரவாதத்தைப் பரப்பி தங்கள் மதக்கடமையைப் நிறைவேற்றிக் கொண்டார்கள்.

எட்வர்ட் சைத் போன்ற பாலஸ்தீனிய அனுதாபிகள், மேற்கின் சாய்வுப்பார்வை பற்றிப் பேசுகையில் பாரதம் போன்ற பாகன் சமுதாயங்கள் குறித்துப் பேசாமல் ஒதுங்குவது புரிந்து கொள்ளக்கூடியதே. ஆனால், இந்தியாவில் இருக்கும்
அ. மார்க்ஸ் போன்ற “முற்போக்கு”வாதிகள், மேற்கின் காமாலைப்பார்வையைக் கடன்வாங்கிக்கொண்டு அதன் பார்வையில் பாரத மரபார்ந்த விழுமியங்களை எடைபோடவும், காலனீயம் கட்டமைத்து இன்று சாயம் இழந்து கொண்டிருக்கும் ஆரிய இனவாதத்தை மறந்து போய்க்கூட விமர்சிக்காமல் விடவும், அதே சமயம் இஸ்லாத்தின் மீது மேற்கு வெறுப்புப்பார்வை கொண்டுள்ளது என்பதை மட்டும் மறக்காமல் அடிக்கோடிடவும் என்ன காரணம்- மார்க்கவழி என்ற இஸ்லாமிய மதச்சார்பைத் தவிர? நிற்க.

எட்வர்ட் சைத்தும், சைத்தின் எழுத்தை வழிமொழியும் அ.மார்க்ஸ் போன்றவர்களும் வசதியாக மறக்கும் ஒரு விஷயம் உள்ளது. அருளப்பட்ட மதம் இல்லை என்பதால் (இந்தியா, அமெரிக்கா போன்ற) பாகன் சமுதாயங்களின் மீது மத பயங்கரவாதத்தை ஏவி விடவும், அவர்களது நம்பிக்கைகளை இகழ்ந்து ஏளனம் செய்யவும் அவர்களது கலாசாரச் சாதனைகளை (இன்றும்) இருட்டடிப்பு செய்யவும் மேற்குலகம் தயங்கவில்லை. மட்டுமன்றி அருளப்பட்ட மதம் என்பது மட்டுமே இஸ்லாத்தை மேற்குலகம் வெறுப்பதற்குக் காரணமாகி விடவும் இல்லை. இஸ்லாத்தின் மீதான மேற்கின் வெறுப்பின் பின்புலத்தில் இஸ்லாம் வாள் முனையில் மதம் பரப்பத் தொடங்கிய காலத்தில் அது மேற்குடன் மோதி உருவாக்கிய ஒரு பயங்கரமான பிணக்குவியல் நிறைந்த வரலாறு உள்ளது.

கிறித்துவத்தின் வளர்ச்சியும் அழுத்தமும் வலுவடைந்திருந்த நேரத்தில் -7ஆம் நூற்றாண்டில்- தொடங்குகிறது முகம்மது நபியின் காலம். யூதம், கிறித்துவம் ஆகியவை உண்மையான மார்க்கத்திலிருந்து வழிதவறியதாகச் சொல்லி அல்லாவின் உண்மையான நேரடி மொழியாக குர்ரானை நிறுவி இஸ்லாத்தைத் தோற்றுவிக்கிறார் முகம்மது நபி. வாளின் முனையிலும் வன்முறையின் பின்னணியிலும் அரபுத் தேசிய இனங்களையும் யூதர்களையும், கிறித்துவர்களையும் போர்களில் வென்று பணிய வைத்து அரேபியாவை இஸ்லாத்தின் பிடிக்குள் கொண்டு வருகிறார். அவரது மறைவிற்குப்பின் இஸ்லாமிய மன்னர்கள் பல ரத்தக் களறியான போராட்டங்களுக்குப்பின் இஸ்லாத்தை மேற்கு நோக்கி நகர்த்துகிறார்கள். இதைத் தொடர்ந்து 7 மற்றும் 8-ஆம் நூற்றாண்டுகளில் தொடங்கி மத அடிப்படையில் அரேபிய மற்றும் ஐரோப்பிய நிலங்களில் கிறித்துவம், இஸ்லாம் இவற்றின் மேலாண்மைக்கான மாபெரும் போட்டி வெடிக்கிறது.

உலகத்திலேயே இரண்டு சமுதாயங்கள் மத அடிப்படையில் பெரும்போர்களை நிகழ்த்தி தொடர்ந்து அதிக நூற்றாண்டுகள் அடித்துக்கொண்டது என்ற வகையில் பார்த்தால் அந்தப் “பெருமை” கிறித்துவ அரசுகளுக்கும் இஸ்லாமிய அரசுகளுக்கும் இடையே நடந்த போர்களையே போய்ச்சேரும். முகம்மதுவின் மறைவுக்குப்பிறகு, இஸ்லாமியர்கள் கிறித்துவ பிசன்டின் பேரரசின் மீது தாக்குதல் தொடுக்கத்தொடங்கி அரேபியாவிற்கு மேற்கே இஸ்லாத்தைப் பரப்பத் தொடங்குகின்றனர்.

– 8-ஆம் நூற்றாண்டில் ஸ்பெயின், பிரான்ஸ், வட ஆப்பிரிக்கா ஆகியவற்றின்மீது இஸ்லாத்தின் போர்நிழல் நீளுகிறது.
– 9-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் முஸ்லீம்கள் கிறித்துவ பிசன்டின் பேரரசின் பல இடங்களைக் கைப்பற்றுகிறார்கள்.
– 10-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வலுவான பிசன்டின் பேரரசை எதிர்த்து முஸ்லீம்கள் சில குறிப்பிடத்தக்க வெற்றிகளை அடைகிறார்கள்.
11-ஆம் நூற்றாண்டில் முஸ்லீம்களின் பிடியிலிருந்து ஜெருசலேத்தை விடுவிக்க வட்டிகன் சிலுவைப்போர்களைத் தொடுக்கத்தொடங்கியது
11-ஆம் நூற்றாண்டு- முதல் சிலுவைப்போர்.
12-ஆம் நூற்றாண்டு- இரண்டாம் மற்றும் மூன்றாம் சிலுவைப்போர்கள்
13-ஆம் நூற்றாண்டு- 1217-இல்ல தொடங்கி 1272 வரை ஆறு சிலுவைப்போர்கள் நடந்த காலம்! நான்காம் சிலுவைப்போர் கிறித்துவ பிசன்டின் பேரரசுக்கே சாவு மணி அடித்தது.
13-ஆம் நூற்றாண்டிலிருந்து கிறித்துவம் கோலோச்சிய பல இடங்களை வாள் கொண்டும் வலுக்கட்டாயமாகவும் கைக்குள் கொண்டு வரத் தொடங்கிய இஸ்லாமிய ஆட்டோமான் பேரரசு, சிறிது சிறிதாக வீழ்ச்சியுற்று 20-ஆம் நூற்றாண்டுத் துவக்கத்தில் முதல் உலகப்போரின் முடிவில் துருக்கியின் தோல்வியில் முழுமையான முடிவுக்கு வந்தது.

ஆனால், இதே சமயத்தில் ஐரோப்பா வட்டிகனின் பிடியிலிருந்து வெளிவந்து 17-18 ஆம் நூற்றாண்டுகளில் அறிவியல் மறுமலர்ச்சியும் சமூக, அரசியல் தளங்களில் புதிய விழிப்புணர்வும் அடையத் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக, கிறித்துவ ஐரோப்பா, நேரடி மதப்போர்களை விடுத்து, தொழிற்புரட்சி, காலனீயம் என கவனத்தைக் குவித்து உலக நாடுகளின் செல்வங்களைச் சுரண்டத் தொடங்கியது. பல காலனிகளில் பாகன் மதங்களின் மீது கிறித்துவ வன்முறை தொடர்ந்தது என்றாலும், முஸ்லீம்களுக்கு எதிரான நேரடி கிறித்துவ மதப்போர் ஒரு முடிவுக்கு வந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

இவற்றை இங்கு வெளிச்சம் போடுவதற்குக் காரணம் உண்டு. இஸ்லாமிய வன்முறை கிறித்துவத்திற்கோ, கிறித்துவ வன்முறை இஸ்லாமிய சமுதாயத்திற்கோ புதிதல்ல. இன்று ஐரோப்பா, அரேபியா என்ற இந்த இரண்டு மத சமுதாயங்களும் ஒன்றைக்குறித்து மற்றொன்று கொண்டிருக்கும் பல அழுத்தமான முன்முடிவுகளுக்கும் அவநம்பிக்கைகளுக்கும் பின்புலத்தில் ரத்தத்தில் தோய்ந்த பல நூற்றாண்டுகால வரலாறு உள்ளது. இவற்றை எந்த வரலாற்றாளரும் சமூகவியலாளரும் அரசியல் நோக்கரும் புறந்தள்ள முடியாது; அப்படிப் புறந்தள்ளினால் இந்த இரண்டு சமுதாயங்களுக்கிடையேயும் உலக அளவில் இன்றும் உள்ள பிணக்குகளையும் பூசல்களையும் முழுமையாகப் புரிந்து கொள்ளவும் முடியாது.

எனவே, எட்வர்ட் சைத்தின் கருத்தைப் போலவோ, அவரை வழிமொழியும் அ.மார்க்ஸ் போன்றோர் சொல்வது போலவோ இஸ்லாமிய சமுதாயம் குறித்த இன்றைய மேற்கின் பார்வையை காலனீயப்பார்வை அல்லது ஓரியண்டலிஸம் என்ற ஒற்றை வார்த்தையில் குறுக்கி விட முடியாது.

ஓரியண்டலிஸம் என்று சொல்லப்படும் மேற்கின் காமாலைப் பார்வைக்கு உண்மையான உதாரணம் எது என்று சொல்கிறேன். பண்டை பாரத மேன்மை குறித்தும், கலாசாரத் தொடர்ச்சி குறித்தும், பாரத நாகரீகத்தின் வெற்றிகள் குறித்தும், ஞான மரபின் செறிவு குறித்தும் மேற்குலகமும் அதன் சில இந்திய அடிமைகளும் இன்றும் செய்யும் இருட்டடிப்பு வேலைதான் இதற்குச் சரியான உதாரணம்.

இந்தியா மேற்கின் மீது எந்தவித மதப் போரையும் நிகழ்த்தவில்லை.வாளெடுத்து போர் தொடுத்து கிறித்துவ, முஸ்லீம் நிலங்களில் மதம் பரப்பவில்லை. இந்திய மண்ணிற்கு அகதிகளாய் வந்த ஆபிரஹாமிய மதத்தவர் எவரையும் புனித விசாரணை என்று சொல்லி உயிருடன் எரியூட்டவில்லை; புனிதப்போர் தொடுத்து அவர்களை அழித்தொழிக்கவில்லை. இருந்தாலும் கூட, தொன்மை பாரத கலாசாரமும், அதன் இந்து ஞான மரபுகளும், சாதனைகளும் இன்றும் மேற்கில் மட்டுமல்ல, இந்தியாவிலும் கூட- இருட்டடிப்பு செய்யப்படுகின்றதல்லவா, அதுபற்றிப் பேசுவதே இழிவென்று கூறி கல்வியிலும் ஊடகங்களிலும் தீண்டத்தகாதென்று ஒதுக்கப்படுகின்றன அல்லவா- அந்த அறிவுசார் நாணயமின்மைக்கும், ஆழ்மனக் காழ்ப்புக்கும் பெயர்தான் கலப்படம் நீங்கிய காலனீயப் பார்வை என்பது. அடிமை நாட்டின் மாண்புகளையும் மரபுச்செழுமைகளையும் மறைத்து, தாழ்வுணர்த்தி இன்றளவும் பாரத மரபைக் கேவலம் செய்யும் உள்ளார்ந்த அடிமைகளை உருவாக்கிப் போட்ட ஓரியண்டலிஸம் என்ற காலனீயவெறுப்பியல் பார்வைக்கு உண்மையான உதாரணம் இதுவே ஆகும் .

ஆயின், அரேபியா குறித்த ஐரோப்பாவின் நிலைப்பாட்டிற்கோ காலனீய மேலாண்மை தாண்டிய ரத்த சரித்திரம் என்ற காரணம் இருக்கிறது. பல நூற்றாண்டுகளாக ஒரே நிலங்களில் மதச்சண்டை போட்டு பிணக்குவியல் சேர்த்த இரு சமூகங்கள் இன்று ஒன்றையொன்று எடைபோடப் பயன்படுத்தும் பார்வையை காலனீய வெறுப்பியல் என்ற எளிய வரையறையில் மட்டும் குறுக்கி அடக்கி விட முடியாது. “அருளப்பட்ட” ஆபிரஹாமிய மதங்களிடையே இயல்பாகக் காணும் பிறமத வெறுப்பியல் என்பதன் அடிப்படையில்தான் இதனை முழுவதும் புரிந்துகொள்ள முடியும். அன்று காலனீயம், நிறவெறி, ஆரிய இனவாதம் ஆகிய அனைத்தையும் நியாயப்படுத்த பின்புலமாக இயங்கியது அருளப்பட்ட மதம் ஒன்றின் ஒரு புனித நூல் என்றால், இன்று அப்பாவி மக்களைக் குண்டு வைத்துக் கொல்வது, மத அரசுகளாலும் மத சட்டங்களாலும் மனிதத்தை மிதிப்பது, உம்மா என்ற பெயரால் தேசியம் தாண்டிய மதவெறியைத் தடவிக்கொடுத்து வளர்ப்பது ஆகிய அனைத்தையும் நியாயப்படுத்தப் பின்புலமாக இயங்குவது அருளப்பட்ட மதம் ஒன்றின் வேறொரு புனித நூல்!


Series Navigation

அருணகிரி

அருணகிரி