மாயச் சரக்குப் பெட்டிகள் (Phantom Cargo)

This entry is part [part not set] of 45 in the series 20060120_Issue

மார்வின் ஹாரிஸ்


(cows, pigs, wars and witches புத்தகத்தின் 6 ஆம் அத்தியாயம்)

இந்த இடத்தில் மாயச் சரக்குப் பெட்டிகளைப் பற்றிச் சொல்ல வருகிறேன். இந்த மாயச் சரக்குப் பெட்டி என்பது நேரடியாக மறு வினியோகத்திற்கான பொருளாதார பரிவர்த்தனையோடும், பெரிய-மனிதரை (மையமாகக் கொண்ட) அமைப்போடும் தொடர்புள்ளது. இந்தத் தொடர்பு நேரடியாகப் புரியாதிருக்கலாம். ஆனால், இந்த மாயச் சரக்குப் பெட்டியைப் பற்றிய எந்த விஷயமுமே நேரடியாகப் புரியக்கூடியதல்ல.

துவக்கக் காட்சி- நியூகினி மலைகளின் உயரத்தே காட்டில் உள்ள ஒரு விமான ஓடுதளம். அதன் அருகே விமானம் நிறுத்தும் கூரைக் கொட்டகை. ஒரு ரேடியோக் குடிசை. விமானங்களுக்கு சைகை செய்ய மூங்கில்களால் கட்டப்பட்ட ஒரு கோபுரம். தரையில் மூங்கில்களாலும், குச்சிகளாலும், இலைகளாலும் கட்டப்பட்ட ஒரு விமானம் நிற்கிறது. இந்த விமானஓடுதளம், விதவிதமான ஆடைகளும், மூக்கு வளையங்களும், சங்கால் ஆன கைவளைகளூம் அணிந்த பழங்குடி மக்களால் ஆன ஒரு குழுவால் 24 மணிநேரமும் கண்காணிக்கப்படுகிறது. இரவில் ஒரு சொக்கப்பனை கொளுத்தி விமானம் தரை இறங்கத் தேவையான சைகைகளைத் தயாராக வைக்கிறார்கள். இவர்கள் ஒரு முக்கியமான தரை இறங்கலுக்காகக் காத்திருக்கிறார்கள். விமானங்களில் வரப் போகிற டப்பாவில் அடைத்த உணவுப் பதார்த்தங்கள், உடைகள், எங்கும் தூக்கிச் செல்லக் கூடிய ரேடியோக்கள், கைக்கடிகாரங்கள், மேலும் மோட்டார் சைக்கிள்கள் ஆகியவை நிரம்பிய சரக்குப் பெட்டிகளின் வருகைக்குக் காத்திருக்கிறார்கள். இந்த விமானங்களை இந்த பழங்குடியினரின் மூதாதையர்கள் மறுஉயிர் பெற்றெழுந்து ஓட்டிக்கொண்டு வருவார்கள். அதில் ஏன் தாமதம் ? ஒரு மனிதர் ரேடியோக் குடிசைக்குள் சென்று மைக்ரோபோன் போன்று வடிவமைக்கப்பட்ட தகர டப்பாவுக்குள் பேசுகிறார். அந்த செய்தி மேலே இருக்கும் மெலிய கயிறுகளாலும் படர்கொடிகளாலும் பின்னப் பட்ட ஒரு ஆண்டனாவுக்கு மூலம் வெளியே செய்தியாக ஒலிக்கப் போகிறது.

“நான் பேசுவது கேட்கிறதா ? நான் முடித்தேன், தொடர்பை மூடினேன்” ( ‘Do you read me ? Roger and out. ‘) அவ்வப்போது ஒரு ஜெட் விமானம் வானத்தில் வெண் கீற்றை ஏற்படுத்தியவாறு பறந்து செல்வதைப் பார்க்கிறார்கள். அவ்வப்போது வெகுதூரத்தில் மோட்டார் ஒலி வருவதை கேட்கிறார்கள். மூதாதையர்கள் தலைக்கு மேலே போகிறார்கள். அவர்கள் இந்த மக்களைத் தேடி வருகிறார்கள். ஆனால் கீழே இருக்கும் நகரங்களில் வாழும் வெள்ளைக்காரர்களும் செய்திகளை அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் மூதாதையர்கள் குழப்பமடைந்துவிட்டார்கள். ஆகவே அவர்கள் தவறான விமானதளத்தில் இறங்கி விட்டார்கள்.

கப்பல்களிலும் விமானங்களிலும் இறந்து போன மூதாதையர்களும் சரக்கு பெட்டிகளும் வரக் கூடும் என்று காத்திருப்பது வெகு காலத்துக்கு முன்னரே ஆரம்பித்திருந்தது. மிகவும் புராதனமான இப்படிப்பட்ட குறுமதங்கள்(cults), கடற்கரையில் வாழும் மக்கள் ஒரு பெரிய படகில் வருகையை எதிர்பார்த்ததில் துவங்கியது. பிறகு அவர்கள் பாய்க்கப்பலுக்காக காத்திருந்தனர். 1919இல் இந்த குறுமதங்களின் தலைவர்கள் பெரிய நீராவிக்கப்பல்கள் வரும் என்று கருதி அக்கப்பல்களின் புகைச் சுவடுகளுக்காக தொடுவானைப் பார்வையால் துழாவி இருந்தனர். இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர், மூதாதையர்களை எல்.எஸ்.டி (Landing ship Tank அல்லது Tank Landing ship) என்னும் டாங்குகளைக் கடற்கரையில் இறக்கும் கப்பல்களிலும், துருப்புக்களை ஏற்றிக் கொண்டுவரும் கப்பல்களிலும், குண்டு வீசும் லிபரேடர் (B-24) விமானங்களிலும் எதிர்பார்த்தனர். இப்போது அந்த மூதாதையர்கள், விமானங்களை விட அதிக உயரத்தில் பறக்கும் ‘பறக்கும் வீடுகளில் ‘ எதிர்பார்க்கப்படுகிறார்கள்.

சரக்குப் பெட்டியே பலவிதங்களில் புதுமைப்பட்டிருக்கிறது. ஆரம்ப காலங்களில் தீக்குச்சிகள், எஃகுக் கருவிகள், சீட்டித் துணிச் சுருள்கள் (bolts of calico) போன்றன மாயச் சரக்குப் பெட்டியில் நிரம்பியவையாக இருந்தன. பிறகு, அரிசி மூட்டைகள், காலணிகள், டப்பாவில் அடைக்கப் பட்ட மாமிசம், மேலும் சார்டைன் மீன்கள் (european pilchards), சுழல் துப்பாக்கிகள் (rifles), கத்திகள், துப்பாக்கி ரவைகள், மேலும் புகையிலை ஆகியன இருந்தன என்று கருதப்பட்டது. சமிபத்தில் மாயக் கப்பல்கள் சுமந்தவையோ கார்கள், வானொலிப் பெட்டிகள், மேலும் மோட்டர்சைகிள்கள். சில மேற்கு இரியன் தீவுடைய சரக்குப் பெட்டி வழிபாட்டு மரபின் இறைதூதர்கள் மொத்த தொழிற்சாலைகளையும், இரும்புப் பொருள் உற்பத்திசாலைகளையும் நீராவிக் கப்பல்கள் கொண்டு வந்து இறக்கப் போகின்றன என்று கணிக்கிறார்கள்.

சரக்கு பெட்டிகளில் எதிர்பார்க்கப் படும் பொருட்களை நாம் கறாராகப் பட்டியலிடுவது தவறான பார்வையை நமக்குத் தரும். பழங்குடியினர் தங்கள் வாழ்க்கைத்தரத்தை ஒரே எட்டில் உயர்த்தி விடுவதற்குக் காத்திருக்கின்றனர் (என்பதை நாம் காண முடியும்- மொ.கு). இந்த மாயக்கப்பல்களும் விமானங்களும் புதியதோர் யுகத்தையே ஆரம்பித்து வைக்கும் இறந்தவர்களும் வாழ்பவர்களும் மீண்டும் இணைவார்கள். வெள்ளையர்கள் தூக்கி எறியப்படுவார்கள் அல்லது அடிமைப்படுத்தப்படுவார்கள். பெரும் சலிப்பு தரும் கச்சடா வேலை ஒழிக்கப்படும். எந்தப் பொருளுக்கும் பற்றாக்குறை இருக்காது. வேறு விதமாகச் சொன்னால், சரக்குப் பெட்டியின் வருகை பூமியில் ஒரு சொர்க்கத்தின் ஆரம்பம். இப் பழங்குடியினரின் தொலைவெதிர்பார்ப்பை, மேலை நாடுகளில் புழங்கும் ஏசுவின் நல்லாயிரம் ஆண்டு ஆட்சி (millennium) பற்றிய கற்பனை விவரணையோடு ஒப்பிடும்போது மிக மாறுபாடாகத் தெரிவதற்கு ஒரே காரணம், அம்மக்களது மீ-கற்பனையில் தொழிற்சாலையில் உற்பத்தி ஆகும் ஏராளமான பொருட்கள் முக்கியத்துவம் பெறுவதுதான். ஜெட் விமானங்களும், மூதாதையரும்; மோட்டார் சைக்கிள்களும் அற்புதங்களும்; ரேடியோக்களும் ஆவிகளும். நமது (அமெரிக்க) பாரம்பரியம், வீடுபேறு அடைதல் அல்லது பாவ விமோசனம் பெறுதல் (Salvation), மீட்டெழுச்சி (resurrection), இறவா நிலைபேறு அடைதல் (immortality) ஆகியவற்றுக்காக நம்மைத் தயார் செய்கிறது. ஆனால், இவை ஜெட் விமானங்களோடும் கார்களோடும் ரேடியோக்கே

ளாடுமா வரும் ? நமக்கு (அமெரிக்கர்களுக்கு) மாயக்கப்பல்கள் தேவையில்லை. நமக்கு இவை எங்கிருந்து வருகின்றன என்பது தெரியும். அல்லது உண்மையிலேயே நமக்குத் தெரியுமா ?

கிரிஸ்துவ மிஷனரிகளும், அரசாங்க அதிகாரிகளும் பழங்குடியினரிடம் சொல்வதென்ன ? கடுமையான உழைப்பும், இயந்திரங்களும், தொழில் யுகத்திலிருந்து அழிவில்லாது பொங்கும் வளத்தை ஆறாகப் பெருக்கெடுக்க வைக்கின்றன என்று சொல்கிறார்கள். ஆனால் பழங்குடியினரின் இறைதூதர்களோ வேறு கோட்பாடுகளை முன்வைக்கிறார்கள். தொழில்மயமான யுகத்தின் பொருட்செல்வம் தொலைவில் ஏதோ ஓரிடத்தில், மனிதர்களால் தயாரிக்கப்படாமல் அமானுட சக்திகளால் படைக்கப்படுகின்றது என்று வலியுறுத்துகிறார்கள். மிஷனரிகளுக்கும், வியாபாரிகளுக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் எப்படி இந்த செல்வங்களை கப்பல்கள் மூலமும் விமானங்கள் மூலமும் பெற முடியும் என்று தெரிந்திருக்கிறது. ஏனெனில் அவர்களுக்கு ‘சரக்குப் பெட்டியின் ரகசியம் ‘ தெரிந்திருக்கிறது. இந்த சரக்குப் பெட்டி ரகசியத்தைத் துளைத்துக் கைப் பற்றக்கூடிய திறமை எவ்வளவு அவர்களுக்கு இருக்கிறது என்பதையும், எப்படி சரக்குப் பெட்டியை அவர்களைப் பின்பற்றுபவர்களுக்குக் கொண்டுவந்து கொடுக்கப் போகிறார்கள் என்பதையும் வைத்துத்தான் பழங்குடி சரக்குப் பெட்டி இறைதூதர்களின் உயர்வும் தாழ்வும் இருக்கிறது.

தொடர்ந்து மாறும் சூழல்நிலைகளுக்கு ஏற்ப, சரக்கு பெட்டி பற்றிப் பழங்குடியினரின் தேற்றங்களும் தொடர்ந்து மாறிக்கொண்டே வருகின்றன. இரண்டாம் உலகப்போருக்கு முன்னர், மூதாதையர்களுக்கு வெள்ளைத்தோல் இருந்தது. பிறகு அவர்களுக்கு ஜப்பானியர்கள் போன்ற தோற்றம் இருந்தது. பிறகு கறுப்பு அமெரிக்கப் போர்வீரர்கள் ஜப்பானியர்களை துரத்தியபின் மூதாதையருக்கு அந்த வீரர்கள் போலக் கறுப்புத் தோல் இருந்தது.

உலகப் போருக்குப் பின்னர், சரக்கு பெட்டி தேற்றம் அமெரிக்கர் மீது மையம் கொண்டது. நியூ ஹெப்ரைட்ஸ் (தற்போதைய வனுவாட்டு Vanuatu) தீவு பழங்குடியினர், அமெரிக்கப் போர்வீரரான ஜான் ஃப்ரம் (John Frum) என்பவரே அமெரிக்காவின் அரசர் என்று முடிவு செய்தனர். இந்த அரசரின் இறைதூதர்கள் இவர் வருகைக்காக விமானதளம் கட்டி அங்கு அமெரிக்கப் படையினரின் (லிப்ரடேர்) குண்டு வீசும் விமானங்கள் (B-24 liberator bombers) பாலும் ஐஸ்கிரீமும் கொணர்ந்து, வந்து இறங்கும் என்றும் நம்பினார்கள். பசிஃபிக் தீவுகளில் போர்க் களங்களில் கிடைக்கும் ஓட்டை உடைசல் பொருட்களை வைத்துப் பார்த்தால், அங்கு ஜான் ஃபிரம் வந்திருந்ததற்கான அடையாளங்கள் இருக்கின்றன. அங்கு ஒரு குழு, அங்கே கிட்டிய ஒரு சார்ஜெண்ட் பதவிச் சின்னங்கள் பொறித்த அமெரிக்க ராணுவ மேலணிச் சட்டை, சட்டைக் கைகளில் காணும் மருத்துவ அணியினரின் அடையாளமான செஞ்சிலுவைச் சின்னம் ஆகியவற்றை அணிந்துதான் ஜான் ஃபிரம் வந்திருந்தார், தான் மீண்டும் சரக்கு பெட்டிவுடன் திரும்பி வருவதாக வாக்குறுதி அளித்த போது அந்த ஆடையைத் தான் அணிந்திருந்தார் என்று நம்புகிறார்கள். தான்னா (Tanna) எனும் ஒரு தீவில், பல இடங்களில், மருத்துவ அணியினரைச் சுட்டும் செஞ்சிலுவைச் சின்னங்கள் சுத்தமாகக் கட்டப் பட்ட சுற்று வேலிகளோடு சிறு சிறு வடிவங்களில் பழங்குடியினரால் எழுப்பப்பட்டுள்ளன. 1970இல் ஒரு ஜான் ஃபிரம் கிராமத்துத் தலைவர் தனது பேட்டியில், ‘நீங்கள் சுமார் 2000

வருடங்களாக ஏசு கிரிஸ்து வருவார் என்று நம்பிக் காத்திருக்கிறீர்கள். ஆகவே நாங்கள் இன்னும் சிலகாலம் ஜான் ஃபிரம் வருவதற்குக் காத்திருக்கலாம் ‘ என்றார்.

1968இல் பிஸ்மார்க் தீவுக்கூட்டத்தில் ஒரு பகுதியான நியூ ஹானோவர் தீவில் ஒரு இறைதூதர் ‘சரக்குப் பெட்டியின் ரகசியம் ‘ அமெரிக்க ஜனாதிபதி லிண்டன் ஜான்ஸனுக்குத்தான் தெரியும் என்று முடிவு செய்து அறிவித்தார். ஆகவே அவரது வழியைப் பின்பற்றும் பழங்குடியினர் அந்த பகுதியில் வரி கொடுக்க முடியாது என்று மறுத்துவிட்டு, 75000 டாலர் பணத்தை சேமித்து லிண்டன் ஜான்ஸனை ‘விலைக்கு வாங்கி’ அவரிடமிருந்து சரக்குப் பெட்டி ரகசியத்தை அறிந்துகொள்ளவும், அவர் சரக்குப் பெட்டியின் ரகசியத்தை சொன்னால் அவரை நியூ ஹானோவர் தீவுக்கு அரசராகவும் ஆக்கவும் முடிவு செய்தனர்.

1962இல் நியூ கினி தீவில், வேவாக் (Wewak) நகரத்துக்கு அருகே துரு(Turu) மலையின் உச்சியில் சர்வே செய்ய உதவும் ஒரு பெரிய, காங்கிரீட்டால் ஆன அடையாளத்தை அமைத்தனர். ஏலிவான் மாதியாஸ் (Yeliwan Mathias) என்ற இறைதூதர், அமெரிக்கர்கள்தான் மூதாதையர்கள் என்றும், அந்த அடையாளத்துக்குக் கீழ்தான் சரக்கு பெட்டி இருக்கிறது என்றும் உறுதியாக நம்பினார். மே 1971இல் அமெரிக்க பாப் இசைப் பாடல்களை டிரான்சிஸ்டர் ரேடியோக்களில் ஒலிபரப்பியபடி, இரவு முழுவதும் ‘பிரார்த்தனை’ நடத்தி, அவரும் அவரது சீடர்களும் அந்த அடையாளத்தைத் தோண்டி எடுத்தனர். சரக்கு பெட்டி அங்கிருக்கவில்லை. அரசாங்க அதிகாரிகள் அங்கிருந்த சரக்கு பெட்டியை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டனர் என்று யெலிவான் விளக்கினார். சுமார் 21500 டாலர்கள் கொடுத்த அவரது சீடர்கள் தம் நம்பிக்கையை இழக்கவில்லை.

இப்படிப்பட்ட சரக்குப் பெட்டி நம்பிக்கைகளை, பழங்குடி மனத்தின் பிதற்றல்கள் என்று உதாசீனம் செய்வது எளிதானது. சீடர்களின் அறியாமை, பேராசை, ஏமாளித்தனங்களை உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள் என்று பார்த்து, ஒன்று, இறைதூதர் தலைவர்கள் மோசடி செய்யும் ஏமாற்றுக்காரர்கள் என்று சொல்லி விடலாம், அல்லது உண்மையாகவே தாமும் நம்பிச் செயல்படுபவர்களானால், பெருங்கும்பல் உணர்ச்சிப் பெருக்கு (mass hysteria) அல்லது சுய ஹிப்னோடிஸம் மூலம் தங்களது பைத்தியக்காரத்தனமான சரக்குப் பெட்டி கருத்துக்களை பரப்பும் மனநோயாளிகள் என்றும் கருதலாம். இப்படி அவர்களை ஒரேயடியாக ஒதுக்குவது, தொழில்மயமாக்கப்பட்ட உலகில் செல்வம் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது; எவ்வாறு வினியோகிக்கப்படுகிறது என்பது பற்றி நம்மிடையே ஏதும் மர்ம உணர்வு இல்லையென்றால். ஏற்கக் கூடிய கருத்தாக இருக்கலாம். ஆனால், ஏன் சில நாடுகள் ஏழையாக இருக்கின்றன அல்லது சில நாடுகள் பணக்கார நாடுகளாக இருக்கின்றன என்று விளக்குவது எளிதானதா ? இல்லை. நவீன நாடுகளுக்குள்ளேயே செல்வ வினியோகம் ஏன் சீரானதாக இல்லை என்பதும் ஏன் கூர்மையான வித்தியாசங்களை கொண்டதாக இருக்கின்றது என்பதும் எளிதில் விளக்கக்கூடியதாக இல்லை. நான் சொல்ல வரும் கருத்து இதுதான். சரக்கு பெட்டி மர்மம் என்று ஒன்று உண்மையிலேயே இருக்கிறது. அந்த மர்ம முடிச்சை விடுவிக்க முயல்வதற்கு அப் பழங்குடியினருக்கு எல்லா உரிமையும் உண்டு.

சரக்குப் பெட்டி ரகசியத்தைத் துலக்க, நாம் ஒரு குறிப்பிட்ட சரக்குப் பெட்டி வழிபாட்டு மரபை எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்கு ஆஸ்திரேலிய நியூகினி பிரதேசத்தில் மடாங் (Madang) பகுதியில் இருக்கும் குறுமதங்களைத் தேர்ந்தெடுத்துள்ளேன். இவற்றைப் பீட்டர் லாரன்ஸ் (Peter Lawrence) என்பவர் தனது ‘சரக்கு பெட்டிக்கே சாலை ‘ (Road Belong Cargo) என்ற புத்தகத்தில் விவரித்திருக்கிறார்.

மடாங் கடற்கரைப் பிரதேசத்துக்குச் சென்ற முதல் ஐரோப்பியர் மிக்லெளஹோ-மாக்லே (Miklouho-Maclay) என்னும் ரஷ்யர். அவர் படகு கரை சேர்ந்ததும், அவரது ஆட்கள் எஃகு கோடாரிகள், துணி மணிகள் ஆகிய மதிப்பு மிக்க பொருட்களை அங்கிருந்த பழங்குடியினரிடம் வினியோகித்தனர். உடனே அங்கிருந்த பழங்குடியினர் அந்த வெள்ளைக்காரர்கள்தான் தமது மூதாதையர்கள் என்று முடிவு செய்துவிட்டனர்.

ஐரோப்பியர்களும் இந்த பிம்பத்தைக் கட்டிக் காக்க முடிவு செய்தனர். எக்காரணம் கொண்டும் இறந்து போன ஐரோப்பியரை அந்த பழங்குடியினருக்குக் காட்டவே இல்லை. யாரேனும் இறந்து போனால், பிணத்தை யாருக்கும் தெரியாமல் கடலில் வீசிவிட்டு, காணாமல் போனவர்கள் திரும்பவும் சொர்க்கத்துக்குச் சென்றுவிட்டனர் என்று பழங்குடியினரிடம் சொல்லிவிட்டனர்.

1884இல் மடாங்கில் ஜெர்மனி முதல் காலனி அரசாங்கத்தை நிறுவியது. உடனே லூத்தரன் கிரிஸ்துவ மிஷனரிகள் அங்கு வந்தனர். ஆனால், கிரிஸ்துவத்தில் சேரக்கூடிய பழங்குடியினரை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அங்கிருந்த ஒரு மிஷன் 13 வருடங்களில் ஒருவரைக்கூட கிரிஸ்துவராக மாற்ற முடியவில்லை. மதமாற்றம் செய்யவேண்டுமென்றால், பழங்குடிகளுக்கு எஃகு ஆயுதங்களும் உணவும் லஞ்சமாகக் கொடுக்க வேண்டியிருந்தது. பெரிய மனிதன் அமைப்பு முறை முக்கியமானது என்று நான் ஏன் சொன்னேன் என்பதை இப்போது உணரலாம். கடந்த அத்தியாயத்தில் விளக்கிய பழங்குடியினப் பெரிய மனிதரைப் போல, கடல் தாண்டி உள்ளே வரும் பெரியமனிதனும் அவன் கொடுத்துக்கொண்டே இருக்கும் வரைக்கும்தான் நம்பக் கூடியவனாகவும், நியாயமாகவே பெரிய மனிதனாகவும் கருதப் பட்டான். அவர்கள் திரும்பிவந்த மூதாதையர்களோ அல்லது கடவுள்களோ, அது முக்கியமே அல்ல. கடவுள் போல இருக்கும் பெரிய மனிதர்கள் சாதாரணப் பெரியமனிதர்களை விட அதிகம் கொடுக்க வேண்டும். சும்மா கிரிஸ்துவ இறைபாடல் பாடுவதும், இறந்ததும் கிடைக்கும் சொர்க்கம் பற்றிய வாக்குறுதிகளும் பழங்குடியினரிடம் கிரிஸ்துவமதத்தில் ஆர்வம் வைக்கத் தூண்ட முடியவில்லை. பழங்குடியினர் சரக்குப் பெட்டியையே விரும்பினார்கள், அதைத்தான் எதிர்பார்த்தார்கள். மிஷனரிகளும் கிரிஸ்துவ மிஷனரிகளின் நண்பர்களும் கடலுக்கப்பால் இருக்கும் நிலத்திலிருந்து வரும் கப்பல்களில் இருக்கும் சரக்கு பெட்டி வழியே என்னவெல்லாம் பெறுகின்றனரோ அதே பெ

ாருட்களை, அந்த வகைச் சரக்குப் பெட்டிகளையே பழங்குடியினர் கேட்டார்கள்.

நாம் முன்னரே பார்த்தது போல, பெரிய மனிதர்கள் தங்கள் சொத்துக்களை மறுவினியோகம் செய்ய வேண்டும். கஞ்சத்தனமான பெரிய மனிதனை விடக் கேவலமானது வேறெதும் இல்லை என்று பழங்குடியினர் நம்பினார்கள். நிச்சயமாகவே மிஷனரிகள் எதையாவது எல்லாருக்கும் தராமல் ஒளித்தார்கள்.

‘மாமிசத்தையும் கொழுப்பையும் ‘ தங்களிடமே வைத்துக்கொண்டு, ‘எலும்புகளையும் ஊசிப்போன ரொட்டிகளையும் ‘ மிஷனரிகள் பழங்குடி மக்களுக்குத் தருகிறார்கள் என்று பழங்குடி மக்கள் நம்பினார்கள். மிஷன் நிலையங்களிலும், சாலை போடுவதிலும், தோட்டங்களிலும் பழங்குடியினர் பெரும் விருந்து கிட்டப் போகிறது என்ற நம்பிக்கையில் கடினமாக உழைத்தார்கள். இருந்தும் அது ஏன் வரவில்லை ? 1904இல் பழங்குடியினர் எல்லா கஞ்சத்தனமான பெரிய மனிதர்களையும் கொன்று தள்ளத் திட்டம் தீட்டினார்கள். ஆனால் அதிகாரிகள் அந்தத் திட்டங்களை அறிந்து கொண்டார்கள். அந்த திட்டத்தின் மூலவர்களைக் கொன்றார்கள். ராணுவச் சட்டம் நிறுவப்பட்டது.

இந்த தோல்விக்குப் பிறகு, பழங்குடி மக்களின் அறிவுஜீவிகள் சரக்கு பெட்டியின் மூலத்தைப் பற்றிய கோட்பாடுகளை உருவாக்க ஆரம்பித்தார்கள். பழங்குடியினரின் மூதாதையர்களே சரக்குப் பெட்டியை உருவாக்கினார்கள். ஆனால், வெள்ளைக்காரர்கள் அந்த சரக்குப் பெட்டியில் பழங்குடியினர் தமது பங்கைப் பெற முடியாதவாறு தடுக்கிறார்கள். 1912இல் இரண்டாவது ஆயுதம் தாங்கிய புரட்சி வெடித்தது. அதன் பிறகு இரண்டாம் உலகப்போர் தொடங்கிவிட்டது. ஜெர்மானியப் பெரிய மனிதர்கள் ஓடிவிட்டனர். அந்த இடத்திற்கு ஆஸ்திரேலியப் பெரிய மனிதர்கள் வந்து சேர்ந்தனர்.

இப்போது பழங்குடியினர் கூட்டங்கள் கூட்டிப் பேசி எல்லாரும் ஒரு முடிவுக்கு வந்தார்கள். இனிமேல் ஆயுதம் தாங்கிய புரட்சி செய்வது வீண் என்றும், அதனால் சரக்கு பெட்டிவை அடையமுடியாது என்றும் முடிவு செய்தனர். மிஷனரிகளுக்கு சரக்குப் பெட்டியின் ரகசியம் தெரிந்திருக்கிறது. ஆகவே எஞ்சுவது ஒரே வழி, அவர்களிடமிருந்தே சரக்குப் பெட்டி ரகசியத்தை கற்றுக்கொள்வதுதான் என்று முடிவு செய்தார்கள். திடாரென்று எல்லாப் பழங்குடியினரும் சர்ச்சுகளுக்கும் மிஷன் பள்ளிகளுக்கும் செல்லத்தொடங்கினார்கள். ஒத்துழைக்கும் ஆர்வமான கிரிஸ்துவர்களாக ஆனார்கள். மிக்க ஆர்வத்துடனும் கவனத்துடனும் அவர்கள் கேட்டது கீழ்க்கண்ட கதையை:.

‘ஆரம்பத்தில் கடவுள் இருந்தார். பழங்குடித் தொல் கதைகளில் அவரது பெயர் அனுஸ் (Anus). அனுஸ் சொர்க்கத்தையும் பூமியையும் படைத்தார். அனுஸ் ஆதாம், ஏவாளுக்குச் சரக்குப் பெட்டிகள் நிரம்பிய சொர்க்கத்தைக் கொடுத்தார்- அப்பெட்டிகளில் டப்பாவில் அடைத்த மாமிசம் (canned meat) , எஃகுக் கருவிகள், அரிசி மூட்டைகள், தீக்குச்சிகள் போன்றன எவ்வளவு தேவையானாலும் கிட்டும்படி நிரம்பி இருந்தன. ஆதாமும் ஏவாளும் பாலுறவை கண்டு கொண்டதன் காரணமாக அனுஸ் சரக்கு பெட்டிவை அவர்களிடமிருந்து எடுத்துக்கொண்டு பெருவெள்ளத்தை அனுப்பினார். நோவாவுக்கு எப்படி மரத்தால் ஆன நீராவிக்கப்பலை கட்டுவது என்று அனுஸ் சொல்லிக்கொடுத்தார். நீராவிக்கப்பலுக்கு நோவாவைக் கேப்டனாக ஆக்கினார். ஷெம், மேலும் ஜாபெத் ஆகியோர் தங்கள் தந்தையான நோவாவுக்குக் கீழ்ப்படிந்தார்கள். ஆனால் முட்டாளான ஹாம் தன் தந்தையான நோவாவுக்கு கீழ்ப்படியவில்லை. சரக்குப் பெட்டியை ஹாமிடமிருந்துப் பிடுங்கிவிட்டு நோவா அவனை நியூகினிக்கு அனுப்பிவிட்டார். அங்கு ஹாம் தன் குடும்பத்துடன் அறியாமையிலும் இருட்டிலும் பல வருடங்கள் வாழ்ந்தனர். ஹாமின் குழந்தைகள் மீது அனுஸ் இரக்கப்பட்டு மிஷனரிகளை அனுப்பி ஹாமின் தவறுக்கு வருந்தச் சொன்னார். ‘ஹாமின் குழந்தைகளை மீண்டும் என் வழிக்குக் கொண்டு வந்தால், அவர்கள் என்னை பின்பற்றினால், இன்று எவ்வாறு வெள்ளைக்காரர்களுக்கு சரக்குப் பெட்டி அனுப்புகிறேனோ அது போல உங்களுக்கும் சரக்கு பெட்டி அனுப்புவேன் ‘ என்றார்.”

அரசாங்கமும் கிரிஸ்துவ மத நிறுவனங்களும் சர்ச்சுக்கு வரும் கூட்டத்தைப் பார்த்து மனம் மகிழ்ந்தனர். முன்னைப்போல இல்லாமல் பழங்குடிகள் தங்களை மரியாதையுடன் நடத்துவதைப் பார்த்து மகிழ்ந்தனர். பழங்குடியினரின் கிரிஸ்துவ மதம் தங்களது கிரிஸ்துவ மதத்திலிருந்து வெகுவாக வேறுபட்டிருப்பதை மிகச்சிறு அளவு வெள்ளைக்காரர்களே கண்டு கொண்டனர். பழங்குடி மொழிகளோடு ஜெர்மனும் ஆங்கிலமும் கலந்த ஒரு எளிமைப் படுத்தப் பட்ட கலவை (pidgin) மொழியில் கிரிஸ்துவ போதனை செய்யப்பட்டது. மிஷனரிகளுக்கு, ‘கடவுள் நோவாவை ஆசீர்வதித்தார் ‘ என்னும் வசனத்தை ‘கடவுள் நோவாவுக்கு சரக்கு பெட்டி கொடுத்தார் ‘ என்று பழங்குடியினர் புரிந்து கொள்கிறார்கள் என்பது தெரியும். விவிலிய நூலில் மாத்தியூவின் புத்தகத்திலிருந்து மேற்கோள் காட்டி அவர்கள் விரிவுரை ஆற்றும்போது- “முதலில் பரமபிதாவின் ராச்சியத்தையும், அவருடைய நேர்ப்பாதையையும் நாடுங்கள், இவை எல்லாம் உஙகளுக்குக் கொடுக்கப் படும்” (Mathew ch-6 verse 33-) ‘Seek ye first the kingdom of god, and his righteousness; and all these things shall be added unto you ‘) என்று சொல்வதை ‘நல்ல கிரிஸ்துவர்களுக்கு கடவுள் சரக்குப் பெட்டி கொடுப்பார் ‘ என்று பழங்குடியினர் புரிந்துகொள்கின்றனர் என்பதும் தெரியும்[v1]. பரிசுகள் என்பன இறந்த பின்னர் கிடைக்கும் அல்லது ஆன்மீக வழியில் கிடைக்கும் என்று சொன்னால், மிஷனரிகளை இந்த பழங்குடியினர் நம்ப மாட்டார்கள் எ

ன்பதும், அவர்கள் வேறொருவரின் சர்ச்சுக்குச் சென்றுவிடுவார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரியும்.

ஒரு புத்திசாலியான பழங்குடி மனிதருக்குக் கிட்டிய செய்தி தெளிவாகவும் உரத்தும் இருந்தது. நம்பிக்கையுள்ளவர்களுக்கு இயேசுவும் அவரது மூதாதையர்களும் சரக்குப் பெட்டி கொடுப்பார்கள். கிரிஸ்துவர் ஆகாதவர்களுக்கு சரக்குப் பெட்டிவும் கிடைக்க

ாது, அவர்கள் நரகத்தில் வெந்து போவார்கள். ஆகவே 1920களில், பழங்குடியினத் தலைவர்கள் பொறுமையாக கிரிஸ்துவக் கடமைகளில் ஈடுபட்டார்கள். துதிபாடல்களை பாடினார்கள். பல மணி நேர வேலைக்குச் சில காசுகளே பெற்றுக்கொண்டு வேலை செய்தார்கள். வரி கொடுத்தார்கள். தங்களது அதிகபட்ச மனைவியர்களை விட்டுகொடுத்தார்கள்.

வெள்ளைக்காரர்களுக்கு மரியாதை காட்டினார்கள். ஆனால் 1930களில் அவர்களது பொறுமை குறைய ஆரம்பித்துவிட்டது. கடின உழைப்பு சரக்குப் பெட்டியைக் கொண்டுவரும் என்றால், இன்னேரம் வந்திருக்க வேண்டும். தங்களது வெள்ளைக்கார எஜமானர்களுக்கு ஏராளமான கப்பல்களிலிருந்தும் விமானங்களிலிருந்தும் ஏராளமான சரக்கு பெட்டிகளைப் பழங்குடியினரே இறக்கிக் கொடுத்தார்கள். ஆனால் அவர்களுக்கு என்று ஒன்றுமே வரவில்லை.

நேரடியாக மிஷனில் வேலை செய்த பழங்குடியினர் இன்னும் மிகுந்த எரிச்சல்களுக்கு உள்ளானார்கள். நேரடியாக ஐரோப்பியப் பெரிய மனிதர்களுக்கும் தங்களுக்கும் இடையே பெரிய சொத்து வித்தியாசத்தைச் கண்டார்கள். மேலும் மேலும் நிறைய மதமாற்றம் நடந்தாலும், ஏராளமாக கிரிஸ்துவத்தைப் பரப்பினாலும் தாம் எதிர்பார்த்தது போல வித்தியாசம் குறையாமல், மாறாக அதிகரித்து வருவதைக் கண்டார்கள்.

1933இல் ஒரு நாள் பிரபல லுத்தரன் கிரிஸ்துவ போதகர் ரோலண்ட் ஹாஸெல்மன் (Rolland Hasselmann) தனது சர்ச்சுக்குள் நுழைந்தபோது அவரது எல்லா பழங்குடி உதவியாளர்களும் நடைபாதையில் ஒரு கயிறு கட்டி, அதன் மறுபுறம் நின்றுகொண்டு அவரிடம் ஒரு மனுவைப் படிக்கக் கொடுத்தார்கள். ‘எங்களுக்கு ஏன் சரக்கு பெட்டி ரகசியம் இன்னமும் கற்றுக் கொடுக்கப் படவில்லை ? கறுப்பு மக்களாகிய எங்களுக்கு கிரிஸ்துவ மதம் நடைமுறை வாழ்க்கையில் எதற்கும் உதவவில்லை. வெள்ளைக்காரர்கள் சரக்கு பெட்டி ரகசியத்தை மறைத்துவைக்கிறீர்கள் ‘ அதன் பின்னர் இன்னும் அதிகமான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன: விபத்தாகவோ, திட்டமிட்டோ பைபிள் சரியாக மொழிபெயர்க்கப்படவில்லை- அதில் இருந்த விஷயங்கள் நீக்கப்பட்டுள்ளன. முதல் பக்கம் நீக்கப்பட்டுள்ளது. கடவுளின் உண்மையான பெயர் பழங்குடிகளிடம் சொல்லாமல் மறைக்கப்படுகிறது.

பழங்குடியினர் எல்லா கிரிஸ்துவ மிஷன்களையும் நிராகரித்து வெளியேறினார்கள். பிறகு சரக்குப்பெட்டி மர்மத்துக்குப் புதிய விடையையும் கூறினார்கள். இயேசு கிரிஸ்து சரக்குப் பெட்டிகளை ஐரோப்பியர்களுக்குக் கொடுத்தார். ஆனால் இப்போது பழங்குடியினர்களுக்கு கொடுக்க விரும்புகிறார். ஆனால், யூதர்களும் கிரிஸ்துவ மிஷனரிகளும் சரக்குப்பெட்டிகளை தங்களுக்கே வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள். யூதர்கள் இயேசு கிரிஸ்துவை கைது செய்து சிட்னியில் (ஆஸ்திரேலிய நகர்) வைத்திருக்கிறார்கள். வெகு விரைவில் இயேசு கிரிஸ்து அங்கிருந்து தப்புவார். பிறகு சரக்குப்பெட்டிகள் பழங்குடியினர்களுக்கு வர ஆரம்பிக்கும். மிகவும் ஏழையானவர்களுக்கே எல்லாமும் கிடைக்கும் ( ‘the meek shall inherit ‘). பழங்குடியினர் எல்லோரும் வேலை செய்வதை நிறுத்தினார்கள். தங்களது எல்லா பன்றிகளையும் கொன்றார்கள். தங்களது தோட்டங்களை எல்லாம் தீயிட்டு அழித்தார்கள். எல்லோரும் கல்லறைகளில் குழுமினார்கள்.

இரண்டாம் உலகப்போர் தொடங்கும் அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சிகள் நடந்தன. முதலில், இந்த புதிய போர் தொடங்கியதன் காரணத்தைப் புரிந்துகொள்வது பழங்குடியினருக்கு கடினமாக இல்லை. ஆஸ்திரேலியர்கள் ஜெர்மானியர்களைத் துரத்தினார்கள். தற்போது ஆஸ்திரேலியர்களை ஜெர்மானியர்கள் துரத்தப்போகிறார்கள். ஒரே வித்தியாசம் மூதாதையர்கள் இப்போது ஜெர்மானியர்கள் போல காட்சியளிப்பார்கள்.

இவ்வாறு தீர்க்கதரிசனம் கண்டு வருவதை அறிவித்த பழங்குடி இறைதூதர்களை ஆஸ்திரேலிய அரசாங்கம் ஜெர்மானியப் பிரச்சாரத்துக்கு உதவுகிறார்கள் என்று சொல்லிச் சிறையிலடைத்தது. ஆனால், செய்திகள் மீது தணிக்கை இருந்தாலும், நியூ கினியிலிருந்து ஆஸ்திரேலியர்கள் துரத்தப்படப்போகிறார்கள் ஆனால் ஜெர்மானியர்களால் அல்ல ஜப்பானியர்களால் என்பதைப் பழங்குடியினர்கள் அறிந்து கொண்டார்கள்.

இந்த புதிய மாற்றத்தை புரிந்து கொண்டு விளக்குவதற்கு சரக்குப்பெட்டி இறைதூதர்கள் கஷ்டப்பட்டார்கள். டாகாராப் (Tagarab) என்ற இறைதூதர் மிஷனரிகளெல்லாம் இதுவரை பொய் சொல்லி ஏமாற்றி வந்திருக்கிறார்கள் என்று அறிவித்தார். அவரது கூற்றுப்படி, இயேசு கிரிஸ்து ஒரு முக்கியமற்ற தெய்வம். உண்மையான தெய்வம், சரக்குப்பெட்டி தெய்வம், பழங்குடியினர் வணங்கி வந்த கிலிபாப் (Kilibob) தான் என்று அறிவித்தார். பழங்குடியினர் எல்லோரும் அனஸ் (Anus) என்ற தெய்வத்தை வணங்கும்படி மிஷனரிகள் செய்துவிட்டார்கள். ஆனால், அனஸ் ஒரு சாதாரண மனிதர்தான். அவர் கிலிபாபின் தந்தையார். கிலிபாப் இயேசு கிரிஸ்துவின் தந்தை. வெள்ளைக்காரர்கள் இப்படி மோசடி செய்ததற்காக அவர்களைக் கிலிபாப் தண்டிக்கப்போகிறார். அவரும் பழங்குடியினரின் மூதாதையர்களும் கப்பல் நிறைய துப்பாக்கிகளும், குண்டுகளும், ஆயுதங்களும் எடுத்துக்கொண்டு வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் தரையிறங்கும்போது ஜப்பானியர்கள் போல இருப்பார்கள். ஆஸ்திரேலியர்கள் துரத்தப்பட்டுவிடுவார்கள். எல்லொருக்கும் சரக்குப்பெட்டி கிடைக்கும். இதற்குத் தயாராக இருப்பதற்காக, எல்லோரும் வேலைகளை எல்லாம் நிறுத்திவிட்டு, எல்லா பன்றிகளையும் கோழிகளையும் பலிகொடுத்துவிட்டு, வரப்போகும் சரக்குப்பெட்டிகளுக்காக கிடங்குகளைக் கட்டவேண்டும்.

1942 டிசம்பரில் மடாங்க் பிரதேசத்தை ஜப்பானியர்கள் ஆக்கிரமித்தபோது, பழங்குடியினர், அவர்களை விடுதலை வீரர்களாக வரவேற்றனர். ஜப்பானியர்கள் தங்களுடன் எந்த சரக்குப் பெட்டிகளையும் எடுத்துக்கொண்டு வராமல் இருந்தும், சரக்குப்பெட்டி இறை தூதர்களின் தீர்க்க தரிசனங்கள் பாதியாவது நிறைவானதாக ஜப்பானியர்கள் வந்ததை கொண்டாடினர். பழங்குடியினர்களை ஜப்பானியர்கள் மோசமாக நடத்த முயற்சிக்கவில்லை. இன்னும் போர் நடந்துகொண்டிருப்பதால், சரக்குப்பெட்டிகள் வரத் தாமதமாகிறது என்று சாக்குக் கூறினார்கள். போர் முடிந்ததும், மடாங்க் பிரதேசம், ஜப்பானின் கிழக்காசியா கூட்டு வளமை வட்டத்தின் (Greater East Asia Co-Prosperity Sphere) ஒரு பங்காக இருக்கும் என்று உறுதியளித்தார்கள். வரப்போகும் நல்ல வளமையான வாழ்க்கையில் எல்லோரும் பங்கு பெறலாம். ஆனால் இடைப்பட்ட காலத்தில் நிறைய வேலை செய்ய வேண்டியிருக்கிறது. ஆஸ்திரேலியர்களையும் அவர்களது தோழர்களான அமெரிக்கர்களையும் தோற்கடிக்கப் பழங்குடியினர் உதவ வேண்டும்.

பழங்குடியினர் ஓடோடிச் சென்று கப்பல்களிலிருந்தும் விமானங்களிலிருந்தும் பொருள்களை இறக்கவும் கொண்டு செல்லவும் உதவினார்கள். புது காய்கறிகளை பரிசுப்பொருட்களாகக் கொண்டுவந்து தந்தார்கள். புதர்களிலிருந்து வந்த எதிர்ப்புணர்வை கண்டு தரையில் வீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானிகள் ஆச்சரியப்பட்டார்கள். ஒரு விமானம் தரை தட்டியதும், அந்த விமானியை பழங்குடிமக்கள் சூழ்ந்துகொண்டு அவரை கைகளையும் கால்கை

ளயும் கட்டி ஒரு நீண்ட குச்சியில் தூக்கி கொண்டு சென்று அருகே இருந்த ஜப்பானிய ராணுவ அதிகாரியிடம் கொண்டு சென்று ஒப்படைத்தார்கள். சரக்குப் பெட்டி இறைதூதர்களுக்கு கைம்மாறு செய்வதற்காக அவர்களுக்கு சாமுராய் கத்திகளை ஜப்பானியர்கள் பரிசாக அளித்தார்கள். பிராந்திய போலீஸ் படை ஒன்றினை உருவாக்கி அதில் போலீஸ் அதிகாரிகளாக ஆக்கினார்கள்.

ஆனால் வெகு விரைவில் போரின் நிலைமை மாறி இந்தக் குதூகலமான இடைக் காலத்துக்கு முடிவு கட்டியது. ஆஸ்திரேலியர்களும், அமெரிக்கர்களும் ஜப்பானியப் படையினருக்குச் சரக்கு வரும் வழிகளை அடைத்தார்கள். ராணுவ நிலை சீர் குலைந்ததும், ஜப்பானியர்கள் தங்களது உணவுக்கும் பழங்குடியினரின் உழைப்புக்கும் கொடுத்துவந்த ஊதியத்தை நிறுத்தினார்கள். சரக்குப்பெட்டி இறைதூதர் டாகாராப் தனது சாமுராய் கத்தியை அணிந்துகொண்டு ஜப்பானியர்களிடம் முறையிட்ட போது சுட்டுக்கொல்லப்பட்டார். ‘மூதாதையர்கள் ‘ (ஜப்பானியர்கள்) பழங்குடியினரின் தோட்டங்களையும், தென்னந்தோப்புகளையும், வாழை மேலும் சர்க்கரை வள்ளிக்கிழங்குத் தோட்டங்களையும் சாப்பிட்டே அழித்தார்கள். அங்கிருந்த கடைசி பன்றி, கோழி வரைக்கும் திருடிச் சாப்பிட்டு அழித்தார்கள். எல்லாம் போனதும் அங்கிருந்த நாய்களையும் விட்டுவைக்கவில்லை. அந்த நாய்களும் காலியானதும் அங்கிருந்த பழங்குடி மக்களையும் விரட்டிக் கொன்று தின்றார்கள்.

1944இல் ஆஸ்திரேலியர்கள் மீண்டும் மடாங்க் பிரதேசத்தை கைப்பற்றியபோது, அங்கிருந்த பழங்குடி மக்கள் சிடுசிடுப்பாகவும், ஒத்துழைக்க மறுப்பவர்களுமாக இருந்தார்கள். ஜப்பானியர்கள் அழிவு வேலை நடத்தாத பிரதேசங்களில் இருந்த சரக்குப்பெட்டி இறைதூதர்கள் ஜப்பானியர் உருவத்தில் இன்னும் கூடுதலான எண்ணிக்கையில் மூதாதையர்கள் திரும்பி வருவார்கள் என்று தீர்க்க தரிசனம் கூறிக்கொண்டிருந்தார்கள். அங்கு மீதமிருந்த மக்களின் நம்பிக்கையை பெறுவதற்காக ஆஸ்திரேலியர்கள் போர் முடிந்ததும் ‘முன்னேற்றம் ‘ (development) வரும் என்று பேச ஆரம்பித்தார்கள். சமாதானம் வரும் என்றும், போர் முடிந்ததும் கறுப்பர்களும் வெள்ளையர்களும் இணக்கமான சூழ்நிலையில் சேர்ந்து வாழ்வார்கள் என்றும் பழங்குடித் தலைவர்களிடம் கூறப்பட்டது. எல்லோரும் நல்ல வீடுகளில் வசிப்பார்கள் என்றும், மின்சாரம், மோட்டார் ஊர்திகள், படகுகள், நல்ல உடை, போதும் என்ற அளவுக்கு உணவு அனைத்தும் கிடைக்கும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது.

ஆனால், இதற்குள், புத்திசாலியான நடைமுறை வாழ்வு தெரிந்த பழங்குடித் தலைவர்கள், இந்த மிஷனரிகள் எல்லோரும் சரியான கடைந்தெடுத்த பொய்யர்கள் என்று உறுதியாக முடிவு செய்துவிட்டார்கள். முக்கியமாக, இறைதூதர் யாலி (Yali) இந்த முடிவில் மிக மிக உறுதியாக இருந்தார். இவரைப்பற்றிய கதையை இங்கிருந்து ஆரம்பித்து சொல்லப்போகிறேன்.

போர்க்காலத்தில் யாலி ஆஸ்திரேலியர்களுக்கு விசுவாசமாக இருந்தார். அதனால், ஆஸ்திரேலிய ராணுவத்தில் சார்ஜெண்ட் மேஜர் என்ற பட்டம் கொடுக்கப்பட்டிருந்தார். சரக்குப்பெட்டிகளின் ரகசியம் என்ன என்று காட்டுவதற்காக அவர் ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்லப்பட்டார். அல்லது ஆஸ்திரேலியர்கள் அவர் எது ரகசியம் என்று நம்பவேண்டும் என நினைத்தார்களோ அவற்றை எல்லாம் காட்டினார்கள். அதாவது சர்க்கரை ஆலைகள், சாராய ஆலைகள், விமானம் பழுதுபார்க்கும் இடம், துறைமுக கிடங்குகள் ஆகியவை. தொழிற்சாலை உற்பத்தி முறையின் ஒரு சில அம்சங்களை யாலி பார்த்தாலும், கார்களிலும் பெரிய நகரங்களிலும் குடியிருப்பவர்களில் பலரும் தொழிற்சாலைகளிலும் சாராய ஆலைகளிலும் வேலை செய்யவில்லை என்பதையும் பார்த்தார். அவர் ஆண்களும் பெண்களும் குழுக்களாக இணைந்து வேலை செய்கிறார்கள் என்று பார்த்தாரே தவிர, அடிப்படையில் என்ன செயல் முறை ஒழுங்கால் அவர்களது உழைப்பு ஒருங்கமைக்கப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ளமுடியவில்லை. அங்கு ஏராளமாகப் பெருகி வெளிவரும் அத்தனை சொத்துக்களிலிருந்தும் வளங்களிலிருந்தும் ஒரு சிறு துளி கூட தம் சொந்தப் பகுதிப் பழங்குடி மக்களுக்கு ஏன் வருவதில்லை என்பதையும் அவர் பார்த்த விஷயங்களிலிருந்து அவரால் புரிந்துகொள்ளமுடியவில்லை.

யாளியின் மனத்தில் மிகவும் ஆழமாக ஆச்சரியப்படுத்திய விஷயங்கள் சாலைகளோ, மின்சார விளக்குகளோ அல்லது உயர்ந்த கட்டிடங்களோ அல்ல. ஆனால், ஓக்லேண்ட் தொல்பொருள் காட்சிசாலையும், பிரிஸ்பேன் நகரின் விலங்குக் காட்சி சாலையும்தான். அவரை மிக மிக ஆச்சரியப்படுத்திய விஷயம், அந்த மியூஸியத்தில் நியூகினியிலிருந்து எடுக்கப்பட்ட பழங்குடி சமுகத்தின் பொருட்கள் ஏராளமாக இருந்தன. ஒரு காட்சியிடத்தில் யாலியின் பழங்குடி குழுமத்தினர் பழங்காலத்தில் தம் சமுகத்து இளைஞர் பூப்படையும்போது நடத்தும் பெரும்கொண்டாட்டத்தின் போது அணியும் செதுக்கிக் கடையப்பட்ட சடங்கு முகமூடியும் இருந்தது. இதே முகமூடியைத்தான் ‘சாத்தானின் கைவேலை ‘ என்று கிரிஸ்துவ மிஷனரிகள் குறிப்பிட்டிருந்தார்கள். அந்த முகமூடி இப்போது கண்ணாடி பெட்டகங்களுக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக்க, வெள்ளை அங்கி அணிந்த பூசாரிகளால் வணங்கப் பட்டிருந்தது, இடை விடாது அங்கு வந்திருந்த அழகாக உடை உடுத்திய பார்வையாளர்களும் அங்கு மிக ஒலி அடங்கிய குரலில் பேசி மரியாதையாக நடந்தார்கள். இதே தொல்பொருள் காட்சியகத்தில் வினோதமான வகையான மிருக எலும்புகள் மிகவும் கவனமாகப் பாதுகாக்கப்படுகின்றன. பிரிஸ்பேன் மிருகக்காட்சி சாலைக்கு யாலி கொண்டு செல்லப்பட்டபோது அங்கு வெள்ளைக்காரர்கள் இன்னும் வினோதமான மிருகங்களை அன்பு செலுத்தி உணவு கொடுத்து காப்பாற்றி வருகிறார்கள் என்பதையும் பார்த்தார். சிட்னி நகருக்கு வந்ததும், அங்கு மக்கள் எத்தனை பெரும் எ

ண்ணிக்கையில் நாய்களையும் பூனைகளையும் செல்லப்பிராணிகளாக வளர்க்கிறார்கள் என்பதையும் கவனமாகப் பார்த்துக் கொண்டார்.

போருக்குப் பின்னர், ஆஸ்திரேலிய நியூகினி பிரதேசத்தின் தலைநகரான போர்ட் மோர்ஸ்பி (Port Moresby) நகரத்தில் ஒரு அரசாங்க மாநாட்டில்தான் எந்த அளவுக்கு மிஷனரிகள் பழங்குடி மக்களை ஏமாற்றி வந்திருக்கிறார்கள் என்பதை யாலி கண்டுகொண்டார். அந்த மாநாட்டின் நடுவே ஒரு கட்டத்தில் எவ்வாறு குரங்குகள் மெல்ல மெல்ல மாற்றம் அடைந்து மனிதரைப் போல மாறுகின்றன என்ற படங்கள் உள்ள புத்தகம் யாலிக்குக் காட்டப்பட்டது. இறுதியில் உண்மை யாலிக்கு தெளிவாகப் புலப்பட்டது. ஆதாமும் ஏவாளுமே மனிதர்களின் மூதாதையர்கள் என்று மிஷனரிகள் பழங்குடி மக்களிடம் போதித்தார்கள். ஆனால் உண்மையிலேயே வெள்ளைக்காரர்கள் தங்களது மூதாதையர்கள் குரங்குகள், பன்றிகள், பூனைகள் மற்றும் இதர மிருகங்கள் என்றுதான் நம்புகிறார்கள். மிஷனரிகள் பழங்குடிப் பிரதேசங்களுக்கு வந்து தங்கள் போதனைகளைச் சொல்லி ஏமாற்றி, அவர்களது டோடம் சிலை செதுக்கல்களை பிடுங்கிக்கொண்டு போகும் வரைக்கும், குறிப்பாக இந்த நம்பிக்கைகளையே பழங்குடி மக்கள் கொண்டிருந்தார்கள்.

பின்னர், இன்னொரு இறைதூதரான குரெக் (Gurek) என்பவருடன் பேசிக் கொண்டிருந்தபோது, குவீன்ஸ்லாந்து மியூசியம் உண்மையிலேயே ரோம் நகரம்தான் என்று குரெக் சொன்னதை யாலி. ஒப்புக்கொண்டார். அந்த ரோமில்தான் நியூகினி தெய்வங்களையும் பழங்கதைகளையும் கடத்திச் சென்று வைத்து சரக்குப்பெட்டி ரகசியத்தை கட்டுக்குள் வைத்துக்கொண்டுவிட்டார்கள் வெள்ளைக்காரர்கள். இந்த தெய்வங்களையும் பெண் தெய்வங்களையும் மீண்டும் நியூகினிக்கு கடத்திக்கொண்டு வந்துவிட்டால் வளமைக்கான யுகம் வந்துவிடும். ஆனால் அதற்கு அவர்கள் கிரிஸ்துவ மதத்தைத் துறந்து மீண்டும் பழங்குடி ஆதிமதக் கலாசாரத்தையும் சடங்குகளையும் பின்பற்ற ஆரம்பிக்க வேண்டும்.

மிஷனரிகளின் ஏமாற்று வேலைகள் மீது யாலி கடுங்கோபம் அடைந்திருந்தார். இயேசு கிரிஸ்து அல்லது (கிரிஸ்துவரின்) பரமபிதா முக்கியத்துவம் கொண்டிருந்த எல்லா சரக்குப்பெட்டி மதங்களையும் பூண்டோடு ஒழிக்க ஆஸ்திரேலிய அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க ஆர்வம் காட்டினார். யாலியின் போர்க்காலப் பணியும், பிரிஸ்பேன் மற்றும் சிட்னி நகரங்கள் பற்றி எல்லாம் அவருக்குத் தெரிந்திருந்தாலும், சரக்குப்பெட்டி மதங்களை மிகவும் நாவன்மையுடன் அவர் எதிர்த்து பேசியதாலும், மடாங்க் மாவட்ட அதிகாரி யாலி சரக்குப்பெட்டிகளில் நம்பிக்கை வைக்கவில்லை என்று நினைத்தார். அரசாங்கம் கூட்டிய பொதுக்கூட்டங்களில் யாலியை பேச அழைத்தனர். கிரிஸ்துவ சரக்குப்பெட்டி மதங்களை மிகவும் ஆர்வத்தோடு யாலி கிண்டல் செய்தார். மிகவும் கடினமாக வேலை செய்தாலொழிய, எல்லோரும் சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடந்தாலொழிய சரக்குப்பெட்டிகள் வராது என்று அறிவுறுத்தினார்.

போர்க் காலத்தில் ராணுவத்தில் அவர் பணி புரிந்தபோது அவருக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் மீது நம்பிக்கை இழக்காமல் இருந்ததாலேயே அவர் ஆஸ்திரேலிய அதிகாரிகளுக்கு மிகவும் ஒத்துழைப்பு தந்தார். 1943இல் பிரிஸ்பேன் நகரில் ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் வேலை பார்த்த ஒரு அதிகாரி கூறிய வார்த்தைகளை பொன் வார்த்தைகளாக மனதில் இருத்தியிருந்தார். ‘கடந்த காலத்தில் நீங்கள் பழங்குடியினர் பிற்போக்கான நிலைமையில் வைக்கப்பட்டிருந்தீர்கள். ஆனால் இப்போது ஜப்பானியர்களை ஒழித்துத் துரத்துவதற்கு நீங்கள் உதவினால், ஐரோப்பியரான நாங்கள் உங்களுக்கு உதவுவோம். இரும்பு போட்ட கூரைகளையும், மரச் சுவர்களையும், மின்சார விளக்குகளையும் கொண்ட வீடுகளைக் கட்டித்தருவோம். மோட்டார் வாகனங்கள், படகுகள், நல்ல உடைகள், நல்ல உணவு கிடைக்கும். போருக்குப் பின்னால் வாழ்க்கை மிக மிக வித்தியாசமாக இருக்கும் ‘

பழைய சரக்குப்பெட்டி சமாச்சாரங்களை யாலி கிண்டல் செய்து அழிக்க முனைவதைக் கேட்க ஆயிரக்கணக்கான மக்கள் வந்தார்கள். சந்தோஷம் குதியிடும் முகங்களோடு அதிகாரிகள், வெள்ளைக்கார வியாபாரிகள் எல்லோரும் அவரைச் சுற்றி நின்று, மேடை போட்டு ஒலிபெருக்கி வைத்து பேசச் சொல்லவும் சூடு பிடித்து உற்சாகமாக ஆரம்பிக்கிறார் யாலி. முந்தைய சரக்குப்பெட்டி மதங்களை யாலி திட்டத் திட்ட, அவர் பேசுவதைக் கேட்ட பழங்குடி மக்கள் மனதில் யாலி தனக்கு மட்டுமே சரக்குப்பெட்டி மர்மம் தெரியும் என்று சொல்கிறார் என்ற எண்ணம் வலுப்பட்டது. பழங்குடி மக்கள் இவ்வாறு புரிந்து கொள்கிறார்கள் என்ற தகவல் மேலே அதிகாரிகளுக்கு சென்றபோது, அவர்கள், யாலியை அழைத்து, தான் திரும்பி வந்த மூதாதையர் அல்ல என்றும், தனக்குச் சரக்குப்பெட்டி ரகசியம் தெரியாது என்றும் மக்களிடம் நிறைய பேசும்படி வற்புறுத்தினார்கள். இத்தகைய பொதுமேடை மறுப்புகள், பழங்குடி மக்கள் மனதில் யாலியிடம் அமானுஷ்ய சக்திகள் இருக்கின்றன என்றும், அவர் சரக்குப்பெட்டிகளைக் கொண்டுவருவார் என்றும் எண்ணம்

தீவிரமாக வலுப்படவே காரணமாயிற்று.

யாளியும் யாலியைப்போன்று ஆஸ்திரேலியாவுக்கு விசுவாசமான இதர பழங்குடி தலைவர்களும் தலைநகர் போர்ட் மோர்ஸ்பிக்கு அழைக்கப்பட்டபோது, மடாங்கில் இருந்த யாலியைப் பின்பற்றுபவர்கள் அவர் திரும்பி வரும்போது பெரிய கப்பல்களில் சரக்குப்பெட்டிகளைக் கொண்டு வருவார் என்றே நம்பினார்கள். தனக்கு சில முக்கியமான உதவிகள் செய்யப்படும் என்று யாலியும் நம்பியிருக்கலாம். அவர் நேராக தலைநகரிலிருந்த பெரிய அதிகாரியிடம் சென்று தனக்கு பிரிஸ்பேன் ரெக்ரூட்டிங் அதிகாரி வாக்களித்த பரிசுகள் எங்கே என்று கேட்டார். அவருக்கு கட்டட பொருட்களும், இயந்திரங்களும் இன்ன பிற பேசப்படும் பரிசுப்பொருட்களும் தரப்படுமா என்று கேட்டார். யாலிக்கு அதிகாரி சொன்ன பதிலை பேராசிரியர் லாரன்ஸ் தனது புத்தகமான ‘சரக்குப்பெட்டிக்கே சாலை ‘ (Road belong Cargo) என்ற புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்.

அந்த அதிகாரி பின்வருமாறு சொன்னதாகச் சொல்லப் படுகிறது. ஜப்பானியர்களுக்கு எதிராக உதவியதிலும் மற்ற விஷயங்களிலுஇம் பழங்குடியினரின் சேவைகளுக்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் மிகுந்த நன்றியுடன் இருக்கிறது என்றும், சொல்லப்போனால் அந்த மக்களுக்கு நல்ல பரிசு கொடுக்க இருக்கிறது என்றும் அந்த அதிகாரி கூறியதாகத் தெரிகிறது. பொருளாதார, கல்வி மற்றும் அரசியல் முன்னேற்றங்களுக்காகவும், போர் பாதிப்பு நிவாரணத்துக்காகவும், மருத்துவ வசதியை முன்னேற்றவும், சுகாதாரம் ஆரோக்கியம் ஆகியவற்றை சீர் படுத்தவும், ஆஸ்திரேலிய அரசாங்கம் பெரும் அளவு பணம் செலவழிக்கப்போகிறது என்றும் சொன்னார். ஆனால் இது மெதுவாகத்தான் வரும் என்றும், பழங்குடி மக்கள் காலாவட்டத்தில் ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் உதவிகளைப் பாராட்டுவார்கள் என்றும் கூறினார். ஆனால், யாலி நினைத்தது போல உடனடியாக சரக்குப்பெட்டிகள் நிறைய பொருட்கள் பற்றிய கேள்விக்கே இடமில்லை என்றும் கூறிவிட்டார். அந்த நேரத்தில் போர் பிரச்சாரத்துக்காகப் பொறுப்பற்ற ஐரொப்பிய அதிகாரிகள் அந்த கணத்தில் ஏதோ சொல்லிவிட்டார்கள் என்று வருத்தம் தெரிவிப்பதாகக் கூறினார்.

எப்போது பழங்குடி மக்கள் மின்சாரத்தைப் பெறுவார்கள் என்ற கேள்விக்கு, அது விரைவில் வரும் என்றும் ஆனால் அதை உபயோகிப்பதற்குப் பணம் செலுத்த வேண்டும் என்றும் அதிகாரிகள் கூறினார்கள். பணம் கொடுத்தால்தான் கிடைக்கும் என்றும் அதற்கு முன்னால் கிடைக்காது என்றும் சொல்லிவிட்டார்கள். யாலி கசந்து போனார். கிரிஸ்துவ மிஷனரிகளைப் போலவே அரசாங்கமும் மோசமாகப் பொய் சொல்கிறது.

போர்ட் மோர்ஸ்பியிலிருந்து திரும்பி மடாங்க்குக்கு வந்ததும், குரெக் (Gurek) என்ற சரக்குப்பெட்டி இறைதூதருடன் ரகசியக் கூட்டணியில் இணைந்தார். யாலியின் பாதுகாப்பின் கீழ், நியூகினியின் தெய்வங்கள்தான் உண்மையான சரக்குப்பெட்டி தெய்வங்கள் என்றும் கிரிஸ்துவ தெய்வங்கள் அல்ல என்றும் குரெக் பிரச்சாரம் செய்தார். பழங்குடியினர் கிரிஸ்துவ மதத்தை விட்டுவிட்டு பழங்குடி மதத்துக்கு திரும்பிச் சென்றால்தான் வளத்தையும் சந்தோஷத்தையும் அடைய முடியும் என்று பிரச்சாரம் செய்தார். பழங்குடி சடங்குகளும், சிலைகளும், சிற்பங்களும், முகமூடிகளும் திரும்பச் செய்யப்பட வேண்டும். பன்றி வளர்ப்பு, வேட்டையாடுதல் ஆகியவை மீண்டும் கொண்டுவரப்படவேண்டும். ஆண்கள் பூப்படையும் சடங்குகள் ஆகியவை மீண்டும் கொண்டாடப்பட வேண்டும். கூடவே சிறிய மேஜைகளை அமைத்து அதன் மீது பருத்தித் துணி விரிப்பு விரித்து அதன் மீது கண்ணாடி பாட்டில்கள் வைத்து அதில் மலர்கொத்துக்களை வைக்க வேண்டும். இப்படிப்பட்ட வீட்டுக் கோவில்களில் (ஆஸ்திரேலிய வீடுகளில் இருப்பது போன்ற இந்த அமைப்பு) உணவையும் சுருட்டுக்களையும் படைக்கவேண்டும். அப்போது பழங்குடித் தெய்வங்கள் மனம் மகிழ்ந்து மூதாதையர்களை அனுப்பி சரக்குப்பெட்டிகளை அனுப்பி வைப்பார்கள். மூதாதையர்கள் துப்பாக்கிகள், ரவைகள், ஆயுதங்கள், ராணுவ தளவாடங்கள், குதிரைகள் மேலும் பசுக்கள் ஆகியவற்றைக் கொண்டுவருவார்கள். யாலியை இனி அரசர் என்றுதான் அழைக்க வேண்டும். யாலி பிறந்த வியாழக்கிழமைதான் இனிப் புனித நாள், ஞாயிற்றுக்கிழமை அ

ல்ல. யாலியால் அற்புதங்கள் செய்ய முடியும் என்று குரெக் அறிவித்தார். யாலி யாரையேனும் சபித்தாலோ அவர்கள் மீது எச்சில் துப்பினாலோ அவர்கள் இறந்துவிடுவார்கள் என்றும் குரெக் கூறினார்.

யாளி மதத்தினரை கலைத்து அனுப்பிவிட யாலிக்கு அடிக்கடி அதிகாரிகள் கட்டளையிட்டு அவரை கிராமம் கிராமமாக அடியாட்களுடன் அனுப்பி வைத்தார்கள். இந்த வாய்ப்புக்களை பயன்படுத்திக்கொண்ட யாலி, போட்டியான இறைதூதர்களையும் அவர்களது சீடர்களையும் அமுக்கப் பயன்படுத்திக்கொண்டு தன் ஆட்களான அடியாட்களை (boss boys) தூர தூர இடங்களிலெல்லாம் ஏற்படுத்திக்கொண்டார். அவர் அபராதங்களையும் தண்டனைகளையும் விதித்து, தனக்கு வேலை செய்பவர்களைச் சேகரித்து, தனக்கு ஒரு போலீஸ் படையைக் கூட உருவாக்கிக்கொண்டார். மறைமுகமாக நடந்த மறு வினியோக முறையைப் பின்பற்றி தனது அமைப்புக்கு நிதி உதவி செய்தார். தான் ஒரு உண்மையான பெரிய மனிதனாக (big man) ஆகப் போவதாக வாக்குறுதி அளித்தார்.

மிஷனரிகள் தொடர்ந்து அதிகாரிகளை வற்புறுத்தி யாலியை அகற்றும்படிக் கேட்டுக் கொண்டார்கள். ஆனால், பழங்குடி மக்களின் அவமதிப்பான நடத்தைக்குப் பின்னால் யாலிதான் இருக்கிறார் என்பதை அவர்களால் நிரூபிக்க முடியவில்லை. அவர்கள் ஒரு சரக்குப்பெட்டி மதத்தினர்தான் என்றும் நிரூபிக்க முடியவில்லை. ஏனெனில், யாலி மதத்தினர் எல்லோரும் தங்களுக்கு சரக்குப்பெட்டி நம்பிக்கை இல்லை என்று உறுதிமொழி எடுத்துக்கொள்ள கோரப்பட்டிருந்தார்கள்.

ஏனெனில், பழங்குடியினர் தங்களது சரக்குப்பெட்டி நடவடிக்கைகளை வெளியே சொன்னால், மீண்டும் நியூகினயினரின் கடவுள்களை ஐரோப்பியர்கள் திருடிக்கொண்டு சென்றுவிடுவார்கள் என்று எச்சரிக்கப்பட்டிருந்தார்கள். ஏன் வீட்டில் மேஜையும் பூக்களும் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டால், பழங்குடியினர் தங்கள் வீடுகளும் ஆஸ்திரேலிய வீடுகள் போல அழகாக இருக்க இதுபோல செய்திருக்கிறோம் என்று சொல்வார்கள். யாலியை பிரச்னை கிளப்புவதாக குற்றம் சாட்டினாலோ, அவர் மறுத்து கிராமங்களில் இருக்கும் தீவிரவாதிகளுக்கும் தனக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்றும், தனது நல்ல பெயரைக் கெடுக்க ஒருசிலர் வேலை செய்கிறார்கள், தான் பகிரங்கமாகத் தன் நம்பிக்கைகளை அறிவித்திருந்தும் அவற்றைத் திரித்துப் பரப்புகிறார்கள் என்றும் கூறிவிடுவார்.

வெகுவிரைவிலேயே வெளிப்படையான புரட்சியை ஆஸ்திரேலிய அரசாங்கம் சந்திக்கவேண்டி வந்தது. 1950இல் மற்றவர்களின் சுதந்திரத்தைப் பறிக்க திட்டம் போட்டதற்காகவும், பாலுறவுப் பலாத்காரம் செய்யத் தூண்டியதாகவும் யாலி கைது செய்யப்பட்டார். அவருக்கு ஆறுவருடங்கள் சிறை தண்டனை கிடைத்தது. ஆனால் யாலியின் வாழ்வும் வேலைகளும் அத்தோடு முடிந்துவிடவில்லை. யாலி சிறையில் இருக்கும்போதே அவரைப் பின்பற்றியவர்கள் தொடுவானத்தை ஆராய்ந்து பார்த்துக்கொண்டு அவர்களுக்கு வரவேண்டிய சரக்குப்பெட்டிகளும் போர்க்கப்பல்களும் வருகின்றனவா என்று கண்காணித்துக் கொண்டிருந்தார்கள். நியூகினி மக்களுக்கு 60களில் ஒருவழியாக சில அரசியல் மற்றும் பொருளாதாரச் சலுகைகள் வழங்கப்பட்டன. பள்ளிகள் கட்டப்பட்டதற்கும், சட்டசபைகளில் பழங்குடி மக்கள் போட்டியிட அனுமதிக்கப்பட்டதற்கும், அதிகமாகத் தரப்பட்ட கூலிகளுக்கும், சாராயம் குடிப்பதைத் தடை செய்திருந்தது நீக்கப்பட்டதற்கும் யாலியே காரணம் என்று யாலியைப் பின்பற்றியவர்கள் கருதினார்கள்.

சிறையிலிருந்து யாலி விடுதலை செய்யப்பட்டதும், நியூகினி சட்டமன்றத்தில்தான் சரக்குப்பெட்டி ரகசியம் இருக்கிறது என்று அவர் கருதினார். மடாங்க் கவுன்ஸிலுக்கு தேர்ந்தெடுக்கப்படத் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் தோற்கடிக்கப்பட்டார். வயதானதால் அவர் மிகுந்த மதிப்புக்குறியவராக கருதப்பட்டார். வருடத்துக்கு ஒரு முறை அவரை பல பெண்கள் சந்தித்து அவரது விந்துவைப் பாட்டில்களில் வாங்கிச் சென்றனர். அவருக்கு மக்கள் தொடர்ந்து பரிசுகளை அளித்த வண்ணம் இருந்தனர். கிரிஸ்துவர்களை மீண்டும் பழங்குடி மதத்துக்கு அழைத்துக்கொள்ள கிரிஸ்துவமதத்தில் இருந்ததால் வந்த பாவங்களைப் போக்க ஞானஸ்னானம் செய்து பழங்குடி மதத்தில் சேர்க்கப் பணம் வாங்கிக் கொண்டார். யாலியின் கடைசி தீர்க்க தரிசனம், ஆகஸ்ட் 1ஆம் தேதி நியூகினி தனி நாடாக ஆகும் என்று சொன்னதுதான். அதற்காகத் தயார் செய்ய ஜப்பான், சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குத் தூதர்களை நியமித்தார்.

எந்த மனிதச் செயலும் சிறு சிறு துண்டுகளாக உடைக்கப்பட்டுள்ள இணைப்புப் புதிரைப் (jigsaw puzzle) போல ஆக்கப் பட்டால் புரிந்துகொள்ளக் கடினமானதாகவே ஆகிவிடும். அப்படிப்பட்ட மிகச்சிறிய துண்டுகளை மொத்த வரலாற்றுப் படத்தில் பொருத்துவதும் கடினமானதே. அதற்குப் பொருத்தமான கால அளவு ஒன்றை எடுத்துக் கொண்டு பார்த்தால், சரக்குப் பெட்டி என்பது கடினமான, மிகவும் ஏற்ற தாழ்வுகள் நிறைந்த மோதல் ஒன்றை மிகக் குறைவான எதிர்ப்பைக் காட்டியபடியே ஒரு முடிவுக்குக் கொணரும் வழிமுறையாகவே தெரிய வரும்.

ஒரு தீவுக்கண்டத்துக்குள் இருக்கும் இயற்கை வளங்களுக்காகவும் மனித வளங்களுக்காகவும் நடந்த ஒரு போராட்டத்தில் இறுதியில் கிடைக்கும் பரிசுதான் ‘சரக்குப்பெட்டி’ ஆகிறது. நாகரிகம் என்ற பெயரில் நடத்தப்பட்ட பேராசை பிடித்த கொள்ளையடிப்புடைய ஒவ்வொரு துண்டுக்கும், காட்டுவாசிகளின் மர்மங்களடங்கிய மெய்த்தேடலின் ஒரு துண்டு பதிலாக எதிரே நின்றது. இந்த மொத்த நடப்புமே, வெகுமதிகளிலும் மேலும் தண்டனைகளிலுமே ஸ்திரமாகக் காலூன்றி இருந்தது, புகையுருவான மாயங்களில் அல்ல.

மற்ற மக்கள் குழுக்கள் போலவே, பழங்குடி மக்களானாலும் சரி, நாகரிகர்களானாலும் சரி தங்களது வாழ்விடங்களும் சுதந்திரமும் ஆக்கிரமிப்பாளர்களால் அச்சுறுத்தப்படும்போது அவர்கள் எப்படி நடந்து கொள்வார்களோ அதே போல, மடாங்க் பிரதேச மக்களும் ஐரோப்பியர்களை வீட்டுக்கு அனுப்ப முயற்சிக்கிறார்கள். ஆரம்பத்திலேயே அல்ல. ஏனெனில் ஆக்கிரமிப்பாளர்கள் விலை மலிந்த பழங்குடி உழைப்பைக்கும் கன்னி நிலங்களுக்கும் தங்களுக்கு இருக்கும் தீராப்பசியைக் காட்டப் பல வருடங்களாகிவிட்டன. இருப்பினும் எதிரியைக் கொன்று விட முயற்சிகள் எழுவதற்கு அதிக நாட்கள் ஆகவில்லை. ஆனால் அம்முயற்சி துவக்கத்திலேயே தோல்வி அடைந்த முயற்சியே. ஏனெனில், எல்லாக் காலனிய ஆக்கிரமிப்புப் போர்களிலும் போரிடும் இரண்டு தரப்புகளிடையே ஏற்ற தாழ்வு பெரிதாக உள்ளதால் அப்போர் சமமற்ற போராகவே உள்ளது. மடாங்க் பிரதேசப் பழங்குடிகளுக்கு இரண்டு குறைகள் இருந்தன. ஒன்று அவர்களிடம் நவீன ஆயுதங்கள் இல்லை. இரண்டாவது, அவர்கள் நூற்றுக்கணக்கான சிறு சிறு குழுக்களாக சிதறிக்கிடந்தார்கள். அவர்களால் பொதுவான எதிரிக்கு எதிராக ஒன்று சேர முடியவில்லை.

ஆனால், ஐரோப்பியர்களை ஆயுதம் மூலம் துரத்தும் நம்பிக்கைகள் எப்போதுமே காணாமல் போகவில்லை. அந்த ஆசை அமுக்கப்பட்டது ஆனால் அழிந்துவிடவில்லை. பழங்குடியினர் பின் வாங்கினார்கள், திரும்பி வரும்போது பைத்தியக்காரத்தனமான விளிம்பு நிலை நடத்தைகள் போலத் தெரிகிற பாதைகளில் திரும்பி வந்தார்கள். ஆக்கிரமிப்பாளர்கள் அராஜகமான பெரிய மனிதர்கள் போல நடத்தப்பட்டார்கள். அழிக்கக் கடினமானவர்கள் ஆனால் அதே நேரம் ஆட்டுவிப்பதற்கு ஆடக்கூடியவர்கள்தான். இந்த விசித்திரமான பெரிய மனிதர்களை அவர்களது சொத்துக்களில் கூடுதலான பங்கை எல்லோரோரும் பகிர்ந்து கொள்ள வைக்கவும், நிலத்துக்கும் பிற மனிதரின் உழைப்புக்கும் ஐரோப்பியர்களுக்கு உள்ள தீராப்பசியை மட்டுப்படுத்தவும், பழங்குடி மக்கள் ஐரோப்பியர்களின் மொழியைக் கற்றுக்கொண்டு அவர்களது ரகசியங்களைத் தெரிந்துகொள்ள முயன்றனர். ஆகவே, கிரிஸ்துவ மதத்துக்குச் சென்றது, பழங்குடிப் பழக்க வழக்கங்களைக் கைவிட்டது, ஆட்சியாளரின் வரிகளுக்கு கீழ்ப் படிந்தது, ஐரோப்பியர்களுக்கு கூலி வேலை செய்தது ஆகியவை இப்படித்தான் துவங்கின. பழங்குடியினர் ஐரோப்பியர்களுக்கு ‘மரியாதை ‘ கொடுத்தார்கள். தங்களைச் சுரண்டுவதற்கு தாமே ஒத்துழைத்தார்கள்.

இந்த இடைப்பட்ட காலத்தின் விளைவுகள் இரண்டு தரப்பினராலும் எதிர்பார்க்கப்படாத விளைவுகளை தோற்றுவித்தன. தனித்தனியாகவும், ஒன்றோடு ஒன்று பொருதுகொண்டும் இருந்த கிராமங்கள் ஒரே எசமானருக்குச் சேவை செய்ய ஒருங்கிணைந்தன. கிரிஸ்துவப் பெரிய மனிதர்களை ஆட்டுவித்து ஒரு சொர்க்கமான மீட்சி நிலையை எல்லோருக்குமாக உருவாக்கி விடலாம் என்ற நம்பிக்கையிலும் அவை ஒன்றிணைந்து இருந்தன. அதனால் சரக்குப்பெட்டிகள் மறுவினியோகம் செய்யப்பட வேண்டும் என்று வற்புறுத்தின. ஆனால், கிரிஸ்துவ மிஷனரிகளின் பார்வையில் கிரிஸ்துவம் என்பதற்கு இது பொருளல்ல. ஆனால், பழங்குடியினர் தங்களது நலன்களைக் காக்கும் பொருட்டு, கிரிஸ்துவ மிஷனரிகள் சொல்வதுதான் கிரிஸ்துவத்தின் பொருள் என்று ஏற்க மறுத்தனர். ஐரோப்பியர்கள் உண்மையான பெரிய மனிதன் போல நடந்துகொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினர். சொத்துக்களை வைத்திருப்பவர்கள் அதனைப் பங்கிட்டுத் தந்துவிட வேண்டும் என்பது கடமை என்று வற்புறுத்தினர்.

ஐரோப்பிய பொருளாதார மேலும் மத வாழ்வுப் பாங்கைப் பழங்குடியினரால் புரிந்துகொள்ள முடியாததை மேற்கத்தியர்கள் நகைப்பூட்டுவதாகப் பார்த்தாலும் அவர்கள் அதை கவனித்துப் பார்க்கவும் முயல்கிறார்கள். அம்முயற்சிகளின் உட்கிடக்கை என்னவோ நவ நாகரிகத்தின் நெறிகளை புரிந்து கொள்ள முடியாத அளவு பின் தங்கியவர்கள் அல்லது முட்டாள்கள் அல்லது மூட நம்பிக்கைகளில் மூழ்கியவர்கள் இந்தப் பழங்குடியினர்கள் என்பதுதான். ஆனால் இது நிச்சயமாக யாலியின் வரலாற்றைப் பொறுத்தமட்டில் சற்றும் பொருத்தமற்றது. நாகரிக வாழ்வின் நெறிகளை யாலியால் புரிந்துகொள்ள முடியவில்லை என்பது அல்ல விஷயம். அந்த நெறிகளை யாலியால் ஒப்புக்கொள்ள முடியவில்லை என்பதுதான் முக்கியம். நவீனத் தொழிற்சாலைகள் வேலை செய்வதைப் பார்த்த ஒருவர் எப்படி இன்னும் சரக்குப்பெட்டிகளை நம்புகிறார் என்று அவருக்குப் போதித்தவர்கள் ஆச்சரியப்பட்டனர். எப்படி ஐரோப்பியர்கள் வளமையை உருவாக்குகிறார்கள் என்று யாலி மேன்மேலும் புரிந்துகொண்ட பின், ஏன் அவரும் அவரது பழங்குடி மக்களும் அந்த வளமையில் பங்கு பெற முடியாது என்பதைப் பற்றிய ஐரோப்பியர்களது விளக்கங்களை அவரால் ஒப்புக்கொள்ளமுடியவில்லை. ஐரோப்பியர்கள் எவ்வாறு வளமையானவர்களாக ஆனார்கள் என்பதை யாலி புரிந்துகொண்டார் என்பது இங்கு அர்த்தமல்ல. மாறாகக் கடைசியாகக் கிட்டிய தகவல்படி அவர் ஒரு புது விளக்கத்தை உருவாக்கிக் கொண்டிருந்தார், அதாவது ஐரோப்பியர்கள் விபச்சார வீடுகள் மூலம் பணக்காரர்கள் ஆனார்கள் என்பதுதான் அது

. ஆனால், ஐரோப்பியர்கள் வழக்கமாகவே தம் வளமைக்குக் காரணம் ‘கடின உழைப்பு ‘ என்று சொல்லும்போது அதனைத் ‘திட்டமிட்ட மோசடி’ என்று நிராகரிக்கும் அளவுக்கு யாலிக்கு மூளை இருந்தது. ஐரோப்பியப் பெரிய மனிதர்கள் பழங்குடிப் பெரிய மனிதர்கள் போலக் கடினமாக உழைக்கவில்லை. சொல்லப்போனால் உழைக்கவே இல்லை என்பது எல்லோருக்கும் தெரிகிறதே.

உலகத்தைப் பற்றிய யாலியின் புரிதல், வெறும் காட்டுவாசி மனங்களுக்கு மட்டும் உரித்தானது அல்ல. தெற்குப் பசிஃபிக் கடல்களில் இருக்கும் காலனி தீவுகளில், கிரிஸ்துவ மிஷனரிகள் பழங்குடி மக்களுக்குக் கல்வி தரும் ஏகபோக பாத்தியத்தை அனுபவித்து வந்தார்கள். அரசியலைப் பகுத்து அறிய உதவும் அறிவுத்துறை நுணுக்கக் கருவிகளை அவர்கள் கற்பிக்கப் போவதில்லை. இந்த கிரிஸ்துவப் பள்ளிகள் பழங்குடி மக்களுக்கு ஐரோப்பிய முதலாளித்துவம் பற்றிய அறிவையோ அல்லது காலனியப் பொருளாதாரக் கொள்கையைப் பற்றிய அலசலையோ அவர்கள் கற்ருக் கொடுக்கவில்லை. மாறாக, விவிலியக் கதைகளையே, ஆதாம் ஏவாள் படைப்பு, இறைதூதர்கள், அவர்களது தீர்க்கதரிசனங்கள், தேவதைகள், காப்ரியேல், மெஸையா, அமானுஷ்ய மறுதீர்ப்பு நாள், மறு உயிர்ப்பு, நிரந்தர கர்த்தரின் ராஜாங்கம், அங்கு எவ்வாறு இறந்தவர்களும் உயிருடன் இருப்பவர்களும் இணைந்து சொர்க்கத்தில் வாழ்வார்கள், அங்கு எவ்வாறு பாலும் தேனும் ஓடும் என்றுதான் போதித்தார்கள்.

தடுக்கமுடியாததாக, இந்த கருத்துக்களே- இவற்றில் பலவும் பழங்குடி மக்களின் நம்பிக்கைகளிலும் இருந்த பல கருத்துகளை மிகவும் ஒத்தே இருந்தன – காலனியச் சுரண்டலுக்கு எதிரான பொதுமக்கள் போராட்டத்தின் சொற்களனாக ஆயின. ‘மிஷன் கிரிஸ்துவம் ‘ என்பது எதிர்புரட்சியின் கருவறை. வெளிப்படையான எதிர்ப்பு, வேலை நிறுத்தம், தொழிற்சங்கம், அரசியல் கட்சிகள் ஆகியவற்றை ஒடுக்கியதால், ஐரோப்பியர்களே சரக்குப்பெட்டி மதங்களின் வெற்றிக்குக் காரணமாகினார்கள். கடினமாக வேலை செய்தவர்களுக்கே சரக்குப்பெட்டிகள் கிடைக்கும் என்று கிரிஸ்துவ மிஷனரிகள் சொன்னது பொய் என்பது எளிதில் தெரியக்கூடியது. எது புரிந்து கொள்ளக் கடினமானது என்றால், பழங்குடி மக்களின் உழைப்பிற்கும் ஆஸ்திரேலியர்கள் அமெரிக்கர்களின் வளமையான வாழ்வுக்கும் இடையே மறுக்க முடியாத உறவு இருந்தது என்பதைப் புரிந்துகொள்வதுதான். பழங்குடி மக்களின் விலைமலிந்த உழைப்பும், அவர்களது வளமான நிலங்களை அபகரித்ததும் இல்லையெனில், காலனிய சக்திகள் அவ்வளவு செல்வச் செழிப்பைப் பெற்றிருக்க முடியாது. ஆகவே ஒரு வழியில், இந்த பழங்குடிகளால் அந்தப் பொருட்களை விலை கொடுத்து வாங்கமுடியாது என்றாலும், தொழில் மயமாக்கப்பட்ட நாடுகளின் பொருட்கள் இந்த பழங்குடிகளை நியாயமாகச் சென்று சேரவேண்டும். சரக்குப்பெட்டி என்று சொல்லும்போது அவர்கள் இதைத்தான் சொல்கிறார்கள். அதன் உண்மையான ரகசியம் இதுதான் என்று நான் நம்புகிறேன்.

**

மொழி பெயர்ப்பாளர் குறிப்புகள்

1) Cargo cult – இது இன்னமும் தெற்கு பசிபிக் தீவுகளில் இருக்கும் குறுமதம். cult என்ற வார்த்தை religion என்ற வார்த்தை ஆகியவை பொருள் பொதிந்தவை. cult என்ற வார்த்தை குறுமதம் என்று இந்த அத்தியாயத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கல்ட் என்ற வார்த்தை பெரும்பாலும் தீய அல்லது பொய்யான மதத்தை குறிக்க உபயோகப்படுத்தப்படும் வார்த்தை. இதற்கு ஈடாத தமிழ் வார்த்தை இருப்பதாகத் தெரியவில்லை. குறுமதம் என்பதும் நடுநிலை வார்த்தையாக தொனிக்கிறது.

2) http://en.wikipedia.org/wiki/Cargo_cult மேலதிக விவரங்களைப் பார்க்கலாம்

3) http://www.berkshirepublishing.com/rvw/022/022smpl1.htm

4) இன்னும் இருக்கும் ஜான் ஃப்ரம் குறுமதம் http://enzo.gen.nz/jonfrum/index.html

[v1]மத்தேயு 6 :33 – தமிழ் பைபிளிலிருந்து

‘முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும் ‘.

***

Series Navigation

author

மார்வின் ஹாரிஸ்

மார்வின் ஹாரிஸ்

Similar Posts