மானுட உறவின் புதிர்கள் ( திருகோணமலை க.அருள் சுப்பிரமணியனின் ‘அம்மாச்சி ‘ சிறுகதைத் தொகுதி-நூல் அறிமுகம்)

This entry is part [part not set] of 57 in the series 20030717_Issue

பாவண்ணன்


(அம்மாச்சி-சிறுகதைத்தொகுதி. மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண்: 1447, 7, தணிகாசலம் தெரு, தியாகராய நகர், சென்னை – 17. விலை. ரூ66)

‘அவர்களுக்கு வயது வந்துவிட்டது ‘ என்கிற நாவல் மூலம் ஏற்கனவே தமிழ் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான திருகோணமலை க.அருள் சுப்பரமணியனுடைய முதல் சிறுகதைத்தொகுதியாக ‘அம்மாச்சி ‘ வெளிவந்திருக்கிறது. தொகுப்பில் 39 சிறுகதைகள் அடங்கியுள்ளன. இலங்கை நாளேடுகளான வீரகேசரியிலும் தினக்குரலிலும் இவருடைய பெரும்பாலான சிறுகதைகள் பிரசுரமாகியுள்ளன. தலைப்புச் சிறுகதை இந்தியா டுடே இலக்கியமலரில் இடம்பெற்றது.

அடிப்படையில் ஒரு சமூகத்துக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் தம் கதைகளின் அடிநாதமாகப் பரவியிருப்பதாக அருள் சுப்பரமணியன் தன் முன்னுரையில் பதிவு செய்திருக்கிறார். தொகுப்பில் அத்தகு கதைகளைவிட சாதாரண புழங்குதளத்தின் சித்திரங்களைக் காட்டும் சிறுகதைகள் மிகவும் ஈர்ப்பாக இருக்கின்றன. மிக இயல்பாக இக்கதைகள் மலர்ந்து மனத்தில் இடம்பிடித்துக்கொள்கின்றன. கதையின் நிகழ்களம், பங்கேற்கும் மனிதர்களைத் தாண்டி வேறு புதிய அர்த்த தளங்களுக்கு எளிதாகத் தாவிச்செல்லத் தோதான மெளனத்தை இக்கதைகள் கொண்டிருக்கின்றன. இக்கதைகளில் விரிவுபெறும் உலகத்தை ‘மானுட உறவின் புதிர்கள் ‘ என்று வகைப்படுத்தலாம் என்று தோன்றுகிறது.

பல ஆசைகளையும் கனவுகளையும் கொண்டவர்களாகவும் பல நிலைகளில் வெவ்வேறு கோலங்களில் வாழ்கிறவர்களாகவும் உள்ள மனிதர்கள் ஒன்றிணைந்து நிற்க வேண்டும் என்கிற மாபெரும் கனவு உதிக்காத மனமே உலகில் இருக்கமுடியாது. ஒருவரையொருவர் புரிந்துகொள்வதையும் ஒருவரோடொருவர் இணைந்து வாழ்வதையும் காலம்காலமாக வலியுறுத்தாத நாடோ மொழியோ எங்கும் இல்லை. இணைவரு என்கிற சொல் உடனடியாக உருவாக்கும் மனச்சித்திரம் மாறுபட்டு நிற்கும் வெவ்வேறு அணிகளையே. ஒன்றையொன்று வெற்றிகொண்டு களிப்படையத்தான் இணையும் மயற்சி வலியுறுத்தப்படுமெனில், அதில் வெளிப்படுவது மூர்க்கம் மட்டுமே. அணி என்கிற பேதமேயற்று ஒருவரையொருவர் அறிதலின் வழியாக மட்டுமே ஒருங்கிணைந்த இணைதல் சாத்தியமாகும்.

ஆனால் ஒருவரையொருவர் அறிந்துகொள்வது என்பது எடுத்துச்சொல்கிற அளவுக்கு எளிமையான செயலல்ல என்பது அதிர்ச்சியூட்டும் அனுபவம். உறவு விரிவுகொள்ளமுடியாமல் தடுக்கிற அப்புள்ளியின் புதிர் புரிந்துகொள்ள முடியாததாக இருக்கிறது. உள்ளே எளிதில் நுழைந்துவிட முடியாத அளவுக்குத் தன்முனைப்பு, அகங்காரம், ரோஷம், சந்தேகம் எனப்பலவகையான முட்செடிகள் அடர்த்தியாகி புதிரின் பாதைகள் மறைந்துகிடக்கின்றன. நெருங்கமுடியாத அப்புதிரை இலக்கியங்களே காலமெல்லாம் அடையாளப்படுத்தியபடி வந்துள்ளன. மகாபாரதம், ராமாயணம் முதல் கரம்சேவ் சகோதரர்கள் வரை பல எடுத்துக்காட்டுகளை முன்வைக்க முடியும். துரதிருஷ்டவசமாக இலக்கியத்தின் வெளிச்சத்தைப் புறக்கணிக்கிற மானுடர்களாலேயே உலகம் எப்போதும் நிறைந்திருக்கிறது. அந்தத் துக்கத்தின் அழுத்தத்தாலேயே அவிழ்க்கமுடியாத அப்புதிர்களை நோக்கி மீண்டும் மீண்டும் கவனத்தைக் குவித்தல் தவிர்க்கவியலாததாக உள்ளது.

‘சுற்றம் ‘ சிறுகதையில் பெரியப்பா பிள்ளையும் சித்தப்பா பிள்ளையும் இடம்பெறுகிறார்கள். தவிர்க்கவியலாத சந்தர்ப்பமொன்றில் இருவரும் ஒருவரையொருவர் எதிர்கொள்கிறார்கள். அங்கிருந்து சிறுகதை தொடங்குகிறது. எப்படி இருந்தவர், எப்படிப் பேசியவர் என்று பழைய அன்பால் நிறைந்த சம்பவங்களை இருவருடைய மனங்களும் ஒருகணம் அசைபோடுகின்றன. மறுகணமே, அத்தகையவர் ஏன் இப்படிச் செய்தார், அவர் ஏன் தனக்குப் பணிந்துபோகவில்லை என்று பகையின் சாரம் தலைக்கு ஏற இருவருடைய கண்களும் சிவக்கின்றன. நெருங்கநெருங்க மனப்போராட்டம் வலுக்கிறது. இறதியில் ஒரு புள்ளியில் ஒருவரையொருவர் பார்த்தும் பேசாமல் மனமெங்கும் பகைவிரிய இரண்டு வாட்கள் உரசிச்செல்வதைப்போல உரசிக்கொண்டு நகர்ந்து விடுகிறார்கள். சிறுதொலைவு கடந்தபிறகு பார்த்ததும் சிரித்திருக்கலாமோ என்கிற குற்ற உணர்ச்சி எழுகிறது. இரு மனிதர்களிடையேயான இணைய முடியாத உறவின் புதிரை இரு இனங்கள், இரு சாதிகள், இரு நாட்கள் எனப் பல தளங்களுக்கு விரிவடைய வைத்துச் சிறுகதையின் அனுபவத்தைப் பெருக்கிக்கொண்டே செல்லலாம். சிரிப்பதற்குத் துளியளவு அன்பே போதும். அந்தத் துளியளவு அன்புக்குக்கூட இடமும் ஈரமுமற்றுப் போன மனமுடையவர்களாக நம்மை மாற்றியது எது என்கிற கேள்வி முக்கியமானது.

‘களவு ‘ சிறுகதையில் இடம்பெறும் சம்பவமும் இந்தப் புதிர்களை வேறொரு விதத்தில் அணுகுகிறது. ஆளுக்குக் கொஞ்சம் பணம்போட்டு வரவழைக்கப்படுகிற செய்தித்தாள் வாசகசாலையில் திடுமென ஒருநாள் காணாமல் போகிறது. மறுகணமே ஒவ்வொருவருக்கும் மற்றவர்கள் மீது சந்தேகம் எழுகிறது. புகார்க்கூட்டத்துக்கு வராத ஆள் களவாடியிருக்கக் கூடும் என்றொரு சந்தேகத்தை முன்வைக்கிறார் ஒருவர். அப்படிச் சந்தேகப்படுவது தவறு என்று அறிவுரை சொல்கிறவர் மீதும் சந்தேகம் எழுகிறது. சந்தேகம் புற்றுநோய்போல அவர்களிடையே இருந்த அன்பையும் உறவையும் அரித்துவிடுகிறது. வீட்டுக்குள் சிறுவர்களை அனுப்பி உளவுபார்க்க வைக்கிறார்கள். எடுத்தவர்கள் தாமாகப் போட்டுவிட்டுச் செல்ல வாய்ப்பளித்தும் யாரும் போடாததைக் கண்டு கோபம்கொள்கிறார்கள். ஆனால் மாரியம்மனுக்கு இளக்கட்டுவதாக அறிவித்ததும் காணாமல்போன செய்தித்தாள்கள் துண்டுதுண்டான நிலையில் வாசகசாலைக்கு எங்கிருந்தோ தாமாக வந்துவிழுகின்றன. ‘முருங்கை ‘ என்றொரு சிறுகதையில் பொதுவேலியில் நடப்பட்ட முருங்கைக்கன்றால் அருகருகே வாழ்கிற இரண்டு குடும்பங்கள் தமக்குள் மோதிக்கொள்வது சித்தரிக்கப்படுகிறது. ஒருவர் மீது ஒருவர் வசைபாடிக்கொள்வதும் கைப்பொருளையெல்லாம் இழந்து வழக்குமன்றம் வரை சென்று வாதாடுவதும் நிகழ்கின்றன.

அன்பால் இணைந்து இன்பம்கொள்ள வேண்டிய வாழ்வைத் தனக்குத்தானே சிதைத்துச் சீரழிகிற அவலச் சித்திரங்களை அருள் சுப்பரமணியன் கதைகளில் காணமுடிகிறது. புரிந்துகொள்ள மறுக்கிற வீம்பும் தவறாகப் புரிந்துகொண்டதை உண்மையைப்போல நிறுவுவதில் இருக்கிற தன்முனைப்பும் சுட்டிக்காட்டப்படுகின்றன. ‘பதர் ‘ என்னும் சிறுகதை பலவகைகளில் முக்கியமானது. இக்கதையில் இரண்டு காட்சிகள் இடம்பெறுகின்றன. சிறுமியுடன் கடற்கரையில் உலவும் தந்தை இடம்பெறுவது ஒரு காட்சி. கண்ணில்படும் மனிதர்களைப்பற்றி வாய்க்குவந்த விதமாக அவதுாறாகப்பேசி நேரத்தைப்போக்கும் இரு மனிதர்கள் இடம்பெறுவது இன்னொரு காட்சி. முதல் காட்சியில் இளனியை ‘இனளி ‘ என்றும் காகத்தைக் ‘காவம் ‘ என்றும் கடற்கரையை ‘கரைக்கடை ‘ என்றும் இன்னும் மொழி பழகாத மழலைக் குழந்தை உரைக்கும் சொற்கள் இடம்பெறுகின்றன. இப்பிறழ்தல் நமக்கு எவ்விடத்திலும் ஒரு பிழையாகவே தோன்றவதில்லை. மாறாக, ரசிக்கிற மழலையின்பமாக இருக்கிறது. இதற்கு நேர்எதிராக, மகள் பெரியவளானதையொட்டி கோணேசகோயிலுக்கச் சென்று தீர்த்தம் கொண்டுவரும் சைக்கிள்காரரைக் கள்ளச்சாராயத்தைச் சுற்றுவழியில் கடத்திச் செல்கிறவனாக எல்லாம் தெரிந்தவனைப்போல அடையாளப்படுத்திப் பிறழ்ந்து பேசுகிற பேச்சு சங்கடத்தைத் தருகிறது. இரு காட்சிகளையும் அழகாக கலைநயத்துடன் சுப்பிரமணியன் இணைக்கிறார். புரிந்துகொள்வதற்கு எந்தவொரு விருப்பமும் முயற்சியுமின்றித் தான்தோன்றித்தனமான பேச்சுகளில் திளைக்கிற பதர்களின் பெருக்கத்தைத் தவிர்க்கும் வழி தெரியவில்லை.

‘ஒற்றுமை ‘ என்கிற சிறுகதை இன்னும் விரிவான அனுபவத்தைத் தருகிற ஒன்று. சுயம்வரத்தில் திரெளபதையை வென்றுவரும் பாண்டவர்களிடம் அவளைச் சமமாகப் பங்கிட்டுக்கொள்ளுமாறு குந்தி உரைத்த வார்த்தையால் ஐவரும் திரெளபதையை மணக்கவேண்டிய நெருக்கடி நேர்கிறது. இந்த ஏற்பாட்டில் விருப்பமில்லாத சகதேவன் மிகுந்த மனக்கழப்பத்துக்கு ஆளாகிறான். தாயின் கட்டளையும் சகோதரர்களின் அவசரமும் புறக்கணிக்கப்பட வெண்டிய ஒன்று எனக்கருதுகிறான் சகதேவன். நள்ளிரவு முழுக்க நடந்த ஆலோசனைகளால் மனம் வெறுத்து ஆற்றங்கரைக்கு வருகிறான். கரையில் தெரிந்த படகிலேறி மறுகரைக்குச் செல்லச் சொல்கிறான். படகோட்டிக்கும் சகதேவனுக்கும் நிகழ்கிற உரையாடலால் சகதேவனுடைய குழப்பம் அகல்கிறது. சுகோதரர்களிடையே ஒற்றுமையைத் தக்கவைக்கிற ஏற்பாடே இத்திருமணம் என்கிறான் அவன். திருமணம் என்கிற பெயரில் பிள்ளைகளின் வாழ்வில் இடம்பெற்றுவிடும் வெவ்வேறு பெண்களால் அவர்களிடையே உள்ள ஒற்றுமைக்குப் பங்கம் வரக்கூடும் என்பது அவள் அச்சப்படுவதாகவும் தன் பிள்ளைகளை ஓர் இம்மியளவும் சிதறவிடாமல் கட்டிப்போடும் அச்சாணியாகத் திரெளபதை திகழவேண்டுமென்று அவள் ஆசைப்படுவதாகவும் சொல்கிறான். இணைந்த உறவுக்கும் புரிதலுக்கும் உள்ள முக்கியத்துவம் இக்கதையில் சித்தரித்துக்காட்டப்படுகிறது. இணைந்த உறவு என்பது மறுதரப்புக்காரர்களை வெல்வதற்காக அல்ல, அவர்களுடனும் உறவாடிக் களிப்பதற்காகவே என்று வாசிப்பனுவம் விரிவடையும்போது கதையின் தளம் மேலும் விரிவானதாகிறது. ஒருவர் மீது மற்றவர்களு க்குத் தீராத ஐயமும் முடியாத போரும் நிலவும் சூழல்களைக்கொண்ட மண்ணில் இக்கதையின் அனுபவம் ஆழ்ந்த அர்த்தங்களைத் தரக்கூடியது.

***

paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்