மாத்தா ஹரி -அத்தியாயம் – 35

This entry is part [part not set] of 45 in the series 20071108_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


பெண்: கண்களை இமைக்க மறந்து, வாய் பிளந்து, கைதட்டலை நிறுத்த மறந்தவர்களாய் என்னைச் சுற்றிலும் ராணுவ அதிகாரிகள், அரசாங்கத்தின் மூத்த நிர்வாகிகள், கலை உலகத்தோடு தொடர்புகொண்டவர்கள், பத்திரிகையாளர்களென நெருக்கியடித்துக்கொண்டு ஆண்கள் கூட்டம். ஆனல் தனித்து ஒரு ஓரமாக நிற்கும் அவன் எனக்கு வித்தியாசமாகத் தெரிகிறான். மேற்கத்திய ஐரோப்பியர்களுக்கான உடலல்ல, கடுமையான குளிருக்குப்பழகிய வெளுத்த உடல்.

டாக்டர் பிலிப் பர்தோ: யார் அந்த ‘அவன்?

பெண்: வெகு நாட்களுக்குப் பிறகு எனது மனதைக் கொள்ளைகொண்ட ஒருவன், ரஷ்யாவைச் சேர்ந்த இளம் ராணுவ அதிகாரி

பிலிப் பர்தோ: ரஷ்யாவைச் சேர்ந்தவனா? அழகான வாலிபனா?

பெண்: ஆம் நல்ல அழகன், அவனை விரும்புகிறேன். அவனை மணம் செய்துகொள்ளவேண்டும், அவன் அணைப்பில் எனது கடந்த காலங்கள் மறக்கப்படவேண்டும். பாரீஸ் நகரத்தின் வெளிச்சத்திலிருந்து விலகி, இருளில் மூழ்கவேண்டும், உடைந்து சில்லுகளான எனது அசல் வாழ்க்கையை எடுத்து அதனதன் இடத்தில் வைக்கவேண்டும்.

பிலிப் பர்தோ: இன்னும் அங்கேதான் நிற்கிறானா?

பெண்: இல்லை இப்போது படுத்திருக்கிறான். மருத்துவமனை கட்டில் போல தெரிகிறது.

பிலிப்: உனது கணவன் என்று சொல்.

பெண்: இல்லை, எனக்கும் அவனுக்கும் திருமணம் நடக்கவில்லை. ஆனால் அவன் தலையில் இல்லை இல்லை, கண்களில் கட்டுபோட்டிருக்கிறது. இதை நான் எதிர்பார்க்கவில்லை- எனது உடல் நடுங்குகிறது. கையில் வைத்திருந்த பூங்கொத்து நழுவி தரையில் விழ, அருகில் நின்றிருந்த மடத்துப் பெண்மணி ஒருத்தி அதனை எடுத்து மீண்டும் எனது கைகளில் சேர்க்கிறாள்.

பிலிப்: பிறகு?

பெண்: வாய் திறந்து அன்பே மாஸ்லோ·ப்! என அழைக்கிறேன். படுத்திருந்தவன், என் குரலால் உந்தப்பட்டு எழுந்து உட்காருகிறான். மாத்தா.. அன்பே நீயா வந்திருக்கிறாய். திரும்பத் திரும்ப அவன் குரல் எனது காதில் ஒலிக்கிறது. கையிலிருந்த பூங்கொத்தை அவன் கைகளில் சேர்க்கிறேன். நன்றி என்றவனிடமிருந்து பூங்கொத்தை, மடத்துப் பெண்மணி பெற்று; மேசையிலிருந்த கண்ணாடி குடுவையில் வைக்கிறாள். இளைஞன் எனது இருகைகளையும் சட்டென்று பற்றிக்கொள்கிறான். முத்தமிடுகிறான். அவனது உடலிலினின்று வெளிப்பட்ட சைபீரியக் குளிர் உக்கிரத்துடன் எனது இதயத்தை முட்டுகிறது. அதைத் தடுக்க நினைத்தவள்போல என் மார்போடுசேர்த்து அவனை அணைத்துக்கொள்கிறேன். ஆனால் அடுத்து என்ன நடக்கிறது.. திபு திபுவென்று பூட்ஸ் அணிந்த கால்கள் என்னைச் சூழ்ந்துகொள்கின்றன.

– அதன் பிறகு பவானி மூர்ச்சையாகிப்போகிறாள். எனது கபினே(cabinet), சீரான வெப்ப நிலையில் இருந்தபோதிலும், அவள் வியர்வையில் நனைந்திருந்தாள். பாவனியை மாத்தா ஹரியாக நானும் நம்பத் தொடங்கியது அன்றுதான்.

காலை மணி பத்து. நோயாளிகளைச் சந்திக்கும் அறை. டாக்டர் பிலிப் பர்தோவும், ஹரிணியும் எதிரெதிரே உட்கார்ந்திருந்தார்கள். இருவரையும் அறிமுகப்படுத்த வேண்டிய அவசியமில்லை. ஹரிணி நோயாளியாக இங்கே வரவில்லை என்பதைச் சொல்லத் தேவையில்லை. பர்தோ, வீட்டின் மேற் தளத்தினைச் சொந்த உபயோகத்திற்கும், கீழ்ப்பகுதியை- தொண்ணூறிலிருந்து நூறு சதுரமீட்டர்கள் இருக்கலாம், பார்க்க விசாலமானதாகத்தான் இருக்கிறது, தனது மருத்துவப் பணிக்கென்றும் உபயோகித்துவந்தார். பணிக்கான அறை மூன்று பக்கம் சுவரும், ஒரு பக்கம் முழுக்க தடித்தக் கண்ணாடியாலும் மூடப்பட்டிருக்கிறது. கண்ணாடியின் ஊடாகப் – பச்சைப்பசேலென்று, மறுபக்கம் அன்றாடப் பராமரிப்பில் முன் வரிசையில் பூஞ்செடிகள், நவம்பர் மாதத்திலும் ஒன்றிரண்டு செடிகள் கொத்துகொத்தாய் பூத்து வாடாமலிருக்கின்றன, பூங்காவில் பின் வரிசையில் தழைத்த மரங்கள், புதர்போல மண்டிக்கிடக்கும் வளர்ந்த புற்கள். அவற்றை விலக்கிக்கொண்டு குன்றுகள் போல பெரிய பெரிய பாறாங்கற்கள், அவைகளில் இறைந்து கிடந்த தானியங்களை கொத்தியபடி குருவிகள், மேகங்களின் தயவில் காட்சிக்கு உட்படும் வானம், வழக்கத்திற்கு மாறாக நவம்பர் மாதத்தில் கண்களைக் கூசச் செய்வதுபோல சூரியன் வெளியை ஆக்ரமித்துக்கொண்டிருக்கிறான்.

– மத்மசல் ஹரிணி என்ன பார்க்கிற?

– மனப் பிரச்சினைண்ணு வருகிறவர்களுக்கு ஏற்ற இடம்தான். நீங்க குணப்படுத்தணுங்கிற அவசியங்களெல்லாம் இல்லை. கண்ணாடிக்கு மறுப்பக்கம் விரியும் இக்காட்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்தாலேகூட போதுமென்று நினைக்கிறேன்.

– உண்மையில் அர்த்தமற்ற நமது பல செயல்பாடுகளுக்கு, நமது மனதுக்கு நேர்ந்த விபத்துகள்- சில நேரங்களில் அவற்றுக்கான வயது பல நூற்றாண்டுகளைக் கடந்தது – காரணங்களாக இருக்கின்றன. எனவே ஆழ்மனதைத் திறந்து பார்த்தாலே போதும், பாதி நிவாரணம் தேடியதுபோல. இந்தியச் சினேகிதன் ஒருவரோட வருவதா சொன்னாயே?

– அவன் திடீர்னு பாரீஸ் புறப்பட்டு போயிட்டான். இன்னொருமுறை உங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன். கமிலி உங்களுக்குப் போன்ழூர் சொல்லச் சொன்னாள். சொல்ல மறந்துவிட்டேன். இங்கே குடும்பத்தோடதான் இருக்கீங்களா.

– இல்லை தனிகட்டை நிம்மதியாய் இருக்கேன். குடும்பம், பிள்ளைகள்னு பிடுங்கல்களில்லாமல் இருக்கிறேன். தவிர அதுமாதிரியான வாழ்க்கையில் எனக்கு ஆர்வமுமில்லை.

– அம்மாவை பத்தி உங்களுக்கு என்ன தெரியும்? நானே கேட்கட்டுமா, இல்லை உங்களுக்குத் தெரிஞ்சதை எனக்குச் சொல்றீங்களா.

– நீ கேட்கவேண்டியதைக் கேளு, உனது கேள்விக¨ளைத் தாண்டி கூடுதலா ஏதாச்சும் சொல்லவேணுமென்று தோன்றினால், பார்க்கலாம்..

– அம்மாவை முதல் முறை எங்கே சந்திச்சீங்க, உங்க கிளினிக்கிலா?

– இல்லை, அதும் தவிர அப்போது நான் ஸ்ட்ராஸ்பூர்கிலே இருந்தேன். 1989ல நடந்தது, டிசம்பர் மாதம். இரண்டாவது சனிக் கிழமை என்று நினைவு. அன்றிரவு வீட்டிற்கு வந்திருந்த எனது சகோதரியை அவளது வீட்டிற்கு அழைத்து போகவேண்டும். அவள் நகரத்திலிருந்து தள்ளி ஐம்பது கி. மீட்டர் தொலைவில் ஹக்னோவுக்கு அருகில் ஒரு கிராமத்தில் வசித்துவந்தாள். இரவு பன்னிரண்டுக்கு மேல் ஆகியிருந்தது. அடர்த்தியான பனிமழையில் வீதி தத்தளிக்கிறது. சாலையின் இருபுறமும் காடுபோல மரங்கள். அங்கே இரவு வேளைகளில் சாலையில் நின்றபடி போகிற வருகிற கார்களை மறித்து விபச்சார தொழில் செய்யும் கிழக்கு ஐரோப்பிய பெண்களைப் பார்க்கலாம். அப்படித்தான் அவளை நினைத்தேன். பனிமூட்டத்தில் சரியாகத் தெரியவில்லை. கார் நெருங்க நெருங்க, இவள் சாலையின் குறுக்கே நிற்கிறாள். அதுவும் சாரியில் நிற்கிறாள். எனக்குத் தூக்கிவாரிபோட்டது. இங்கே அதுமாதிரியான தொழிலில் சாரிகட்டிய பெண்மணியைச் சந்திச்சதில்லை, அதுவும் அப்படி ஒரு குளிரில், கம்பளி ஆடை எதுவுமின்றி.. காரை சட்டென்று பிரேக்போட்டு நிறுத்தினேன். பனிபெய்த சாலை என்பதால் வழுக்கிக்கொண்டு நல்லவேளை வேறு வாகனங்கள் இல்லை. அவளை இடித்திடாமல் சாலையில் குறுக்காக முறுக்கிக்கொண்டு எங்கள் கார் நின்றது. சாலையின் குறுக்கே நின்றாளே என்று கோபமிருந்தாலும், குளிரில் கைகளை மார்பின் குறுக்கே வைத்தபடி, நடுங்கிக்கொண்டு அவள் நிற்பதைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. நடு நிசியில், பனி மழையில் நனைந்தபடி முக்காடிட்டிருந்த பவானியின் முகம் மனதில் அழுந்தப் பதிந்திருக்கிறது. இருபது, இருப்பத்தைந்து வயது மதிக்கக்கூடும். உங்கள் இந்தியச் சினிமாக்களில் வருகிற நடிகைகள்போல இருந்தாள். முகத்தில் இளம்வயது விடைபெற முயல்வது தெரிந்தது. தலைமயிரை முடிந்திருந்தபோதிலும், அது கழுத்திற்கும் தோளிற்குமாக இருண்டுக் கிடந்தது. புடவைத் தலைப்பை தலையில் போட்டிருந்தாள். பனியில் நனைந்து, தலையில் ஒட்டாமல் அவ்வப்போது அது காற்றில் விலகுவதும், வலது கை விரல்கள் அதைச் சரி செய்வதுமாக இருக்கின்றன. தோள்களில் இலேசாக நடுக்கம். உதடுகளோடு இணங்கமறுத்த முகவாயில் உதறல். உதடுகளின் அசைவிலிருந்து, அவள் பேச முயற்சிக்கிறாள் என்பது புரிந்தது. மெல்லிய தொனி, பனியில் நனைந்த சொற்களில் விரிசல்கள். குழறிக்கொண்டு வெளிப்பட்ட ஆங்கிலத்தைப் புரிந்துகொள்ள சிரமமாக இருந்தது. என் சகோதரி ஆதரவாகத் தோளைத் தொட்டதுதான் தாமதம், தேம்பித் தேம்பி அழுகிறாள். என் சகோதரி கூடுதலாக அணிந்திருந்த ஆடைகளில் ஒரு ஸ்வெட்டரை அணியச் செய்து அழைத்துச் சென்று காருக்குள் அமரவைத்தோம். நிதானப் படுத்திக்கொள், அழாமல் என்ன நடந்தது என்று சொல், ஒரு சிகரெட் பிடியேன் என்கிறேன். மறுத்தவள், என் சகோதரியிடத்தில் இன்றிரவு உங்களோடு தங்கிக்கொள்ள முடியுமா, விடிந்ததும் புறப்பட்டுவிடுவேன், என்ற அவள் வேண்டுதலில், அவள் தப்பானவள் அல்ல என்பது புரிந்தது. அவளை அழைத்துக்கொண்டு எனது சகோதரியின் வீட்டில் விட்டுவிட்டு, எதுவென்றாலும் நாளை பேசிக்கொள்வோம், எனக் கூறிக்கொண்டு நான் புறப்பட்டுவிட்டேன்.

ஆனால் மறுநாள் காலை சொன்னதுபோல என்னால் வரமுடியவில்லை. டெலிபோனில் என் தங்கையிடம் விசாரித்தேன், நிலைமை சீராகி இருந்ததைப் புரிந்து கொண்டேன். மாலை நான் திரும்பிப்போனபோது, சகஜமாக என் தங்கையிடம் உரையாடிக்கொண்டிருந்தாள். நடந்தது இதுதான்: பவானியும், தேவாகாயமும் புதுசேரியிலிலிருந்து சமீபகாலத்தில் பிரான்சுக்கு வந்தவர்கள். ஆரம்பகாலத்தில் உறவினர்கள், நண்பர்களென ஒரு சிலர் வீட்டிலிருந்துவிட்டு, தங்களுக்கென தனியே ஒரு குடியிருப்புக் கிடைத்ததும் அதில் குடியேறியவர்களுக்கு வேலை கிடைப்பது அத்தனை சுலபமாக இல்லை. தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் இந்தியக் கணினி அறிவை இங்கே யாரும் பெரிதாகக் கொண்டாடியதில்லை. தேவசகாயத்தின் கம்ப்யூட்டர் எஞ்சினீயர் பட்டப்படிப்பை, வேலைவாய்ப்பு அலுவலகம் நிராகரித்திருக்கிறது. கொஞ்சம் அடிப்படை அறிவு கொண்டவனாகமட்டும் கணக்கில் கொண்டு அவனுக்கு தொழிற்கல்வி படிக்க அனுமதி அளித்தவர்கள், அதற்கும் குறைந்தது ஆறுமாதங்கள் காத்திருக்கவேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். ஏதாவது வேலைக்குப் போக வேண்டுமென்று நினைத்தவன்,ஆரம்பத்தில் விளம்பரத் தாள்களை விநியோகம் செய்யும் நிறுவனத்தில் சேர்ந்து, வீடு வீடாகச் சென்று அப்படியான தாள்களைத் போட்டிருக்கிறான், பிறகு இலங்கைத் தமிழரொருவர், அவர் வேலை செய்யும் ரெஸ்ட்டாரெண்ட் ஒன்றில், தட்டுகள் கழுவும் வேலையில் சேர்த்திருக்கிறார். ரெஸ்டாரெண்ட் வேலைநேரம் நமக்குத் தெரியும்தானே? ஒரு நாளைக்கு பத்துமணிநேர வேலை, ஒவ்வொரு நாளும் வேலையிலிருந்து வீட்டிற்குத் திரும்ப இரவு பன்னிரண்டு, ஒன்று ஆகிவிடும். உங்கள் அப்பா புதுச்சேரியில் கொஞ்சம் வசதியாக வாழ்ந்தவன், அவன் இப்படி கஷ்டப்படுவதைப் பார்க்க பவானிக்கு சகிக்கவில்லை போலிருக்கிறது. நமது ஆங்கில அறிவும் பிரெஞ்சு பாஸ்போர்ட்டும், லண்டன் செல்ல உதவுமே, என்றிருக்கிறாள், அதற்கு அவன் சம்மதிக்கவில்லை. இவளுக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை. குழந்தையை கிரேஷில் சேர்த்துவிட்டு, இவள் வேலை தேட ஆரம்பித்திருக்கிறாள். பாரீஸில் வேலைதேடிப்போன மாத்தாஹரிக்கு அவளது அபார அழகு உதவியதுபோல தனக்கும் தன்னுடைய அழகு உதவுமென்று பவானி நினைத்திருக்கிறாள்

– எப்படி?

– ஏன் உனக்கு மாத்தாஹரியைப் பத்தி எதுவும் தெரியாதா?

– சில நேரங்களில் நமக்குத் தெரியாத ஒன்றைத் தெரிந்துகொள்வதைவிட, தெரிந்ததைக்குறித்த கூடுதல் தகவல்கள் சுவாரசியமாக இருக்கின்றன. பாரீஸில் என்ன நடந்ததென்று ஓரளவு எனக்கும் தெரியும், எனினும் இந்தப் பிரச்சினையில் உங்கள் பார்வை எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ளாலாமில்லையா?

– 1904ல் என்று நினைக்கிறேன். தனது கணவன் ருடோல்பால் கைவிடப்பட்ட நிலையில் மாத்தாஹரியை பாரீஸ் நகரத்தின் நீண்ட அகன்ற வீதிகள், அரண்மனைகள், சாரட் வண்டிகள், கலைஞர்கள், கேளிக்கை விடுதிகள் என மகிழ்விப்பதற்கு பல காரணிகள் இருந்தபோதிலும், அதற்குப் பணம் வேண்டுமே, அதைச் சம்பாதிக்க உத்தியோகம் வேண்டுமே. எந்தத் பணிக்கும் உண்டான ஏட்டறிவோ, முன் அனுபவமோ இல்லாத நிலையில் தனது வாளிப்பான சரீரமும், பேரழகும், அதற்கு உதவுமென்று நம்பினாள். ஓவியர் கிய்யொமெ கலைக்கூடத்துக்கு ஒருநாள் செல்கிறாள், “உங்கள் ஓவியத்துக்கு நான் மாடலாக இருக்கலாமா?” என்று அவரிடம் கேட்கிறாள். கிய்யோமே தலைமுதல் பாதம் வரை மாத்தாஹரியை உற்றுப் பார்த்துவிட்டு, பரவசமடைகிறார். மனிதருக்கு, அத்தனை சந்தோஷம். கையிலிருந்த தூரிகையைக் கையிலெடுத்துக்கொண்டு, உடனே ஆடையை களையச் சொல்கிறார். மாத்தாஹரிக்கு அதிர்ச்சி. ‘அய்யய்யோ, எனது தலையை மாத்திரம் வேண்டுமானால் வரைந்துகொள்ளுங்கள். உடம்பையெல்லாம் காட்ட என்னால் முடியாது. இந்திய ராணுவத்தில் மேஜராக இருந்து இறந்த ஒருவரின் மனைவி நான், எனக்குப் பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களை ஒழுங்குடன் வளர்க்கவேண்டிய கடமைகளெல்லாம் இருக்கின்றன. நீங்கள் நினைப்பதுபோல நிர்வாணமாக உங்கள் ஓவியத்துக்காகக் கூட என்னால் மாடலாக நிற்க முடியாது” என்று சத்தம்போட்டுவிட்டு தான் தங்கியிருந்த ஓட்டலுக்குத் திரும்பியவளுக்கு, வாழ்க்கையின் யதார்த்தம் உறைத்தது. தங்கியிருந்த ஓட்டல் அறைக்கு பணம் கட்ட வேண்டும், சாப்பிட வேண்டும், வேலை தேடி அலைய, சாரட் வேண்டும். அதற்குப் பணம் வேண்டும், தனது தோற்றத்தைக் குறைத்து யாரும் மதிப்பிட்டுவிடக்கூடாது, கிடைக்கும் பணிக்கு அது தடையாகவும் இருக்கக்கூடாதென்றால், அதன் பராமரிப்பிற்கும் பணம் வேண்டும். மூளை வேறுவிதமாக யோசித்தது. இன்னொரு ஓட்டலில் அறை எடுத்துத் தங்கினாள், இம்முறை அவள் தங்கிய ஓட்டல் பாரீஸில் புகழ்பெற்ற ஒரு ஓட்டல், பதிவு செய்ய அவளுடைய பெயரைக் கேட்டபொழுது, ‘லேடி மாக் லியோட், என்று சொல்லிக்கொண்டாள். ஓட்டலுக்கு வந்திருந்த கனவான்களின் கவனம் இவள் உடலில் படிவதை உணர்ந்தபோது, சந்தோஷமாக இருந்தது. அதை எப்படித் தனக்குச் சாதகமாக்கிக்கொள்வதென்று என்று யோசித்து அவ்வாறே செயல்பட்டாள், கடந்தகால நரகத்திலிருந்து அவளால் மீள முடிந்தது.

– பவானி என்ன செஞ்சாங்க?

– உங்கம்மாவும் நிலைமை அதுதான். தனக்கிருந்த ஆங்கில அறிவும், அழகும் ஓட்டல் அல்லது சுற்றுலா துறைகளில் வேலை வாங்கித் தருமென்று நினைத்தாள். அவள் நம்பிக்கைப் பொய்க்கவில்லை. ஒரு ஓட்டலில் ரிசப்ஷனிட் வேலை கிடைத்தது. தனக்கு உடனடியாக ஒரு நல்ல வேலைகிடைக்காத பொழுது பவானிக்குக் கிடைத்த வேலைக்கு, அவள் ஆங்கில அறிவை விட அழகே முக்கிய காரணம் என்ற உண்மை தேவசகாயத்திற்குக் கசந்தது. பிரெஞ்சு சமூகம் தன்னை இழிவுபடுத்துகிறது என நினைக்க ஆரம்பித்தான். ஒரு சில நாட்கள் இரவு பத்துமணிவரை பவானி ஓட்டலில் வேலை செய்யவேண்டியிருந்தது. ஆரம்பத்தில் அமைதியாக ஏற்றுக்கொண்ட தேவசகாயம் நாளடைவில் புழுங்க ஆரம்பித்தான். அடிக்கடி அவளைத் தேடிக்கொண்டு ஓட்டலுக்கு வந்திருக்கிறான். அன்றைக்கு இவன்போனபோது, பவானி இருக்கையில் இல்லை. எங்கேயென்று கேட்டிருக்கிறான். அப்போது, பவானியும் ஓட்டல் மேனேஜருமாக அங்கிருந்த ரெஸ்ட்டாரெண்டிலிருந்து வெளிப்பட்டிருக்கிறார்கள். இவனுக்குச் சந்தேகம் வந்துவிட்டது. அங்கேயே ரகளை செய்ய ஆரம்பித்துவிட்டான். தரதரவென்று இழுத்துச் சென்று பவானியைக் காரில் ஏற்றியவன், தங்களுடைய அப்பார்ட்மெண்ட்டுக்குத் திரும்பாமல், இன்னதிசை என்றில்லாமல் காரை ஓட்டிச் சென்று கடைசியில் விபச்சார பெண்களுக்கு மத்தியில் ஒரு சாலையில் அவளை இறக்கிவிட்டுவிட்டு, போயிருக்கிறான்.

(தொடரும்)


nakrish2003@yahoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா