மாத்தா-ஹரி – அத்தியாயம் 23

This entry is part [part not set] of 34 in the series 20070816_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


– உட்காரு என்ன குடிக்கிற? என்றவள் வரவேற்பறைச் சன்னலைத் திறந்தாள்.

காத்திருந்ததுபோல, சட்டென்று நுழைந்த குளிர்காற்று சாரல்போல முகத்தில் விழுந்தது, அதன் வீச்சிலிருந்து தப்ப முயல்பவள்போல தலையை வெட்டித் திருப்புகிறாள், பின்தலை மயிர் குடைவிரித்த வேகத்திலேயே அடங்கிப் பதவிசாய் அமர்ந்துகொண்டது. மஞ்சள் ஒளிவெள்ளம் அவள் முகத்தில் பாய்ந்து, கழுத்தில்விழுந்து, கிடுகிடுவென்று மார்பு, வயிறு கால்களென்று முன்னேறி அறையெங்கும் நிரம்பித் ததும்பியது. அரவிந்தன் அவள் நிழலில் ஒண்டியிருப்பவன்போல சுவரைப் பார்த்தபடி நிற்கிறான். அவள் அமரச்சொன்னதை நினைவிற் கொண்டுவந்திருக்க வேண்டும், அனிச்சையாய் தன்னைச் சோபாவில் இருத்தினான், பணிந்து அது அவனை வாங்கிக்கொண்டது. அமர்ந்த மாத்திரத்தில் மெலிதான நறுமணமொன்று, இவனைத் தீண்டி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டதாக நினைத்தான். வரவேற்பறையும், அதன் பராமரிப்பும், அலங்காரப்பொருள்களும், இவனுக்கும் அவளுக்குமான இடைவெளியைப் பிரமாண்டப்படுத்துகிறது.

– என்ன குடிக்கிற? அவன் நினைவைக் கலைக்கநினைத்தவள்போல, இரண்டாவது முறையாகக் கேட்டாள்.

– காப்பி போடு. பெத்தி தெழெனெ(Petit dejeuner -காலை உணவு)வை முடிச்சிடலாம்.

– ஓகே. நீ சொல்றதும் ஒருவகையிலே சரிதான், எனக்கு அப்படி இப்படியென்று 30நிமிடம் தேவைப்படுது. அனுமதித்தால் எல்லாத்தையும் முடிச்சுட்டு வந்திடுவேன். கழிவறை, அல்லது குளியல் அறைக்கு போகணுமென்றால் வலப்புறமிருக்கு. கூடத்தில் காலைவைத்தால், உடனே புரி,ந்துகொள்வாய்.

– இல்லை. அதுக்கெல்லாம் வேலையில்லை. அக்காவீட்டிலேயே முடிச்சுட்டேன். தவிர ஒரு கோப்பைக் காப்பியை வயிறுமுட்டக் குடிச்சுட்டு வந்திருக்கிறேண்ணும் சொல்லணும். இருந்தாலும் என் வயித்துக்கு ஏதாச்சும் திட உணவாக் கொடுக்கணும். இல்லைண்ணா தாளாது. என்னை ரொட்டிக்கடையிலே பார்க்க நேர்ந்தது அதனாற்றான்.

– அப்ப இங்க வரவேண்டுமென்று நீ வரலை.

– உன்னைப் பார்க்கணும்னுதான் காலையில் அக்காவிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டேன். ரொட்டிவாங்க அக்கா வீட்டுக்குக் கிட்டேயே ஓஷான்( பிரான்சு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வியாபித்திருக்கும்- தனியார் பல்பொருளங்காடி) இருக்கு, ரொட்டிக்கடைகளுமிருக்கு. எதற்காக பஸ்படித்து இவ்வளவு தூரம் வரணும்?

– மன்னிக்கணும். உன்னுடைய அக்கா இங்கே இருக்கிறாங்கண்ணு சொன்னது மறந்துபோச்சு. பிறகு அதுபற்றிப் பேசலாம். அப்போ டீப்பாயில் லெ மோந்து (தினசரி) இருக்கு, இல்லையென்றால், எக்ஸ்பிரஸ் அல்லது மகஸின் லிட்டரேர் (பிரெஞ்சு பருவகால இதழ்கள்) இருக்கும் புரட்டிக் கொண்டிரு. அவற்றில் ஆர்வம் இல்லையெனில் இருக்கவே இருக்கிறது தெலே(தொலைக்காட்சி பெட்டி), பிடித்த ஷேனில்(அலைவரிசையில்) ஏதாச்சும் பார்த்துக்கொண்டிரு. இதோ வந்திடறேன்.

இவனது பதிலை எதிபார்த்திராமற் புறப்பட்டுசென்றாள்.

அவனது பார்வை, சுவர்களிற் படிந்தது. காவி வண்ணத்தில் சுவர்கள். நேரெதிரே உள்விதானத்திற்கும் தரைக்குமாய் இரண்டு பெரிய சன்னல்கள், அவற்றுக்குத் தடித்த கண்ணாடிகளிட்ட கதவுகள், பாதுகாப்பாக இலைத்தட்டிகள், அவனது பார்வையை, விருப்பமானால் வெளியிற்கொண்டுசெல்ல அனுமதிக்கிற வகையில் அவை அளவாய்ச் சுருட்டப்பட்டிருந்தன. தடித்த திரைத்துணிகளில் ஒளிந்தபடி எட்டிப்பார்ப்பது, பாலேடு ஒத்த மற்றொரு சன்னற் திரை. மறுபக்கத்தில், இரு சன்னல்களின் அகலத்திற்கு இணையாக பால்கனி. அதன் கைப்பிடி சுவரில், கொக்கிபோட்டு தொங்கவிட்டிருந்த நீள்சதுர தொட்டிகளில் பச்சைபசேலென்று செடிகள்: நீலம், மஞ்சள், சிவப்பு வண்ணத்தில் பூக்கள். சிவப்பு நிற பூக்கள் மாத்திரம் ரோஜாக்களென்று சொல்ல முடியும். நீலமும் மஞ்சளுமாக இருக்கிற பூக்கள் என்னவாக இருக்கும் என்று யோசிக்கிறான், அவைகளுக்கிடையே ஹரிணியின் முகத்தை வருவித்து காற்றில் அசையவிட்டான், அது வலமும் இடமுமாக அசைவதற்குப் பதிலாக இவன் திசைக்காய் தலையாட்டுகிறது. இவன் இதயத்தை எட்டிப் பார்த்துவிட்டு மீண்டும் நீலமாய், மஞ்சளாய் நாணுகிறது. நாம் அக்கறைகொள்ளவேண்டியது நிழலையல்ல நிஜத்தையென கண்கள் நினைத்திருக்கலாம், விலகிக்கொள்கிறது. இடப்புற சுவற்றில், காவி வண்னத்திற்குப் பொருந்துகின்ற வகையில், புகழ்பெற்ற ஓவியருடைய நவீன ஓவியத்தின் நகல், அரக்குவண்ணச் சட்டத்திலிட்டு மாட்டப்பட்டிருந்தது, பிறகு கைதொடும் தூரத்தில் கம்பளிநூலில் நெய்த ஆநிரை சகிதமாய் குழலூதும் கண்ணன். வலப்புறம் கண்ணாடியிட்ட புத்தக அலமாரிகள். வரவேற்பறையே ஒரு திறந்த புத்தகம்போல, ஹரிணியைப் பற்றிய தகவற் செறிவுடன், பக்கத்துக்குப் பக்கம் ஆர்வம் வளர்ப்பதாய், இவனை முன்னிலையில் வைத்து, எளிமையானச் சொற்களை தேர்வு செய்து( இவன் மரமண்டைக்குப் புரியவேண்டுமே) அளவளாவுகிறது. அறையெங்கும், பெரியதொரு மலை உச்சியில் நிலவும் அமைதி

அரவிந்தனுக்கு எதிலும் ஆர்வம் அதிகம், பிறகு பெண்கள் கறுப்பா சிவப்பா என்ற பிரச்சினகளில்லை, தமிழ் கலவாமல் பிரெஞ்சுபேசி, டெனிம், ஸ்லீவ்களில் வலம்வந்து இரவானால் ஆட்டம்போட விடுதிக்கு வரத் தயாராக இருக்கும் எல்லாப் பெண்களுமே அழகிகள்- ஹரிணியும் அப்படிப்பட்டளென்றே இந்த நிமிடம்வரை நினைத்துக்கொண்டிருக்கிறான். அவளைப் பார்ப்பதற்காகவென்றே இம்முறை ஸ்ட்ராஸ்பூர் வந்திருக்கிறான். புதுச்சேரியில் இவனோடு படித்த நண்பர்களில் ஒருவன் ஸ்ட்ராஸ்பூரில்தான் இருக்கிறான். பிறகு ஜெஹோவாவின் சாட்சிகள் என்ற மதப் பிரிவில் நம்பிக்கைக் கொண்ட உறவுமுறைச் சகோதரியும் வெகுகாலமாக இங்குதான் இருக்கிறாள். இந்தியாவிலிருந்து பிரான்சுக்கு வந்தபுதிதில், அவளைப் பார்க்க இந்த ஊருக்கு வந்திருக்கிறான். இரண்டாவதாக கடந்தமாதம் வந்தான். இது மூன்றாவது பயணம். முதற்பயணத்திற்கும் இரண்டாவது பயணத்திற்கும் இடைவெளி ஏறக்குறைய ஐந்து ஆண்டுகள். இரண்டாவது பயணத்திற்கும் மூன்றாவது பயணத்திற்கும் இடையில் சரியாகச் சொல்லவேண்டுமென்றால், இரண்டு வாரம் ஆறு நாட்கள். குறுகியகாலத்தில் மீண்டும் அவனை ஸ்ட்ராஸ்பூர் நகரத்திற்குக் கொண்டுவந்து சேர்த்திருப்பது புதுச்சேரியில் இவனோடு படிந்த நண்பனோ அல்லது தமக்கையோ சத்தியமாக அல்ல. எத்தனை சினிமா பார்க்கிறோம், எத்தனை கதைகள் படிக்கிறோம்? இதுகூட தெரியாமலா? கல்லுளி மங்கன், கேட்டால் அப்படியெல்லாம் இல்லை என்பான். அரவிந்தனை அறிந்தவர்களுக்கு இதில் அதிசயமேதுமில்லை. ஐந்து வயதிலேயே அடுத்தவீட்டுக் குழந்தையின் கையிலிருந்த ஐஸ்கிரீமை விழுங்கிவிட்டு, அவர்கள் வீட்டுக் கிழவியிடம் எனக்குத் தெரியாது என்றவன், பிரான்சுக்கு வந்து ஐந்து ஆண்டுகள் ஆகப்போகிறது, பிளஸ் டூ வில் பெயிலானது, மாட்டுத் தீவன வியாபாரம் செய்கிற தகப்பனுக்கு இன்றுவரை தெரியாது. ஆக அவன் வாய்திறந்து ஒருபோதும் சொல்லப் போவதில்லை. நம்மிடம் அவன் சொல்லாமலேயேகூட இருக்கட்டும், அந்தப் பெண்ணிடமாவது ஒரு நாளைக்குச் சொல்வானா மாட்டானா?

இந்திய உணவு விடுதியொன்றில், பாரீஸில், சூடாகவிவாதம் நடந்தது. அவனது நண்பன் ஒருவன்,” எனக்கென்னவோ இந்தப்பயல் நம்மையெல்லாம் முட்டாளாக்கப் பார்க்கிறான். அவனுக்கு அதிலே அப்படியொரு சந்தோஷம். இரயிலில் பார்த்தானாம், பேசினானாம், வேறொன்றுமில்லையாம். மூச்சுக்கு முன்னூறுதரம் அவப் பேரை உச்சரிப்பதெல்லாமே சும்மா ஒரு விளையாட்டுக்கு என்பதுபோலப் பேசுகிறான். எனக்கென்னவோ அவன் மனதில் ஏதோ ஒண்ணு இருக்கு, அதைச் சொல்ல ஏன் தயக்கம்ணுதான் தெரியலை” எனத் தலையிலடித்துக்கொண்டான்.

ஹரிணியின் தரப்பிலிருந்து சமிக்ஞை வந்தாலொழிய இவன் வாய் திறப்பதில்லை என்றிருக்கிறான். ஹரிணி எப்படி? இந்தியாவில் பெரிய இடத்துப்பெண்களுக்குரிய வாழ்க்கை நெறிகளுக்கும், ஐரோப்பாவில் சராசரிப் பெண்களுக்குரிய வாழ்க்கை நெறிகளுக்கும் அதிக பேதங்கள் இருப்பதில்லை- ஹரிணியும் அந்தவகை. பையன்களைப் பதினான்குவயதிலிருந்தே அறிந்திருக்கிறாள். பாதுகாப்புடன், பாதுகாப்பின்றி உறவுகொண்டிருக்கிறாள். அனைத்தும் அவளது விருப்பத்துடன், நடந்தாகவேண்டும், un point C’est tout..

– இதெல்லாம் அம்மாவுடைய புத்தகங்கள். எல்லாம் அவள் வாங்கியவைதான். ஒரு சில ஆண்டுகளில், நிறைய புத்தகங்களை வாங்கி இருக்கிறாள்- வா சாப்பிடலாம், எல்லாம் தாயாராயிருக்கு.

புத்தக அலமாரியிலிருந்த அரவிந்தனுடைய கவனத்தைக் கலைத்தாள். அவள் முன்னே செல்லட்டுமென்று காத்திருந்து பின் தொடர்ந்தான். சமயறையில் இவன் எதிர்பார்த்ததற்கு மேலாக எல்லாம் இருந்தது: ரொட்டி வெண்ணெய், ஜாம், சற்றுமுன்பு வாங்கியிருந்த உள்ளே சாக்லெட் வைத்திருந்த ரொட்டி, ஆரஞ்சுப் பழச்சாறு, கறுப்புக் காப்பி; தண்ணீர்..

– என்ன? ஏதோ விருந்தினருக்கு ஏற்பாடு பண்ணியிருப்பதுப்போலச் செஞ்சிருக்க?

– உட்கார்ந்து பேசுவோமே. – எனக்கு நீ விருந்தாளிதானே?

இருவரும் எதிரெதிர் நாற்காலியில் அமர்ந்தனர்.

– அப்படியும் சொல்லலாம். ஆனா நீ பெருசா நினைச்சு நடத்தற மாதிரிதெரியுது.

– அதெல்லாமில்லை, நீண்ணு இல்லை வேற யாராகயிருந்தாலுங்கூட அப்படித்தான் நடத்தி இருப்பேன். நான் வீட்டில் இருக்கிற நாளென்றால் நிதானமா வந்திருப்பவர்களை ஒழுங்கா கவனிக்க முடியும்.

– இன்றைக்குப் புதன்கிழமை ஆச்சே வேலைக்குப் போகலையா?

– இல்லை, நேற்றிலிருந்து தலைவலி, சுரங்கூட இருந்தது. நேற்றே அலுவலகத்தைவிட்டுப் புறப்படும்போதே, நிலைமையைச் சொல்லி விடுமுறை எடுத்துக்கிட்டேன்.

– அய்யய்யோ உனக்கு உடம்பு சரியில்லையா? நான் இதை எதிர்பார்க்கலை. நீ ஓய்வெடு. நான் வேண்டுமானா ஞாயிற்றுக்கிழமை வறேன்.

– பிரச்சினை இல்லை இரு. நீ வந்தது தப்பில்லை. ஆனா ஒரு சந்தேகம் அதெப்படி புதன்கிழமைண்ணு தெரிஞ்சு தைரியமா என்னைத் தேடிவந்திருக்க.

– சொன்னதுபோல ஞாயிற்றுகிழமை வரமுடியாததுக்கு மன்னிக்கணும். ஏப்ரல் 22ந்தேதி பிரான்சுல ஜனாதிபதி தேர்தல் என்பதுகூட எனக்கு மறந்துபோச்சு. என்னுடைய ஓட்டால வெற்றியும் தோல்வியும் தீர்மானிக்கப் படபோறதில்லை என்றாலும், நமக்கான கடமையை நிறைவேற்றணுமில்லையா? இடையிலே உனக்குப் போன்பண்ணி சொல்லி இருக்கணும், அதுதான் முறை, தவறிட்டேன். தவிர அடுத்த ஞாயிற்றுக்கிழமைவரைக்கும் உன்னுடைய ஊர்லதான் இருக்கிறேன் என்பதால பொறுமையா வந்து பார்த்துக்கலாம்னு நினைச்சேன். இன்றைக்குக்கூட ·பினாக்(Fnac- புத்தகங்கள், கணிணி, இசைதட்டு விற்கும் நிறுவனம்)வரை போய்விட்டு, அப்படியே நீ வீட்டிலிருந்தால் பார்க்கலாம் என்றுதான் நினைத்துப் புறப்பட்டேன்.

– வந்ததும் ஒருவகையில் நல்லதுதுதான். ·பினாக் மட்டும் போகணுமா? வேறு திட்டங்கள் இருக்கிறதா?

– ஏன்?

– பதினோருமணிக்கு ஐரோப்பியப் பாராளுமன்றம்வரை போகணும். இன்றைக்கு இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் அங்கே வறார், உரை நிகழ்த்தறார். இந்தியர்கள் சங்கத்திலிருந்து இரண்டு நாட்களுக்கு முன்னால் அழைப்புவந்தது. நான் போகலாம்ணு இருக்கேன்.

– நல்லது நீ போயிட்டுவா. நான் வேண்டுமானா ஞாயிற்றுக்கிழமை உன்னைவந்து பார்க்கறேன்.

– பிரச்சினை இல்லை. என்ன.. பதினோருமணிக்கெல்லாம் நாம அங்கே இருக்கணும். உனக்குத் தொந்திரவு இல்லைண்ணா என்கூட வரலாம். எனக்கும் துணைக்கு ஒருத்தர் ஆச்சுண்ணு சந்தோஷப்படுவேன்.

– தொந்திரவா? எனக்கா? கரும்புதின்னக் கூலிவேண்டுமா என்ன? கலாம் பேச்சைகேட்கிறேனோ இல்லையோ, உன்னுடைய பேச்சைக் கேட்கிறதுக்காகவாவது வரணுமில்லையா?

– பரவாயில்லையே தமிழ்ல பழமொழியெல்லாம் சொல்ற…

– ஏன்? பிரான்சுலே பிறந்த நீயே இத்தனை சுத்தமாத் தமிழ் பேசுறபோது, நாங்கலெல்லாம் பேசக்கூடாதா, ஊருல இருந்து புறப்பட்டுவந்து சரியா ஐந்து வருஷம் ஆகலை ..இப்ப மணி பத்து ஆகுது. ஐரோப்பிய பாராளுமன்றம் போக எவ்வளவு நேரமெடுக்கும்.

– காரை கராழிலிருந்து (garage-வாகனக்கொட்டில்) எடுக்கத்தான் நேரம், அதன் பிறகு பத்து நிமிடத்தில போயிடலாம். பாரீஸெல்லாம் எப்படி இருக்கு. மிஷெல் செர்ரோ(Michel Serrault) ரசிகராச்சே, என்ன படம் கடைசியா பார்த்தீங்க?.

– பார் வீத் எ ரெவியன் தார்(Pars vite et reviens tard – சீக்கிரமா புறப்படறேன், மெதுவா திரும்பிவறேன்), நான் எதிர்பார்த்த மிஷெல் செர்ரோ இல்லைன்னாலும், படம் முடிகிறவரைக்கும் நம்ம நாற்காலி விளிம்புல இருக்கிறோம், திரைக்கதையை அத்தனைக் கச்சிதமா அமைச்சிருக்காங்க. படத்தொகுப்பு நல்லா இருக்கு, தொய்வில்லாமல் போகிறது. படத்தில் அத்தனை வேகம். எனக்கென்னவோ இதிலே ழோசெ கார்சியா(Jose Garcia)யாவும் சோடை போகலை. பிரெஞ்சுல இதுமாதிரி படங்கள் புதுசு. பிரெஞ்சு போலீஸ்காரர்களை இத்தனை சுறுசுறுப்பா வேற படங்களில் பார்த்ததில்லை. உங்க அம்மாவைப் பத்த்¢ன வேற தகவல்களுண்டா?

– அம்மா விட்டுட்டுப்போன கர்னே கிடைச்சுது, அந்தப் பட்டியலில் இருக்கிறவர்களை ஒருவர் பின் ஒருவரா பார்த்துட்டு வறேன். கிடைத்த தகவல்கள் ஓரளவு பவானி அலியாஸ் மாத்தா-ஹரிங்கிறகோணத்துலேதான் இட்டுச்செல்லுது.பிறகு மாத்தா ஹரியைப் பத்தின புத்தகங்களையும் தேடிப்பிடிச்சு படிச்சுவறேன். ரொம்ப சுவாரஸ்யமாயிருக்கு. அநேக விஷயங்கள்ல அம்மாவுக்கும், மாத்தா ஹரிக்கும் ஒற்றுமை இருப்பதைப் பார்க்கிறேன்.

– உதாரணத்திற்கு ஒன்றிரண்டு?

(தொடரும்)


nakrish2003@yahoo.fr

Series Navigation