நாகரத்தினம் கிருஷ்ணா
ஹரிணி அதிகாலையில் இன்றைக்கு விழித்துக்கொள்ள இரண்டு காரணங்களிருந்தன.
இரண்டாவது காரணம்: அவளது உடல்நிலை. நேற்றிலிருந்து உடல், மனம் இரண்டும் இவளுக்கு அடங்கியதாக இல்லை. அடிவயிறுக்குக் கீழே நடக்கும் உயிரியல் வித்தைகளுக்கு இவள் மேடையாக்கப்பட்டிருக்கிறாள். அவயவங்கள் பேசிவைத்துக்கொண்டாற்போல காரியங்களை ஆற்றுகின்றன, மண்ணில் ஊடுருவும் வேர்கள் போல சங்கிலித்தொடரொத்த செயற்பாடுகள். பூமி பொருமினாலென்ன, வேதனையிற் துடித்தாலென்ன, வேர்களுக்கில்லை கவலைகள். உடலின் வருத்தங்கள் தனக்கானதென்று மூளை நினைப்பதுண்டா? எதற்காக சூலகமும், சூல்களும், தைராய்டும், பிட்யூட்டரியும் குழப்பிக்கொள்ளவேண்டும். இதென்ன ஹரிணிக்கு மாத்திரமா, ஹரிணியை பெற்றவள், அவளைப் பெற்றவள், அவளைப் பெற்றவளென்று யாரை விட்டுவைத்தது? பெண்கள் சபிக்கப்பட்டவர்களாயிற்றே. துயரம், துக்கம், வேதனை, கலக்கம், இவைகளெல்லாம் யாருக்கென்று நினைக்கிறீர்கள்? எழுத்தறிவே அற்ற பிரகஸ்ப்பதிகூட பெண்ஜென்மங்களுக்கென்று தீர்மானமாக இருக்கிறபோது, அதையும் இந்த அசடுகள் அடக்கமாகத் தலைதாழ்த்தி ‘ஆமாம்’ என்று ஏற்றுக்கொள்கிறபோது, பாழாய்ப்போன ஹார்மோன்களுக்கு என்ன வந்தது. எவள் எக்கேடு கெட்டாலென்ன? எங்கள் கடன் பணி செய்து கிடப்பது. தவறாமல் மாதாமாதம் மாதவிடாய் என்ற பேரில் வேதனைப் படுத்தவேண்டும், படுத்துகின்றன. இரத்தக் கசிவிற்கு முன்னால் மன அழுத்தம் அதிகரிப்பதுண்டு, அதிகரிக்கிறது. நாடித்துடிப்பும், உடல் வெப்பமும் சட்டென்று உயர்வதுண்டு, உயர்கின்றன, மற்ற நாட்களைக்காட்டிலும் மிக அதிகமாக வியர்வை வெளியேறி, அது நிற்கும்வரை தொடர்ந்து அவளுடலை நாறடிப்பதுண்டு, நாறடிக்கிறது. சில நேரங்களில் காய்ச்சல், வயிற்றுவலி, மலச்சிக்கலும் அதனைத் தொடர்ந்து வயிற்றுப்போக்கும் வருவதுண்டு, அதற்கான அறிகுறிகளை இன்றும் உணருகிறாள்.
முதலாவது காரணம்: இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், 25-04-2007 அன்று அதாவது இன்றைக்கு ஐரோப்பிய பாராளுமன்றத்தில் உரையாற்றுகிறார் என்பது. தமிழை ஆர்வத்தோடு கற்றிருந்தபோதும் அவள் சிந்திப்பது பிரெஞ்சு மொழியில், காந்தியைப்பற்றிப் படித்ததில்லை அறிந்ததுதான் ஆனால் தெகோலை(Degaulle)ப் படித்திருக்கிறாள். பசித்தபோது அவளது வயிற்றை நிரப்பியது சோறோ, சப்பாத்தியோ அல்ல கோதுமை ரொட்டி. முருங்கைக்காயும், வெண்டைக்காயும் அவளுக்கு அதிசயமான காய்கறிகள். கால்கைகளை உதறிக்கொள்கிற தமிழ் நடிகர்கள், வேற்றுலக ஜந்துக்கள். ஆனாலும் இந்தியா என்ற மந்திரச்சொல் பல நேரங்களில் அவளை ஆட்டுவிக்கிறது.
இருட்டில் கையைத் துவளவிட்டு, சுவற்றைத் தடவி பொத்தானை அழுத்தி மின்சார விளக்கினைப் போட்டாள். போர்வையை விலக்கிக்கொண்டு எழுந்தாள். உடலைக் கவ்விய இளங்காற்று ஏற்படுத்திய போதை ஒரு சில நொடிகளே நீடிக்கின்றன. தொடைகளுக்கிடையில் உணர்ந்த ஈரமும், இலேசான தலைச்சுற்றலும் அடுத்து அவள் செய்யவேண்டியவற்றை உணர்த்தின. கட்டிலுக்கடியில் பதுங்கிக்கிடந்த காலணிகளைத் தேடிக்கொண்டிருந்தபோது இரவு படித்துவிட்டு கட்டிலுக்கடியில் போட்டிருந்த பிரெஞ்சு புதினம் தட்டுப்பட்டது. சட்டென்று எடுத்து தூக்கி எறிந்தாள். ஏன் அப்படி செய்தாள்? அவளுக்கே அதற்கான காரணம் தெரியாதபொழுது, நமக்கென்ன பிரச்சினை? மீண்டும் தேடல்.. ஒருவழியாய்த் தேடல் முடிவுக்கு வந்தது, மிதியடிகள் கால்களில் பொருந்துவதற்குள் கழிப்பறைக்குள் இருந்தாள். சிறிதுநேரம் கழித்துவெளியில் வந்தபோது, கண்களில் தெளிவு இருந்தது.
மீண்டும் இருட்டில் நீந்தியபடி சமயலறைக்குள் வந்தாள். விளக்கை ஏற்றிவிட்டு, சன்னலில் இறக்கியிருந்த, ஓலைத்தட்டியை சுருட்டி மடித்தாள். வெளியே இருட்டைச் சுத்தமாய்த் துடைத்துக்கொண்டு பகல், ஈயத்தின் நிறத்தில் உறக்கம் கலைந்திருந்தது. சாம்பல் நிறத்தில் நீண்டுகிடந்த சாலையில், நேற்று பெய்த மழையின் எஞ்சிய அடையாளங்கள். கை கூப்பித் தவத்தில் இருப்பதுபோல ஊசியிலை மரங்கள், இங்கிருந்து பார்க்க அதன் மிலாறுகளில் பாசிகள் படிந்திருப்பதுபோல பிரமை. முகத்தை உராய்ந்தபடி படபடவென்று சிறகை அடித்துப் பறந்த கேப்பர்கேலி(capercaillie) உண்மையில் இவளை அச்சுறுத்தியது. தலையை உள்வாங்கிக்கொண்டாள். ‘என்ன பயந்துட்டிட்டியா? போன்ழூர்..’ பிரெஞ்சு தினசரி விநியோகிக்கும் பெண்மணி, இவள் செய்கையைக் கவனித்துவிட்டுப் பிரெஞ்சில் விசாரிக்கிறாள், குரல் இவளிருக்கும் தளத்திற்கு எட்டாதுபோனாலும், உதடுகள் அசைவிலிருந்து உணரமுடிந்தது. ஹரிணி இல்லையென்பதுபோல தலையாட்டினாள். அவள் சிரித்தபடி கடந்து சென்றாள். காப்பி போடவேண்டுமென்று நினவுக்கு வந்தது. எரிவாயு அடுப்பை பற்றவைத்து, பாலைக் குக்கரில் ஊற்றி, சீழ்க்கைக்காகக் காத்திருந்தாள். பால் கொதித்ததும், நெஸ்கபே போட்டு சர்க்கரை சேர்க்காமல் கலக்கி எடுத்துகொண்டு கணினி அறைக்குத் திரும்பினாள்.
கவனம் கட்டிற் பக்கம் திரும்பியது. அது சரிசெய்யப்படாமற்கிடக்க எழுந்து சென்று ஒழுங்கு படுத்திவிட்டு மீண்டும் கணிப்பொறிமுன் அமர்ந்தாள், விசையைத் தட்டினாள், திரை விழித்துக்கொண்டது. மின்னஞ்சலைத் திறந்தாள். முதற்கடிதம், சிரிலிடமிருந்து வந்திருந்தது, இந்த வார விடுமுறைக்கு என்ன திட்டம் வைத்திருக்கிறாய், என்று கேட்டிருந்தான். அவனை விட்டு விலகிப்போவதாகக் குற்றம் சாட்டியிருந்தான். ஆகஸ்டுமாதத்திற்கு, உல்லாசக் கப்பலில் மூன்றுவாரத்திற்கான பயணத் திட்டமொன்றிற்கு இவளுக்கும் சேர்த்து முன்கட்டணம் பதிவு செய்திருக்கிறானாம். நார்வே, ஆலந்து, ஸ்வீடன் ஆகிய மூன்று நாடுகளைச் சுற்றிவரும் அக்கப்பலுக்கானக் கட்டணம் இருவருக்குமாகச் சேர்த்து 1200 யூரோவென்று ஆரம்பித்து பெரியதொரு வியாசம் எழுதியிருந்தான். காப்பியை சுவைத்தபடி பாதி படித்திருப்பாள், எரிச்சலூட்டியது, மின்னஞ்சற் பெட்டியை மூடநினைத்து, கிளிக்செய்ய நினைத்தபோது, ‘ணங்’கென்று, இவள் நரம்பை மீட்டுவதுபோலச் சத்தம், புதிதாய் மின்னஞ்சலொன்று பெட்டிக்குள் விழுந்திருந்தது. மீண்டும் சிரிலாக இருக்குமோ என்கிற அச்சம். இவனிடமிருந்து எப்படித் தப்பப்போகிறேன் என நினைத்தபடி கிளிக்கினாள். இது இவள் அறியாத நபரிடமிருந்து வந்திருந்தது. பெயரைப் பார்த்தாள். ‘பிலிப் பர்தோ’ என்றிருந்தது. ஏதாவது ஸ்பாம் ரகமோ, நைஜீரிய குபேரனின் கோடிக்கணக்கான டாலருக்கு, வாரிசுதேடி அலையும் டுபாக்கூர் பேர்வழியோ என்றெல்லாம் யோசிக்க, பொறிதட்டியது. அவசரமாக எழுந்து சென்று தனது கைப்பயில் வைத்திருந்த ‘கர்னே'(1)யைப் பிரித்துப்பார்த்தாள். அம்மாவுக்குத் தெரிந்தவர்கள் வரிசையில் ‘பிலிப் பர்தோ’ நான்காவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. மறுபடியும் கணினிமுன் அமர்ந்து கடிதத்தைத் திறந்து வாசிக்கிறாள்:
அன்புள்ள ஹரிணி,
வணக்கம். முதலில் என்னை அறிமுகப்படுத்திக்கொள்ளவேண்டும், பெயர் பிலிப் பர்தோ. உளவியல் மருத்துவர். தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் நானும் ஸ்ற்றாஸ்பூரில்தான் வசித்துவந்தேன். அப்போதெல்லாம் உனது குடுப்பத்தோடு எனக்கு நல்ல நெருக்கமிருந்தது. தற்போது எனது மருத்துவ அலுவலகம் கொல்மாரில்(Colmar) இருக்கிறது. இங்குதான் எனது குடும்பமும் இருக்கிறது. நீ என்னை அவசியம் ஒரு நாள் தேடிவருவாய் என்று எனக்குத் தெரியும், உளவியல் மருத்துவனில்லையா? இதைக்கூட யூகிக்க முடியவில்லையென்றால் எப்படி? நிறைய பேசவேண்டியிருக்கிறது. நேரில் பேசலாம். எனது முகவரியும், தொலைபேசி எண்களையும் கொடுத்திருக்கிறேன்.
கூடிய சீக்கிரம் சந்திப்போம்.
பிலிப் பர்தோ
முகவரி:
Philipe Bardeau
10, rue Curie
68000 -Colmar
Tel.:03 89 22 45 34
Portable: 0690287772
கொடுத்திருந்த முகவரியை, அம்மாவுடைய கர்னேயிலேயே குறித்துவைத்துக்கொண்டாள். கையேட்டில் மூன்றாவதாகக் குறிப்பிடப்பட்டிருந்த குளோது அதிரியனை வேண்டுமானால் பிறகு சந்தித்துக்கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டாள்.
மதாம் குரோ விடமிருந்து பலமுறை தொலைபேசி வந்துவிட்டது. நேரம் கிடைத்தால் மறுமடியும் ஒரு முறை பார்த்துவரவேண்டும். அவளிடமிருந்தும் தெரிந்துகொள்ளவேண்டியவை நிறைய இருக்கின்றன. அவளைப் பார்க்கவேண்டுமென ஏதோவொன்று அவளிடத்தில் வசீகரிக்கிறபோது, மற்றொன்று வேண்டாமென்று எதிர்த் திசையில் இழுத்துப் பிடிக்கிறது. பலநேரங்களில், எதிர்த்திசையில் நியாயம் இருப்பதுபோலத்தான் அவளது வாழ்க்கைச் சம்பவங்களும் நடக்கின்றன. பிலிப் பர்தோவிற்கு, நன்றியைத் தெரிவித்துவிட்டு, கூடிய சீக்கிரம் தொடர்புக்கொள்கிறேன் என்று பதிலை எழுதி அனுப்பிவைத்தாள். வெகுநாட்களாக தனது வலைப்பூவை(Blog) எட்டிப்பார்க்காதது நினைவுக்கு வந்தது. ‘மணக்கும் மல்லிகை’ கவனிப்பற்று வாடிபோயிருக்கலாம். எப்போதாவது இரண்டொருவர் படித்துவிட்டு, ‘சூப்பர்’, ‘அருமை’ ‘தொடர்ந்து எழுதுங்க’, என சிக்கனமாகப் பாராட்டுகிறார்கள். அதற்குமேல் சொல்லிக்கொள்ளும்படி பின்னூட்டுதல் இல்லாததால் ஏற்படும் சோர்வு, அவளது வலைப்பூவையும் பாதித்திருக்கிறது. அப்துல் கலாம் பேச்சைகேட்டுவிட்டு வந்தபிறகு தவறாமல் அதுபற்றி பதிவு செய்யவேண்டும் என உறுதியெடுத்துக்கொண்டாள்.
கணிப்பொறிதிரை காலை ஏழுமணியென்று அறிவித்தது. அடுத்த பத்து நிமிடத்தில் இறங்கி அருகிலிருக்கும் ரொட்டிக்டைக்குச் சென்று இரண்டு நாட்களுக்கு எதையாவது வாங்கிவைக்கவேண்டும், சனிக்கிழமையன்று வேண்டுமானால் வழக்கம்போல பெரிய அங்காடிக்குச் சென்று தேவையானதைக் வாங்கிக்கொள்ளலாம் என நினைத்ததைச் செயல்படுத்த அவசரமாக குளியறைக்குள் நுழைந்து கதவை மூடினாள். இரண்டொரு நிமிடங்கள் குளியலறை அலமாரி திறக்கப்படுவதும் மூடப்படுவதுமான ஓசை. வெளியில்வந்தபோது, லெவிஸ் ஜீன்ஸ¤ம், பொருத்தமாக மேலே கேப்டு ஸ்லீவும் அணிந்திருந்தாள், புறப்படுவதற்கு முன்பாக நுழைவாசலில் நிறுத்தியிருந்த கண்ணாடியில் உதட்டினை மடித்து, உதட்டுச் சாயம் சமசீராக படிந்திருப்பதைப்பார்க்கத் திருப்தி. ஸ்வெட் ஸ்லீவை இரு கைகளிலும் பிடித்து இழுக்க, மார்புகளிரண்டும் தங்களிருப்பைத் தெரிவித்தன. அதை விரும்பாது, பழைய நிலைக்குக்கொண்டுவர முயன்று தோற்று ‘பச்’ சென்று சலித்துக்கொண்டு, லி·ப்டைப் பிடித்து இறங்கினாள்.
சாலையில் அமைதியாக வாகனங்கள் ஊர்ந்துகொண்டிருந்தன. சன்றுமுன்புவரை தெளிவாக இவள் கண்களைப்போல நீலம்பாரித்திருந்த வானத்தில் இப்போது அழுக்குப் பொதிகளாய் மேகங்கள், ஊமைவெயில், நகரசபையின் பராமரிப்பில் ஒன்றுபோலவிருந்த பீச்சுமரங்கள் யோகத்திலிருந்தன. வலதுபுறம் திரும்பவிருந்த பேருந்துக்குக் காத்திருந்து, சாலையைக் கடந்து, இரண்டொரு நிமிடங்கள் வட திசைக்காய் நடந்து பின்னர் கிழக்கில் திரும்ப சட்டென்று கம்பீரமாய் கைகுலுக்கும் வணிக வளாகம். காலைநேரத்திலேயே பரபரப்புடன் மக்கள் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். எப்போதும்போல, கோடைகாலத்திற்கேற்ப உடுத்திக்கொண்டு இளம்வயதுபெண்களும், பையன்களும் உற்சாக நடைபழகிக்கொண்டிருக்கிறார்கள். ஹரிணி தேடிப்போன ரொட்டிக்கடையில் வரிசையில் நிற்கவேண்டியிருந்தது. நின்றாள்.
– போன்ழூர் மத்மசல்.. அப்படியே எனக்கும் ஏதாச்சும் வாங்குங்கள்
குரல் வந்த திசையில் திரும்பிப் பார்த்தாள். அரவிந்தன். ஸ்ட்ராஸ்பூரிலிருந்து பாரீஸ¤க்கு இரயிலில் போகிறபோது, இவளோடு அவன் பயணம் செய்தவன். பின்னர் மதாம் ஷர்மிளியைச் சந்திக்கச் சென்ற அன்று ‘ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருப்பாயா? இருப்பாயென்றால் வீட்டிற்கு வருவேன்’- என எஸ்.எம்.எஸ். அனுப்பிய அதே அரவிந்தன்.
– போன்ழூர்.. எங்கே இந்தப்பக்கம்.
– உங்களைப் பார்க்கத்தான் வந்தேன்.
– ஆனா நீங்க சொன்ன ஞாயிற்றுக்கிழமை கடந்து, இன்னொரு ஞாயிற்றுக்கிழமையும் வரப்போகுது?.
– மன்னிச்சுக்குங்க, வீட்டுக்குப்போனதும் காரணம் சொல்றேன்.
– என்ன வாங்க உங்களுக்கு. நான் சாக்லேட் பிரெட் வாங்கலாம்ணு இருக்கேன்.
– எனக்கும் அதையே வாங்கிடுங்க.
(தொடரும்)
————————————————————————————————————————-
1. Carnet – கையேடு
nakrish2003@yahoo.fr
- பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 2
- ப.ஜீவானந்தம் – பி.ராமமூர்த்தி நூற்றாண்டு விழா இலக்கியப் பரிசுகள் – 2007
- வாசிப்பின் எல்லைகள்
- அக்காவின் சங்கீத சிட்சை
- செவ்வாய்க் கோளை நோக்கிச் செல்லும் ·பீனிக்ஸ் விண்கப்பல் தளவுளவி (ஆகஸ்டு 9, 2007)
- கடிதம்
- பிழைதிருத்தம் கட்டுரைத்தொடர் – 11 புனைபெயரா? – புனைப்பெயரா?
- அமரர் பண்டிதர் சு.வேலுப்பிள்ளை (சு.வே) அவர்களின் நினைவுப் பகிர்வு நிகழ்வு
- கடிதம்
- ”காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு” – (பாபு-நாற்றம் பிடித்தவன் என்று பொருளல்ல)
- கவிஞர் ரசூல் மீது பத்வா வன்முறை
- மதுரை புத்தகக் கண்காட்சியில் எனி இந்தியன் புத்தகங்கள்
- மலேசியத் தமிழ் மக்களின் வரலாற்று பதிவுகளை தொகுக்கும் பணி
- மதியழகன் சுப்பையா அவர்கள் திண்ணை.காம் குறித்து எழுதியுள்ள கட்டுரை
- பொதுவாய் சில கேள்விகள்
- உயிர்மை பதிப்பகம் இரண்டு நூல் வெளியீட்டு விழாக்கள் – ஆகஸ்ட் 11, 12
- சிங்கையில் பாரதச் சுதந்திர தின விழா!
- திலகபாமா புத்தக வெளியீட்டிற்கான அழைப்பிதழ்
- பெண்கள்
- ஆகஸ்டு – 15 (மொழிச் சித்திரம்)
- தொடர்நாவல்: அமெரிக்கா! – அத்தியாயம் இருபத்தியிரண்டு: சுதந்திரதேவிக்கொரு விண்ணப்பம்!
- கால நதிக்கரையில்……(நாவல்)-18
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 22
- (பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 11 பாகம் -3 ஆண்டனி & கிளியோபாத்ரா இறுதிக் காட்சி (கிளியோபாத்ராவின் முடிவு)
- மருத்துவர் ராமதாஸ் அவர்களின் முயற்சிகள்
- நீயும் இந்நிலைக்கு ஆளாவது நிலைமாறா உண்மை
- உணர்வுகள்
- போதி
- தேசத்திற்குத் தந்தை; மகனுக்கு? “காந்தி, என் தந்தை” எழுப்பும் கேள்வி
- கம்பளி பூச்சி
- காதல் நாற்பது – 33 செல்லப் பெயரில் அழைத்திடு !
- மௌனம்
- இலை போட்டாச்சு – 32 ரவா கேசரி
- சில வரலாற்று நூல்கள் 4 – தமிழ்நாட்டு பாளையக்காரர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்: கெ.ராஜையன்
- சென்னை வலைப்பதிவர் பட்டறை 2007
- அழகிய சிங்கரின் கவிதைகள்