“மலையகச் சிறுகதைத் தொகுப்புள்”வாழ்வு”-ஒரு தேடல்”

This entry is part [part not set] of 32 in the series 20070118_Issue

ப.வி.ஸ்ரீரங்கன்


மலையகப் பரிசுக் கதைகள்.

“மலையகச் சிறுகதைத் தொகுப்புள்”வாழ்வு”-ஒரு தேடல்”

மலையகச் சிறுகதைத் தொகுப்பை விரித்து அணிந்துரைகளைக் கண்ணுற்றுவேளை, திரு.தெளிவத்தை ஜோசெப்பின் விளக்கங்களோடு,திரு.விக்கிரமசிங்காவின் கூற்றுக்களையும் துணைக்கழைத்து-

“மலையக வாழ்வுக்குள் என்னைத் தொலைக்கிறேன்”.

முதலில் “விரக்தி” சிறுகதையை என் வசமாக்கிறேன்…சமீபகாலமாகப் புலம் பெயர்ந்து வாழும் எனக்குள் வெறுமையும்,வெறுப்பும்,விரக்தியும் நெஞ்சுள் நிறைந்து உணர்வுகளைக் கேலிக்குள்ளாக்க நான் விரக்தி சிறுகதையை என்னுள் செலுத்தினேன்.

ஒரு தடவை…

இரு தடவைகள்…

மூன்று…நான்கு…

தடவைகள் பலவாகின.எனினும் அடுத்த சிறுகதைகளுக்குள் கவனதைச் செலுத்த முடியவில்லை.விரக்திக்குள்ளேயே வாழ முற்படுவது மிக இயல்பாகிறது!

முயன்று,முயன்று தோற்றேன்!

விரக்திக்குள் மீண்டும்,மீண்டும்…

“தாயோடு அறுசுவை மட்டுமா போகும்?”

“தாய் ஒரு வார்த்தை,ஒரு வாழ்வு.பெற்றவள்,
பிறந்து வளர்ந்த மண்:தாய்!”

இவளை விட்டு…நெடுந்தூரம் வந்தாச்சு.ஓடோடி வந்து,வந்த பாதைகளின் பின்னே மூச்சிறைக்கத் தடங்களை உற்று நோக்கிறேன்,அவைகள் அழிந்து,மறைந்து விட்டன.இவ்வளவு விரைவில் இது சாத்தியமாகுமா?,கேள்வியோடு தலை குனிவு-தவிப்பு!

வந்தமர்ந்த இடத்தின் தற்காலிக நிறைவுகள்,என்னைப் பெருமளவு மாற்றித்தான் விட்டன.இப்போதும் தாய் ஒரு வாழ்வு!

“மருமகளின் அன்பளிப்புகளால் உடல் பூரித்தது.தான் சமைத்தவற்றை மூத்த மகனும்,பேரனும் உண்டதால் பெற்ற வயிறு குளு குளுத்தது.இரு (இ)லயத்தார்களும் வந்து முறைவைத்துக் கதைத்துச் சென்றதால் மனம் பெருமிதப்பட்டது.நள்ளிரவு நெருங்குமுன் முச்சந்தி மண் களவெடுத்து வந்து திட்டி சுற்றிப் போட்டதால் கலக்கமும் அறுந்தது.”

அம்மா:பெற்றவள்.

மனதில் உணர்வுகள் வெள்ளமாய்ப் பிரவாகமெடுக்கக் காட்சித் திரைகளாய் சம்பவங்கள் நேரெதிரே தோன்றுகிறது!

அம்மா கல்லைக் கொடுத்தாலும்,புல்லைக் கொடுத்தாலும் அவைகண்டு மகிழ்பவள்.

என் அம்மா,உங்கள் அம்மாக்கள்,அசூமத்தின் அம்மா,இப்படிப் பல அம்மாக்கள்.அம்மா ஒரு பொதுவுணர்வு,எல்லா அம்மாக்களும் ஒரு அம்மாவேதாம்!

அம்மாவின் சந்தோசம்,எங்கள் சந்தோசம்:தேசத்தின் சந்தோசம்!அசூமத்துக்கு ஒன்பதாண்டுகளுக்குப்பின்”அம்மா”வைப் பார்க்க முடிந்தது.இன்றெமக்குப் பல பத்தாண்டுகள் சென்றாலும் அம்மாவைப் பார்க்க முடியுமா?-அந்தப் பாக்கியம் கிடைக்குமா?-எல்லாம் “அவன்” செயல்!,இன்ஷா அல்லா!!

இக் கேள்விகளும்,என் தாயாரின் நிழலுருவமும் சதா என் விழிகள்முன்…

தொடர்ந்து தொடர்ந்து முயன்றேன்,அடுத்த சிறுகதைகளை வாசித்து விடுவோமென,எட்டித்தாவ முயன்றால் அசூமத்தும்,அவரது மோட்டார் சயிக்கிளும்,மகனும் கண்ணெதிரே வருகிறார்கள்.

உணர்ச்சி பொங்குகிறது,ஏற்றமாகிறது.ஒரு கொதி நிலையில் மனம் கொதிக்கிறது,ஒரு தவிப்பு.மீண்டும் மீண்டும் எதையோ இழந்த தவிப்பு.உள்ளத்தை இழந்து,கடந்த கால வாழ்வின் மிச்சசொச்ச உணர்வுகளைச் சுமந்து,நினைவு முச்சிறைக்க ஓடோடி வந்து தொலைக்கிறது.

பனங்கூடல்.

கங்கு மட்டைகள்,பனையடியில் கிடக்கும் மூரிகள்,சூப்பிய பனங்கொட்டைகள்,ஆடுகள்,மாடுகள்… அம்மா அடுப்படிக்குள் உட்கார்ந்து அடுப்பூதுவதுபோன்றும்,தம்பிமார்களின் கைகளைப் பிடித்தபடி நான் ஒற்றையடிப் பாதையில்…

தென்னை வளவு.

பெய்தோய்ந்த மழையால் ஈரலிப்பான நிலம்.தென்னங்கீற்றுகளிலிருந்து உருளும் மழைத் துளிகள் குண்டு,குண்டாய் உடலில் பட்டுத்தெறிக்க-நாங்கள் தென்னையுதிர்த்த பாளைகளை,ஓலைகளை,செத்தல் தேங்காய்களை பொறுக்கியெடுக்கிறோம்.அம்மாவிடம் ஒப்படைக்கிறோம்.அப்போதும் அம்மா அடுப்படியில்…

இந்த அம்மா என் அம்மா,உங்கள் அம்மா,அசூமத்தின் அம்மா.அம்மாவின் மகிழ்ச்சி முக்கியம்.அம்மா:தாய்-தேசம்?

ஈரலிப்பான உணர்வு நெஞ்சிலே மேவ நான் மீண்டும் விரக்திக்குள் வாழ்கிறேன்.இப்போது ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்த நான்-நாம் தேசம் தொலைத்தவர்களாகிறோம்.

ஆம்!

அம்மாவைத் தொலைத்தவர்கள் நாம்!

இப்போது அசூமத்தின் வலி,எங்கள் வலியாகிறது.

“தினசரி என் சேப்புகளை(சேட்டுப் பை)மேய்தே மாமிக்கென்று சில புடைவை அநாமதேயங்களை வாங்கி வைத்துக்கொண்டு,”போய்யிட்டு வாங்களேனப்பா”என்று புடுங்கி எடுத்தாள்.”

அதிகமான பெண்கள்,குடும்பப் பெண்கள் இன்றும் சுய பொருளாதாரத்தில் சார்ந்து வாழவில்லை.அவர்கள் தகப்பனினதோ,புருஷனினதோ,சகோதரனினதோ வருமானத்தில் தங்கியுள்ளனர்.இலங்கைபோன்ற நாடுகளின் சமூக வாழ்வின் உண்மை உருவத்தை நன்றாகவே அசூமத் கேலி செய்கின்றார்.எனினும்,மாமிமார்களைக் கடித்துத் தொலையும் மருமகள் பிள்ளைகள் மத்தியில் மனைவியை அன்பின் குறியீடாக்கி,திட்டுவதும் துன்புறுத்துவதும் இருதரப்புக்குமுரிய செயலாய் இருப்பதையுணர்ந்து,அவற்றைப் போக்கவும் முனைகிறார்.இங்கே அன்பைத் தவிர எந்த விண்ணாணங்களும் இருப்பதில்லை.

உழைத்துண்ணும் மனிதர்கள் கட்டுப்பட்டித்தனமான நடுத்தர வர்கக்கத்தின் தன் முனைப்புச் சார்ந்த அதீத தனி நபர் வாத மனிதர்களாக இருப்பதில்லை.அவர்களின் அன்பும்,அறிவும் “தன்னையும் தான் வாழும் சுற்றத்தையும்” பிணைத்தபடியேதாம் உலகை எதிர்கொள்ள வைக்கிறது.இதுதாம் வாழ்வு.இதன் நிசம் போலியான அசத்தல்களுக்கும் அன்பளிப்புகளுக்கும் அப்பால் “எள்ளாய் இருப்பினும் ஏழாய்ப் பிரித்துண்ணும்” உண்மை மானுடப் பண்பாய் விரியும்.அசூமத்தின் மாந்தர்கள் அன்பையே பொழியும் உண்மை மானுடர்கள்.இவர்கள் கூடியுழைத்துண்ணும் பொதுப் பண்போடு வளர்ந்தவர்கள்.பொன்னான மனிதர்களாக நம்மை நெருங்குகிறார்கள்.நாவலாசிரியர் ஜெயகாந்தன்,இயக்குனர் மகேந்திரன் போன்றோரின் கதை மாந்தர்களிடமிருக்கும் “மானுட அழகு” இந்த அசூமத்தின் மாந்தர்களிடம் மிளிர்வதைக் காணும்போது, மகத்துவம் என்பதெல்லாம் மனித வாழ்வின் அனுபவத்துக்கு அப்பால் இல்லையென்பதை உணர்வதும் அந்த அநுபவத்தை அர்ப்பணிப்போடு பெறுவதே வாழ்வின் சுகானுபவம் என்பதை இத்தகைய கதை மாந்தர்கள் மூலமாகச் சொல்லும் அசூமத் கதை சொல்லிகளுள் மிகச் சிறப்பாகத் தோற்றம் பெற்றுவிட்ட நல்ல கதாசிரியர் என்பதை விரக்தி சிறுகதையூடாக நிரூபிக்கிறார்.

இங்கு அசூமத்தின் தாயாரின் மருமகள் மாமிக்காக அன்பையும்,ஆதரவையும் பிடவை மூட்டையாய் கட்டிப் புருஷன் பிள்ளையோடு அனுப்புகிறாள்.இவள் தாய்.தாய்குத் தாய்மை பொழியும் தாலாட்டு இப்படித்தாம் இருக்கிறது நிசத்தில்.

அன்பு.

இந்த ஈரமே இதுவரை இந்த உலகத்தை இயக்கி,மாபெரும் மாற்றங்களைச் செய்தவண்ணமுள்ளது!இது தன்னையும் தன் சுகத்தையும் மறுத்து தன் விழிகளுக்குமுன் தன்னொத்த மானுடர் படும் வேதனைக்காகக் குரல் எறியும்.அது எத்தனை இழப்புகள் நேரிடினும் மனித அவலத்தைப் போக்கப் போராடும்.அந்த உணர்வே அன்பென்ற மகத்தான மனித அழகிலிருந்து தோன்றுகிறது.இது நாடு,மொழி,இனம் என்று மானுட அவலத்துக்குக் கற்பிதங்களைச் சொல்லிக்கொண்டு கண்டும் காணாததாக இருக்காது.எங்கு அநீதி கண்டாலும்,அது தாயே ஆனாலும் தட்டிக் கேட்கும்.இதுவே அன்பின் அர்த்தம்.இதுதாம் ஒரு மார்க்சையும்,லெனினையும்,செகோராவையும் மனிதர்களுக்காகச் சாகத் தூண்டியது.இதுதாம் இறுதிவரையும் ஏங்கல்சுக்கும் மார்க்சுக்கும் இடையிலான அற்புத நட்பாக இருந்தது.

தாயை நேசித்தால் தேசத்தை நேசிப்பது கடினமில்லை.தேசத்தை நேசித்தால் உலகை நேசிப்பதில் போய் முடியும்.இங்கே தாய் என்பவளே மக்களாகவும் மனிதர்களாகவும் நமக்கு உறவுறுகிறார்கள்.தாய் ஒரு குறியீடு, உலகின் அனைத்து உறவுகளுக்கும்.இந்தத் தாயேதாம் தேசத்தை எனக்கு அறிமுகமாக்கிறாள் அவளைவிடவா எனக்கு என் சுய விருப்புகள்,தேவைகள் பெருதாகும்?இல்லை,இல்லவே இல்லை!நான் முதலில் தாய்க்குப் பிள்ளை.உலகத்து உறவுகளுக்கு உறவு சொல்லும் அற்புத அழகு எனக்காக அன்னை தந்தது.

இது உயிரையும் உடலையும்கூட அன்பளிக்கும்!ஈழத்தவர்களான எமக்கிது தெளிவான வரலாறு. வாழ்வின் யதார்த்தத்தில் காணும் வரலாற்று நிகழ்வுப் போக்கில் நாமதையுணர்வது கடினமன்று.

கூட்டுக் குடும்பங்களைச் சிதைத்த பொருளாதாரவுறுகள் மானுடப் பண்பையே மாற்றிமைத்து,மனிதர்களை ஒற்றை மானுடர்களாக்கி சமூகத்திலிருந்து பிரித்தெடுத்து, உற்பத்தி ஜந்திரத்தினொரு உறுப்பாக்கிய இன்றைய காலத்தில், மனித வாழ்வை மீண்டும் மனிதத் தன்மையோடு மாற்றியமைக்க நமக்கு படைப்பிலக்கியமுமொரு ஆயுதமே.எனவேதாம் கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே என்கிறோம்.இன்றைய உலகில் மனிதர்கள் மிதமான தனிநபர் வெறிக்குள் கட்டுண்டு கிடப்பதற்கும் இதுவே(இன்றைய சமூக நிலைமை) காரணமாகிறது. தன்னையே குறியீடாக்கி உலகத்தைத் தரிசிப்பதற்குமான தன்முனைப்பு எந்தவொரு படைப்பாற்றலையும் மனிதரிடம் பொதுமையாக வளர்க்கவில்லை.அது(படைப்பாற்றல்) சோதனைக்கூடத்து முதிசமாகக் கிடப்பதற்கும் அதுள் ஓரிரு மனிதர்களே தம்மை முன்னிறுத்துவதற்கும் இந்த அமைப்பே உறுதுணையாகிறது.உலகத்தின் அனைத்து நிகழ்வுக்கும் பண்டுதொட்டுப் பெறப்பட்ட நம் முன்னோரது உழைப்போடு கூடி வரும் மனித உறவின் மகத்தான அழகுதாம் காரணமே தவிர, தனிநபர் செயற்பாடோ அல்லது சுப்பர் மூளையோ காரணமில்லை!இதுதாம் அசூமத்தின் கதைகளுடே நாம் காண முனையும் அன்பாய் கதையெங்கணும் விரிந்து கிடக்கிறது.

மனிதவுறவுகள் குலைந்து சிதறும் இன்றைய சமூகத் தளத்தில்,ஒரு அரும்பாய் அன்பைத் தக்க வைக்கிறாள் இந்த மருமகள்.

இது தேவை.

இதன் அரும்பு அகல வேர்களைப் பரப்பி விருட்சமாகணும்.

“மகனும்,பேரனும் கொழும்பிலிருந்து வந்துசேர்ந்த மோட்டாரும் தன் காம்பறா வாசலில் நிற்பதையிட்டு மகிழாத தொழிலாளத் தாய் யாராவதுண்டா?”

அசூமத்துக்கு இந்தக் கவலை வேண்டாம்.

அம்மாவானவள் எப்போதுமே தன் தொப்புள் கொடியுடன் தொடர்புடையவள்.தொப்புள் கொடியை அறுத்துக் குழந்தையைப் பிரித்தெடத்தாலும்,இவள் உள்மனம் தொப்புள் கொடியாய் விரிந்துகொண்டே இருக்கும்.

இவளுக்குக் குழந்தையை மட்டுமல்ல குழந்தையின் பொருட்களையும்,அதன் சிறப்புகளையும் காக்கத் தெரியும்.அதையொட்டி மகிழ்வுறத் தெரியும்.இதுதாம் தாய்மை?

சாதரணச் சயிக்கிள் வண்டியைக் கண்டே மகிழ்வுறும் தொழிலாளத் தாயானவள் மோட்டார் வண்டியைக் கண்டு மகிழ்வதுமட்டுமல்ல அதைச் சாக்கினாலோ பாயினாலோ மூடிப் பாதுகாத்து,இது பிள்ளையின் வண்டியென ஓங்கிக் குரலெடுத்து உரக்கக் கத்திப் பூரிப்பாள்.ஏனெனில் துன்பத்தில் துவளும்; தொழிலாளித்தாய் தன்னுடன் துன்பம் முடிவுற்று தன் குஞ்சரங்கள் இன்புற்று வாழ வேண்டுமென்ற பெரு விருப்போடு கனவு கண்டு, உழைப்பவள்.அவள் இதை உணர்வு பூர்வமாக விரும்புகிறவள்.இவளே ஒரு கட்டத்தில் எதிர்காலச் சந்ததிக்காக தன் கருவையே அதா;மத்துக்கெதிராய் ஆயுதமாக்குபவள்.இவள் ஓடும் வரலாற்று வெள்ளத்தில் உயிரூற்றாய் பெருகுபவள்.இப்போது இவள் தாய்:தேசம்!

எண்பதுகளுக்குமுன் இச்சிறுகதைத் தொகுப்பை வாசிக்க நேர்திருந்தால் நிச்சியம் இந்த் யாழ்ப்பாணத்துத் தமிழனால் இத் தொகுப்புக்குள் தன் வாழ்வைக் கண்டிருக்க முடியாது.தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லாததுபோல் தூரத்தில் நின்று-வாசித்திருப்பான்.

இப்போது வாழ்வும்-சாவும் சுமப்பவனாய்,உலகெங்கணும் தெருவோரச் சருகாய் அலையும் இவனால்-இவளால் இக் கதைகளைத் தன்னுள்ளே நிகழும் வாழ்வாய்க் காணமுடியும்.அதற்கெதிராய்ப் போராடத் தெரியும்.உயிரைப் பணயம் வைக்கத் தெரியும்.

இதுவொரு ஆச்சரியப்படத் தக்க விந்தையே!யாழ்ப்பாண மண்ணின்(சமூகத்தின்)கட்டுக்கோப்பில் இப்படி உருப்பெறுவது ஒரு மகத்தான மாற்றமே.

நூற்றி ஐம்பதாண்டுகளுக்கு மேலாக உழைத்து,உருக்குலைந்த மலையக மக்களின் சோகச் சுவட்டை-இன்றைய புலம் பெயர்ந்த தமிழர்களால் புரிந்துகொள்ள முடிகிறது!இது நமது வாழ்வென்று ஓங்கிக் குரலெடுத்து அழுகிறோம்.தாயைத் தொலைத்த வாழ்வு-தேசத்தை இழந்து தூர நின்றுறவுகளோடு தோள் சேரத் துடிக்கும் இந்த வாழ்வில்- நம்மை ஜந்திரம் தின்று துப்பும் இன்னொரு பொழுதில்- அனைத்தையும் தொலைத்து அழியும் நமது வாழ்வே மலைய மக்களின் வாழ்வாயும் விரிகிறது.இங்கே பொருள் வயப்பட்ட சம நிலைதாண்டிச் சோகம் தரும் வலி,உறவுகளைத் தொலைத்துச் சுற்றத்தையிழந்து தவிக்கும் வலியையே நாம் குறிப்பிடுகிறோம்.

துடிக்கின்றோம்.தொண்டைக்குள்ளிருந்து ஏதோவொரு பொருள் கேருகிறது,விழிகள் அப்பப்ப பனித்துக் கொள்கிறது-அல் அசூமத்தின் விரக்த்திக்குள் வாழும்போது.

“சத்தியக் கடதாசிக்காரர்களை நொந்துகொள்வது புத்தியில்லை.அவர்களுடைய வாழ்க்கைப் பாதையைவிட இந்த மண் பாதை அவர்களுக்கு மேலானதாக இருக்கலாம்.”

மனித வாழ்வின் சோகச் சுவட்டை இத்தனை நாளும் இலக்கியங்கள் தூரத்தில் நின்று துரத்திப்பிடிக்க முனையும் படைப்புகளை நாம் இதுவரை அநுபவித்திருக்கிறோம்.இதிகாசம்,புராணம் இத்தகைய இடர்களை நமக்குத் தந்தவை.ஆனால,; இன்றைய இத்தகைய சிற்றிலக்கியங்கள் நமது வாழ்வின் வலி சொல்லி,நமது வாழ்வை அதன் குருதியோடும் சதையோடும் சொல்லும் பண்பைக் கொண்டிருக்கிறது.துன்பத்தை அனுபவித்து அதைச் சொல்வது அனைத்தையும்விட மேலானது.இன்றைய படைப்பாளிகளை இத்தகைய வாழ்வின் நெருக்கடியேதாம் உற்பத்தியாக்கி நமக்கு தருகிறது.இந்தப் படைப்பாளிகளின் உற்பத்தியானது சமூகத்தில் நிலவும் கொடுமைகளுக்கெதிரான நியாயத்தின் ஜனனமாகவும்,நியாயத்தை நிறுவுவதற்கான போர்க் குரலாகவும் எடுக்கப்பட வேண்டும்.பெயருக்கு இலக்கியம் படைக்கும் சூழல் போய்,வாழ்வின் அனைத்து அடக்கு முறைகளையும் மீறும் எதிர்ப்புக் குரல்களே இவை.இவைகளுக்கு எந்த இடமோ,எந்த மொழியோ கிடையாது.இவை எங்கெங்கு அநீதியுண்டோ அங்கே பிறப்பெடுக்கின்றன.எங்கே மனிதத் துயர் நிலவுகிறதோ அங்கே இவை எதிர்ப்புக் குரலாக நமது வாழ்வோடு இரத்தமும் சதையுமாக ஒட்டி வருகின்றன.

இங்கே அல் அசூமத்தோ விரக்தி சிறுகதையூடாக மலையக மக்களின் அவதியுறும் வாழ்வு நெருக்கடிக்குள் தன்னை முழுமையாகப் புதைத்து,அந்தத் துயரை அநுபவித்து-அதன் தாக்கத்தால் அமிழ்ந்துபோனபோது,குரல்வளைவரையும் நெருக்கடிகளின் வீரியம் வலுக்கரத்தைக் கொணர்ந்தவேளை, அதை எதிர்ப்பதற்காகவும், தன்னை-தான் சார்ந்த மனிதரை-உழைப்பாள வர்க்கத்தை விடுவிப்பதற்கான ஒரு சிறு பொறியாய் மேலெழுப்புகிறார்.அப்பொறியை ஊதிப் பெருக்கி பெரும்ஜுவாலையாக்கிவிட்டு அதற்குள் தன்னைமட்டுமல்ல எல்லோரையும்-சமுதாயத்தில் மனித விரோதிகளாக வாழும் சந்தர்ப்பத்தைத் தூண்டும் அனைத்து ஆதிக்கவாதிகளையும் சேர்த்துக் கட்டியிழுத்துவந்து திணித்துப் பொசுக்கிறார்.இது ஒருவகையில் சமுதாய ஆவேசமாக எழுந்து மனித விடுதலைக்கானவொரு பக்குவப் பண்பைப் பெறும் முன் முயற்சியாக மனம் கொள்ளத் தக்கது.

ஒருவகையில் இதுவொரு வேள்வி!இவ்வேள்வியில் எரிந்து,கருகிச் சாம்பலாகி இறுதியில் எஞ்சும் கரித்துண்டமாய் உணர்வு கேலி செய்கிறது.

“ஆக,யாதும் ஊரே யாவரும் கேளிர்…இடுகாடு சொல்கிறது,புல் முளைக்கும் வரை ஆறடிதாம் என்று.ஆனால் தோட்டக்காட்டுச் செக்றோல் சொல்கிறது,ஒரு மில்லி மீட்டர்கூட இல்லை-போடா!,என்று.”

அல் அசூமத்தின் இந்தக் கேலியானது மிக நியாயமானது.இன்றைய நமது வாழ்வின் நிலையில் இத்தகைய கேலிகளை சமுதாயத்தின் ஆதிக்கச் சக்திகளை இனம் காட்டத்தக்கவொரு எளிய வடிவமாக நாம் காணலாம்.இத்தகைய எளிமையான நையாண்டிகளால் மனித துயரத்தின் தொடக்கப் புள்ளி எங்கே வேரிடுகிறது,அது எங்ஙனம் கிளை பரப்புகிறதென்பதையும் நாம் சொல்வதற்கான ஒரு முறமையாக இவற்றைப் படைப்புகளுக்குள் சொல்வது எந்த வகையிலும் மனித வாழ்வின் நேர்த்தியை நோக்கியே.இதைக் கையாளுவதில் அசூமத் சிறந்திருக்கிறார்.

சொந்தமாய் உறவுறும் மண்ணை எவரும்,எவருக்காவும்-எந்த ஆதிகச் சக்திக்காவும்,அதன் வலுவான அடக்குமுறை வன்கொடும் ஜந்திரத்தின் யுத்தத்துக்காவும் விட்டுவிட முடியாது.தான் பிறந்து வளர்ந்த மண்ணை தாய்க்கு நிகரா மதிப்பதும்,உறவு கொள்வதும் மனித வாசிகளின் நியாயமான ஜீவாதாரவுரிமையே!பிறந்த முற்றத்தை எவரும் விட்டுக் கொடுக்க முடியாது,சட்டங்கள்போட்டுப் பறிக்கலாம்,திட்டங்கள் போட்டுத் துரத்தலாம்.ஆனால் உளப்பூர்வமான உரிமையை- அந்தவுரிமையால் எழும் பிணைப்பைப் பாசத்தை யாராலும் பறிக்கவோ -அழிக்கவோ முடியாது!

“கடுங்கந்தை!எட்டு வருஷங்களாக என்னை வளர்த்த பூமி…!உள்ளே ஓர் ஓலை தோன்றி மறைந்தது.”

அல் அசூமத்தின் இந்த வார்த்தையும்,உணர்வும் “என்னை”உறுதி செய்கிறது.யாழ்ப்பாணம்… எனது பிறந்த மண்.இதைவிட்டு வெகு தூரம் வந்தபின்பே இதன்மீதான எனது.எமது வாழ்வனுபவமும் அது தந்த வாழ்வுறுதியும்-வனப்பும் அன்னையின் மடிபோன்று இதமாக இருக்கிறது.அந்த் தீவு மண் இன்று தின்னக் கொடுத்து வைக்காது மக்களால் பாவப்பட்ட பூமியாகச் சபிக்கப்படுகிறது!வஞ்சிக்கப்பட்ட மண்ணாய்போன நமது மண்ணில் மழைகூட இறங்குதில்லை.என் தாயின் உடலெங்கும் உயிர் கொல்லி ஜந்துக்கள் சுதந்திரமாக ஊருகிறது.தடி கொண்டு அடித்துவிரட்ட முடியாத தற்குறியாக்கப்பட்ட எனது நிலையை நான் யாரிடம் நோக?இப்போதே அகதிய வாழ்வின் ஐரோப்பியச் சுகமும் என்னை விழுங்கியிருப்பினும்,இந்தத் தேசத்தின் ஜந்திரமென்னைத் தினம் தேசம் நோக்கி உந்தித் தள்ளியபடியே என்-எமது வாழ்வைத் தின்று ஏப்பமிடுகிறது!

நாளை ஒருவேளை அவள் ஜீவகாருண்யம் மெருக்கேறி புதிய காற்றைச் சுவாசிக்கலாம்.

இந்தச் சூழலில்தாம் விரக்தி மிகச் சாதரணமாக நம்முள் ஒரு காத்திரமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.அந்தத் தாக்கம் தரும் அதிர்வு மிகச் சாதரணமன்று.அந்த அதிர்வின் அதியுச்சமான விசை ஒரு சுனாமியாக மனத்தில் அலைகளை எழுப்பினாலும்,இன்றைய நமது போராட்டச் சூழல் நமக்கேன் வம்பை என்று குடும்பத்துக்குள் முடக்கி விடுகிறது.ஆத்திரமுடைய அவசரக்காரருக்கு ஆத்தைகூடத் துரோகியாகிப்போன சூழலில் எல்லாம் நடக்கும்.

விரக்தி சிறுகதையல்ல.அது நமது வாழ்வு.அதை வாசிக்க,வாசிக்க ஒரு பெரும் பொறி நெஞ்சில் மோதிக் கிளம்புகிறது.நான் கேட்க விரும்பாத வார்த்தை நாடற்றவர்கள் என்பதே!

“நாடற்றவர்கள்?”

இவ் வார்த்தை எல்லாத் தார்மீகக் கோட்பாடுகளையும்(முதலாளிகளின்)கேள்விக்குள்ளாக்கி”குருட்டார்த்தம்”பேசும் அரச சட்டங்கள்,தேசம்-தேசிய இனம்-மனிதர்களுக்கெல்லாம் சாட்டைகொண்டு முதுகினில் சொடுக்கிறது.இதுதாம் அசூமத்தின் கடைசி ஆயுதமாக இருக்கிறது.

இங்கே அல் அசூமத் உயர்ந்து நிற்கிறார்.

வார்த்தைக்கு வார்த்தை உணர்ச்சிகளை தத்துவமாய்ச் சொருகி வைத்து-விரக்தியை-வாழ்வாக்கி நமது விழிகள் முன்”நீ வாழும் வாழ்வு இதுதாம்”எனப் பறையடிச்சுச் சொல்கிறார்.இதுதாம் அவரது படைப்பின் மிகப் பெரும் அழகியல் வலு.

விரக்தியின் கரு ஒரு சிறு பயணக் குறிப்பே,அதை எவ்வளவு சிறப்பாக-வாழ்வாய் மலர்விக்கிறார்!இது உண்மை வாழ்வு.இதன் இயல்பான சோக வடுவாய்-வரலாறாய் விரியும் இலங்கை அரசின் கொடூரம்-உழைப்பவரையொடுக்கும் வக்கிரம் மலையகத் தமிழரின் வாழும் உரிமையை எங்ஙனம் பாதிக்கின்றதென்பதை சிறு பொறியாய்ச் சொல்லி பெரும் தீயாய் நமது உணர்வைத் தனது படைப்பால் வளர்த்துச் செல்கிறார்,அல் அசூமத்.

“இங்கேதாம் உதைக்கிறது.பழைய மாணவர்களாகப் பெருமைப்பட்ட எங்களுக்கு விதியில்லை.காலாகாலத்தில் போய்ச் சேர்ந்துவிட்ட கந்தசாமியாரின் இலட்சியத்தையும்,எங்களின் உரிமையையும் குழிதோண்டிப் புதைத்துவிட்டார்கள் மண்ணாசைக்காரர்கள்.”-விரக்தி.

ஆம்!

அல் அசூமத் வரலாற்றை நன்றாகவே புரிந்துள்ளார்.

“…மண்ணாசைக்காரர்கள்.”

ரொம்பவும் நிதானமானதொரு வார்த்தைக்கூடாக ஒரு பெரும் வரலாற்றுத் துரோகத்தை வெளிச்சமிட்டுக் காட்டுகிறார்.பல இலட்சக்கணக்கான மலையகத் தமிழ்பேசும் மக்களின் வோட்டுரிமைக்கு வேட்டுவைத்து “கப்பலில்” ஏற்றியவர்களும்-ஏற்றுபவர்களும் இந்த மண்ணாசைக்காரர்கள்தாம்.

இவ்வகை மண்ணாசைக்காரர்கள் பல தளங்களில் அகலத் தங்கள் வேர்களைப் பரப்பியுள்ளார்கள்.பலர் சூட்சுமமாக நமக்குள்ளேயும்,வெளியேயும் இருக்கிறார்கள்.
இவர்கள் என்றுமே நமக்கு ஆபத்தானர்வர்கள்.மனிதவுரிமையைக் குழிதோண்டிப் புதைக்கும் சதிகாரக்கூட்டம்.

இப்போது கோவிந்தராஜனிடம் போகிறேன்.

“கப்பல் எப்பங்க…?”

நன்றாகவே கேட்கிறார்?

வீரையாவை மலையக விடுதலையின் விதையாய் மண்ணாசைக்காரர்களால் அபகரிக்கப்பட்ட தங்கள் சொந்த மண்ணில் ஊன்றுகிறர்ர்.

அது முளைவிடுகிறது.

மண்ணாசைக்காரர்கள் சுடு நீரை அதன்மேல் வாரிக் கொட்டுகிறார்கள்.

முளை வாடுகிறது!

பட்டுப்போகவில்லை.மீண்டும் துளிர்க்கிறது.மண்ணாசைக்காரர்கள் முன் தன் கிளைகளைப் பரப்புகிறது.

“எதுக்குக் கத்தியைத் தீட்டினோம் என்பது உங்களுக்குத் தெரியும்.இனி எதற்காகத் தீட்டுவோம் என்பதும் உங்கள்போன்ற தலைவர்மாருக்குத் தெரிந்தால் சரி.”

காலவோட்டத்தில் இவ் “விதை”துளிர்த்துக் கிளைபரப்பி, மரமாய் விழுதெறிதலை மண்ணாசைக்காரர்களால் சகிக்கமுடியவில்லை.

சதி செய்கிறர்ர்கள்.

தங்கள்”பலங்கொண்ட”மூளைகளைக் கசக்கித் துளிர்த்துக் கிளைபரப்பிய மரத்தைச் சாய்க்க வழி வகுக்கிறர்ர்கள்-வழிகண்டாச்சு!

இனியென்ன?

கோடாரியுடன் வருகிறார்கள்.

கே.கோவிந்தராஜிடம் இப்போது வாழ்வின் மெய்ப்பாடு உண்மைகளை ஊடறுத்துச் சொல்கிறது.

சிதறிப்போயுள்ளோம்.சின்னாபின்னப்பட்டுத் தனிமைப்பட்டுள்ளோம்.

பி.வடிவேல் சொல்வதுபோல.”தொடர்ச்சியில்லாது ஆங்காங்கே தொட்டம் தொட்டமாகப் பரந்து கிடக்கும் தோட்டங்கள்,தொடர்பில்லாது அறுபட்டுக்கிடக்கும் உறவுகள்.தீர்வேயின்றி நீக்கமற நிறைந்து கிடக்கும் பிரச்சனைகள்,ஓயாத உழைப்பு,இவற்றின் கூட்டுக் கலப்புத்தாம் நாங்கள்.”(ஈழப் போரின் பலம் உடைபடுவது இங்ஙனம்தாம்.வடக்கை,கிழக்கைப் பிரித்து,மக்களை அகதியாக்கி,வெளி நாடுகளுக்கு இடம் பெயர வைத்து,மாவட்டங்களிலிருந்து துரத்தியடிக்கப்பட்டு,பொருளாதாரத் தடையால் மக்கள் உணர்வுகளைச் சிதறடித்து…யுத்தத்தால் கொன்று குவித்து-வான்வழித் தாக்குதல்களால் தமிழரை அச்சப்படுத்தி,போராட்டத்தையும்,சுய நிர்ணயவுரிமையையும் நீர்த்துப் போக வைத்து…)

கோவிந்தராஜனும் நிசவுலகுக்கு வருகிறார்.

முடிவு?

“கப்பல் எப்பங்க…?(இதைத்தாம் நமது விடுதலைப் போராட்டத்திலும் போராட்டச் சக்திகள்-அரசுகள் செய்து-“சமஷ்டி எப்ப கிடைக்கும்…?”)

அப்பவும் எங்களுக்கொரு நப்பாசை.

“சாடின் அடைப்பின் நெரிசலில் விழி பிதுங்கி நின்றாலும்,மிதிபலகையில் கால் வைத்தவரை இறங்கித் திரும்பிப்போ என்று, மறுக்காமல் உள்ளே அடைபட்டிருப்போரை திட்டி,ஏசி இடம் எடுத்து வந்தவரையும் உள்வாங்கி அணைத்துக் கொள்ளும் மினி பஸ்சின் தாராள மனசு,நம்மனைவருக்கும் இருந்துவிட்டால் உலகில் எத்தனையோ பிரச்சனைகளுக்கே இடம் இல்லாமல் போய்விடுமே!”

இதை யாரு சொல்கிறார்கள்?

நம்மைப்போல் போரின் கொடுமையால் அகதியாகி ஒண்ட வந்து,வேண்டா விருந்தாளியாக மேற்குலகில் வதைபடுவதற்காக, இடம் பெயர்ந்த மக்களில்லை!கடந்த நூற்றி ஐம்பதாண்டுகளுக்கு முன்பாக இலங்கை வந்து,அந்தத் தேசத்தின் முதுகெலம்பான தேயிலை வருமானத்துக்குத் தமது குருதியை கொட்டிப் பசளையிட்ட மனிதர்கள் சொல்கிறார்கள்.காலாகாலமாகத் தமது உழைப்பால் இலங்கைச் செழிப்பாக்கும் மலையகத்தின் மைந்தர்கள் சொல்கிறார்கள்.பாழாய்ப்போன சிங்கள தேசம் எவரைத்தாம் வாழவிட்டது?தன் இனத்தையே கருவறுக்கும் சிங்கள-அந்நிய ஆளும் வர்க்கமா தமிழ் மக்களுக்கு நீதி வழங்கும்?இத்தகைய உழைத்து ஓடாய்ப்போன மக்களுக்கே தண்ணிகாட்டும் சிங்களச் சியோனிஸ்டுக்களா இலங்கையின் உழைப்பாள வர்க்கத்துக்குக் கருணைகாட்டும்?

அது காட்டவே காட்டாது.

மண்ணாசைக்காரர்கள் விடுவதாகவில்லை.

சட்டம் ஒழுங்கு,கோடு கச்சேரி என்று பயங்காட்டுகிறார்கள்.வடிவேலு நியாயம் கேட்கிறார்.

“தலைக்கொரு கூரை முக்கியமுங்க!”

அதெல்லாம் உங்களுக்கில்லை.சட்டம்,ஒழுங்கின் பதில் இப்படி…

மலையகத் தமிழர்களின் வாழ்வோடு பின்னப்பட்டுள்ள இச் சிற்றுலக்கியத் தொகுப்பு இங்கேதாம் சிறந்தும் இருக்கு.இயல்பாய் வாழ்வைக் கண்முன் கொணர்ந்து,தான் வாழும் வாழ்வையும் அதன் அடித்தளத்திலிருக்கும் வேதனைகளையும் இத் தொகுப்புச் சிறப்பாக எடுத்தியம்புகிறது.இதில் அல் அசூமத்துகஇகுப் பிறகுதான் மற்றைய படைப்பாளில் சிறந்திருக்கிறார்களென்றில்லை!

ஒவ்வொருவரும் தத்தம் ஆளுமையுடன் இக்கதைகளுக்குள் தம் வாழ்வைத் தொலைக்கிறார்கள்,தேடுகிறார்கள்,வாழ்கிறார்கள்.

“இனி எங்கே…?”

சிவலிங்கம் தேடியலைகிறார்.

“எந்தப் பண்ணையர்களுக்கும்,ஜெமிந்தார்களுக்கும் கூலி விவசாயிகளாக பண்ணையடிமைகளாக உழியம் செய்ய முடியாமல் பயந்து ஓடீவந்தார்களோ…அதே பண்ணையடிமைகளாக மீண்டும் தள்ளப்பட்டுவிட்டார்கள்.”

ஆண்டாண்டு உழைத்து வளமாக்கிய மண்ணைவிட்டுத் துரத்தியடிக்கும்”மண்ணாசைகாரர்கள்”தம் கொடூரத்தைச் சிறப்பாகச் சொல்லும் சிவலிங்கம்,பென்சர் கிழவர் பெருமாள் ஊடாக, மண்ணின் மைந்தர்களின் உரிமைத் தாகத்தை நாம் அனுபவிக்க வைக்கிறார்.

“காணி நிலம்,வீடு என்று சொந்தமே இல்லாமல் தோட்டமெனும் அறைக்குள்ளே வியாபாரஸ்தானங்களுக்கும்,நிலச் சொந்தக்காரர்களுக்கும் கூலிகளாகவே வாழ்வதற்கு நிற்பந்திக்கப்பட்டிருக்கும் அந்த மக்கள் வாழ்வுபெறும் காலத்தைத் தேடிக்கொண்டே இருக்கிறார்கள்.”(இனி எங்கே…?-சிவலிங்கம்)

ஆம்! இன்று உலகத்தின் எந்த மூலையில் தமிழர்கள் இருந்தாலும்-அவர்கள் உழைக்கும் மக்களாக இருக்கும் பட்சத்தில்-இவர்களின் நிலை இ•தே!மேற்குலகுக்குப் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் நிலையும்,மலையக மக்களின் வாழ்வு நிலையும் அடிப்படைப் பிரச்சனையில் சம அளவு ஒன்றுபட்டாலும்,மலையகத் தமிழ் மக்களின் வாழ்க்கைத் தரம் புலம் பெயர் தமிழரின் வாழ்கைத் தரத்தோடு ஒப்பீட்டு ரீதியில் மிகவும் பின்தங்கியது என்பதை நாம் உணர்கிறோம்.

உலகத்தில் எங்குமில்லாத கொடுமை மலையகத்தில் தலைவிரித்தாட,இந்த மண்ணாசைக்காரர்கள் காரணமாக இருக்கிறார்கள்.

“உழைப்பவனுக்கே இந்தவுலகம் சொந்தமெனும்போது,உழைத்துண்ணும் இந்த மக்களின் உண்மை வரலாறு இலங்கையில் பொய்ப்பித்துப் போகுமா?”என்று சிவலிங்கம் கேட்பதன் நியாயம் புரிகிறது!

ஜானகியைத் தேடும் மல்லிகை சி.குமாரை நெருங்குகிறேன்.

மரபுகளுக்கும்,சம்பிரதாயங்களுக்கும் இரையாகிப் போகும் பெண்களின் சுவட்டில் ஜானகியை உருட்டிப் புரட்டாமல்,”தாத்தா நான் கணவனையிழந்ததால வெதவக் கோலத்தில நிக்கேல்ல,நேசித்தவனை அடைய முடியாமப் போயிரிச்சேன்னுதான் நெனைச்சி வெதவையா நிக்கிறேன்…”

ஜானகியை உணர முடிகிறது!

எனினும்,இந்த மரபுகளுக்குள்ளும்,இந்து மதக் கருத்தியல்களுக்குள்ளும் கட்டுண்டு வாழ்ந்தனுபவப்பட்ட என் மிச்சசொச்ச கற்பிதங்களுக்குச் சற்றுக் கூச்சம் ஏற்படுகிறது.

தாலி கட்டியவனைவிடவா? என்று என்”வளர்ப்பு”ச் சமூக ஒழுங்கு கேள்வி கேட்டாலும்-தனிநபர் உரிமை,சுதந்திரம் என்ற மகத்தான மனிதநேயச் சிந்தனை என் சுயத்தை வெருட்டி,கற்பிதக் கருத்தின் உணர்வு நிலையின் உச்சியில் ஓங்கி உதைக்க,ஜானகியை-அவள் உணர்வுகளை என் சுயத்தைக் கடந்து, அவள் நிலைக்குள் என்னை அழைத்துச் செல்கிறது.அவளைப் புரிந்து கொள்ள முனைகிறேன்.அவளாக மாறுவதற்கு முனையும் ஒவ்வொரு தடவையும் துக்கம் தொண்டையை அடைக்கிறது.நானே ஜானகியாகத் தொலைத்த காதலுக்காகக் கண்ணீர் மல்கிக் காலத்தைக் கடைந்தேற்றுவதும் ஒரு கடுமையான தியானம்தாம்!
இந்தக் கண்ணீருக்குள் குவிந்திருக்கும் எதிர்ப்புக் குரல் கலகத்தின் உச்சிக்குச் செல்கிறது.நமது மரபுகளுக்காகவும்,சமூக ஒழுங்குகளுக்காகவும் மனிதவுணர்வுகளைப் பலியிட முடியுமா?

இல்லை!

இன்றைய சின்னதிரை நாடகங்கள் கற்பிதப்படுத்தும் பெண்மைக்கு அப்பால் உலகம் விரிகிறது.ஆனால், சினிமாவும்,சின்னத்திரை நாடகங்களும் பதினெட்டாம் நூற்றாண்டுக்கான பெண்மையைப்படைக்க முனையும் இன்றைய சூழலில், இந்த ஜானாகி பாரதிகண்ட புதுமைப் பெண்ணைவிட நம் தேசத்து நங்கைகளின் அக்கினிக் கரங்களோடு உறவாடத்தக்க பண்புகளோடு நம்மோடு உறவாடுகிறாள்.இவள்தாம் இந்த நூற்றாண்டின் பெண் மொழியாக நிமிர்ந்து, எம் ஈனத்தனத்துக்கு எதிரான குற்றப்பத்திரிகையோடு நம்மை எதிர் கொள்கிறாள்.இதுவே சமூக மாற்றத்தின் அவசியத்துக்கான எதிர்வைக் கூறுகிறது.

வார்த்தைகளுக்கு-சடங்குகளுக்குச் சம்பிரதாயங்களுக்குக் கொடுக்கும் முக்கியமானது ஒவ்வொரு பொழுதும் மானுட வளர்ச்சிக்குக் குறுக்கே நின்று கல்லெறிவதுதாம்.இங்கே மகத்தான மாற்றங்களைக் கோரி நிற்கும் இந்தப் புரட்சிகரமான மனிதவுணர்வு எந்தப் பொழுதிலும் அடக்கியொடுக்கப்பட்டே வருகிறது.அது பெண்களைப் பூசையறைச் சாமியாக்கி ஆண் மனத் தேவைகளைப் பூர்த்திப்படுத்தும் வெகுளித்தனமான ஆணியச் சமுதாயத்தின் அரிப்புக்கு உடந்தையாகவே பண்டு தொட்டுத் தொடர்கிறது.இதை நாம் பெண்களின் மீது சுமத்தப்பட்ட”அச்சம்,நாணம்,மடம்,பயிர்ப்பு”என்று ரீல்விட்டுக் காரியவாதிகளாகப் பெண்மையைச் சுரண்டிக்கொண்டிருக்கிறோம்.

இதை மிக நேர்த்தியாகப் படம் பிடித்தமாதிரி மல்லிகை சி.குமார் அழகான காதல் ஓவியத்தை நம் முன் வரைந்து காட்டுகிறர்ர்.

இங்கே சக்திவேல் நம்முன் மிக உயர்ந்து நிற்கிறார்!தான் நேசித்தவளுக்கே-அவள் விதவையாக இருந்தும்-தாலிக்கொடி,பொட்டிடும் அவர்,சிறப்பாய் உருப்பெறும் சமூகமாற்றத்திற்கான வெகுஜனக் கருத்தியல்-பண்பாட்டு முகிழ்ப்பின் அரும்பில் ஒருவர்.”தாலியும்,பொட்டும்” விதவைக்குக் கிடையாதென்றுரைக்கும் இந்த ஆணாதிகச் சமூக அமைப்பில் இவை பெண்ணையொடுக்கும் வடிவங்களாகவே இருக்கிறது.மனதைச் சித்திரைவதை செய்யும் பண்பாட்டு ஒடுக்குமுறையானது பாரிய உளவியல் யுத்தமாகத் தொடர்கிறது.எனினும், இத்தகைய ஒடுக்குமுறை ஆயுதத்தையே கையில் எடுத்து, விதவைக் கோலத்துக்கு விடைகொடுப்பதற்காக அதையே ஒரு குறியீடாக்கி அதை அணிவிக்கிறார்.எனினும் பழையபடி அந்த ஆயுதம் அவளைக் கட்டிப்போடும் கண்ணியாக மாறும் அபாயத்தையும் மல்லிகை சி.குமார் புரிந்திருப்பாரென்றே நம்புவோம்.

சந்தனம் கண்களைக் குளமாக்கி விடுகிறாள்.-அவள் சாகமாட்டாள்!

உழைப்பால் உயர்வுறாத அவள்,இறுதிவரையும் சுகமாய்,நிம்மதியாய்த் தூங்க முடியவில்லை.அவள் நோய்,இந்தச் சமூகத்தின் நோய்!

மனிதவுரிமைகள் எதுவுமேயில்லாது உழைப்பவர்களைக் கிள்ளுக்கீரையாய் வைத்திருக்கும் இலங்கை அரசின் நோய்-அதிகார வர்க்கத்தின் உள நோய் இது.

இது இலகுவில் தீராத நோய்!

இந்த நோய் சந்தனத்தை மட்டுமல்ல இச் சமூகத்தையே பிடித்தாட்டுகிறது.

இங்கு சதாசிவம் சந்தனத்தை மனசாட்சியுடையோரின் முன் நிறுத்தியுள்ளார்.

இங்கேதாம் அசூமத்தின் அம்மா,என் அம்மா,உங்கள் அம்மாக்கள் எல்லோரும் மரணப்படுக்கையில்…

“பொறுத்தது போதும்…!”

இனியுமா? முடியாது!

அம்மாவாய்,நோயாளியாய்,வேலைக்காரியாய்,விதவையாய்,காமுகர்களால் குதறப்படும் பதுமையாய் எங்கள் அம்மாக்கள்…

இனியும் பொறுக்க முடியாது!

இராஜதுரை கோபக்கத்தியுடன் புறப்படுகிறார்.அதில் அவர் வெற்றியும் பெறுகிறார்.

“இது வெறும் முணுமுணுப்பா?இல்லவேயில்லை!ஒரு சமூகம் முழுவதும் தனக்குள் எரிமலைபோல் அடக்கி வைத்துள்ள அவல வாழ்வின் ஒரு சிறு துளியே!இது பீறிட்டு வெளிக் கிளம்பாதவரை பாதுகாப்புத்தாம்!”(பொறுத்து போதும்…!-பெ.இராஜதுரை)

எச்சரிக்கை!

இது எல்லோரதும் எச்சரிக்கை.

இனியும் ஒரு சமூகம் தன் அறியாமைக்கும்-அடங்கிப் போகும் மனோபாவத்திற்கும் பலியாகுமென்று காரியமாற்றுபவர்கள் கொஞ்சம் நில்லுங்கள்.நிதானியுங்கள்!!-ஒரு ஈழமல்ல,மலையகமும் அதன் தொடர்ச்சியேதாம்.தமிழ் பேசுவோர் இனியும் பொறுக்கத் தயாரில்லை.குட்டக்குட்டக் குனிந்த காலம் மலையேறிவிட்டது.இது இன்னொரு தொடக்கத்தின் முன்னுரை.

மூட நம்பிக்கைக்கும், அறியாமை இருளுக்கும் ஒரு இராமாயி இல்லை,பல இராமாயிக்கள் பலியாகிவிட்டார்கள்தாம்.

இனியும் அது நடக்கப்படாது.

“விடியல் எப்போது?”

ஈழம் பதில் கூறுவதுபோல் மலையகமும் கூறியே தீரும்!அப்போது கேள்விகள் நீறாய் நீர்த்துப்போகும்.

அதுவரையும்,சமூகத்தின் மொத்த இருள்சூழ்ந்த நிலைமைகளுக்காக சுகந்தி,பரமேஸ்வரன்,மெய்யன் நடராஜன்,பாலச்சந்திரன்,நளாயினி சுப்பையா,பா.ரஞ்சினி,த.மயில் வாகனம்,செல்வி.இ.இம்மானுவேல் போன்ற சகல எழுத்தாளர்களும் சிலுவை சுமக்கட்டும்.சுமக்கிறார்கள்.இவர்களில் நளாயினி சுப்பையா,செல்வி.இ.இம்மானுவேல்,த.மயில்வாகனம்,மெய்யன் நடராஜன் போன்றோர்கள் ரொம்ப நிதானமாகவே சிலுவை சுமக்கிறார்கள்!

இவர்களின் நிதானம் போன்றே மற்றவர்களும் தம்மைத் தோற்றுவிக்க வேண்டும்.-இது காலப்போக்கில் நிகழவே செய்யும்!

ஏனெனில், இவர்கள் கதைகளுள் ஜீவனாய் வாழ்கிறார்கள்.தங்கள் வாழ்வை அதற்குள் தொலைக்கிறார்கள்,தேடுகிறார்கள்.இப்படித் தம் வாழ்வை கதைகளுக்குள் காணும் இவர்கள்,மிக நிதானமாகத் தோற்றம் பெறுவார்கள்.

இவர்களோடு நாமும் சிலுவை சுமக்க முனைகிறோம்?

ஈழத்திற்காக,
மலையகத்திற்காக!

புலம் பெயர் வாழ்வும் இதையே எமக்கு உணர்த்தியுள்ளது.

“மலையகப் பரிசுக் கதைகள்”தொகுப்பு இறுதியாகச் சிலவற்றைச் சொல்ல வைக்கிறது:

“இது-இருள் சூழ்ந்த மலையக மக்களின் வாழ்வின் அவலங்களை ஆயிரம் வோல்டேஜ் மின்னொளியில் வெளிச்சமிட்டுக் காட்டாது போனாலும்,ஒரு மெழுகுவர்த்தியாய் தன்னையுருக்கி வெளிச்சமிட்டுக் காட்டிக் கொண்டேயிருக்கும்”.

இந்த என் நம்பிக்கை வீண்போகாது.

ப.வி.ஸ்ரீரங்கன்.

(1996 இல் இக் கட்டுரை தினகரன் மற்றும் ஈழமுரசில் பிரசுரமானது.இப்போது போராட்டச் சூழ்நிலைக்கொப்ப சில இடைச் செருகலோடு மீள் பதிவாகிறது.)

Series Navigation

ப.வி.ஸ்ரீரங்கன்

ப.வி.ஸ்ரீரங்கன்