மலேசிய தமிழ் பள்ளிக்கூடங்களின் மோசமான நிலைமை

This entry is part [part not set] of 29 in the series 20020203_Issue

மருத நாயகம்


(மலேசியகினி பத்திரிக்கையிலிருந்து)

எம்ஐசி(MIC – மலேசிய இந்திய காங்கிரஸ்)யிலுள்ளவர்கள், முக்கியமாக டாக்டர் டெனிஸன் ஜெயசூரியா அவர்கள், எம்ஐசி(MIC)யின் முயற்சிகள் காரணமாக தமிழ்ப்பள்ளிக்கூடங்களின் நிலைமை முன்னேறி வருகிறது என்று கூறி வருகிறார்கள். சென்ற வருட யூபிஎஸ்ஆர் தேர்வின் முடிவுகளில் இருக்கும் முன்னேற்றமான நிலைமையைச் சுட்டிக்காட்டி இவர்கள் கூறிவருகிறார்கள். ஆனால் இவர்கள் காட்ட மறந்தது என்னவென்றால், தொடர்ந்து தமிழ்ப்பள்ளிக்கூடங்கள் யூபிஎஸ்ஆர் தேர்வுகளில் தேசிய பள்ளிக்கூடங்களைவிடவும், சீன பள்ளிக்கூடங்களைவிடவும் மோசமாகவே தேர்வு முடிவுகளைக்கொண்டிருக்கின்றன என்பது. சென்ற வருடம் சுமார் 33 சதவீத தமிழ் மாணவர்களே குறைந்த பட்சம் தேவையான சி கிரேடைவிடவும் அதிகமாக மதிப்பெண்கள் வாங்கினார்கள். ஆனால் சீன பள்ளிக்கூடங்களில் இது 47 சதவீதம். தேசீய பள்ளிக்கூடங்களில் இது 52 சதவீதம்.

ஆனால், D கிரேடுகளையும் E கிரேடுகளையும், 7 சதவீத தமிழ் மாணவர்கள் பெற்றார்கள். இது சீன பள்ளிக்கூடங்களில் 3 சதவீதம். தேசிய பள்ளிக்கூடங்களில் இது 6 சதவீதம்.

பஹாஷா மலேசியாவில் தமிழ் மாணவர்களின் தேர்வு இன்னும் மோசம். சுமார் 55 சதவீத மாணவர்களே சி கிரேடு அல்லது அதற்கு மேல் பெற்றார்கள். இது சீன பள்ளிகளில் 65 சதவீதமாகவும், தேசிய பள்ளிகளில் 88 சதவீதமாகவுமிருக்கிறது.

இது உஜியன் பெனுலிஸானில் இன்னும் மோசம். சுமார் 40 சதவீதத்தினரே சி கிரேடு அல்லது அதற்கு மேல் பெற்றார்கள். சீன பள்ளிகளில் இது 57 சதவீதமாகவும், தேசிய பள்ளிகளில் இது 84 சதவீதமாகவும் இருக்கிறது.

செகண்டரி பள்ளிகளில் தமிழ் மாணவர்கள் மோசமான நிலைமையை அடைவதற்கு பஹாசா மலேசியா முக்கியமாக காரணம்.

2001 வருட முடிவுகளைப் பார்க்கும் போது, சுமார் 60 சதவீத தமிழ் மாணவர்கள் அடிப்படை பஹாசா மலேசியா எழுதும் திறமை கூட இல்லாமல் பள்ளியை விட்டுச் செல்கிறார்கள். இவர்கள் எப்படி செகண்டரி பள்ளிகளில் சமாளிக்க முடியும். அல்லது எம்ஐசி பல்கலைக்கழகத்துக்குச் செல்லமுடியும் ?

தமிழ்ப் பள்ளிக்கூடங்களின் தோல்வியின் உண்மையை எம்ஐசி எதிர் கொண்டே ஆக வேண்டும். இது தன்னைத்தானே தோளில் தட்டிக்கொள்ளும் வண்ணம், தமிழ் பள்ளிக்கூட மாண்வர்களில் 1 சதவீதத்தினர் எல்லா பாடங்களிலும் ஏ கிரேடு பெற்றார்கள் என்று பெருமை பாராட்டிக்கொண்டு காலம் கடத்த முடியாது.

மீதமிருக்கும் 99 சதவீதத்தினரைப் பற்றியே எம்ஐசி கவலைப்பட வேண்டும். பெரும்பாலான தமிழ் மாணவர்கள் அடிப்படை வசதி கூட இல்லாத குடும்பங்களிலிருந்து வருபவர்கள் என்பதும், அவர்கள் ஆரம்பத்திலேயே வறுமையின் தடைக்கல்லாலும், சமூக ஒதுக்குதலாலும் துவண்டு பள்ளிக்கூடங்களுக்கு வருகிறார்கள் என்பதும் எம்ஐசி நினைவில் நிறுத்த வேண்டும்.

இருந்தாலும், இவர்கள் எந்த வகையிலும் புத்தியற்றவர்களோ, படிக்க முடியாதவர்களோ அல்லர். இவர்களுக்குத் தேவையானது நல்ல பள்ளிக்கூட சுற்றுச்சூழலும், படிப்பதற்கு தேவையான புதிய கருவிகளும் உபகரணங்களும் முறைகளும் தான். இந்த சமூக ஒதுக்குதல்களை எல்லாம் தாண்டி இவர்கள் நன்றாகப் படிக்க ஊக்கப்படுத்த வேண்டும். தமிழ் பள்ளிக்கூடங்களுக்கு எம்ஐசி செய்யும் உதவி என்பது மிகவும் குறைவு என்பதுதான் சோகமான உண்மை. மலேசியாவின் தேசிய கல்விக்கொள்கையில் இருக்கும் தவறான பங்கீடுகளும், பள்ளிக்கூட ஆதரவும், தமிழ்ப்பள்ளிக்கூடங்களை பாரபட்சமாக நடத்தும் கொள்கைகளையும் மாற்ற எம்ஐசியால் முடியவில்லை என்பதுதான் உண்மை.

அதே நேரத்தில், எம்ஐசியால் தமிழ் பள்ளிக்கூடங்களில் இருக்கும் ஆசிரியர்களையும், தலைமை ஆசிரியர்களையும் முன்னேற்றவும், அவர்களுக்கு வைராக்கியத்தைக் கொடுக்கவும், மாணவர்களை உயர்ந்த நிலைமைக்கு கொண்டுவரவும் முடியவில்லை என்பதும் உண்மை. இத்தனைக்கும் பெரும்பாலான ஆசிரியர்களும், தலைமை ஆசிரியர்களும் எம்ஐசியின் உறுப்பினர்களும் அரசியல்வாதிகளுமாக இருப்பவர்கள். இதே போல, தமிழ்ச்சமூகம் தனது பல பொருளாதார, வீட்டு, சமூக நிலைமைகளை மாற்றவும் எம்ஐசியை எதிர்பார்ப்பதும் இயலாதது.

மலேசியாவின் தமிழ் கல்வி அமைப்பில் எம்ஐசியின் பங்கு அரசியல் அதிகாரத்துக்கும், இனவெறி அரசியலை தொடர்ந்து நடத்தவும், இந்தக்கட்சி தொடர்ந்து மலேசிய இந்தியர்களின் சமூகத்துக்கு முக்கியமானதாக இருக்கவும் உருவான அவலமான அமைப்பு.

ஆகவே இந்த கட்சிக்கு தமிழ் கல்வியை புணருத்தாரணம் செய்வதற்கு தேவையான அரசியல் வலுவோ, வைராக்கியமோ, ஊழலற்ற தலைமையோ கிடையாது. (எத்தனை எம்ஐசி அரசியல் தலைவர்கள் தங்கள் குழந்தைகளை தமிழ் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்புகிறார்கள் என்று கண்டுபிடித்தால் சுவாரஸ்யமான விஷயம் கிடைக்கும்)

ஆகவே ஜெயசூரியா அவர்கள் ‘எம்ஐசியோடு இணைந்து வேலைசெய்ய ‘ மக்களை அழைப்பதுபோலித்தனமாக இருக்கிறது.

ஓவ்வொரு பள்ளியிலும் பெற்றோர்களும், அந்த சிறிய சமூகத்தின் சமூக சேவையாளர்களும், தலைவர்களும், ஆசிரியர்களும் மாணவர்களும் தலைமை ஆசிரியர்களும் இணைந்து போராடுவதன் மூலம்தான் மலேசிய தமிழ் கல்வி அமைப்பு முன்னேறும்.

குழந்தைகளைப் பராமரித்தல், அவர்களதுகல்வி, கல்வி தரும் நிறுவனங்கள் புதியனவாக்குதல், புதிய கருவிகளை உபயோகப்படுத்துதல், சமூக சூழ்நிலைகளையும், பள்ளி சூழ்நிலைகளையும் மாணவர்கள் கல்வி கற்க சாதகமாக்குதல், பஹாசா மலேசியா மொழியை தீவிரமாக கற்றுத்தருதல், தொழில்முறை நேர்மையை அதிகரித்தல் போன்றவை மூலமே இந்த கல்வி அமைப்பு முன்னேறும்.

எம்ஐசி தமிழ் கல்வியை முன்னேற்றுவதில் உண்மையாக இருக்குமெனில், அது அதற்கு தேவையான முதலீட்டையும் பணத்தையும் தந்து, தமிழ் கல்வியில் இருந்து அரசியலை வெளியேற்றவேண்டும்.

வருடாவருடம் மோசமான மதிப்பெண்களைப் பெற்றுக்கொண்டு வாழ்நாள் முழுவதும் கடைநிலை வேலைகளைச் செய்துகொண்டிருக்கும் தமிழ் மாணவர்களுக்கு எம் ஐ சி ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்க வேண்டுமா வேண்டாமா என்பது இரண்டாம்பட்சம்.

Series Navigation

மருத நாயகம்

மருத நாயகம்