மறக்கப்பட்ட பெண்முகமும், இரும்புச் சிலுவையும்: இரு நூல்கள்

This entry is part [part not set] of 59 in the series 20041223_Issue

எஸ்.அரவிந்தன் நீலகண்டன்


The Da Vinci Code

ஆசிரியர்: டான் ப்ரவுன்

‘கங்கா ஸ்நானம் ஆச்சா ‘ என்கிற ஆனந்தவிகடனின் அம்பியாத்து அசட்டு நகைச்சுவை துணுக்கு வசனம் போல அண்மையில் யாரைப் பார்த்தாலும் ‘டாவின்ஸி கோட் படிச்சாச்சா ‘ என்பதால் நானும் உய்வுற டாவின்ஸி கோட் படித்தேன். நாவல் குறித்தெல்லாம் எனக்கு பெரிதாக தெரியாது. என்றாலும் டாக்கடை சாயா பற்றி பொதுவான அபிப்பராயம் கூற ‘டா டேஸ்டராக ‘ இருக்க வேண்டியதில்லை என்பதால் நாவல் படு சுமார் ரகம் எனக் கூறலாம். ஆனால் முதல் தடவை வாசிக்கையில் ஒரு பிரம்மாண்ட ஆய்வின் பிம்பத்தை மனதில் ஏற்படுத்துவதில் டான் ப்ரவுன் வெற்றி பெற்றுள்ளார். நேரடியாக டாவின்ஸி கோடின் வரலாற்று மையத்திற்கு சென்றுவிடலாம். போன கிறிஸ்துமஸுக்கு மேரி மக்தலேனின் ஞான சுவிசேஷத்தை மண்ணாந்தையாக திண்ணையில் மொழி பெயர்த்திருந்தேன். எலைன் பேகல்ஸின் ‘Gnostic Gospels ‘ நூலை சரியாக ஐந்து வருடங்களுக்கு முன்பாக நாகர்கோவில் ஓவன்ஸ் நூலகத்தின் மாடியில் சந்தித்த நாள் முதல் அவை குறித்து நானும் பல தகவல்களை திரட்டியவாறே உள்ளேன். இந்த சிறப்பான புனித நூல்கள் ஏன் கிறிஸ்தவத்தின் மைய நீரோட்டமாகவில்லை என்பதைக் குறித்த கேள்விக்கு பேகல்ஸ் ‘ஏக-இறை நம்பிக்கையின் அரசியல் ‘ குறித்து Gnostic Gospels நூலில் எழுதியவற்றிலிருந்து ஓரளவு பதில் திரட்டலாம். ஹோலி கிரெய்ல் – ஏசுவின் உதிரத்தை ஏந்திய கிண்ணத்தின் குறியீட்டுத்தன்மை டான் ப்ரவுனால் நன்றாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மேரி மகதலேனுக்கும் புனிதக்கிண்ணத்திற்குமான தொடர்பை ஜோஸப் காம்பெல் கூட உதாசீனப்படுத்தியுள்ளமை நாம் சிந்திக்க வேண்டிய ஒன்று உதாரணமாக அவரது Occidental Mythology இல் மகதலேன் மிக எளிமையாக ஓரிரு இடங்களில் கூறப்படுகிறார். புனிதக்கிண்ணத் தேடல் சிறிதே முக்கியத்துவம் பெறுகிறது. டான் ப்ரவுனின் கிறிஸ்தவமற்ற இயற்கையுடன் இணைந்த தேவி வழிபாடு (Pagan Goddess Worship) கிம்புடாஸினை நினைவுபடுத்துவது. பின்னர் மேரி மகதலேனை ‘the Goddess ‘ ஆக மாற்றும் இடத்தில் அவர் ஒரு கிறிஸ்தவத்தன்மையுடன் செயல்படுகிறார். டெம்ப்ளார் படுகொலைகள், ரோஸி க்ரூஸியன்கள், டாவின்ஸியின் ஓவியங்கள், மத்தியகால தேவாலய அமைப்பில் தேவி வழிப்பாட்டுக் கூறுகள் என மிகைப்படுத்தப்பட்ட Pop-archeo-theological fantasies வரலாற்றின் பன்முகப்பாங்கான பரிணாமத்தை சிதைத்து விடுகின்றன. எனினும் டான் ப்ரவுனால் கடன்வாங்கப்பட்டு கோர்வையாக்கப்பட்டிருக்கும் தகவல்களில் 10 சதவிகித உண்மையிருப்பினும் அதன் வரலாற்று முக்கியத்துவம் அபரிமிதமானது. குறிப்பாக டாவின்ஸியின் ‘இயேசுவின் இறுதி இரவு உணவு ‘ ஓவியத்தில் மகதலேன் சித்திகரிக்கப்பட்டதாக கூறப்படுவது ஆராயப்பட வேண்டிய விஷயம். பாகன்களின் பெண்தெய்வ வழிபாட்டின் ஏகபோக பெண் தெய்வமாக (The Goddess ஆக) மகதலேன் எப்படி ஐரோப்பாவில் ஏற்கப்பட்டாள் என்பது கேள்விக்குரியது. இதில் வெளிப்படுவது டான் ப்ரவுனின் கிறிஸ்தவத்துவம். ஞான விவிலியங்களில் (Gnostic Gospel) பாரதிய ஞானமரபுகளின் அழுத்தம் இந்நாவலில் புறக்கணிக்கப்பட்டுள்ள மற்றோர் அம்சமாகும். ஏசு இந்தியா வந்ததாகக் கூறப்படும் புரட்டுக் கற்பனையை தள்ளிவிட்டுப் பார்த்தால், அலெக்ஸாண்டரியா வழியாக பாரத ஞானமரபுகளின் தாக்கம் யூத ஞானிகளிடம் ஏற்பட்டிருக்கலாம். பேகல்ஸ் தொடக்ககால நிறுவன கிறிஸ்தவ திருச்சபை அதிகார பீடங்கள் ஞானத் திருமறைகளை பிராம்மண பொய்மறைகளின் தாக்கத்தால் விளைந்தவை எனக் கூறியதை மேற்கோள் காட்டியுள்ளார். பொதுவாக ஞான மரபுகள் அகமுக பார்வை கொண்டவை. அவை மகதலேனையும் இயேசுவையும் கூட அகப்பயணக் குறியீடுகளாக மாற்றும் தன்மைத்தவை. ஆனால் நிறுவன கிறிஸ்தவமோ வரலாற்று கதையாடலைச் சார்ந்து விளங்குவது. இவ்விரண்டு முரண்களின் இணைப்பு கற்பனையில் மட்டுமே முயற்சிக்க முடிந்த ஒன்று. எனவேதான் ஏசுவின் வரலாற்று வழித்தோன்றலை டான் ப்ரவுன் உருவாக்க வேண்டியுள்ளது. ஒரு வரலாற்று மர்மத்தின் அடிப்படையில் ஒரு இரகசிய குழு இயக்கமாக பெண்தெய்வ வழிபாட்டாளரை சித்திகரிக்க வேண்டியுள்ளது. இறுதியில் டாவின்ஸி கூட ஒரு கிறிஸ்தவ வரலாற்றின் ஒளித்து வைக்கப்பட்ட பரிமாணத்தின் வழிபாட்டாளராக உள்ளார். மகதலேன் எனும் ‘ஒரே தேவி ‘ பிம்பம் பெண் தெய்வ வழிபாட்டின் அனைத்து செழுமையையும் காட்டமுடியுமா ? அம்மன் கோவில் கொடைவிழாவிற்காக போடப்பட்ட வீரமணியின் பாடல் காற்றில் வருகிறது. தொட்டியங்குளம் மாரியம்மனையும், முப்பந்தல் இசக்கியம்மனையும் வேளாங்கண்ணி அம்மனையும் ஒரே சக்தியின் சொரூபமாக காணும் பாடல். மாரியும் இசக்கியும் வரலாற்றின் கால வெளியில் சிறைபடாத மண்ணளக்கும் தாய் தெய்வ உருவாக்கங்கள் – பிரபஞ்ச சக்தியுடன் வேறுபட்ட தளங்களில் உறவாட உதவும் சாதனை கருவிகள். மகதலேனும் இப்பெரும் தேவியர் உருவிற்கு மானுட பிரக்ஞயில் பரிணாம வளர்ச்சி அடைய ஒரு ஹிந்து பார்வையில் அவள் தரிசிக்கப்பட வேண்டும். டான் ப்ரவுனில் நாவலில் அவள் பிரபலமடைந்தாலும் கிறிஸ்தவ சிலுவையிலேயே இயேசுவைப் போல அவளும் இன்னமும் அறையுண்டிருக்கிறாள். அவளுக்குத் தேவை – இயேசுவுக்குப் போலவே – ஒரு வேதாந்த உயிர்த்தெழுதல்.

A Moral Reckoning

ஆசிரியர்:டேனியல் ஜோனா கோல்ட்ஹேகன்

இரண்டாம் உலகப்போரில் ஏன் யூதர்கள் கொல்லப்பட்டார்கள் ? அண்மையில் போப் இரண்டாம் ஜான் பால் ‘நாங்கள் நினைவுபடுத்துகிறோம் ‘ எனும் ஒரு ஆவணத்தை வெளியிட்டார்.கிறிஸ்தவர்கள் யூதர்களுக்கு எதிரான கொடுகைகளில் ஈடுபட்டமைக்கு வருத்தம் தெரிவிக்கும் விதமாக வெளியிடப்பட்ட அந்த ஆவணம் மறக்கமுடியாத அந்த வரலாற்று கொடுமைகளுக்கு வருத்தம் தெரிவித்திருந்தது. அக்கொடுமைகளுக்கு அது கொடுத்த காரணங்களே முக்கியமானவை. கிறிஸ்தவத்திற்கு எதிரான சில சித்தாந்தங்களால் (பரிணாம வாதம் போன்றவற்றால்) கண்மூடப்பட்டும் ஒரு நியோ-பாகன் இயக்கத்தால் தவறாக வழிநடத்தப்பட்டும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தனிமனிதர்களாகக் கொடுமைகளை புரிந்தார்கள் என்பதுதான் போப் கூறிய காரணங்களின் சாரம். ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பார்கள். போப் அடித்ததோ ஒரு கல்லில் மூன்று மாங்காய்கள். நியோ-பாகன்கள், பரிணாம அறிவியல் மற்றும் கத்தோலிக்கத்துக்கு பாவ விடுதலை. ஆனால் உண்மை என்ன ? டேனியல் கோல்ட்ஹேகன் மிகச் சரியாகக் குறிவைத்து கத்தோலிக்கத்துக்கும் (பொதுவாகவே கிறிஸ்தவத்துக்கும், இஸ்லாமுக்கும்) யூத வெறுப்பியலுக்கும் இருக்கும் காலம் காலமாகத் தொடரும் கருத்தியல் இரத்தத்தொடர்பிைனைத் தெளிவுபடுத்துகிறார். அயலானிடம் அன்பினைப் போதிப்பதாக கூறி விற்கப்படும் கிறிஸ்தவத்தின் கொடுமை நிறைந்த முகத்தை இந்நூலின் பக்கங்களில் நீங்கள் அதிர்ச்சியூட்டும் விதமாக தரிசிக்கலாம். போப்பாண்டவர்களின் யூத வெறுப்பு ஹிட்லருக்கு எவ்விதத்திலும் குறைந்ததில்லை. இன்னமும் சரியாக சொன்னால் ஹிட்லரின் யூதர்களுக்கான தனி ‘கெட்டோக்கள் ‘, யூதர்கள் தனிச் சின்னம் அணிய வேண்டுமெனும் விதி போன்றவை போப்பாண்டவர்களால்தான் முதலில் உருவாக்கப்பட்டன. கத்தோலிக்க குருமார்களில் வெகு பலர் நாசிகளின் யூத எதிர்ப்பினை முழுமையாக ஆதரித்தனர். அவர்கள் நியோ- பாகன்கள் அல்ல. அவ்வாறு ஹிட்லரிய நிலைபாடுகளை ஆதரிக்க அவர்கள் நீட்சேயையோ அல்லது மைன்-காம்ப்பையோ கூட மேற்கோள் காட்டவில்லை. அவர்கள் மேற்கோள் காட்டியது கிறிஸ்தவர்களது பைபிளான இயேசுவின் வாழ்க்கை வரலாறு என நம்பப்படும் நால்வர் விவரணங்களிலிருந்துதான் (the four Synoptic Gospels). கோல்ட்ஹேகனின் மேதமை, மறுக்கமுடியாத நூற்றுக்கணக்கான ஆவணங்களை அவர் திரட்டியிருப்பதில் மட்டுமில்லை. அதன் வேர்களை கிறிஸ்தவ விவிலியத்தின் அடிப்படையிலிருந்து பெறுவதில் உள்ளது. ‘ஏசுவைக் கொன்றதற்கான இரத்தப் பழி ‘ எனும் கருத்தாக்கம் கிறிஸ்தவ விவிலியத்தில் இருக்கும் வரை இந்த கொடுமைகள் தொடரும் என்பதைக் கூறும் அவர் அதற்காக காட்டும் உதாரணங்கள் இரண்டாம் உலகப் போரிலிருந்து மட்டுமல்ல. அண்மையில் சிரியாவின் இஸ்லாமியத் தலைவர் யூதர்களை ஒட்டுமொத்தமாக ‘இறை தீர்க்கதரிசிகளை கொல்பவர்கள் ‘ எனக் கூறினார்.

பன்னாட்டு தலைவர்கள் கூடும் ஒரு கூட்டத்தில் இப்படி ஹிட்லர் கூட விஷம் கக்க துணியவில்லை. இந்த கூட்டம் போப்பாண்டவர் சிரியா போனபோது அவருக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பு கூட்டம். போப்பின் முன்னிலையில் மொழிபெயர்ப்புடன் இச்சொற்பொழிவு நடத்தப்பட்டது. போப் அமைதியுடன் அதை செவிமடுத்தார். உலக ஊடகங்களில் இச்சொற்பொழிவு வெளிவந்த போது பெரும் சர்ச்சை கிளம்பியது. அப்போதே போப் வெளிநடப்பு செய்திருக்க வேண்டுமென பலர் கருத்து தெரிவித்தனர். இந்த வெறுப்பியல் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து போப்பே தமது சிரிய சுற்றுலாவை இரத்து செய்ய வேண்டெமெனும் கோரிக்கையை கத்தோலிக்க கிறிஸ்தவர்களே வைத்தனர். ஆனால் போப் அவற்றை நிராகரித்து தமது சுற்றுலாவை முழுமையாக்கினார். இதன் மூலம் யூத வெறுப்பியலை கத்தோலிக்க திருச்சபை அங்கீகரிப்பதில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதற்கான அழுத்தமான சான்றையும் வழங்கியுள்ளார். கத்தோலிக்க திருச்சபையின் யூத வெறுப்பியலின் வெளிப்பாடு ஆஸ்ட்விச்சின் கொலைத் தொழிற்சாலை களங்களில் ஹிட்லருக்கு ஐம்பதாண்டுகளுக்குப் பின் வெளியானதை நீங்கள் அறிவீர்களா ? ஆம் உலகம் முழுவதுமான யூதர்கள் தம் இனத்தின் மீது செய்யப்பட்ட கொடுமைகளுக்கு சான்றுதாரணமாக காணும் அக்களத்தில் பிரம்மாண்ட சிலுவைகளை போப் வைக்க அனுமதி அளித்தார். யூதர்களின் மரணங்களின் புனித நினைவுகளை இவ்வாறு வெளிப்படையாக அவமதித்த இந்த கிறிஸ்தவ ஆக்கிரமிப்பு மனோபாவம் விமர்சனத்துக்குள்ளானது. அப்போது இந்த ‘புண்ணிய கைங்கரியத்தின் ‘ சிற்பியான கார்டினல் க்ளெம்ப் மிகக்கடுமையாக யூதர்களை விமர்சித்தார். போலந்தில் நடந்தேறிய யூதர்களுக்கு எதிரான இரண்டாம் உலக யுத்த அக்கிரமங்களில் போலந்து கத்தோலிக்கர்கள் பங்கேற்றதற்கு மன்னிப்பு தெரிவிக்கும் தேசிய நிகழ்ச்சி போலந்த் அதிபரால் நடத்தப்பட்ட போது கத்தோலிக்க திருச்சபை அந்நிகழ்ச்சியை புறக்கணித்தது. 292 பக்கங்களில் 499 சான்றாதாரங்களுடன் வைக்கப்படும் ஒரு ஆவணப்பெட்டகம் இந்நூல். இந்நூலின் மிக முக்கிய கருத்து எவ்வாறு கத்தோலிக்க திருச்சபையின் உண்மையின் மீதான ஒட்டுமொத்த குத்தகைதன்மை படு பயங்கரமான வன்முறைகளுக்கு துணை போயுள்ளது என்பதாகும். இன்று இந்த ‘உண்மைக்கும் மீட்புக்கும் மீதான ஏகபோக உரிமை ‘ எனும் தன்மை ‘கிறிஸ்தவரல்லாதோரின் ஆன்மாக்களை அறுவடை செய்வதற்கான எத்தகைய முயற்சிகளையும் ‘ கிறிஸ்தவத்தின் வாழ்வுரிமையாக மாற்றியுள்ளது. அந்த முயற்சிகளில் அடங்குவது துண்டு பிரசுரங்கள் முதல் ஏகே-47 வரையுமாகும். ‘கிறிஸ்தவத்தின் மீட்புச்சுமை ‘ (Christianity ‘s burden of saving heathen souls) எவ்விதத்திலும் வெள்ளை மனிதனின் உலகை பண்படுத்தும் சுமைக்கு (White man ‘s burden of civilizaing the rest of the world) குறைந்ததல்ல. உதாரணமாக உலகிலேயே அதிக கால அளவு நடந்த புனித விசாரணையை (Holy inquisition) தொடக்கிவைத்த பிரான்ஸிஸ் சேவியர் எனும் சவேரியார் கத்தோலிக்கர்களால் ‘புனித ‘ராக்கப்பட்டுள்ளார். அவரது உடல் கோவாவினை சூறாவளியிலிருந்தும் பூகம்பங்களிலிருந்தும் காப்பாற்றுவதாக ஜான் தயாள் இந்தியாவின் ஆங்கில தேசிய நாளேடுகளில் வாயும் கையும் கூசாமல் எழுதுகிறார். நூற்றுக்கணக்கான ஹிந்துக்களை தீயில் எரிக்க காரணமாக இருந்த சவேரியார், கோவாவின் புனித பாதுகாவலர் ஆவது ஆஸ்ட்விச் கொலைக்களங்களில் ஏற்றப்படும் சிலுவைகளுக்கு ஒப்பான வக்கிரம். கோல்ட்ஹேகனின் எழுத்துக்கள் யூதர்களுக்கு மட்டுமல்ல ஹிந்துக்களுக்கும் ஒரு பெரும் வரப்பிரசாதம். யூதர்களுக்கு எதிரான வன்முறைகள் பெருமளவுக்கு உலகால் மெளனமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கு முக்கிய காரணம் அவர்களை குறித்து ஊடகங்களில் எழுப்பப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட மனச்சித்திரங்கள் தாம். அத்தகைய எதிர்மறை மனச்சித்திரங்கள் ஹிந்துக்களுக்கு எதிராகவும் கடந்த மூன்று நூற்றாண்டுகளாக எழுப்பப்பட்டு உள்ளன. பாடநூல்கள் விக்கிர வழிபாட்டை மூடநம்பிக்கை என்று சொல்லும். வாஸ்கோடகாமா இண்டியாவிற்கான கடல்வழி பாதையை கண்டுபிடித்தது குறித்து ஐரோப்பிய பார்வையிலிருந்தே அவை கூறும். கோவா புனித விசாரணை ஒரு அடிக்குறிப்பேயன்றி நம் வரலாற்றில் ஒரு அத்தியாயமில்லை. விளைவு திரிபுரா படுகொலைகளைக் காட்டிலும் சர்ச் ஜன்னல் கண்ணாடிகளே மனித உரிமை அறிவுஜீவிகளுக்கு முக்கியமானவையாக இருக்கும். தெரசாக்களுக்கும், ஜான் தயால்களுக்கும், டாமினிக் லாப்பெயர்களுக்கும் பின்னாலிருக்கும் பாரதத்தின் மீதான வெறுப்பியல் வன்முறையினை ஒரு வரலாற்று சூழலில் அறிந்து கொள்ள கோல்ட்ஹேகன் நமக்கு உதவுவார். யூத வெறுப்பியலுக்கும், ஹிந்துக்கள் மீதான வெறுப்பியலுக்கும் அடிப்படையில் இருக்கும் பல ஒற்றுமைகளை அறிய இந்நூல் உதவும்.

—-hindoo_humanist@lycos.com

Series Navigation