மரபுகளை மதிக்கும் விருது

This entry is part [part not set] of 57 in the series 20041209_Issue

விக்ரமாதித்யன்


நமது தமிழ்க்கவிதை இரண்டாயிரம் ஆண்டு நீண்ட நெடிய மரபு கொண்டது. சங்கப்பாடல்கள் மொழியின் சிகரமாக இருப்பவை. அகம், புறம் என வகுத்து இந்த வாழ்வின் சாராம்சத்தை கவிதைகளில் கொண்டு வந்தவர்கள் சங்கப் புலவர்கள். கதைவழியே கருத்து என்று இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தைப் படைத்த போதிலும் அதில் பேசப்பட்டிருப்பதும் தமிழ் வாழ்வுதான். தனித்தனிப் பாடல்களாக விளங்கிவந்த தமிழ்க் கவிதை இளங்கோவின் கவித்திறத்தில் காவியமாகிறாது, அடிகள் ‘தொடர்நிலைச் செய்யுள் ‘ என்று குறிப்பிட்ட போதிலும் கூட. பிறகு காரைக்கால் அம்மையார், ஆண்டாள்நாச்சியார், பெரியாழ்வார், மணிவாசகர், திருநாவுக்கரசு சுவாமிகள் எல்லோரும் சிவனையும் திருமாலையும் உளம் கனிந்து பாடிய பக்தி இலக்கியம் வருகிறது. அடுத்து குற்றாலக் குறவஞ்சி, முக்கூடற்பள்ளு, தஞ்சைவாணன் கோவை, அழகர்கிள்ளைவிடுதூது, நந்திக்கலம்பகம், கலிங்கத்துப்பரணி, குலோத்துங்க சோழன் உலா, மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் இதுபோல சிற்றிலக்கிய வகைகள். ஒரு இருநூறு ஆண்டுகால அளவு வெவ்வேறு புலவர்கள் எழுதிய தனிப்பாடல் திரட்டு. மறுமலர்ச்சிகால முதல் கவிஞன் பாரதி தொடங்கி ச.துசு.யோகியா, தமிழ் ஒளி, பாரதிதாசன், கண்ணதாசன் இப்படி நிறைய கவி ஆளுமைகள்.

நிறுவன எதிர்ப்பைக் காண்பிக்கும் சித்தர் பாடல்கள், குணங்குடி மஸ்தான் பாடல்கள், எதிர்கவிதைகளாக இருக்கும் தனிப்பாடல் திரட்டு கவிதைகள் செவ்வியலின் கொடுமுடியிலிருக்கும் சங்கக்கவிதைகள், பிரம்மாண்டமான கோட்டை போல திகழும் சிலம்பு, எல்லோருக்கும் புரியும்படி இருக்கும் பக்திப் பாடல்கள் என தமிழ்க்கவிதை வண்ணமும் வடிவும் கொண்டு விளங்குகிறது.

திரை இசைப்பாடல்கள் என்று வந்தாலும் தமிழைப் பொருத்தவரை கவிஞர்களாக வேதாம் இருக்கிறார்கள். கம்பதாசன், மாயவநாதன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், உடுமலை நாராயணகவி, மருத காசி, கே.பி.காமாட்சி, கே.டி.சந்தானம், தஞ்சை ராமையாதாஸ், கண்ணதாசன், ஆலங்குடி சோமு, புலவர் புலமைப்பித்தன், கங்கை அமரன், நா.காமராசன், வைரமுத்துவரை எளிய மக்களின் மகத்தான கவிஞர்களாகவே இருந்து வருகிறார்கள். இசைப்பாடல்கள் கவிதையாகாது என்றாலும் கூட இவர்கள் எழுதியவை கவிதைகளாகவும் இருப்பது கவனம் கொள்ள வேண்டியதுதான்.

ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், வாக்குண்டாம் போன்றவையும்கூட கவிதைதான் என்று ஏற்கிற மனசுதான் ஒரு கவிஞனுக்கு இருக்கமுடியும். அந்த மனமே திருக்குறளைக் கொண்டாடும். வள்ளலாரின் வரிகளில் மயங்கிப் போகும். பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணத்தைத் தேடிப் படிக்கும். சேக்கிழாரின் பெரிய புராணத்தில் கவிதைகளைக் கண்டுகொள்ளும் வில்லிப்புத்தூராரின் பாரதத்தைப் படித்துக் கொண்டிருக்கும். முழுசாகப் படிக்கமுடியாமல் போன கம்பராமாயணத்துக்காகக் கவலைகொள்ளும். சீத்தலைச் சாத்தனாரின் மணிமேகலையைப் படித்துப் பார்த்துக் கொண்டிருக்கும். திருத்தக்கதேவரின் சீவகசிந்தாமணியை எப்போது படிக்க வாய்க்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும். கபிலர், பரணர், ஒளவை வரிசையில் ஒருவனென கர்வப்பட்டுக்கொள்ளும்.

பிரமிள், நகுலன், ஞானக்கூத்தன், தேவதேவன், கலாப்ரியா, நா.சுகுமாரன், ஆத்மாநாம், மலைச்சாமி, யூமா. வாசுகி, யவனிகா ஸ்ரீராம், பாலைநிலவன், கைலாஷ்சிவன், லக்ஷ்மி மணிவண்ணன், சங்கர ராம சுப்ரமணியன் எனத் தொடரும் சங்க மரபில் தன்னையும் அடையாளம் கண்டுகொள்ளும்.

உள்ளபடிக்கே இவ்வளவு பெரிய மரபில் ஒருவன் கவிஞனாவது அவ்வளவு எளிதில் ஆகக்கூடியதில்லை. ஆனாலும் காலம் தோறும் கவிஞர்கள் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

திரைஇசைப்பாடல்கள்தாம் எனக்கு விதைநெல்லாக கிடைத்தன முதலில். தமிழன் மிகப் பெரும் கொடை அவை. திரையிசைப் பாடல்களிலிருந்து ஒரு கவிஞன் தோன்ற முடியுமானால் எழுதியவர்கள் கவிஞர்களாகவும் இயற்றப்பட்டவை கவிதைகளாகவும் தாமே இருக்க வேண்டும்.

நவீன உலகம், நவீனவாழ்வு என்றான பிற்பாடு தமிழ்மரபில் வந்த ஞானக்கூத்தனின் கவிதைகள் எனக்கு வழிகாட்டியாக இருந்தன.

கொஞ்சம் வளர்ந்த பிறகு நகுலன் கவிதைகள்.

மொழி உச்சம் கொள்ளும் பிரமிள் கவிதைகள்.

கவிஞர் கண்ணதாசனில் தொடங்கும் என் கவிமுகம் இப்படித்தான் தீர்க்கம் கொண்டது.

ஒவ்வொரு காலகட்டத்திலும் யாராவது ஒரு நண்பர் எப்பொழுதும் துணை இருந்து வந்திருக்கிறார். சமயவேல், வித்யா ஷங்கர் என்கிற துரை, இலங்கைக் கவிஞர் க.ஆதவன், திருமேனி, மகரந்தன் இதுபோல நிறைய பேர்.

நெருங்கிய நண்பராகவும் அதே சமயத்தில் தாட்சண்யமில்லாத விமர்சகராகவும் இருந்து என் கவிதைகளை எடுத்துப் பேசுபவராக எப்பொழுதும் ஒருவர் கிடைத்துக் கொண்டே இருக்கிறார்.

இவ்வளவு காலத்துக்குப் பிறகு கவிஞர் கவிஞர் என்று கொண்டாடவும் மனிதர்கள் வாய்த்து வருகிறார்கள். பலவீனங்களைப் புறந்தள்ளிவிட்டு கவிதையை மட்டுமே மதிக்கிற வாசகர்கள் ஏற்பட்டிருக்கிறார்கள். குறையொன்றுமில்லை.

வாழ்கிற காலத்திலேயே கொண்டாடப்படுகிற கவிஞனாக இருப்பதில் சந்தோஷம்தான்.

இந்த நேரத்தில் என் முதல்கவிதையை வெளியிட்ட கணையாழி நிறுவனர் கி.கஸ்தூரிரங்கன் அவர்களை நினைத்துக் கொள்கிறேன்.

முதல் தொகுப்பு ‘ஆகாசம் நீலநிறம் ‘ வெளியிட்ட கவிஞர் மீரா அவர்களை மனம் கசிய நினைவுகூர்கிறேன்.

கைமாறு கருதாது என்னுடைய ஐந்தாவது தொகுப்பு ‘திருஉத்தரகோசமங்கை ‘ பதிப்பித்த பொன்.விஜயனை நினைத்துக் கொள்கிறேன்.

தொடர்ந்து என் புஸ்தகங்களை வெளியிட்டு வரும் அகரம் கதிர், மருதா பாலகுருசாமி, புதுமைப்பித்தன் பதிப்பகம் சந்தியா நடராஜன் ஆகியோருக்கெல்லாம் நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

இந்த நேரத்தில் முதன்முதலில் விருது வழங்கி சிறப்புச்செய்த கவிஞர் வைரமுத்து அவர்களையும் ‘வைகறை வாசல் ‘ நண்பர்களையும் நன்றியுடன் எண்ணிக்கொள்கிறேன். இதேபோல இப்பொழுது கவிஞர் தேவமகள் விருது வழங்கி கெளரவிக்கும் மதிப்புக்குரிய நித்திலன் அவர்களையும் தெரிவுசெய்த நடுவர் குழுவினரையும் நன்றியுடன் நினைவில் கொள்கிறேன்.

முப்பதாண்டுகளுக்கு மேலாகத் தமிழ்வாழ்வு, தமிழ் நிலப்பரப்பு, தமிழ்ச் சொற்றொடரமைப்பு, எல்லோரும் புரிந்துகொள்கிற எளிய கவிதை மொழி இதுபோல எழுதிவருகிற எனக்கு கிடைக்கிற மரியாதையே எந்த ஒரு விருதும். இதுவரை பெற்ற மூன்று விருதுகளுமே கவிஞர்கள் வழியே வந்தடைக்கின்றன. இதை ஒரு விசேஷமாகவே எடுத்துக்கொள்கிறேன்.

செவ்வியல் மரபு, காவியமரபு, பக்தி மரபு, சிற்றிலக்கிய மரபு, தனிப்பாடல் மரபு இவற்றிலிருந்தெல்லாம்தான் என் கவிதைமொழியை வடிவமைத்துக் கொண்டேன்.

இந்த விருதுகள் இந்த மரபுகளை மதிக்கின்றன.

ஒளவையைப் போலவோ, ஆண்டாளைப் போலவோ, காரைக்கால் அம்மையாரைப் போலவோவெல்லாம் நானொன்றும் பெரியகவிஞனில்லை.

கபிலர் மாதிரியோ, பரணர் மாதிரியோ, பாலை பாடிய கவிஞர் மாதிரியோ என்னைச் சொல்லிக்கொள்ளமுடியாது.

இளங்கோவடிகளுக்கு முன்னால் நான் வெகு எளியவன். திருநாவுக்கரசு சுவாமிகளின் கவிதைமொழிக்கு முன்னால் என் கவிதைமொழி சாதாரணமானது. ஜெயங்கொண்டான், திரிகூட ராசப்பக் கவிராயர், குமரகுருபர சுவாமிகள் மத்தியில் நான் சாமான்யன்.

பிரமிள், நகுலன், கலாப்ரியா, லக்ஷ்மி மணிவண்ணன், சங்கரராம சுப்ரமணியன் காலத்தில் நானும் ஒரு கவிஞனாக இருந்து கொண்டிருக்கிறேன் என்பதே எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

இந்த மரபிலிருந்தே நான் எல்லாவற்றையும் கற்றுக் கொண்டேன்.

என் வாழ்காலத்தில் முப்பது நல்ல கவிதைகள் எழுதினால் பிறவிப்பயன் எய்திவிட்டதாகக் கொள்வேன்.

பேராசைதான்.

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்று சொல்லியிருக்கிறான் எங்கள் மூத்தகவி.

(கவிஞர் தேவமகள் அறக்கட்டளை வழங்கும், கவிஞர் தேவமகள் இலக்கிய விருது 2003 இல் நடந்த, ‘கவிச்சிறகு ‘ பெற்றபோது நிகழ்த்திய ஏற்புரை இது.)

நாள் : 09.03.2003

இடம் : கோயம்புத்தூர்

விருது பெற்ற நூல் : விக்ரமாதித்யன் கவிதைகள்

****

Series Navigation