மரண தண்டனை எதற்காக ?

This entry is part [part not set] of 42 in the series 20040819_Issue

ஞாநி


கொலைக் குற்றம் செய்தவர்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று சொல்லுபவர்கள் அதற்குச் சொல்லும் காரணம் அப்போதுதான் குற்றவாளிகள் இனி குற்றம் செய்யாமல் இருப்பார்கள். அந்த தண்டனையைப் பார்த்து மற்றவர்களும் அத்தகைய குற்றத்தில் ஈடுபடாமல் இருப்பார்கள் என்பதே அவர்களின் வாதம்.

இந்த வாதத்தை ஏற்றுக் கொள்ளும் இன்னும் சிலர் கொலைக்கு மட்டுமல்ல. பாலியல் வன்முறைக் குற்றத்துக்கும் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்கிறார்கள்.

குற்றம் செய்தவரைக் கொல்வதென்பது அந்தக் குற்றம் நிகழ்வதற்குக் காரணமாக இருந்த சமூக அமைப்பைக் காப்பாற்றுவதே ஆகும். அந்தக் குற்றம் நிகழத் தூண்டிய சமூகக் காரணங்களில் கவனம் செலுத்தாமல், குற்றவாளி என்ற தனி நபரைக் கொன்றுவிட்டால், அந்தக் குற்றமே சமூகத்திலிருந்து மறைந்து விடும் என்று நம்புவது அசட்டுத்தனமானது.

முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் கொலைக் குற்றவாளிகளை மூன்று விதமாக வகைப்படுத்துகிறார். ஒரு நொடியில் உணர்ச்சி வசப்பட்டு கொல்லுகிறவர்கள். இவர்கள் நிச்சயம் தூக்குக் கயிற்றைப் பற்றி முன்கூட்டி யோசிக்கக்கூடப் போவதில்லை. எனவே அந்த பயம் அவர்களை தடுக்காது.

இரண்டாவது வகையினர் இறுகிய மனமுடைய கிரிமினல்கள். இவர்களும் (சாவுக்கு) மரண தண்டனைக்கு பயப்படப் போவதில்லை. மூன்றாவது வகையினர் கொள்கை அடிப்படையிலோ, தங்களுடைய ஆழ்ந்த நம்பிக்கை அடிப்படையிலோ, அரசியல் அடிப்படையிலோ கொலையில் ஈடுபட்டவர்கள். இவர்களும் மரணத்துக்கு அஞ்சுவதில்லை. எனவே மரண தண்டனை அச்சத்தை ஏற்படுத்தி கொலைக் குற்றங்களைக் குறைக்கும் என்று நம்புவது அர்த்தமற்றது.

இதை இங்கிலாந்தில் ராயல் கமிஷன் 1866லேயே சுட்டிக்காட்டியது. அங்கு ஒரு நகரத்தில் மரண தண்டனைக் கைதிகளாக இருந்த 167 பேரில் 164 பேர் தங்கள் கண் முன்பாகவே வேறொருவர் தூக்கிலிடப்பட்டு தண்டிக்கப்பட்டதைப் பார்த்தவர்கள். ஆனல் அது ஒன்றும் அவர்கள் குற்றம் செய்வதைத் தடுத்து விடவில்லை. எனவே தூக்கு தண்டனையை ஒழித்து விடலாம் என்று ராயல் கமிஷன் தெரிவித்தது.

இதுவரை உலகில் மரண தண்டனை 72 நாடுகளில் ஒழிக்கப்பட்டுவிட்டது. இன்னும் 23 நாடுகளில் கடந்த பத்தாண்டுகளாக யாருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை. அதனால் எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடவில்லை. குற்றங்கள் அதிகரித்து விடவில்லை. மரண தண்டனை அமலில் உள்ள நாடுகளில், குற்றங்கள் குறைந்துவிட்டதாகவும் எந்த புள்ளி விவரமும் இல்லை. மரண தண்டனைக்கும் குற்ற வளர்ச்சிக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்பதே ஆய்வுகள் தெரிவிக்கும் உண்மை.

அண்மையில் 1999ல் மட்டும் சுமார் 1200 பேர் மரண தண்டனையில் கொல்லப்பட்டன்ர். இதில் 85 சதவிகிதம் நடந்தது ஐந்தே நாடுகளில்தான் — சீனா, சவுதி அராபியா, காங்கோ, இரான், அமெரிக்கா. உலகின் வளர்ந்த நாடுகளிலே அமெரிக்கா ஒன்றுதான் இன்னும் மரண தண்டனையை விடாப்பிடியாக வைத்திருக்கிறது. ஐரோப்பா முழுவதும் மரண தண்டனை இல்லை.

கொலைக் குற்றம் செய்தவர் தண்டனைக் காலம் முடிந்து வெளியே வந்து விட்டால் மீண்டும் கொலைகள் செய்வார் என்று அஞ்சத்தக்க அளவு எந்த நிகழ்ச்சியும் இல்லை. வெளியே வந்தபின் திருந்தி வாழ்ந்தவர்கள் எண்ணிக்கையே அதிகம். அவர்களை திருந்த விடாமல் தடுக்கும் அமைப்புதான் பல சமயங்களில் பிரச்சினையாகும். வெளியே விட்டால் நிச்சயம் ஆபத்து என்று கருதத்தக்க அளவு கொடூரமானவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு. அவர்கள் இயற்கையாக இறக்கும் வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று வேண்டுமானால் அதிகபட்ச தண்டனையாக உத்தரவிடலாம்.

பல சமயங்களில் நிரபராதிகள் தூக்கிலிடப்பட்டது நடந்திருக்கிறது. ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஆனால் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது என்பது நீதியின் புனிதமான கொள்கை என்பதற்கெல்லாம் நடைமுறையில் மரியாதை கிடையாது. அமெரிக்காவில் ஜார்ஜ் பிரண்டன் என்பவர் மீதான கொலைக் குற்றத்துக்கு மறுக்க முடியாத சாட்சியம் இருப்பதாகச் சொல்லி அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. சில மாதங்களுக்குப் பின்னர் அந்தக் கொலையை பிராண்டன் செய்யவில்லை என்றும் தானே செய்ததாக வேறொருவர் ஒப்புதல் வாக்குமூலம் தந்தார். விசாரணையில் பிராண்டன் நிரபராதி என்பது நிரூபிக்கப்பட்டது.

அரசியல் ரீதியில் நடைபெறும் கொலைகளில், ஒரு பெரும் கூட்டம் கிளர்ச்சியில் ஈடுபடும்போது ஏற்பட்ட சாவுகளுக்காக அந்தக் கூட்டத்தில் யாருக்கு மரண தண்டனை விதிப்பது ? உண்மையில் ஒவ்வொரு தேசத்தின் ராணுவமும் சுயபாதுகாப்பு என்ற பெயரில் மறு தரப்பை கொலை செய்யும் நோக்கத்துடனேதான் போரில் ஈடுபடுகிறது. அதுவும் அரசியல்தான்.

இந்தியாவில் அரசியல் கொலைக்காக முதலில் மரண தண்டனை விதிக்கப்பட்டது காந்தியின் கொலையாளிகளுக்குத்தான். அதன் பிறகு தூக்கிலிடப்பட்டவர்கள் நக்சல்பாரிகள். நாகபூஷண் பட் நாயக், தியாகு போன்று ஒரு சில நக்சல்பாரிகள் மரண தண்டனை விதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டிருந்தாலும் பல நக்சல்பாரிகள் தூக்கில் இடப்பட்டிருக்கிறார்கள்.

ஆந்திரப்பிரதேசத்தில் அடிலாபாத் மாவட்டத்தில், ஏப்ரல் 1970ல் சுமார் முன்னூறு கூலிகள் லச்சு பட்டேல் என்ற பண்ணையார் வீட்டுக்கு ஊர்வலமாக சென்றார்கள். கொத்தடிமைகளாகக் கூலிகளை நடத்தி வந்த பட்டேல் ஒரு கந்து வட்டிக்காரனும் கூட. கூட்டத்தினரால் பட்டேல் கொல்லப்பட்டபிறகு முப்பது பேர் கைது செய்யப்பட்டார்கள். அதில் கிஷ்ட்ட கவுடு என்ற விவசாயியும், பூமைய்யா என்ற கிராமத்து டெய்லரும் மட்டுமே கொலைக் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

குடியரசுத் தலைவர் அவர்களுடைய கருணை மனுவை நிராகரித்தார். ஆனால் அந்தத் தகவல் அவர்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை என்ற காரணத்தைக் காட்டி கடைசி நிமிடத்தில் தூக்குக்கு தடை வாங்கப் பட்டது. அதன் பிறகு உச்ச நீதி மன்றம் வரை வழக்கு சென்றது. அரசியல் கொலைகளையும் இதர கொலைகளையும் சமமாகக் கருதக்கூடாது என்று தாங்கள் கருதினாலும், சட்டத்தில் அதற்கு இடமில்லை என்றது உச்ச நீதி மன்றம்.

இருவருக்கும் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றக் கோரி மூன்று முன்னாள் உயர் நீதி மன்ற நீதிபதிகள், 180 உச்ச நீதி மன்ற வக்கீல்கள் கையெழுத்திட்ட மனு குடியரசுத்தலைவருக்குத் தரப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் 80 பேர் ( இதில் பலர் காங்கிரஸ் காரர்கள்) தனியே இதே கருத்தில் ஒரு மனு அளித்தனர். கம்யூனிஸ்ட் கட்சியும் இயக்கம் நடத்தியது. ஆனால் இவை எதுவும் பயன் தரவில்லை. மரண தண்டனை அறிவிக்கப்பட்டு மூன்றாண்டு கழித்து டிசம்பர் 1,1975 அன்று இருவரும் தூக்கிலிடப்பட்டனர். ( நெருக்கடி பிரகடனம் அமலில் இருந்த காலம்.)

இப்படி தாமதப்படுத்துவதையே ஒரு காரணம் காட்டி மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றக் கோரலாம் என்று ஒரு உச்ச நீதி மன்ற தீர்ப்பு சொல்லியிருக்கிறது. 1983ல் தமிழ் நாட்டின் விஷ ஊசி கொலைவழக்கில் தண்டிக்கப்பட்ட வைத்தியின் மனுவை விசாரித்த உச்ச நீதி மன்ற நீதிபதிகள் சின்னப்ப ரெட்டியும் ஆர்.பி.மிஸ்ராவும் அரசியல் சட்டத்தின் 21 வது பிரிவின் கீழ் குடிமக்களுக்கு உயிர் வாழ்வதற்கும் சுதந்திரத்துக்கும் உள்ள உரிமை, மரண தண்டனையை நிறைவேற்றத் தாமதம் செய்வதில் பாதிக்கப்படுகிறது என்று கூறினர். எனவே விதிக்கப்பட்டு இரண்டாண்டுகள் ஆகியும் மரண தண்டனையை நிறைவேற்றாவிட்டால், அந்த அடிப்படையில் அதை ஆயுள் தண்டனையாக மாற்றக் கோரி மனு செய்யலாம் என்று தீர்ப்பளித்தனர். இதன்படி ராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களும், கல்கத்தாவின் தனஞ்ஜயும் கூட ஆயுள் தண்டனைக்கு தகுதியுடையவர்கள்தான்.

தமிழ் நாட்டில் ராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு அந்தத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட வேண்டுமென்று ( நியாயமாகவே) டெல்லி முதல் கன்யாகுமரி வரை இயக்கம் நடத்திய நெடுமாறன், சுப வீரபாண்டியன் போன்றோரின் குரல்களெல்லாம் தனஞ்ஜெய் போன்றவர்களுக்காக ஒலிப்பதில்லை. ஒலித்திருந்தால் நமது செவிகளுக்கு எட்டவில்லை.

உலகம் முழுவதும் மரண தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாமல் சிக்கிக் கொள்கிறவர்கள் பெரும்பாலும் அரசியல் பலமோ, பண பலமோ, அறிவுஜீவி பலமோ இல்லாத சமூகத்தின் அடித்தட்டு ஏழை மக்கள்தானென்பது பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. குற்றம் செய்த பெரும் பணக்காரர்களோ, நிலப்பிரபுக்களோ தண்டனை பெற்று அரசாங்கத்தால் தூக்கிலிடப்பட்டதாக வரலாறு இல்லை.

அது போலவே போலீசுடன், ராணுவத்துடன் மோதல் என்ற பெயரில் (encounter) ஆயிரக்கணக்கானவர்கள் இந்தியாவில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 1980லிருந்து 1984 வரை மட்டுமே இப்படிக் கொல்லப்பட்டவர்கள் எட்டாயிரம் பேர். இதில் பெரும்பாலானவை மோதல்களே அல்ல. கைது செய்யப்பட்ட நிராயுதபாணிகளை சுட்டுக் கொன்றதாகும். ஆனால் இது தொடர்பாக சிவில் உரிமை அமைப்புகள் போராடி, தவறு செய்த போலீசார் மீது வழக்குகள் பதிவு செய்யும் அளவுக்கு வந்தாலும், கொலைக் குற்றத்துக்காக இதுவரை அப்படிப்பட்ட காவலர்கள் யாரும் மரண தண்டனை விதிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டதில்லை.

கடைசி நிமிடத்தில் சகோதரர் போட்ட மனு மீது உச்ச நீதி மன்றம் தந்த ஆகஸ்ட் 12 தீர்ப்பினால், இந்த இதழ் அச்சாகும்போது தனஞ்ஜெய்க்கு பிறந்த நாளே (ஆகஸ்ட் 14) இறந்த நாளாகிவிட்டிருக்கும்.

தூக்கை எதிர்பார்த்தபடியே (ஆயுள் தண்டனைக்காலமான) 14 ஆண்டுகளை சிறையில் கழித்த தனஞ்ஜெய் 1994ல் போட்ட அப்பீல் மனுவை விசாரிக்க அப்போது நீதி மன்றம் எட்டாண்டுகள் எடுத்திருக்கிறது. சிபு சோரன் மீதான வழக்கு 29 ஆண்டுகள் கழித்து உயிரூட்டப்படுகிறது. இந்த தேசத்தில் நீதிமன்றங்களில் இப்படி வழக்குகள் தாமதமாவதற்கு யாரைத் தூக்கில் போடுவது ?

மரண தண்டனை என்பது ஒரு சமூகம் சட்டத்தின் கீழ் ஒளிந்து கொண்டு கொலை செய்வதைத் தவிர வேறல்ல. எப்படி தனி நபரின் கொலை கடுமையாகக் கண்டிக்கத்தக்கதோ அதே போலத்தான் இதுவும். சிறைக்குள் கைதியையும், சிறைக்கு வெளியே சமூகத்தையும் சீர்திருத்துவது ஒன்றுதான் சரியான முறை.

புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளர் தாஸ்தாயெஸ்கி மரண தண்டனை விதிக்கப்பட்டவர். அவரைக் கொடூரமான ஜார் மன்னன் மன்னித்திருக்காவிட்டால், உலகம் சிறந்த எழுத்தாளரை இழந்திருக்கும்..

தீம்தரிகிட ஆகஸ்ட் 16-31 2004

dheemtharikida@hotmail.com

Series Navigation

ஞாநி

ஞாநி