கஜன்
இறந்துவிட வேண்டும். நித்திரை செய்யும்போதும் நிழலாகத் தொடரும் நெருடலின் விளைவா இது? கனவிலும் கவலைதான் வாழ்வா? பல சூழ்நிலைகள் தற்கொலை முயற்சிக்கு இட்டுச் செல்வது வெளிப்படை உண்மை. உலகத்தில் இளவயது ஆண்களுக்கும் இவ்வாறு நடப்பது சகஜமாகி விட்டதோ?
கண்முன்னே இருந்த நஞ்சை பார்த்துக் கொண்டு இருந்தேன். வழக்கத்திற்கு மாறாக இருந்ததன் விளைவால் விபரீத முடிவை எடுத்திருந்தேன். மூடியை சுலபமாக திறக்கமுடியாமல் இருந்தது. வாயால் மூடியைக்கடிக்க, மூடியின் கூரான உலோகத்துண்டு ஒன்று மடிந்து வாயிலே சிறிய வெட்டலை ஏற்படுத்தியது. கசிந்து இரத்தம் வெளிவரத் தொடங்கியது. வலி ஏற்பட்டுக் கடிக்க, கோடு போல் இருந்த காயம் பெரிதாகி, இரத்தம் வெளிவந்தது. அதைக் கையால் பொத்திக் கொண்டேன். கட்டுமீறி பெருமளவில் இரத்தம் வந்தது. அதைத்தடுக்க எத்தனித்தேன். அடுத்த கணத்தில் ‘தற்கொலை செய்யத் துணிந்த நான், ஏன் இந்த இரத்தத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்?’ மனதில் கேள்வி எழுந்தது. கத்தினேன். சிரித்தேன். தீடீரென விரக்திச் சிரிப்பின் எதிரொலியை நானே உணர்ந்தேன். அறையின் சுவர்களுக்கிடையே வீறுகொண்டவனாய் என் கத்தலை என் காதுகளே ரசித்தன. குருதியைக் காண அது ஆறுபோல் எனது உடம்பிலிருந்து பாய வேண்டும் என நினைத்தேன். நச்சுப் போத்தலையே உடைத்து, கண்ணாடித் துண்டினால் தேகத்தில் மேலும் வெட்டுகளை ஏற்படுத்தினேன். உடம்பின் பல இடங்களிலிருந்து பெருமளவில் இரத்தம் வரத் தொடங்கியது.
“அம்மா ஆ…” கீச்சலிடும் சத்தம் கேட்டது. யன்னலினூடு பார்த்தேன். வெளியே தெருவில் முன்வீட்டுச் சிறுவன் கார் விபத்தொன்றில் சிக்கவிருந்த கிலி முகத்தில் தெரிந்தது. பயத்தில் முகமெல்லாம் வியர்த்து இருந்தது. அந்நிலையிலும் என்னைப் பார்த்தது போல் உணர்ந்தேன். ஏதோ அவன் சொல்வது போல் தெரிந்தது. ‘எனக்கா சொல்கிறான்? அல்லது கத்துகிறானா? இவனும் என்னைப் போல் தற்கொலை செய்யத் துணிந்தானோ? இவனுக்கு என்ன பிரச்சனை? என் கவனக்குறைவில் நடந்த விபத்தில் இருவர் காயம் அடைந்தார்களே! இங்கு இவனுக்கு என்ன நேர்ந்து விடுமோ என்று பயந்தேன். அவனது ஆபத்தான நிலை தடுக்கத் துணிந்தேன். என் தற்கொலைச் செய்கையின் விளைவாய் அசாதாரண நிலைக்கு வந்ததால், நடக்க முடியாமல் கால்கள் தடுமாறின. தூரத்திலிருந்தே கண்மண் தெரியாமல் கார் ஓடி வருபவனை திட்டினேன். அவனுக்கு கேட்கவில்லை. இவன் போல் அன்றும் வேறு சமயங்களிலும் நானும் ஓடியிருக்கிறேனே? நான் செய்தால் நியாயப் படுத்ததுகிறேன் இன்னொருவன் செய்யும் போது அதையே குற்றம் ஆகக் கருதுகிறேன். சரியாகப்பட்ட சிலவிடயங்கள் பின்னர் குற்றமாகவும் தெரிகின்றன. ஆனால் ஒவ்வொருவரும் அந்ததந்த நிலையில் இருந்தால் முன்பு குற்றமாகப் பட்டது பின்னர் சரியாகப்படுமா? ஏன் சிந்திக்கிறோம்? ஏன் இந்த ஆறறிவுப் பிரச்சனை?’ பல கேள்விகள். விடையே கிடைக்காமல் இருக்க மேலும் விரக்தி கூடியது. தற்கொலை வெறி கூடியது. கண்ணாடித் துண்டைத் தேட அதிலும் இரத்தம் இருந்தது. நிலத்தில் கிடந்த கண்ணாடித் துண்டை எடுக்க கையில் இரத்தம்தான் பட்டது. துண்டுகளைத் தேட, மங்கலாய்த் தெரிந்தவை மறையத் தொடங்கி இறுதியில் மறைந்துவிட்டன.
உடம்பெங்கும் பாரம் அதிகரித்தது போல் இருந்ததை உணர்ந்தேன். கண்களில் இருந்த வலியையும் மீறி விழித்த போது அறையில் நல்ல வெளிச்சத்தின் மத்தியில் கண்கள் கூசின. பின்னர் சிறிது சிறிதாக முன்வீட்டுச் சிறுவன் தெரிந்தான். என் அறை சுத்தமாகவும் உடம்பில் காயங்களும் இன்றி இருப்பதை உணர்ந்தேன். ‘கண்டது கனவா? பேச முடியாதவன் ‘அம்மா’ என்று கத்தினானே?’ அறையின் நச்சுப்போத்தலும் கண்ணாடித் துண்டுகளும் இல்லை. அப்படியாயின் தற்கொலை முயற்சியா அல்லது பிரம்மையா ? அச்சிறுவன் கையில் சில பொருட்கள் எழுதப்பட்ட பட்டியல் இருந்தது. சாதாரணமாக அவனின் பாட்டி தேவையான பொருட்களை வாங்க இந்த ஊமைப்பேரனிடம் பட்டியல் கொடுத்து அனுப்புவது வழக்கம். ‘அங்கிள்’ என்று அழைத்து சற்று நேரத்தின் பின்னர் ‘சுகமா?’ என்று கேட்க ஆச்சாரியமாக இருந்தது. ‘பேசுகிறானே? ஏன் தன்னை சுகமா என்று கேட்கின்றானே?’ மனதில் கேள்விகள் தோன்ற அவனிடம் பேச்சு கொடுக்க முற்பட்டபோது அவன் தன்வீட்டை நோக்கி ஓடினான். அந்த அவசரத்திலும் வீதியைக் கடக்கும் போது இருபக்கமும் கவனித்து தெருவின் அக்கரையிலுள்ள தன்வீட்டிற்குப் போனான்.
தேகம் அசாதாரணமாகப் பாரம் அற்றது போல் இருந்தது. தொடர்ந்து நித்திரை செய்த காரணமோ என்னவோ முதுகில் சிறுவலி ஒன்று இருப்பதாக உணர்ந்தேன். மூடிய தீரைச் சீலையினூடும் காலை வெய்யில் அறை எங்கும் பரந்து இருந்தது. அதிக நேரம் தூங்கிவிட்டேனா? நம்பமுடியாமல் நேரத்தைப் பார்ந்தேன். நேரம் பத்துப் பத்து என்று காட்டியது. இந்நேரம் அலுவலகத்தில் இருக்க வேண்டுமே? அவசரப்பட்டேன். ஏதோ தேட அறையின் மூலையில் கண்ணாடித் துண்டைக் கண்டேன். குழப்பத்தில் சிறிது நேரம் கழிந்தது. பின்னர் இன்னொரு துண்டை கட்டிலின் கீழே கண்டேன். அப்படியாயின் தற்கொலை முயற்சி உண்மையா? குழம்பினேன்.
மனம் அதிர்ந்தது. கேள்விகளுக்கு விடை தெரியாமல் போகவே அதிர்வே நடுக்கமாக மாறியது. தொலைக்காட்சியில் அந்நியன் பாட்டு போனது. விக்ரம் நிலைதான் எனக்கும் வந்ததா? அதெல்லாம் சுத்தப்பொய். காலை நேரம் ஏன் பாட்டை ஒளிபரப்பு செய்கின்றனர். என் குழப்பத்திலும் தேவையற்ற பாட்டு பற்றிய சிந்தனை ஏன்? அதிக ஆசைகளில் அகப்பட்டு யாவற்றிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் போக்குத்தான் இதற்குக் காரணமா?
தொலைபேசி சிணுங்கியது. மறுமுனையில் அலுவலகத்தில் இருந்து நண்பன் கதைத்தான். தாமதம் என்பதைத்தான் சொல்ல வருகின்றான் என நினைத்தேன். அவன் ஏதோ கேட்டான். குழப்பத்தில் ஒன்றும் புரியவில்லை. ‘வருகிறேன்’ என்றேன். ‘வராதே! உனக்கு ஓய்வு தேவை. உனக்கு நிறையச் சொல்ல வேணும். அலுவலகம் முடித்து வருகிறேன்’ என்றான். குழப்பம் அதிகரித்தது. என்ன நடந்தது? தற்கொலை செய்ய நினைத்தது உண்மையா? சிறுவனுக்கு நேர இருந்தது விபத்தா? அது என் மனப்பிரமையா? ஊமை எப்படிக் கதைத்தான்? அவ்வாறாயின் கண்ணாடித் துண்டும் நண்பன் கதையும் எதேச்சையாக அமைந்தனவா? அல்லது ஆபத்தில் அகப்படவிருந்த அதிர்ச்சியில் கதைக்கக் கூடியதாய் உள்ளதா?
நேற்று மது அருந்தி இருந்தேனா? அதனால் தான் குழப்பம் அதிகமா? அல்லது என் சாதாரண கவலை அசாதாரண விரக்திக்கு என்னை இட்டுச் சென்றுவிட்டதா? என்னைச் சுற்றிவர நடந்த பலவித செயல்களின் மொத்த விளைவுதான் எனது தற்கொலை முயற்சிக்கு காரணம் என்று பட்டும் படாமலும் புரிந்தது. ‘இப்படியும் இருக்கலாம். அப்படியும் இருக்கலாம்’ என்று உள்ளம் சொன்னது. ஆனால் சிறுவன் ஒரு வினாக்குறியாக என்கற்பனையில் வந்தான். ஒரு கணம் சிரித்தான். மறுகணம் குழப்பத்தை ஏற்படுத்தினான். குழப்பத்தை தெளிவுபடுத்த வழிதேடினேன். பலவித கடினமான பிரச்சனைகளைக் கையாண்ட எனக்கு, அந்நிலையில் தெளிவில்லாமல் இருந்தது. சரியாக சிந்திக்கக் கூட முடியவில்லை.
மீண்டும் குளித்தேன். தலையைச் சீவ சீப்புத் தேடும் போது, ஒரு துண்டுச்சீட்டு கிடைத்தது. அது முன்வீட்டுச் சிறுவன் கொண்டு வந்தது. அதிலுள்ள பொருட்களைத்தான் தினமும் நான் வாங்கிக் கொடுப்பது வழக்கம். அதை என்னிடம் தருவானே ஒழிய கதைப்பதில்லை. ‘ஆனால் விபத்து நடப்பதற்கு முன்னர் அலறினானே?’ சிந்தித்தேன். ‘விபத்து அதிர்ச்சியில் கதைக்கும் வல்லமை வந்திருக்குமா?’ மீண்டும் யோசித்தேன். ‘காலைல கூடக் கதைத்தானே! அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். நான் ஒரு பிழையான காரியம் செய்யத் துணிய அதனால் அவனுக்கு கதைக்கும் வல்லமை வந்ததா? பாவம்! பெற்றோர் இல்லாத பிள்ளை.’ அவன் கதைப்பதை எண்ணி ஆறுதல் அடைந்தேன்.
அந்த துண்டுச்சீட்டில் உள்ள பொருட்களை வாங்கிக் கொடுக்கத் தயாரானேன். கைக்கடிகாரத்தை கட்ட எடுத்தபோது அதில் இருந்த திகதியைத்தான் நம்ப முடியாமல் இருந்தது. ‘ஆறு நாட்கள் போய்விட்டனவா? என்ன செய்தேன்.’ எண்ணிக்கொண்டே கணணியைத் திறந்தேன். அங்கும் கடிகாரத்தில் காட்டிய திகதியே இருந்தது. புதிய மின்மடல்கள் நிறைய வந்திருந்தன. முதலாவதை திறந்தபோது ஆச்சரியம். ஏதோ ஒரு பயம். அம்மடலில் இருந்த விடயம் ‘நலமடைய இறைவனை வேண்டுகின்றேன். முட்டாள் தனமான செய்கைகள் செய்ய வேண்டாம்’ நண்பன் எழுதி இருந்தான்.
அதேசமயம் தபால்காரன் தபால்பெட்டியில் அன்றைய தபால்களை போட்டுவிட்டுச் செல்வதைக் கண்டேன். வெளியே வந்தபோது விபத்துக்குள்ளான கார் திருத்தப்பட்டு வீட்டிற்கு கொண்டுவரப்பட்டு இருந்தது. தபால் பெட்டியிலும் ஒரு வாரத்திற்கான கடிதங்கள் இருந்தன. மின்மடல்கள் போலவே இருந்தன. ‘கணிணி இல்லாதவர்கள் தான் கடிதங்கள் போடுகின்றனரா?’ தேவையற்ற சிந்தனை மீண்டும் தலைதூக்கியது. ஒரு கடிதத்தில் ‘தாய்தந்தை இல்லாத பிள்ளை உன் உயிரைக் காப்பாற்றியது. அந்தப் பிஞ்சு உள்ளத்திற்காகவேனும் இப்படியான முட்டாள் முடிவுகளை எடுக்காதே’ என்று இருந்தது.
நன்றி சொல்ல வேண்டும் என்று தலையைத் தூக்கினேன். காலை கண்ட சிறுவனை முன்வீட்டில் காணவில்லை. சற்றுப் பொறுத்துப் பார்த்தேன். யாரும் கண்ணில் படவில்லை. சத்தமும் கேட்கவில்லை. ஒரு முதியபெண்மணி வீட்டிற்குள் சென்றாள். சில நெடிகளில் ஒப்பாரி கேட்டது. எனக்கு கலக்கம் ஏற்பட்டது. என் உடல் நடுங்கத்தொடங்கியது. சில நிமிட ஒப்பாரி சிறுவனைத்தான் இறைவன் தனதாக்கிக் கொண்டான் என்பதைச் சொன்னது. காலையில் கண்டேனே. காதுகளை நம்ப முடியவில்லை. அந்தரித்த நிலையில் அயலில் விசாரித்தேன்.
விபத்தில் அன்று இரவு இறந்துவிட்டான். தெருவைக் கடந்து என்வீட்டிற்கு வரும்போது நிகழ்ந்ததாம். அப்படியானால் காலை கண்டது கனவு. நலமா என்று கேட்டதும் கனவு. ‘கனவும் நனவும் எதுவெனத் தெரியமால் குழம்பினேனா?’ என்னைக் காப்பாற்றச் சிறுவன் இறந்தானா? உறக்கம் பெறாத குழப்பத்திற்கு முடிவு வந்துவிட்டது. மீண்டும் அறைக்கு வந்தேன். யன்னல் திரைச்சீலை காற்றால் அசைந்தது. முன்வீடு தெரிந்தது. இந்த யன்னலினூடு தானே அன்று அவனைக் கண்டேன். அவனும் என்னைப் பார்த்தான். நான் செய்த முட்டாள் செய்கையைக் கவனிக்கா விட்டால் அவனுக்கு இப்படி நடந்திருக்காதே. உயிர்விட முன்னர் என்நிலை பற்றி யாருக்கோ சொல்ல நான் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டிருக்கிறேன்.
நெஞ்சு கனத்தது. தற்கொலை முயற்சியிலிருந்து என்னைக் காப்பாற்றி, தன்னைப்பறி கொடுத்தானே சிறுவன். சோகத்திலும் கண்ணீர் வரவில்லை. சுற்றிப் பார்த்தேன். ஒவ்வொரு முகத்திலும் அவனின் நல்ல உள்ளம் தெரிந்தது. இதய அதிர்வுகள் ஒவ்வொன்றும் அச்சிறுவனின் எதிரொலியாக அமைந்தன. உதவும் மனிதனாக என்னை மாற்றி, மனக்கண்ணில் வலம்வருகிறான். அதிரும் உள்ளம் இன்றும் உரையாடிக் கொண்டுதான் இருக்கிறது.
முற்றும்.
avathanikajan@yahoo.ca
- வாசிப்பின் நீரோட்டம்
- திரு முருகு
- எண் கோணத்தின் நான்கு கோணக் கேள்விகளுக்கு எனது பதில்
- புதியதோர் உலகம்
- தேவமைந்தனின் ”புலமைக் காய்ச்சலும் கவிஞருக்கான உரிமமும்’ கட்டுரை அருமை!
- பிலாக்கோபோபியா
- தொடர்நாவல்: அமெரிக்கா! அத்தியாயம் இருபத்தொன்று: கார்லோவின் புண்ணியத்தில்…
- ” பாபு என்றால் நாற்றமுடையவன் என்று அர்த்தம்”
- கால நதிக்கரையில்…… – அத்தியாயம் – 17
- காதல் நாற்பது – 32 நேசிப்பதாய் உறுதி அளித்தாய் !
- (பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 11 பாகம் -2 ஆண்டனி & கிளியோபாத்ரா இறுதிக் காட்சி (கிளியோபாத்ராவின் முடிவு)
- யாமறிந்த உவமையிலே
- திண்ணை. காம்
- கடிதம்
- சில வரலாற்று நூல்கள் – 3 -மதுரை நாயக்கர் வரலாறு (அ.கி.பரந்தாமனார் எம்.ஏ)
- மலேசிய அரசுக்குப் பரிந்து வரவேண்டிய கட்டாயம் என்ன?
- அராஜக சட்டமும், தனி மனித உரிமையும்
- கூர் கலை, இலக்கியத் தொகுப்பு
- கடிதம்
- அலுமினியப்பறவைகள்
- கோவை ஞானி தந்த அங்கீகாரம்!
- திரைவெளி – சுப்ரபாரதிமணியனின் திரைப்படக் கட்டுரைகள்
- பிரமிளின் ‘காலவெளி’: ‘கர்வத்தின் வெளிப்பாட்டில் ஞானத்தின் சீர்குலைவு’!
- சூட்டு யுகப் பிரளயம் ! ஓஸோன் வாயுவால் விளையும் தீங்குகள் -7
- புறாவின் அரசியல்
- கவிதை
- “அவர்கள் காதில் விழவில்லை!”
- வாவிகள் தற்கொலை செய்தன
- மன அதிர்வுகள்
- கைக்குமேல் புள்ளடி
- கௌசல்யா
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 21
- கை நழுவிய உலகம்