மனசெல்லாம் நீ!

This entry is part [part not set] of 36 in the series 20030815_Issue

வேதா


இன்னமும் நான் மழலைதான்,
நீ தூக்கியெறியும் ஒவ்வொரு கணமும்
தூரமாய் விழுந்த போதும்
துரத்தும் உன் நினைவுகளோடே வந்து
திரும்ப ஒட்டிக்கொள்கிறேன்!

மனதாரச் சிரித்து மாதங்கள் ஆகிறது,
உன் மலர்ந்த புன்னகைதான்
மருந்தென்று அறிந்தும்
மலர மறுக்கிறாய்! – என்
மனதைச் சிதைக்கிறாய்!

என் மழலை மனசுக்குத் தாயாய்
உணர்வுக்கு மென்மையாய்
அறிவுக்கு ஆசிரியனாய்
ஆன்மிகத் தந்தையாய்
அற்புதச் சுடராய் – என்
பெண்மையின் காவலனாய்
கவிதையின் காதலனாய்
கனவுகளின் மொத்தமாய் – என்
வாழ்வின் ஒட்டுமொத்த அர்த்தமாய்
எல்லாமாய் நீயென்றேன் – இன்று
இல்லாததும் நீயானாய்!

என் இயல்பை வெறுத்தால்
இனியதாய் மாற்றலாம்தான்! – உடன்
இருப்பையே வெறுத்தால், இனி
எதையெல்லாம் மாற்றுவது ?

ஒன்றுக்கு இரண்டாய்,
என் உயிர் உரசிய மரணம் கூட
உன் போலத்தானோ….
நின்று கொல்கிறது; நிதானமாய் கொல்கிறது!

உன் பாசக்கயிறை,
பாதி மட்டும் அத்துவிட்டு
பாராமுகம் காட்டுகிறாய்;
என்னைப் பைத்தியம் செய்து
தினம் ஊஞ்சல் ஆட்டுகிறாய்!

பிரித்துப் பிரித்து என்னை
பின்னமாக்கிப் பார்க்கும் முன்
பிரியமாய் சொல்லிவிடு,
‘பிடிக்கவில்லை ‘ என்றாவது!

நெருஞ்சி முள் நெஞ்சத்தில்
குத்தி நான் கண்டதில்லை!
நிம்மதியைத் தொலைத்துவிட்டு
நடைப்பிணமாய் ஆனதில்லை….
இருந்தாலும்,
நீ சொல்லும் வார்த்தைக்கு
நிச்சயம் பதில் தருவேன்,
நிம்மதியாய் கண் அயர்வேன்!!

என் மனசுக்குள் கனன்றிருக்கும்
உன்னுடன் வாழ்ந்த மாலைகள்!
மங்காத சுடராய்
உன் முத்தத்தின் ஈர மிச்சங்கள்!
மூச்சின் தரம் பிரித்து – என்
தாகம் தீர்த்த சொர்க்கங்கள்!
பேச்சின் குணம் தெரிந்து – என்னைப்
பேசாமல் செய்த பக்கங்கள்!

உன் பார்வையில் உயிர்த்திருந்தேன்,
பாசத்தில் கலந்திருந்தேன்
மனசுக்குள் கூடுகட்டி
மகராணியாய் இருந்தேன்!
இன்று, வேரோடு என்னை
வேறிடமாக்கி வைக்க
விரும்புகிறாய் விதம் விதமாய்!

வெட்கமாய் தோன்றவில்லை ?
விருப்பமாய் என் வருடலுக்கும்
வெறுப்பை நீ உமிழ்வதற்கும்
வித்தியாசம் தெரியவில்லை ?

மனதில் நுழைந்த நாள் முதலாய்
மணக்கும் தமிழ் ஆனாய்!
என்னை
நேற்றாய், இன்றாய், நாளையாய்
நிறைத்துவிட்டுப் போவதற்கு, உயிரை
நனைத்துவிட்டுப் போவதற்கு
ஏனிந்த பிடிவாதம் ?

உன்
உறவையும் உலகையும்
உதறச் சொல்லவில்லை….
என்னை
உயிர்ப்பிக்கச் சொல்கிறேன்!
தமிழே சாட்சியாய்,
என் உணர்வெல்லாம் மெய்ப்பிக்கச் சொல்கிறேன்!

உடனே தேவையில்லை – என் உலகம்
அழியும் முன்பாவது!!

உன் தொடுதலுக்காய்,
என் ஒவ்வொரு பொழுதும் காத்திருக்கும்….
காலங்கள் கடந்தாலும்
நீ வருவாய் என…
மகரந்தம் மனசெல்லாம் தருவாய் என….

அறிவும் அழகும்
ஆண்மையும் கம்பீரமும்
அழிச்சாட்டியம் செய்துன்னை
தடம் மாறச் செய்திடலாம்…..

நான்
தேடித் தேடித் தீர்ந்து போகும் அந்நேரம்,
உன் தேடல் தடம் பதித்தால், – என்
தேவை தர விழைத்தால்
நம் காதலைக் கவிதை செய்து
கடைசி தவணையாய்….
மாலையோடு வருவாயா ? உன்
மனசார அழுவாயா ?
……………………
நான்
மரித்தவளாகவும் இருக்கக்கூடும்!

piraati@hotmail.com

Series Navigation

வேதா

வேதா