மண்ணாந்தையின் ஞானதிருஷ்டியில்: வருங்கால திண்ணையிலிருந்து ஒரு இணைய பக்கம்.

This entry is part [part not set] of 31 in the series 20030525_Issue

மண்ணாந்தை


பொதுவாகவே ஆந்தைகளுக்கு ஞான திருஷ்டி உண்டு. அதிலும் மண்ணாந்தைகளுக்கு அது சிறிது கூடுதல். எனவே ஒரு மதிய வேளையில் சோம்பிக் கிடந்த எனக்கு திடாரென ஏற்பட்ட ஞான திருஷ்டியில் வருங்கால திண்ணை இதழொன்றின் இணைய பக்கங்கள் தெரிந்தன. ஆனால் ‘ப்ராஸசஸர் ‘ குழப்பமோ அல்லது ஞான திருஷ்டிக்கான RAM அளவு போதவில்லையோ தெரியவில்லை, ஏதோ ஒரு வாரத்தின் கடிதங்கள் பகுதியும் அடுத்த வாரத்தில் வெளியான மற்றொரு கடிதமும் மட்டுமே காணப் பெற்றேன். வாசகர்கள் கால இயந்திரத்தில் ஏறி நாலந்தா பல்கலைக் கழகம் சென்று தர்க்க சாஸ்திரம் படித்து வந்த பின்னரோ அல்லது ஒரு காலத்தில் சோவியத் யூனியன் மலிவு விலைக்கு விற்ற ‘ப்ரோகரஸ் ‘ (அல்லது ‘மிர் ‘ ?) பதிப்பகத்தார் வெளியிட்ட ‘The Dialectical Logic ‘ (விலை ரூ 10/- மட்டுமே) நூலை ஏதாவது தோழர்களிடமிருந்து வாங்கி படித்த பின்னரோ, எந்த வித கட்டுரைகள் இந்த வித கடிதங்களை உருவாக்கியிருக்ககூடும் எனும் காரண காரிய சங்கிலியை ஊகித்தறியும் முயற்சியில் ஈடுபடலாம்.

************************************************************************

திண்ணை ஆசிரியருக்கு,

வழக்கம் போல தன்னுடைய குழப்பும் பாணியில் நரவிந்தன் ஆலகண்டன் திண்ணையில் ‘ஆப்கானிஸ்தானின் ஹிந்துக்கள் எங்கே ? ‘ என்கிற தலைப்பில் எழுதிய கட்டுரையில் ஒரு தலை சிறந்த பத்திரிகையாளரான நாநி அவர்களை குறித்து அவதூறு பொய்களை எழுதியுள்ளார். அந்த பொய்களை எல்லாம் மறுப்பது என் வேலை அல்ல என்றாலும், அவர் கூறுவது போல ஆப்கானிஸ்தானில் வாழ்ந்த ஹிந்துக்கள் படுகொலை செய்யவோ அல்லது உரிமைகள் மறுக்கப்படவோவில்லை என்பதனை ஆதாரத்துடன் நிறுவுகிறேன். தலிபான்கள் ஒரு மறுபார்வை என்ற தலைப்பில் 11.10.2020 அன்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பேரா.தமீலா ரொப்பார் ஆற்றிய உரையை கீழே கொடுக்கிறேன்:

‘உண்மையில் தலிபான்கள் தீபாவளி அன்று ஆப்கானிஸ்தானிய ஹிந்துக்களும் சீக்கியர்களும் வாண வேடிக்கைகளில் ஈடுபடக்கூடாது மற்றும் தீபங்கள் ஏற்றக்கூடாது என்று கூறியது உண்மைதான். ஆனால் இதை அவர்கள் மதவெறியால் செய்தார்கள் என கூறுவது ஒருவித பாசிச மனோபாவத்தைதான் காட்டுகிறது. உதாரணமாக அதே காலகட்டத்தில் இந்திய நீதிமன்றமும் தீபாவளி வாண வேடிக்கைகளால் சுற்றுப்புற சூழல் மாசு ஏற்படுவதை காரணம் காட்டி தீபாவளி வாண வேடிக்கைக்கு பல கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. எனவே தலிபான்களின் செயலை நாம் மதவெறியால் ஏற்பட்டது என்று கருதாமல் சுற்றுப்புற சூழல் உணர்வினால் ஏற்பட்ட ஒன்று என கருத இடம் இருக்கிறது. வகுப்புவாத வரலாற்று பார்வையில் ஆப்கானிஸ்தானின் ஹிந்து மக்கள் தொகை அழிந்ததற்கு அங்குள்ள மதரீதியிலான கொடுமைகள்தான் காரணம் என கூறப்படுகிறது. எனவே நம்மைப்போன்ற முற்போக்கு வரலாற்றறிஞர்களுக்கு இது போன்ற திரிபுகளை பொய் என நிறுவுவது அவசியமாகிறது. இந்தியாவில் பார்சிகளின் மக்கட் தொகை குறைந்து வந்துள்ளது. இது போலவே ஆப்கானிஸ்தானிய ஹிந்துக்களின் மக்கட் தொகையும் குறைந்தது என ஏன் கொள்ளக் கூடாது ? பார்ஸிகளின் மக்கட்தொகை பெருக்கம் குறைந்ததற்கு ஹிந்து மதவெறி காரணம் காட்டப்படாத போது, ஆப்கானி ஸ்தானில் மட்டும் ஹிந்து மற்றும் சீக்கிய மக்கட்தொகை இல்லாமல் போனதற்கு தலிபான்களையோ அல்லது முஜாக்தின்களையோ ஏன் குறை சொல்ல வேண்டும் ? ‘

அண்மைக்கால வரலாற்றுப் பார்வையில் எவ்வாறு வகுப்புவாதம் திணிக்கப்படுகிறது என்பதை பேரா.தமீலா ரொப்பார் தெளிவாக நிரூபித்துள்ளார். எனவே நரவிந்தன் ஆலகண்டனின் ‘ஆப்கானிஸ்தானின் ஹிந்துக்கள் எங்கே ? ‘ எனும் கட்டுரை அவரது மற்ற கட்டுரைகள் போலவே பொய் பிரச்சாரமும் திரிபு வேலையும் கொண்டது என்பது தெளிவாகிறது. இத்தகைய கட்டுரைகளை திண்ணை வெளியிடுவதால் அதன் நம்பகத்தன்மையை அது வாசகர்களிடையே இழந்துவிட்டது.

-நிவி கே ரீனிவாஸ்

திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு,

நான் எழுதிய ‘ஆப்கானிஸ்தானில் கக்கூஸ் தேடுபவர்கள் ‘ எனும் கட்டுரைக்கு பதிலாக நரவிந்தன் ஆலகண்டன் எனும் பெயரில் பாசிச பிரச்சாரம் செய்யும் ஒருவரின் ‘ஆப்கானிஸ்தானின் ஹிந்துக்கள் எங்கே ? ‘ எனும் அவதூறு கட்டுரையை பிரசுரித்து உள்ளீர்கள். அதில் அவர் அழிந்து போன ஹிந்துக்களை நான் கண்ணியமற்ற முறையில் குறிப்பிடுவதாக கூறியுள்ளார். ஆனால் நான் எழுதியிருந்ததெல்லாம், ‘ஆப்கானிஸ்தானில் தலிபான்களை மதவெறியர்கள் என கூறிக்கொண்டு அங்கே ஹிந்துக்கள் கட்டிய கக்கூஸ்களை தேடி அலைய முயற்சிப்பவர்கள் ‘ என்பதுதான். இதில் எங்கே நான் கண்ணியமற்ற முறையில் ஹிந்துக்களை பேசியுள்ளேன். இந்த அவதூறு முயற்சிக்கு நரவிந்தன் ஆலகண்டன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும். நரவிந்தன் ஆலகண்டனின் அவதூறுக் கட்டுரையை வெளியிட்டதற்காக திண்ணை ஆசிரியர் குழு உடனே வருத்தம் தெரிவிக்க வேண்டும். கண்ணியமான கட்டுரையாளனான என்னை அவதூறாக சித்தரிக்கும் இந்த பாசிச சதிக்கு பின்னால் இருக்கும் காந்தியாரை கொன்ற சக்திகளை அவர்கள் எந்த வேஷத்தில் வந்தாலும் நான் அறிவேன்.

-நாநி.

திண்ணை ஆசிரியருக்கு,

அகதிகள் மற்றும் இனப்படுகொலைகள் ஆகியவை குறித்து மிகவும் மனம் வருந்தி சிந்தித்தவன் என்ற முறையில் நான் சில கருத்துக்கள் கூற விரும்புகிறேன். பேரா. ரொப்பாரின் அண்மைக்கால வரலாற்றுப் பார்வைகள் முக்கிய இடத்தை வகிப்பவை. அத்தகைய ஒருவரின் கருத்துக்களை விமர்சிக்கையில் சிறிதே நிதானத்துடன் நரவிந்தன் ஆலகண்டன் போன்றவர்கள் எழுதவேண்டும். பிரிவினை அகதிகளுக்கு ஆர்.எஸ்.எஸ் அவர்களது பெரிய இயக்க அமைப்பினால்செய்த பணிகள் அவர்களது எதிரிகளால் கூட ஒப்புக்கொள்ளப்படுகின்றன. ஆனால் சில சுதேதி அமைப்புகள் அமெரிக்க எதிர்ப்பைக் காட்டினாலும் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க தாக்குதலுக்கு ஆளான தலிபான்களுக்கு அவர்கள் ஒரு உதவியும் செய்யவில்லை என்பதை நாம் மறக்கக் கூடாது. கேரளத்தில் கோச்சேட்டன் கொச்சு ஜியார்ஜ் (புழவன்னேல் வலியவீடு) என்கிற இடது சாரி சிந்தனையாளர்தான் முதன்முதலில் இந்திய மரபு சார்ந்து மார்க்சிய கருத்தியல் அடிப்படையில் அகதிகள் பிரச்சினையை அணுகியவர். சைத்ய யதன்ய நிதி பிரான்ஸு பல்கலைக்கழகத்தில் அதீத உளவியல் பிரிவில் பணியாற்றிய போது கோ.கொ.ஜியார்ஜ் நிதிக்கு கடிதங்கள் எழுதியுள்ளார். கோ.கொ.ஜியார்ஜ் ‘நாடில்லாதவனானு ஞான் ‘ (நான் நாடில்லாதவன் என்பது இதன் பொருள்) என ஒரு சிறுகதையே எழுதியுள்ளார். ஈரோடு நானியும் கூட ‘தனிமைப்படுத்தப்படும் மனிதன் தன்னை அகதியாக உணர்வது மார்க்சியத்தின் உள்ளொளியால்தான். அந்த காலத்தில் கம்யூனிஸ இயக்கம் இல்லாததால் புத்தர் ஞானம் (மார்க்சிய உள்ளொளி) தேடி அலைய வேண்டியதாயிற்று. அப்போது போது அவரது அகநிலை ஒரு அகதியைப் போல இருந்தது என்பதையும் அந்த அகநிலைக்கான புறவெளி தீர்வாகவே மார்க்சிய இயக்கத்தை இந்திய சூழலில் புரிந்து கொள்ள வேண்டும் ‘ என இந்திய அகதி பிரச்சினையின் தத்துவ வேர்களை பற்றி கூறியுள்ளார். எனவே அகதிகள் பிரச்சினைக்கு இடதுசாரிகளின் முன்னோடி பங்களிப்பை புறக்கணித்து நரவிந்தன் ஆலகண்டன் எழுதுவது வெறும் அறியாமை மட்டுமே.

-மெய ஜோகன்

திண்ணை ஆசிரியருக்கு,

நான் எழுதிய கட்டுரை அவதூறு கட்டுரை எனக்கூறப்படுவது எனக்கு மிகவும் மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. நான் எவரையும் தனிப்பட்ட விதத்தில் தாக்கவில்லை. நான் கூறுவதெல்லாம், நாகர்கோவிலில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் முதல் குஜராத் பூகம்பம் வரை அனைத்து மானுட சோகங்களுக்கும் மார்க்சியமே காரணம். 1943 இல் ஜனவரி 21 ஆம் தியதி பைலோருஸிய மகாணத்தில் சரியாக காலை 9 மணி 24 நிமிடத்தில் ஸ்டாலினின் தளபதி நிகொலாய் சிக்கியோப் என்பவர் தானியோவ் ருஸ்திவானா என்கிற மரபியலாளரை அவரின் டார்வினிய நிலைபாட்டிற்காக கொன்ற போது அதை கண்டிக்காத ராகுல சங்கிருத்தியாயனை நாநி தன்னுடைய கட்டுரையில் 4ஆவது பாராவில் 27 ஆவது வரியில் மேற்கோள் காட்டியிருப்பதை நான் ஆவண ஆதாரத்துடன் நிரூபிக்க முடியும். ஸ்டாலின் செய்த கொலைகளுக்கு இங்குள்ள இடதுசாரிகள் ஏன் துக்கம் அனுசரிக்கவில்லை ? புரூடால்ப் லையோவென்ஸ்கியின் நூலில் மார்க்சிய படுகொலைகளுக்கான ஆதாரங்கள் உள்ளன என்பது நாநிக்கு தெரியாதா ? இந்த கேள்விகளுக்கெல்லாம் மார்க்சிஸ்ட்களிடம் பதில் இருக்காது. ஏனென்றால் மார்க்சியத்திற்கு அழிக்கத்தான் தெரியும். ஆக்கத் தெரியவேண்டுமென்றால் காக்கி நிக்கர் போட்டால்தான் முடியும். காக்கி நிக்கர் போட்டால் உடலில் ஞான நிலை உருவாக்க ஹார்மோன் புரதங்கள் உடனே சுரக்கின்றன என அமெரிக்க மரபணு க்வாண்டம் ஆராய்ச்சி மைய இயக்குநர் ஜேம்ஸ் ஆடம்ஸ்கி தெரிவித்துள்ளார் (பார்க்க: www.s157~wer.org/asdh.asp) என்பதை நினைக்கும் போது நாம் எத்தகைய ஞான மரபுக்கு சொந்தக்காரர்கள் என்று கண்ணீர் விட தோன்றுகிறது. எனவே இதிலிருந்து என்ன தெரிகிறது ? மார்க்சியத்தை தூக்கியெறிந்துவிட்டு பாரத ஞான மரபை எல்லோரும் ஏற்று கொண்டு காக்கி நிக்கர் போடாதவரை இந்த நாட்டில் பிரச்சனைகள் வரத்தான் செய்யும்.

-நரவிந்தன் ஆலகண்டன்

மதிப்பிற்குரிய திண்ணை ஆசிரியருக்கு,

ஹிந்துக்கள் நல்லவர்கள்தான். தலிபான்களும் மோசமானவர்கள் அல்ல என்பதற்கான சில ஆதாரங்களை பேரா. தமீலா ரொப்பார் முன்வைத்திருக்கிறார். பேரா. தமீலா ரொப்பாரும் நல்லவர்தான். எனவே எல்லோரும் நல்லவர்களாகதான் இருக்க முடியும். ஆகவே ‘கக்கூஸ் ‘ போன்ற வார்த்தைகளை எல்லாம் நாநி போன்றவர்கள் பயன்படுத்துவது மன வருத்தத்தை பலருக்கு ஏற்படுத்தும். அதை திண்ணை ஆசிரியர் குழுவும் நாநியும் தவிர்க்கலாம்.

-ஹஃபீக்

அடுத்தவார திண்ணை கடிதம்

ஆசிரியருக்கு,

என்னுடைய கடிதத்தை வெளியிட்டு அதை சமன்படுத்த ஹஃபீக் என்கிற ஹிந்து வெறியரின் கடிதத்தையும் வெளியிட்டுள்ளீர்கள். கடந்த பத்து வருடங்களாக கண்ணியமாகவே எழுதி வருபவன் நான் என்பதை முற்போக்கு சிற்றிதழாளர் அனைவரும் ஒப்புக்கொள்வர். ‘ஆப்கானிஸ்தானில் இருபதாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக கூறப்படும்

ஹிந்துக்களுக்கு இந்தியாவில் நினைவு ஸ்தூபி எழுப்பவேண்டும் என்று கூறும் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் முதலில் ஆப்கானிஸ்தானில் வாழ்ந்ததாக கூறப்படும் ஹிந்துக்கள் கட்டிய கக்கூஸ்களை முதலில் கண்டுபிடித்தால் அவர்கள் கோரிக்கைக்கு அது இன்னமும் வலு சேர்க்க கூடும். ‘ என்று நான் எழுதியிருந்தேன்.ஒரு இடத்தில் ஒருவர் வீடு கட்டினால் அங்கே கக்கூஸும் இருக்கும் என்பது சிறு குழந்தைக்கு கூட தெரியும். ஆனால் நான் கண்ணியமில்லாமல் எழுதிவிட்டதாக அவதூறு கடிதம் எழுதுகிறார் ஹஃபீக். அதனை திண்ணை வெளியிடுகிறது. என்ன அல்பத்தனமான ஜர்னலிஸம் இது ?

-நாநி.

கருத்து என்பது வேறு. தகவல் என்பது வேறு. ஒரு கட்டுரையில் உங்களால் ஜீரணிக்க முடியாத விஷயங்களை கருத்தாக எடுத்துக்கொண்டு விட்டால், அஜீரணத்தால் இரவு தூக்கம் இல்லாமல் போவதை தவிர்க்க முடியும். அது முடியாத பட்சத்தில், ஒவ்வொரு கட்டுரையையும் (குறிப்பாக நரவிந்தன் ஆலகண்டனின் கட்டுரையை) வாசித்த உடன் அஜீரண நிவாரணியாக கீழே காணப்படும் திண்ணை ஆசிரியர் குழு அறிக்கையை ஒரு முறை மனதில் சொல்லி விட்டு ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தால் போதுமானது: திண்ணையில் இதுவரை நீங்கள் வாசித்ததும், வாசிப்பதும் வாசிக்கப் போவதும் எல்லாம் மாயையே. இதை வெளியிடுவதும் மாயை; இங்கு வெளியிடப்படுவதும் மாயை. இதை நீங்கள் உண்மை என கருதினால் அதுவும் கூட மாயையே. மாயை மாயையை வெளியிட்ட பின் எஞ்சி நிற்பதும் மாயையே. எத்துவாய பின்நவீனத்துவாய பரம சம்பூர்ண ஜீரணம்!

-திண்ணை ஆசிரியர் குழு.

Series Navigation

மண்ணாந்தை

மண்ணாந்தை