மண்டைக்காடு: நடந்ததெல்லாம் நினைத்துப் பார்க்கிறேன்

This entry is part [part not set] of 48 in the series 20060203_Issue

மலர் மன்னன்


நண்பர் கற்பக விநாயகம் எனது கருத்துகளுக்கு எதிர்வினையாற்றுவதன் மூலம் தவறான தகவல்களை அளிப்பதாலும் எனது தகவல்களை முழுமையாகப் படிக்காமலேயே பதிலிறுக்கத் தொடங்கிவிடுவதாலும் எனக்கு ஆதாரப்பூர்வமாகத் தகவல்களைப் பதிவு செய்யும் வாய்ப்பு மேலும் அதிகரிப்பதென்னவோ வாஸ்தவந்தான். இதற்காக நான் அவருக்கு நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன் என்றாலும், மற்றவர்களின் எதிர்பார்ப்புக்கிணங்க நான்

திட்டமிட்டுள்ள எனது காலமும் அதனூடே எனது அனுபவங்களுமான பதிவுகள் தாமதப்

படுவதையும் குறிப்பிட வேண்டியுள்ளது.

கற்பக விநாயகத்தின் எதிர் வினையைப் பொருட்படுத்தாமல் என் திட்டப்படி எழுதிச் செல்லலாம் என்றால் அவரது தவறான தகவல்கள் உண்மையானவையாக அங்கீகரிக்கப் பட்டுவிடும் பிழை நேர்ந்துவிட வாய்ப்புள்ளது. அதற்கு நான் அறிந்தே இடங்கொடுப்பது

திண்ணை வாசகர்களுக்கு நியாயம் செய்வதாகாது. எதிர் வினையாற்றுவோர் உண்மையான விவரங்களை நன்கு அறிந்திருந்தாலன்றி அவற்றைத் தெரிவிப்பதில்லை என்றும், முழுமையாகப் புரிந்துகொண்ட பிறகே மறு கருத்துச் சொல்வது என்றும் ஒரு விஷயம் பற்றி முழுமையாக எதுவும் தெரியாத நிலையில் சந்தேகம் கேட்பதன்றி எதையும் சாதிப்பதுபோல் கருத்து தெரிவிப்பதில்லை எனவும் ஒரு சுயக் கட்டுப்பாடு விதித்துக் கொண்டால் கால விரையம், இட விரையம், உழைப்பு விரையம் ஆகியவற்றைத் தவிர்த்து விடலாம். பத்திரகைகளில் செய்தியாகவும், செவி வழிச் செய்தியாகவும் பிறர் அறிந்த பல சம்பவங்களுக்கு நான் நேரடி சாட்சியாகவே இருந்திருக்கிறேன். ஆனால் நான் தெரிவிக்கும் செய்திகளுக்கெல்லாம் ஆய்வுக் கட்டுரைகளில் குறிப்பிடுகிற மாதிரி அடிக் குறிப்புகள் தரவேண்டும் என்று எதிர்பார்த்தால் என் பொழுது முழுவதும் பழங் குப்பைகளைக் கிளறித் தேடிக் கொண்டிருப்பதிலேயேதான் கழிந்துபோகும்.

சிதம்பரம் நடராஜப் பெருமான் ஆலயத்தினுள்ளே நந்தனார் திரு உருவ விக்கிரகம் பொன்னம்பலத்திற்கு எதிரே நிருத்திய சபையை யொட்டி தெற்குச் சுவர் அருகே இருந்ததாக உ.வே.சா. அவர்களும் கொண்டல் மகாதேவனும் தெரிவித்திருப்பதன் அடிப்படையில் அதே இடத்தில் திரும்பவும் பிரதிஷ்டை செய்யப்பட வேண்டும் என்பது நடராஜப் பெருமானின் மெய்யன்பர்களான, நந்தனாரின் அடியவர்களான எமது பணிவன்பான வேண்டுகோள். ஆனால் கற்பக விநாயகம் நான் ஏதோ ஈ.வே.ரா. சிலையை முச்சந்திகளில் வைக்கிற மாதிரி சிதம்பரத்தில் கோயிலுக்கு வெளியே எங்காவது வைக்கக் கோருவதுபோல் எழுதுகிறார்! நடராஜப் பெருமான் மீது பக்தியோ நந்தனார் மீது மரியாதையோ, சைவத் திருமுறைகள் மீது ஈடுபாடோ இல்லாதவர்களுக்குச் சம்பந்தம் இல்லாத விஷயம் இது. பிளவை மேலும் மேலும் தூண்டிவிடும் உற்சாகம்தான் இதில் புலப்படுகிறதேயன்றி உண்மையான அக்கரையா தெரிகிறது ?

பாரதியாரின் மகள் பாரதியாரின் தாய் வழியில் சுடலை மாடன் குல தெய்வம் என்று பதிவு செய்திருப்பதாக நான் எழுதினால் பாரதியாரின் குல தெய்வம் மாடன் என்று நானாகவே எழுதியிருப்பதுபோல் அவர் அரைகுறையாக விஷயத்தைப் புரிந்து கொண்டு வினா எழுப்புகிறார். இனி நான் என் பதிவை நிரூபிப்பதற்காக தங்கம்மா பாரதியின் புத்தகத்தைத் தேடியெடுத்து, பக்கங்களைப் புரட்டிக் காலவிரையம் செய்தாகவேண்டும்! சரி, செய்கிறேன்.

புத்தகத்தின் பெயர்: தங்கம்மாள் பாரதி படைப்புகள்

ஆசிரியர்: பாரதியாரின் மூத்த மகள் தங்கம்மாள் பாரதி

வெளியீடு: அமுத சுரபி வெளியீடு, அண்ணா நகர் கிழக்கு, சென்னை 600 102

பக்கம் 38-39 பாரதியார் பற்றி ‘அமரன் கதை ‘ என்று நாடகவடிவில் எழுதப்பட்ட சரிதை

யில் ஆறாம் அத்தியாயம் ‘கீரைக் குல தெய்வம் ‘ என்ற தலைப்பின் கீழ் வரும் வரிகள்:

சுப்பையா(பாரதியார்):பாட்டி, நமது குல தெய்வம் சுடலை மாடன் என்று முன்பு சொல்லியிருக்கிறாய். ஆனால் இப்போது கீரையைக் குல தெய்வம் என்கிறாயே.

பாட்டி: சுப்பையா, குல தெய்வத்தின் அருள் இல்லாவிட்டால் குலத்தார் எப்படி சந்தோஷமாய் இருக்க முடியும் ? உன் அப்பாவுக்குக் கீரை இல்லாவிட்டால் உயிர் வாழமுடியாது.

சுப்பையா: பாட்டி, சுடலை மாடனைப் பற்றிக் கதைகள் ஏதாவது உண்டா ?

பாட்டி: ஐயா, சுப்பையா, நமது ஊரும் நமது குல தெய்வமும் பெருமை வாய்ந்தவை.

சீவலப்பேரி வாசிகள் (பாரதியாரின் தாய் வழி சொந்த ஊர்) மிகவும் பக்தியோடு போற்றும் தெய்வம் சுடலை மாடன்.

சுப்பையா: பாட்டி, நாம் சிவன், விஷ்ணு, முதலிய தெய்வங்களை வணங்குகிறோம். குல தெய்வமாக வேறொரு தெய்வத்தை வரிப்பானேன் ?

பாட்டி: ஐயா, எனக்கு உண்மையான காரணம் தெரியாது. ஒருவேளை இப்படி இருக்கலாம் என்று நினைக்கிறேன். ப்ரம்மா, விஷ்ணு, ருத்திரன் மூவரும் உலகத்தின் ரட்சகர்கள். இவர்கள் உலகத்தைக் காக்கிறார்கள். ஒவ்வொரு குடும்பத்தையும் காக்க, இம்மும்மூர்த்திகளின் அருள்பெற்ற சாஸ்தா, பத்ரகாளி, மாடன் போன்ற பெயருடையை தேவதைகளை ஜனங்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப நியமித்துக் கொள்கிறார்கள். நமது குடும்பத்துப் பெரியவர்கள் சிவ பக்தர்கள். ஆதலால் சுடலையாடியின் அம்சமான சுடலை மாடனைத் தமது குல தெய்வமாகக் கொண்டனரோ என்னவோ ?

சுப்பையா: பாட்டி, நமது முன்னோர் சுடலை மாடனைக் குல தெய்வமாகக் கொண்டது பொருத்தம்தான் என்று தோன்றுகிறது….

இப்படிப் போகிறது, நாடக வடிவிலான அமரர் பாரதியின் கதை. ஆகவே உயர் ஜாதி ஹிந்துக்கள் மேலான தெய்வங்களைத் தாம் வணங்கி, கீழ் ஜாதியினர் வணங்கக் கீழான தெய்வங்களை ஒதுக்கி வைத்தனர் என்று மனம் போன போக்கில் சொல்லி, ஏற்கனவே பிளவுபட்டுள்ள ஹிந்து சமூகத்தை மேலும் மேலும் பிளவுபடுத்த வேண்டாம் என வேண்டுகிறேன். ஒத்துழைக்க விருப்பமில்லாவிடினும் உபத்திரவம் செய்யாமலாவது இருக்கலாகாதா ? பாரதியாரின் தாய் வழியில் சுடலை மாடன் குல தெய்வம் என்று வேறொரு கட்டுரையிலும் தங்கம்மா பதிவு செய்திருக்கிறார். அதையும் தேடித் தர எனக்கு அவகாசம் இல்லை.

என்னிடம் ஆயிரக் கணக்கான புத்தகங்களும் ஆவணங்களும் உள்ளன. மதிப்பு இரண்டு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாவே இருக்கும். நான் புத்தகங்கள் வாங்கிக் குவிப்பது இன்னும் முற்றுப் பெறவுமில்லை! என் மனைவி என்மீது காணும் பலவாறான குறைபாடுகளுள் இப்படிக் குடும்ப நிர்வாகம் பற்றிய பிரக்ஞையின்றி எப்போது பார்த்தாலும் புத்தகங்களாக வாங்கிக் கொண்டிருப்பதும் ஒன்று. எதற்குச் சொல்லவருகிறேன் என்றால் நான் பதிவு செய்வதற்கெல்லாம் என்னிடம் ஆதாரங்கள் உண்டு. ஆதாரம் இல்லாமல் நான் எதையும் பதிவு செய்வதில்லை. எனக்குத் தெரியாத விஷயங்கள் பற்றி எல்லாம் தெரிந்ததுபோல் எழுதுவதுமில்லை. ஆனால் நான் என்ன எழுதினாலும் ஏதோ முனைவர் பட்டத்திற்கு ஆய்வுக் கட்டுரை எழுதுவதுபோல ஆதாரங்களையும் குறிப்பிடவேண்டும் என்று எதிர்பார்த்தால் அது நியாயமே எனினும் என்னைப் பொருத்த வரை கால விரையமும் உழைப்பு விரையமும் ஆகும். மேலும், எழுதப்படும் கட்டுரையும் வளர்ந்துகொண்டே போகும். இப்போது என் தொழில் செயலாற்றுவதேயன்றி, எழுதுவதல்ல. ஆகவே தக்க ஆதாரங்களோடுதான் எதையும் பதிவு செய்கிறேன் என நம்புமாறு வாசகர்களை வேண்டுகிறேன். ஆதாரங்களையும் அடிக்குறிப்பு மாதிரி பதிவு செய்ய வேண்டும் என

எதிர்பார்த்தால் எனக்கு அதற்கு அவகாசம் இல்லை என்றே கூற வேண்டியிருக்கும். கற்பக விநாயகம் ஆதாரம் கேட்டுவிட்டார், அளிக்கவில்லயானால் நான் ஆதாரமின்றி எழுதுவதாக எவரும் எண்ணிவிடலாகாது என்பதற்காக விரிவாகவே ஆதாரம் தந்துவிட்டேன். இதுவே முதலும் முடிவுமாக இருப்பது நல்லது.

மண்டைக்காடு சம்பவத்தின்போது நான் கன்னியா குமரி மாவட்டத்திலேயே வசிக்கத் தொடங்கிவிட்டேன் எனலாம். எமது ஹிந்து சமூகம் எங்கு பிரச்சினைக்குள்ளாக நேரிடினும் முதல் ஆளாக அங்கே போய்ச் சேர்ந்துவிடுவதுதான் இன்றளவும் எனது செயல்முறை. நிகழ்ச்சிகளைப் பதிவு செய்வது மாத்திரமின்றி, ஹிந்துக்கள் சார்பாகத் தக்க நடவடிக்கைகளை எடுப்பதற்காகவும்தான்! பத்திரிகையாளன் என்பதால் காவல் துறையினர், அதிகாரிகள் மத்தியில் என் பேச்சு எடுபடும் அல்லவா ? கடமை தவறித் தயங்கி நிற்கும் அதிகாரிகளை எச்சரித்தும் நியாயம் நிலை நாட்டப்பட முனைந்து

நிற்பேன்!

கற்பக விநாயகம் மண்டைக்காடு பற்றிப் பிரஸ்தாபித்து விட்டார். அதுமட்டுமில்லாமல்,

விசாரணைக் குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி வேணுகோபால் என்ன கூறியுள்ளாரோ அதற்கு நேர்மாறான விஷயத்தையும் பதிவு செய்துவிட்டார். இதற்கு நான் விளக்கம் தரவில்லையெனில் அவர் சொன்னதுதான் சரி என்று ஆகிவிடும். இதனால் கால விரையம், உழைப்பு விரையம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் விவரங்கள் தரவேண்டியதாகிறது.

மண்டைக்காடு சம்பவம் குறித்து விசாரணை செய்து அறிக்கை அளித்த வேணுகோபால், 1983 லேயே மதமாற்றத் தடைச் சட்டம் இயற்றுமாறு தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்திருக்கிறார், அந்த அறிக்கையில்! முதல்வராக இருந்த எம்ஜிஆர் அந்தப்

பரிந்துரையை ஏற்கத் தவறிவிட்டார் (வேணுகோபால் அறிக்கை, எம்ஜிஆருக்கும் எனக்கும் இருந்த தொடர்பு, அறிக்கை விஷயமாக எம்ஜிஆர் என்னிடம் எதிர்பார்த்த

சில காரியங்கள் ஆகியவற்றைச் சொல்வது எம்ஜிஆர் எடுத்த ரகசியக் காப்புப் பிரமாணத்திற்கு, அவர் இப்போது இல்லையாயினும் பங்கம் நேருமெனத் தோன்றுவதால், அவர் மீதுள்ள மரியதையின் காரணமாக அது பற்றிச் சொல்ல விரும்பவில்லை). கன்னியாகுமரி மாவட்டத்திற்குக் கன்னிமேரி என்றும் நாகர்கோவிலுக்கு நாதர்கோவில் என்றும் பெயர் மாற்றம் செய்யவேண்டும் என்ற ஆர்வம் கிறிஸ்தவர்களுக்கு இருந்தது பற்றி நீதிபதி வேணுகோபால் அவர்களே எழுதிய கட்டுரையை கோபால் ராஜாராமுக்கு அனுப்பியிருக்கிறேன். அவருக்கும் நான் ஆதாரமின்றி எழுதுபவன் அல்ல என்பதை உறுதி செய்வதற்காக.

நீதிபதி வேணுகோபால் தமது அறிக்கையில், ‘சிறுபான்மையினர் பெரும்பான்மையினராகும்போது, துணிவும். பொறுமையின்மையும், ஏதேனும் சாதிக்கவேண்டும் என்கிற துடிப்பும் மிக்கவர்களகிவிடுகிறார்கள். கன்னியாகுமரியில் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையினராக உருவாகத் தொடங்கியதால் அந்த ஆர்வம் காரணமாக கன்னியா குமரி மாவட்டத்திற்குக் கன்னி மேரி என்றும் நாகர் கோவிலுக்கு நாதர் கோவில் என்றும் பெயர் மாற்றம் செய்யவேண்டும் என்று பேசத்தலைப்பட்டார்கள். இது ஹிந்துக்களிடையே குமுறலை ஏற்படுத்தியது ‘ என்றுதான் குறிப்பிடுகிறாரேயன்றி, அப்படி யொரு வதந்தியை ஹிந்துக்களே பரப்பியதாகக் கூறவில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் மதமாற்ற வேலைகளில் கிறிஸ்தவர் மிக மும்முரமாக ஈடுபட்டு ஹிந்துக்கள் மத்தியில் பதற்றத்தைத் தோற்றுவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் கவனியுங்கள், மண்டைக்காடு கலவரம் தோன்றியதற்கு அதுவல்ல காரணம்.

மண்டைக்காடு ஒரு கடலோர கிராமம். ரோமன் கத்தோலிக்க மீனவர்கள் மிக அதிக அளவில் வசிக்கும் பகுதி அது. தொன்று தொட்டே, மீனவர்கள் கிறிஸ்தவராக மத மாற்றம் செய்யப் படுமுன்னரே அங்கு ஒரு பகவதி கோயில் உண்டு. என்னதான் மதம் மாறினால் என்ன, தலைமுறை தலைமுறையாக வரும் நம்பிக்கைகள் அறவே நீங்கிவிடாது அல்லவா ? முக்கியமாக மீனவப் பெண்டிர் மண்டைக்காடு பகவதி அம்மனை வழிபட்டுக்கொண்டுதான் இருந்தனர். அதிலும் குறிப்பாக ஆண்டுக்கொரு முறை கொண்டாடப் படும் பகவதி அம்மன் திருவிழாவின்போது கத்தோலிக்க மீனவப் பெண்டிரும் பயபக்தியுடன் அம்மனை வணங்குவர். இது கத்தோலிக்க குருமார்களுக்கு நீண்ட காலமாகவே கண்களை உறுத்தி வந்தது. எப்படியாவது வருடாந்திரத் திருவிழாவை நடைபெறவிடாமல் தடுத்துவிட்டால் முதல் கட்டமாக மீனவப் பெண்டிர் பகவதி அம்மனை வழிபடுதலை நிறுத்தலாம் என எண்ணினார்கள். ஐயப்பன் மீதான பக்தி ஏசுவின் மீதான பக்தி தோன்றத் தடையாக இருப்பதால் ஐயப்ப வழிபாட்டை அழிக்கத் திட்டமிட்டு, மகர ஜோதியின் போது எதிர்க் குன்றத்தில் செயற்கை ஜோதியைத் தோற்றுவித்தும், ஐயப்பன் பிரதிமையையே தீக்கிரையாக்கியும் சாகசம் செய்தவர்கள் அல்லவா ?

திருவிழாவின்போது ஏராளமான மலையாளப் பெண்டிர் மண்டைகாடு பகவதியை வழிபட வருவார்கள். அப்படி வரும் பெண்டிர் அதிகாலையில் கடலில் நீராடிவிட்டு அம்மனை வழிபடச் செல்வார்கள். இப்படி ஏராளமான பெண்கள் வராமல் செய்வதன் மூலம் திருவிழாவின் மகத்துவத்தைக் குறைப்பதென முதல் கட்ட நடவடிக்கையாகத் திட்டமிடப்பட்டது.

1982ல் மண்டைக்காடு திருவிழா தொடங்கியதும் வழக்கம்போல் கேரளப் பெண்டிர் ஏராளமான எண்ணிக்கையில் வந்தார்கள். அதிகாலை இருட்டில் அவர்கள் கடலில் நீராடிவிட்டு ஈரச் சேலையுடன் திரும்பியபோது, கத்தோலிக்க கிறிஸ்தவ மீனவ இளைஞர்கள் அவர்களை வழிமறித்துத் துன்புறுத்தலானார்கள். துணைக்குச் சென்ற சொற்ப என்ணிக்கையிலிருந்த ஆண்கள் தடுத்தபோது கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளானார்கள். இயற்கையாகவே மீனவர்கள் உடல் உரம் மிக்கவர்கள். கையில் நீண்ட துடுப்பு வேறு, அவர்களிடம். இந்தச் சம்பவம்தான் பெரிய கலவரமாக வெடித்தது. எண்ணிக்கை பலமும், உடல் வலிமையும் கிறிஸ்தவ குருபீடங்களின் பக்கபலமும் அவர்களுக்குச் சாதகமாக இருந்தன. உடல்வலிமையில் பலவீனமும் அதிகார வட்டாரங்களில் செல்வாக்கு இன்மையும் ஹிந்துக்களுக்கு பாதகமாக அமைந்தன. அப்போது அங்கு கிறிஸ்தவராக மதம் மாறிய ஒரு ஐஏஎஸ் அதிகாரிதான் கலெக்டராக இருந்தார். அவர் சொல்லிவைத்தாற்போல் கிறிஸ்தவர்களுக்குச் சாதகமாக இருந்தார். அவரை உடனே மாற்றவேண்டும் என்று எம்ஜிஆருக்குத் தகவல் கொடுத்தேன். நல்ல வேளையாகத் தமது பிரத்தியேக டெலிபோன் எண்ணை அவர் எனக்கு முன்பே தந்திருந்தார். அந்தச் சமயத்தில் என் நண்பர் டி. வி. வெங்கட் ராமன் ஐஏஎஸ் உள்துறைச் செயலாளராக இருந்தாரா அல்லது தலைமைச் செயலாளராகிவிட்டிருந்தாரா என்பது இப்போது நினைவில் இல்லை. தற்போது அவர் ஓய்வு பெற்று சென்னையில் அமைதியாக வாழ்ந்துவருகிறார். நான் தெரிவித்ததால்தான் என்று சொல்லமாட்டேன், ஆனால் அந்தக் கலெக்டர் மாற்றப்பட்டு ப்ராணேஷ் நியமிக்கப்பட்டார். தலைமைச் செயலாளராக இருந்து ஓய்வு பெற்ற லட்சுமி ப்ராணேஷின் கணவர்தான். மாற்றப்பட்ட கிறிஸ்தவ கலெக்டரின் பெயர் ஆச்சார்யலு என நினைக்கிறேன். இது ஒரு சாமர்த்தியம் பல கிறிஸ்தவர்களிடம், ஹிந்துப் பெயரைக் கைவிடாமலேயே கிறிஸ்தவர்களாக இருப்பது! பாருங்களேன், அண்டை மாநிலம் ஆந்திரப் பிரதேசத்தில்…முதல்வரின் பெயர் எஸ். ராஜசேகர ரெட்டி. பலரும் அவர் ஹிந்து என்று தான் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த ‘எஸ் ‘ஸில் மறைந்திருப்பது ‘ஸாமுவேல் ‘என்பதுதான்! ஒரு கிறிஸ்தவர் மாநில முதல்வர் பதவிக்கு வரலாகாது என நான் கருதுவதாக நினைத்துவிடலாகாது. ராஜ சேகர ரெட்டி இன்று ஹிந்துக்கள் நலனுக்கு ஊறு ஏற்படுமாறு இயங்கிக் கொண்டிருக்கிறார் என்பதைத்தான் குறிப்ப்ிட விரும்புகிறேன்.

ப்ராணேஷ் வருவதற்கு முன்பே கிறிஸ்தவ மீனவர்களின் வன்முறைத் தாக்குதல் எல்லை மீறிப்போனதால் நிலமையைச் சமாளிக்கத் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியதாயிற்று. இவ்வாறு நிலமையை முற்றவிட்டவர் ஆச்சர்யலுதான். துப்பாக்கிச் சூட்டில் பன்னிரண்டு மீனவர்கள் இறந்தனர் என்றால் நினைத்துப் பாருங்கள், நிலைமையை எவ்வளவு முற்றவிட்டிருக்கிறார்கள், என்று.

ப்ராணேஷ் வந்தும் கூட ஹிந்துக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தன. ஹிந்துக்கள் பதில் தாக்குதல் செய்து தற்காத்துக் கொள்ள முற்பட்டபோது கைதுசெய்யப்பட்டனர்! உள்ளூர் அதிகாரிகளோ கிறிஸ்தவர்களுக்குச் சாதகமாக இருந்து, தற்காப்பில் ஈடுபட்ட ஹிந்துக்களை முடக்கிப் போடுவதில் கவனமாக இருந்தனர். இதனை நான் ப்ராணேஷ் கவனத்திற்குக் கொண்டுவந்தபோது, தமது நடுநிலமையை உறுதி செய்வதற்காக ஹிந்துக்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையில் தலையிட முடியாது என்று கூறினார்! இதுதான் ஹிந்துக்களுக்கே உரித்தான சற்குண விக்ருதி! குன்றக்குடி அடிகளார் வேறு வந்து சேர்ந்து ஹிந்துக்கள் அடி வாங்கிக் கொண்டு பொறுத்துப் போய்விட்டால் சில நாட்களில் கலவரம் தானாகவே அடங்கிவிடும் என்று ஆலோசனை சொன்னார்! இதுவும் ஒரு சற்குண விக்ருதி!

காந்திஜியும் இதையே ஹிந்துக்களுக்கு உபதேசித்தார், பிரிவினையின்போது! ஹிந்துக்கள் பாகிஸ்தானைவிட்டு வராமல் சாத்வீகமாய் உயிர்ப் பலியாகியிருக்க வேண்டும் என்பது அவரது ஹிந்துக்களுக்கு மட்டுமேயான அறிவுரை! எம்பாடிமெண்ட் ஆப் சற்குண விக்ருதி!

இப்போது தமிழக டைரெக்டர் ஜெனரல் ஆப் போலீஸ் என்ற தலைமைப் பதவியில் இருக்கும் அலெக்சாந்தர் அப்போது அங்கு மாவட்ட காவல் துறை உயர்அதிகாரியாகவோ உளவுத் துறை மேலதிகாரியாக நிலைமையைக் கண்காணிக்க வந்தவராகவோ இருந்தார்.

முதலில் இந்த மலர்மன்னனை இங்கிருந்து போகச் சொன்னால் நிலமை அமைதி ஏற்பட்டுவிடும் என்று குன்றக்குடி அடிகளார் ஆலோசனை கூறினார். அதன் பேரில் 24 மணி நேரத்தில் நான் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து வெகு தொலைவிற்குப் போய்விடவேண்டும் என ப்ராணேஷ் உத்தரவிட்டார்! அலெக்சாந்தரோ என்னைப் பொது இடத்தில் பிடித்தால் கலவரமாகிவிடும் எனக் கருதியோ என்னவோ மாலையில் என்னை வந்து பாருங்கள் எனக் கேட்டுக்கொண்டார்! நான் எம்ஜிஆருக்கு நிலைமையை போனில் விளக்கினேன். ‘அதெல்லாம் எனக்குத் தெரியாது. அபீஷியலி யூ ஆர் அண்டர் அரெஸ்ட்! போலீஸ் உன்னை அரெஸ்ட் செய்யத் தேடுவார்கள்! ‘ என்றார், எம்ஜிஆர். அதன் குறிப்பைப் புரிந்துகொண்டு தலைமறைவானேன். கன்னியாகுமரியிலேயே சுற்றி வந்து, என் கடமையைச் செய்தேன்.

மண்டைக்காடு கலவரத்தின் போது முதல்வர் எம்ஜிஆர் நடுநிலை தவறாமல் நடந்து கொண்டார். நான் விஷமியல்ல என்பதை அவர் அறிந்திருந்ததால் என் பக்கம் நியாயம் இருக்கும் என நம்பி என்னை கன்னியாகுமரியில் இயங்க அனுமதித்தார். அலெக்சாந்தருக்கு இப்போது அதெல்லாம் நினைவிருக்குமோ இல்லையோ!

ஆனால் அதே எம்ஜிஆர் கிறிஸ்தவர்களைத் திருப்தி செய்வதற்காக அடுத்த ஆண்டு ஹிந்துக்கள் மண்டைக்காடு நினைவாக நாகர்கோவிலில் ஊர்வலம் எடுத்தபோது அவசியமின்றியே துப்பாக்கிச் சூடு நடத்தச் செய்து ஒரு ஹிந்து இளைஞன் உயிரைப்பறித்தார். அந்த ஊர்வலத்திலும் நான் பங்கேற்றேன். புகைப் படங்களும் எடுக்கச் செய்தேன். பராசக்தி ஸ்டூடியோ என்ற நகர்கோவில் புகைப்படக்காரர் துணையுடன்.சென்னை திரும்பியதும் யாரைத் திருப்தி செய்வதற்காக இப்படி அநியாயமாக ஒரு உயிரை பலிவாங்கினீர்கள் என்று எம்ஜி ஆரிடமே கேட்டேன். அதே தலைப்பில் ஹிந்து மித்திரனில் தலையங்கமும் எழுதினேன். எம்ஜிஆர் மவுனம் சாதித்தார்.

மண்டைக்காடு சம்பவத்தையொட்டி இன்னும் பல தகவல்களை என்னால் தரமுடியும். அவையெல்லாம் கிறிஸ்தவ சகோதரர்களுக்கு பாதகமாகவே இருக்கும். நான் ஒரு ஹிந்து என்பதால் அல்ல; விருப்பு வெறுப்பு இன்றி நடந்த நிகழ்ச்சிகளைப் பதிவு செய்யும் பத்திரிகையாளன் என்பதால்தான்! சுந்தர ராமசாமி அன்று நான் தலைமறைவாக இருந்து வேலை செய்ய வாய்ப்பளித்தார் என்பதையும் மறக்க மாட்டேன். சுந்தர ராமசாமி வீட்டில் தங்கி வேளா வேளைக்குச் சாப்பிட்டுக்கொண்டும், இப்போது காலச் சுவடு ஆசிரியராகவும் பதிப்பாளராகவும் இருக்கும் கண்ணனோடு விளையாடிக்கொண்டும் மறைந்து வாழ்ந்தேன்!

பெருமைக்காக அல்ல, தகவலுக்காகவே மீண்டும் சொல்கிறேன். பெரும்பாலான நண்பர்கள் பத்திரிகைகளில் செய்தியாக வாசித்துத் தெரிந்துகொண்ட பல நிகழ்ச்சிகளை வழிப்போக்கன் போலன்றி, ஒரு பத்திரிகையாளன் என்கிற வசதியோடும் நேரில் பார்த்த வன் நான். ஆகையால் கற்பக வினாயகம் போன்றவர்கள் எதுபற்றியும் நிச்சயமான தகவல் தெரிந்தாலன்றி எதிர்வினையாற்றுவது சரியாக இருக்காது என எண்ணுகிறேன். இவர்கள் விவரம் அறிந்தவர்களையாவது கலந்தாலோசித்து எதிர்வினை செய்தால் பலனிருக்கும். நான் தவறான தகவலைப் பதிவு செய்திருப்பின் அது திருத்தப்படவும் வாய்ப்பிருக்கும். நான் சொல்வதே சரி எனச் சாதிக்கும் பிடிவாதம் எனக்கு இல்லை. கண்மூடித்தனமாகக் குற்றம் சுமத்தும் சுபாவமும் எனக்கு இல்லை.

—-

malarmannan79@rediffmail.com

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்