மணிரத்னத்தின் நாயகன் – ஒரு மறுபார்வை

This entry is part [part not set] of 26 in the series 20020421_Issue

இரா மதுவந்தி


நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போது நாயகன் படம் வந்தது. நாயகன் படம் நல்ல படம் என்று என் நண்பர்களிடம் சொன்னபோது, அவர்கள் வழக்கம்போல, மணிரத்னம் ஒரு நல்ல வியாபார திரைப்பட தயாரிப்பாளர் அவ்வளவுதான் என்று என்னை கன்னாபின்னா என்று எதிர்த்தார்கள். ஆகவே, நான் நாயகன் படத்தைப் பற்றி அவர்களிடம் விளக்கும்படி ஆயிற்று.

ஒரு படைப்பு மூன்று பொருள்களைச் சார்ந்து இயங்குகிறது.

படைத்தவன்

படைப்பு

படைப்பை படிப்பவன்.

படைத்தவன் வேலை, படைத்ததும் முடிந்து விடுகிறது. படைப்பும் படிப்பவனுமே உரையாடுகிறார்கள். படைப்பைப் புரிந்து கொள்வது படிப்பவனின் தரத்தைப் பொறுத்தது. சில வேளைகளில் படிப்பவனுக்கும் படைப்புக்கும் இடையில் ஒரு விமர்சகன் வருகிறான். அவன் தன்னுடைய தரத்தின் மூலம் படைப்பைப் பார்த்து, படிப்பவனிடம் விளக்குகிறான். சில வேளைகளில் இது மிகவும் தேவையான விஷயமாகி விடுகிறது. சில வேளைகளில் விமர்சகனின் மனச்சாய்வினால், படைப்பு சிதிலப்பட்டும் விடுகிறது. அதைத்தாண்டி படைப்பை படிப்பவன் பார்க்கவேண்டிய தேவைகள் பல உண்டு.

உதாரணமாக, புறநானூற்றுக் கவிதைகளைப் படிக்க பல தமிழர்களால், அவர்களுக்குத் தெரிந்த தமிழால் முடியாது. அது படிக்க பழைய தமிழ்வார்த்தைகளில் தொடர்ந்த பயிற்சியும், அதில் இருக்கும் நுணுக்கமான வித்தியாசங்களை இன்றைய தமிழில் சொல்லத் திறமையும் வேண்டும். அது சுஜாதா, ஜெயமோகன் போன்றோரால் இன்று செய்யப்பட்டு வருகிறது. அதைத்தாண்டி, விமர்சனத்தை விமர்சனம் செய்யவும் நம்மால் முடியும். இடையே வரும் புறநானூறு விளக்கமே புதுப்படைப்பாக படிப்பவனுக்கு உருவாகிவிடுகிறது.

படைப்பின் மூலம் படைப்பவனை விமர்சனம் செய்யும் போக்கு ஒன்று உண்டு. படைத்தவன் இறந்துவிட்டான் என்றும், படைப்பே முக்கியம் என்றும் ஒரு விமர்சனப் போக்கு உண்டு. படைப்பும் இறந்துவிட்டது, படைப்பவனும் இறந்துவிட்டான், படிப்பவன் மட்டுமே உண்டு. படிப்பவன் படைப்பில் தன்னையே காண்கின்றான் என்றும் ஒரு விமர்சனப்போக்கு உண்டு.

மணிரத்னத்தின் படங்களில் சில பொதுவான கதாபாத்திரங்கள் உண்டு. அவரது பெண்கள் அப்பாவியான க்யூட்டான பெண்கள். பெரும் சோகம் இருந்தாலும் க்யூட்டான பெண்கள். நாயகன் படத்தில், விபச்சாரியான பெண், நாளைக்குப் பரிட்சைக்குப் படிக்கவேண்டும் என்று அப்பாவியாகச் சொல்வது. மெளனராகம் படத்தில் காதலன் இறந்தும் க்யூட்டாகப் பாட்டுப்பாடும் பெண். இதயத்தைத் திருடாதே படத்தில் கான்ஸர் இருந்தும் சந்தோஷமாக, ‘ ‘ஓடிப்போயிரலாமா ? ‘ என்று கேட்கும் பெண். அவரது சிறுவர்கள் வயதுக்கு மீறிய கேள்வி கேட்கும் சிறுவர்கள். (வயதொத்த சிறுவர்களைக் காட்டிய தமிழ்ப்படம் இதுவரை, ‘நிலாப்பெண்ணே ‘ படம் மட்டும்தான்). இந்த சோகம் இருந்தாலும் க்யூட்டாக சந்தோஷமாக இருக்கும் பெண்கள் ஒருவேளை ஆண்களின் கனவுப்பெண்களோ என்னவோ. அதனால் தானோ என்னவோ, அவர் படங்கள் நன்றாக ஓடுகின்றன. மணிரத்னத்தின் அறிவுத்திறமையை, சினிமாமொழியை நான் இங்கு அவமதிக்கவில்லை. இந்த கதாபாத்திரங்களை அவர் உபயோகப்படுத்துவதும் கூட அவரது சுய தேர்ச்சிதான் என்பதை நாம் ஒப்புக்கொள்ளவேண்டும்.

ஆயினும் படைப்பவனைத் தாண்டி படைப்பு ஒரு தனி ஆளுமையைப் பெற்றுவிடுகிறது என்பதை மறுக்க முடியாது. நான் இங்கே மணிரத்னத்தை விமர்சனம் செய்யவில்லை. அவரது மனத்தை மனத்தத்துவ ஆராய்ச்சிக்கும் உபயோகிக்கப்போவதில்லை. படைப்பைப் பற்றியே பேசப்போகிறேன்.

நாயகன் படம் ஒரு சமூக விமர்சனப் படமோ, அல்லது வரதராஜ முதலியார் கதையின் திரைப்பட ஆக்கமோ, அல்லது காட்பாதர் படத்தின் தமிழாக்கமோ அல்ல என்பதுதான் முக்கியமான விஷயம். இவை எல்லாம் இந்தப்படத்தில் இருந்தாலும் இந்தப்படம் மேற்கண்ட விஷயங்களின் சிந்தனையில்லாத கொலாஜ் அல்ல.

கிரேக்க சோக நாடகங்களில் சில ஒழுங்குகள் உண்டு. அந்த நாடகங்களுக்கு என இலக்கணங்கள் இருக்கின்றன. இந்த நாடகங்களின் முக்கிய கதாபாத்திரத்துக்கு நடக்கும் துயர முடிவு, விபத்து அல்ல. அதற்கு உலகிய காரணங்களோ, தெய்வீகக் காரணங்களோ இருக்கின்றன. (உதாரணமாக ‘புன்னகை மன்னன் ‘ படத்தில் நடக்கும் இறுதி விபத்துக்கும் கதைக்கும் சம்பந்தம் கிடையாது. ஆனால் நாயகனில் இறுதி இறப்புக்கு காரணம் இருக்கிறது). கிரேக்க துன்பியல் நாடகத்துக்கு ப்ரோலாக் என்னும் முன்னுரை, பரோடோஸ் என்னும் ஆரம்ப கோரஸ் பாடல், நான்கு எபிஸோட் என்னும் அங்கங்களும், நான்கு ஸ்டாஸிமான் என்னும் இடையில் பாடும் கோரஸ் பாடல்களும் உண்டு. (நான்கு இருந்தாகவேண்டும் என கட்டாயம் கிடையாது). இறுதியில் எக்ஸோடஸ் என்னும் முடிவுரை.

நாயகன் படத்தில் இந்த அங்கங்கள் உண்டு என்பதை மேற்கண்டதை நினைவில் வைத்துக்கொண்டு பார்க்கும்போது தெரியும். ஒவ்வொரு பாடலும் இடைவேளையாக வரும். முடிவுக்குக் காரணம் முதலாவது எபிஸோட் என்னும் அங்கத்திலேயே வரவேண்டும். (போலீஸ் இன்ஸ்பெக்டரைக் கொல்வதுதான் இவன் இறுதி முடிவுக்குக் காரணம் என்பது நாயகனில் முதலாவது அங்கத்திலேயே நிச்சயமாகி விடும். அந்த போலீஸ் இன்ஸ்பெக்டரைக் கொல்வதுதான் இவனது தாதா வாழ்க்கைக்கும் ஆரம்பம் என்பதும் இந்த திரைப்படத்தை முக்கியமான கிரேக்க துன்பியல் நாடகமாக நிலைப்படுத்திவிடுகிறது)

மணிரத்னத்தின் இந்த படத்தில் நாயக்கன் என்ற இந்த கடத்தல்காரனை நல்லவனாக காண்பிக்கத்தான் அவன் செய்யும் செயல்களுக்கெல்லாம் மற்றவர்களைக் காரணமாகக் காட்டி இருக்கிறார் எனக்கருத இடமிருக்கிறது. ஆனால் சில வேளைகளில் படம் இயக்குனரை மீறி சென்றுவிடுகிறது.

ஒரு தனி மனிதன் எவ்வாறு சந்தர்ப்ப சூழ்நிலைகளால் துரத்தப்பட்டு சந்தர்ப்ப சூழ்நிலைகளால் உருவாக்கப்பட்டு சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அழிக்கப்படுகிறான் என்பதாக படம் உருவம் கொள்கிறது. இதில் வரும் நாயக்கன் ஹீரோ அல்ல. அவன் வில்லனும் அல்ல. ஆனால் சில வேளைகளில் ஹீரோவாகவும், சில வேளைகளில் வில்லனாக ஆவதும் அவனே உணரும் விஷயங்கள். அதில் தானே மூழ்கிப் போவதை அவனே பார்க்கிறான். அதனைத் தாண்டி அவன் செல்ல முயற்சிக்கும் போதெல்லாம் அவனது முன்னாள் செயல்களின் எதிர்வினை அவனைச் சுற்றிச் சுற்றி அலைக்கழிக்கிறது. அலைக்கழிக்கும்போது, ஒரு ஹீரோவைப் போல இல்லாமல், அவலமாக அழுகிறான்.

நாயக்கன் தமிழ்நாட்டிலிருந்து ஓடுவதும் அவன் செயலல்ல. அவன் பம்பாயில் வளர்வதும் அவன் செயலல்ல. அதுமட்டுமல்ல, இந்தப்படத்தில் எதுவுமே அவனாக முயன்று ஒரு வேலைக் கூட செய்வதில்லை. அவ்வாறு செய்வதெல்லாம் அவனுக்குத் தீங்காகவே முடிகிறது. ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரை கொலை செய்வது கூட அவன் நினைத்து செய்வதில்லை. மற்றவர்கள் கேட்டுக்கொண்டதற்காகத்தான் செய்கிறான். ‘நான் நாளைக்கு பரிட்சைக்குப் படிக்கணும் ‘ என்று இவனது எதிர்கால மனைவி சொல்கிறாள். அவன் சரி படி என்று சொல்லிவிட்டு அங்கேயே உட்கார்ந்து கொள்கிறான். அப்போது கூட, அவன் செய்யவந்த விஷயத்தைச் செய்வதில்லை. தன் மகனை தன்னுடைய வாரிசாக சுபாரி கொடுக்கும்போது கூட, அந்த முடிவு அவன் எடுத்த முடிவில்லை. தன் மகனெடுக்கும் முடிவுக்கு அவன் ஆமோதிக்கிறான் அவ்வளவே. அப்போது இருக்கும் திணிக்கப்பட்ட நாடகத்தன்மையைப் பாருங்கள். மகள் இவன் செய்வது பிடிக்காமல் இவனைவிட்டு ஓடிவிடுகிறாள். போகும்முன்னர் இருவருக்கும் வாக்குவாதம் நடக்கிறது. அந்த வாதத்திலும் இவன் அதையே சொல்கிறான். ‘அவனை நிறுத்தச்சொல் நான் நிறுத்திவிடுகிறேன்.. ‘ இவனது வாழ்க்கையே ஒரு வெறும் எதிர்வினைதான் என்று இவன் உணரும்போது அவனது வாழ்க்கையின் அவலம் இன்னும் தீவிரமாகிவிடுகிறது.

தாத்தா நீ வில்லனா ஹீரோவா என்று கேட்கிறது இவனது இரண்டாம் தலைமுறை. தெரியலையே என்று இவன் பதில் சொல்கிறான். இயற்கையாக கதை சொல்லிவரும் படத்தில் சட்டென்று நெருடலாக இந்தக்காட்சி நிற்கிறது. இதுதான் இந்தப்படத்தின் கரு என்பது போல. ஆனால் இதுவும் அவனது பூஜ்ய மனத்தையே சுற்றி வருகிறது. அவனது பதில்தான் முக்கியம். அவன் அப்போது சொல்லியிருக்கலாம். ‘என்னைப்பொறுத்த வரையில் நான் ஹீரோதான். மற்றவர்களுக்கு நான் என்னவாக வேண்டுமானாலும் இருந்திருக்கலாம் என்று ‘. இதைத்தானே அவன் தன்னுடைய மகளிடம் சொன்னான். வருடங்கள் பல கழித்து, தன்னுடைய அடுத்த தலைமுறை கேட்கும்போது, பதில் இவனுக்குத் தெரியவில்லை. தன்னுடைய காரியங்கள் எதுவும் தன் கையில் இல்லை என்பது உரைத்துப் போய்விடுகிறது. அதைத்தான் அவன் ‘தெரியலையே ‘ என்று சொல்கிறான். தண்ணீர் மேல் தடுமாறும் படகு, படகின் கீழே கடத்தப்பட்ட பொருள், மேலே நாயக்கனும் அவன் தோழனும், கூடவே ஆட ஒரு பெண். பெண்ணோடு சந்தோஷமாக இருப்பது அவனது தோழன் தான். இவன் வெறுமே பார்த்துக்கொண்டு நிற்கிறான். அவனைச் சுற்றி எல்லோரும் அவனை தன்னுடைய வேலைகளுக்குப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இவன் ஒருநபருக்கு உதவி செய்ய காரணம், அந்த ஆள் அவனிடம் உதவி கேட்டார் என்பதற்காகத்தான். அதில் நியாயம் அனியாயம் அவன் பார்ப்பதில்லை. இதைத்தான் அந்த மகளும் கேட்கிறாள்.

ஆரம்பகாலத்தில் தன்னுடைய ஆதார வேதமாக, மாலை நேர சூரியனின் பின்னணியில் உபநயனம் போல அவனுக்குச் சொல்லப்படும் முஸ்லீம் பெரியவரின் வேதமாக, ‘நாலு பேருக்கு நல்லது… ‘சமாச்சாரத்தை எடுத்துக்கொண்டவன், பின்னாளில் அது தான் பண்ணும் அனியாயங்களுக்கெல்லாம் நியாயப்படுத்தலாகிவிட்டது என்பதை உணர்கிறான். அந்த வேதத்தை தன் இரண்டாம் தலைமுறையிடம் சொல்லியிருக்கலாம் இல்லையா ? அதுவே அந்தக் கேள்விக்கு பதிலாக. அப்படி இருந்தால், இந்தப்படத்தின் கருவாக அந்த ‘நாலு பேருக்கு ‘ சமாச்சாரம் நின்றிருக்கும். அது இந்தப்படத்தின் கரு அல்ல. இந்தப்படத்தின் கரு நாயகனின் வாழ்க்கையும் அல்ல. இந்தப்படத்தின் கரு அலைமேல் துரும்பு போன்ற மனித வாழ்க்கை. இது நியாயம் இது அநியாயம் என்ற பாகுபாடு இல்லாத, வெறும் வாழ்க்கை. உயிர்வாழ போராடும் மனிதனின் வாழ்க்கை.

நாயகன் படத்தில் வரும் இசைகூட படத்தின் அடிநாதத்தைக் கொண்டே அமைக்கப்பட்டிருக்கிறது. படத்தில் வரும் பாடல் காட்சிகள் கூட யோசித்து அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். நான் சிரித்தால் தீபாவளி பாடல் காட்சியில் பாடல் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, நாயக்கன் ஒரு தீவு போல ஓரத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறான்.

இந்தப்படத்தின் இசை பற்றி முக்கியமாகச் சொல்லவேண்டும். இதில் இளையராஜா ஒரு ஜாலவித்தையே செய்திருக்கிறார். அவரது அறிவுத்திறத்துக்கும் அசாதாரண இசை ஞானத்துக்கும் இந்தப் படத்தின் பின்னணி இசையும், பாடல்களுக்கான இசையும் கட்டியம் கூறுகிறது. தன் மகன் இறந்துவிட்டான் என்ற சொல் கேட்டதும் அமைதியும் ஓலமுமாக வரும் இசையைக் கவனியுங்கள்.

ஒரே பாடல் மூன்று விதங்களில் பாடப்படுகிறது இந்தப்படத்தில். தென் பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே என்ற பாடல் முதன் முறை பாடப்படும் போது, அனாதையாக எந்த வித பக்க வாத்தியமும் இல்லாமல் ஒலிக்கிறது. அவன் தன்னந்தனியனாக பம்பாய் நோக்கி ஓடும்போது இவ்வாறு அந்தப்பாடல் பாடப்படுகிறது. அது அவனுக்காக இரக்கப்பட்டு அழும்குரலில் இந்தப்பாடல் ஒலிக்கிறது.

அவன் அந்த சிவப்பு விளக்குப் பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவன் குழந்தைகளோடு இருக்கும் போது, சலங்கை ஒலியோடும் அனைத்துப் பக்கவாத்தியங்களோடும் மகிழ்ச்சியாக அதே பாடல் ஒலிக்கிறது.

அவன் வளர்த்த பையன் அவனைக் கொன்று அவன் இறந்து கிடக்கிறான். ஒரு போர்வீரனைப்போல, விதி என்னும் ஜெனரல் சொன்னபடி போர்புரிந்து இறந்து கிடக்கும் அவனுக்காக அதே பாடல் மிலிட்டரி பேண்டில் ஒலிக்கிறது.

***

Series Navigation

author

இரா மதுவந்தி

இரா மதுவந்தி

Similar Posts