மடியில் நெருப்பு – 36 (முடிந்தது)

This entry is part [part not set] of 24 in the series 20070503_Issue

ஜோதிர்லதா கிரிஜா


36.

புகைப்படத்திலிருந்து பார்வையை உயர்த்திய ஜகந்நாதன் சூர்யாவைப் பார்த்த போது, அவள் கண்ணீர் உகுத்துக் கொண்டிருந்தாள்.

“அழாதேம்மா. கொஞ்சம் கட்டுப் படுத்திக்க. . . எனக்கு ஒரே ஒரு மகன்தான். ஏதோ ·போட்டோ ட்ரிக் பண்ணியிருக்கான். சரி. இன்னும் என்னவெல்லாம் சொன்னான்?”

“வேலை விஷயமா உங்களைப் பார்க்க வர்றப்போ, அந்த அண்ணனைப் பத்தி உங்ககிட்ட வாய் தவறிக் கூட எதுவும் பேசிடக் கூடாதுன்னாரு. ஏன்னா, அந்த அண்ணனுக்குக் கொஞ்ச நாளா மன நிலை சரியில்லை, நர்சிங் ஹோம்லே இருக்கான், ஆனா பைத்தியம்னு சீரியஸா எதுவும் இல்லே, ஒரு சின்ன ப்ராப்ளம், அவன் பேச்சை எடுத்தாலே அப்பா அப்செட் ஆயிடுவாரு, அதான்,’ அப்படின்னாரு. ·போட்டோ ட்ரிக்கா யிருக்கலாமோன்னு எனக்குத் தோணவே இல்லே. ஏன்னா, நான் அவரை நம்பிட்டேன்.”

“அழாதேம்மா. கண்ணைத் துடைச்சுக்க. இப்ப ஒண்ணும் குடி முழுகிடல்லே.”

அவள் கண்களைத் துடைத்துக்கொண்டு அவரை ஆழமாய்ப் பார்த்தாள்.

“என்னம்மா யோசனை? ஒருக்கா இந்தப் பெரியவன் பொய் சொல்றானோன்னுதானே? ஒரு ஏழைப் பொண்ணு தனக்கு மருமகளா வந்துடக் கூடாதுன்றதுக்காக ஏதேதோ ரீல் விட்றான்னு தோணுதோ? சத்தியமா இல்லேம்மா. பிரசவத்துக்காக ஊருக்குப் போயிருக்கிற என் மருமகப் பொண்ணு இன்னும் கொஞ்ச நாள்ளே திரும்பி வந்துடுவா. அப்ப நீயே வந்து நாசூக்கா உண்மையைத் தெரிஞ்சுக்கலாம். இல்லாட்டி நீ ஒண்ணு கூடப் பண்ணலாம். நாளைக்கே எங்க வீட்டுக்கு வந்தா அவனோட கல்யாண ·போட்டோ ஆல்பம் காமிக்கிறேன். அதுலே, இவனோட பேரும் அச்சாகியிருக்கு.. ஆல்பத்துல நான் ஏதோ ட்ரிக் பண்ணியிருப்பேன்னு உனக்கு என் மேலே சந்தேகம் வந்தா, உன்னை அந்தக் கடவுள்தான் காப்பாத்தணும்!”

கணம் போல் தான் அவர் மீது சந்தேகப்பட்டதைக் கண்டுபிடித்து விட்டாரே இந்த மனிதர் என்னும் வியப்பு மேலிட அவள் அவரைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அப்போது தொலைபேசி மணியடிக்க, அவர் அதை எடுத்துப் பேசினார்: “ஓ! கமிஷனரா? குட் ஆ·ப்டர்நூன்! சொல்லுங்க, சார்! சட்டப்படி என்ன செய்யணுமோ செய்யுங்க. அவன் வக்கீல் வெச்சு வாதாடிப்பான். உங்க வருத்தம் எனக்குப் புரியுது, மிஸ்டர் தேவராஜன்! நான் பண்ணின போன ஜென்மத்துப் பாவம் – அவனைப் பிள்ளையாப் பெத்துட்டேன்! நீங்க உங்க கடமையைச் செய்யுங்க. அந்த தண்டபாணியோட தனக்குப் பார்ட்னர்ஷிப் எதுவும் கிடையாதுன்னு சாதிக்கிறான். அது உண்மையா யிருந்தா அவனே நிரூபிக்கட்டுமே! நீங்க வருத்தமே படாதீங்க! கோ அஹெட்! அப்ப, வெச்சுடட்டுமா?” என்ற பின் ஜகந்நாதன் அதுகாறும் தாம் வெளிப்படுத்திக் கொண்டிருந்த கம்பீரத்துக்குச் சற்றும் பொருந்தாத முறையில் மேசை மீது தலை கவிழ விம்மினார். சூர்யா விக்கித்துப் போனாள்.

“சார்! எதுக்கு சார் அழறீங்க? என்னைச் சொல்லிட்டு நீங்க இப்படி அழறீங்களே?”

ஜகந்நாதன் கைக்குட்டையால் கண்களைத் துடைத்துக்கொண்டு, புன்சிரிப்புக் காட்டி, “அயாம் சாரி!” என்றார்.

“ அப்ப நீ போயிட்டு வாம்மா. முகத்தை நல்லாத் துடைச்சுக்க. அதோ, அந்த வாஷ் பேசின்லே தண்ணி இருக்கு. வேணும்னா முகம் கழுவிப் பவுடர் இருந்தாப் போட்டுக்க. பொட்டுக் கலையாம முகம் கழுவிக்க. ஏன்னா எங்கிட்ட ஸ்டிக்கர் பொட்டெல்லாம் கிடையாது!” என்று அவர் சிரித்தார்.

சூர்யா தன் கைக்குட்டையாலேயே முகத்தைத் துடைத்துக் கொண்டு வெயில் கண்ணாடியை எடுத்து அணிந்துகொண்டபின் எழுந்தாள். கை கூப்பினாள்.

“உக்காரும்மா. இன்னொரு முக்கியமான விஷயம் சொல்ல விட்டுப் போயிடுத்து. எல்லாத்தையும் ஒரு கெட்ட கனா மாதிரி மறந்துடு. பொண்ணுங்கதாம்மா கவனமா யிருக்கணும். உன் கல்யாணத்துக்கு நான் ஏற்பாடு பண்றேம்மா. உன் கல்யாணச் செலவை நானே ஏத்துக்கறேன். என் மகன் உனக்குச் செஞ்ச கொடுமைக்கு அது ஒரு சின்ன பரிகாரமாயிருக்கட்டும். அவனைப் பெத்த பாவத்துக்காக நான்தாம்மா பிராயச்சித்தம் பண்ணணும்.”

“அதெல்லாம் வேணாம், சார், “ என்ற சூர்யா மறுபடியும் கை கூப்பினாள்.

“அதைப் பத்தி நாம அப்புறமாப் பேசலாம்மா. கொஞ்ச நாளாகட்டும். . .”

சூர்யா கூடியவரை முகத்தைப் பொதுமையாக வைத்துக்கொண்டு அந்த அறையை விட்டு வெளியே வந்தாள். ராஜலட்சுமியின் கணவன் அங்கே பணி புரிந்து கொண்டிருந்தது பற்றிய ஞாபகத்தில் அவன் பார்வையில் படாதிருக்க வேண்டுமே என்று கவலைப்பட்டாள். தெரிய வந்து கேட்டால், வேலை விஷயமாக வந்ததாய்ச் சொல்லவேண்டியதுதான் என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள். சாப்பாட்டு வேளை யானதாலோ என்னவோ யாரும் தென்படவில்லை. அவள் ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன் கிளம்பினாள்.

.. . . ஜகந்நாதனுக்கு மனம் அமைதியாக இல்லை. கண்கொள்ளா அழகு நிறைந்த அந்தப் பெண் சூர்யாவைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தார். தன் மகன் எல்லாவற்றையும் தம்மிடம் சொல்லிவிட்டதாய்க் கூறி அவளிடமிருந்து அனைத்து உண்மைகளையும் வரவழைத்த தமது புத்திசாலித்தனத்தை எண்ணிப் பெருமைப் பட்டுக்கொண்டார். தம் மனம் இருந்த அமைதியற்ற நிலையில் லில்லியுடன் கொஞ்ச நேரமாவது பேசிக்கொண்டிருந்தால் மனச்சுமை சிறிதேனும் குறையும் என்று எண்ணியவராய் அவர் காரில் அவள் வீடு நோக்கிப் புறப்பட்டார்.

சூர்யா பற்றிய விஷயம் நீங்கலாக, மற்றவற்றை ஓரளவுக்கு அவர் லில்லியிடம் தெரிவித்தார். ராஜாதிராஜன் வழக்கிலிருந்து எப்படியும் மீண்டு வந்துவிடுவான் என்னும் நம்பிக்கை அவருக்கு இருந்ததால், தம் மகனைத் தப்புச் செய்தவனாய் லில்லியிடம் சித்திரிக்க அவரது தன்மானம் இடம் கொடுக்கவில்லை. அவனை இப்படி மாட்டிவைத்தது தண்டபாணியே என்று அவர் தெரிவித்தபோது, அவன் காட்டிய மாப்பிள்ளைப் பையன் தன் தங்கைக்கு நிச்சயம் ஆகாதது பற்றிய நிம்மதி அவளுக்கு ஏற்பட்டது. ஆனால் தன் வழக்கைத் தானே சந்தித்துக்கொள்ளட்டும் என்று தாம் ஒதுங்கிவிட்டதாக அவர் தெரிவித்த போது லில்லி வெகுண்டாள்: “என்னங்க, நீங்க! இவ்வளவு கல் மனசாயிருக்கீங்க! வழக்கைச் சீக்கிரம் முடிச்சுத் தம்பி மேலே விழுந்திருக்கிற களங்கத்தைப் போக்குறதுக்கு ஏற்பாடு பண்ணுங்க!”

அவர் பேசாதிருந்தார்.

“அவங்கம்மா இப்ப உயிரோட இருந்தா என்ன சொல்லுவாங்களோ, அதைத்தான் இப்ப நான் சொல்றேன் . . . அப்புறம். . . உங்களுக்கு ஒரு சந்தோஷமான சமாசாரங்க!”

“என்ன?”

லில்லி உடனே பதில் கூறாது முகம் சிவக்க உட்கார்ந்திருந்தாள். அதைக் கண்டதும் அவருள் கிலி பரவியது: “என்ன சந்தோஷ சமாசாரம்?”

“என்னங்க, ஒரு மாதிரி கலவரப்பட்டுக் கேக்கறீங்க? இன்னும் ஏழு மாசத்துலே ராஜாதிராஜனுக்கு ஒரு தம்பி பொறக்கப் போறான்!”

அவர் எழந்து நின்றுவிட்டார்.

“என்ன அபத்தம் லில்லி இது! என் மகனுக்கு இருபத்தாறு வயசாச்சு! இப்ப போயி எனக்கு இன்னொரு கொழந்தையா! இதென்ன அசிங்கம்!”

“லில்லிகிட்ட வந்து போறது மட்டும் அசிங்கம் இல்லையாக்கும்!. . . என்னை மன்னிச்சிறுங்க. நான் இந்தத் தடவை தடை மாத்திரை முழுங்கல்லே!”

ஜகந்நாதன் ஆயாசத்துடன் உட்கார்ந்தார். அவளது மலர்ந்த முகத்தைப் பார்த்ததும் அவரால் அவளைத் திட்டமுடியவில்லை. மகிழ்ந்து கொண்டாடவும் முடியவில்லை. ஆர்வமற்ற அவரது எதிரொலியால் லில்லியின் கண்களில் கண்ணீர் ததும்பியது.

“சரி, சரி. அழாதே, அழாதே! ஒரு பிள்ளையாலே இப்ப நான் சந்தியிலே நின்னு சிரிப்பாச் சிரிச்சுக்கிட்டிருக்கேன். அது பத்தலையாக்கும்! “

“அப்படியெல்லாம் சொல்லாதீங்க!” என்ற லில்லி அவரது மடியில் தலையை வைத்துக்கொண்டாள்.

அவர் அவளது தலையை வருடியபடி, “ இத பாரு, லில்லி! இப்பவும் ஒண்ணும் குடி முழுகிடல்லே! ஒரு திறமையான டாக்டரைப் பாக்கலாம். இது வேண்டாம் உனக்கு! நீ தத்தே எடுத்துக்க, லில்லி!” என்றார்.

“முடியாதுங்க! இந்த விஷயத்துலே பொண்ணுகளுக்கு ஏற்பட்ற குற்ற உணர்ச்சியைப்பத்தி உங்களுக்குப் புரியாதுங்க. உங்களுக்கெல்லாம் பொண்ணோட உடம்பும் அதனால கிடைக்கிற சந்தோஷமும்தான் முக்கியம். எங்களோட உணர்ச்சிகளைப் பத்தின கவலை உங்கள்ளே பலருக்கும் கிடையாது. உங்களுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதியை நான் மீறி மாத்திரை சாப்பிடாததுக்கு மன்னிப்புக் கேட்டுக்குறேன். நீங்க எனக்குன்னு குடுத்திருக்கிற இந்த வீடு எனக்கு வேணாங்க. என் பேர்லே போட்டு வெச்சிருக்குற பணத்தையும் குடுத்துட்றேன். . .ஸ்டெனோக்களுக்கு வேலை சுலபமாக் கிடைக்கும்ங்க. என் குழந்தையும் நானும் எப்படியாவது பிழைச்சுப்போம்!”

ஜகந்நாதன் கண் கலங்கினார்: “ அப்படி யெல்லாம் சொல்லாதே, லில்லி. நான் அவ்வளவு மோசமானவன் இல்லே. குடும்பத்தைப் பெருக்க வேணாம்னு நினைச்சதும் நான் மறு கல்யாணம் கட்டாததுக்கு ஒரு காரணம். சரி, விடு. ஆனது ஆயிப் போச்சு. நீ குழந்தையைப் பெத்து எடுத்துக்க. வெறும் லில்லியா இல்லே. மிஸஸ் லில்லி ஜகந்நாதனா! நாம உடனே பதிவுத் திருமணம் செய்துக்கலாம். உனக்கு என்னாலே அபவாதம் வர்றதுலே எனக்குச் சம்மதம் இல்லே.”

தன் தலையை வருடிக் கொண்டிருந்த அவர் கைகளை இறுக்கமாய்ப் பற்றிக் கொண்ட லில்லி, “இன்னைக்கு என் வாழ்நாள்லேயே ரொம்ப சந்தோஷமான நாளுங்க!” என்றாள் உணர்ச்சி வசப்பட்டு.

. . . அலுவலகம் திரும்பிய சூர்யாவை அதுகாறும் அவள் சமாளித்துக்கொண்டிருந்த படபடப்பு அதிகமாய்த் தாக்கியது. தன் பிரிவுக்குள் நுழையும் முன் கண்ணாடியில் முகம் பார்த்துக் கொண்டாள். அது வெளிறிக் கிடந்தது. கண்களில் ஒரு கலக்கம் வந்து அமர்ந்திருந்தது. என்னதான் முயன்றாலும் இனிக் கண்ணீரை கட்டுப்படுத்துதல் இயலாது என்று தோன்றியது.

பத்திரிகை ஒன்றைப் புரட்டிக்கொண்டிருந்த பவானியிடம், “என்னமோ தெரியல்லே. தலைவலி மண்டையைப் பிளக்குது. நான் அரை நாள் லீவ் போட்டுட்டு வீட்டுக்குப் போறேன், பவானி!” என்ற சூர்யா, “லீவ் லெட்டரை நாளைக்கு வந்து எழுதித் தறேன்னு ஹெட்க்ளார்க் வந்ததும் கொஞ்சம் சொல்லிட்றியா?” என்றவாறு தன் கைப்பையைத் தோளில் மாட்டிக்கொண்டு புறப்பட ஆயத்தமானாள்.

“சரி. சொல்லிட்றேன். எங்கேயோ பரபரன்னு கெளம்பிப் போனே. போனப்போ குஷியாத்தான் போனே. இப்ப என்னடான்னா உன் முகத்துலே சுரத்தே இல்லே. தலைவலி, அது, இதுன்றே! என்னவோ, போ. நானும் கவனிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன். ரெண்டு மூணு நாளாவே நீ சரியில்லே. மனசு விட்டு எதுவும் சொல்லவும் மாட்டேன்றே! சரி, போயிட்டு வா.”

“எங்க அக்கா புருஷன் ஆ·பீசுக்குத்தான் போயிருந்தேன். வேற எங்கேயும் இல்லே,” என்று அறிவித்த சூர்யா ஒரு வலுக்கட்டாயப் புன்னகையை உதிர்த்துவிட்டுப் புறப்பட்டாள்.

பிற்பகல் நேரமாதலால், பேருந்தில் கூட்டமே இல்லை. இதனால் சூர்யாவின் அழுகை கட்டுப்பட மறுத்து அவ்வப்போது திமிறிக் கொண்டு வெளிவரலாயிற்று. அவளும் இடைவிடாமல் கறுப்புக் கண்ணாடியக் கழற்றுவதும், கண்களைத் துடைத்துக்கொள்ளுவதும், திரும்பவும் அதை மாட்டிக்கொள்ளுவதுமாகப் பயணத்தைக் கழித்துவிட்டு ஒரு வழியாக வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.

. . . அவள் கதவைத் தள்ளீய போது, சுற்றுச் சுவர் அருகே நின்று பக்கத்து வீட்டு அம்மாளுடன் அனந்தநாயகி பேசிக்கொண்டிருந்தது அவள் செவிகளில் விழுந்தது..

“அப்போ, சூர்யாவுக்கு இப்ப கல்யாணம் பண்ணுறதா யில்லியா?” என்று அந்த அம்மாள் கேட்டதற்கு, “இல்லேங்க. இன்னும் ரெண்டு மூணு வருஷத்துக்குப் பெறகுதான்! சுகன்யா படிச்சு முடிச்சு ஒரு வேலையும் தேடிக்கணுமில்லே? பணமும் சேரணுமில்லே? வெளியிலே போற பொண்ணு – அதுக்குள்ளே காதல் ஊதல்னு சொல்லிக்கிட்டு வந்து நிக்காம இருக்கணுமே கடவுளேன்னு நான் மடியிலே நெருப்பைக் கட்டிக்கிட்டு இருக்கேன். உலகமா, கெட்டுக் கெடக்குது. சூர்யா அழகான அழகு வேறயா? எனக்கு ஒரே கவலையா இருக்குங்க. காதல் கலியாணம்னாலும் கூட கலியாணத்தை நடத்தப் பணம் வேணுமில்லே?” என்று அனந்தநாயகி சொன்னதும் அதன் பின் அவள் விட்ட பெருமூச்சும் அவள் செவிகளில் விழுந்தன.

“அது மெய்தான். ஆனா, சூர்யாவைப் பத்திக் கவலையே படாதீங்க. அது தங்கமான பொண்ணு. குனிஞ்ச தலை நிமிர்றதில்லே. நான் தான் பாக்கறேனே!”

“நீங்க என்னதான் சொல்லுங்க, அழகான வயசுப் பொண்ணுங்க ஒரு அம்மா வோட அடி வயித்து நெருப்புத்தாங்க!”

“நீங்க சொல்றதும் ஒரு விதத்துலே மெய்தான்.”

சூர்யா ஓசைப்படாமல் கூடத்து அறைக்குப் போனாள். கூடத்தில் இருந்த அவள் அப்பா, “என்னம்மா, சூர்யா? ரொம்ப சீக்கிரம் வந்துட்டே?” என்று இழுத்து இழுத்துக் கேட்டார்.

“தலைவலிப்பா.”

கூடத்து அறையினுள் சுகன்யா இருந்தாள். தேர்வுப் படிப்புக்காகக் கல்லூரியில் ஒரு வார விடுப்பு விட்டிருந்ததால் அவள் வீட்டில் இருந்தாள். அறையின் கதவைச் சாத்தித் தாளிட்டுவிட்டுத் தரையில் குப்புறப் படுத்த சூர்யா அழத் தொடங்கினாள்.

பதறி எழுந்த சுகன்யா, “என்னக்கா? என்ன நடந்திச்சு? எதுக்கு இப்படி அழறே?” என்றவாறு அவளருகில் அமந்ந்தாள்.

இரண்டு நிமிடங்களுக்குத் தொடர்ச்சியாக அழுத சூர்யா, கண்களைத் துடைத்துக்கொண்டு எழுந்து உட்கார்ந்து எல்லாவற்றையும் சுகன்யாவுக்குச் சொன்னாள்.

சொல்லி முடித்ததும் மறுபடியும் குப்புறப் படுத்துக் கொண்ட சூர்யாவின் முதுகை ஆதரவுடன் வருடிய சுகன்யா, ‘விட்டுத் தள்ளு, அக்கா. இத்தோட போச்சே, சனியன்! அதை நினைச்சு சந்தோஷப்படு. இது நமக்கு ஒரு பாடம்தான். என்னையும் சேர்த்துத்தான் சொல்லிக்கிறேன்,” என்றாள்.

“அடியே, சுகன்யா! பக்கத்து வீட்டு அம்மா கடைக்குக் கூப்பிட்றாங்க. போயிட்டு ஒரு மணி நேரத்துல வந்துட்றேன். சூர்யாவுக்குக் காப்பி டிகாக்ஷன் வச்சிருக்கேன். காப்பி கலந்து குடு. நான் வர்றேன். கதவைச் சாத்திக்க,” என்றவாறு அனந்தநாயகி இரேழியில் செருப்பு மாட்டிக்கொண்டு படி யிறங்கினாள்.

அறைக் கதவைத் திறந்துகொண்டு சுகன்யா வெளியே வரப் பிடித்த இரண்டு நிமிடங்களில் அனந்த நாயகி மறுபடியும் வாசலில் நின்றவாறே குரல் கொடுத்தாள் :

“அடியே, சுகன்யா. வந்து கதவைச் சாத்தித் தாப்பாப் போட்டுக்க. அதுக்கு அப்பால நான் படி எறங்குறேன். . .”

சுகன்யா விரைந்து சென்று வாசற்கதவைச் சாத்தித் தாழ்ப்பாளைப் போட்டுவிட்டு, அடுக்களைக்குப் போய், சூர்யாவுக்குக் காப்பி கலந்து எடுத்துக்கொண்டு மறுபடியும் கூடத்து அறைக்குப் போய் அவளைச் சமாதானப் படுத்தும் முயற்சியில் ஈடுபட்டாள்.

/ முடிந்தது /


jothigirija@vsnl.net

Series Navigation