மடியில் நெருப்பு – 34

This entry is part [part not set] of 34 in the series 20070419_Issue

ஜோதிர்லதா கிரிஜா


அந்த ஆள் மறுபடியும் சற்றுத் தயங்கிய பின் சொன்னார்: “அன்னைக்கு ஓட்டல் சோளாவுக்கு வந்திருந்தீங்கல்லே ஒரு ஆளோட? அவருக்கு ஏற்கெனவே கல்யாணம் ஆயிட்டுதுங்க! உங்களுக்குத் தெரிஞ்சிருக்காதுன்னு தோணுது. அதான் சொல்லி வைக்கலாம்னு . . . பாத்தா நல்ல பொண்ணாத் தெரியறீங்க. அதான் . . .” என்றாஎ.

சொல்லிவிட்டு அவர் அச்சத்துடன் சூர்யாவின் முகத்தையே பார்த்தபடி நின்றார். அவளுக்குச் சிரிப்பு வந்தது. “உங்களுக்கு எப்படித் தெரியும்?”

“அவரு தன் ஒய்·போட எங்க ஓட்டலுக்கு அடிக்கடி வந்திருக்காருங்க.”

“அவர் மாதிரியே அவருக்கு ஒரு அண்ணன் இருக்காருங்க. ரெண்டு பேரும் ரெட்டைப் பிள்ளைங்க. அவருக்கு முந்திப் பிறந்தவர்ங்கிறதால ‘அண்ணன்’னு சொன்னேன். ரெண்டு பேரும் ஒரே அச்சா இருப்பாங்க. நிறையப் பேரு இது மாதிரி ஏமாந்து போயிருக்காங்க. இருந்தாலும், உங்க அக்கறைக்காக ரொம்ப தேங்க்ஸ் உங்களுக்கு!”

அவரது முகம் அசடு தட்டிப் போனது. “ஐ’ம் சாரிங்க! ”

அவள் பதிலுக்கு ஒரு புன்சிரிப்பை மட்டுமே உதிர்த்துவிட்டு அப்போது அங்கு வந்த பேருந்தில் ஏறினாள்.

. . . ராஜலட்சுமி ஒரு சுற்றுப் பருத்திருந்தாள். ஆனாலும் அழகை இழக்காமல் இருந்தாள். கணவனுடன் அவள் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்தாள் என்பது அவள் முகத்தின் அதிகப் படியான களையிலிருந்து தெரிந்தது. கதவைத் திறந்து சூர்யாவை உள்ளே அழைத்துக்கொண்டு வந்ததும் அவள் செய்த முதல் வேலை தங்கையை அணைத்துக்கொண்டு அழுததுதான். சூர்யாவுக்கும் அழுகை வந்தது.

அழுது ஓய்ந்ததும் கண்களைத் துடைத்துக்கொண்ட அவள், “எத்தனை நாளாச்சுடி, சூர்யா! நீ முன்னைக் காட்டிலும் ரொம்பவே அழகாயிட்டே! சுகன்யாவும் நல்லா வளந்திருக்குமே? அப்பா எப்படி இருக்காரு? அம்மா எப்பவாச்சும் என்னை நினைக்கிறாங்களா? அப்படி நெனப்பு வர்றப்போல்லாம் என்னைத் திட்றாங்கதானே?” என்றாள்.

அக்காவின் பிடியிலிருந்து விடுபட்ட சூர்யா, “இதுக்கெல்லாம் விவரமா அப்புறம் பதில் சொல்றேன். என்னாமோ பெரிய ஆச்சரியம் எனக்குக் காத்திட்டிருக்குன்னு எழுதி யிருந்தியே? என்ன அது? அதைப் பத்தி முதல்ல சொல்லு,” என்றாள் ஆவலுடன்.

“இதோ, இவன் தான்!” என்று பக்கத்து அறையில் தூளியில் உறங்கிக் கொண்டிருந்த குண்டுப் பையனை ராஜலட்சுமி அவளுக்குக் காட்டினாள். அப்போதுதான் கண் விழித்திருந்த குழந்தை கொட்டக் கொட்ட விழித்தபடி படுத்திருந்ததைக் கண்டதும் சூர்யாவுக்கு மகிழ்ச்சி தாளவில்லை. அப்படியே தூளியிலிருந்து அவனை எடுத்துத் தூக்கிப் பச் பச் சென்று பல தடவைகள் அதை முத்தமிட்டாள்.

“அய்யோ! அழாகா யிருக்காண்டி! என்ன பேரு வெச்சிருக்கே?”

“ஞானசூர்யன்னு பேரு வெச்சிருக்கேண்டி. ஞான சூர்யனா இருக்கப் போறானோ, இல்லாட்டி ஞான சூன்யமா யிருக்கப் போறானோ! யாரு கண்டா? போகப் போகத்தான் தெரியும்!”

“என்னக்கா அப்படிச் சொல்றே? பெரிய ஆளா வருவான், பாரு. கண்னைப் பாரு! திராட்சைப் பழமாட்டம்! சிரிப்பைப் பாரு, சிரிப்பை! நான் உன் சித்திடா!” என்று சூர்யா அவனைக் கொஞ்சத் தொடங்க, “இன்னிக்கு நீ இங்கே சாப்பிட்றே. சாயந்திரம் வரைக்கும் என்னோடவே இருந்துட்டு, ஆ·பீஸ் விட்ற நேரத்துக்குக் கெளம்பி வீட்டுக்குப் போறே! சரியா?” என்ற ராஜலட்சுமி, “சிரிப்பைப்பாரேன், சித்தியைப் பாத்ததும்!” என்றாள்.

“அம்மாவுக்குத் தெரியுமா?”

“இன்னும் சொல்லல்லேக்கா. சுகன்யாவுக்கு மட்டும்தான் சொன்னேன். அவளை இன்னொரு நாள் கூட்டிட்டு வர்றேன்.”

இரண்டு ஆண்டுகளுக்குரிய நிகழ்வுகளை இருவரும் பரிமாறிக்கொள்ளத் தொடங்கினார்கள். வெகு நேரம் பேசிக்கொண்டிருந்த பிறகு ராஜலட்சுமி கேட்டாள்: “ஆமா? உங்க ஆ·பீஸ்லே கமலான்னு ஒரு பொண்ணு தற்கொலை பண்ணிக்கிட்டாளாமே? உனக்குப் பழக்கமானவளா?”

“அவ்வளவாப் பழக்கம் கிடையாது. ஆனா தெரியும். உனக்கெப்படி இது தெரியும்?”

“அந்தக் கமலாவுடைய தம்பியும் இவரோட தம்பியும் ஒரே வகுப்பிலேதான் படிக்கிறாங்க. . . . என்ன பிரச்சனை அவளுக்கு – தூக்குப் போட்டுக்குற அளவுக்கு?”

“இன்னும் கண்டு பிடிக்கல்லேக்கா. போலீஸ் எங்க ஆ·பீசுக்குக் கூட வந்து போயிட்டிருக்கு. “

“எதுனாச்சும் காதல் தோல்வியா யிருக்கலாம்.. . அது சரி, உன்னோட சமாசாரம் என்னடி? உனக்குப் பிடிச்சவனா உன் ஆ·பீஸ்லேயே யாராச்சும் இருக்காங்களா? இப்பல்லாம் நிறையப் பொண்ணுங்க அவங்கவங்க ஆ·பீஸ்லேயே துணை தேடிக்குதுங்க! உன் விஷயத்திலே நீ அப்படிச் செய்யிறதுதான் சரியா யிருக்கும். ஏன்னா, லவ் மேரேஜா இருந்தாத்தான் என்னோட விஷயம் உன் கல்யாணத்துக்குக் குறுக்கே வராம இருக்கும்.”

“என்னக்கா சொல்றே?”

“தெரியாத மாதிரி கேளு! நான் அரிஜனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டது – அதிலேயும் ஓடிப் போனது – பையன் வீட்டாருக்குத் தெரிய வந்தா லேசிலே ஒத்துக்க மாட்டாங்களே. லவ் மேரேஜா யிருந்தா ஓரளவுக்குப் பையனோட பிடிவாதத்தால அது நடக்கலாம்.. இல்லையா? அதைத் தான் சொல்றேன்.”

சூர்யா ஒன்றும் சொல்லாதிருந்தாள்.

“என் கேள்விக்கு நீ இன்னும் பதிலே சொல்லல்லே!”

ராஜாதிராஜன் பற்றி இப்போதைக்கு ஏதும் சொல்லக்கூடாது என்று எந்தக் காரணமும் இன்றி சூர்யாவுகுத் தோன்றியது. “அப்படி எதுவும் இப்ப சத்தியா இல்லேக்கா!” என்று சொன்னாள்.

. . . சூர்யா தன் அக்காவுடன் வாய் வலிக்கப் பேசிய பின்னர் விடை பெற்றாள்.

ஒரு மணிக்குத்தான் ஜகந்நாதன் கிளம்பினார். சாப்பாட்டுக்கு ராஜாதிராஜனை அவர் வீட்டுக்கு அழைத்தார். தனக்குப் பசியில்லை என்று கூறி அவன் மறுத்துவிட்டான். அவர் தலை மறைந்ததும் அவன் பிறிதொரு திசையில் பொதுத் தொலைபேசியில் காவல் துறை ஆணாயாளருடன் பேசக் காரில் விரைந்தான்.

.. .. .. காவல்துறை ஆய்வாளர் சத்தியானந்தம் இருக்கையை விட்டு எழுந்த கணத்தில் தொலைபேசி கூப்பிட்டது.

“நான் கமிஷனர் பேசறேன், சத்தியானந்தம்! நீங்க உடனே இங்கே வரணுமே?”

“இதோ கிளம்பிட்டேன், சர்!” – மறு நிமிடமே சத்தியானந்தம் பைக்கை உதைத்தார்.

. . . “உக்காருங்க, சத்தியானந்தம்! உங்களைக் கூப்பிட்றதுக்கு ஒரு அஞ்சு நிமிஷம் முந்தி எனக்கு ஒரு ·போன் கால் வந்திச்சு. பேசினவன் தன்னை வெளிபடுத்திக்க மறுத்துட்டான். இதோ, மூணு விலாசம் குடுத்திருக்கேன். இந்த மூணு பங்களாக்களும் நீங்க சொன்ன அந்த தண்டபாணின்றவனுடையதாம். இப்ப அவனோட கூட்டாளி எவனுடனோ அவனுக்கு ஏதோ தகராறுன்னு தோணுது. அதனோட விளைவுதான் இந்த மொட்டை டெலி·போன் கால்! நம்பகமான சில கான்ஸ்டபிள்களும் இன்ஸ்பெக்டர்களும் இப்ப உங்க கூட வருவாங்க. நீங்க மூணு க்ரூப்பாப் பிரிஞ்சு இந்த மூணு இடங்களுக்கும் ஒரே நேரத்திலே போய் ரெய்ட் பண்றீங்க. அங்கே எதுவும் கிடைக்காட்டி, இதோ இந்த இன்னொரு மூணு இடங்களுக்கும் போறீங்க. இதெல்லாமும் அவனோட தொழில் சம்பந்தப்பட்ட இடங்கள்னு அந்தாளு சொல்றான். நான் டெலி·போன் டிபார்ட்மெண்ட் ஜ்¢.எம்மோட பேசி இந்த ஆறு இடங்கள்ளேயும் இருக்கிற டெலி·போன்களை டிஸ்கனெக்ட் பண்ணச் சொல்லியிருக்கேன். இந்நேரம் பண்ணியிருப்பாரு. ஏன்னா ஒருத்தனுக் கொருத்தன் பேசி எச்சரிக்கக்கூடாதில்லே, அதுக்குத்தான். . . அப்புறம் இன்னொரு விஷயம். . .பயனீர் இம்ப்போர்ட்டர்ஸ் அண்ட் எக்ஸ்போர்ட்டர்ஸ் கம்பெனி முதலாளி மிஸ்டர் ஜகந்நாதனுடைய மகன் ராஜாதிராஜன்கிறவன் ப்ளூ ·பில்ம் எடுக்கிறானாம். அதிலே அவனே கதாநாயகனாம். அவனோட கார் டிக்கியைச் சோதனை போட்டா ஒரு கேசட்டாவது கிடைக்குமாம். அதையும் அப்படியே கவனிங்க. கார் நம்பர் இதோ இருக்கு. இந்தாங்க. . . ஆல் த பெஸ்ட்!”.

“என்னை நம்பி இந்தப் பெரிய பணியைக் கொடுத்ததற்கு ரொம்ப நன்றி, சார்.!”

“அப்புறம் இன்னொண்ணும் சொன்னான். சத்தியானந்தம்னு ஒரு இன்ஸ்பெக்டர் ரொம்ப நாணயஸ்தர் மாதிரி நடிச்சுக்கிட்டு மாமூல் வாங்குறாராம்! அவரோட பேசின டேப்பையும அனுப்பறேன்னிருக்கான். நான் மனசுக்குள்ளே சிரிச்சுக்கிட்டேன். . .”

“அப்படின்னா, ராஜாதிராஜனைப் பத்திச் சொன்னது கூட தண்டபாணியோ அவனோட கூட்டாளியோதான். அப்புறம், தண்டபாணியைப் பத்திப் புகார் சொன்னது ராஜாதிராஜனா யிருக்கணும்!”

“நீங்க சொல்றது சரியாயிருக்கலாம். டெலி·போன் நம்பர்களை ட்ரேஸ் பண்ண முடியல்லே. நேரம் பத்தல்லே. அது முடிஞ்சாலும், இவனுக பி.சி.ஓ- லேர்ந்துதான் பண்ணுவானுக. பிசி.ஓ- வைக் கண்டு பிடிச்சாலும், ஆளைப் பிடிக்கிறது கஷ்டம். ஓடிடுவானுக.”

காவல்துறை ஆணையாளரால் அழைக்கப்பட்ட ஊழியர்கள் அனைவரும் அரை மணிக்குள் அங்கு வந்து சேர்ந்தார்கள். எல்லாருக்கும் சில யோசனைகளையும் வழிமுறைகளையும் விவரித்தபின் ஆணையாளர் அவர்களுக்கு வாழ்த்துக் கூறி அனுப்பி வைத்தார். அனைவரும் மூன்று அணிகளாய்ப் பிரிந்து முதல் மூன்று இடங்கள் நோக்கிப் புறப்பட்டார்கள்.

போகும் வழியில் சத்தியானந்தத்தின் அணி முதலில் ஜகந்நாதானின் அலுவலகத்துக்குச் சென்றது. அப்போது பிற்பகல் மணி மூன்று ஆகியது. மூன்று காவலர்களை ராஜாதிராஜனின் காருக்கு அருகே நிறுத்தி வைத்துவிட்டு, சத்தியானந்தம் தனியாக ராஜாதிராஜனின் அறைக்குப் போனார்.

சத்தியானந்தத்தின் வருகை ராஜாதிராஜனை எச்சில் விழுங்க வைத்தது. முகத்தில் வேர்வை பொடியச் செய்தது. என்ன முயன்றும் அவனால் இயல்பாக இருக்க முடியவில்லை. குரல் நடுக்கத்தைச் சமாளிக்கவே இயலவில்லை.

“மிஸ்டர் ராஜாதிராஜன்! நீங்க ப்ளு ·பில்ம் எடுக்கிறதாகவும் காசட்டுகளை வித்துக்கிட்டிருக்கிறதாகவும் எங்களுக்குத் தகவல் வந்திருக்கு. உங்க கார்லே சோதனை போட வந்தோம். அப்ப நீங்களும் பக்கத்திலே இருக்கணும். வாங்க!”

ராஜாதிராஜன் மிரண்ட பார்வையுடன் எழுந்து நின்றான். அவன் கால்கள் தள்ளாடின: “அப்படி யெல்லாம் எதுவும் கிடையாது, சார். இது யாரோ பண்ற அக்கிரம வேலை. தண்டபாணின்னு எனக்கு ஒரு ·ப்ரண்ட் இருக்கான். அவன் தான் இது மாதிரியான வேலைகள்லாம் செய்துக்கிட்டிருக்கிறதா என் காதிலே விழுந்தது. என் கிட்ட பெரிய தொகையாக் கடன் கேட்டான். நான் மறுத்துட்டேன். அந்த ஆத்திரத்திலே இப்படி அநியாயமாப் பழி சொல்றான் . . . முதல்லே எங்கப்பாவுக்கு ஒரு ·போன் பண்ணிக்கிறேன், சார்!.”

“பண்ணிக்குங்க. ஆனா அந்தாளு சொன்னது மாதிரி நீங்களே பங்கெடுத்துக்கிட்ட வீடியோ கேசட்ஸ் கிடைச்சா, உங்கப்பாவோ தாத்தாவோ எதுவும் பண்ணிக்க முடியாது! இப்ப உங்களை அரெஸ்ட் பண்ண மாட்டோம். ஆனா, கேசட்லே நீங்க பங்கெடுத்திருந்தா என்க்வொய்ரி நடக்கும். என்ன செய்யணுமோ செய்யுங்க.”

ஜகந்நாதனுடன் பேசும் எண்ணத்தை அப்போதைக்குக் கைவிட்ட அவன் தலையைக் குனிந்துகொண்டு சத்தியானந்தத்துடன் நடந்தான்.

இரண்டே நிமிடங்களில் டிக்கியிலிருந்து ஒளிப்பேழை அகப்பட்டது. ராஜாதிராஜனின் முகம் சாம்பல் பூத்துப் போனது.

“சார்! இது என் மேலே அபாண்டமா சுமத்தப் பட்டிருக்கிற பழி. எப்படி இது நேர்ந்ததுங்கிற விவரத்தை யெல்லாம் நானே உங்களுக்குச் சொல்றேன். தயவு செய்து என் அறைக்கு வாங்க, சார். வந்து, நான் சொல்றதை யெல்லாம் கேட்டுட்டு ஒரு முடிவுக்கு வாங்க!”

சத்தியானந்தம் தம் சகாக்களுடன் ஒரு நிமிடம் போல் கலந்து பேசிவிட்டு அதற்கு ஒப்புக்கொண்டு ஆய்வாளர்களுடன் மட்டும் ராஜாதிராஜனைப் பின் தொடர்ந்து அவனது அறைக்குப் போனார். அவன் அவர்களை அமரச் செய்தபின், சிவப்பு விளக்குப் பொத்தானை அமுக்கினான். பின்னர், கண்ணீருடன், “இன்ஸ்பெக்டர்! எங்கப்பா மானஸ்தர். தயவு செய்து என் பெயரைச் சந்தி சிரிக்க வெச்சுடாதீங்க. அந்தத் தண்டபாணி எனக்கு மயக்க மருந்து குடுத்து என்னை இப்படிப் பண்ண வெச்சுட்டான். எவனாவது இப்படிப் பட்ட வீடியோ கேசட்டை கார் டிக்கியிலே மடத்தனமா வைப்பானா? இதிலேர்ந்தே நீங்க புரிஞ்சுக்கணும் . . மொத்தமா ரெண்டு லட்சம் குடுத்துட்றேன். அதை உங்களுக்குள்ளே பகிர்ந்துக்குங்க. சார்! ப்ளீஸ்!” என்று கும்பிட்டான்.

மூன்று ஆய்வாளர்களின் முகங்களும் இரும்பு போல் இருந்தன. கண்களில் மட்டும் ஓர் எகத்தாளப் புன்னகை தலைகாட்டியது.

“எல்லாப் போலீஸ்காரங்களையும் ஒரே மாதிரி எடை போடாதீங்க, மிஸ்டர்! நாங்க வித்தியாசமானவங்க! இப்ப, எங்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற குத்தம் வேற பண்ணிட்டீங்க! இந்தத் தப்புக்காக வேற அதிகப்படி தண்டனை பெறப் போறீங்க! இதுக்காகவே இப்ப நாங்க உங்களைக் கைது பண்ணியாகணும்!” என்ற சத்தியானந்தம் முகம் சிவக்க அவனைப் பார்த்தார்.

ராஜாதிராஜனின் முகம் மேலும் வெளிறியது. அவன் கண்ணீருடன் தலை கவிழ்ந்தான்.


jothigirija@vsnl.net
தொடரும்

Series Navigation

author

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts