மடியில் நெருப்பு – 14

This entry is part [part not set] of 25 in the series 20061130_Issue

ஜோதிர்லதா கிரிஜா


‘எதுவாயிருந்தா என்னப்பா’ எனும் ராஜாதிராஜனின் பதில் ஜகந்நாதனின் முகத்தில் புன்சிரிப்பைத் தோற்றுவித்தது. “அப்படித்தான் இருக்கணும்! பாரபட்சமே உதவாது!”

அவன் பதில் சொல்லவில்லை. சன்னமாக ஒரு பெருமூச்சை உதிர்த்தான். மனைவி பற்றிய கவலையின் வெளிப்பாடாக அந்தப் பெருமூச்சைப் பொருள்செய்துகொண்ட அவர், “பிரசவம் சிக்கல் எதுவும் இல்லாம நார்மலா யிருக்கும்னு தானே டாக்டரம்மா சொன்னாங்க? அதைப் பத்தி ஏதாவது தெரியுமா?” என்றார் கவலையாக.

“சிசேரியனாத்தான் இருக்கும்னு டாக்டரம்மா சொல்றாங்களாம். ஆனா கவலைப்பட்றதுக்கு ஒண்ணும் இல்லையாம்.”

“இதை ஏன் நீ எங்கிட்ட சொல்லவே இல்லே? நான் கேட்டாத்தான் சொல்லுவியா?” – ஜகந்தாதனின் குரலில் எரிச்சல் ததும்பிற்று.

“சாரிப்பா.”

“மண்ணாங்கட்டி! .. சரி, விடு. பிரசவத்துக்கு இன்னும் ஒரு வாரம்தான் இருக்குன்றதாலே நீ வேணும்னா போய்க் கல்பனாவோட இரு. அவளுக்குக் கொஞ்சம் ஆறுதலா யிருக்கும்.”

“அதெல்லாம் ஒண்ணும் வேணாம்ப்பா.”

ராஜாதிராஜன் எழுந்துகொண்டான்.

“என்னடா? வெக்கமா?”

“அதேதாம்ப்பா. மாமியார் வீட்டிலே எல்லாரும் என்னைக் கலாட்டாப் பண்ணுவாங்கப்பா.”

“என்னடா பெரிய கலாட்டா? போன்னா போயிட்டுவா. கம்பெனியைப் பத்தி யெல்லாம் கவலைப் படாதே. நான் பார்த்துக்கறேன்.”

“இனிமே நீங்க முழு ஓய்வு எடுத்துக்கணும்ப்பா. அப்பப்ப கம்பெனிக்கு வந்து செக் பண்ணுங்க, போதும். நான் பார்த்துக்கிறேம்ப்பா.”

“சரி. அப்புறம் இன்னொரு விஷயம். சொல்ல மறந்தே போயிட்டேன். லில்லியைப் பத்தி உங்கிட்ட சொல்லியிருக்கேன். நெனப்பு இருக்கு இல்லே?”

“என்ன கேள்விப்பா இது? ஆனா எப்பவோ பார்த்தது. முகம் சரியா ஞாபகமில்லே.”

“இன்னைக்கு அவ வீட்டுக்குப் போறோம். நானும் அவ வீட்டுக்குப் போய் ஒரு வாரம் ஆயிடிச்சு. அப்பாலே அவளோட ·போன் நம்பர் தர்றேன். உன் டயரியிலே குறிச்சு வச்சுக்க…குளிச்சுட்டு உடனே கெளம்பறோம்.”

“இன்னைக்கேவாப்பா?”

“ஆமா. இப்பவே. டி·பன் அங்கே போய்ச் சாப்பிட்டுக்கலாம். லில்லிக்கு ·போன் பண்ணிச் சொல்லிடறேன். நீ போ முதல்லே குளி….. அது சரி, லில்லியைப் பத்திக் கல்பனாவுக்குத் தெரியுமா?”

“இல்லேப்பா. நான் சொன்னதில்லே. அது உங்களோட ரகசிய மில்லையா? அதனாலே சொல்லல்லே.”

“சொன்னாலும் பெரிய தப்பில்லே. ஆனா நீ சொல்லாதது எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு…பொஞ்சாதி கிட்ட எல்லா உண்மைகளையும் சொல்லிடணும்னுவாங்க. ஆனா அது தன்னைப் பத்தின உண்மைகளை மட்டுந்தான்! மத்தவங்களோடது இல்லே! இல்லையா?” இவ்வாறு சொல்லிவிட்டு அவரே சத்தமாய்ச் சிரித்தார்.

பிறகு, “சரி, நீ போய்க் குளி. நான் இப்பவே லில்லியோட பேசிர்றேன்…”

அவன் புன்னகை செய்துவிட்டுக் குளிக்கப்போனான். குளியலறைக்குப் போகும் வழியில் தான் தொலைபேசி இருந்தது. ஜகந்நாதன் லில்லியுடன் பேசுவதைக் கேட்கவேண்டும் போல் அவனுக்கு இருந்தது. அவனுக்கு எதிரில் அவர் அவளுடன் தொலைபேசியதே இல்லை. எனவே அவன் சற்றே தள்ளிப் போய் நின்றுகொண்டான்.

“லில்லி! நான்தான் பேசறேன்…எப்படி இருக்கே? கொஞ்சம் உடம்பு சரியில்லே. அதான் வரல்லே… அதெல்லாம் ஒண்ணும் பெரிசா எதுவும் இல்லே. நேர்லே வந்து சொல்றேன். உனக்கு ஒரு ஆச்சரியம் காத்துக்கிட்டிருக்கு. நானும் இன்னொரு ஆளும் உன் வீட்டிலே இன்னைக்கு டி·பன் சாப்பிட இன்னும் அரை மணியிலே கிளம்பறதா யிருக்கோம்…. அது சஸ்பென்ஸ்! … அட! கண்டு பிடிச்சுட்டியே!….. இன்னும் ஒரு வாரத்துலே தாத்தா ஆயிடுவேன்னு நினைக்கிறேன்….பை..”

ராஜாதிராஜன் அவசரமாய் நகர்ந்து குளியலறைக்குப் போனான். தாம் ஒரு வாரத்துக்குள் தாத்தா ஆகப்போவதாய் அவர் சொன்னதும் அந்த அம்மாளுக்கு எப்படி யிருந்திருக்கும் என்று அவன் எண்ணிப் பார்த்தான். தன் வைப்பாட்டியைத் தாயாக்க மறுத்து ஆனால் அவளை ஒரு துய்பொருளாய் நினைத்து அனுபவித்துக்கொண்டு மட்டும் இருக்கும் ஒரு மனிதர் தாம் தாத்தாவாகப் போவதை ஓர் உறுத்தலோ லச்சையோ துளியும் இன்றிச் சிரித்துக்கொண்டே அவளிடம் சொல்லுகிறாரே என்று தன் அப்பாவைப்பற்றிய வியப்பில் ஆழ்ந்தான்.

முன்னிருக்கையில் ஜகந்நாதன் அமர்ந்திருக்க, ஏழு மணிக்கு ராஜாதிராஜன் காரைக் கிளப்பினான். சுமார் ஐந்து நிமிட மவுனப் பயணத்துக்குப் பிறகு, அவன் பேசத் தொடங்கினான்:

“அப்பா! இனிமேற்பட்டு கம்பெனி விவகாரங்களையெல்லாம் நானே கவனிச்சுக்குறேம்ப்பா. நீங்க ஒரு மேற்பார்வையாளரா மட்டுமே இருங்க. என் மேலே உங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கில்லே?”

ஜகந்நாதன் சிரித்தார்: “என்ன ராஜா இது, இப்படி ஒரு கேள்வி கேக்குறே? எல்லாம் உன் பணம்! உன்னோட கம்பெனி! .. நான் இருக்கப் போறது இன்நும் கொஞ்ச நாள்தானே?”

ராஜாதிராஜன் இடக்கையை நீட்டி அவரது தோளில் வைத்துக் கணம் போல் இருந்த பின் அதை அகற்றிக்கொண்டான். “அப்படி யெல்லாம் சொல்லாதீங்கப்பா! இப்பதான் முதல் பேரன் பொறக்கப் போறான். இன்னும் வாழ்க்கையிலே எவ்வளவோ இருக்கேப்பா?”

அவன் உதட்டளவில்தான் பேசிக்கொண்டிருந்தான் என்பதை யறியாத அந்தத் தகப்பன் தம் மகன் தம் மீது மிகவும் பாசம் வைத்திருப்பதாக எண்ணி அகமகிழ்ந்து போனார். எனினும், பெற்ற மகனே யானாலும், தாம் இருக்கும் வரையில் முழுப் பொறுப்பையும் அவனிடம் விட அவர் தயாராக இல்லை. பண விஷயத்தில் அவர் கெட்டி. ராஜாதிராஜனுக்குக் கூட அவர் மாதச் சம்பளம் கொடுத்துக் கொண்டிருந்தார். கம்பெனியின் ஆதாயங்களை அவர் அறியாது அவனால் துளியும் அனுபவிக்க முடியாது. எல்லாவற்றுக்கும் கூட்டுக்கையெழுத்து வேண்டும்! அவனுக்குப் பொறுப்பு வரவேண்டும் என்பதற்காகத் தன் சம்பளத்தின் கணிசமான பகுதியை அவன் சமையல்காரர் சங்குண்ணியிடம் கொடுத்துவிட வேண்டும் என்பது அவரது உத்தரவு! இதனால், தன் உல்லாசங்களுக்காக அவன் தண்டபாணியின் கூட்டுறவில் ‘வேறு தொழில்’ புரிந்துகொண்டிருந்தான்.

அதற்குப் பிறகு இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

… இருவரையும் எதிர்பார்த்து வாசலில் தயாராக நின்றுகொண்டிருந்த லில்லி, வாய் நிறைந்த சிரிப்புடன், கைகூப்பி, “வாங்க, தம்பி! நல்லாருக்கீங்களா?” என்று வரவேற்றாள். அந்தக் கும்பிடு அவனுக்கு மட்டும்தான். ராஜாதிராஜான் பதில் வணக்கம் செய்தபடி லில்லியைக் கவனித்தான். அவள் சற்றே தடித்திருந்தாள். மற்றப்படி வேறு மாற்றம் ஏதும் தெரியவில்லை.

“என்னது நீங்க! என்னைப் போய் நீங்க, வாங்கன்னுக்கிட்டு! சும்மா ராஜான்னே பேரைச் சொல்லிப் பேசுங்க!” என்று அவன் சிரித்தான்.

மூவரும் வீட்டுக்குள் நுழைந்தார்கள்.

“உக்காருங்க ரெண்டு பேரும். எல்லாம் ரெடியாயாச்சு. இதோ, ஒரே நிமிஷத்துலே வந்துர்றேன்,” என்ற லில்லி ஒரு சின்ன பெண்ணைப் போல் குதித்துக்கொண்டு சமையலறை நோக்கிப் போனாள். இருவரும் சாப்பாட்டு மேசைக்கு முன்னால் உட்கார்ந்தார்கள். ராஜாதிராஜனின் பார்வை நாற்புறமும் சுழன்றது. வீடு சின்னதாய், இரண்டு அறைகள், ஒரு பெரிய கூடம், ஒரு சமையலறை, குளியல் அறை, கழிப்பறை, வீட்டுப் பணி வராந்தா என்று கச்சிதமாய் அளவோடு அமைந்திருந்தது. சமையற்கட்டுக்குப் போவதற்கு முன்னால் அவள் சுழலவிட்ட மின்விசிறிக் காற்றில் படபடத்து எகிறிய ஜன்னல் திரைச் சீலைகள் வெளியே இருந்த தென்னை மரங்களைக் காண வசதி செய்தன.

“ஏம்ப்பா, வீடு கொஞ்சம் ஒதுக்கமா யிருக்கே! தனியா யிருக்காங்களே! பயமா யிருக்காதா? இங்கே திருட்டு பயம் கிடையாதா?”

“ஒரு கூர்க்காவை ராத்திரிக்கு மட்டும் அமர்த்திக் குடுத்டிருக்கேன். சாயந்தரம் ஆறு மனிக்கு வந்துட்டு, காலையிலே ஆறுக்கெல்லாம் போயிடுவான்.”

லில்லி மூன்று சிற்றுண்டித் தட்டுகளையும் பலகாரக் கிண்ணங்களையும் குடிநீரையும் ஒவ்வொன்றாய்க் கொண்டுவந்து வைத்தபின் தானும் அவர்களுடன் அமர்ந்தாள்.

“சாப்பிடுங்க!” என்று உபசரித்த பின், ” என்னமோ அப்புறம் சொல்றேன்னீங்களே?” என்று லில்லி கேட்டாள்.

“முதல்ல டி·பன்! அப்பால மத்தது!…” என்ற ஜகந்நாதன் இடியாப்பத் துணுக்கை வாயில் திணித்துக் கொண்டே, “ஏ ஒன், லில்லி! ” என்று புகழ்ந்தார்.

“தம்பி சொல்லட்டும்!” என்ற லில்லி சிரித்தாள்.

“இடியாப்பம், கேசரி ரெண்டுமே மெய்யாலுமே சூப்பர்!” என்ற ராஜாதிராஜன் லில்லியை நோக்கிப் புன்னகை செய்தான்.

“உன்னோட தங்கச்சிக்கு மாப்பிள்¨ளைப் பையன் கிடைச்சானா?” என்று ஜகந்நாதன் லில்லியை விசாரித்தார்.

“எனக்கு ஒரு தங்கச்சி இருக்குது, தம்பி. எங்கப்பாவோட ரெண்டாவது சம்சாரத்துக்குப் பொறந்த பொண்ணு. தங்கம்னு பேரு. தங்கம்னா தங்கம்தான். தங்கச்சிலை மாதிரி இருப்பா. நல்ல அழகு. ஆனாலும் அவனவன் அம்பதாயிரம், அறுபதாயிரம்னு வாய் கூசாம வரதட்சினை கேக்குறான். அத்தோட, அம்பது பவுன் நகையாம், பைக்காம், தங்கத்துலே வாட்ச் செய்னாம், கழுத்துக்கு மைனர் செய்னாம், ·ப்ரிட்ஜாம், கலர் டி.வியாம்! இன்னும் என்னென்ன கேப்பாங்களோ! பிச்சைக்காரக் கும்பலுங்க!”

அப்போது தொலைபேசி சிணுங்கியது. லில்லி எழுந்து போய்ப் பேசினாள்: “ஹல்லோ! உனக்கு ஆயுசு நூறுடி, தங்கம்! இப்பதான் ஜகந்நாதன் சார் உன்னைப் பத்தி விசாரிச்சாரு. ஒரு நிமிஷம் கூட ஆகல்லே. நீ ·போன் பண்றே!.. இப்ப இங்கதான் இருக்காரு…டி·பன் சாப்பிட்டுக்கிட்டு இருக்காரு. மகனோட வந்திருக்காரு…..என்ன? பேரென்ன சொன்னே? தண்டபாணியா? அவரோட மகனுக்கு சிநேகிதனாமா? இரு, கேக்கறேன்… லைன்லேயே இரு…” என்ற லில்லி, “தம்பி! தண்டபாணின்னு உனக்கு ஒரு சிநேகிதன் இருக்கானாப்பா?” என்று வினவினாள்.

jothigirija@vsnl.net – தொடரும்

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா