பொழுது சாயும் வேளை

This entry is part [part not set] of 20 in the series 20011202_Issue

பவளமணி பிரகாசம்


வசந்தம் வந்து போனது-
சுவடுகள் விட்டுச் சென்றது.
சருகுகள் பறக்கும் காலம்,
சலசல ஓசையும் கானம்.

பொத்தி வைத்த பூமணம்
புகையாய் மாறுது நினைவினில்.
கனவாய் தோணுது மனதினில்
கருத்தில் பதிந்த காட்சிகள்.

கடந்து வந்த காடுகள்,
கலங்கி நின்ற தருணங்கள்,
கனமாய் சுமந்த பாரங்கள்
கரையுது அந்த கணங்கள்.

மூழ்கி எடுத்த முத்துக்கள்,
முயன்று பெற்ற பேறுகள்
முதுமை கால நாட்கள்
புரட்டிப் பார்க்கும் ஏடுகள்.

புதிதாய் புலரும் காலைகள்,
பொறுத்து முடியும் மாலைகள்-
பொதிந்து கிடந்த ரகசியம்
புாிந்து போனது அதிசயம்.

சலனம் இல்லாத ஓய்வு,
பொழுது சாயும் வேளை-
இதமாய் ஒருவலி இதயத்தில்;
இதுவே இனிதான பொதுவிதி.

Series Navigation