பொய் – என் நண்பன்

This entry is part [part not set] of 39 in the series 20030925_Issue

பெப்பின் பிரிட்டோ


‘என்ன பேசிக்கொண்டிருந்த அவளோட ? ‘
என்ற நண்பனின் கேள்விக்கு
‘ஒண்ணுமில்லை ‘ என்ற போது – இரகசியக் காப்பாளனாய்

‘அப்படி ஒண்ணும் தெரியலையே ‘
நீண்ட நாட்கள் கழித்து
சந்தித்த தோழி
‘ரொம்ப குண்டாகிவிட்டேனா ‘ ? என்று வருத்தத்துடன்
கேட்டபோது – தோழியை மகிழ்விப்பவனாய்

‘சாப்பிட்டுட்டுத்தான் வந்தேன் ‘
நடு இரவு வேளையில்
உறவினர் இல்லத்திற்குச்
செல்ல நேர்ந்த போது – நாகரிகமானவனாய்

‘எனக்கென்ன நல்லாயிருக்கிறேன் ‘
அவள் கணவணுடன்
ஒரு வணிக வளாகத்தில்
என்னைப் பார்த்து ‘நல்லாயிருக்கியா ? ‘ என்று கேட்டபோது
– இதய வலியை மறைப்பவனாய்

தாடிக்கான காரணத்தை
அப்பா கேட்க
‘தபக்காலம் ஆரம்பமாயிடுச்சில்ல அதான்… ‘ என்று இழுத்தபோது
– என்னையேக் காப்பாற்றுபவனாய்

பல சமயங்களில்
பொய்கள்
வலிமையானவை
இனிமையானவை
உண்மைகளை விட.

peppin-britto@comcast.net

Series Navigation