பொய்யன் நான் பொய்யனேனே!

This entry is part [part not set] of 54 in the series 20040722_Issue

மாலதி


—-

பிரியமுள்ள உமாவுக்கு,

இப்போதெல்லாம் உன் ஈமெயிலில் இரு வாக்கியங்களுக்கு ஒருமுறை ‘லவ் யூ டா ‘

சொல்கிறாய். பேசும்போதோ இன்னும் நிறைய. அது ஒரு புதிய ‘ஜெய்ஹிந்த் ‘

ஆகிவிட்டிருக்கிறது.டாவி சினிமா பாதிப்பு. நான் தவறாகச் சொல்லவில்லை

அதை. நானும் உன் வசனங்களுக்கு எதிர்வினை செய்கிறேன் மிகச்சரியாக. ‘ஐ

லவ் யூ டூ ‘ என்பதாக. சில நாட்களாக அந்த வாக்கியம் ‘காப்பி

குடிக்கலாமா ? ‘என்பது போலவோ ‘பில்லியனில் செளகர்யமாக

உட்கார்ந்தாயிற்றா ‘ என்பது போலவோ சாதாரணமாகிவிட்டது. ரியலி ஐ

லவ் யூ டூ. அதனால் அது எனக்கு உடன்பாடு இல்லை.

அன்பே!நம் நேசம் சில கோடுகளைத் தாண்டிப் போக வேண்டுமென்று

விரும்புகிறேன்.அதாவது என் அப்பா என் அம்மாவை நேசிப்பது ஒரு

தொழிலதிபர் தன் தொழிலை நேசிப்பது போல. உன் அம்மா உன் அப்பாவை

நேசிப்பது,அப்படி அவரை நேசிக்காமலிருப்பது பாவம் என்று அவரறிந்த எழுத்து

கற்பிதப் படுத்தியிருப்பதால். அப்படியே நாமும் ஒருவரை ஒருவர், தம் தம்

உடை வண்ணத்தையோ, தம்தம் வாகனத்தையோ,தம்தம் மெஷின்களையோ,

கம்ப்யூட்டர்களையோ,ரோபோ வையோ தேர்ந்தெடுப்பது போல ஒஹோஹோ என்ன

பொருத்தம் என்று சிலாகித்துப் போவது மட்டும் சரியில்லை என்று எனக்குப்

படுகிறது.

மேற்படி உத்தேசத்தில் நான் என் பொய்களை இன்று உடைக்கப் போகிறேன்.என்

நிஜமான பொய்களை. உதாரணத்துக்குச் சொல்வேனே அடிக்கடி, ‘யூ லுக்

வொண்டர்புfல் ,யூ ஆர் லுக்கிங் கிரேட் ‘என்றெல்லாம், அதெல்லாம் பொய்.

உண்மையில் உன் பல்திறப்பு பல சமயம் கொச்சையாயிருக்கிறது.உன் துறுதுறுப்பு

போலியானது. நடனப் பெண்களின், நடிகைகளின், மிக மோசமான சில

அசைவுகளை உன்னை அறியாமல் நீ சுவீகரித்துக் கொண்டிருக்கிறாய்.வெகு

சீக்கிரம் உனக்கு அவை மறக்கும் ஏனெனில் மிக சமீபத்திய வாங்கல்கள்

அவை.

என் பொய்களுக்காக என்னைக் குற்றம் சொல்லாதே.என் பொய்கள் உன் தூண்டுதல்கள்

தாம். உன் கேள்விகளின் நுனிகளில் என் புனைவுகளைச் செருகித் தருவது நீ.

நீ சாதாரணமாக இருக்கிறாய். நான் மிகச் சாதாரணமாக இருப்பது

போலவே.

நீ செய்த கலைப் பொருட்களைப் ‘பிரம்மாதம் ‘ என்று புகழ்ந்தது என் பொய்.

கச்சாப் பொருட்களை நீ அப்படி அப்படியே விட்டு வைத்திருந்தால் அவை இன்னும்

அழகாக உபயோகமாக இருந்திருக்கக்கூடும்.

உன் கஸின்களும் தோழிகளும் புத்திசாலிகள் என்று நீ நம்புவது ஆச்சரியம்.

மரியாதை நிமித்தம் நான் அவர்களைச் சகித்து ‘நைஸ் டு மீட் யூ ‘

சொல்கிறேன். நீங்கள் பேசிக் கொள்ளும் மொழியில் நிறைய பிழைகள்

இருக்கின்றன. ‘ஜிம் ‘ பண்ண மாட்டார்கள். ‘ஜிம் ‘

போவார்கள். யாரும் பர்ஸனாலிட்டியாக இருக்க மாட்டார்கள். பர்ஸனாலிட்டி

தென்பட நடந்து கொள்வார்கள்.

விலை மதிப்புள்ள உடையும் செருப்பும் நகையும் நேர்த்தியானவை என்று நீ

சாதிப்பது எனக்கு வருத்தம் தருகிறது. என் வாங்கு திறனை சந்தேகித்து

விடுவாயோ என்பதற்காக மட்டுமே நான் அவைகளை மெச்சி

அங்கீகரிக்கிறேன்.

உன் அத்தை மாமா பேச்சுக்களை ஏற்று மூன்று வருடங்களுக்குள் குச்சுப்பிடியையும்,

இரண்டு வருடங்களில் வீணையையும் தெரிந்து விடுவதை நீ துணிந்து பார்ப்பது

எனக்குக் கவலையாயிருக்கிறது. இருபது வருடமாவது ஊன்றாமல் கலைகள் நம்

கிட்டே நெருங்கா. பின்பும் கூடத் தீவிரமாகத் தொடர வேண்டியதிருக்கும்.

இதற்கும் மேல் என் உபதேசங்களை முன் வைத்து உனக்கு வேண்டாதவனாகிவிட

எனக்குக் கட்டாது.ஏனெனில் நான் உன்னை முழுசாக நேசிக்கிறேன். ஒரு அரை

நொடி என் நேசத்துக்குக் காரணமாயிருந்தது. எந்த அரை நொடி அது என்று

தெரிந்தால் நீ ஆச்சரியப்படுவாய். எனக்கு அபூர்வமாக நேர்ந்த ஒற்றை

புத்தித்துவ வெளிப்பாட்டின்போது நீ மிகச் சரியாகப் புரிதல் பண்ணி உடன்

நீட்டிய கால் நொடிக்கும் குறைவான கண்ணசைப்பில் அதையொட்டின உன்

முகக்குவிப்பில் எனக்குத் தெரிந்து போயிற்று.நீ தான் எனக்கானவள். என்

வேகங்களின் திசையில் உனக்கு வளைய முடியும். என் அறிவு ஸ்தம்பிக்கிறபோது

நீ மொழியாவாய் என்று புரிந்து போயிற்று.

இதெல்லாம் நீ ஏற்று மீண்டும் பேசுவாயா,தயக்கமின்றி நடந்து கொள்வாயா

என்று தெரியவில்லை. பொய்யனோடு தூங்குவதா புத்திசாலியோடு தூங்குவதா

என்ற தீர்மானத்தை உனக்கே விட்டு வைக்கிறேன்.

அன்புடன் உன்

மணி

பின் குறிப்பு:

மேற்படி சிந்தனையில் நாம் காதல் செய்தால்

1.வயோதிகம், நரைதிரை நம்மை உறுத்தாது.2.நீண்ட பிரிவு வாட்டாது

3.விபத்தோ, உறுப்பிழப்போ, குழந்தையின்மையோ,ஏன் சாவோ கூட நம்

காதலை உடைக்க முடியாமல் தோற்கும்.

அன்புள்ள மணிக்கு,…ஈமெயில் பார்த்தேன். இத்தனைக்கும் பிறகு

புத்திசாலியோடு யாராவது தூங்குவார்களா ? பி.கு.வை எடுத்து விட்டு

முட்டாளாய் வந்தால் முன்னாள் பொய்யனை ஏற்கத் தயார்.

அன்புடன் உமா.

—-மாலதி

malti74@yahoo.com

Series Navigation

மாலதி

மாலதி