பொன் தூண்டில்

This entry is part [part not set] of 8 in the series 20000806_Issue

ருத்ரா


1

சூது
மனிதனுக்கு தீது
என்று சொல்வதற்கு
வள்ளுவன் காட்டிய
உவமை இது.
உன் கண்ணின்
மீனே
தூண்டில் போடும்
காதல் எனும் விளயாட்டு
இங்கு
சூதாட்டம் ஆகிப்போவதா ?
அன்று நீ சொன்னாய்
இன்று இங்கு வருவதாய்.
‘இந்த பஸ்ஸில் தான் வருகிறாய் ‘
என்று நானும்
ஒவ்வொரு ‘பல்லவனிடமும் ‘
பந்தயம் கட்டிக்கொண்டிருக்கிறேன்.
காதல் கொப்புளிக்கும்
கங்கையே!
உன்னை வெள்ளமாய்
என் கண்களுக்குள்
கொண்டு வருவதற்குத் தான்
இந்த
‘பஸ் ஸ்டாண்டு பகீரதனின் ‘ தவம்.

2

அன்பே!
காதல் எனும்
ஆழ்நிலைத் தியானத்தில்
மூழ்கிவிட்டேன்.
நானே
தூண்டிலாய்
தூண்டிற்புழுவாய்
தூண்டில்படு மீனாய்
துடிதுடிப்பது
உனக்கு இன்னமும்
தொியவில்லையா ?
உனக்காக
நான் காத்திருக்கும்போது
எனக்குள் உன்னை
ஒருமுகப்படுத்திய
அந்த மெளனம் எனும்
கூர்மை
என்னைக்
கழுவேற்றிக் கொண்டிருக்கிறது.

3

இந்த இரைச்சல்
கடல்கள் நடுவேயும்
ஒரு அமைதித் தீவின்
குளிர்ந்த தென்னங்கீற்றுகளாய்
உன் புன்சிாிப்பு
எனக்கு புனிதமூட்டுகிறது.
கண்ணே!
உனக்காக காத்திருக்கும்
இந்த தருணங்கள்
காலத்தின்
கனபாிமாணங்களை எல்லாம்
தாண்டிச் சென்று விட்டன.
டாக்டர் பென்ரோசும்
டாக்டர் ஸ்டாஃபன்ஹாக்கிங்சும்
காலம் என்பது
ஈர்ப்பு விழுங்கியபின்
எஞ்சிய ‘கருங்குழி ‘க்குள்
சுருங்கிக் கிடப்பதாய்
கண்டு பிடித்திருக்கின்றனர்.
கண்ணே!
உன் கருவிழியின்
சுழியில்
சுருண்டு கிடக்கும்..இந்த
பஞ்சுமிட்டாய் பிரபஞ்சத்து..
காதலின் விஞ்ஞானத்துக்கு
அவர்களிடம்
சமன்பாடுகள் இல்லை.

4

காலம் என்றொரு நீளப்பாம்பு
எனக்குள்
சட்டை உாித்து
நெளிந்தோடுகிறது.
விநாடிகள் அறுபதாய்
நிமிடங்கள் அறுபதாய்
மணிக்குள் இன்னும் பல
அறுபது அறுபதாய் வந்தென்னை
அறுப்பதாய்
கங்கணம் கட்டிக்கொண்டாலும்
ஓ! காலமே
நீ தோற்றுத் தான் போவாய்..

5

கணங்கள் தோறும்
குத்திக்கிழிக்கும்
இந்த கடிகாரமுட்கள்
ஆயிரக்கணக்கில்
அணிவகுத்தாலும்
அதனை ஆசனம் ஆக்குவேன்.
விரக்தி
என் இமை விளிம்பில்
கண்ணீாின் சமுத்திரத்தைக்
காட்டி மிரட்டினாலும்
அந்த நீாில் நடப்பேன் நான்.
உன்னைக் காணாத
ஏக்கப் பெருமூச்சு
ஒரு சூறாவளியாய் வந்து
சுருட்டிவிட நினைத்தாலும்
உன் இதயம் எனும்
ஆகாயத்தில் மிதப்பேன்.
அப்போதும் நீ
வரவில்லை என்றால்
உன் வீட்டு
வேப்பமரத்துகிளையில்
கூடு கட்டி
கூவிக்கொண்டிருக்கும்
குயிலுக்குள் நான்
கூடுவிட்டு கூடு பாய்வேன்.
காதலின் ‘ஹடயோகி ‘ நான்!

6

‘சிறுபயலே!
சிற்றின்பம் நோக்கி
ஏன் இந்த வேட்டை ?
என்று யோகிகள்
முணுமுணுப்பது கேட்கிறது.
என் இலக்கு காதல்.
வழியில்
கால் இடறும்
பிரம்மம் பற்றி எனக்கு
கனவுகள் இல்லை.
அவளுக்காக
காத்திருக்கும்
என் தவத்தைக் கலைக்க
நீங்கள் ஏவும்
‘கரும்பு வில்லன் ‘ கூட
காதல் எனும்
மலர்க்கணையைத்தான்
கையில் வைத்திருக்கிறான்.
இந்த சிவனுக்கு
காதல் எனும்
அன்பே தான் சிவம்.

7

போின்ப பாதையில்
கானல் நீர்ப் பிரம்மம்
இன்னும்
உங்கள் கண்ணில்
பூச்சிகள் காட்டுகின்றன.
பொய்யையே திரும்ப திரும்ப
மெய் என்று
பயணம் போய்க்கொண்டிருக்கும்
மெய்ஞானிகளே!
கொஞ்சம் உற்றுப்பாருங்கள்
பாதையே இல்லாமல்..பயணம்
போய்க்கொண்டிருக்கிறீர்கள்.
வேதம் என்றும்
உபநிஷதம் என்றும்
மைல்கற்களை
நடுவதற்கு கூட பாதையின்றி
சுமந்து கொண்டு
சென்றுகொண்டிருக்கிறீர்கள்!
சிந்தனையின் எல்லைக்கு
வந்த பிறகு
அதற்குமேல் முடியாமல்
வேதத்துக்கு அந்தம்
அதாவது வேதாந்தம் இது தான்
என்று சொல்லி
புலித்தோல் மீது..ஒரு
புளகாங்கிதத்தோடு
கண்மூடி உட்கார்ந்து விட்டார்கள்.
ஒரு நிமிடம்
காதல் எனும்
அந்த நிஜப்புலி மீது
சவாாி செய்து பாருங்கள்.
அதன் ஒவ்வொரு வாியும்
இனிமை.
அதன் கொடுமையும்
இனிமை
என்று பிரம்மத்தின் ருசிபார்க்க
ஒரு காதலோடு
அதற்கு தன்னை இரையாக்கிய
‘வியாக்கிர பாதர் ‘ எனும்
புலிப்பாணிகாதலே..எங்கள்
புதுப்பாணி காதல்.

8

காதலில் கரைந்து போன
நாங்கள் இரண்டு அல்ல.
நாங்கள் ஒன்று ஆ ‘னோம் ‘
கடலும் அலையும் ஆ ‘னோம் ‘
ஒலியும் மொழியும் ஆ ‘னோம் ‘
பறவையும் இறக்கையும் ஆ ‘னோம் ‘
சூாியனும் ஒளியும் ஆ ‘னோம் ‘
யோகிகளே!
கடைசி வார்த்தையில் முடியும்
‘ஓம் ‘ எனும் அந்த ஓங்காரத்தில்
ஒளிந்திருக்கும்
காதலின் ‘பிரணவப்பொருளை ‘
புாிந்து கொள்ள
முடியுமா உங்களால் ?
அதற்கு
‘காதலாகி கசிந்து கண்ணீர் மல்கும் ‘
உணர்ச்சியில்
உருகியிருக்கவேண்டும் நீங்கள்!
அப்படி உருகாத வரை
அந்த கல்லில்
கல்லைத்தவிர வேறொன்றும்
நீங்கள் காண்பதில்லை.

9

பிரம்மத்தின் ருசியில்
சின்ன இன்பம் எது ?
பொிய இன்பம் எது ?
அவள் வருவாள்
என்ற என் காத்திருப்பில்
சுற்றியிருக்கும் காற்று கூட
அந்த இனிப்பை ருசிக்கிறது.
உன் வருகைக்காக
காத்திருக்கும் போது
காலப்பிரவாகத்தின்
குகைவழிப்பாதையில்
அந்த பதஞ்சலியின்
குண்டலினியை நான்
குறிவைக்கவில்லை.
அந்த புருவ நடுவில்
அவள் புன்முறுவல்கள்
மின்னலில் கோர்த்த
முத்துக்கள்.
அந்த வானக்குழம்பில்
பிரம்மத்தைப்
பிசைந்து
சோறு தின்னும்
ஞானப்பசி எனக்கில்லை.

10

காத்திருப்பு எனும்
நீண்ட மலைப்பாம்பு
என் உடலைச்சுற்றி
முறுக்கிக் கொண்டிருக்கிறது.
அன்பே!
என் இதயம்
சுக்கு நூறாய்ப் போவதற்குள்
கண்முன் வந்துவிடு.
இல்லையெனில்
இந்த கடிகாரத்தின்
கண்ணாடி ‘டயலுக்குள் ‘
என் கல்லறையைக் கட்டிவிடு

11

ஒரு மெழுகுவர்த்தி போல்
இங்கு எாிந்து கொண்டிருக்கிறேன்.
உருகுவது
மெளனம் மட்டும் அல்ல.
மணித்துளிகளும் தான்.
என் கால்களின் கீழே
ஒரு அக்கினி ஆறு.
உன் நினவு கொதிக்கும்
நெருப்பு லாவா அது.
இந்த காதல் பறவை
இந்த நெருப்பில் நனைந்து
சாம்பல் குவியலாய்
ஆனபோதும்
உன் பார்வை பட்டபின்
உயிர்பிடித்து
மீண்டும் சிறகடிக்கும்.

12

வேண்டாம்.
தர்க்கத்தை

நிறுத்திக் கொள்வோம்.
அந்த
‘பொன்தூண்டில் ‘
காதலா ?
சூதாட்டமா ?
பிரம்மமா ?
ஒரே பொருளுக்கு
ஏவிவிட்ட
மூன்று வார்த்தைகளா ?
துடிப்புகளுக்குள்
தூவிக்கிடக்கும்
அது இன்பவலியா ?
தலைகீழாய்
தொங்கிக்கொண்டிருக்கும்
அந்த கேள்விக்குறியின்
கொக்கிவடிவமே
அந்த தூண்டில்.
சற்றுப் பொறுங்கள்
அவள் வருகிறாளா என்று
அதோ தூரத்தில் வரும்
அந்த
‘பல்லவனையும் ‘ பார்த்துவிடுகிறேன்.

ருத்ரா

Series Navigation

ருத்ரா

ருத்ரா