பேய்களின் கூத்து

This entry is part [part not set] of 45 in the series 20030703_Issue

அ.முத்துலிங்கம்


பனிக்காலத்தின் ஆரம்பத்தில் நான் அமெரிக்காவுக்கு சென்றேன். அங்கு தங்கியிருந்த சமயத்தில் மூன்று புத்தகங்கள் படித்தேன். இப்பொழுதெல்லாம் நல்ல புத்தகங்கள் வாங்குவது கஷ்டமாகிவிட்டது. ஆகவே நண்பர்களின் பரிந்துரைகளையும், பத்திகைகளின் மதிப்பீடுகளையும் வைத்து அவற்றை தீர்மானிக்கிறேன். என் விஷயத்தில் நல்ல காலமாக மூன்று புத்தகங்களுமே எனக்கு பிடித்துக்கொண்டன. ஆனாலும் Aminatta Forna எழுதிய The Devil That Danced On The Water என்ற புத்தகத்தை என்னால் மறக்க முடியவில்லை. அதற்கு காரணம் இருந்தது.

நான் வேலைசெய்த முதல் ஆப்பிரிக்க நாடு சியரா லியோன். இந்த நாவல் இந்த நாட்டின் பின்னணியில் எழுதப்பட்டது. சில சம்பவங்கள், ஏன் சில பாத்திரங்கள்கூட எனக்கு பரிச்சயமானவை. இது ஒரு கற்பனை நாவல் அல்ல. சரித்திரம் அல்ல. சுயசரிதை அல்ல. இவை எல்லாம் கலந்த ஓர் அற்புதமான கதை.

சுதந்திரம் அடைந்த சியாரா லியோனின் இரண்டாவது பிரதமர் சியாக்கா ஸ்டாவன்ஸ். அவருடைய நிதி மந்திரி முகம்மட் போஃர்னா. நேர்மையானவர். நாட்டின் நிதியை தவறான வழியில் பிரதமர் செலவு செய்வதை எதிர்த்து பதவி துறக்கிறார். இறுதியில் தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டு தூக்கிலிடப்படுகிறார்.

அமினாட்டா அவருடைய மகள். தகப்பனை தூக்கிலிட்டபோது அவருக்கு வயது பத்து. இந்த நாவல் அமினாட்டாவின் முதல் பத்து வருடங்களையும், போஃர்னாவின் கடைசி பத்து வருடங்களையும் சொல்கிறது. அமினாட்டா ஸ்கொட்லாந்திலும், இங்கிலாந்திலும் படித்து தற்போது பி.பி.சியில் ஒலிபரப்பாளராக வேலை பார்க்கிறார். அத்துடன் எழுத்தாளர். பல வருட ஆராய்ச்சிகளுக்கு பிறகு இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார்.

ஒரு நூலகத்தை இரண்டாகப் பிரிக்கலாம் என்று சொல்வார்கள். ஒரு பக்கத்தில் ‘பொய் ‘ என்று எழுதி வைத்து எல்லா கற்பனை சமாச்சாரங்களையும் அங்கே அடுக்கி வைக்கலாம். இன்னொரு பக்கத்தில் ‘உண்மை ‘ என்று பதிந்து சரித்திரம், விஞ்ஞானம், கணக்கியல் போன்ற நூல்களுக்கு இடம் கொடுக்கலாம். கற்பனை வசீகரங்களுடன் முழுக்க முழுக்க உண்மைச் சம்பவங்களையும், சரித்திர நிகழ்ச்சிகளையும் கொண்ட அமினாட்டாவின் புத்தகம் எந்த வகையை சார்ந்தது.

லத்தீன் அமெரிக்க நாவல் ஆசிரியர்களின் கற்பனை அடிக்கடி சரித்திரக் கோடுகளை மீறுகின்றன என்ற குற்றச்சாட்டு உண்டு. அமினாட்டாவின் நாவலில் கற்பனை வளம் கரைபுரண்டாலும் வரலாற்றை மங்கலாக்காமல் தன் வேலையை அது ஒழுங்காகச் செய்கிறது. அமினாட்டாவே ஓர் இடத்தில் சொல்கிறார்: ‘ முற்றிலும் கற்பனை நாவலாக இருந்தால் இந்தக் கதையின் முடிவில் சிதிலமான நுனிகளை எல்லாம் நைஸாக முடிந்து அழகிய குஞ்சமாக்கிவிடலாம். ஆனால் இது உண்மைக் கதை. சில நுனிகள் அசிங்கமாக தொங்கத்தான் செய்யும். ‘

இன்னும் ஒரு வித்தியாசம். வழக்கமாக ஆப்பிரிக்காவைப் பற்றிய புத்தகங்கள் ஆப்பிரிக்கர்களால் எழுதப்பட்டிருக்கும். அதில் ஆப்பிரிக்க மூளையையும், ஆப்பிரிக்க சிந்தனையையும் காணலாம். ஆப்பிரிக்க நடையும், பழமொழிகளும், சொல்லாட்சிகளும் அங்கங்கே மெருகூட்டும். இது அப்படியல்ல. ஆங்கிலச் சிந்தனையில், ஆங்கில நடையில் சொல்லப்பட்டிருக்கிறது. ஸ்கொட்லாந்தில் எழும்பிய காற்று ஆப்பிரிக்க சிவப்பு மண்ணில் புரளுகிறது. அந்த மண்ணில் எழும் மணம் உலகத்துக்கு சொந்தமானதாக பரிமளிக்கிறது.

கதை இதுதான். ஆப்பிரிக்காவின் சியாரோ லியோன் நாட்டில் வடக்கு பகுதியில் ஒரு சிறு கிராமம். இங்கே பெண்கள் ரகஸ்ய கூட்டத்தின் தலைவி துடைப்பக்கட்டையை தூக்கி தலைக்கு மேல் பிடிக்கிறாள். அதன் அர்த்தம் ஒரு பெண் இறந்துவிட்டாள். அவளுக்கு பிறந்த குழந்தை அனாதையாகிவிடுகிறது. அந்தக் குழந்தையின் பெயர் முகம்மட் போஃர்னா, இந்தக் கதையின் நாயகன்.

இதிலே ஒரு லாபம் இருந்தது. அந்தக் கிராமத்தில் ஒரு பள்ளிக்கூடம் திறந்திருந்தார்கள். பாதிரியார் கிராமத்தலைவரிடம் போய் வீட்டுக்கு ஒரு பிள்ளையை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பும்படி வேண்டுகிறார். தலைவரும் பாதிரியாரில் இரங்கி சம்மதிக்கிறார். எல்லாத் தாய்மாரும் தங்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பாமல் காப்பாற்றுகிறார்கள். முகம்மட்டுக்கு அப்படி காப்பாற்ற ஒரு தாய் இல்லை. ஆகவே அவன் பள்ளிக்கூடம் போகிறான். அப்படித்தான் அவனுடைய படிப்பு ஆரம்பமாகிறது.

ஆனால் அவன் கெட்டிக்காரன். இயற்கையாகவே படிப்பில் ஆர்வம் உண்டு. பள்ளிப்படிப்பை முடித்துக்கொண்டு உபகாரச் சம்பளத்தில் மேல்படிப்புக்கு ஸ்கொட்லாந்து செல்கிறான். சியாரா லியோன் கிராமத்தில் இருந்து ஸ்கொட்லாந்து போகும் முதல் மாணவன் இவன்தான். மூன்றாம் ஆண்டு மருத்துவம் படிக்கும்போது ( 1959) மொறீன் என்ற வெள்ளைக்காரப் பெண்ணை காதலிக்க ஆரம்பிக்கிறான். அந்தப் பெண்ணின் கரத்தைக் கேட்டு (என்ன துணிச்சல் ?) அவள் தகப்பனிடம் பேசுகிறான். அதற்கு தகப்பன் ‘அப்படியா, கறுப்பு பையன் கறுப்பு பெண்ணை மணக்கலாம். சீனப்பெண்ணை சீனாக்காரன் மணக்கலாம். பச்சைப் பெண்ணை (அப்படி ஒன்று இருந்தால்) பச்சைப் பையன் மணக்கலாம் ‘ என்று சொல்கிறார். அதுவே அவருடைய பதில்.

முகம்மட் உடைந்துபோகவில்லை. ரகஸ்யமாக மொறீனைத் திருமணம் செய்கிறான். மூன்று பிள்ளைகள் பிறந்த பிறகு தாய் நாட்டுக்கு திரும்பி அரசாங்க மருத்துவ மனையில் டொக்ராக வேலை பார்க்கிறான். அங்கே அவனுக்கு பல அதிர்ச்சிகள். கருவிலே இறந்து பிறந்த சிசுக்களை பிரசவ அறையிலேயே புத்தகங்கள் அடுக்குவது போல செல்பிஃல் அடுக்கி வைத்திருக்கிறார்கள். கருச்சிதைவு செய்யும்படி மேலதிகாரி இவருக்கு கட்டளைகள் இட்டபோதும் மறுக்கிறார். கடைசியாக பணியிலிருந்து விலகி தன்னுடைய கிராமத்தில் தனியார் மருத்துவமனை ஒன்று ஆரம்பிக்கிறார்.

ஏழைக் கிராம மக்களிடையே அவர் புகழ் பரவுகிறது. சியாக்கா ஸ்டாவன்ஸ் என்ற தொழிற்சங்கத் தலைவருடன் சேர்ந்து புதுக்கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிடுகிறார். இவர்களுக்கு அமோகமான வெற்றி. ஆனாலும் அரசை ஸ்தாபிக்கமுடியவில்லை. பல எதிர்ப்புகள். ராணுவப் புரட்சிகள். இறுதியில் 1967ல் சியாக்கா ஸ்டாவன்ஸ் பிரதமராகப் பதவி ஏற்கிறார். அவருடைய நிதி மந்திரியாக இரண்டாவது இடத்தில் டொக்ரர் முகம்மட் போஃர்னா.

போஃர்னாவின் புகழ் உலக வங்கிமட்டும் எட்டுகிறது. அதே சமயம் அவர் வளர்த்த கட்சியிலே பிளவு, தாம்பத்தியத்திலும் பிளவு. மொறீன் மணத்தை முறித்துக்கொண்டு பிள்ளைகளை எடுத்துச் சென்று இன்னொரு திருமணம் செய்கிறார். போஃர்னாவும் ஓர் ஆப்பிரிக்க பெண்ணை மணந்துகொண்டு பிள்ளைகளை திரும்ப பெறுகிறார்.

சியாக்கா ஸ்டாவன்ஸுடன் இவருடைய மோதல் பகிரங்கமாகிறது. அரசாங்கப் பணத்தை நேர்மையற்ற வழிகளில் அவர் விரயமாக்குவதை போஃர்னா எதிர்த்து பதவி விலகுகிறார். அப்பொழுதும் அவர் பிரச்சினை தீரவில்லை. அவர் உயிருக்கு ஆபத்து. தன் மனைவியையும் பிள்ளைகளையும் ரகஸ்யமாக இங்கிலாந்துக்கு அனுப்புகிறார்.

சியாக்கா ஸ்டாவன்ஸிடம் ஓர் அடியாள் இருந்தார். அவர் பெயர் எஸ்.ஐ.கொறோமா. 1971ம் ஆண்டு நாடு குடியரசாகி சியாக்கா ஸ்டாவன்ஸ் ஜனாதிபதியாக பதவியேற்கும்போது இவர் உப ஜனாதிபதியாவார். சியாக்கா ஸ்டாவன்ஸுக்கு எதிரிகள் பிடிக்காது. எஸ்.ஐ.கொறோமாவின் முக்கிய தொழில் இந்த எதிரிகளை அகற்றுவது. அவரிடம் எப்பவும் மாக்கியவல்லியின் ‘இளவரசன் ‘ புத்தகம் இருக்கும். அதில் சொல்லப்பட்ட ‘ மனிதனையும் ஆற்றையும் கட்டுப்படுத்தலாம், ஆனால் நம்ப முடியாது ‘ என்ற வாசகத்தில் அவருக்கு தீராத பற்று. நம்ப முடியாத மனிதர்களை அவர் பலவித உத்திகளை பாவித்து அகற்றினார். இப்பொழுது முகம்மட் போஃர்னா ஒரு நம்பமுடியாத மனிதராக மாறியிருந்தார்.

காரணமில்லாமல் போஃர்னா சிறையிலடைக்கப்பட்டு சில வருடங்களுக்கு பிறகு வெளியே வருகிறார். மீண்டும் கைது செய்து அவர் மேல் தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்படுகிறது. முற்றிலும் எஸ்.ஐ. கொறோமாவினால் சோடிக்கப்பட்ட இந்த வழக்கில், போஃர்னாவுக்கு தூக்கு தண்டனை கிடைக்கிறது. அவருடைய கடைசி மகள் அமினாட்டா இருபத்தைந்து வருட காலத்திற்கு பிறகு தகப்பனுடைய கதையை எழுதுகிறார்.

ஒரு யோக்கியன் அதிகார சக்திகளை எதிர்த்து நின்று தோற்றுப்போகும் கதை இது. நூல் முழுக்க வருத்தமும், பிரிவும், ஆதங்கமும், சோகமும் கலந்திருந்தாலும் இது ஓர் ஆப்பிரிக்க கிராமத்து சிறுமியின் கதையையும், தனி மனிதன் கதையையும், ஒரு நாட்டின் கதையையும் சொல்கிறது. ஆப்பிரிக்காவின் நீண்ட சரித்திரத்தில் ஒரு சிறு நறுக்கு நேர்மையாகப் பதிவு செய்யப்படுகிறது. ஒரு சிறுமியின் கண்களால் ஆப்பிரிக்க கிராம வாழ்க்கை விவரிக்கப்படும்பொழுது Isabel Allende யின் எழுத்து வசீகரம் அடிக்கடி பளிச்சிடுகிறது.

ஒரு நாவலின் முதல் சிறப்பான அம்சம் அதன் வாசிப்புத்தன்மை (readability). எப்படியோ தமிழில் இலகுவான வாசிப்புதன்மை கொண்ட படைப்புகள் ஆழமானவையல்ல என்ற கருத்து ஊன்றிவிட்டது. நல்ல வாசிப்புத்தன்மை கொண்ட நல்ல நாவல்களும் இருக்கின்றன. அதில் இது ஒன்று. ஒரு பூனை படுத்திருப்பதுபோல இந்த நாவல் மிக இயற்கையாக அமைந்திருக்கிறது. சிறிது சிறிதாக வேலைப்பாடுகள் செய்து உருவாக்கிய ஓர் அழகான மாளிகைக்குள் நுழைவதுபோல படிக்க படிக்க இதன் சுவாரஸ்யம் கூடிக்கொண்டே போகிறது.

இந்தக் கதையை சொல்வதில் ஒரு சங்கடம் உண்டு. தூக்கு தண்டனை பெற்ற ஒரு தகப்பனைப் பற்றி மகள் எழுதும் கதை. இதில் ஒரு பக்க சாய்வு ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. இதை எழுதுவதற்கு பல வருட ஆராய்ச்சிகளும், நேர்முக விசாரணைகளும் தேவையாக இருக்கின்றன. இருபக்க ஆதாரங்களையும், தன் முடிவுக்கு சாதகமில்லாத சில தகவல்களையும்கூட, வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதிலிருந்து அமினாட்டாவின் நேர்மை புலப்படுகிறது.

ஒரு சரித்திர மாணவனுக்கு இந்த நாவலில் சில குழப்பங்கள் ஏற்படலாம். கால ஒழுங்கின்படி கதை சொல்லப்படவில்லை. முன்னுக்கு பின்னாக சம்பவங்கள் வருகின்றன. எந்த ஆண்டு எந்தச் சம்பவம் என்று ஊகிக்க வேண்டியிருக்கிறது. பல இடங்களில் ஒக்டோபர் என்றும் ஜூலை என்றும் வருடங்கள் போடாமல் மொட்டையாக ஆசிரியர் குறிப்பிடுகிறார். இன்னும் சில இடங்களில் ‘எனக்கு ஆறு வயது நடந்தபோது ‘ என்று ஆரம்பித்து அமினாட்டா சம்பவத்தை விவரிக்கிறார். இப்படியான சிறு குழப்பங்களை தவிர்த்திருக்கலாம் என்று படுகிறது.

ஆனால் அமினாட்டாவின் எழுத்தில் கவிதை சொட்டுகிறது. அபர்டானில் எழும்பிய காற்று ஆப்பிரிக்க மண்ணில் புரளுகிறது. அந்த மண்ணில் எழும் மணம் உலகத்துக்கு சொந்தமானதாக வீசுகிறது. அமினாட்டாவிடம் இருந்து அசாதாரணமாகப் புறப்படும் சொல்லாட்சியும், பிரயோகங்களும் மனதை அசைக்கின்றன. இதைப் பாருங்கள்.

அவள் சிறுமி. பிளாஸ்டிக் வாளியை தலையிலே சுமந்தபடி வருகிறாள். சிவப்பு மண் பட்ட செருப்பில்லாத பாதங்கள். தோளில் கவுன் ஒரு பக்கம் நழுவி விழுகிறது. அவளுடைய ஒவ்வொரு அடிக்கும் பெரிய வாய் வாளியிலிருந்து தண்ணீர் தெறிக்கிறது. சிறு சிறு வானவில்களை சிருஷ்டித்தபடியே வருகிறாள். என்னைக் கண்டதும் சிரித்தாள்.

சாதாரண வார்த்தைகள். ஒரு படம் எங்கள் கண்முன் அப்படியே விரிகிறது.

இன்னொரு காட்சி. அமினாட்டா 25 வருடங்கள் கழித்து ஆப்பிரிக்காவுக்கு வருகிறாள். தான் சிறுமியாக வசித்த குக்கிராமத்தில் தன் மாமியாரை ( அடமா) சந்திக்கிறாள்.

‘ஓ, அடமா, அடமா ‘

‘என் அமினாட்டா, என் அமினாட்டா ‘

‘எங்கள் இருவருக்கும் இடையில் நசுங்கிப்போன காற்றில் 25 வருடங்களும், இரண்டு கண்டங்களும், ஒரு போரும் தொங்கின. ‘ ஒரு நீண்ட பாராவில் சொல்லவேண்டிய ஒன்றை ஒரு வரியில் சொல்லிவிடுகிறார் அமினாட்டா.

தான் சிறுமியாக இருந்தபோது நடந்த சம்பவத்தை அமினாட்டா விவரிக்கிறார்.

‘என்னைத் தாண்டி அந்தக் கார் போனது. பிறகு நின்றது. காரிலிருந்தபடியே அந்தப் பெண் என்னைப் பார்த்து காறி உமிழ்ந்தார்.

ஒரு பெரிய பந்துபோல அந்த எச்சில் என் காலடியில் வந்து விழுந்தது. அதை நான் குனிந்து பார்த்தேன். ஒரு கடல் நுண்ணுயிர் போல அது புழுதியில் பரவியது. அதன் ஓரங்கள் துடித்து உயிர் ஜந்துபோல அசைந்தது. ‘

அமினாட்டாவின் கிராமத்தில் ஒரு நம்பிக்கை இருந்தது. பகல் காலத்தின் ஓளி மறைந்து, இருளின் ஆதிக்கம் தொடங்கும் சமயம் பேய்கள் தண்ணீரின் மேல் வந்து கூத்தாடும் என்று. அது மிகவும் உண்மை. உலகத்தில் நீதி போய், அநீதி தலை தூக்கும்போது பேய்கள் ஆட்சி அமைக்கின்றன. பொலீவியன் காடுகளில் சே குவேரா ‘போர்வீரர்களே, சரியாகக் குறிவையுங்கள் ‘ என்று சத்தம் போட்டபடியே செத்தான். அவன் இறந்த பிறகும் அவன் கைகளை துண்டித்தார்கள். இரண்டு மாதங்கள் மட்டுமே பிரதமராக பதவி வகித்த பற்றிஸ் லுமும்பா கொங்கோ காடுகளில் கொடூரமாக கொல்லப்படுமுன் தன் மனைவிக்கு ‘எனக்காக அழாதே, என் தோழமைக்காரியே ‘ என்று செய்தி விட்டான்.

பேய்களின் ஆட்சியில் நீதி கிடைப்பதில்லை. அதிகாரத்தினால் தடயங்கள் உண்டாக்கி, பொய் சாட்சிகள் புனைந்து தூக்கிலிடப்பட்ட போஃர்னாவின் உடல் அடையாளம் இல்லாத ஒரு மயானக் குழியில் மறைக்கப்படுகிறது.

அமினாட்டா எழுதுகிறார்.

‘என்னுடைய தகப்பனாரின் உடலை மட்டும் அவர்கள் அழிக்கவில்லை. அவருடைய சிந்தனைகள், லட்சியங்கள் எல்லாமே அழிந்தன. இந்தப் பெரிய மயானத்தில் அவர் உடலின் எச்சங்கள் எங்கே புதைக்கப்பட்டன ? ஒருவேளை என் தகப்பனாரின் எலும்புகளின் மேல் நான் நடக்கிறேனா. ‘

இப்படி நாவல் முடிகிறது.

நான் சியாரா லியோனில் வசித்தபோது நடந்த ஒரு சம்பவம் இந்த நாவலுடன் தொடர்புடையது. எங்களுடைய குடும்ப வைத்தியர் பெயர் டொக்ரர் செளத்திரி. இந்தியாவில் இருந்து வந்து ஓர் ஆப்பிரிக்க பெண்ணை மணம் முடித்து அங்கேயே தங்கிவிட்டவர்.

அவரும் டொக்ரர் போஃர்னாவும் சிறிது காலம் ஒன்றாக வேலை செய்தவர்கள். ஆகவே நண்பர்கள். போஃர்னாவை தேசத்துரோக குற்றம் சாட்டி சிறையில் அடைத்தபோது சிறைக்கூட வைத்தியராக வேலை பார்த்தவர் செளத்திரி. வழக்கை விசாரித்த நீதிபதி தூக்கு தண்டனை விதித்தார். மரண தண்டனைக் குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கு முதல் நாள் நிறுத்துப் பார்த்து அவர்கள் எடையை குறித்து வைத்துக் கொள்வார்கள்.

காரணம் அதே அளவு எடையுள்ள மண் சாக்கை தூக்கு மரத்துக் கயிற்றில் ஒத்திக்கை பார்த்து கயிற்றின் வலிமையை உறுதி செய்வதுதான். கயிற்றின் மொத்த சைஸை இழுத்து இழுத்து நேராக்கி மெல்லிசாக்குவார்கள். தூக்கு மரத்து பொறிகள் எல்லாம் வேலை செய்கின்றனவா என்று திருப்பி திருப்பி சோதனை செய்து பார்ப்பார்கள்.

தூக்கு மரத்தில் தொங்கவிடுவதற்கும் ஒரு முறை உண்டு. பொறி விலகி விழும்போது கழுத்து எலும்பு முறியவேண்டும். அதுவே வேதனை இல்லாத சாவு. எடை கூடிய தூக்கு கைதிக்கு கட்டையான கயிற்றையும், எடை குறைந்த கைதிக்கு நீளமான கயிற்றையும் பாவிப்பார்கள். ஒரு 150 ராத்தல் கைதி குறைந்தது ஆறு அடி தூரம் காற்றில் விழவேண்டும் என்பார் செளத்திரி.

முதல் நாள் இரவு முழுக்க போஃர்னா தூங்கவில்லை. சிறு வயதில் அவர் கற்ற ஒரு பாடலையே திருப்பி திருப்பி உரத்த குரலில் பாடிக்கொண்டிருந்தாராம். அப்படி மற்றக் கைதிகள் கூறினார்கள்.

Hang down your head Tom Dooley

Hang down your head and cry

Hang down your head Tom Dooley

Poor boy you are bound to die

( தலையை தொங்கப் போடு டொம் டூலி

தலையை தொங்கப் போட்டு அழு

தலையை தொங்கப் போடு டொம் டூலி

பாவியே நீ சாவது நிச்சயம்.)

டொக்ரர் செளத்திரி தன் நண்பரைக் கட்டிப்பிடித்து விடை பெறுகிறார். இவ்வளவு சிறை நெருக்கடியிலும் போஃர்னாவின் உடலும் சரி, உள்ளமும் சரி தளரவில்லை. செளத்திரியின் முதுகில் தட்டிக் கொடுத்து போஃர்னாதான் ஆறுதல் சொல்ல வேண்டியிருக்கிறது.

ஜூலை 19, 1975 இரவு நடு நிசி. போஃர்னாவை தூக்கு மேடைக்கு அழைத்து செல்கிறார்கள். அவருடைய கைகள் கட்டப்பட்டு, கறுப்பு துணியினால் முகம் மறைக்கப்படுகிறது. பிரிட்டிஷ் முறைப்படி செய்யப்பட்ட சுருக்கு கயிற்றில் ( அமெரிக்க முறையில் பல மடிப்பு சுருக்குகள் இருக்கும்) போஃர்னாவின் கழுத்து மாட்டப்படுகிறது. பொறியை இழுத்ததும் உடல் தொங்குகிறது.

19 ம் தேதி நடு நிசி தூக்கு மேடையில் ஏறியவர் 20 ம் தேதி பிணமாக கீழே விழுகிறார். டொக்ரர் செளத்திரி கழுத்து எலும்பு முறிந்து உயிர் பிரிந்ததை உறுதி செய்கிறார்.

சடலத்தை திறந்த லொறியின் பின் பகுதியில் அலட்சியமாக எறிந்து ரோகுப்பா மயானத்துக்கு கொண்டு போகிறார்கள். அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு தடயங்கள் எதிரி. அந்த உடலை அமிலத்தில் கரைத்து கரைத்து உருமாற்றுகிறார்கள். மிச்சம் மீதியை அடையாளமில்லாத ஆழமான ஒரு குழியில் புதைத்து விடுகிறார்கள்.

‘திம்னி ‘ மொழியில் கிழமைகளுக்கு சொல் இல்லை. மாதங்களுக்கு இல்லை. வருடங்களுக்கும் இல்லை. எல்லாமே அடையாளம் இல்லாத ஒரு நீண்ட கால வெளி. முகம்மட் போஃர்னா என்ற மனிதன் இந்தக் கால வெளியில் தோன்றி, இந்தக் கால வெளியிலேயே மறைந்துபோகிறான். அவன் வாழ்ந்ததற்கான ஒரு சாட்சியமும் இல்லை.

பாடெம்பா வீதி சிறைக்கூடத்தில் தடித்த கறுப்பு அட்டை பேரேடு ஒன்று இருக்கிறது. அந்த சிறையில் மரண தண்டனை அனுபவித்த காடையர்கள், கொள்ளைக்காரர்கள், கொலையாளிகள், வல்லுறவுக்காரர்கள் என்று எல்லோருடைய பேர்களும் அதில் அடக்கம். அந்த லெட்ஜரில் ஒரு பக்கத்தில் 18 ஜூலை 1975 என்று தேதியிட்டு , அதற்கு அருகில் ‘முகம்மட் போஃர்னா ‘ என்று குறித்து எடை ‘160 ‘ என்று பதிந்திருக்கும். இந்த ஒரு தடயமே இன்று எஞ்சி இருக்கிறது. மற்றவை எல்லாம் அழிந்துவிட்டன.

***

amuttu@rogers.com

Series Navigation