பெரியபுராணம் – 92 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

This entry is part [part not set] of 41 in the series 20060616_Issue

பா.சத்தியமோகன்


2579.

உமக்கு நேர்ந்ததைக் கூறுவீரென்று

பரிவுடன் மன்னன் பாண்டியன் உரைக்க

கரிய சமணர்கள்

வஞ்சகர்கள்

“யானை வீரனான மன்னா

உன் மதுரை மாநகரில்

சைவ வேதியர்கள் வந்து பொருந்தியதால்

நாங்கள் இன்று கண்டுமூட்டு ஆனோம்” என விளம்பினர்.

(கண்டுமூட்டு- காண்பதால் வரும் தீட்டு)

[சைவ வேதியரைக் கண்ச்டால் தீட்டாய்

எண்ணி கழுவாய்த் தேடிக் கொள்வது மரபு]

2580.

சென்று சமணர்கள் கூறக்கேட்டு மன்னன்

“யான் கேட்டுமூட்டு ஆனேன்” என்று கூறி

நன்றாயிருக்கிறது நான் நல்லறம் புரிவது! என்று

தனை இகழ்ந்து நகைத்தான்

கறுவும் உள்ளம் கொண்டான்

‘’அந்நெற்றிக்கண் அடியார் இன்று இந்தப்

பெருநகரை அடைந்தது ஏன்? அவர்கள் யார் ?’’ என்றான்.

2581.

ஆத்திமாலையும் வெண்கொற்றக்குடையும் கொண்ட

சோழரின் (வளவரின்)

வளமையுடைய சீகாழியில்

சூலத்தைக் கையில் கொண்ட சிவனிடத்தில்

ஞானம் பெற்றவன் என்று அந்தணச்சிறுவன்

அடியார் கூட்டத்துடன்

குளிர் முத்துச் சிவிகைமேல் ஏறி

எங்களையும் வாதப்போர் செய்து வெல்ல வந்துள்ளான்!”

2582.

இவ்விதமாகக் கூறியதுடன்

முன்பு தாம் அறிந்த செய்திகள் ஒன்று விடாமல் உரைத்தனர்

மணமுடைய

அழகிய சோலைகள் சூழ்ந்த

சண்பையார் வள்ளலாரின் திருப்பெயர்

சென்று செவியில் சேர்ந்ததுமே

சினம் கொண்டு சிலிர்த்தான்

இவ்விதம் சொல்லத் தொடங்கினான்.

2583.

“அந்த மாமறை மைந்தன்

இங்கு வந்தான் எனில் செய்தொழிலாய் என்ன செய்யலாம் என வினவ

சினம் பொங்கும் சிந்தையும் செய்கையும் கொண்ட சமணர்

மன்னர் மொழிக்கெதிராக இவ்விதம் உரைத்தனர்:-

2584.

“இங்கு வந்த அந்தணனை

வலிமை செய்து போக்கும் சிந்தை வேண்டாம்

அச்சிறு அந்தணச்சிறுவன் உறையும் மடத்தில்

வெந்தழல் சேருமாறு

விஞ்சை மந்திரத் தொழில் செய்தோமானால்

இந்நகரில் இல்லாது வெளியே போவான்” எனக்கூறினர்.

2585.

“செய்யக் கூடியது இதுவே எனில்

அதையே விரைந்து செய்யச்சொல்க”

என அவர்களை போகும்படி அனுப்பினான்

பொய்யினைப் பொருளாகக் கொண்ட மன்னன்

எவரிடமும் எதுவும் உரையாடாமல்

எண்ணத்தில் கவலையோடு

பூக்கள் அணைக்கின்ற படுக்கை சேர்ந்தான்

பொங்கும் எழிலுடைய பாண்டிமாதேவி அங்கு வந்தாள்.

2586.

உரைத்தல் எதுவுமின்றி இருந்த மன்னவனை நோக்கி

அந்த மாதேவி அரசி

“என் உயிர்க்கு உயிராய் உள்ள இறைவா நீ

உற்ற துன்பம் என்னவோ?

முன் உள்ள மகிழ்ச்சி இல்லாமல் முகம் வாடியுள்ளீர்

இன்று உம் உள்ளத்தில் எய்தும் வருத்தத்தை

அருள் செய்து உரைப்பீராக” என்றார்.

2587.

தனது தேவியாரை நோக்கி

தென்னவன் கூறியதாவது

“குவளைமலர் போன்ற நீண்ட கண் கொண்டவளே கேள்

காவிரி பாயும் நாட்டில் நிலை பெற்று

குற்றமற்ற சிறப்புடன் வாழும் கழுமலத்துடன்

சங்கரன் அருள் பெற்று

இங்கு நம் சமண அடிகளை வாதத்தில் வெல்ல வந்துள்ளான்” என்று-

2588.

வெண்மையான திருநீறு பூசும் சிவனடியார்கள்

இங்கு வந்துள்ளார்கள்

அவர்களையெல்லாம் கண்டதால் அடிகள் “கண்டுமூட்டு”

அச்செய்தி கேட்டதால் நானும் “கேட்டுமுட்டு”

காதலுக்குரியவளாம் வண்டுகள் தேன் உண்ணும் பொருட்டு

நெருங்கிச் சூடிய மாலை சூடிய மங்கையர்க்கரசியே

இதுவே செய்தி

வேறில்லை” என்றான்.

2589.

மன்னவன் உரைத்ததைக் கேட்ட மங்கையர்கரசியார்

“தங்கள் நிலை இதுதான் எனில்

நீடிய தெய்வத் தன்மை விளங்கும்படி

அவர்கள் வாதம் செய்தால்

அதில் வென்றவர் பக்கம் சேர்ந்து

பொருந்துவதே நன்மையாகும்

ஆதலால் வருந்த வேண்டாம் மன்னா” என்றார்.

2590.

சிந்தையில் களிப்பு மிகுதியுடன்

“திருக்கழுமலத்தகர் வேந்தன்

எம்மை ஆளும் பொருட்டு வந்த விதம்தான் என்ன?”

என்று வருகின்ற மகிழ்ச்சியோடு

கொத்தாக மலர்ந்த மலர்கள் உள்ள கூந்தலுடைய மங்கையர்க்கரசியார்

அங்கு வந்த அமைச்சர் குலச்சிறையாரிடம்

இந்த நல்ல மாற்றங்களையெல்லாம்

அவரிடம் எடுத்துச் சொன்னார்

பிறகு-

2591.

கொற்றவனின் அமைச்சரான குலச்சிறையாரும்

கைகளைத் தலைமீது குவித்து நின்று

“பெற்றோம் பெரும் பேறு

பிள்ளையார் இங்கு வந்து சேர” எனக்கூறத் தொடங்கினார்

“இந்த நாளில் இறைவரின் அன்பர்களை நாம் வணங்கப் பெற்றோம்

இனிமேல் சமணர்கள் செய்யும் வஞ்சனை எதுவோ ! அறியோம்!” என்றார்.

2592.

அரசமாதேவியார் அச்சம் கொண்டார்

“வஞ்சகப் புலையர்கள் ஈனமான செயல்களே செய்ய வல்லவர்கள்

அதற்கு நாம் என்ன செய்வது என எண்ணினார்

“ஞானசம்பந்தரிடம் நன்மையல்லாத செயல்களை

இவர்கள் செய்து அதனால் கேடு வந்தால்

நாமும் உயிர் துறப்போம்” என்றார்.

2593.

இவர் நிலை இவ்வண்ணமாக இருக்க

வேல் ஏந்திய பாண்டியனான அவன் நிலை அதுவாகவே இருந்தது

அன்றைய நாளில் சமணர்களின் நிலை யாது எனில்

தவவேடத்துள் மறைந்து நின்று தீயசெயல் செய்வதோடு

அவர்கள் தங்கள் மந்திரத்தால்

ஞானசம்பந்தர் மடத்தில் செந்தீ சேருமாறும் செய்தனர்.

2594.

ஆதிமந்திரமான ஐந்தெழுத்து ஓதுகின்றவர் பார்க்கும் திசையில்

மற்ற மந்திரச் செயல்கள் வருமா?

வராது !

திருநீற்றுச் சந்தனம் பூண்ட ஞானசம்பந்தர் திருமடத்தில்

தாம்புனைந்த சாதனைகள் (மந்திரங்கள்)

ஏவியபடி செயல்படாமல் ஒழிந்ததைக் கண்டனர்

அமண குண்டர்கள் தளர்ந்தனர்.

2595.

தாம் செய்த தீயதொழில்

பயன் அளிக்காமல் சரியக் கண்டு தளர்ந்தனர்

கிளர்ந்தனர்

அச்சம் கொண்டனர்

மிகவும் கீழ்மை கொண்ட அமணர்கள் கூடி

“விளங்கும் நீள்முடி வேந்தன் பாண்டியன் இதனை அறிந்தால்

நம் மேம்பாட்டில் மனம் கொள்ளமாட்டானே

நம் பிழைப்பு வழியும் ஒழித்துவிடுவானே” என உணர்ந்தனர்.

2596.

மந்திரச்செயல் பயன் தரவில்லை

இனிமேல் ஆலோசனை இதுவே என

ஒரு முடிவெடுத்தனர் துணிந்தனர்

பொதியும் அனலை எடுத்துக் கொண்டனர்

அழகிய குளிர்ச்சியுடைய

மாதவர்களாகிய

சிவனடியார்கள் உறங்கும் திருமடத்தில் வெளிப்பக்கத்தில்

வஞ்சனை மனமுடைய அச்சமணர்கள்

இருள் போல் வந்தனர் தம்செயல் செய்தனர்.

2597.

திருமடத்தின் புறச்சுற்றிலே

தீய பாதகர்கள் சேர்த்தனர் தீயை

அத்தீத் தொழில் வெளிப்பட்டதும்

ஞானசம்பந்தரின் பரிவாரங்கள் மறுகின

பதைப்பு கொண்டன

அந்தத் தீயை அணைத்தனர் போக்கினர்

இவ்விதம் செய்தது சமணர்கள் எனத்

தெரிந்து கொண்டனர் தெளிந்து கொண்டனர்

2598.

பிறகு-

சீகாழித் தலத்தில் கவுணியர் குடியில் தோன்றிய

கற்பகக் கன்று போன்ற பிள்ளையாரைத் தொழுதார்கள்

அமண் குண்டர்கள் செய்த தீங்கினைச் சொல்லினர்

“சிவனடியார்களாகிய

மாதவர் உறங்கும் இத்திருமடத்தின் வெளிப்பக்கத்தில்

தீமை செய்வதோ! பாவிகாள்!” எனப் பரிவு கொண்டார் ஞானசம்பந்தர்.

2599.

“இச்செயல் எனக்காக அவர்கள் செய்த தீங்கு என்றாலும்

சிவபெருமானின் அன்பருக்குப் பொருந்துமோ?!” என

மேலும் அச்சம் முதலில் வர

கோபம் பின்னே வர

முத்தமிழ் விரகரான அப்பிள்ளைப் பெருமான்

“அரசன் காவல் செய்யும் நீதிமுறை தவறிவிட்டது”

என மனதில் எண்ணிக் கொண்டார்.

2600.

வெப்பமான இத்தீங்கு வேந்தன் மேல் ஆகும் என்ற விதிமுறையால்

“செய்யனே! திருவாலவாய்” எனத் தொடங்கும் திருப்பதிகத்தை

சைவர்கள் வாழும் மடத்தில் அமணர்கள் இட்ட தீயின் தழல்

மெல்லவே சென்று

பாண்டியனுக்கு ஆகுக!”

என்று பாடி ஆணையிட்டு அருளினார்.

2601.

பாண்டிமாதேவியாரின்

அழகிய நீண்ட

திருமங்கலநாண் பாதுகாக்கப்பட வேண்டியதாலும்

ஆண்மையுடைய குலச்சிறையார் அன்பினாலும்

அரசரிடம் சிவ அபராதம் உண்டாதலாலும்

மீண்டும் சிவநெறி அடையும் விதி இருத்தலாலும்

வெப்புநோய் தீருமாறு

மன்னனின் மேனியைத் தீண்டி

திருவெண்ணீற்றை

புகலிவேந்தர் ஞானசம்பந்தர் இடப்போகும் பேறு இருப்பதாலும்

அந்த தீப்பிணியை

தீயநோயை

“மெல்லவே சென்று சேர்க” என்றார்.

2602.

திருந்தும் இசையுடைய திருப்பதிகம்

சீகாழி மன்னவர் புனைந்து போற்றினார்

திருஆலவாய் எனும் கோவிலில் வீற்றிருக்கும்

மருந்து வடிவமான இறைவர் அருளால்

செந்தழல் விரிந்தது

வெம்மை நோய் தென்னவன் பாண்டியனை மேவியது

பெருந்தழல் பொறி

இப்போது

வெப்புநோய் எனப்பெயர் பெற்றது.

( தழல் – நெருப்பு ) ( மேவியது –
அடைந்தது )

2603.

சிவந்த மேனியுடைய சிவபெருமானின் மகனான

ஞானப்பிள்ளையார் தங்கிய மடத்தில்

நைந்த மனம் கொண்ட அமணர் நெருங்கி

தம் கையால் தீ இடுவதற்கு

உடந்தையாய் இருந்த இரவு மறைந்தது

வெம்மை மிக்க சூரியன்

கடலின் மீது எழுந்தனன்.

2604.

முன்நாளில்

இரவில்

பாதகர் செய்த தீங்கை

சூரிய மரபில் தோன்றிய

குராமலர் அணிந்த

கூந்தலுடைய

மங்கையர்க்கரசியார்

குலச்சிறையாருடன் கேட்டு அறிந்துகொண்டார்

பிரம்மாபுரத்தில் ( சீகாழி ) தோன்றிய பிள்ளையாரை

இந்தத் தீயவர்களின் நாட்டிற்கு வரவழைத்த

நான் உயிர் துறப்பதே

இதற்கு கழுவாயாகும் என மனம் மயங்கினார்.

( கழுவாய் – பிராயச்சித்தம்
)

2605.

பெருகும் அச்சத்தோடு

ஆருயிர் பதைத்தபடி வந்த

அவர்கள் இருவரும்-

“ திருமடத்தின் வெளியில் தீயின் தீமை இல்லை”

எனத் தெரிந்து கொண்டார்கள்

தெளிந்து கொண்டார்கள்

கருப்பாக

மருட்டும் உடல் உடைய

சமணர்கள் செய்த இத்தீங்கின் மூலமாக

என்ன விளையுமோ என மனம் நினைத்தபோது-

2606.

“அரசனுக்கு வெப்பு நோய் உண்டாயிற்று” என

அவன் அருகில் இருப்பவர்கள்

வந்து சொல்லியதைக் கேட்டு

துடித்துப்போனார் ஒப்பிலாத அரசமாதேவியார்.

அரசனது இருப்பிடத்தில் புகுந்தார்

விரைவுடனும் அச்சத்துடனும் குலச்சிறையாரும்

மலை போன்ற

அழகிய தோள்களுடைய மன்னனின் பக்கம் வந்தடைந்தார்.

2607.

வேந்தனுக்கு உடம்பு விதிர்ப்புற்றது நடுங்கியது

வெதுப்புறும் நோயின் வெம்மை காந்தியெடுத்தது

எரிவதால் வெப்பம்வீசும் தீயைப்போல

விரைவாய்

உடல் எல்லாம் பரவியது

உள்ளே அடங்கியிருந்த வெப்பம் புறத்திலும் பரவியது

புறத்தே நின்றவர்களும்

வாடித் தீய்ந்து போகுமாறு

உடல் கருகி உலர்ந்தது

மேலே எழுந்தது.

2608.

உணர்வும் உயிரும் ஒழிவதற்காக

ஒருபக்கமாய் ஒதுங்கியது

பக்கத்தில் வருபவர்

தொலைவாய்ச் சென்று அகன்று விட்டனர்

பொருத்தமான வாழையின் இளம் குருத்தும் தளிரும்

பக்கத்தில் கொண்டு வந்தாலும்

அதுவும்

வெப்பத்தால் காய்ந்து சுருங்கி

நுட்பமான துகள் ஆகிவிட்டது.

2609.

மருத்துவ நூலில் வல்லவர்

தமது பல கலைகளிலும் வகுத்துக் கூறப்பட்ட

சிறந்த மருத்துவத் தொழில்கள் யாவும் செய்தனர்

அந்நோய் மேலும் முடுகி வேகமாக எழுந்தது

உயிரையும் உருக்குவதாக ஆனது

நினைவு ஒழிந்தது

பேச்சின்றி மன்னன் கிடந்தான்

— இறையருளால் தொடரும்

pa_sathiyamohan@yahoo.co.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்