பெரியபுராணம் – 91 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

This entry is part [part not set] of 39 in the series 20060609_Issue

பா.சத்தியமோகன்


2548.

குவளை மலர்களுடைய தமிழ்நாடு பழிநாடாகும்படி

அங்கு பரந்து சூழ்ந்த

மானமில்லா சமணர் எனும் வன்மையான இருள் கெடவும் மாயவும்

ஒளியின் பரப்பினால் ஆன எல்லா அண்டங்களையும்

தன் நிறைவுள் அடக்கிய

ஞானமணி விளக்கு எழுந்து வருவதைப் போன்ற நலம் செய்யவும்-

2549.

கழுத்துக்கயிறும் வெற்றியும் மதத்தையும் கொண்ட

யானை உடைய பாண்டியரின்

தமிழ்நாட்டு நிலம் செய்த தவப்பயன் விளங்க

சைவநெறி தழைத்தோங்க எடுத்துக்கூறும்

எல்லாப் பெயர்களையும் ஊதுகின்ற முத்துச்சின்னங்கள் யாவும்

“பரசமயக் கோளரி வந்தார்” என இயம்பவும்-

2550.

இத்தகைய இயல்புடன் சீகாழித்தலைவர் எழுந்தருளும்போது

ஒப்பில்லாத முத்துக்கள் பதித்த

அழகிய பெருங்காளம் இசைத்தனர்

அதன் ஓசை

சொல்வதற்கரிய பெருமையுடைய குலச்சிறையாரின்

திருச்செவிகளில் அழுதம் போல் பெருகியது

உடனே-

நிலத்தின் மீது உடல்பட விழுந்து பணிந்து

அளப்பதற்கரிய மகிழ்ச்சியினர் ஆனார்.

2551.

அஞ்சலியாய் தலை மேல் குவித்த கரங்களுடன்

விரைந்து சேர்ந்தார்

நஞ்சு அணிந்த கண்டரான இறைவரின் மகனாருடன் வரும்

நல்ல தவமுடைய அடியார்களின்

கடல் போன்ற திருக்கூட்டத்தை

உள்ளத்தில் நிரம்பிய ஆசை முன்னால் செல்ல

அகநோக்கில் அறிந்தார்

ஆதலால்நீண்ட நிலத்தின் மீது திருமேனி பொருந்த விழுந்து வணங்கினார்

பாண்டிய மன்னரின் அமைச்சருள் தலைவரான குலச்சிறையார்.

2552.

தரை மீது விழுந்து பணிந்தார் குலச்சிறையார்

அவரை நீண்ட பெருந்தவத் தொண்டர்கள் பலரும்

முன் வந்து சேர்ந்து வணங்கினர்

நிலத்தில் விழுந்தவர்கள் எழாமல்

சீகாழித் தலைவரான வைதீக சேகரர் ஆகிய

புகலி ஞானசம்பந்தர் பாதம் குலவினர்

கூறினர் –

“அங்கு பாண்டிய மன்னரின் அமைச்சரான குலச்சிறையார் வந்துள்ளார்’’.

2553.

சிரபுரச் செல்வர் சம்பந்தர் குலச்சிறையார் கூறியதைக் கேட்டார்

திருமுகத் தாமரை மலர்ந்தார்

ஒளி பரவும் முத்துச் சிவிகை விட்டிறங்கி விரைந்து சென்று

குலச்சிறையார் அடைந்தார்

அவர் கரமெனும் கமலங்களால் தொழ இவரும் தொழுதார்

வள்ளலாராகிய சம்பந்தர் அவரையே நோக்கி

மதுர வாக்கினை இவ்வாறு சொன்னார்.

2554.

‘’செம்பியர் பெருமானாகிய சோழனின் குலவாரிசான மகளுக்கும்

திருந்திய சிந்தையுடைய உமக்கும்

நம் சிவபெருமானின் திருவருள்தான் நிறைந்து உள்ளதே!’’ என்று கூறி

மணம் கமழும் மாலை அணிந்த மந்திரியார்

மண்மீது படிந்து வணங்கி

தமது பெருந்தவத்தின் பயன் போன்ற சம்பந்தருக்கு

அந்நாட்டில் நிகழ்ந்த நிலையை எடுத்து கூறத் துவங்கினார்.

2555.

“சென்ற காலத்தில்

பழுதில்லாமல் நின்ற இயல்பும்

இனி எதிர்காலத்தில் சிறப்பும்

இங்கு இன்று தாங்கள் எழுந்தருளப் பெற்றதால்

என்றைக்கும் திருவருள் உடையவனாவேன்.

நன்றியில்லாத சமண நெறியில் அழுந்திக் கிடக்கும் நாடும்

நற்றமிழ் மன்னனும் உய்வு பெற்று

வெற்றிக் கொள்ளும் திருநீற்றின் ஒளியில் விளங்கும்

மேன்மையும் பெற்றோம் “ என்பவராகி-

2556.

இங்கு தாங்கள் எழுந்தருள்கின்ற பெருமை கேட்டதும்

“எய்துதற்கு அரிதான வாழ்வு எழுந்தது என இயம்பி

அங்கு நீவிர் எதிரில் சென்று அடிபணிவீர் !” என

அருள் செய்தார் மங்கையர்க்கரசியார்

என்று தெரிவித்தார்

அரசனின் அமைச்சரான குலச்சிறையார்

களிப்பினால் மீளவும் துதித்தார்.

2557.

அவ்விதமாக போற்றி

திருவடி வணங்கியவர் மீது

அளவிலா அருள் புரியும் கருணை மிக்க சொற்கள் கூறினார்

அருள் செய்தார்

அப்போது-

உயர்ந்த மதில்கள் சூழ்ந்த மதுரை கண்ணில் புலப்பட்டது

உயர்ந்த தவமுடைய தொண்டரைப் பார்த்து

“இவ்விடத்தில் நம் இறைவர் எழுதருள்கின்ற

திருவாலவாய் எந்த பக்கத்தில் உள்ளது?” என வினவினார்.

2558.

அன்பராக சம்பந்தர் முன் பணிந்த குலச்சிறையார்

அண்ணலார் திருவடிகளை வணங்கி

திருமுன்பு நின்று எடுத்த கைகளால் சுட்டிக்காட்டி

“மணம் கமழும் சோலைகளால் சூழப்பட்டு

பொலிகின்ற வானை அளக்கும்படியாக நீண்ட கொடிகள் சூழ்ந்த

பெரிய நீண்ட கோபுரங்கள் தோன்றும் இத்தலம்

எலும்பு அணி அணியும் இறைவர்

இனிதாய் விரும்பி வீற்றிருக்கும் திருவாலவாய் இது” என உரைத்தார்.

2559.

பெருந்தொண்டரான குலச்சிறையார்

இவ்வாறு போற்றி காட்டிடக்கண்டார்

உடனே

ஞானசம்பந்தர் மலர் பேன்ற கரங்களை தம் தலை மீது குவித்து

நிறைந்த பேரன்பினால் தரையின் மீது பணிந்து

“மங்கையர்க்கரசி” எனத் தொடங்கி

எட்டுத் திக்கில் உள்ளவரும் துதிக்கும் திருவாலவாய் இதுவே என்று

மங்கையர்கரசியாரையும் அமைச்சரையும்

சிறப்பித்தருளி பதிகம் பாடியருளினார்.

2560.

திருப்பதிகம் பாடிப் பரவியபடியே வந்தார்-

பண்பு மிக்க அடியவர்களோடு;

தேடும் திருமாலுக்கும் நான்முகனுக்கும் அரியவரான இறைவர்

மகிழ்ந்து வீற்றிருக்கும்

திருவாலவாய் கோவில் பக்கம் சென்று

நிறைவான பெருவிருப்பத்துடன் உள்ளே புகுந்து

பக்கத்தே உள்ள மாளிகையை வலமாக வந்து

இறைவரின் கோயிலுக்குள்

மந்திரியார் குலச்சிறையாருடன் புகுந்தார்.

2561.

ஆளுகின்ற அழகிய கண் அங்கத்தில் உடைய

ஆலவாயில் இனிதாக அமர்ந்திருந்த

அரிய கண்டம் உடைய இறைவரைக்

கண்கள் பெற்ற இனிய பயன் அடையுமாறு தரிசித்தார்

நீள வந்தெழும் அன்பினால் பணிந்தார் எழுந்தார்

மனம் நிறையவில்லை

மீண்டும் பலமுறை நிலத்தில் வணங்கி விழுந்து எழுவார் ஆனார்.

2562.

எட்டு அங்கத்தினாலும்

ஐந்து உறுப்புகளாலும் அளவின்றி வணங்கினார்

காதல் பொங்கிற்று

உடலில் மயிர்க்கூச்செறிதலும்

சிவந்த கண்கள் அருவிபோல் நீர் பெருகுதலும் நிகழ்ந்தது

திருநீற்றின் ஒளி

திருமேனி முழுதும் திகழுமாறு நின்று துதித்தார்

புகலியர் இறைவரான ஞானசம்பந்தர்.

2563.

“நீலமாமிடற்று ஆலவாயன்” எனத் தொடங்கி

நிலவும் மூலமாகிய திருஇருக்குறள் எனும் பதிகத்தை மொழிந்தார்

பொருந்திய மேன்மையுடைய

தலைச் சங்க புலவனாகிய சோமசுந்தர பெருமான் முன்

ஒழுக்கத்திலும் மாதவத்திலும் சிறந்த

திருத் தொண்டரான குலச்சிறையாரோடு அன்பில் திளைத்தார்.

2564.

சேர்க்கின்ற இனிய இசையுடைய பதிகத்தையும்

திருக்கடைக்காப்பு சாத்தி நிறைவாக்கினார்

நல்ல இசையுடைய குளிர்தமிழ் சொல் மாலையைத்

திரும்பவும் இன்பமுறப்பாடினார்

வெண் பிறைச்சந்திரன் அணிந்த முடியுடையாரின்

திருவடி துதித்தபடியே

திருமுன்றில் அணையும் போது-

(அணைதல்- செல்தல்)

2565.

சம்பந்தர் கோயிலுள் எழுந்தருளிப் புகுந்தபோது

வெள்ளநீர் தாங்கிய சடையினரான இறைவரைத்

தொழும் விருப்பத்தால் உள்ளே சேர-

அவர் எதிரில் செல்லாமல் ஒரு பக்கத்தில் ஒதுங்கிய

தெள்ளும் நீரில் பொருந்திய கண்களுடைய

தெரிவையரான மங்கையர்கரசியாரும் வந்தார்.

2566.

பக்கத்தில் வந்த மந்திரியார் குலச்சிறையார்

சம்பந்தர் பெருமான் கழல் வணங்கினார்

கருங்குழல் மீது தளிர்க்கைகளால் கூப்பி வணங்கினார் அம்மையார்

“இவர் பருத்த கையுடைய யானைகள் வாழும்

சோழமன்னரின் மகள்” என்று கூற

பெரும்களிப்புடன் விரைந்து அவ்வம்மையார்

சம்பந்தர் எதிரே சேர்ந்திட்டார்.

2567.

தென்னவனாகிய பாண்டிய மன்னனின்

பெருந்தேவியான மங்கையர்கரசியார்

சிவக்கன்றான சம்பந்தரின் பொன் அடிக்கமலங்களில் பொருந்துமாறு

முன் விழுந்து வணங்கினார்

நிலை பெற்ற சீகாழி வள்ளலார்

மகிழ்ச்சி மிக அளிக்கும் இனிய அருளுடைய பெரும் சிறப்போடு

திருக்கைகளால் அவரை எடுத்தார்.

2568.

ஞான அமுது உண்ட போனகரான சம்பந்தரின் எதிரில்

தொழுது வணங்கி எழுந்தார் நல்தவமுடைய மங்கையர்கரசி

தாம் மனதுள் கொண்ட கருத்தாகிய

சைவநிலைபேறும்

பாண்டிய நாட்டின் மீட்சியும்

நிறைவு பெற்றன என்றே துணிவு கொண்டார்

நீல மலர் போன்ற க்ண்களில் நீர் பொருந்தியது

பவள வாய் குழறியபடி

“இங்கு தாங்கள் எழுந்தருள

யானும் எனது பதியும் முன் செய்த பெருந்தவம்தான் என்னே” என்றார்.

2569.

யாழ் போன்ற இனிய மென்மொழி உடைய அம்மையார்

மீண்டும் திருவடிகளை வணங்கினர்

சீகாழி வாழ வந்தருளிய கவுணியர்பிரானும்(சம்பந்தர்)

“சுற்றிலும் பரவிய பரசமயசூழல் நடுவே

திருத்தொண்டின் நெறியில் விடாமல் வாழும் தன்மையீரே!

உங்களைக் காணும் பொருட்டு வந்தோம்” என்று அருள் செய்தார்.

2570.

இவ்வாறு ஞானசம்பந்தர் அருள் செய்திட

மங்கையர்க்கரசியார் தொழுதார்

அடி வீழ்ந்தார்

நிலை பெற்ற அமைச்சரான குலச்சிறையார்

நாட்டின் துன்ப நிலையெல்லாம் மொழிந்தார்

அன்ன நடையுடைய அரசிக்கு அருள் செய்து

விடை தந்து

நெருங்கிய மெய்த் தொண்டர்கள் சூழ்ந்து வர

எழுந்தருளியபோது-

2571.

செல்வம் பெருகிய திருவாலவாய்க் கோயிலில்

தொண்டு செய்யும் தொண்டர்கள் அருகில் வந்து

வணங்கி

“வந்து சேர்ந்த சமணர்கள் இருள் கெடவும்

தாங்கள் முழுமதிபோல் இங்கு எழுந்தருளவும்

எல்லையிலாத பெரும் தவம் செய்தோம்”

எனக் கூறித் துதித்தனர்.

2572.

அவ்வாறு கூறிய அத்திருத்தொண்டர்களுக்கு

அருள் முகம் காட்டினார் சம்பந்தர்

மெய்யான காதலுடன் அவர்களோடு

கோவிலின் புறம் வந்து

சித்தத்தில் இன்புறும் அமைச்சர் குலச்சிறையார்

திருமடத்தைச் சுட்டிக்காட்ட

பக்தர்கள் போற்றிட

பரிவாரங்களோடு இனிதே அங்கு தங்கியிருந்தார்.

2573.

போற்றும் பக்தி கொண்ட மங்கையர்க்கரசியார் அருளால்

விரவும் நட்போடு குலச்சிறையார் விருந்து அளிக்க

சிரபுரம் (சீகாழி) தோன்றிய செல்வர் அங்கிருந்தார்

கதிரவன் மேலைக்கடல் அடைந்தான்

இரவும் வந்தது.

2574.

பாண்டியனாகிய வழுதியின் மாநகரில்

மாமறைத் தலைவர்

பழுதிலாத அடியார்களுடன்

பகலில் வருவதைக் கண்டதும்

பேய் போல் வரும் கரிய அமணர்கள் கலக்கத்தை அடைந்தனர்

குழம்பான மை போன்ற

இருளுக்கும் மேம்பட்ட இருள் போல ஒரு பக்கம் கூடினர்.

2575.

அந்த இடத்தில் மேவிய சமணர்கள்

சம்பந்தர் எழுந்தருளிய பெருந்திருமடத்தில்

திருத்தொண்டர் குழாங்கள்

எங்கும் கூடிப் பெருகி

ஓதிய

திருப்பதிக இசையின் பொங்கிய பேரொலி

தம் செவிகளில் புக

அதனைப் பொறுக்க முடியாமல்-

2576.

“இப்பெரும் பழியினை

மன்னன் பாண்டியனை எய்தி சொல்வோம்”என

தம் சூழ்ச்சியையும் ஒரு படியாகக் கொண்டு துணிவு கொண்டு

மன்னவனின் வாயிற்காப்போர் முன் சென்று

வெற்றியுடைய வேல் ஏந்திய மன்னனுக்கு

யாங்கள் வந்த செய்தி விளம்புவீர் என்றனர்.

2577.

வாயில் காவலர்கள் மன்னனை வணங்கினர்

அடியார்கள் யாவரும் கூட்டமாய் வந்துள்ளனர் என்றனர்

சமணத் துறவியாருடன் ஒத்தக் கருத்துடைய மன்னன்

சந்திக்க சம்மதித்தான்

பாயினால் உடலை மூடும் அவர்கள் பதற்றத்துடன் உள்ளே வந்தனர்.

2578.

புகுந்தபோது

அவர்களின் அழிவுடைய மனதில்

வாட்டம் மிக்க தன்மையை வேந்தன் கண்டான் வினவினான்;

“கண்ணீர் திரள

யாவரும் ஒன்றாக இங்கு வந்தற்குக் காரணம் என்ன ?”

சொல்லத்தகாத தீங்கு இங்கு வந்தது என்றனர் அவர்கள்.

– இறையருளால் தொடரும்
sathiyamohan parthasarathy [pa_sathiyamohan@yahoo.co.in]

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்