பெரியபுராணம் – 49 – திருநாவுக்கரசு நாயனார் புராணம் தொடர்ச்சி

This entry is part [part not set] of 28 in the series 20050729_Issue

பா. சத்தியமோகன்


1297.

என் தந்தையும் அன்னையும் அவருக்கென

எனைக் கொடுக்க இசைந்தார்கள்

அந்த முறைப்படி அவர்க்கே உரியவள் நான்

ஆதலினால் இந்த உயிரை

அவர் உயிரோடு சேர்ப்பேன் எனத் துணிந்தபோது

அவரது திருவடிமேல் மருணீக்கியார் விழுந்தார்.

1298.

அந்நிலையில் மிகவும் புலம்பி

அன்னையும் அப்பனும் போன பின்னும்

நான் உம்மை வணங்கப் பெற்றதால் உயிர் தரித்தேன்

இனி என்னை தனியாக விட்டு நீவிர் சென்றால்

முன்னதாக உயிர் நீப்பேன் என மொழிந்து

துன்பத்தில் அழுந்தினார் மருணீக்கியார்

1299.

தன் தம்பியார் உயிர் வாழ வேண்டும் என

வைத்த கருணையினால்

தேவர் உலகம் செல்லத் துணிவு கொண்ட நிலை விலக்கி

உயிர் தாங்கிய அவர்

பொன்னும் மணியும் உடைய நாண் பூணுதலை ஒழித்து

அனைத்துயிர்க்கும் அருள் தாங்கி

இவ்வுலக மனையில் தவம் செய்து திலகவதியார் இருந்தார்.

1300.

மாசில்லாத மனதில் துன்பம் ஒழிய

மருண்நீக்கியார் வயது நிரம்ப வளர்ந்தார்

உலக வாழ்வு நிலைமையாதது என உணர்ந்து அறங்கள் செய்தார்

உலகில் புகழ் விளங்க செல்வத்தைத் தந்து

குற்றமற்ற அறச்சாலைகளும் தண்ணீர் பந்தலும் அமைப்பவரானார்.

1301.

பூஞ்சோலை வளர்த்தும் குளங்களைத் தோண்டியும்

நேர்மையிலிருந்து வழுவாமல் தவறாமல்

வந்தவர்க்கு வேண்டுவன மகிழ்ந்து அளிப்பதும்

விருந்தளித்தும் நாவலர்களுக்கு வளம் பெருகுமாறு செல்வம் தந்தும்

யாவர்க்கும் பாகுபாடில்லாத ஈகைச் செயலில் நின்றார்.

1302.

நில்லாத உலகின் இயல்பைக் கண்டு

நிலையாத இந்த உலகத்தில் பயன் இல்லை என

முழுதும் துறந்து சமயங்களின் நல்லநெறி உணர

சிவபெருமான் அருளாமையால் மருணீக்கியார்

கொல்லாமை மேற்கொள்ளும் சமண சமயத்தை சார்பவர் ஆனார்

1303.

மருணீக்கியார் பாடலிபுத்திரம் எனும் தலம் அடைந்தார்

அங்குள்ள சமண பள்ளி சென்றார்

வலிய சமணர்கள் அவர் பக்கம் சூழ்ந்து அவருக்கு

வீடுபேறு அடையும் நெறியும் இதுவே என்று மெய்போலக் காட்டி

தம்முடன் அவரை கூட வரும் உணர்வு கொள்ளுமாறு

பல பகுதிகளையும் புகட்டினர்.

1304.

அங்கு மருணீக்கியாரும்

சமண சமயத்தின் அரிய நூலெல்லாம் பொங்கு உணர்வுடன் பயின்றார்

அந்நெறி அறிவில் சிறந்தவரானார் அதனால்

பருத்த உடல் சமணர்கள் சூழ்ந்துமகிழ்வாராகி அவருக்கு

தங்களைவிட மேம்பட்ட “தருமசேனர்” எனும் பெயர் கொடுத்தனர்.

1305.

அந்தத் துறையில் மிகப் பெருகிய சிறப்பினால்

அகன்ற உலகில் சித்தநிலை அறியாத பலரையும்

வாதத்தில் ஆராய்ந்த உணர்வினால் வென்றார் மருணீக்கியார்

உலகில் அறிவொளி மிக்க வித்தகராக

சமணத் தலைமையில் மேம்பட்டிருந்தார்.

1306.

மருணீக்கியார் அறநெறியில் மிக்கவராகி வாழ்ந்தார்

ஆன்ற தவநெறியில் வாழும் திலகவதி அம்மையாரும்

தொன்மையான நெறிப்படி சுற்றத்தின் தொடர்பு ஒழித்து

தூய சிவ நன்னெறியே சேர்வதற்கு

சிவபெருமான் திருவடியே வணங்குவார்.

1307.

பெயராத பாசக்கட்டு அழிவதற்காக

பிஞ்ஞகனாகிய சிவபெருமானிடம்

ஆராத அன்பு கொண்ட அந்த அம்மையார்

நீர் மிகுந்த கெடிலம் ஆற்றின் வடகரையில்

நீண்ட பெரும் சிறப்பு மிக்க திருவதிகை வீராட்டானம் சேர்ந்தார்.

1308.

திருவீராட்டானத்திலிருந்த செம்பவளக்குன்று போன்ற

வீரட்டானேசுவரரை அடி பணிந்து

குற்றமிலாத சிவச்சின்னம் அன்று முதல் தாங்கினார்

ஆர்வம் உற்று தனது கையால்

பொருந்திய திருப்பணிகள் செய்யத் தொடங்கினார்.

1309.

பொழுது புலர்வதற்கு முன்பே –

அக்கோவில் திருமுற்றத்தில் திருவலகு இடுவார்

ஈன்று அணியதல்லாத நல்ல பசுவின் சாணத்தால் திருமெழுகு இடுவார்

மலர் கொய்து கொண்டு வந்து மாலைகளும் தொடுத்து அமைத்து

பலர் புகழும் பண்பினால் திருப்பணிகள் பல செய்தார்.

(திருவலகு – பெருக்குதல் / திருமெழுகு- சாணத்தால் மெழுகுதல்)

1310.

இவ்வாறு நாள்தோறும் பணிசெய்து வாழும் நன்னாளில்

தனக்குப் பின் பிறந்தவரான மருணீக்கியார்

தீவினை முற்றுதலால் பரசமயம் குறித்து புகுந்ததால்

மனக்கவலை மூண்டு துயரம் முற்ற வருந்தினார் திலகவதியார்

1311.

தூண்டும் தவ விளக்கைப் போன்ற திலகவதியார்

சுடரொளியான இறைவரைத் தொழுது

என்னை ஆண்டருள்வது நீவீரென்றால்

அடியேனாகிய எனக்குப்பின் தோன்றியவனைச்

சேர்கின்ற தீவினை உடைய பரசமயக்குழியிலிருந்து

எடுத்தருள வேண்டும் என பல முறையும் விண்ணப்பம் செய்தார்.

1312.

தவம் செய்வதாக பாயை உடுத்தியும் தலைமயிரை மழித்தும்

நின்றவாறே உணவு உண்டும் வருந்துகின்ற

அவநெறியில் வீழ்ந்தவனை

வீழாமல் அருள்வீர் என

சிவம் ஒன்றே என்ற நெறி நின்ற திலகவதியார் வேண்டிக் கொள்ள

பிறவிப்பிணி தீர்க்கும் சிவபெருமான் திருவுள்ளம் பற்றினார்.

1313.

நிலைத்த தவமுடையார்க்கு கனவில் எழுந்தருளி

இளமையான காளையுடைய சிவபெருமான்

நீ உன்னுடைய மனக்கவலை ஒழிவாய்

உன் தம்பி முன்னமே ஒரு முனியாகி எமை அடையத் தவம் முயன்றான்

அவனை இனி சூலைநோய் தந்து தடுத்தாள்வோம் என அருளி –

1314.

முற்பிறவியில் செய்த நல்தவத்தில்

சிறிதளவு பிழை செய்த தொண்டரை

ஆளத் தொடங்கும் சூலைநோய் வேதனையை

நெற்றிக் கண் கொண்ட எம்பிரான் அருளியதும்

கொடிய தீயைப் போன்ற கொடிய பெரும் சூலைநோய்

அவர் வயிற்றில் புகுந்தது.

1315.

சேரத் தகாத சமண சமயம் சார்ந்து ஒழுகிய தர்மசேனர்

வயிறடைந்த அந்த சூலைநோய்

வடவைத் தீபோல கொடிய நஞ்சும் வயிரமும் போல

இவை போன்று கொடிய எல்லாம் ஒன்றாகியதோ எனும்படி

குடலின் உள்ளே குடைந்தது

துன்பப்பட்டு நடுங்கி வருந்தி

சமணர் யாழியில் உள்ள அறையில் விழுந்தார்.

1316.

அந்த சமண சமயத்திடம் பழகிய மந்திரங்களால் தடுத்தும்

மேலும் மேலும் அதிகப்பட்டது வலி

உச்சமுற்றது

வேதனை நோய் ஓங்கி எழுந்தது

அங்கு அவர் பாம்பின் விஷயத்தை கொண்டவரென மயங்கிச் சோர்ந்தார்.

1317.

தவம் என்று கொண்டு

நல்சார்பில்லாத அறநெறியியைச் சார்ந்த பலரும் கூடினர்

உயிரைக் கவரும் நஞ்சு போல

முன் எங்கும் எவரும் காணாத இந்த

கொடிய சூலை வந்ததே! என்ன செய்வது! என வருந்தினர்.

1318.

புண்ணுடைய தலையையும்

முரட்டுத் தன்மையும் கொண்ட சமணர் செய்வதறியாமல்

தம் குண்டிகையிலிருந்த நீரை மந்திரித்து குடிக்கச் செய்தும் தணியவில்லை

மயிலிறகால் உடல் முழுதும் தடவி விட்ட போதோ

முன்னைவிட நோவு மிகுந்தது

அவர்கள் வருந்தினர்.

1319.

கெடுதலற்ற புகழுடைய தருமசேனருக்கு வந்த பிணி நீங்கவில்லை

நிற்காமல் தாக்குவதை உணர்ந்தவர்களாக

ஆ!ஆ! இனி நாம் என் செய்வோம் என அழிந்த மனத்தினராக

இது நம்மால் போக்க அரிது எனப் புகன்று அகன்றனர்.

1320.

குண்டர்களும் கைவிட்டனர்

கொடும் சூலை நோய் மண்டி மேலும் மேலும் பெருகுவதால்

மதி மயங்கி –

பழைய உறவை உணர்ந்த அவருக்கு

திலகவதியார் நினைவு உள்ளத்தில் வந்தது

அவரிடம் தன்னிலை புகல்வதற்கென

உணவு சமைத்துப் பரிமாறும் ஆளை அனுப்பினார்.

1321.

அங்ஙனம் அவன் சென்றான் திருவதிகை

அரிய தவம் செய்யும் திலகவதியார்

பூமணம் வீசும் நந்தவனத்தில் புறமிகுந்து வந்ததைக் கண்டான்

இறைஞ்சினான்

“இங்கு யான் உமது இளையார் ஏவலினால் வந்தேன்” என்றதும்

தீங்குகள் உளதோ என வினவினார்

அவன் சொல்லத் தொடங்குவான்.

1322.

சூலைநோய் கொல்லமட்டும் செய்யவில்லை

தீராமல் சூலை முடக்குகின்றது

எல்லோரும் கைவிட்டனர்

இச்செய்தியை என் முன் பிறந்த நல்லாளிடம் சென்று இயம்பி

நான் உய்யும் வகையை கேட்டு

இரவுபோதில் வருக எனக்கூறியதை அறிவித்தான்.

1323.

என்று அவன் முன் உரைத்ததும்

யான் அங்கு உன்னுடன் வந்து

நன்மை அறியா சமணர் பாழி அடையமாட்டேன்

எனும் என் சொல்லை

நீ சென்று அவனுக்கு உரை என திலகவதியார் உரைக்க

அன்று அவன் மீண்டும் சென்று

நிகழ்ந்ததை அவருக்கு உரைத்தான்.

1324.

பணியாளின் அவ்வார்த்தை கேட்டதுமே

தருமசேனர் அயர்ச்சி ஆனார்

இதற்கு இனி யான் என்ன செய்வேன் என மயங்கிய போது

ஈசர் அருள் கூடுதலால்

பொருந்தாத இப்புன்சமயத்தில் ஒழியாத இத்துயரம் ஒழிய

செந்நெறி சேர்ந்த திலகவதியார் தாள் சேர்வேன் என்று –

1325.

மனதில் எழுந்த கருத்து உய்யும்படி உண்டானதால் —

எழுந்த முயற்சி கூடியதால் —

அயர்வு ஒதுங்கிற்று திருவதிகை அடைவதற்கு

உடுத்தி உழன்ற பாய் ஒழிந்தது

உறியில் தொங்கிய குண்டிகை ஒழிந்தது

தொடுத்த மயிற்பீலியும் ஒழிந்தது

போவதற்கு துணிவுடன் எழுந்தவராக-

1326.

பொய்தரும் மயக்கமுடைய உள்ளம் கொண்ட

புன் சமணர்கள் இடம் விட்டு நீங்கி

மெய்தரும் வான் நன்னெறி அடைய

வெண்புடவை மெய்யில் அணிந்து

கைதருவாரை ஊன்றிக்கொண்டு

சமணர் காணாமல்

இரவிலே

மாதவம் செய்கின்றவர் வாழும் திருவதிகை அடைந்து-

1327.

சுழற்றி சுழற்றி வயிற்றினுள் பற்றி எரியும் சூலை நோயுடன்

தொடர்ச்சியாக பொருந்தி எழுகின்ற விருப்பம் தன்னை உந்திச் செலுத்தி

பெரிய மலை போன்று விளங்கும் மதிலின் ஒளி

எதிர் கொள்ளும் திருவதிகை தனில்

திலகவதியார் இருந்த திருமடம் சென்றணைந்தார்.

திருவருளால் தொடரும்

pa_sathiyamohan@yahoo.co.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்